பதிற்றுப்பத்து/ஆறாம் பத்து

(பதிற்றுப்பத்து/ஆறாம்பத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக்
காக்கை பாடினியா
நச்செள்ளையார் பாடியது


ஆறாம் பத்து
பதிகம்

குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
ண்டா ரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஒரூர் ஈத்து 5

வான வரம்பனெனப் பேரினிது விளக்கி
ஏனை மழவரைச் செருவில் சுருக்கி
மன்னரை ஒட்டிக்
குழவிகொள் வாரின் குடிபுறக் தந்து
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் 10

ஆடுகோட் பாட்டுச் சேர லாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம் : வடுவடு நுண்ணயிர், சிறு செங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளை விறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர் திங்கள், மரம்படு தீங்சனி. இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில் கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பதுகாப் பொன்னும் நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ. கா - ஓர் எடையின் பெயர். காணம் - அக்காலத்து வழங்கிய பொற்காசு.

மேற்றிசை நாடான குடநாட்டிற்குரிய கோமகன் நெடுஞ்சேரலாதன். அவனுக்கு வேளாவிக் கோமானின் மகளாகிய தேவி பெற்றுத் தந்த மகன் ஆடுகோட் பாட்டு நெடுஞ்சேரலாதன். இவன்,

திருடிக் கொள்ளப்பட்டுத் தண்டகாரண்யத்தே போன தனக்குரிய மலையாடுகளைத் திரும்பவும் மீட்டுத் தொண்டிக்குக் கொண்டு வந்தவன். தன்னைப் போற்றிய பார்ப்பாருக்குக் கபிலைநிறப் பசுவையும் குடநாட்டுப் பகுதியுள் ஓர் ஊரையும் தானமாகத் தந்தவன். ‘வானவரம்பன்’ என இனிதாகப் புகழோடும் விளங்கியவன். அப் பெயரை மேலும் விளக்கமுறச் செய்வான்போலத் தனக்கு உட்படாதவரான மழவரைப் போரிலே வெற்றி கொண்டு அவர் வன்மையைக் குன்றச் செய்தவன். தன்னைப் பகைத்துப் படையொடும் வந்தாரான பிற மன்னர்களையும் தோற்று ஓடச்செய்தவன். குழவியைப் பேணிக்கொள்ளும் தாயைப்போலத் தன் குடி மக்களைப் பாதுகாத்தவன். அறமே விரும்புதல் கொண்ட நன்மை பொருந்திய நெஞ்சத்தை உடையவன்.

இந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைத் தாம் யாத்த செய்யுட்கள் பலவாகக் கொண்டு புகழ்பெற்றவரும், புலனடக்கம் கொண்ட கொள்கையினருமான, காக்கை பாடினியார் நச்செள்ளையார் பத்துப் பாட்டுகளாற் பாடினார்.

அவைதாம், ‘வடுவடு நுண்ணயிர்’ முதலாக, ‘மரம்படு தீங்கனி’ என்பது இறுதியாக அமைந்தவை.

சொற்பொருளும் விளக்கமும் : குடக்கோ - குடநாட்டரின் கோமான்; குடநாடு என்பது சேரநாட்டுள்ளே ஒரு பகுதியாகும். தண்டகாரணியம் என்பது மத்திய பாரதத்தின் கண் உள்ள ஒரு காட்டுப் பகுதி. ஒருகாலத்தே இங்கே ஆரியவரசரின் ஆதிக்கம் மிகுதியாக இருந்தது. அவருட் சிலர் மேலைக் கடற்கரைப் பகுதியிலுள்ள இச்சேரமானின் மலைப்பகுதிகளுட் புகுந்து, இவன் குடிகட்குரிய ஆடுகளைக் கவர்ந்து செல்ல, அவர்களை அழித்து ஆடுகளை மீட்டுவந்தான் இவன். இச் சிறந்த செயலால் இவ் வெற்றி குறிக்கும் ‘ஆடு கோட்பாட்டு’ என்பது இவன் சிறப்புப் பெயராயிற்று. ஆடு திருடிய ஆரியக்கள்வரை அவர்க்குரிய மலைப்பகுதிகளுக்கே சென்று வளைத்துக் கொன்று ஆடுகளை மீட்டுவந்தவன் இவன். கபிலை - கயிலை நிறம் : சாம்பல் நிறம். மழவர் . மறக்குலத்தோருள் ஒரு சாரார்; தகடூர்ப் பகுதியுள் இருந்தவர். நயன் - இனிமை. புரந்தரல் - காத்தல்.

‘பார்ப்பார்க்குப் பசுவும் ஊரும் அளித்தான்’ என்றது, ஆரியக் கள்வரைக் கொன்றவனேனும், ஆரியப் பார்ப்பாரும் தன்னை இரந்து நின்றவிடத்து, அவருக்கு வாழ்வளித்துப் பேணிய கருணையாளனும் இவனாவான் என்றதாம்.

குடிபுறங்காத்தல் எவ்வாறு அமைதல் சிறப்பு என்பதனைக், ‘குழவி கொள்வாரின் குடிபுறந் தந்து’ என்னும் பண்டையத் தமிழக மன்னரது அரசியல்நெறி நன்கு விளக்குவதாகும்.

51. வடுவடு நுண்ணயிர் !

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும். பெயர் : வடுவடு துண்ணயிர். இதனாற் சொல்லியது : சேரலாதனின் மென்மையும் வன்மையும்.

[பெயர் விளக்கம் : ‘தாங்குநர் தடக்கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்’ என்று, எதிர்ப்படை மறவர்மேற் போருக்குச் செல்லுதலைக் கூறினமையால், இஃது எடுத்துச் செலவின் மேற்றாய் வஞ்சித்துறைப் பாடாண் ஆயிற்று.

“‘அரவழங்கும்’ என்பது முதலாக இரு குறளடியும், ‘பந்தரந்தரம் வேய்ந்து’ என ஒரு சிந்தடியும், ‘சுடர் நுதல்’ என்பது முதலாக இரண்டு குறளடியும், ‘மழை தவழும்’ என்பது முதலாக நான்கு குறளடியும் வந்தமையின் வஞ்சித் தூக்கும் ஆயிற்று” என்று பழையவுரை கூறுகின்றது.

‘வடுவை மாய்க்கும் நுண்ணயிர்’ என்று கூறிய சிறப்பால் இதற்கு, ‘வடுவடு நுண்ணயிர்’ என்பது பெயராயிற்று.]

துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர
விளங்கிரும் புணரி உருமென முழங்கும்
கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்
கூவல் துழந்த தடந்தாள் நாரை
குவியினர் ஞாழல் மாச்சினைச் சேக்கும் 5

வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின்
அடும்பமல் அடைகரை அலவன் ஆடிய
வடுவடு நுண்ணயிர் ஊதை உஞற்றும்
தூவிரும் போந்தைப் பொழிலணிப் பொலிதந்து
இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் 10

வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி
அரவழங்கும் பெரும்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பெளவத்துக்
குணகுட கடலோடு ஆயிடை மணந்த 15

பந்தர் அந்தரம் வேய்ந்து
வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
நனையுறு நறவின் நாடுடன் கமழச்
சுடர்நுதல் மடநோக்கின்
வாள்நகை இலங்கெயிற்று 20

அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ண்ல் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோ நின் உணரா தோரே?
மழைதவழும் பெருங்குன்றத்துச் 25

செயிருடைய அரவெறிந்து
கடுஞ்சினத்த மிடல்தபுக்கும
பெருஞ்சினப்புயல் ஏறுஅனையை
தாங்குநர், தடக்கையானைத் தொடிக்கோடு துமிக்கும்
எஃகுடை வலத்தர்நின் படைவழி வாழ்நர் 30

மறங்கெழு போங்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்தூறு அளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை
கைவல் இளையர் கையலை அழுங்க
மாற்றருஞ் சீற்றித்து மாயிருங் கூற்றம் 35

வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை! செருவத் தானே.

தெளிவுரை : அசையும் நீர்ப்பரப்பையுடைய கடலின் பரந்தவிடமெல்லாம் கலங்குமாறு காற்று மோதியது. அதனாலே எழுந்து விளங்கும் பெரிய அலைகள் இடியேற்றைப் போல் முழக்கஞ் செய்தன. மேற்றிசைப் புறத்துக் கடலை யொட்டியிருந்த கானற்சோலையை நோக்கி நீயும் செல்லலுற்றன. பள்ளப்புறங்களிலே துழாவித் தனக்குரிய இரையாகிய மீனைப்பற்றி உண்ட பெரிய கால்களையுடைய நாரையானது, வண்டுகள் மொய்த்தபடி தங்கியிருக்கும் குவிந்த பூங்கொத்துக்களையுடைய ஞாழல் மரத்தின் பெரிய கிளையிலே சென்று தங்கியிருக்கும். அத்தகையதும், அடும்பின் கொடிகள் நெருங்கியிருந்ததுமான தண்ணிய கடற்பரப்பினைச் சார்ந்த அடைகரைப் பக்கத்தே, நண்டுகள் அலைதலால் ஏற்பட்ட வடுக்களை மறைக்கும் நுண்மணலை ஊதைக் காற்றானது எறிந்துகொண்டிருக்கும். அத் தன்மையுடைய தூய பெரிய பனைமரச்சோலையிலே சென்று, நின்னை ஒப்பனையாற் புனைந்த அணிகள் பலவும் ஒளிவிட்டு விளங்க, நீயும் கொலு வீற்றிருந்தன.

நடந்தவளாகவும் அசைந்தவளாகவும் ஆடல்செய்யும் இளமகள் ஒருத்தி, வெறியயர் களத்திடத்தே தோன்றி மருளேற்று அசைந்தாடுவது போல, இடங்கள்தோறும் குறுக்கிட்டுக் கிடக்கும், அரிய மணிகளையுடைய பாம்புகள் செல்லும் பெருமலையாகிய பெருந்தெய்வமும், சங்கினம் முழங்கும் குளிர்ந்த தென்கடலும் கீழ்க்கடலும் மேலைக்கடலும் என்னும் அவ் வெல்லைக்கு உட்பட்ட நிலத்து வாழ்வோரான அரசரும் சான்றோரும் பந்தரிடத்தே கூடியிருந்தனர். பந்தரின் மேற்பக்கத்தே தொங்கவிடப் பெற்றிருத்தலாலே, வளவிய தம் அரிய பிணிப்பு அவிழ்ந்தவான கண்களைப்போல விளங்கும் நெய்தல் மலர்கள், தேன் பொருந்திய நறவம் பூக்களோடுஞ் சேர்ந்து, அந் நாட்டுப்புறமெங்கணும் மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. ஒளி திகழும் நெற்றியையும் மடமை விளங்கும் நோக்கத்தையும், மிக்க ஒளிவிளங்கும் பற்களையும், வாயூறலாகிய அமுதம் நிரம்பிய சிவந்த வாயினையும், அசையும் நடையினையும் உடையவரான விறலியரின் பாடல்களை நிரம்ப விரும்பியவனாக, நீயும் தங்கியிருந்தனை. அதனாலே, வெள்ளிய வேலேந்திய அண்ணலாகிய சேரலாதன் இன்ப நாட்டத்தினனாதலின், வெற்றி கொள்வதற்கு எளியன் போலும்!” என்றும், நின்னைச் சரியாக உணராதோர் நின்னைக் குறித்து நினைப்பார்களோ?

[‘உள்ளுவர் கொல்லோ நின் உணராதோர்’ என ஐயத்தை எழுப்பி, அவ்வாறு உள்ளார் என்பாராக, அவனது மறமாண்பைத் தொடர்ந்து கூறுகின்றனர்.]

மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலையினிடத்து வாழும் நஞ்சையுடைய பாம்புகளைத் தாக்கி அச்சமுறச் செய்து கடுஞ்சினத்தைக் கொண்ட அவற்றினது வலியை அழிக்கும், பெரிய முழக்கத்தையுடைய இடியேற்றை ஒப்பவன் நீயாவாய்!

போர்க்களத்தே தம்மை எதிர்த்தாரது பெரிய கைகளையுடைய யானைகளின் தொடியணிந்த கொம்புகளை வெட்டி வீழ்த்தும் வாளினைக் கையேந்திய வெற்றி மறவர்கள், நின் படையாக அமைந்து, அதன் மூலமாக வாழ்க்கை நடத்துவோராவர்.

பனையின் வெண்மையான தோட்டினாலாகிய கண்ணியைப் புனைந்திருந்தும், அதுதான் பகைவரைக் கொல்லுங்காலத்தே பாய்ந்த குருதியால் தன் நிறம் செந்நிறமாக வேறுபட்டு, நின் மறத்தன்மையொடு பொருந்தித் தோன்ற விளங்கும் கண்ணியை உடையையாயிருப்பாய். அதனை ஊன் துண்டமெனப் பிறழக்கருதிய பருந்தொன்று, அதனைக் கவர்தற்குரிய சாலவளவை அளந்தபடி வட்டமிட்டபடி யிருக்கும். நின்னால் தூவப்பெற்ற கணைகள் கிழித்த கரிய கண்ணையுடைய பகைமறவரின் தண்ணுமைகள, அவற்றை முழக்குந் தொழில்வல்ல இளைஞரின் கையால் அறையப்படுதலின்றி ஒழிந்துபோழ். ஏனையோரால் மாற்றற்கரிய சீற்றத்தைக் கொண்ட மிகப்பெரிய கூற்றமானது, உயிர்களைக் கவருவதற்கு வலைவிரித்தாற்போல, நின் பார்வையும் அப்பகைவரை நோக்கிச் செல்லும். நெடுந்தகையே! போர்க்களத்திலே, நீதான் எத்துணைக் கடுமையாக விளங்குகின்றன!

சொற்பொருள் விளக்கம் : துளங்கு நீர் - அசையும் நீர். வியலகம் - பரந்த நீர்ப்பரப்பு. கலங்குதல் . மேல்கீழாகக் கலங்குதல். சால் - காற்று. பொர - மோதியடிக்க. இரும்புணரி - பெரிய அலைகள். உரும் - இடி. கானல் - கானற் சோலை. குடபுலம் - மேலைக்கரை நாட்டுப் பகுதி. முன்னி - அடைந்து. கூவல் - பள்ளம். துழந்த - துழாவய. ஞாழல் - சுரபுன்னை. மாச்சினை . பெரிதான கிளை. சேக்கும் - தங்கும். இறை கொள்ளல் - தங்கியிருத்தல். அடும்பு - அடும்பங் கொடி. அடைகரை - மக்கள் இறங்கும் துறையுடைய கரைப்பகுதி. அலவன் - நண்டு. வடு - கோடு. அயிர் - நுண் மணல். ஊதை - வாடைக் காற்று. உஞற்றும் - முயன்று வீசும். தூவிரும் - தூய பெரிய. போந்தை - பனை. அணிப் பொலிதந்து - அணிகள் அழகுடன் விளங்கப் பொலிவுடன் வீற்றிருந்து.

இயலல் - நடத்தல். ஒல்கல் - அசைந்தாடல். மடமகள் - இளமகள். வெறியுறு நுடக்கம் - செல்வமேற்று ஆடுதலால் உண்டாகும் அசைந்த ஆட்டம். பெருமலை - இமயம். வயின் வயின் - இடங்கள்தோறும். விலங்கும் - குறுக்கிட்டுக் கிடக்கும். பெருந்தெய்வத்து - பெருந்தெய்வத்து வாழ்வோரும். வளை ஞரலும் - சங்கினம் முழங்கும். பனிப் பெளவம் - குளிர் கடல்; தென்கடல் மணந்த - ஒருங்கே கலந்து கூடியிருந்த, அந்தரம் - மேற்பக்கம். வண்பிணி - வளவிய பிணிப்பு. நறவு - நறவம்பூ. நெய்தற்பூவும் நறவம்பூவும் கண்போல விளங்குவன; இவற்றைக் கலந்து தொடுத்த மாலைகளாலே பந்தரின் மேற்பக்கம் வேயப்பெற்றிருந்தது என்க; இக் காலத்தும் பந்தரின் மேற்புறத்து வரிசைவரிசையாக மாலைகளைத் தொங்கவிடுவதனைக் காணலாம். மடநோக்கு - மடபம் பொருந்திய பார்வை. வாள் நகை - ஒளியுடைய பற்கள். அமிழ்து - வாயமுதம். பொதிதல் - நிரம்பியிருத்தல். துவர் வாய் - சிவந்த வாயிதழ்கள். அசைநடை - அசைந்து அசைந்து நடக்கும் நடை. சான்று - மிகவும் விரும்பி. நீடினை - நெடிதே தங்கினை. வெள்வேல் - வெள்ளிய வேல். மெல்லியன் - சிற்றின்பத்தே எளியன். நின் உணராதோர் . நின் போர் மறத்தை உணராதோரான பகைவர்.

மழை - மேகம். செயிர் - குற்றம்; அது நஞ்சுடைமை. அரவு - பாம்பு. எறிந்து - தாக்கி. மிடல் - வலிமை. புயல் ஏறு - இடியேறு. தாங்குநர் - தடுத்துப் போரிடும் பகைவர். தொடி - பூண். துமிக்கும் - வெட்டி வீழ்த்தும். எஃகு - வாள். வலத்தர் - வெற்றியுடையார். படைவழி வாழ்நர் - படைஞராகப் பணியேற்று வாழ்வோர். ‘நீயும் அரவெறியும் பெருஞ்சினப் புயலேறனையை; நின் படைவழி வாழ்நரும் யானைத் தொடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்’ என்று மற மாண்பை எடுத்துக் கூறுகின்றனர்.

போந்தை - பனை. வெண்தோடு - குருத்தோலை; ஆகு பெயரால் மாலையை உணர்த்திற்று. நிறம் பெயர்தல் நிறம் மாறுபடுதல். ஊறு அளப்ப - உறுதற்கான கால வளவை ஆராய. துரகணை - தூவும் கணகள். மாக்கண் - கரிய கண்ணிடம். கைவல் - தொழிலில் வல்லவரான். கையலை அமுங்க - கையால் அறையப்படுதலற்று ஒய்ந்து போக. மாயிரும் கூற்றம் - கொலைத் தொழிலிலே மிகப் பெரிய வன்மையுடையதான கூற்றம். வலைவிரித்தல் - உயிர்ப் பறவைகளைப் பற்றற்கு வேடன் புள்ளினத்தைக் கவர வலை விரித்தான், கூற்றுவன் உயிர்களை ஒருங்கே கவர வலை விரித்தாற்போல என்க. நேர்க்கலை - நோக்கத்தை உடையை; முற்றெச்சம். நோக்கமே வலையாயிற்று; அதன் எல்லைக்குட்பட்ட பகைவர் தப்புதல் அரிது என்பதும் ஆம்.

52. சிறு செங்குவளை !

துறை : குரவைநிலை. வண்னம்: ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : சிறு செங்குவளை.

[பெயர் விளக்கம் : ‘அவள் நின்று நின்னை எறிதற் பொருட்டாக ஒக்கிய சிறு செங்குவளை‘ எனக் கூறிச், ‘சிறு’ என்னும் சொல்லால், அவளது மென்மைத் தன்மையை நுட்பமாகப் புலப்படவைத்த சிறப்பால், இப் பாடல் இப் பெயரைப் பெற்றது.

இதனாற் சொல்லியது : சேரலாதனின் கைவண்மையும், வென்றி மேம்பாடும் அவற்றோடு இணைந்த இன்பச் செவ்வியும் ஆம்.

துணங்கையாடுதல் காரணமாகப் பிறந்த ஊடலின் பொருளைத் கொண்ட பாட்டு இது; ஆதலால் துறை ‘குரவை நிலை’ ஆயிற்று.]

கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலந் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு
மையணிந்து எழுதரு மாயிரும் பல்தோல்
மெய்புதை அரணம் எண்ணாது எஃகுசுமந்து
முன்சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்

தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட
நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை 1O

இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்பறி யாவெனக் கேட்டிகும் இனியே
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீ 15

நளிந்தனை வருதல் உடன்றன ளாகி
உயவும் கோதை யூரலந் தித்தி
ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை
ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கும் சீறடிப்
பல்சில் கிண்கிணி சிறுபரடு அலைப்பக் 20

கொல்புனல் தளிரில் நடுங்குவனள் நின்றுநின்
எறியர் ஒக்கிய சிறுசெங் குவளை
ஈயென இரப்பவும் ஒல்லாள் நீஎமக்கு
யாரை யோஎனப் பெயர்வோள் கையதை
கதுமென உருத்த நோக்கமொடு அதுநீ 25

பாஅல் வல்லா யாயினை பாஅல்
யாங்குவல் லுநையோ? வாழ்கநின் கண்ணி!
அகலிரு விசும்பில் பகலிடம் தரீஇயர்
தெறுகதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று
உருபுகிளர் வண்ணம கொண்ட 30
வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே.

தெளிவுரை : கொடிகள் அசையும் நிலையுடையவும், எதிர்ப்பட்ட பகைவரைக் கொல்லும் சினமுடையவுமான களிறுகள்,செறிவோடு பகைப்படைகளை நோக்கி ஒருபுறமாகச் சென்றன. வடித்த மணிகளையுடைய நெடுந்தேர்கள் வேறு பக்கங்களிற் பரவலாகச் சென்றன. பகைப் படையணிகளை ஊடறுத்துச் செல்லும் இவை, அருங்கலன்களைத் தருதற் பொருட்டாகக் கடலின் மேலாக மிதந்து செல்லும் பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்களைப்போலத் தாந்தாம் திசை திரிந்தவாய்ச் சென்று கொண்டிருந்தன. கருமை நிறத்தை மேற்கொண்டு எழுதலையுடைய மிகப்பெரிய பலவான கேடகங்களுடன், வேலும் வாளும் ஏந்திக் கொண்டவராக, முன்னணிப் போரிலே ஈடுபட விரும்பி எழுந்தாரான வன்கண்மையுடைய படைமறவர்கள், தம் மெய்யை மூடும் கவசங்களைப் பற்றி நினையாதவராக, அவையின்றியே பகைப்படையணிகளை ஊடறுத்துச் சென்றனர். நோலாமைக்கு ஏதுவாகிய அவர்களது தும்பை மாலைகள், பகைப் படையணிகளின் இடையிடையே விளங்கித் தோன்றின. அதனால் வீழ்ந்துபட்ட பகைமறவர் பலரும், உயர்நிலை உலகத்தை அடைந்தனர். இவ்வாறு அறநெறியோடு பொருந்திய நற்போரைச் செய்து மேம்பட்டவன் நீ. “இடியினும் மாறுபட்டதான நின் பெரிய கையானது, இரப்போர்க்கு ஈதலின் பெரிய கையானது, இரப்போர்க்கு ஈதலின் பொருட்டாக மட்டுமே கவியும்; அன்றிப் பிறரை இரத்தற் பொருட்டாக என்றும் மலர்தலை அறியாதது என்று, சான்றோர் உரைக்கக் கேட்டுள்ளேம், பெருமானே!

இனியே,

ஒளிர்கின்ற கால்விளக்கின் செல்வம் விளங்கும் ஒளியிலே, முழக்கிற்கு ஏற்பத் துணங்கைக் கூத்து ஆடுகின்ற மகளிர்க்குக் கைகோத்தாடும் புணையாக, சிலைத்தலையுடைய வலிய கொல்லேற்றைப் போலத் தலைக்கை தருதலையும் செய்வாய். நீ தான் அம் மகளிரோடு செறிந்து ஆடிவரு வோனாயினை! அசைகின்ற கோதையினையும், பரந்த அழகுத் தேமல் புள்ளிகளையும், குளிர்ந்த இமைகள் பொருந்திய இருண்ட கண்களையும், பெரிய இயல்பினையும் உடையாளான நின் தேவியானவள், நின் துணங்கையாட்டத்தைக் கண்டு நின்பால் ஊடல்கொண்டனள். ஒள்ளிய இதழ்விரிந்த தாமரைப் பூவைப் போன்ற தன் சிற்றடிகளிலே அணிந்துள்ள பல மணிகளைக் கொண்ட இரு சதங்கைகளும், தன் சிறுபரடுகளே வருத்துமாறு கால்கள் நடுங்கக், கரையழிக்கும் நீர்ப்பெருக்கிலே பட்டு வருந்தும் தளிரைப்போல நடுங்கியவளாக நின்றபடி, நின்னை எறிதற்காகப் சிறிய செங்குவளை மலரினை ஒச்சினாள். அதனைக் கண்ட நீதான், அதனைத் தருக என்றபடி நின் கைகளை விரித்தாயாய் இரந்து நின்றனை. அந்த நின் செயலாலும், அவள் தன் சினங் குறையாதாளாயினள். அம் மலரை நினக்குத் தராதவளாக, ‘நீதான் எமக்கு எவ்வுறவினை உடையையோ?’ என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுச் செல்லலானாள். அவள்கையிடத்தேயே அச் செங்குவளை மலரும் விளங்கிற்று.

திடுமெனக் கோபித்த பார்வையோடு சென்று, அக் குவளை மலரை அவள் கையினின்றும் பறித்துக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு, வல்லமை இல்லாதவனாக நீயும் அவ்வேளையில் ஆயிருந்தனை!

அகன்ற பெரிய வானத்தே பகற்காலத்திற்கு இடமுண்டாதலின் பொருட்டாகச், சுடுகின்ற கதிர்களைப் பரப்பி விளங்கும் அச்சம் பொருந்திய ஞாயிற்றினுடைய உருவத்தையும், விளங்குகின்ற வெண்மை வண்ணத்தையும் கொண்ட வெண்கொற்றக் குடையினையுடைய வேந்தர்களின், வானளாவ உயர்ந்த கோட்டை மதில்களைக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு, நீதான் எவ்வாறு வல்லமை உடையை யாயினையோ? நின் கண்ணி வாழ்வதாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கம்: கொடியேந்திப் பகைப் படையணிகளூடாகப் புகுந்து ஊடறுத்துச் செல்லும் களிறுகட்கும் தேர்கட்கும் கடலிடையே திசை திரிந்து செல்லும் கலங்களை உவமை கூறினர். திசை திரிந்தாலும், அவை செல்லும் திசைக்கே முடிவிற் சென்று சேர்வதுபோல, இவையும் பகைப் படியணிகளைச் சிதைத்தபின் மீண்டும் ஒன்றுகூடும் என்பதாம். ’களிறு மிடைந்து' என்றது, அவை பகைப்படைக் களிறுகளைத் தாங்கிச் செறித்து அழித்து என்றது ஆம். 'ஊர்ந்த தேரே, சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த கடுஞ்செலற் கொடுந்திமில் போல (அகம்.330) எனப் பிற சான்றோரும், தேர்ச்செலவைக் கடலிடைச் செல்லும் கலங்களின் செலவுக்கு ஒப்பிடுவர். இதனாற் கடல்போற் பெரும்படை உடைய பகைவர் என்பதும் பெறப்படும். நுடக்கம் - அசைவு. நிலைய - நிலைகளையுடைய. மிடைந்து - செறிந்து வடிமணி - வார்த்தமைந்த மணி. அருங்கலம் - நம் நாட்டில் கிடைத்தற்கரிய அணிகலம். நிவத்தல் - மிதத்தல். வங்கம் - கப்பல்கள். மை - கருமை. தோல் - கிடுகு: கேடகம். மெய் புதை அரணம் - கவசம். எஃகு - வேலும் வாளும் பிறவும். வன்கண் ஆடவர் வன்கண்மை உடையரான மறவர்; அவர் மெய்புதை அரணம் எண்ணாது எழுந்தது, அவர்தம் ஆற்றலிற் கொண்ட உறுதிப்பாட்டினால். தும்பை - தும்பை மாலை. எவ்வழி - எவ்வழியும், எப்புறமும். 'தும்பை வழி விளங்க' என்றது, பகைப்படை மறவர்கள் பட்டு வீழ்ந்தனர் என்றதாம். 'உயர்நிலை உலகம் எய்தினர் என்றது, அவரும் மறப் போராற்றி மாண்டனர் என்றதாம்; இதனால் அவர்க்கும் அருளிச்செய்த அருளுடைமை தோன்றக் கூறினர். நல்லமர் - நற்போர்; இது எதிர் நின்று பொருது வெற்றி பெறும் போர்; சூழ்ச்சித் திறனால் பகைவரை அழிப்பதன்று. செல் - இடியேறு; போரில் நாகமனைய கொடிய பகைவரைத் தன் கைத்திறனால் வென்றமை தோன்றச் ’செல்லுறழ் தடக்கை' என்றனர். ’ஈயக் கவிதலன்றி, ஏற்க மலராத கை’ என்று அவனுடைய வலிமையைக் கூறினர்.


பாண்டில் - கால்விளக்கு. திரு நாறு விளக்கம் - செல்வ நலம் தோன்றுமாறு காட்டும் விளக்கொளி. துணங்கை - ஆடவரும் மகளிரும் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து. தழூஉப் புணையாக - கைகோத்தாடும் துணையாக. சிலைப்பு - முழக்கம். தலைக்கை தரல் - முதற்கை தருதல்; இது மரபு. நளிந்தனை வருதல் - கைகோத்தாடிய அப் பெண்ணுடன் நெருங்கிச் சேர்ந்தபடி ஆடிவருதல். உயவுங் கோதை - அசையும் தலைமாலை. ஊரல் - படர்தல். தித்தி - தேமற் புள்ளிகள். 'ஒள்ளிதழ் அவிழகம் கடுக்கும் சீறடி' என்றது. அவளது மென்மையினை விதந்து கூறியதாம். கிண்கிணி -சதங்கை. அது பரட்டை வருத்தல், அவள் நிலைகொள்ளா தாளாகச் சுழன்று அங்குமிங்கும் நடத்தலால். உடலுதல் - சினங் கொள்ளல்; இங்கே ஊடற் சினம். 'அரிவை' என்றது சேரமா தேவியை. அவள் வருந்தி நெஞ்சழிந்த நிலைக்குச் செல்புனலிடைச் சிக்கி அலமரும் தளிரினை உவமித்தனர்; அத்துணை அவலங்கொண்டு கலங்கினாள் என்பதாம். எறியர் - எறியும் பொருட்டாக. சிறுசெங்குவளை - சிறிய செங்குவளை மலர்; இது தலைக் கோதையினின்றும் எடுத்துக் கொண்டதாகலாம். அதனைக் கண்டவன், அவள் சினத்தைத் தணிவிக்கும் பொருட்டு. 'ஈ' என இரந்து நின்றனன். அவளோ, அதனைத் தன் புதிய காதலிக்குத் தருதற்குக் கேட்பான்போலும் எனக் கருதியவளாக, அதனையும் தாராளாயினள். அங்கு நிற்கவே விரும்பாதவளாக, அவ்விடம் விட்டு அகன்றும் போயினள் என்க. ’நடுங்குவனள்'-முற்றெச்சம்: நடுங்குதற்குக் காரணம், சேரலாதன் துணங்கை மகளோடு நளிந்தவனாக ஆடிவருதலைக் கண்டதனால் உற்ற ஊடற் சினம்.

திடுமென – விரைய. உருத்த நோக்கம் - கோபித்த பார்வை. 'வல்லாய் ஆயினை' என்றது, அதனைக் கைப்பற்றின் அவள் சினம் மேலும் மிகுதலறிந்து, அவள்பாற் கொண்ட காதலால், அவளுக்குத் துன்பம் இழைக்காதபடி: அவளைப் போகவிடும் மென்மை உடையவனாயினன் என்பதாம். இந்த ’வல்லமை', அருளால் அன்புடையார் செய்யும் பிழையைப் பொறுத்தலைச் செய்யும் அவனது எளிமையைக் கூறிய தாம். இனிப் 'பிறர்பால் இரந்தறியாத நீதான் இரந்து வேண்டியும் அவள் மறுத்தனள்; அதுகண்டும் நீ சினவாயாயினை' என, அவனது பொறுமையும் அவர்களது காதற் பெருக்கமும் தோன்றக் கூறியதுமாம்.

’ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட வெண்குடை வேந்தர்' என்றது பகைவேந்தரை. அவர்தாம் பகைவரைத் தெருதலில் இருளைக்கடியும் ஞாயிற்றைப் போன்ற தேயாத வன்மையுடையவர் என்று குறித்தற்காம். அத்தகையாரது வான்தோய் எயிலும் கொண்டது சேரலாதனின் மேம்பட்ட மறமாண்பை விளக்கும்.


53. குண்டுகண் அகழி!

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: குண்டு கண் அகழி. இதனாற் சொல்லியது: அடைந்தார்க்கு அருளுதலும் அவன் வென்றிச் சிறப்புமாகிய செய்திகள்.

[ ‘கோள் வல் முதலைய' என்னும் அடைச்சிறப்பால் இச்செய்யுட்கு இது பெயராயிற்று.]


வென்றுகலம் தரீஇயர் வேண்டுபுலத்து இறுத்து அவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை யாகுமதி எம்மென்று அருளிக்
கல்பிறங்கு வைப்பின் கடறுஅரை யாத்தநின்
தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின் 5

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வல் முதலைய குண்டுகண் ணகழி
வானுற ஓங்கிய வளைந்துசெய் புரிசை
ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி 10

நின்னின் தந்த மன்னெயில் அல்லது


முன்னும் பின்னும்நின் முன்னோர் ஓம்பிய
எயில்முகப் படுத்தல் யாவது? வளையினும்
பிறிதுஆறு செல்பதி! சினங்கெழு குருசில்!
எழுஉப்புறந் தரீஇப் பொன்பிணிப் பலகைக் 15

குழூஉநிலைப் புதவின் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
மேம்படு வெல்கொடி நுடங்கத் 20

தாங்க லாகா ஆங்குநின் களிறே.


தெளிவுரை: பகைத்தோரது நாட்டை வென்று, அவருடைய அரிய கலன்களைக் கொணர்தலின் பொருட்டாகச் செல்லக் கருதிய நாட்டிடத்தே சென்று நீயும் தங்குவாய். அவ்வண்ணம் நீதான் சென்று தங்கிய காலத்தே, அப் பகைவர் நினக்கு அஞ்சியவராக நின்னைப் பணிந்து, 'எமக்கும் அருள் செய்தவனாக விளங்குக, பெருமானே' என்று கூறிய படி, குன்றாத புதுவருவாயுடைய தம் நாட்டையே நினக்குத் திறையாகக் கொடுப்பர். நீதான் அவர்க்கு அருள் செய்தாயாய், அவர் கொடுத்த செல்வங்களைப் பெற்று, அவர் நாட்டை அவர்க்கே தந்துவிட்டு, மலைகள் விளங்கும் நாட்டகத்தே யுள்ளதும், காடு சூழ்ந்துள்ளதுமான, பழம் பெருமையுடைய நின் மூதூர்க்குச் செல்லத் தொடங்குவாய். அவ்வாறு செல்வாயாயின்,

செவ்வையான மூட்டுவாய் அமைந்த சிலம்புகளோடு, அணியாகத் தொகுக்கப்பெற்ற தழையாடையும் தூங்கிக் கொண்டிருப்பதும், எந்திரப் பொறிகளாலே காக்கப் பெறுவதும், அம்புகளைடைய கோட்டை வாயில்; வீழ்ந்தவரைப் பற்றி உணவாக்கிக் கொள்ளும் முதலைகளையுடைய ஆழமும் அகலமும் கொண்ட அகழி; வளைவு வளைவாகக் கட்டப்பெற்று வானளாவ உயர்ந்து விளங்கும் மதில்; இவற்றை உடையது இக்கோட்டை. இதுதான் மனம் பொருந்தாதாராக வந்துமுற்றிய பகையரசரது போர்முனை கெடுமாறு குறுகிட்டதாய், நின்னாற் கைக்கொண்டு தரப் பெற்ற துணையரசரின் எயிலாகும். அன்றியும், நின் முன்னோர்கள் முன்னும் பின்னும் தொடர்ந்து காத்துவந்த கோட்டையுமாகும்; அதனாலே நின் படையணிகளை இதற்கு நேராகச் செலுத்துதல்தான் யாதாய் முடியும்? எண்ணி யருள்க!

சினம் பொருந்திய தலைவனே! நேராகச் செல்வதன்றிப் பிறிதொரு வழிதான் வளைந்து நீளுமாயின், அப் பிறிதொரு வழியாகவே நீயும் செல்வாயாக. நேராகச் சென்றால், கணைய மரத்தால் பின்பக்கம் வலிமை சேர்க்கப் பெற்று, இரும்பாணி களாலே இறுகப் பிணிக்கப் பெரிய பலகைகளால் அமைக்கப் பெற்ற, பற்பல நிலைகளையுடைய கோட்டைக் கதவுகளைப் புள்ளியமைந்த நெற்றிகளையுடைய நின் களிறுகள் மெய் பெறக்காணலும் நேரும். அவ்வாறு, மெய்பெற நேரிற் காணின், வண்டினம் பாய்ந்துண்ணும் மதநீர் ஒழுக்கோடு, பாகரின் குத்துக் கோலைக் கடந்து சென்று, வேங்கை மரத்தைப் புலியென மருண்டு சென்று தாக்கியழித்தலினாலே வடுப் பட்டு விளங்கும் புள்ளியமைந்த நெற்றிகளையுடைய நின் போர்க்களிறுகள். உயர்ந்த தம் கைகளைச் சுருட்டியபடி, பாகரேந்தும் தோட்டியையும் மதியாது சென்று, தம் மேலாக மேம்பாட்டுடன் விளங்கும் வெற்றிக் கொடியானது அசைந்தாடுமாறு, அம் மதிற்கதவுகளை மோதிச் சிதைக்கத் தொடங்கும். அவ்வேளை, அவற்றை அடக்குதல் இயலாது. பெருமானே!

சொற்பொருள் விளக்கம்: கலம் - அணிகலம் முதலாம். செல்வம். தரீஇயர் - கொணரும் பொருட்டாக. வேண்டு புலம் - செல்லுதற்கு விரும்பிய நாடு. இறுத்து -தங்கி. வாடா யாணர் நாடு - குன்றாத புது வருவாயினை உடைய நாடு. நல்கல் - அருள் செய்தல். கல்பிறங்கும் - மலை விளங்கும். வைப்பு - நாட்டுப்பகுதி. கடறு - காடு. அரை யாத்த - சூழ்ந்துள்ள. தொல்புகழ் - பழைய புகழ். மூதூர் - தொன்னகரம்; வஞ்சி. பகைவர் நாட்டை "வாடா யாணர் நாடு” என்று சிறப்பித்தது, அச் செல்வ வளத்தாலே செருக்கிச் சேரனைப் பகைத்தவர் அவர் என்பதற்காம்; அதனை யறிந்தவன் அவர் செருக்கழிந்தாராய்ப் பணிந்துபோக, அவர் தந்த திறையைக்கொண்டு, அவர்க்கு நட்பு அருளித் திரும்பினான் என்று கொள்க. இப்பொருளை ஏற்றார்க்கு இனிது வழங்குவானாதலின் ’ஈதற் பொருட்டாகவே இப் படையெழுச்சி' என்றும் கொள்ளலாம். அரையிற் கட்டிய துணி உடலைச் சூழக் கிடந்து காத்தாற்போலச் சூழ்ந்து விளங்கிக் காத்தலின் 'கடறு அரையாத்த' என்றனர். ’கடல்பிறங்கு வைப்பின் மூதூர்' ஆதலானும், ’கடறு அரை யாத்த மூதூர்' ஆதலானும், சிறந்த காப்புடைய பேரூர் என்பதும், அழிவற்றுத் தொடர்ந்து நெடுங்காலமாக நிலவிவரும் மூதூர் என்பதும் கூறினார். 'நல்கினை யாகுமதி எம்' என்றது, அவ்வரசரை அழிக்க ’வெகுண்டு வந்தவனாதலின்’, தமக்கு வாழ்வருளிக் காக்குமாறு வேண்டினர் என்றதாம்.

செம்பொறி, - சிறப்பாகப் பொறிக்கப்பெற்ற சிலம்பின் மூட்டுவாய். கோட்டை வாயிலில் வெற்றித் திருமகளின் நினைவாகத் தம் வெற்றிச் செய்திகள் பொறித்த சிலம்புகளையும், தழையாடையும் புனைந்த பாவை ஒன்றனையும் தொங்க விடுவது பண்டைய மரபு என்பர். இனி, முற்றவரும் பகைவர்க்கு அறைகூவலாக, 'எம்மை எதிர்ப்பார் யாருமிலர்? அனைவரும் சிலம்பும் தழையுடையும் கொள்ளும் மகளிரே’ என அறிவிப்பதன் சின்னமாக இப்படிப் பாவையைத் தூங்க விடுவதும், மதிலைப் பொருதும் பகைவர் முதற்கண் அதனை அறுத்து வீழ்த்திய பின்னரே போர் தொடங்குவர் என்பதும் பண்டை மரபாகும் என்பர். 'எந்திரத் தகைப்பு' என்றது, பகைவரைத் தாமே தாக்கியழிக்கும் காவற்பொறிகள். அம்புடை வாயில் -புதையம்புகளையும், கோட்டைக் கதவம் திறந்து உட்புகும் பகைவர்மீது தாமே சென்று பாயும் அம்புகளையும் உடைய வாயில்; இது புறமதிலின் சிறப்புக் கூறியது. இதனையடுத்துக் கிடப்பது புறமதிலின் ’கோள்வல் முதலைய குண்டுகண் அகழி' யாகும். 'கராஅங் கலித்த குண்டுகண் அகழி ’எனப் புறப்பாட்டுக் (புறம் 37) கூறுவதும் காண்க. குண்டு - ஆழத்தையுடைய. கண் - அகன்ற இடத்தையுடைய. அகழி - அகழ்ந்தமைந்த, கோட்டைக்குள் கிடங்கு. ’வளைந்து செய் புரிசை' என்றது, இடையிடையே வீரர் நின்று போரிடற்கு ஏற்ற வளைவுகளுடன் அமைக்கப் பெற்ற கோட்டையினை. முனை - போர்முகம். விலங்கி - குறுக்கிட்டு. மன்னுதல் - நிலைபெறுதல். எயின் முகப் படுத்தல் - கோட்டைக்கு நேராகச் செல்லுதல். 'யாவது - எதனாலோ? என்றவர், அடுத்து அதனை மறுத்ததற்கான காரணத்தை உரைக்கின்றார்.

’சினங்கெழு குரிசில்' என்றது, நகைவர் பணிந்து திறை தந்த பின்னரும் தணியாத சினத்துடன் சென்று கொண்டிருந்தவன் சேரன் என்பதாம்; இது பகைவர் முன்னர்ச் செருக்கியிருந்த நிலைகளை நினைதலால் ஏற்பட்டதாம்; அவர் பணிந்து திறை தந்ததன் பின்னரும், அவன் கொண்ட பெருஞ் சினம் தணிந்திலது என்பதாம். குரிசில் - தலைவன். வளையினும் - சுற்றி வளைத்தவாறு செல்லினும். செல்மதி - செல்வாயாக. எழு - கணையமரம். பொன் - இரும்பு. குழூஉநிலை - குழுமிய நிலை; நிலை – வாயிற்படி. புதவு - வாயில். தேம் - வண்டினம். கைநீவி - கைகடந்து. வேங்கை வென்ற - வேங்கை மரத்தை மோதிச் சாய்த்த. பொறி - புள்ளி; வடுவு மாம். கிளர்தல் - விளங்குதல். புகர் - புள்ளி. தோட்டி யானையைச் செலுத்தும் அங்குசம்; தோட்டி காவலும் ஆம்; அப்பொழுது ’தோட்டி நீவி' என்பதற்குக் 'கோட்டைக் காவலர்களது எதிர்ப்பையும் கடந்து சென்று' எனக் கொள்க. தாங்கலாகா - தடுத்தற்கு இயலாத.

'வேங்கை வென்ற பொறிகளர் புகர்நுதல்' என்பதற்கு, 'நிறத்தால் வேங்கை மலரை வென்ற புள்ளிகள் விளங்கித் தோன்றுகின்ற நெற்றி' எனவும் கொள்வர். 'புகர் நுதல்’ வாளா பெயர் மாத்திரையாய் நின்றது எனவும் கூறுவர்.


54. நில்லாத் தானை !

துறை: காட்சி வாழ்த்து. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: நில்லாத் தானை. இதனாற் சொல்லியது: அவன் கொடைச் சிறப்பும் தம் குறையும் கூறி வாழ்த்தியவாறு

[பெயர் விளக்கம்: 'காலாள் முதலாயினவற்றைத் தர மல்ல வென்று கழித்துநின்று, யானை காணின் நில்லாது மேற்செல்லும் தானை' என்று கூறிய சிறப்பால், இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]


வள்ளியை என்றலின் காண்குவந் திசினே :
உள்ளியது முடித்தி! வாழ்கநின் கண்ணி!
வீங்கிறைத் தடைஇய அமைமருள் பணைத்தோள்
ஏந்தெழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்
பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல் 5

மின்னிழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண தீர நாள்தொறும்
உரைசால் நன்கலம் வரைவில் வீசி


அனையை யாகல் மாறே எனையதூஉம்
உயர்நிலை உலகத்துச் செல்லாது இவணின்று 10

இருநில மருங்கின் நெடிதுமன் னியரோ!
நிலம்தப இடூஉம் ஏணிப் புலம்படர்ந்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும் 15
 
ஒல்லார் யானை காணின்
நில்லாத் தானை இறைகிழ வோயே

தெளிவுரை: பகைத்தோரது நிலப்பரப்புக் குறைவு படுமாறு, அவரது நாட்டகத்தே செல்வாய்; அவர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிற் பாசறைகளை அமைப்பாய்; ஒலிக்குங் கண்ணையுடைய போர்முரசமானது அப் பாசறைகளின் நடுவே அமைந்திருந்து முழங்கும்; அம் முழக்கம் படை மறவரை ஏவ, அதனைக் கேட்ட அம் மறவரும் தம் வலக்கைகளில் தண்டுகளை ஏந்தியவராகப், பகைவர்க்கு அச்சத்தைச் செய்யும்பொருட்டு எழுவர். அம் முரசொலியின் ஏவலை மேற்கொண்டவராக அவர் பகைவரை நோக்கிச் செல்வர். இளையவரான மறவர் துணையோடு போர்க்கெழுந்த பகைவேந்தரின் யானைப்படையைக் கண்டால், நொடிப் பொழுதேனும் நில்லாது சென்று, அவற்றைத் தாக்கி யழிப்பர். அத்தகைய மறத்தையுடைய தானைக்கு அரசனாக விளங்கும் உரிமையினை உடையோனே!

நீதான் வள்ளன்மை உடையை என்று சான்றோராற் பாராட்டிக் கூறப்படுதலினாலே, யானும் நின்னைக் காணற் பொருட்டாக வந்துள்ளேன். யான் கருதியதையும் முடித் தருள்வாயாக. நின் கண்ணி வாழ்வதாக.

அகன்ற சந்து பொருந்திய வளைகளணிந்த, பெருத்த மூங்கிலைப் போலும் பருத்த தோள்களையும், உயர்ந்த அழகினையுடைய குளிர்ச்சி பொருந்திய கண்களையும், தொய்யில் எழுதப்பெற்றுப் பூரித்து வருதலையுடைய இளங் கொங்கைகளையும், பூத்தொழில் விளங்கும் துகில் பொருந்திய அல்குற் பகுதியையும், வண்டினம் மொய்க்கும் கூந்தலையும், மின்னலிடும் அணிகளையும் கொண்டோர் விறலியர். அவர் தாம் நின் போர்மறத்தைப் போற்றிப் பாடுவர். அதனைக் கேட்டாயான நீயும் அவ்விறலியருக்கும், அவரோடு சேர்ந்த பாணர் முதலாயின பிற இரவலருக்கும் அவரது வறுமைத் துயரம் முற்றத்தீருமாறு, புகழமைந்த நல்ல அணிகலன்களை நினக்கெனப் பேணி வையாது, நாள்தோறும் வழங்கியபடி இருப்பாய். நீதான் அத் தன்மையினன்! ஆதலினாலே, எத்துணைச் சிறிதளவு காலமேனும் துறக்கமாகிய உலகினுக்குச் செல்லாதவனாக, இந்த அரச வாழ்விலேயே நிலை பெற்றிருப்போனாக, இப்பெரிய உலகினிடத்தேயே நீயும் நெடுங்காலம் வாழ்வாயாக!

சொற்பொருளும் விளக்கமும்: தப - குறைய. ஏணி எல்லை. படர்ந்து - சென்று. படுகண் - ஒலிக்கும். கண்ணிடம். 'நடுவண்' என்றது பாசறைகளின் நடுவிடம் என்றவாறாம். சிலைத்தல் - முழங்கல். தோமரம் - தண்டாயுதம். நாமம் அச்சம். செய்ம்மார் - செய்வதற்காக; மாரீற்று முற்று. ஒல்லார்- பகைவர். 'நாமம் செய்ம்மார்' என்றது, படையொடு வரும் பகைவருக்குத் தம் மறமாண்பு புலப்படச் செய்தபடி என்றதாம். இது பிற படைகளை ஒதுக்கி, முதற்கண் யானைப் படை புகுந்ததனைக் குறித்துக் கூறியதுமாம். வியம் - ஏவல்.

வள்ளலாவார், 'முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் இன்மை தீர்த்தலை' இயல்பாக உடையராதலின், 'உள்ளியது முடித்தி' என்றனர். முடித்தி - முன்னிலை ஏவல் வினை.

வீங்கு இறை - பெருத்த சந்துப் பகுதி. தடைஇய - பருத்த. அமை - மூங்கில். ஏந்தெழில் - உயரிய அழகு. வனைந்து வரல் - பூரித்து எழுதல். மின்னிழை - மின்னலிடும் அணி வகைகள். புன்கண் - வறுமைத் துயரம். வரைவில் - தனக்கெனப் பேணி வைத்தல் இல்லாது. மன்னியர் - நிலை பெறுவாயாக.


55. துஞ்சும் பந்தர் !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் ஒழுகுவண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: துஞ்சும் பந்தர். இதனாற் சொல்லியது: சேரன் உலகு காத்தலும், தன் குறையும் கூறி வாழ்த்தியது.

[பெயர் விளக்கம்: நன்கல வெறுக்கை துஞ்சும் என்ற சிறப்பால் இதற்குத் 'துஞ்சும் பந்தர்' என்பது பெயரா யிற்று.]


ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல!
நின்னயந்து வந்தனென்; அடுபோர்க் கொற்றவ!


இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
கமழும் தாழைக் கானலம் பெருந்துறைத் 5

தண்கடல் படப்பை நன்னாட்டுப் பொருந
செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை!
குடவர் கோவே! கொடித்தேர் அண்ணல்
வாரா ராயினும் இரவலர் வேண்டித் 10

தேரின் தந்துஅவர்க்கு ஆர்பதன் நல்கும்
நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்
வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறந் தந்து பொங்க லாடி
விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் 15

சென்றா லியரோ பெரும! அல்கலும்
நனந்தலை வேந்தர் தாரழிந்து அலற
நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினம் தணிந்த செருப்புகள் ஆண்மைத்
தாங்குநர்த் தகைத்த ஒள்வாள் 20

ஓங்கல் உள்ளத்துக் குருசில்நின் நாளே!

தெளிவுரை: பெண்மையின் மாண்புகளாலே நிரம்பிய நங்கையின் கணவனே! சான்றோரைக் காத்துதவும் தலை வனே! நின்னைக் காண்பதனையே விரும்பி வந்தேன். பகைவரைக் கொல்லும் போரைச் செய்கின்ற கொற்றவனே! இனிதாக ஒலித்தலைச் செய்யும் அலைகள் ஒலிசெய்கின்ற, கடல் வழியாக வந்த நல்ல கலன்களாகிய செல்வம் தொகுக்கப்பெற்றுக் கிடக்கும் பண்டசாலைகள் பொருந்திய, தாழைப் பூவினது நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும் கானற் சோலையிடத்தமைந்த பெருந்துறையினைக் கொண்ட, தண்ணிய கடற்கரைப் பகுதியாகிய நல்ல நாட்டின் தலைவனே! தன்னிற் கலந்த சிவந்த ஊன்கறி தோன்றாவாறு நன்றாக அரைக்கப்பெற்ற துவரையின் வெண்மையான துவையலையும், வெள்ளூன் கலந்த சோற்றையும் உண்ணும் மழவர்க்கு, மெய்புகு கவசத்தைப் போன்றவனே! குடநாட்டாரின் கோமானே! கொடி விளங்கும் தேரையுடைய அண்ணலே!

நின் நாட்டில் வறுமை யாதும் இல்லாமையாலே நின்னை நாடி இரந்து நிற்பவர் வாராது போயினும், ஈத்து உவக்கின்ற அந்த இன்பத்தை விரும்பியவனாகப், பிற நாட்டின் கண் உள்ளாரைத் தேரேற்றிக் கொணர்ந்து, அவர்க்கு மிகுதியான உணவைக் கொடுத்து ஆதரிக்கும், கேட்டார் மீளவும் கேட்டலை விரும்பும் வாய்மொழியினையுடைய, புகழமைந்த தோன்றலே!

பெருமானே! அகன்ற இடத்தை உடையவரான பகை வேந்தர்கள் தம் தூசிப் படைகள் அழிந்து போதலினாலே ஆற்றாதாராய்ப் புலம்ப, நெடிய மலைப்பக்கத்தைச் சார்ந்திருந்த அவர்தம் நாடுகளையெல்லாம் கைப்பற்றி, அதன் பின்னரே அவரைப் பொருதும் சினம் தணிந்தவனாகிய, போரை விரும்பும் ஆண்மையையும், எதிர்வந்து தடுக்கும் பகைமறவரை அழித்த ஒள்ளிய வாளையும், ஊக்கமிக்க உள்ளத்தையும் உடையவனாகிய குருசிலே!

நின்னுடைய வாழ்நாள், வேண்டிய கால அளவினுள்ளாக, யாண்டுகள் பலவாகக் கழிய, மழையைப் பெய்து உயிர்களைக் காத்துப் பின்னர் மேலோங்கிப்பறக்கும் பிசிராய்க் கழிந்து, மலையுச்சியைச் சேர்ந்த வெண்மேகத்தைப் போலச் சென்று கெடாது ஒழிவதாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும்: ஆன்றோள் - பெண்மை நலன் எல்லாம் அமைந்தவள்; அவள் சேரமாதேவி. மான்றோர்- பெரியோர்; போரியல் பிறழா மறவரும் ஆம். புரவலன் - புரத்தலின் வல்லவன். கொற்றவன் - கொற்றத்தை உடையவன்; கொற்றம் - வெற்றி. புணரி - அலை. இரங்கும்- ஒலிக்கும். பௌவம் - கடல். வெறுக்கை - செல்வம். பந்தர் பண்டகசாலை. துஞ்சும் - தொகுக்கப் பெற்றுக் கிடக்கும். கானல் - கானற் சோலை. படப்பை - சார்ந்துள்ள நிலப்பகுதி. பொருநன் - நெய்தல் தலைவன். முதிரை - துவரை முதலாயின. ’அரைத்துக் கரைத்தமையில் செவ்வூன் தோன்றாத் தன்மையடைந்த வெள்ளிய பருப்புத் துவையல்’ என்பார், 'செவ்வூன் தோன்றா முதிரை வெண்துவை’ என்றனர். மழவர் - மழகொங்கு நாட்டார். ’வாலூன் வல்சி மழவர்' என்றது, வெள்ளூனையே உணவாகக் கொள்ளும் மழவர் என்றதாலும் ஆம்; சோற்றினும் மிகுதியாக ஊனை உண்பவர் என்று கொள்க. மெய்ம்மறை கவசம். குடவர் - குட நாட்டார். கோ- தலைவன். அண்ணல் - பெருமையாற் சிறந்தவன். தேரின் - தேர் மூலமாக. ஆர்பதன் - மிகுந்த உணவு. நகைசால் - விருப்பத்தை மிகுவிக்கும். இசைசால்- புகழ் மிகுந்த. நனந்தலை - அகன்ற இடம். தார் - தூசிப்படை; முற்பட விரையச் செல்லும் முன்னணிப் படை. பொருது சினம் - பொருதலாகிய சினம்; அஃது பகைவரை அழித்தலும் மறைந்தது. என்பார், ’தணிந்து' என்றனர். புகலல் - விரும்பல். ஓங்கல் - உயர்தல். பொங்கல் - பொங்கும் பஞ்சுப் பொதி போலப் பிசிர்பட்டுப் போதல் ; வெண்மேகத்திற்கு இது இயல்பு.


56. வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி!

துறை: ஒள்வாள் அமலை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு செந்தூக்கு. பெயர்: வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி. இதனாற் சொல்லியது: சேரனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: மாற்றுவேந்தர் அஞ்சித் தங்கள் மெய்யை மறந்த வாழ்வு வேந்து மெய்ம்மறந்த காரணத்தால் வந்தது. இச்சிறப்பால் இப்பாடல் இப்பெயரைப் பெற்றது.

தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன், வெற்றிக் களிப்பாலே, தேர்த்தட்டிலே நின்று போர்த் தலைவரோடு கைபிணைந்து ஆடும் குரவை, 'ஒள்வாள் அமலை’ எனப்படும் (தொல். புறத். 21. உரை).

இதனாற் சேரலாதன் போர்மறத்திலேயே பெரிதும் விருப்புடையன் என்பதும், தன் வெற்றியிலும், தன் படையாண் மையிலும் உறுதியுடையவன் என்பதும் விளங்கும்.]


விழவுவீற் றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லா னல்லன்; வாழ்கஅவன் கண்ணி!
வலம்படு முரசம் துவைப்ப வாளுயர்த்து
இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன் 5

மடல்பெரு மையின் உடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத்து ஆடுங் கோவே.

தெளிவுரை: விழவானது பெருமையோடும் விளங்கிய அகன்ற தன் ஊரினிடத்தே, கூத்தரது முழவொலியின் முன்னர் ஆடும் தொழிலில், நம் சேரலாதன் வல்லான் அல்லன். அவன் தலைக்கண்ணி வாழ்வதாக!

வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசம் பெரிதும் முழக்கஞ் செய்யத் தன் வாளை உயர்த்தவனாகவும், விளங்கும் பூண்களை அணிந்தவனாகவும், பொன்னாற் செய்த உழிஞைக் கொடியைச் சூடியவனாகவும், தம் அறியாமை மிகுதியாலே பகைகொண்டு படையெடுத்து வந்த பகைவேந்தர், தம் உடம்பை மறத்தற்குக் காரணமான வெற்றிச்செல்வம் அழிந்து கெட்ட போர்க்களத்திலே, ஆடுதலில் மட்டுமே அவன் வல்லவன் ஆவான்!

சொற்பொருளும் விளக்கமும்: 'விழவு வீற்றிருந்த வியலுள்' என்றது சேரலாதனது கோநகரை; அங்கு கூத்தரோடு கலந்து ஆடுவான் அல்லன். கோடியர் - கூத்தர். வியனுள் - அகன்ற ஊர்; பேரூர். கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் என்பதனால், பெருமைக்கு யாதும் குறைவில்லை என்பார், 'வாழ்க அவன் கண்ணி' என்கின்றனர். வலம்படு முரசம் - வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசம்; இதன் முழக்கம் படைஞரை ஊக்கிப் போர்க்களத்து வெற்றியீட்டச் செலுத்தலால், வெற்றி முரசம் ஆயிற்று. துவைப்ப - பெரிதும் முழங்க. பொலங்கொடி உழிஞையன்- பொற்கொடி போன்ற கொடியைக் கொண்ட உழிஞையின் பூவைச் சூடியவனும் ஆம். உழிஞை - கொற்றான். பொலங்கொடி உழிஞை - பொற் கொற்றான். மடம் - அறியாமை. மெய்ம்மறந்த வாழ்ச்சியாவது தம் உடம்பைக் கைவிட்டு மறந்து வீரசுவர்க்கத்தே சென்று வாழ்தல். போர்க்களத்திலே ஆடும் கோ, கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் என்கின்றனர். வீந்துகு போர்க்களம் - பகைவர்பட்டு வீழும் போர்க்களம்:

தம் அறியாமையாலே செருக்கிப் போர்க்கெழுந்தவரான பகைமன்னரை அழித்து வெற்றியடைந்து, அக் களத்திலே நின்று, தன் வாள்வீரர்களுடன் வெற்றிக் கூத்தாடுவதற்குச் சேரலாதன் வல்லவனேயல்லாமல், கூத்தர் முன்பாக நின்று களிக்கூத்து ஆடிக் களித்தலில் வல்லவன் அல்லன் என்பதாம்.

57. சில்வளை விறலி !

துறை: விறலியாற்றுப் படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: சில்வளை விறலி. இதனாற் சொல்லியது: சேரலாதனின் வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்.

[பெயர் விளக்கம்: பல்வளை இடுவது பெதும்பைப் பருவத்து மரபு. அஃதன்றிச் சில்வளையிடும் பருவத்தாள் என்றனர். இதனால் ஆடல் முதலிய துறைக்கு உரியளாகிய இளமைப் பருவத்தாள் என்பது விளங்கும். இச்சிறப்பால் இப்பாட்டிற்குச் 'சில்வளை விறலி' என்பது பெயராயிற்று.

விறலியை ஆற்றுப்படுத்தலினால் விறலியாற்றுப் படை ஆயிற்று.]


ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை ஆடிய வலம்படு கோமான்
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5

செல்லா மோதில்? சில்வளை விறலி!
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்பவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி
இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த 10

வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை
ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே.


தெளிவுரை: சிலவாகிய வளைகளை யணிந்தவளான விறலியே! மென்மையான நிலத்திடத்தே யமைந்த வழியாக, நின் சிறிய காலடிகளாலேயே நடந்து செல்லலாம்; வருகின்றாயோ?

ஒள்ளிய நெற்றியை உடையவரான சேரமானின் காதன் மகளிர் இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரான நல்ல செவ்வத்தைச் சேரமானுக்குப் பெற்றுத் தந்தவர்கள். தொழில்வளமை பொருந்திய காற்சிலம்புகளையும், அடக்கத்தாலே சிறந்த ஒழுக்கத்தையும், நிறைந்த அறிவையும், தம் ஒழுகலாற்றால் உண்டாகிய கெடாத புகழையும் உடையவர்கள் அவர்கள். அவர்கள் புலவியாற் சினமுற்றுப் பார்க்கும் பார்வையினுங் காட்டில், இரந்து வந்தாரது வறுமையாற் பொலிவிழந்துபோன பார்வைக்கு மிகவும் அஞ்சுகின்றவன் சேரலாதன். நம்மைக் காத்தலை மேற்கொண்டு ஒழுகுவோனாகிய அத்தகு சிறப்பினன் அவன்!

பாணரது கையிடத்தாகிய, தாழக்கட்டிய நரம்பினைக் கைவிரலாலே மீட்டி வாசித்தலை விரும்பும் பேரியாழி னிடத்தே, பாலைப் பண்ணை எழுப்பியவாறு, குரல் என்னும் நரம்போடு ஒன்றுபட்ட இனிய இசைப்பகுதியிலே, தழிஞ்சி யென்னும் துறை பொருளாகவமைந்த பாட்டினைக் குரலெடுத்துப் பாடியபடி சென்று, அவனைக் கண்டு வருவதற்கு யாமும் செல்வோம்.

போர்க்களத்திலே தன் வெற்றி வீரர்களோடு துணங்கைக் கூத்தாடிய, வெற்றி பொருந்திய சேரமானாகிய கோமான், போரிற் புறங்கொடுத்து ஓடாத மேற்கோளைக் கொண்டவரான பகைவீரரது வலி கெடும்படியாக, அவரோடு போரிட்டு, அவரை அவர் வலிகெடும்படியாக அழித்தலினாலே பாய்ந்த அவர் குருதியானது, தான் அணிந்துள்ள பெரிய பனந்தோட்டு மாலையோடு பெரிய வீரக் கழலையும் சிவக்குமாறு துளிக்கும், புலவு நாற்றத்தைக் கொண்ட போர்க்களத்திடத்துப் பாசறைக்கண்ணே இருக்கின்றான். அவனிடம் செல்வோம். (அப்பகைவரை அழித்துப் பெற்ற செல்வங்களை அவன் நமக்கு வாரி வழங்குவான் என்பது குறிப்பு.)

சொற்பொருளும் விளக்கமும்: வகுந்து - வழி: 'வகுந்து செல் வருத்தத்து வான்துயர் நீங்க' (சிலம்பு: 14:17.); நிலத்தை ஊடறுத்து அமைந்துகிடப்பதாகலின் வகுந்து என்றனர். சில்வளை விறலி - சிலவாகிய வளைகளையேயுடைய விறலி: 'சில்வளை' இளமைப் பருவத்தார் அணிவது. சீறடி - சிறிய அடி. 'செல்லாமோ' என்றது, 'செல்வோம் வருக’ என்னும் பொருள்பட நிற்பது. கையது - கையிடத்தாகிய ; குறிப்பு முற்றெச்சம். பணிதொடை - தாழக் கட்டிய கட்டினையுடைய 'விரல் கவர்-யாழ்' என்றது, வாசித்து வாசித்துப் பழகியதனாலே எடுத்ததும் வாசிக்கத் தூண்டும் கை பழகிய யாழ் என்பதாம்.

தழிஞ்சி - வேந்தர் தம் படையாளர் முன்பு போர்செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்டு அழிந்தவர்களைத், தாம் சென்று பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக்கோடல்; தழிச்சுதல் தழிஞ்சி யாயிற்று. ’அழிகுநர் புறக்கொடை அயில்வாள் ஓச்சாக், கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று' (புற. வெ. 55) துணைப் புதல்வர் - துணையாகும் புதல்வர்; முதுமைக்கண் உதவியும், தந்தைக்கு 'இவன் தந்தை என் நோற்றான் கொல்?' என்னும் புகழும் தேடித் தருதல்பற்றிப் புதல்வரைத் 'துணை' என்றனர். நல்வளம் - நற்செல்வம்; நற்புதல்வரே நற்செல்வம் என்பது கூறினார். "இம்மை யுலகத்து இசை யொடும் விளங்கி, மறுமை உலகமும் மறுவின்றெய்துப, செறு நரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம் மலோர்" என, இவராற் பெறும் சிறப்பைக் கூறுவர் ஆசிரியர் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் (அகம்.66). இத்தகைய புதல்வரைப் பெற்றுத்தந்த மகளிர் போற்றற்கு உரியர் என்பது தெளிவு. குடைச்சூல் - சிலம்பு; உட்டுளை உடைத்தாய்ப் பரல் பெய்யப்பெற்று விளங்கலின் இப்பெயர் பெற்றது. வளம் - தொழில் வளம். அடங்கிய கொள்கை- தம் கணவர் விருப்பையே தம் விருப்பாகக் கொண்டு, தம்மளவில் மனமொழி மெய்களால் அடங்கியொழுகும் ஒழுக்கம். ஆன்ற அறிவு - நிறைந்த அறிவு; பெண்பாலார்க்கு அறிவின் இன்றியமையாயை இது வலியுறுத்தும். 'தோன்றிய நல்லிசை’ என்பது, 'புகழ் புரிந்த இல்வாழ்வு' என்பதனைக் குறித்தற்கு. மனைமகளிரின் தன்மை இவற்றால் விளக்கப்பட்டது. துனி முற்றிய ஊடற்சினம்; அதனைத் தணிவித்துக் கூடல் கணவர் தம் கடமையாகும்; அதனைக் காட்டிலும் இரவலர் புன் கண்மை கண்டு அஞ்சும் அருளாளன் சேரலாதன் என, அவன் கொடைச் சிறப்பையும் கூறினர்; இதனால் அவன் நம் துயரையும் தவறாமல் தீர்ப்பான் என்பதும் கூறினதாகக் கொள்க. எதிர் கொள்வன் - ஏற்றுக் கொள்வோன்.

துணங்கை - துணங்கைக் கூத்து. பூட்கை - மறவரின் வெற்றியே பெறுவேம் என்னும் மனவுறுதி. மிடல் - வலிமை. புடையல் - மாலை. பனிற்றும் - துளிக்கும். புலால் - புலால் நாற்றம். களம் - போர்க்களம்; அதனையடுத்த பாசறையைக் குறித்தது; கங்கையிடைச் சேரி என்றாற்போல.

பகைவரை அழிக்கும் கடுஞ்சினத்தினன் எனினும் இரவலர்க்குப் பெரிதும் உதவும் அருளாளன் என்றனர். 'மகளிர் துனித்த கண்' என்றது. அவன் அவரைப் பிரிந்து நெடுங்காலம் பாசறையிடத்தானாக இருத்தலால். அவர் துயர் தீர்க்க உடனே மீள்தலினும், இரவலர்க்குற்ற வறுமைத் துயரைத் துடைக்கவே விரைபவன் என்றனர். கடுமை, காதன்மை, அருளுடைமை என்னும் மூன்றானும் சிறந்தோன் சேரலாதன் என்பதாம்.

'மெல்லிய வகுந்த' என்றது, வழிதானும் கடுமையற்றது அதனால் எளிதே செல்லலாம் எனக் கூறியதாம்.

58. ஏவிளங்கு தடக்கை !

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: விளங்கு தடக்கை. இதனாற் சொல்லியது: சேரனின் செல்வப் பெருக்கமும் கொடைச் சிறப்பும்.


ஆடுக விறலியர்; பாடுக பரிசிலர்;
வெண்தோட்டு அசைத்த ஒண்பூங் குவளையர்
வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்லுறழ் மறவர்தம் கொல்படைத் தரீஇயர்
இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை 5

மண்புனை இஞ்சி மதில்கடந் தல்லது
உண்குவம் அல்லேம் புகாவெனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படுபு அறியா வயங்குசெந் நாவின்
எயிலெறி வல்வில் ஏவிளங்கு தடக்கை 10

ஏந்தெழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்பன் என்ப கானத்துக்
கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் 15

சீருடைப் பல்பகடு ஒலிப்ப பூட்டி
நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்


அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே.

தெளிவுரை: இடியை யொத்துப் பகைவரைத் தம் நெற்றி முழக்கத்தாலேயே தாக்கி அழிவடையச் செய்பவர் சேரமானின் படைமறவர்கள். அவர்கள் வெண்மையான பனந்தோட்டினாலே கட்டிய ஒள்ளிய குவளைப்பூ மாலையினை அணிபவர்; வாளது வாயாலே வடுப்பெற்ற மாட்சி பொருந்திய தழும்புகள் கொண்ட உடலினர். அவர்கள், பகைவரைக் கொல்லுதற்குரிய தத்தம் படைக்கருவிகளை ஏந்தியபடியே வருவர். வந்து –

“இன்று இனிதான பலவற்றையும் உண்டேமாய் இன்புற்றேம் ஆயினும், இனி நாளைக்கு, மண்ணாலே கட்டப்பெற்று உள்ளவான பகைவேந்தரது கோட்டைமதில்களைக் கைப்பற்றிய பின்னரன்றி யாம் உணவு உண்ணுவே மல்லேம்" என வஞ்சினம் உரைத்து எழுவர். தாம் சூடியுள்ள கண்ணிக்கு ஒப்பப் போர்வினை செய்தலைக் கருதிய அத்தகைய மறவர்களை உடைய பெருமகன், சேரன் -

தாம் சொல்லிய சொற்கள் பொய்யாதலை என்றும் அறியாமையாலே. விளக்கம் அமைந்த செவ்விய நாவினையும், பகைவரது மதில்களைத் தாக்கியழிக்கும் வலிய வில்லும் அம்பும் ஏந்தி விளங்கும் பெரிய கையினையும், உயர்ந்த அழகிய மார்பினையும் உடையவராகிய அம்மறமாண்பினர்க்கு மெய்ம்மறை யென்னும் கவசத்தைப் போன்று காவலாக விளங்குபவன் வானவரம்பனாகிய சேரன்" என்று சொல்வார்கள்.

கானத்திடத்தே ஒலிசெய்தபடியிருக்கும் சிள்வீடு என்னும் வண்டுகளைத், தமது பொரிந்த அடிப்பகுதியிடத்தே கொண்டன சிறுசிறு இலைகளையுடைய வேலமரங்கள். அவை மிகுதியாகத் தோன்றுவது புன்செய்ப் பகுதி நிலம். அதனிடத்தே உழுது வித்திப் பயிர்செய்பவர் வலியமைந்த கையினையுடைய உழவர்கள். அவர்கள் சிறப்புடைய பல பகடுகளை, அவற்றின் கழுத்து மணிகள் ஒலிக்கப் பூட்டி உழுவர். அவர்களின் கலப்பைகள் சென்ற கொழுவழியின் பக்கத்தே, அசைகின்ற ஒளிக்கதிர்களையுடைய சிறந்த மணிக் கற்களை அவர்கள் பெறுவார்கள். இத்தகைய அகன்ற இடமமைந்த ஊர்களையுடைய நாட்டிற்கு உரியவன் சேரமான். விறலியர்களே! அவன் உவக்குமாறு நீவிர் ஆடு வீராக! பரிசின் மாக்களே! அவன் புகழையெடுத்து நீவிர் பாடுவீராக!

சொற்பொருளும் விளக்கமும்: தோடு - பனங்குருத்து. பூங்குவளை - அழகிய குவளை மலர்; செங்குவளையும் ஆம். 'குவளையர்’ என்பது முற்றெச்சம். முகம் - கூர்வாய். பொறித்தல் - தாக்கிப் புண்படுத்தல். அசைத்த - கட்டிய. மாண்வரி மாட்சியுடைய தழும்பு: மாட்சி போரிற்பெற்ற விழுப்புண்ணின் வடுவென்னும் சிறப்பினால். யாக்கை - உடம்பு. யாக்கையர் - யாக்கையராகிய மறவர். செல் - இடியேறு. பகைவராகிய அரவுகளைத் தம் போர்முழக்கத்தாலேயே நெஞ்சுட்கச் செய்து புறங்காணும் சிறப்பினர் என்பதனால், ’செல்லுறழ் மறவர்’ என்றனர். கொல்படை - கொல்லற் குரிய படைக்கலன். தரீஇயர் - கைப்பற்றிவரும் பொருட்டு; செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மறவர் போரைக் குறித்த செலவின்கண், தம் படையை எடுக்குங் காலத்தே சூளுரைத்தவராக எடுப்பது மரபு. ”நீளிலை எஃகம் மறுத்த உடம்பொடு. வாரா உலகம் புகுதல் ஒன்றெனப் படைதொட்டனனே குருசில்” எனத் தலைவ னொருவன் வஞ்சினமுரைத்தலைப் புறநானூற்றுட் காணவாம் (புறம்.341). மண்புனை இஞ்சி - அரைத்த மண்ணாலே அமைந்த இஞ்சி; இஞ்சி - மதிலுறுப்புகளுள் ஒன்று; அரைத்த மண்ணால் சுவர் எழுப்பலைப் புறநானூறு, 'அரைமண் இஞ்சி’ (புறம் 341) எனக் கூறும். இனி, வெண்தோட்டு அசைத்த ஒண்பூங் குவளையராகிய மறவர், தம்மைப் பகைத்து மேல் வந்தாரான, வாள் முகம் பொறித்த மாண்வரி யாக்கையரான செல்லுறழ் மறவர்தம் கொல்படையைக் கைக்கொள்ளும் பொருட்டுக் கூறிய வஞ்சினமாகவும் கொள்ளலாம்.

மதில்கடத்தல் - மதிலையழித்துக் கைக்கொள்ளுதல். புகா -உணவு. கண்ணி - தலைக்கண்ணி ; இது உழிஞைமாலை. கண்ணிய - கருதிய. வயவர் - மறவர். தாம் சூடிய கண்ணிக் கேற்ப வினைசெய்தலைக் கருதிய வயவர் என்க. படுபு - பட்டு; செய்பு என்னும் வினையெச்சம். வஞ்சினம் கூறியவழி, அது பிழைபடலின்றி வினையை முடிப்பவராதலின் 'பொய்படுபு அறியா வயங்கு செந்நாவினர்’ என்றனர். வயங்கல் - விளங்கல். எயில் எறி - மதிலைத் தகர்க்கும். வல்வில் - வலியமைந்த வில். 'எயில் எறி வல்வில்' எனவே வில்லின் சிறப்பு விளங்கும். ஏ - அம்புத் தொழில். ‘ஏவிலங்கு தடக்கை' - அம்பை ஏவும் தொழிலுக்குரிய கூறுபாடுகள் எல்லாம் விளங்கும் தடக்கையும் ஆம். ஏந்தெழில் - உயர்ந்த அழகு: நிமிர்ந்த மார்பெழிலும் ஆம். ஆகம் - மார்பு. மெய்ம்மறை - கவசம்; அவ்வாறு காப்பவன் என்பது பொருள். தன் படைமறவர் பகைப்படை மறவரால் பெரிதும் தாக்கப் பெற்ற வழித், தானே சென்று அப்படையினது செருக்கைக் கெடுத்துத் தன் படைமறவரைக் காப்பவன் சேரனென்பதும் ஆம். வானவரம்பன் - வானத்தை எல்லையாகக் கொண்டவன்; மலைநாட்டானாகிய சேரலாதன்.

கானம் - காடு. இசை கறங்கு இதடி - இசைப்பது போல ஒலிக்கும் சிள்வீடு. அரை - மரத்தின் அடிப்பகுதி. சிறிஇலை - சிறிதான இலைகள்: வேலம் - கருவேலமரம். பெரிய தோன்றும் - மிகுதியாகத் தோன்றும்; 'பெரிய கட்பெறினே, யாம் பாடத் தான் உண்ணும் மன்னே' (புறம் 235) என வருவது காண்க. பகடு சீருடையதாதல், புன்செய்ப் பகுதி உழவிற்குச் சிறந்த தகுதி உடைத்தாதல். 'பகடு ஒலிப்ப’ என்றது, பகடுகளின் கழுத்திற் கட்டியுள்ள மணிகள் ஒலி செய்ய என்றதாம். 'கொழுவழி மருங்கு' என்றது, கொழுப் பிளந்து சென்ற உழவுசாலின் இரு பக்கத்தையும். அலங்கல் அசைதல்; விட்டுவிட்டு ஒளிர்தல். திருமணி - அழகிய மணி; செம்மணியும் ஆம். வைப்பு - ஊர். வைப்பின் நாடு - ஊர்களையுடைய நாடு என்க; உழுவோர் தாம் பெறும் விளையு ளாகிய பிற்பயனை யன்றியும், அப்போதுதானே சிறந்த மாணிக்கக் கற்களையும் பெறுகின்ற வள நாடு என்க. விறலியர் - பாண்மகளிருள் கூத்து இயற்றும் மகளிர். பரிசிலர் - பாணரும் புலவரும் பிறருமாகியவர்; இவர் தம் புலமையைக் காட்டிப் பரிசில் பெறுவாரேயன்றி, இரந்து உண்ணும் இரவலராகார் என்க.


59. மாகூர் திங்கள்!

துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: மாகூர் திங்கள். இதனாற் சொல்லியது: சேரலாதனின் வென்றிச் சிறப்பு.

[பெயர் விளக்கம்: மாசித்திங்கள் விலங்குகளும் நடுங்கும் குளிரை உடையதென்று கூறிய சிறப்பால், இப்பாட்டு, இப் பெயரைப் பெற்றது.]


பகல்நீடு ஆகாது இரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மரகூர் திங்கள்


பனிச்சுரம் படரும் பாண்மகன் உவப்பப்
புல்லிருள் விடியப் புலம்புசேண் அகலப்
பாயிருள் நீங்கப் பல்கதிர் பரப்பி 5

ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்கு
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை! வீற்றிருங் கொற்றத்துச்
செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம் 10

அறியாது எதிர்ந்து துப்பில் குறையுற்றுப்
பணிந்துநிறை தருபநின் பகைவ ராயின்
சினம்செலத் தணிமோ? வாழ்கநின் கண்ணி
பல்வேறு வகைய நனந்தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் 15

ஆறுமுட் டுறாஅது அறம்புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத்தோள்
பாடுசால் நன்கலம் தரூஉம்
நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே.


தெளிவுரை: மாசித் திங்களிலே பகற்பொழுது நெடிதா யிராது. இரவுப்பொழுது பெருகியிருக்கும். அக்காலத்து இரவுப் போதிலே விலங்கினங்களும் குளிர் மிக்கதனாலே வருத்தமுறும். அத்தகைய காலத்தே நடுக்கத்தையுடைய காட்டு வழியூடே செல்ல நினைப்பான் பாண்மகன். அவன் உவப்படையுமாறு, புல்லிய இருளானது மறைந்து விடியற் காலமும் வரும். இருளாலும் பனியாலும் வருந்திய வருத்தம் நெடிதகன்று போய்விடவும், பரந்துள்ள இருள் அகலவும், ஞாயிறானது தன் பலவாகிய கதிர்களைப் பரப்பியபடி, கீழ்த்திசை வானத்திலே எழுந்து தோன்றும். அவ்வாறு ஞாயிறு தோன்றினாற் போல -

இரத்தலையே வாழ்வியலாகக் கொண்ட மக்களின் சிறுமைப்பட்ட குடிவாழ்க்கை யானது, செல்வத்தால் பெருக்கம் அடையுமாறு, உலகைக் காத்துப் பேணிய, மேம்பட்ட கல்வியறிவைக் கொண்ட, வில்வீரனின் மெய்ம் மறையே! வீறும், பெருங் கொற்றமுமுடைய செல்வர்களான வேந்தர்க்கெல்லாம் பெருவேந்தனாக விளங்கும் செல்வனே! புகலென அடைந்தவர்க்குக் காப்பாளனாக விளங்குவோனே!

பல்வேறு வகையான அகன்ற நாடுகளிலிருந்து வந்து தாக்கனவும், மலையிடத்திருந்து பெற்றனவும், கடலிடத்திருந்து கொணர்ந்தனவும் ஆகிய செல்வப் பொருட்களை எல்லாம், அவரவர்க்குப் பகுத்தளிக்கும் அறமுறையானது தடைப்படாமல், அறவாட்சி செய்து வாழ்வோனே! பகை வரும் ஆராய்தற்கமைந்த வலிமை பொருந்திய, பருத்த தோள்களை உடையோனே! பெருமையமைந்த நல்ல அணிகலன்களை நினக்குத் நிறைப் பொருளாகக் கொண்டு தரும் நாடுகளை, நின் நாட்டைப்போலவே பேணிக்காத்தலும் நின் கடனாகுமன்றோ!

நினக்குப் பகைவராக விளங்கிய வேந்தர், நின் வலியினை அறியாராய், நின்னை எதிர்த்துப் போரிட்டு, அதனில் தோற்றதனாலே குறைபாடடைந்து, நின்னைப் பணிந்து, நினக்குரிய திறைப்பொருளைத் தருவாராயின், அவர்தம் பழைய பகைச் செயலைப் பொறுத்து, அவரை அழித்தலே குறியாகச் சென்ற நின் சினத்தையும் தணிவித்துக் கொள்வாயாக! நின் கண்ணி வாழ்வதாக!

சொற்பொருளும் விளக்கமும்: பகல் - பகற்போது. நீடு ஆகாது - நெடிதாக ஆகாமல். பெருகி - பெருக்க மடைந்து. மாசித்திங்கள் பின்பனிக்காலம் ஆகும்; குளிர் மிகுந்த காலம். இது: இக்காலத்து இரவுப்போதில் இரை தேடற்குரியவான விலங்கினங்களும், குளிரால் நடுங்கியவையாய், இரைதேடச் செல்லாவாய்ப் பனியாலும் பசியாலும் வருத்தமுறும். மீளவும் ஞாயிறு கீழ்த்திசை வானத்தெழலும், குளிரின் துன்பமும் இருளின் செறிவும் அகலும் என்பதாம். தன் வறுமை மிகுதியாலும், அதனைப் போக்குபவன் சேரலாதன் என்னும் உறுதியாலும். அப்பனிச்சுரத்தையும் இரவிற் கடந்து செல்வான் பாண்மகன் என்பதாம்.

இரவன்மாக்கள் - இரத்தலே தொழிலாக உடைய மாக்கள்; இவர் பரிசின் மாக்களினும் வேறானவர்; தம் திறனால் மகிழ்வித்துப் பரிசில் பெறக் கருதலின்றித், தம் வறுமையைக் காட்டி இரந்துபெறும் பொருளால் வாழ்வு நடாத்துவோர் இவராவர். சிறுகுடி - சிறுமைத் துயருட்பட்ட குடிவாழ்க்கை. சிறுமை, பொருளற்றதனாலே விளைவது: அது பசியும் பிறபிற துயரமும். பெருகல் - சிறுமை அகன்று பெருக்கமுடன் வாழ்தல். உலகம் - தன் நாட்டின் உயிரினங்கள். தாங்கிய - பேணிக் காத்த. கற்பு - கற்பன கற்றறிந்த அறிவுத் திறன். மெய்ம்மறை - கவசம். வில்லோர்-வில்லாளர். வீறு - தனிச் சிறப்பு. இரும் - பெரிய. கொற்றம் - வெற்றி. செல்வர் - செல்வமுடையோர்; அரசர். அரணம் - பாதுகாப்பு - ஞாயிறு தோன்றியதும் இருளும் குளிரும் அகன்றுபோக, உயிரினம் மீளவும் நலமுற்றாற் போலச்சேரலாதன் தோன்றியதும் இரவலர் சிறுமை கெட்டு அவரும் பெருங்குடியினராயினர் என்பதாம்; இதனால், அவன் கொடைச் சிறப்புக் கூறப் பெற்றது.

'பல்வேறு வகைய நனந்தலை' என்றது, பலவகைப்பட்ட அகன்ற நாடுகளை; இவை மொழிவேறுபட்ட பலவகை நாடுகளையும் குறிப்பதாகலாம். பண்ணியம் - பண்டங்கள். பகுக்கும் ஆறு - மக்களுக்குப் பகுத்தளிக்கும் முறைமை, முட்டு - குறைவு. அறம்புரிந்து ஒழுகல் - செங்கோன்மை நடாத்தி வாழ்தல். நாடல் - ஆராய்தல். துப்பு - வலிமை. பணைத்தோள் - பெருத்த தோள். பாடுசால் - பெருமை மிகுந்த. கலம் - அணிகலன். 'தரூஉம் நாடு' என்றது, திறையளக்கும் நாடுகளை. புறந்தருதல் - காத்தல்; அவையும் வளமும் அமைதியும் உடையவாமாறு செய்து உதவுதல். 'மார்' - அசை.

அறியாது - தம் வலியும் நின் வலியும் ஆய்ந்தறியாது. துப்பு - வலிமை. துப்பில் குறையுற்று - களத்தில் தோற்றதனால், முன்னிருந்த வலிமையும் கெட்டுப்போய்க் குறைபாடு அடைந்து. தணிமோ - தணிவாயாக. இதனாற் போரில் தோற்றுப் பணிந்தோரையும காத்துப் பேணுதலான கடமையினை வலியுறுத்தினர்.


60. மரம்படு தீங்கனி !

துறை: விறலியாற்றுப் படை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: மரம்படு தீங்கனி. இதனாற் சொல்லியது: கொடைச்சிறப்பும் வென்றிச்சிறப்பும்.

[பெயர் விளக்கம்: 'புறத்து வன்மையால் அரிவாளும் போழமாட்டாத தீங்கனி’ என்பவற்றுள், புல்லின் வகையினவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை நீக்குதற்கு, ’மரம் படுகனி' என்று கூறிப், ’பலாப்பழம்' என்று பெயர் வைத்த சிறப்பால், இப்பாட்டு இப்பெயர் பெற்றது.]


கொலைவினை மேவற்றுத் தானை; தானே
இகல்வினை மேவலன் தண்டாது வீசும்;
செல்லா மோதில் பாண்மகள் காணியர்!
மிஞிறுபுறம் மூசவும் தீஞ்சுவை திரியாது
அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி 5

அஞ்சேறு அமைந்த முண்டை விளைபழம்
ஆறுசெல் மாக்கட்கு ஓய்தகை தடுக்கும்
மறாஅ விளையுள் அறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடை மறவர்
பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி 10

வருங்கடல் ஊதையின் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே.

தெளிவுரை: புறத்தே வண்டினம் மொய்த்திருக்கும்; தீவிய சுவையில் மாறுபடாமல் இருக்கும், அரிவாளால் அறுக்கமாட்டாத வலிய தோலுடையவாய் மரத்திலே உண்டாகிய இனிய கனியாகிய, அழகிய தேன் பொருந்தி யிருக்கும், முட்டையின் வடிவம்போல் விளங்கும் முற்றிய பலாப்பழங்கள். அவை வழிச்செல்வார்க்கு உணவாகி, அவருடைய வழிநடைக் களைப்பைப் போக்கும். மாறாத விளைச்சலைத் தரும் வயல்களாலே நீங்காத புதுவருவாயினைக் கொண்டதாயுமிருக்கும். அம்பு தொடுத்து எய்வதில் மடிதலில்லாத வில்லுடைய காவன்மறவர்கள், பொங்குகின்ற நுண்திவலைகளை யெறியும் அலைகளோடும் படிகின்ற வெண் மேகத்தோடும் கலந்து வருகின்ற கடற்காற்றாலே குளிர் மிகுந்தவராக நடுக்கங்கொள்ளும், நறவென்னும் ஊரின் கண்ணே, இப்போது சாயலையுடைய மகளிர் கூட்டத்தோடு களித்தபடி இருக்கின்றனன்.

அவன் தானையோ பகைவரைக் கொல்லுதலாகிய போர்த் தொழிலையே விரும்பும் இயல்பினது. அவனும் சாயினத்தான் ஆயினும், பகைவரைப் பொருதுகின்ற போர்த் தொழிலையே விரும்புபவன். ஆதலால், அவனை இப்போது சென்று காணின், அருங்கலன்களை வரையாது வழங்குவான். ஆதலினாலே, பாண்மகளே! அவனைக் காணுதற்குச் செல்வோமாக.

சொற்பொருள் விளக்கம்: 'புறம் மிஞிறு மூசவும்’ என்றது, மணத்தின் இனிமையாற் கவரப்பெற்ற வண்டினம், புறத்தே மொய்த்தபடி இருக்கவும் என்றதாம். 'தீஞ்சுவை திரியாது' என்றது, அழியக் கனிந்து உண்ணத் தகாதபடி மாறுபடாததாய் என்றதாம். அரம் - அரிவாள். போழ் கல்லா - பிளக்கமாட்டாத உறுதியான தோலையுடைய. தீங்கனி - இனிய பலாக்கனி. 'மரம்படுகனி’ என்றது, புல்லினத்துப் பனம்பழம் போன்ற புறக்காழனவாய கனிகளை விலக்குதற்கு. சேறு - பழச்சாறு. முண்டை - முட்டை. (தொல். எச்ச.7). பலாப்பழத்தின் வடிவைக் குறிப்பதற்கு முண்டை விளை பழம் என்றனர். ஓய்தகை - ஓய்ந்துபோன தன்மை; ஓய்ந்துபோனது வழிநடை வருத்தத்தால். விளையுள் - விளைவயல்கள்; ’மறாஅ விளையுள்' என்றது என்றும் மாறாதே விளையும் வளவயல்கள் என்பதற்காம். அறாஅ யாணர் - கெடாத புதுவருவாய். தொடை - தொடுத்தல். மடி - சோம்பல். களைந்த - போக்கிய. பிசிர் - நுண்துளிகள். புணரி - அலை. மங்குல் வெண்மேகம். மயங்கிவரல் - கலந்துவரல். ஊதை - வாடைக் காற்று.

வழிச்செல்வாரின் களைப்பைப் பலாப்பழம் போக்கும் என்றது. அவன் நாட்டுமரமும் அருளுடையது என்பதற்காம். இனி, வழியிடையே இவ்வாறு நிழல் தருவதற்கும் பழந்தருவதற்கும் பலவகை மரங்களை வைப்பது மரபு எனலும் கொள்ளப்படும். சாயினம் - ஆயமகளிர்: இவர் தம் ஆடலும் பாடலும் காட்டி மன்னனை மகிழ்விப்பவர்.

மன்னன் சாயினத்துள்ளான்; அவன் மறவரும் அவனும் போர் விரும்பினர்; அடுத்து எங்காயினும் சென்றுவிடலும் கூடும்; ஆகவே, இப்போதே சென்று அவனைக் கண்டு வருவேம்; அவன் பரிசில்களை வரையாது வழங்குவான் என்பதாம்.

துவ்வா நறவு - நறவு என்னும் பட்டினம். சாயினம் - மென்மை வாய்ந்த பெண்ணினம். மறாஅ விளையுள் – ‘தொல்லது விளைந்தென வளம் கரவா' விளையுள்.

’மறாஅ விளையுள்' வயலிடத்து விளையும் விளைச்சலெனவும், ’அறாஅ யாணர்’ கடலவும் மலையவுமாகிய பொருள்கள் எனவும் கொள்ளலும் பொருந்தும்.

”அரம் போழ்கல்லா மரம்படு தீங்கனி" என்றது, புறக் காழனவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை நீக்குதற்கு. இச் சிறப்பானும், முன்னும் பின்னும் வந்த அடைச் சிறப்பானும், இதற்கு ’மரம்படு தீங்கனி' என்பது பெயராயிற்று" என்பர் பழைய உரைகாரர்.

இதனால், போர் செய்து பெறுகின்றதான வெற்றிப் புகழையன்றி, அப்போரின் பின்விளைவாகத் தான் பெறுகின்ற பொன்னும் பொருளுமாகியவற்றில் சேரமான் மனங் கொள்வானல்லன் என்பதும், அதனால் அவற்றைப் பேணுவானும் அல்லன் என்பதும் ஆகவே அவற்றை எல்லாம் தன்னை வந்து இரந்துநிற்பாரான இரவலர்க்கும், புகழ்ந்து பாடுவாரான பாணர்க்கும் புலவர்க்கும் வாரிவாரி வழங்கி மகிழ்வான் என்பதும் அறியப்படும்.

’மிஞிறு புறம் மூசவும், தீஞ்சுவை திரியாது, அரம்போழ் மரம்படு தீங்கனி' எனப் பலாப்பழத்தின் இனிமைச்சுவையையும், கனிந்த நிலையையும், நறுமணத்தையும் குறித்தனர். இதனைச் 'செம்பலா' என்பர். இவ்வாறு வழிவருவார்க்கு உதவும் எண்ணத்தோடு வழியிடையில் பலா மரங்களையும் மற்றும் பழமரங்களையும் வைத்துப் பேணி வளர்த்தல் பண்டையத் தமிழகத்தின் சிறந்த மரபாகும். பழைய காலச் சாலைகளின் ஓரங்களிலே மிகுதியாகக் காணப்பெறும் நாவல் மரங்களும், நெல்லி மரங்களும் நிழலோடு கனியும் தரக் கருதி அறிவோடு அமைக்கப் பெற்றனவே யாகும்.

'நெடுஞ்சேண் வந்த நீர் நசை வம்பலர், செல்லுயிர் நிறுத்த கவைக் காய் நெல்லி' என வருவதும் காண்க - (அகம் 271).

’தொடை மடி களைந்த சிலையுடை மறவர்' என்றது, அம்புகளைத் தொடுத்துத் தொடுத்து எய்தபடியே இருத்தலன்றிச் சிறிது பொழுதேனும் ஓய்ந்திராத வில்லையுடைய மறவர் என்றதாம். இது அவரது போராண்மை கூறியதும் ஆம்.

சாயினம் - சாயலையுடைய மகளிரினம்; இவ்ரோடு இருத்தல் பாசைறைக்கண் இரவுப்போதில் களித்திருத்தல். கொடும் போர்களின் இடையிடையே இவ்வாறு மகிழ்வான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலே கலந்து மகிழ்வது போர் மறவர்களின் மரபு ஆகும். இது அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் உள்ளதான இயல்பு.