புறநானூறு/பாடல் 221-230


வைகம் வாரீர்!

தொகு

221

பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது.

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத்தக் கோனை,
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!
‘நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,
கெடுவில் நல்லிசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே.

222

என் இடம் யாது?

தொகு

பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும் உயிர்விடத் துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக் கேட்டுப் பாடியது இச் செய்யுள்
‘அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா’ என
என்இவண் ஒழித்த அன்பி லாள!
எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாது? மற்று இசைவெய் யோயே!

223

நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!

தொகு

பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

பலர்க்கு நிழ லாகி, உலகம் மீக்கூறித்,
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்,
இடங் கொடுத்து அளிப்ப, மன்ற-உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!

224

இறந்தோன் அவனே!

தொகு

பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்,
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

225

வலம்புரி ஒலித்தது!

தொகு

பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,
நிலமார் வையத்து வலமுறை வளைஇ,
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையடு,
‘ஆற்றல்’ என்பதன் தோற்றம் கேள், இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
முள்ளுடை வியன்காட் டதுவே-‘நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?’
இன்னிசைப் பறையடு வென்றி நுவலத்,
தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி,
ஞாலங் காவலர் கடைத்தலைக்,
காலைத் தோன்றினும் நோகோ யானே.

226

இரந்து கொண்டிருக்கும் அது!

தொகு

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;'
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்-பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே.

227

நயனில் கூற்றம்!

தொகு

பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.

நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின்,
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?

செய்தி

தொகு

கிள்ளிவளவன் குளமுற்றம் என்னுமிடத்தில் இறந்துபோன செய்தியை இப்புலவர் பாடியுள்ளார். அதில் அவன் பல போர்களில் ஈடுபட்டுப் பலரைக் கொன்ற செய்தி நயம்படக் கூறப்பட்டுள்ளது. கூற்றுவன் என்பவன் உயிர்களைக் கொன்று தின்பதாக நம்பினர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிய கற்பனையே இந்தப் பாடலிலுள்ள நயம்.

  • கிள்ளிவளவன் உயிரோடு இருந்தபோது பல உயிர்களைக் கொன்று கூற்றுவனுக்குத் தீனி போட்டானாம். கிள்ளிவளவனைக் கொன்றுவிட்டாயே கூற்றுவ! இனி உனக்குத் தீனி போடுவார் யார்? என்கிறார் புலவர். கிள்ளிவளவனை வைத்துக்கொண்டு அவன் தரும் உயிர்களை உண்ணும் தந்திரம் தெரியாதவனாம் கூற்றுவன்.

=== ஒல்லுமோ நினக்கே! === 228

பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல். துறை: ஆனந்தப் பையுள்.

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

229

மறந்தனன் கொல்லோ?

தொகு

பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
குறிப்பு: அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது.

ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்,
பங்குனி உயர் அழுவத்துத்,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல் நாள்மீன் துறை படியப்,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்,
கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே:
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்,
‘பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமன் தில்’லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்,
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்,
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்,
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை,
மணிவரை அன்ன மாஅ யோனே?

230

நீ இழந்தனையே கூற்றம்!

தொகு

பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.
திணை: பொதுவியல். துறை: கையுறுநிலை.

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்,
களம்மலி குப்பை காப்பில வைகவும்,
விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்,
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்,
பொய்யா எழினி பொருதுகளம் சேர-
ஈன்றோர் நீத்த குழவி போலத்,
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்,
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி
நீ இழந் தனையே, அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்,
வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்,
நேரார் பல்லுயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=புறநானூறு/பாடல்_221-230&oldid=1397506" இலிருந்து மீள்விக்கப்பட்டது