பாதுகாப்புக் கல்வி/சாலையில் பாதுகாப்பு

4. சாலையில் பாதுகாப்பு

1. சாலை விபத்துக்குரிய காரணங்கள்

சாலைகளில் நடந்து செல்வது அல்லது பயணம் போவது என்பதெல்லாம் இன்றைக்குப் பெரும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன.

பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை; விரைந்து செல்லும் அவற்றின் வேகத்திற்குப் போதாத நெருக்கடி நிறைந்த சாலைகள்; மேடும் பள்ளமும் சூழ்ந்த சாலைகளின் அமைப்பு; இவற்றினூடே தெரிந்தோ தெரியாமலோ செல்கின்ற பாதசாரிகள்; மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், சைக்கிள் ரிக்‌ஷா மற்றும் கார், லாரி போன்றவைகள் அடிக்கடி மோதிக்கொள்கின்ற நிகழ்ச்சிகள் எல்லாமே, இன்று பாதுகாப்புக் கல்வியின் தேவையை மேலும் விரிவுபடுத்துகின்றன.

பொது மக்களுக்கு இந்தப் பாதுகாப்புக்குரிய விதிமுறைகள் தெரியவில்லை, வாகன ஓட்டிகளுக்கு வேகத்தைக் குறைத்துக் கொண்டு போகமுடியாத அவசர நிலை, இக்கட்டான சூழ்நிலையில் அபாய நேரத்தில் மதியூகத்துடன் நடந்து கொள்ளத் தெரியாத அச்ச நிலை, எப்பொழுது வாகனத்தை வேகமாக ஓட்டுவது, எப்பொழுது பிரேக் போடுவது, எப்படி சமாளிப்பது என்று அறிந்து கொள்ளாத அறைகுறை ஓட்டும் பயிற்சி. குடித்து விட்டுப் போதையுடன் ஒட்டுதல். தான்தான் முந்திக்கொண்டு முன்னால் போக வேண்டும் என்ற முரட்டுக் குணம். காது கேளாத கண் தெரியாத வழிபோக்காளர்கள் தடுமாற்றம். முதியவர்களின் தள்ளாடும் வழிநடை குடும்பக் குழப்பத்தை சாலையில் போகும் பொழுதே அசை போட்டுக் கொண்டு மெய்மறந்து போவோர்.

இவர்கள்தான் சாலையில் விபத்து நேர்வதற்குக் காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர். இத்தனை குழப்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலே சாலையிலே பத்திரமாகப் போய் வருவதென்றால், அதற்கென்று இருக்கும் ஒரு சில விதிமுறைகளை நாம் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அவசியம் உண்மையோடு பின்பற்ற வேண்டும்.

ஆனவரை கடைப்பிடிக்க வேண்டும் என்று இங்கே, முதலில் சாலையில் நடந்து செல்வோர் கவனிக்க வேண்டிய விதிமுறைகளைக் காண்போம்.


2. நடந்து செல்வோர் கவனிக்க

(1) சாலையைக் கண்காணித்து, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் வழிகாட்டும் சைகையின்படிதான் செல்ல வேண்டும்.

(2) சாலையில் இருக்கும் வழிகாட்டும் விளக்கின் சைகை முறைகள், மற்றும் வீதியின் அடையாள முறைக் குறிப்புக்கள், சாலைக் குறிப்புகள் இவற்றையும் அனுசரித்துதான். செல்ல வேண்டும்.

(3) அதிகக் கூட்டமில்லாத பகுதியிலிருக்கும் பாதை வழியே போவதுதான் நல்லது. வேறு வழியில்லாது போனால், கூட்டத்தில்தான் செல்லவேண்டும் என்றிருந்தால், மிகவும் எச்சரிக்கையுடன் தான் செல்ல வேண்டும்.

(4) 'நடந்து செல்வதற்குரிய பாதை' என்று அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதையைத்தான் பயன்படுத்தவேண்டும்.

(5) எப்பொழுதும் இடது கைப் பக்கம் உள்ள நடைபாதை முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லதாகும்.

(6) பாதையை நேரே பார்த்துப்போகாமல், சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்து, தன்னை மறந்த நிலையில் நடப்பது கூடாது. அவ்வாறு வேடிக்கை பார்க்க வேண்டும் என்றால், ஓரிடத்தில் ஒதுங்கி நின்று, பார்க்க வேண்டியதைப் பார்த்துவிட்டு, பிறகு நடப்பதுதான் நல்லது.

இல்லையேல், எதிரில் வரும் ஆள் அல்லது வாகனங்கள் மீது மோதிக்கொள்ள நேரிடும். சமயத்தில், நடக்கும் பாதை நடுவே உள்ள பள்ளங்களில் கால் இடறி விழுந்து, கைகால்கள் பிசகிக்கொள்ளவோ அல்லது எலும்பு முறிவுவோ ஏற்படக்கூடும்.

(7) பின்புறம் அடிக்கடித் திரும்பிப் பார்த்துச் செல்கின்ற பழக்கம் தவறான பழக்கமாகும். எக்காரணத்தை முன்னிட்டும், நடை பாதையை விட்டு, கிழே இறங்கி, சாலையிலே நடக்கக்கூடாது.

(8) மழை காலம், மற்றும் பனி, குளிர்காலம் போன்ற நாட்களில், சலைகளில் மிகவும் எச்சரிக்கையாக நடக்க வேண்டும்.

(9) குடைபிடித்துக்கொண்டு போக நேர்ந்தால் தனது பார்வையை மறைக்கும்படி முன்புறமாகச் சாய்த்துக் கொண்டு போகாதவாறு, பிடித்துக்கொண்டு போக வேண்டும்.

(10) அவசரமாகப் போகும் பொழுதோ, அல்லது ஏதாவது ஒரு தலைச் சுமையுடன் அல்லது பாரத்துடன் தூக்கிக்கொண்டு நடக்கும்பொழுதோ, அல்லது உடல் நலமில்லாமல் இருக்கும் பொழுதோ அல்லது மனம் குழம்பித் தடுமாறிய நிலையில் இருக்கும்பொழுதோ, சாலையில் வெகு கவனமாக நடக்க வேண்டும்.

(11) ஓடுகின்ற கார்களை அல்லது வேறு வாகனங்களைத் தொட முயற்சிக்கக்கூடாது.

(12) எதிரே வந்துகொண்டிருக்கும் வாகனம் வருவதற்கு முன்னே, தான் போய்விடலாம் என்று எப்பொழுதும் முயலவே கூடாது. வாகனத்தின் வேகம் வேறு. மனிதர் நடக்கும் வேகம் வேறு. அதனால், வாகனத்துடன் போட்டி போடக்கூடாது. வாகனத்தைப் போகவிட்ட பிறகு கடப்பதுதான் மிகவும் பத்திரமான முறையாகும்.

(13) நிற்க வைத்திருக்கின்ற இரண்டு கார்களுக்கிடையிலோ அல்லது நின்றுகொண்டிருக்கும் கார்களுக்குப் பின்னாலோ நடக்கக் கூடாது.

(14) ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்குப் போகவேண்டும் என்று விரும்பினால், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை இருந்தால், அதைத்தான் பயன்படுத்தவேண்டும்.

மேம்பாலமோ அல்லது சுரங்கப்பாதையோ இல்லாதுபோனால், மிகவும் சுறுசுறுப்பாயுள்ள ஒரு சாலையினைக் கடக்க விரும்புகின்றவர்கள், கீழ்க்காணும் பாதுகாப்பு வழிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்கவேண்டும்.

(1) பல திசைகளையும் முதலில் சுற்றும் முற்றும் பார்த்து, வாகனங்கள் வருகின்றனவா என்று தெரிந்து கொண்டு, வரவில்லை என்று உறுதியாக அறிந்த பின்னரே, கடக்க முயலவேண்டும்.

(2) சாலையில், வழிகாட்டும் விளக்கின் அமைப்பு இருந்தால், (Light system) பச்சை விளக்கு வரும்வரை காத்திருந்து, அதன் பிறகு தான் கடக்க வேண்டும்.

(3) பச்சை விளக்கைப் பார்த்துப் போகும் பொழுது கடப்பதற்குரிய நடைபாதை காட்டும் கோடுகளுக் குள்ளேதான் நடந்து செல்ல வேண்டும்

அதற்குப் பின்னர், வளைவிலிருந்து (Curve) திரும்பி வருகின்ற வாகனங்கள் தங்களது பக்கம் வருகின்றனவா என்பதையும் முக்கியமாகக் கவனித்துப் பார்த்து நடக்க வேண்டும்.

(4) பச்சை விளக்கு தெரிந்தபின்னர், போகலாம் என்று முடிவு செய்தபின்னர், உறுதியுடன் முன்னேற வேண்டும். நடு சாலை வரை சென்ற பிறகு, அங்கேயே நின்றுகொண்டு, முன்னே போவதா அல்லது பின்னால் இருந்த இடத்துக்கே வருவதா என்று குழப்பத்துடன் முடிவு செய்யக்கூடாது. வந்தால், கடந்து செல்லத்தான் வேண்டும்.

(5) சாலையின் குறுக்கே நடக்கத்தான் வேண்டும் என்றால் குடுகுடுவென்று அவசரப்பட்டு ஓடக்கூடாது.

(6) சாலையைக் கடக்கும்போது, குறுகிய நேரத்திற்குள் கடந்து செல்கின்ற முறையில்தான், அதாவது நேருக்கு நேராகத்தான் நடக்க (Short Root) வேண்டும். மூலைக்கு மூலை என்பது போல, (ஆற்று வெள்ளத்தில் நீந்தும் ஒருவர் ஒரு பக்கம் குதித்து. நேரே போக முடியாமல், வெள்ளத்தோடே போய், அதிக தூரம் சென்று எதிர்க்கரையை அடைவதுபோல) சரிந்துபோய் கடக்கக்கூடாது.

(7) சாலையைக் கடக்கும்போது, வேறு எந்த யோசனையோ, கற்பனையோ, கவலையோ இருக்கக் கூடாது. சாலையைக் கடக்கிறோம், கடந்து கொண்டிருக்கிறோம் என்கிற ஒரே நினைவுதான் நினைவில் எப்பொழுதும் இருக்கவேண்டும். (8) எனக்கு சாலையில் நடக்க உரிமை உண்டு. இது பொதுச் சொத்துதானே' என்று உரிமை பாராட்டி, பெருமையாகப் பேசிக் கொண்டு செல்லக்கூடாது. வாகனம் ஒட்டுவோருக்கும் இதே உரிமை நினைவு வந்து, அவருடன் நீங்கள் மோதிக்கொண்டால், உங்கள் கதி என்ன ஆகும்?

(9) பொது இடங்களில் முன் உணர்வும், பொது அறிவும் உள்ளவாறு நடந்துகொள்ளும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

மேற் கூறிய கருத்துக்கள், சாலையைக் கடக்கும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டிய விதிகளாகும்.

இனி, சாலையில் சைக்கிளில் செல்லுவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை காண்போம்.

3. சைக்கிளில் செல்வோர் கவனிக்க

1. தனது சைக்கிளில் பிரேக், பெடல், பெல், சக்கரங்கள் உட்பட சரியான நிலையில் இருக்கும் படி மிகவும் நல்ல முறையில் யாராயிருந்தாலும் வைத்திருக்க வேண்டும்.

2. சாலைகளில், சைக்கிள் செல்லுதற்குரிய ஒட்டப் பாதையில்தான் ஒட்டிச் செல்லவேண்டும். அவ்வாறு ஒட்டத்திற் கென்று தனிப்பாதை இல்லாத இடங்களில், சாலையின் நடுவில் செல்லாமலும், மிகவும் ஒரமாகவும் ஒதுங்கிப்போய் விடாமலும், அனுசரித்துத்தான் செல்ல வேண்டும்.

3. சாலைகளுக்கு உரித்தான விதிகள், சைகை முறைகள் போன்ற அத்தனையையும், சைக்கிள் ஓட்டுவோர் கடைபிடிக்க வேண்டும்.

4. அதிக நெருக்கமாக வரும் வாகனங்களுக்கிடையே சைக்கிள் ஓட்டுவதற்கு முயலக்கூடாது.

5. சைக்கிளில் முன்னாலோ அல்லது பின்னாலோ ஒருவர் அல்லது இருவரை ஏற்றிச் செல்வது தவறு. அது அபாயகரமான சூழ்நிலை தருவதாகும்.

6. ஒரு கையையோ அல்லது இரு கைகளையும் சைக்கிள் ஓட்டும் பிடிப்பிலிருந்து விட்டுவிட்டு, 'ஆகா எவ்வளவு எழிலாக ஓட்டுகிறார் என்று எல்லோரும் தன்னைப் புகழ்வார்கள் என்றநினைப்புடன் ஓட்ட முயலக்கூடாது.

7. நான்கைந்து பேர்களாக சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது, சாலை முழவதும் தங்களுக்கே சொந்தம் என்ற நினைவில், சாலை முழுவதும் பரவலாக ஒட்டிச் செல்லக்கூடாது.

8. வேகமாக ஓடும் கார், லாரி, ஆட்டோ ரிக்க்ஷா போன்ற வாகனங்களை முந்திச் செல்ல முயலக்கூடாது. முந்துவதற்கு நேரம் வந்தால், முறையான விதிகளைப் பின்பற்றித்தான் செல்லவேண்டும்.

9. மிதிக்கும் சக்தி இருக்கும் வரையில்தான் வேகமாக மிதித்துப் போகலாம். வேகமாகப் போக வேண்டும் என்பதற்காக, ஓடும் லாரி அல்லது காரின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டே சைக்கிளில் போகக்கூடாது.

10. எப்பொழுதும் மிதமான வேகம் தேவை. கண்ணை மூடிக்கொண்டு, காட்டுத்தனமாக சைக்கிளை மிதிக்கக்கூடாது.

11. நின்று கொண்டிருக்கும் கார்களுக்கிடையிலே சைக்கிளை ஓட்டிச் செல்லக்கூடாது.

12. ஏற்றம் இறக்கம், மேடு பள்ளம் முதலியவைகளைப் பார்த்துத்தான் சைக்கிளை ஓட்ட வேண்டும்.

13. சாலையின் குறுக்கே கடக்க வேண்டும் என்றால், நின்று கவனித்தே கடக்க வேண்டும்.

14. திரும்ப வேண்டிய இடங்களில் (Curve) திரும்பும் பொழுது. அதற்குரிய சைகையைக் காட்டித்தான் திரும்ப வேண்டும்.

15. சைக்கிளில் செயின் முடியில்லாமல் இருக்கும் பொழுது, கட்டியிருக்கும் வேஷ்ட்டியோ, அல்லது முழுக்கால் சட்டையோ சிக்கிக் கொள்ளாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

16. நடக்கும் பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் உரிய வழியைக் கொடுத்தே சைக்கிள் ஓட்ட வேண்டும்.

17. இன்னொரு சைக்கிளை முந்தும்போது, வலப்புறமாகப் போய்தான் முந்த வேண்டும். 18. எப்பொழுதும் குதிகால்கள் பெடலில் இருப்பது போல் வைத்துத்தான் மிதிக்க வேண்டும். முன் பாதங்களால், எழும்பி நின்று குதித்து ஒட்டக்கூடாது. அது சமநிலையை (Balance) இழக்கச்செய்து கீழே தள்ளிவிடும்.

19. முழங்கால்களை அகற்றி வைத்துக்கொண்டு ஒட்டாமல், சைக்கிள் குறுக்குக் கம்பிக்கு (Frame) இணையாக வருவது போல முழங்கால்களை வைத்துக் கொண்டு தான் ஓட்ட வேண்டும்.

20. சைக்கிள் ஒட்டும் கைப் பிடியில் (Hand Bar) தோள்கள் உறுதியாக இருக்கும்படியும் முழங்கைகள் விறைப்பாக இருக்கவும் போன்ற அமைப்பில் கைப்பிடி பிடித்தவாறுதான் ஓட்ட வேண்டும்.

21. உடல் நலம் இல்லாமல் இருக்கும்போதோ, அல்லது களைப்பாக அல்லது மனக் குழப்பத்துடன் இருக்கும்போதோ சைக்கிள் ஓட்டக்கூடாது.

22. நன்றாக வயிறார சாப்பிட்ட பிறகும் சைக்கிள் ஓட்டக்கூடாது.

23. சைக்கிளை எங்கேயாவது நிறுத்திவைக்க நேர்ந்தால், கண்ட இடத்தில் நிறுத்திவிட்டுச்செல்லாமல், அதற்கென்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் நிறுத்திச் செல்ல வேண்டும்.

24. இரவில் விளக்குடன்தான் சைக்கிள் ஒட்ட வேண்டும்.

இத்தனை விதிகளையும் பின்பற்றுவதுடன், தான்போகும் இடத்திற்குப் பத்திரமாகப் போய் திரும்பிவர வேண்டும் என்று எண்ணும் பாதுகாப்பான நினைவுடன்தான் சைக்கிள் ஒட்ட வேண்டும்.

எப்பொழுதும் அவசரப்படுவதும், பதட்டப்படுவதும் கூடவே கூடாது. நிதானமானது, எப்பொழுதும் திடமான மனதையும், நல்ல உடல் வலிமையையும், அருமையான ஆலோசனையையும் அளிக்கும்.

இனி, விரைந்து செல்லும் வாகனங்கள் ஒட்டுபவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு முறையினைக் காண்போம்.

4. வாகன ஒட்டுநர்கள் கவனிக்க

பள்ளி மாணவர்களுக்கு வாகனங்கள் ஒட்டுதற்குரிய வாய்ப்பு கிடையாது. ஏனெனில், வாகனங்கள் ஒட்டுவதற்கு 'ஒட்டும் உரிமம்' (Driving License) போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடமிருந்து தான் வாங்க வேண்டும்.

உரிமம் வாங்குவதற்கு வயது வரம்பு உண்டு. அமெரிக்கா போன்ற நாடுகளில் 16 வயது என்று நிர்ணயித்திருக்கின்றார்கள். நம் இந்திய நாட்டில் 18 வயது என்பது விதிமுறை.

என்றாலும், வாகனம் ஓட்டுவதற்குரிய முறையினை ஒரு சிறிது அறிந்து கொள்வது, சாலையில் செல்லும் போது பாதுகாப்பினைப் பெற வழிவகுக்கும்.

1. விரைந்து செல்வதற்காகத் தான் வாகனங்களை பயன்படுத்துகிறோம். அதற்காக நமது மனோவேகத்திற்கு ஏற்ப, வண்டிகளை ஓட்டிக்கொண்டு போய்விடமுடியாது.

2. நாம் போகக் கூடிய சாலையின் மேடுபள்ள அமைப்பு, அங்கே அனுசரிக்கக்கூடிய சாலை விதிமுறைகள், அந்த இடத்தின் இயல்புக்கேற்ப மக்கள் கூட்டம், நெருக்கடி இவற்றை அனுசரித்துத்தான் ஓட்டிச் செல்ல முடியும். ஒ0ட்டிச் செல்ல வேண்டும்.

3. வாகனங்களை ஓட்டுவோருக்கு, நல்ல உடல்திறன், எப்பொழுதும் சலனமடையாத மனநிலை, ஆழ்ந்த மனக்கட்டுப்பாடு, சூழ்நிலையின் அபாயத்தை உணர்ந்து செயல்படும் முன்னறிவு (Anticipation) பதட்டப்படாத தன்னம்பிக்கை அனைத்தும் வேண்டும்.

4. ஓட்டுகின்ற ஒவ்வொருவரும், அந்த வாகனத்தின் அடிப்படை அமைப்புத் தன்மையை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

5. நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் ஓடும் வாகனத்தை நிறுத்துகின்ற ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.

6. அதற்காக, வாகனத்தைத் தகுந்த தரமானநிலையில் சீர்படுத்தி செப்பனிட்டுப் பழுது பார்த்து வைத்திருக்க வேண்டும்.

7. 'பிரேக்' அமைப்பு எப்பொழுதும் சரியாக செயல்படும் தன்மையில் வைத்திருக்க வேண்டும்.

8. சாலை அமைப்புக்குறிகள், வளைவு, தரைப்பட அமைப்புக்கள், ஒருவழிப் பாதை, நின்று கவனித்து ஓட்டும் முறைகளை அறிந்து, அத்துடன் காலநிலை ஒளிநிலை, சாலையின் வெளிநிலை, மக்கள் இயக்கநிலை இவைகளுக்கேற்ப, கவனமாக ஓட்ட வேண்டும்.

9. போதையுடன் ஒட்டுதல், உடல் நலமில்லாத போது ஒட்டுதல், மனக்குழப்பத்துடன் ஓட்டுதல் அனைத்தும், பயங்கர விபத்துகளுக்குப் பாதை வகுத்துவிடம்.

10. வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன், 'ஏதோ பெரிய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்துவிட்டோம். உலகமே நம் கீழ்தான்' என்ற வெறித்தன்மையில் இருக்காமல், இந்தப் பாதுகாப்பு, தனக்கும், தன்குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் உள்ள ஒன்று என்ற நினைவுடன் பத்திரமாகவும் கவனமாகவும் ஓட்ட வேண்டும்.

11.அந்திநேரங்களில், ஒளிமங்கும் சமயங்களில்தான்அதிக விபத்துக்கள் நேர்வதாக அறிக்கைகள் கூறுகின்றன. மிகவும் கவனம் வேண்டும்.

12. அந்தி நேரங்களில் அவசரமில்லாமல் ஓட்டுவது நல்லது. பக்கத்தில் உள்ளவர்களோடு ஊர்க் கதைகளைப் பேசி உரையாடிச் செல்வதும், தூக்கம் வந்து, அதை சமாளித்துக் கொண்டு ஓட்டுவதும் பாதுகாப்புக்கு உகந்ததல்ல.

13. நடை பயணிகளையும், மற்ற சைக்கிள், வாகனங்களின் ஓட்டுநர்களையும் மதித்து, அவர்களுக்கும் வழிவிட்டு, பத்திரமாக ஒட்டிச் செல்வது சிறந்த பாதுகாப்பு முறையாகும்.

பொது இடங்களில் பெறவேண்டிய பாதுகாப்பு முறைகளையும், அதற்குரிய வழிகளையும் இதுவரை கண்டோம். அதேபோல், நாம் வசிக்கின்ற வீட்டில் பெறவேண்டிய பாதுகாப்பு முறைகள் பல உண்டு. அவற்றின் தன்மைகளையும் இனி காண்போம்.