பக்கம்:சோழர் வரலாறு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சோழர் வரலாறு



மகுடங்களைக் கொண்டு தனக்கு வீரக்கழலைச் செய்து கொண்டவன்,[1] எட்டுத் திசையும் எரி கொளுத்திப் பல கேடுகள் நிகழப் பகைவர் நாட்டை அழித்தவன்; காற்றுடன் எரி நிகழ்ந்தாற் போன்ற செலவையுடைய போரில் மிக்கவன்.[2] வேந்தரது பாடி வீட்டின்கண் குருதிப் பரப்பின் கண்ணே யானையைக் கொன்று புலாலையுடைய போர்க் களத்தை உண்டாக்கிய போர் செய்யும் படையை உடையவன்.[3] மண்டிய போரில் எதிர் நின்று வெல்லும் படையையும் திண்ணிய தோள்களையும் உடையவன்;[4] வாள் வீரரும் யானையும் குதிரையும் உதிரம் கொண்ட போர்க்களத்தில் மாய, நாடோறும் அமையானாய், எதிர்நின்று கொன்று நமனுக்கு நல்விருந்தளித்தவன்.[5]

கருவூர் முற்றுகை: இவன் செய்த பல போர்களில் கருவூர் முற்றுகை ஒன்றாகும். இவன் தன் படைகளுடன் கருவூரை முற்றிப் போர் செய்தான். சேர மன்னன் கருவூர் அரணுக்குள் இன்பமாகக் காலம் கழித்து வந்தான். அவன் வீர மானம் அற்றவன். கிள்ளி வளவன் விணே போரிடலைக் கண்டு வருந்திய ஆலத்துார் கிழார் என்ற புலவர் அவனை நோக்கி, “நின் படைகள் செய்யும் கேட்டை நன்கு உணர்ந்தும் சேர மன்னன் மானம் இன்றித் தன் கோட்டைக்குள் இனிதாக இருக்கின்றான். அவன் போருக்கு வரவில்லை. நீ மானமற்ற அவனுடன் பொருவதில் என்ன சிறப்பு உண்டாகும்? நீ வென்றாலும் ஒன்றே அவனைக் கொன்றாலும் ஒன்றே. எச்செயலாலும் நினக்குப் பெருமை வருமென்பது விளங்கவில்லை.”[6]

என்று கூறுமுகத்தால், சேர அரசனது மானமின்மையையும் கிள்ளிவளவனது ஆண்மையையும் விளக்கினார். பின்னர்ச் சேரன் தோற்றான்போலும்! என்னை?


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/80&oldid=480837" இலிருந்து மீள்விக்கப்பட்டது