அகநானூறு/41 முதல் 50 முடிய
< அகநானூறு
அகநானூறு பக்கங்கள்
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
1. களிற்றியானை நிரை
தொகுபாடல்: 41 (வைகுபுலர்)
தொகு- வைகுபுலர், விடியல், மைபுலம் பரப்பக்,
- கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
- எரிமருள் பூஞ்சினை இனச்சிதர் ஆர்ப்ப,
- நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்து,
- குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, . 5
- அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர்
- ஓதைத் தெள்விளி புலந்தொறும் பரப்பக்
- கோழிணர் எதிரிய மரத்த கவினிக்,
- காடுஅணி கொண்ட காண்தகு பொழுதில்,
- நாம்பிரி புலம்பின் நலம் செலச் சாஅய் 10
- நம்பிரிபு அறியா நலமொடு சிறந்த
- நல்தோள் நெகிழ, வருந்தினள் கொல்லோ-
- மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
- தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
- அம்கலுழ் மாமை கிளைஇய,
- நுண்பல் தித்தி, மாஅ யோளோ? 16
பாடல்: 42 (மலிபெயல்)
தொகு- மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
- கொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச்
- செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
- தளிர்ஏர் மேனி, மாஅ யோயே!
- நாடுவறம் கூர, நாஞ்சில துஞ்சக் 5
- கோடை நீடிய பைதுஅறு காலைக்
- குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
- சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இல்
- என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்,
- பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை, 10
- பல்லோர் உவந்த உவகை எல்லாம்
- என்னுள் பெய்தந் தற்று - சேண்இடை
- ஓங்கித் தோன்றும் உயர் வரை
- வான்தோய் வெற்பன் வந்த மாறே! 14
பாடல்:43 (கடல்முகந்து)
தொகு- கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
- சுடர்நிமிர் மின்னொடு வலன்ஏர்பு இரங்கி
- என்றூழ் உழந்த புன்தலை மடப்பிடி
- கைமாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
- நிலனும் விசும்பும் நீர்இயைந்து ஒன்றி, 5
- குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது,
- கதிர்மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
- தளிமயங் கின்றே தண்குரல் எழிலி, யாமே
- கொய்அகை முல்லை காலொடு மயங்கி,
- மைஇருங் கானம் நாறும் நறுநுதல், 10
- பல்இருங் கூந்தல், மெல்இயல் மடந்தை
- நல்எழில் ஆகம் சேர்ந்தனம், என்றும்
- அளியரோ அளியர்தாமே - அளிஇன்று
- ஏதில் பொருட்பிணிப் போகித், தம்
- இன்துணைப் பிரியும் மடமை யோரே! 15
பாடல்: 44 (வந்துவினை)
தொகு- வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
- தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே;
- முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
- ஒன்றுஎன அறைந்தன பணையே; நின்தேர்
- முன்இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது 5
- ஊர்க, பாக! ஒருவினை, கழிய-
- நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
- துன்அருங் கடுந்திறல் கங்கன், கட்டி,
- பொன்அணி வல்வில் புன்றுறை என்றுஆங்கு
- அன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10
- பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக்,
- கண்டது நோனானாகித் திண்தேர்க்
- கணையன் அகப்படக் கழுமலம் தந்த
- பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
- அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15
- பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை,
- பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
- தண்குட வாயில் அன்னோள்
- பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே! 19
பாடல்:45 (வாடல்)
தொகு- வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
- ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்பக்
- கோடை நீடிய அகன்பெருங் குன்றத்து,
- நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
- ஆள்இல் அத்தத்து உழுவை உகளும் 5
- காடு இறந்தனரே, காதலர்; மாமை,
- அரிநுண் பசலை பாஅய, பீரத்து
- எழில்மலர் புரைதல் வேண்டும்,அலரே
- அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
- தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி, 10
- புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
- இன்இசை ஆர்ப்பினும் பெரிதே; யானே,
- காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
- ஆதிமந்தி போலப் பேதுற்று
- அலந்தனென் உழல்வென் கொல்வோ - பொலந்தார், 15
- கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்,
- வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய
- உடைமதில் ஓர் அரண்போல
- அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே! 19
பாடல்: 46 (சேற்றுநிலை)
தொகு- சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
- ஊர்மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
- கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
- நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய,
- அம்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை 5
- வண்டூது பனிமலர் ஆரும் ஊர!
- யாரை யோ? நிற் புலக்கேம், வாருற்று,
- உறை இறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,
- பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
- வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம் 10
- கூறேம்; வாழியர், எந்தை! செறுநர்
- களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
- ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
- பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
- ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க;
- சென்றீ, பெரும! நிற் றகைக்குநர் யாரோ? 16
பாடல்:47 (அழிவில்)
தொகு- அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
- வினைஇவண் முடித்தனம் ஆயின், வல்விரைந்து
- எழுஇனி - வாழிய நெஞ்சே! - ஒலிதலை
- அலங்குகழை நரலத் தாக்கி, விலங்குஎழுந்து,
- கடுவளி உருத்திய கொடிவிடு கூர்எரி 5
- விடர்முகை அடுக்கம் பாய்தலின், உடனியைந்து,
- அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும்
- வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக்கு
- அகன்சுடர் கல்சேர்பு மறைய, மனைவயின்
- ஒண்தொடி மகளிர் வெண்திரிக் கொளாஅலின் 10
- குறுநடைப் புறவின் செங்காற் சேவல்
- நெடுநிலை வியன்நகர் வீழ்துணைப் பயிரும்
- புலம்பொடு வந்த புன்கண் மாலை
- "யாண்டு உளர்கொல்?" எனக், கலிழ்வோள் எய்தி,
- இழைஅணி நெடுந்தேர்க் கைவண் செழியன் 15
- மழைவிளை யாடும் வளம்கெழு சிறுமலைச்
- சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
- வேய்புரை பணைத்தோள், பாயும்
- நோய்அசா வீட, முயங்குகம் பலவே! 15
பாடல்:48 (அன்னாய்)
தொகு- "அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
- பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
- நனிபசந் தனள்" என வினவுதி; அதன்திறம்
- யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்,
- மலிபூஞ் சாரல், என்தோழி மாரோடு 5
- ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
- "புலிபுலி!" என்னும் பூசல் தோன்ற-
- ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
- ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
- பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், 10
- குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
- வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
- "யாதோ, மற்று அம் மாதிறம் படர்?" என
- வினவிநிற் றந்தோனே. அவற் கண்டு,
- எம்முள் எம்முள் மெய்மறைபு ஒடுங்கி 15
- நாணி நின்றனெ மாகப், பேணி,
- "ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
- மைஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
- பொய்யும் உளவோ?" என்றனன் பையெனப்
- பரிமுடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, 20
- நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
- சென்றோன் மன்ற அக் குன்றுகிழ வோனே!
- பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
- அவன்மறை தேஎம்நோக்கி, "மற்றுஇவன்
- மகனே, தோழி!" என்றனள்
- அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே. 26
பாடல்: 49 (கிளியும்)
தொகு- 'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
- அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
- முன்நாள் போலாள்; இறீஇயர், என்உயிர்' என,
- கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
- கடுங்கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, 5
- குறுக வந்து, குவவுநுதல் நீவி,
- மெல்லெனத் தழீஇயினே னாக, என் மகள்
- நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
- பல்கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
- விறல்மிகு நெடுந்தகை பலபா ராட்டி, 10
- வறன்நிழல் அசைஇ, வான்புலந்து வருந்திய
- மடமான் அசாஇனம் திரங்குமரல் சுவைக்கும்
- காடுஉடன் கழிதல் அறியின் - தந்தை
- அல்குபதம் மிகுந்த கடியுடை வியன்நகர்,
- செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, 15
- கோதை ஆயமொடு ஓரை தழீஇத்
- தோடுஅமை அரிச்சிலம்பு ஒலிப்ப, அவள்
- ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே! 18
பாடல்: 50 (கடல்பாடு)
தொகு- கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
- நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;
- செவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
- மாண்இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,
- பகலும் நம்வயின் அகலா னாகிப் 5
- பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன்,
- இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
- "வாராதோர் நமக்கு யாஅர்?" என்னாது,
- மல்லன் மூதூர் மறையினை சென்று,
- சொல்லின் எவனோ - பாண! 'எல்லி 10
- மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
- துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்' எனக்
- கண்நிறை நீர்கொடு கரக்கும்
- ஒண்நுதல் அரிவை "யான் என் செய்கோ?" எனவே! 14