அகநானூறு/371 முதல் 380 முடிய

அகநானூறு பக்கங்கள்


அகநானூறு

தொகு

பாடல்:371 (அவ்விளிம்பு)

தொகு

அவ்விளிம்பு உரீஇய விசையமை நோன்சிலை
செவ்வாய்ப் பகழிச் செயிர்நோக்கு ஆடவர்
கணையிடக் கழிந்ததன் வீழ்துணை உள்ளிக்
குறுநெடுந் துணைய மறிபுடை ஆடப்
புன்கண் கொண்ட திரிமருப்பு இரலை 5

மேய்பதம் மறுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
நெய்தலம் படுவில் சில்நீர் உண்ணாது
எஃகுஉறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும்
பைதற வெம்பிய பாழ்சேர் அத்தம்
எமியம் நீந்தும் எம்மினும் பனிவார்ந்து 10

என்ன ஆம்கொல் தாமே 'தெண்நீர்
ஆய்சுனை நிகர்மலர் போன்ம்' என நசைஇ
வீதேர் பறவை விழையும்
போதார் கூந்தல்நம் காதலி கண்ணே? 14

பாடல் தரும் செய்தி

தொகு
  • வல்லு விளையாட்டு

ஊர் மன்றத்தில் தலை நரைத்துப்போன அகவை முதிர்ந்த கிழவர்கள் வல்லு விளையாடிக் காலம் கழிப்பர். பாலைநில மறவர் ஆனிரைகளை கவர்வதால் அந்த மன்றம் பாழாகி வெறிச்சோடிக் கிடக்கும். அவர்கள் விளையாடிய வல்லுப் பலகைகள் கறையான் புற்று ஏறிக்கிடக்கும்.

  • இரந்தோர்க்கு உதவவே பொருள் ஈட்டுவர்

நசை தர வந்தோர் இரந்த பொருள்களை மழைபோல் கைம்மாறு கருதாமல் வழங்கவே ஆடவர் பொருள் தேடிவர இல்லாளைப் பிரிந்து செல்வர்.

  • பாலைநில மறவர் உணவு

கறையான் புல்லரிசியைத் தன் புற்றில் சேர்த்து வைத்திருக்கும். புற்றைக் கிண்டி அந்த விதைக்காத அரிசியை எடுத்து உணவு சமத்துக்கொள்வர்.

இப்படிப்பட்ட வறண்ட நிலத்தில் இளைப்பாறும்போது தன்னை அவர் நினைக்கமாட்டாரா என்று தலைவி ஏங்குவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பாடல்:372 (அருந்தெறன்)

தொகு
பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை
அணங்குடை வரைப்பிற் பாழி ஆங்கண்
வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் அரியோள் பண்புநினைந்து 5
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்
இரும்பணை தொடுத்த பலராடு ஊசல்
ஊர்ந்திழி கயிற்றின் செலவர வருந்தி
நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி
கடுமுனை அலைத்த கொடுவில் ஆடவர் 10
ஆடுகொள் பூசலின் பாடுசிறந்து எறியும்
பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய்மணி இழந்த பாம்பின் நீநனி
தேம்பினை- வாழிஎன் நெஞ்சே!- வேந்தர்
கோண்தணி எயிலிற் காப்புச் சிறந்து
ஈண்டுஅருங் குரையள்நம் அணங்கி யோளே. 16

பாடல்:373 (முனைகவர்ந்து)

தொகு
முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர்எழுந்து
மனைபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப்
பணைத்தாள் யானை பரூஉப்புறம் உரிஞ்சக்
செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில்
அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப் 5
பெரும்புன் மாலை புலம்புவந்து உறுதர
மீளிஉள்ளம் செலவுவலி யுறுப்பத்
தாள்கை பூட்டிய தனிநிலை இருக்கையொடு
தன்னிலை உள்ளும் நந்நிலை உணராள்
இரும்பல் கூந்தல் சேயிழை மடந்தை 10
கனையிருள் நடுநாள் அணையொடு பொருந்தி
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐதுஉயிரா
ஆயிதழ் மழைக்கண் மல்கநோய் கூர்ந்து
பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்துவார் அரிப்பனி
மெல்விரல் உகிரின் தெறியினள் வென்வேல் 15
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
ஒருங்குஅகப் படுத்த முரவுவாய் ஞாயில்
ஓர்எயில் மன்னன் போலத்
துயில்துறந் தனள்கொல்? அளியள் தானே! 19

பாடல்:374 (மாக்கடல்)

தொகு
மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர்தலை உலகம் புதைய வலன்ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும்பல் கொண்மூ
போழ்ந்த போலப் பலவுடன் மின்னி
தாழ்ந்த போல நனியணி வந்து 5
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்புஇசைத் தன்ன
இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல
பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச் 10
செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவளம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக்
கார்கவின் கொண்ட காமர் காலைச் 15
செல்க தேரே- நல்வலம் பெறுந!
பெருந்தோள் நுணுகிய நுசுப்பின்
திருந்திழை அரிவை விருந்தெதிர் கொளவே! 18

பாடல்:375 (சென்றுநீடுநர்)

தொகு
'சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின்
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
அம்புதொடை அமைதி காண்மார் வம்பலர்
கலனிலர் ஆயினும் கொன்றுபுள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலைக் 5
கணநரி இனனொடு குழீஇ நிணனருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசிவிரல்
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
அரைசேர் யாத்த வெண்திரள் வினைவிறல்
எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் 10
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும் 15
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம் இறந்தோர்
நோயிலர் பெயர்தல் அறியின்
ஆழல மன்னோ தோழி! என் கண்ணே. 18

பாடல்:376 (செல்லல் மகிழ்ந)

தொகு
செல்லல் மகிழ்ந! நிற் செய்கடன் உடையென்மன்-
கல்லா யானை கடிபுனல் கற்றென
மலிபுனல் பொருத மருதொங்கு படப்பை
ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்துறை
கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் 5
தண்பதம் கொண்டு தவிர்த்த இன்னிசை
ஒண்பொறிப் புனைகழல் சேவடி புரளக்
கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று
இரும்பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப்
புனல்நயந்து ஆடும் அத்தி அணிநயந்து 10
காவிரி கொண்டுஒளித் தாங்கு மன்னோ!
நும்வயிற் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே; அசும்பின்
அம்தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
வண்தோட்டு நெல்லின் வாங்குபீள் விரியத் 15
துய்த்தலை முடங்குஇறாத் தெறிக்கும் பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்னஎன் நலம்தந்து சென்மே! 18

பாடல்:377 (கோடைநீடலின்)

தொகு
கோடை நீடலின் வாடுபுலத்து உக்க
சிறுபுல் உணவு நெறிபட மறுகி
நுண்பல் எறும்பி கொண்டளைச் செறித்த
வித்தா வல்சி வீங்குசிலை மறவர்
பல்லூழ் புக்குப் பயன்நிரை கவரக் 5
கொழுங்குடி போகிய பெரும்பாழ் மன்றத்து
நரைமூ தாளர் அதிர்தலை இறக்கிக்
கவைமனத்து இருத்தும் வல்லுவனப்பு அழிய
வரிநிறச் சிதலை அரித்தலின் புல்லென்று
பெருநலம் சிதைந்த பேஎம்முதிர் பொதியில் 10
இன்னா ஒருசிறைத் தங்கி இன்னகைச்
சிறுமென் சாயல் பெருநலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்ற-
நசைதர வந்தோர் இரந்தவை
இசைபடப் பெய்தல் ஆற்று வோரே! 15

பாடல்:378 (நிதியம்துஞ்சும்)

தொகு
'நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள
வங்கூழ் ஆட்டிய அம்குழை வேங்கை
நன்பொன் அன்ன நறுந்தாது உதிரக்
காமர் பீலி ஆய்மயில் தோகை 5
வேறுவேறு இனத்த வரைவாழ் வருடைக்
கோடுமுற்று இளந்தகர் பாடுவிறந்து இயல
ஆடுகள வயிரின் இனிய ஆலிப்
பசும்புற மென்சீர் ஒசிய விசும்புஉகந்து
இருங்கண் ஆடுஅமைத் தயங்க இருக்கும் 10
பெருங்கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வருபனி அற்சிரச்
சுடர்கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு
குடகடல் சேரும் படர்கூர் மாலையும் 15
அனைத்தும் அடூஉநன்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி?' என்றி- தோழி!-
நீங்கா வஞ்சினம் செய்துநத் துறந்தோர்
உள்ளார் ஆயினும் உளெனே- அவர் நாட்டு
அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய 20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந்திறல் அணங்கின் நெடும்பெருங் குன்றத்துப்
பாடின் அருவி சூடி
வான்தோய் சிமையம் தோன்ற லானே. 24

பாடல்:379 (நந்நயந்து)

தொகு
நந்நயந்து உறைவி தொன்னலம் அழியத்
தெருளா மையின் தீதொடு கெழீஇ
அருளற நிமிர்ந்த முன்பொடு பொருள்புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளிநெஞ்சே!
நினையினை ஆயின் எனவ கேண்மதி!- 5
விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கைப்
பரிதிஅம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குற்
கனவின் அற்று அதன் கழிவே அதனால்
விரவுறு பன்மலர் வண்டுசூழ்பு அடைச்சிச் 10
சுவல்மிசை அரைஇய நிலைதயங்கு உறுமுடி
ஈண்டுபல் நாற்றம் வேண்டுவயின் உவப்பச்
செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள்சேர்பு
எய்திய கனைதுயில் ஏற்றொறும் திருகி
மெய்புகு வன்ன கைகவர் முயக்கின் 15
மிகுதிகண் டன்றோ இலெனே நீ நின்
பல்பொருள் வேட்கையின் சொல்வரை நீவிச்
செலவுவலி யுறுத்தனை ஆயிற் காலொடு
கனைஎரி நிகழ்ந்த இலையில் அம் காட்டு
உழைப்புறத்து அன்ன புள்ளி நீழல் 20
அசைஇய பொழுதில் பசைஇய வந்துஇவள்
மறப்புஅரும் பல்குணம் நிறத்துவந்து உறுதர
ஒருதிறம் நினைத்தல் செல்லாய் திரிபுநின்று
உறுபுலி உழந்த வடுமருப்பு ஒருத்தற்குப்
பிடியிடு பூசலின் அடிபடக் குழிந்த 25
நிரம்பா நீளிடைத் தூங்கி
இரங்குவை அல்லையோ உரங்கெட மெலிந்தே? 27

பாடல்:380 (தேர்சேண்)

தொகு
தேர்சேண் நீக்கித் தமியன் வந்து, நும்
ஊர்யாது? என்ன நணிநணி ஒதுங்கி
முன்னாள் போகிய துறைவன் நெருநை
அகலிலை நாவல் உண்துறை உதிர்த்த
கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன் 5
தாழை வேர்அளை வீழ்துணைக்கு இடூஉம்
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என
நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே
உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்
நாம்எதிர் கொள்ளா மாயின் தான்அது 10
துணிகுவன் போலாம் நாணுமிக உடையன்
வெண்மணல் நெடுங்கோட்டு மறைகோ?-
அம்ம, தோழி!- கூறுமதி நீயே! 13
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/371_முதல்_380_முடிய&oldid=480946" இலிருந்து மீள்விக்கப்பட்டது