420
நற்றிணை தெளிவுரை
வழிவழிப் பெருகி' எனக் காமநோய் பெருகுந் திறத்தைக் குறுந்தொகை 289 ஆம் செய்யுளுள் இவர் எழிலாகக் கூறுகின்றனர். 'புள்ளும் புலம்பின பூவும் கூம்பின... இன்னும் உளேனே தோழி, ' எனத் தலைவியின் ஏக்கமிகுதியையும் இவர் மனம் நொந்து உரைப்பர்.
பெருங்குன்றூர் கிழார் 5, 112, 119
இவர் வேளாண் மரபினர்; பெருங்குன்றூர் என்னும் ஊரினர்; இவ்வூர் தொண்டை நாட்டது என்பர்; சேர நாட்டகத்திலேயும் பெருங்குன்றூர் உளதென்பர். சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறையைப் பாடிப் பரிசில் பெற்றவர் (பதிற்றுப்பத்துள் ஒன்பதாம் பத்து). பரணர் நக்கீரர் ஆகியோரோடு ஒரு காலத்தவராக இருந்தவர். சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியையும், வையாவிக் கோப்பெரும் பேகனையும் பாடியவர். இச் செய்யுட்கள் மூன்றும் குறிஞ்சித்திணைச் செய்யுட்களாகும். 'அற்சிரக் காலையும் காதலர்ப் பிரிதல் அரிதே' எனவும், 'மழைக்கு விருந்து எவன் செய்கோ' எனவும் வரும் சுவையான பகுதிகளை இச் செய்யுட்களுட் காணலாம்.
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் எனவும் கூறப்படுவர்; செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை மலைபடுகடாம் பாடிப் போற்றியவர் இவரே என்பர் சிலர். அவர் வேறு இவர் வேறு என இருவராகக் கொள்ளலும் பொருந்துவதாகும். இச் செய்யுட்களுள் இவர் குறிஞ்சியையும் முல்லையையும் புனைந்து பாடியுள்ளார். இற்செறிப்பிற் பிற்றை ஞான்று குறியிடத்து வந்து நின்றானாகிய தலைமகன் தலைமகளது பெறற்கரிய பெருநிலையை எண்ணித் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் (44) மிகுசுவை பயப்பதாகும். 'பன்மரவுயர்சினை மின்மினி விளக்கத்துச் சென்மழை இயக்கங்காணும் நன்மலை நாடன் காதல் மகள்' என்பது, அத் தலைவியது பேதைமையைக் காட்டுவதுமாகும், வினைமுற்றி வந்து கூடியின்புறுவோனாகிய தலைவன் மழையை வாழ்த்துவதாக அமைந்த செய்யுளும் இன்சுவைமிக்கதாகும் (நற் 139).