பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

105

தக்கவர், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை யவர்களாவார்கள். திருக்கோவலூரை யடுத்துள்ள மணம் பூண்டி என்ற ஊரினார். அவர் சுவாமிகளிடம் தொழும்பு பூண்டொழுகிக் கல்வி கற்றுச் சிறந்தவர். தம் சொல்லாற்றலால் பற் பல இடங்களிற் சுவாமிகளின் பெருமையை அறிவித்தவர், திருப்பாதிரிப்புலியூர் மடாலயத்திற்கும் வருவார். சில காலம் அங்கேயே இருப்பதும் உண்டு. அவர் 'ஞானியார் மாணவர் கழகம்’ என்ற பெயருடன் ஓர் கழகம் நிறுவினார். சுவாமிகளிடம் கல்வி பயில்வோர் யாவருமே அக்கழகத்தில் அங்கத்தினராவர்.

திருப்பாதிரிப் புலியூரையும், அதன் சுற்றுப்புற கிராம முதலியவற்றையும் வாழ்விடமாகக் கொண்டிருந்தவர் பலரும், ம.ரா. குமாரசாமிப் பிள்ளையைப் போல் வெளியூரிலிருந்து வந்து தங்கிப் படிப்பவரும், நாள்தோறும் மாலை 6 மணிக்கு மடாலயத்தில் ஒன்று கூடுவர். 9 மணிவரை பாடம் நடைபெறும். கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் பிரபுலிங்கலீலை, மெய்கண்ட சாத்திர நூல்கள், இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலாம் பல பல நூல்களை ஒவ்வொன்றாக முறையே சுவாமிகள் பாடம் நடத்துவார்கள்.

பாடம் நடக்குங்கால் எவரேனும் எது குறித்தேனும் சுவாமிகளையோ மாணவர்களுள் எவரையோ காண வந்தாலும் அவர்களையும் இருக்கச் செய்துவிடுவார்கள். அவர் பாடத்தில் ஈடுபட்டுச் சொல்லமுது மாந்தி நன்மை பெறுவதும் உண்டு. பாடங்களிற் சிறப்பு நிகழ்ச்சிகள் வருமெனில், அப்போது மாணவர் கழகப்பொருட் செலவில் மடாலயத்தில் எழுந்தருளும் பெருமானுக்குச் சிறப்புப் பூசனைகளும் நிகழும். சுவாமிகள் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி யிருக்குங் காலமெல்லாம் பாடம் நடைபெறுவது தடைபடாது. பாடங் கேட்போர் பலரும் சிறந்த அறிவுடையராய்த் திகழ்ந்தனர். சிலர் ஆசிரியப் பணியேற்று வாழ்க்கை நடத்தியதும் உண்டு. இன்னின்னாரென அறிந்த அளவுக்கு ஓர் பட்டியல் பிற்சேர்க்கையில் இணைக்கப் பெற்றுள்ளது.