பாதுகாப்புக் கல்வி/இல்லத்தில் பாதுகாப்பு
1 .இல்லமும் உள்ளமும்.
அவரவர் இல்லம் அவரவர்க்கு அரண்மனை தான். அது, மண் குடிசையோ-மாடமாளிகையோ, எப்படி இருந்தாலும், வாழ்வோருக்கு அதுதானே அனைத்தும்.
ஒய்ந்த நேரத்தில் உட்கார, உண்ண, உறங்க என்று மட்டும் அமையாது, உள்ளத்தின் மறுமளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக, குடும்பம் எனும் குளிர் சோலையை வளர்க்கும் கோயிலாகத்தான் வீடுகள் அமைந்திருக்கின்றன.
'இல்லங்கள் எல்லாம் பத்திரமான இடங்கள்' என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, அவை அப்படித்தான் இருக்கின்றனவா என்று பார்த்தால், பத்திரிகையில் வரும் அன்றாட செய்திகள், அவ்வாறு இல்லை என்று தானே நமக்குச் சொல்லிக் காட்டுகின்றன.
பத்திரிக்கையிலே பிரசுரமாகும் பயங்கர விபத்துக்களின் பட்டியலில் பாதி இடத்திற்குமேல் பிடித்துக் கொண்டிருப்பது, வீட்டில் நடக்கும் விபத்துக்கள்தான்.
சமைக்கும்போது தீ, ஸ்டவ், வெடித்து சேலை பற்றி மரணம், விஷம் குடித்த குடும்பம் என்றெல்லாம் திடுக்கிடும் செய்திகளைப் படிக்கும்போது, இல்லங்களும், பாதுகாப்பற்றவைதானா என்று நமது உள்ளங்கள் வருந்துவதும் இயற்கைதான்.
விபத்து நிகழ்ந்ததை எண்ணி வேதனைப்படும் போது, விபத்துக்கள் உண்டாகும் விதங்களையும் புரிந்து கொண்டால், விபத்து நிகழாமல் முடிந்தவரை விலகி வாழலாம். விலக்கியும் வாழலாம். அதற்கு உள்ளத்தின் ஈடுபாடும், ஒழுங்குற வாழும் பண்பாட்டின் மேம்பாடும் தேவைதான்.
2. விபத்துக்குரிய காரணங்கள்
இல்லத்திலே நிகழும் விபத்துக்குரிய காரணங்களாக, நாம் இரண்டினைக் கூறலாம். (அ) சூழ்நிலை (ஆ) மனிதர்களின் தவறுகள்.
அ. சூழ்நிலை: வீட்டிலே விபத்துக்கள் நிகழ்கின்ற இடங்களாக, சமையல் அறை, குளிக்கும் அறை, படுக்கை அறை, மாடிப்படி, வழுக்கல் தரை முதலியவற்றைக் குறிக்கிறார்கள்.
இவற்றிலே, வழுக்கி விழுதல், இடறி விழுதல், தீக்காயம் படுதல் போன்ற விபத்துக்கள் நேர்வதற்குரிய காரணமாக இல்லத்தின் சூழ்நிலை சில சமயங்களில் அமைந்து விடுகிறது.
ஆ. மனிதர்களின் தவறுகள்: மனிதன் தவறு செய்பவன்தான் என்ற பழமொழி இருந்தாலும், கவனக்குறைவாலும், அறியாமையாலும் தான் தவறுகளை மனிதர்கள் அதிகம் செய்கின்றனர்.
வேண்டுமேன்றே தவறு செய்பவர்கள். பழிக்குப் பழி வாங்கவேண்டும் அல்லது தன்னையே பலியாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நினைவுக்கு ஆட்பட்டவர்களாகத்தான் இருக்க முடியும்.
தவறு நேர, பல காரணங்கள் உண்டு. வீட்டில் தலைவராக விளங்குபவர், வேலை செய்யும் அலுவலகத்திற்கும் பணம் திரட்டும் பணிக்குமாக அலையும்போது, குடும்பத்தின் முழுப் பொறுப்பும் அமைப்பும், குடும்பத் தலைவியின் மீதே விழுந்து விடுகிறது.
வீட்டிலே சமையல்காரியாக, வீட்டைச் சுத்தம் செய்வதில் வேலைக்காரியாக, துணிகளை தூய்மைப்படுத்தும் பணியில் சலவைக்காரியாக, துணிகளை பழுதுபார்க்கும் தையல்காரியாக, சில சமயங்களில் மருத்துவம் செய்யும் தாதியாக, மற்றும் தனது பிள்ளைகளுக்குப் பாடம் போதிக்கும் ஆசிரியையாகவும் ஒரு குடும்பத்தின் தலைவிக்கு பல பொறுப்புக்கள் அனுதினம் விளைகின்றன. அது நமக்கும் தெரியும்.
ஒன்றையொன்றைச் செய்யத் தூண்டும் அவசர காலத்தில் தவறு நேர்வதுண்டு. அந்தத் தவறு சிறிதாகவும் இருக்கும். அதுவே விபத்தாக மாறுவதும் உண்டு.
ஆக, அவசரமும் பதட்ட நிலையும், அறியாமையும் அஜாக்ரதையும் தன்னால் முடியும் என்று முடியாத வேலை ஒன்றைச் செய்யும் போதும் உண்டாகின்ற விபத்துக்களே மிகுதியாக இருக்கின்றன.
இத்தகைய நிலைகளில், இல்லங்களில் உண்டாகின்ற விபத்துக்களை விழுதல் (Falls) காயங்கள் (Burns) விஷப் பொருட்கள், (Poisons) என்று பிரித்துக்கொண்டு உண்டாகும் ஆபத்துக்களைப் பற்றி விரிவாகப் புரிந்து கொள்வோம்.
3. விபத்தும் விதங்களும்
1. விழுதல்: வீட்டிலே நடக்கும் விபத்துக்களினால் உண்டாகும் இறப்புக்களில் 3/4 பாகம் விழுவதினால் விளைபவைதான். அவை எப்படி நிகழ்கின்றன என்று இனி காண்போம்.
1. தனக்கு எட்டாத ஒரு பொருளை எடுப்பதற்காக நாற்காலி அல்லது முக்காலி வைத்து ஏறி, சமநிலை இழந்து, தடுமாறி கீழே விழுதல்.
2. ஏணி மேலே ஏறி நின்று எதையாவது எடுக்கும் போது, தவறி நிலைதடுமாறிக் கீழே விழுதல்.
3. மாடிப்படி தெரியாமல் மாற்றுப் படியில் கால் வைத்து, உருண்டு கீழே விழதல்.
4. தண்ணீர் பட்டு பட்டு, தரையானது வழுக்கல் நிறைந்திருக்கும் போது, அதன்மேல் கால் வைத்து உதியில்லாமல் சறுக்கி விழுதல்.
5. புல்தரைமீது போகும்போது வழுக்கி விழுதல்.
6. வீட்டில் விரிக்கப்பட்டிருக்கும் சமுக்காளம், பாய் அல்லது கோணி கிழிசலில் கால் மாட்டிக் கொண்டு, போகும் அவசரத்தில் விழுதல்.
7. (குழந்தைகள்) ஒரு பொருளைத் தாண்டிச் செல்லும்போது நிலைமாறித் தடுமாறி விழுதல்.
8. தன்னால் தூக்க முடியாத பொருட்களைத் தூக்கிக்கொண்டு போகும்போது, தன் வசமிழந்து சாய்ந்துவிழுதல்.
9. வயதானவர்கள் நடைதடுமாறி கீழே விழுந்து விடுதல்.
இவ்வாறு விழவைக்கும் வாய்ப்புள்ள பகுதிகளை நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகிச்செய்ய வேண்டும். அதற்கு முன்கூட்டி ஆயத்தமாகவே, வேறு சில முறைகளை, கீழ்க்காணும் நிலையில் செய்து பழகிக்கொள்ளவேண்டும்.
1. மேலே ஏறும் போது பத்திரமாக ஏறி இறங்கவும். பாதுகாப்புக்காக பக்கத்தில் யாரையாவது ஏணியையோ அல்லது ஏற உதவும் பொருட்களையோ பிடித்துக் கொள்ளச் செய்யவும். தன்னை மறந்த நிலையில், மேலே நிற்கும்போது, இருக்கக்கூடாது.
2. குளியலறையின் தரையை அடிக்கடித் தேய்த்து, வழுக்காமல் பார்த்துக் கொள்ளுதல், அடிக்கடி சுத்தப்படுத்துதல் அவசியம்.
3. வீட்டுத் தரைப் பகுதிகளையும் வழுக்காமல் வைத்துக் கொள்ளவும்.
4. வீட்டில் பொருட்கள் கண்ட இடங்களில் இறைந்து கிடப்பதால் தான், தடுக்கி விழநேரிடுவதால், பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைத்துக்கொள்ளவும்.
5. இரவில் நடமாடும் போது, பொருட்கள் கீழே கிடப்பது ஆபத்துதான். ஆகவே, அப்பொழுது கவனமாக நடக்கவேண்டும். தட்டுமுட்டுச் சாமான்கள், மேசை நாற்காலிகள் வீட்டின் ஒரங்களில் வைக்கப்பட வேண்டும்.
6. எது எது துன்பம் தருமோ, அவற்றையெல்லாம் ஒதுக்கி, விபத்து நிகழாமல் தடுத்துக் கொள்ளவேண்டும்.
7. தாண்டிப் பழகி, கதவு நிலைகளில் தொங்கிப்பழகும் குழந்தைகளுக்கு விளையாடும் வாய்ப்பினை வெளிப்புற ஆடுகளங்களில் ஏற்படுத்தித் தரலாம்.
அடுத்து, தீப்புண் மற்றும் வெட்டுக் காயங்கள் போன்றவற்றினைப் பற்றி விளக்கமாகக் காண்போம்.
2. காயங்கள்: வீடுகளில் ஏற்படுகின்ற விபத்துக் களில் 1/5 பாகம் தீக்காயங்கள் என்று விபத்து அறிக்கைக் குறிப்பு ஒன்று கூறுகிறது. எரிபொருள், பிராணவாயு, வெப்பம் என்ற மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்குமிடத்தில், நெருப்புப் பிடிப்பதற்கான சூழ்நிலை மிக எளிதாக உருவாகிவிடும். ஆகவே இந்த மூன்றும் இருக்கும் இடங்களில், மிகவும் விழிப்புடன், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமைக்கும் போது சேலையில் தீப்பற்றுவது மிகவும் இயல்பாக நடக்கக்கூடிய விபத்தாக இன்றைய வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது.
1. ஸ்டவ் எரிந்துகொண்டு இருக்கும்போது அதற்குள் மண்ணெண்ணெய் ஊற்ற முயலுகையில், ஸ்டவ் கவிழ்ந்து தீப்பற்றிக் கொள்வது.
2. ஸ்டவ்வுக்கு காற்றடிக்கும் போது, கைத்தவறி கவிழ்ந்து, தீப்பிடித்துக் கொள்வது.
3. குழந்தைகள் தீப்பெட்டியை எடுத்துவைத்துக் கொளுத்திக் கொண்டு விளையாடுவது.
4. படுக்கையில் படுத்துக் கொண்டே புகை பிடித்துக் கொண்டு, அப்படியேதூங்கிப் போய்விடுதல்.
5. தீக்குச்சிகள் மற்றும் அடுப்பெரிக்கும் விறகுக் கொள்ளியை, அனைக்காமல் அப்படியே விட்டுவிடுதல்.
6. கேஸ் அடுப்பு வைத்திருப்பவர்கள், அதற்குப் பக்கத்தில் (Gas) கேஸ் இருக்கும் ஜாடியை வைத்திருத்தல், அது பழுதுபட்டிருந்தால், எளிதில் தீப்பற்ற வாய்ப்புஉண்டு.
7. பட்டாசு கொளுத்தி மகிழும் நேரங்களில் தீக்காயப்படுதல்.
8. அடுப்பில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அதன் மீது தண்ணீர்படுதல், அல்லது கொதிகலம் கவிழ்ந்து மேல் விழுதல்.
9. சோறு வெந்து கஞ்சி வடிக்கும் போது, பானை கவிழ்ந்து மேலே ஊற்றி விடுதல்.
இவ்வாறு தீக்காயங்கள் படும்போது, சாமர்த்தியமாக சமாளிக்கத் தேவைப்படுவது முன்யோசனையும் முதலுதவியுமாகும்.
முன் யோசனையும் முதலுதவியும்: உங்களது ஆடையில் தீப்பிடித்துக் கொண்டால், அங்குமிங்கும் ஓடக்கூடாது. அப்படி ஓடினால், ஆடை முழுவதும் தீப்பற்றவும், பொருட்களின் மீது தீ தாவவும் வழி ஏற்படும். ஆகவே, தீப்பிடித்தவுடன் தரையில் படுத்து உடனே புரளவும். உருளவும். கோணி அல்லது கனத்த சமுக்காளம் இருந்தால், அதனைப் போர்த்திக் கொண்டு உருளவும், வேறுயாருக்காவது இந்த நிலை வந்தால், இந்த முறையைத்தான் பின்பற்றச் சொல்லவும்.
தீயால் உண்டாகும் காயங்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. தோலை பாதிக்காத இலேசான காயம். 2. தோல் சிவந்து கொப்பளமாகி விடும் காயம்.
3. தோல் வெந்து, பாதிக்கப்பட்டு, உள் தசையும் புண்ணாகிவிடும் காயம்.
தோலைப் பாதிக்காத காயம், தோல் சிவந்து கொப்பளமாகும் காயங்களைப் பற்றி அதிக வேதனையோ விசாரமோ படவேண்டாம்.
ஆனால், மூன்றாவது வகையான தீக்காயம், பெரும் புண்ணாகிப் போவதுடன், ஆட்பட்டவருக்கு அதிர்ச்சி தந்து, சிறுநீர்ப்பை, நுரையீரலைத் தாக்குவதுடன் இரத்த ஒட்டத்தையும் தாக்கி விடுகிறது.
அதனால், முதலில் விபத்துக்குள்ளானவரின் அதிர்ச்சியை போக்கவேண்டும். காயம்பட்டவர்களை மெதுவாகப் படுக்க வைத்து, அவரது துணிகளை பொறுமையாக, அவசரமின்றி அப்புறப்படுத்த வேண்டும்.
துணிகள் நைந்து காயத்துடன் ஒட்டியிருந்தால், துணிகளைப் பிய்த்து எறியக்கூடாது. சுற்றிலும் உள்ள துணிகள் மற்றும் தோலைப் பாதிக்காத முறையில் கத்தரிக்கோலால் வெட்டி எடுக்க வேண்டும்.
அப்பொழுது முதலுதவி என்று பஞ்சுடன் சேர்த்து மருந்து போடக்கூடாது. ஏனென்றால், பஞ்சும் புண்ணுடன் ஒட்டிக் கொள்ள நேரிடும். ஆகவே, 'ஆயின் மென்ட்' இருந்தால் தடவி விடலாம்.
தடவி விடுபவர் கை, நகம் மற்றும் பகுதிகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தீப்புண்கள் வழியாக நச்சுக் கிருமிகள் உடல் உள்ளே புகுந்துவிடும் வாய்ப்புண்டு.
இதற்கு இடையில், டாக்டரை வருவித்திட ஏற்பாடு செய்து விடவேண்டும். இத்தகைய கொடுமை வாய்ந்த தீயின் வாய்படாமல், வீட்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக வேலை செய்ய வேண்டும்.
தீக்காயம் போலவே, வெட்டுக் காயங்களும் நேரவாய்ப்புண்டு.
1. காய்கறி நறுக்கும்போது கைகளை வெட்டிக் கொள்ளுதல்.
2. காய்கறி வெடடிய அரிவாள்மனையை அப்படியே நிமிர்த்திவைத்து விட்டு அப்புறம் போகும்போது, வீட்டிற்குள் வருபவர் அதனை அறியாது அதன்மேல் இடறிவிழுந்து வெட்டிக் கொள்ளுதல்.
3. கூரிய கத்திகள், இரும்புப் பகுதிகள் முதலியவற்றை வரும் வழியில் அல்லது கண்ட இடங்களில் போட்டு விடுதல்.
4. வயல் மற்றும் மரவேலை செய்பவர்கள் தங்களது மண்வெட்டி, கடப்பாரை, ரம்பம், உளி போன்றவற்றை பாதுகாப்பில்லாத இடங்களில் போட்டு வைக்கும்போது, விளையாடும் குழந்தைகள் அல்லது பெரியவர்கள் அவைகளினால் காயம் அடைய வழிகள் உண்டு.
ஆகவே, காயம் ஏற்படுத்தக் கூடியனவற்றை, ஒழுங்குபடுத்தி, ஒதுக்குப் புறமாக வைக்க வேண்டும்.
1.விஷப் பொருட்கள்
மனிதர்கள் என்றால் நோய் நொடி வரத்தான் செய்யும்,வீடு என்று இருந்தால், எலி, கொசு, மூட்டைப் பூச்சி போன்றவை தொந்தரவு தருவதற்காகவே வரத்தான் வரும்.
நோய்களைப் போக்க மருந்தையும், எலி, கொசு, முட்டைப்பூச்சி போன்றவற்றை ஒழிக்க விஷ மருந்துகளையும் வாங்கத்தான் வேண்டும்.
இரண்டும் அவசியம் என்றாலும், அதற்காக இரண்டையும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வைக்கத்தான் வேண்டுமா! இதையாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.
அல்லது தெரிந்தாலும் அலட்சியமாக ஒதுக்கி விடுவதுதான் ஏனென்று நமக்குப் புரியவில்லை.
தூங்குவதற்குமுன் மருந்து சாப்பிட மறந்துபோய், நடுச்சாமத்தில், தூக்கக் கலக்கத்தில் மருந்து சாப்பிட முயன்று, மருந்துக்குப் பதிலாக விஷப் பொருட்களைத்தின்று விடுகின்றவர்களும், விஷத்தைக் குடித்து விடுகின்றவர்களும் அநேகம் பேர் உண்டு.
தெரியாமல் தூக்க மாத்திரைகளை விழுங்குபவர்கள் அதிகம் உண்டு.
இத்தகைய கொடுமை நிகழாமல், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், தகுந்த ஏற்பாடுகளை கீழ்க்காணும் முறையில் செய்து வைக்கலாம்.
1. மருந்து பொருட்களைத் தனியே வைத்தல். 2. விஷ மருந்துகளைத் தனியே ஒரிடத்தில் பத்திரமாக வைத்தல், அவை குழந்தைகளுக்கு கைக் கெட்டாத உயரத்தில் வைப்பது நல்லது.
3. வசதியிருந்தால், விஷ மருந்துகளைத் தனியே பூட்டி வைத்துவிடலாம். அதை பெரியவர்கள் மட்டுமே எடுத்து, கையாள வேண்டும்.
4. வீட்டில் உள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எவை விஷ மருந்துகள் என்பது நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். முடிந்தால், அதில் பெயர் எழுதி, தெரியும்படி ஒட்டி வைத்திருக்கலாம்.
5. திருட்டுத்தனமாகக் குழந்தைகள் திண்பண்டம் எடுப்பது போன்ற காரியங்களைச் செய்யும்பொழுது தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து விடுகின்றன.
6. மருந்துகூட, குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றிருக்கும் காலக் குறிப்பை தெரிந்துதான் சாப்பிடவேண்டும்.
7. தூக்கக் கலக்கத்தில் எதையும் உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளக் கூடாது.
8. உணவைக் கூட, குறித்த காலத்திற்குமேல் பாதுகாத்து சாப்பிடுவதால், அது விஷத்தன்மை உடையதாக மாறிவிடுகிறது.
9. சாப்பிடும் உணவுப் பொருட்களைத் திறந்து வைத்திருப்பதால், பல்லி, அரணை போன்ற ஐந்துக்கள் விழுந்து, நச்சுத்தன்மையை உண்டாக்கி விடுகின்றன. உணவுப் பண்டங்கள் எப்பொழுதும், சுகாதார முறைப்படி மூடித்தான் வைக்கப்பட வேண்டும்.
10. மேலும், குழந்தைகள் படுக்கையில் தூங்கும் போது, முரட்டுப் போர்வை எடுத்து முகமெல்லாம் மூடிக்கொண்டு தூங்கும்போது, துணி அழுத்தி, மூச்சு முட்டி இறந்துவிடுவதும் உண்டு.
11. உள்ளே குழந்தைகள் புகுந்துகொண்டு, தெரியாமல் தாங்களே பூட்டிக் கொண்டு, உள்ளே மூச்சுத் திணறி இறப்பதும் உண்டு
இதுபோன்ற காரியங்களில் எல்லாம், குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
4. மின்சாரத் தாக்குதல்கள்
மின்சாரத் தாக்குதல்கள் என்பது கொடுமையானதாகும். விளையாட்டாகவோ, பயிற்சி பெறுவதற்காகவோ, அல்லது சோதனை செய்து பார்க்கலாம் என்றோ,மன்சார சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் பழக்கம் இருந்தாலன்றி செய்யக்கூடாது.
அவ்வாறு ஏதேனும் செய்ய நேருங்கால், ரப்பர் கையுறைகளையும் ரப்பர் காலணிகளையும் உபயோகிக்க வேண்டும்.
ஆகவே, ஒளியைக் கொடுக்கும் மின்சாரமானது நம் உயிரைக் குடிப்பதற்கேற்ற வேலைகளில் நாம் இறங்கவே கூடாது.
மின் விசைத் தாக்குதலும் முதலுதவியும்: மின்விசைத்தாக்குதலுக்கு ஆளான ஒருவரை காப்பாற்ற முயல வேண்டும். எப்படி?
ரப்பர்காலணிகள் அல்லது ரப்பர்கையுறை கொண்டு, அல்லது ரப்பர் பாய் மீது நின்று காக்கலாம், இல்லையேல், மரக்கட்டைகள், காய்ந்த பேப்பர் போர்டு, அல்லது புத்தகம் இவைகள் மீது நின்று, மின் கம்பியை அப்புறப்படுத்தலாம்.
முடிந்தால், அதற்கு முன்னே, மெயினை அணைத்துவிடவும் (off). பாதிக்கப்பட்டவரை, மின் கம்பி தொடர்பிலிருந்து அப்புறப்படுத்திய பிறகு, அவரது துணிகளை நெகிழ்த்தி விடவும்.
சுத்தமான காற்றோட்டமுள்ள இடத்தில் அவரைப்படுக்க வைக்கவும்.
வாயைத் திறந்து, நாக்கு உள்ளே இழுத்துக் கொள்ளாதவாறு, நாக்கை இழுத்து வைக்கவும்.
மூச்சு வரவில்லை என்றால், செயற்கை முறையில் சுவாச முறையை பயன்படுத்தவும்.
அதற்குள்ளே, மருத்துவரை அழைத்துவர ஏற்பாடு செய்யும். முதலுதவி மட்டும் போதும்.
பள்ளி மாணவர்கள் வீடுகளில் பாதுகாப்புடன் வாழ்வதில்தான், அவர்களின் வளமான வருங்காலமே அடங்கியிருக்கிறது. அது, சமுதாயப் பாதுகாப்புக்கே ஆதாரமாக அமைந்தும் விடுகிறது.
வீட்டுப் பாதுகாப்புதான் முதன்மையானது. அதிலிருந்துதான் நாட்டுப் பாதுகாப்பும் வலிமை பெறுகிறது.
குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முயல்வதால், பெற்றோர்களுக்கும் அந்தப் பொறுப்பும் இருப்பதால், பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் ஏற்ற முறையில் வாழ்ந்து காட்டவேண்டும்.
அதற்கேற்ற வகையில் பயன்படுமாறு, சில குறிப்புக்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன.
1. தாங்கள் பயன்படுத்துகின்ற பொருட்களின் தன்மையை நன்குணர்ந்து, அதற்கேற்றவாறு வகைப்படுத்திப் பயன்படுத்தவேண்டும்.
2 இல்லத்தினைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், வசதிமாக வாழும் வகையில் பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும்.
3. அறியாமையைவிட, அலட்சிய மனப் போக்கும் ஆர்ப்பாட்டமான நடத்தையும் தான் மிக ஆபத்தானதாகும்.
4. ஒழுங்கு முறையாக வாழ்வதை பயபக்தியுடன் போற்ற வேண்டும்.
5. தவறான முறையிலோ அல்லது குறுக்கு வழியிலோ எதையும் கையாளுகின்ற போக்கையும் அசவரத்தன்மையையும் முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.
6. கூர்மையான ஆயுதங்களைக் கவனமாகக் கையாளவேண்டும்.
7. தெரிந்தால் செய்யலாம். தெரியாத எந்த செயலையும் தெரிந்தவர் மூலமாகவே அணுகிச்செய்யவும்.
8. பிறருக்கு அறிவுரை தருவது மட்டும் போதாது சொல்பவரே, தானும் செய்கின்ற பண்பாட்டினைப் பெற்றுத் திகழ வேண்டும்.
9. மின்சாரம், விஷ மருந்துகள், இவற்றிடம் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.