பாப்பா முதல் பாட்டி வரை/016-024


சோதனைக் குழாய் உருவாக்கும் குழந்தைகள்

க்கள்தொகை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், ஒரு குழந்தைக்குக்கூட தாயாக முடியாமல் ஏங்கித் தவிப்பவர்கள் ஏறாளம். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.

அறிவியலின் வளர்ச்சி காரணமாக, குழந்தை பெறும் விஷயத்தில் முடியாதவை பல, இந் நாளில் முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளன. சோதனைக் குழாய் முறையில் பெரும் செலவில் கருவை வளர்த்து, குழந்தைப் பேற்றைக் கொடுப்பது. அதற்காக, அதிக செலவில் சோதனைக் குழாய்க் கூடம் ஆகியவை அவசியம்தானா? பதிலாகக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளலாமே எனக் கூறுகின்றனர். தத்து எடுப்பது பெருகிவிட்டால், குழந்தை பெற்றுக் கொடுக்கக் கூடிய தம்பதியினர், இதனை ஒரு வியாபாரமாக ஆக்கிவிடக் கூடும்.

சோதனைக் குழாய் முறையில் ஒரு தம்பதியிக்குக் குழந்தை அளிப்பதன் மூலம், அவர்களது வாழ்வை முழுமையடையச் செய்ய முடிகிறது. உலகில் முதல் சோதனைக் குழாய்க்குழந்தை இங்கிலாந்தில் 1978ஆம் ஆண்டு பிறந்தது. மறைந்த டாக்டர் ஸ்டெப்போ குழுவினரின் முயற்சியால் பிறந்த அக் குழந்தையின் பெயர் லூயிஸா ப்ரெளன். தற்போது உலகம் முழுவதும் 5000த்துக்கும் மேற்பட்ட சோதனைக் குழாய்க் குழந்தைகள் உள்ளன.

இயற்கைக் கருத்தரிப்பு : கரு முட்டையும், ஆண் விந்துவில் உள்ள உயிர் அணுவும் இணைந்தால், கரு உண்டாகிறது. பெண்ணின் உடலில் சுரக்கும் சுரப்பி நீர்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் கருவகத்திலிருந்து ஒரு கருமுட்டை உற்பத்தியாகி, வளர்ந்து, முதிர்ச்சி அடைந்து, கருவகத்திலிருந்து வெளியேறுகிறது.

மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் கரு முட்டை, கரு இணைக் குழாயின் நுண்ணிய விரல்கள் போன்ற பகுதியால் உறிஞ்சப்படுகிறது. அச் சமயம் கணவன் - மனைவி உடல் உறவு கொள்ள நேர்ந்தால், விந்துவில் உள்ள உயிரணுக்கள் யோனிக் குழாய் வழியாகக் கருப்பையைக் கடந்து, கரு இணைக் குழாயில், கரு முட்டையைச் சந்தித்தால், கரு இணைப்பு உண்டாகிறது. நான்கு, ஐந்து நாட்களில் இந்த இணைந்த கரு, மேலும் வளர்ச்சி அடைந்து அதன் சுவரில் பதிந்து வளர ஆரம்பிக்கிறது. கரு பதிய கருப்பை சாதகமாக இருந்தால் தான், கரு பதிந்து குழந்தை வளரும். கருப்பை, கருவினை ஏற்கும் நிலையில் இல்லாமல், இருந்தாலும், கரு இணைப்பு ஏற்படவில்லை என்றாலும், மாதவிடாய் வந்து விடும்.

கருத்தரியாமைக்குக் காரணங்கள் : சில பெண்களுக்குக் கரு முட்டை, சரியாக உற்பத்தி ஆகாதால் மாதவிடாய் சரியாக வராது. சிலருக்கு மாதவிடாய் சரியாய் இருந்தும், கரு முட்டை உற்பத்தி சீராக இல்லாமல் இருக்கக்கூடும். மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்தியே இருக்காது. சிலருக்கு இளம் வயதிலேயே, அதாவது 25-35 வயதுக்குள்ளேயே கருவகம் செயலிழந்துவிடுகிறது. இதற்கு ‘ப்ரிமெச்சூர் ஒவேரியன் ஃபெயிலியா்’ (Premature OviraFailiure) என்று பெயா்.

கருப்பையின் கீழே சிறிய வாய் போன்ற பாகம் ‘சர்விக்ஸ்’ (Cervix) எனப்படுகிறது. கருப்பை வாய்ப் பகுதியில் உள்ள சுரப்பிகளில் இருந்து சுரக்கும் ‘மியுக்கல்’ எனும் திரவம் கருமுட்டை முதிர்ந்து வரும் நாளில் இளகி, உயிர் அணுக்கள் மேல்நோக்கிச் செல்ல உதவுகிறது. இதே திரவம் சில காரணங்களால் கெட்டியாகவும், எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால், கரு இணைவதைத் தடுத்து விடுகிறது.

ஆண் விந்துவில் உள்ள குறைபாடு : ஆணிடமிருந்து வெளியாகும் விந்துவில், சாதாரணாக 60 முதல் 120 மில்லியன் உயிர் அணுக்களும், அவற்றில் 60-80 சதவீதம் சுறுசுறுப்பு உள்ளவையாகவும் இருக்கும். இந்த அளவிருந்து குறைந்து காணப்படும் உயிர் அணுக்கள் கருத்தரிப்பைத் தாமதிக்கும்.

சில தம்பதியருக்கு, எவ்விதக் குறைபாடும் இல்லாமலேயே கருத்தரிப்பு நிகழாமல் இருக்கக்கூடும். கரு இணைக் குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போவதே, பெரும்பாலும் இதற்குக் காரணம். இம் மாதிரி விவரிக்க இயலாத மலட்டுத் தன்மை உள்ள பெண்கள், எப்போது வேண்டுமானாலும் கருத்தரிக்க வாய்ப்புண்டு. ஆனால் 40 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் வாய்ப்புக் குறைந்து விடும்.

எதிர்ப்புச் சக்திகள் : ஆணின் விந்து அணுக்களுக்கு எதிராகப் பெண்ணின் உடலில், எதிர்ப்புச் சக்தி ஏற்படும். ஆணின் உடலில், ஆணின் விந்து அணுக்களுக்கே எதிராகச் செயல்படும் எதிர்ப்புச் சக்தி ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த எதிர்ப்புச் சக்தி, பெண்ணின் உடலில் இருப்பின், உடல் உறவு கொள்ளும்போது, விந்துவில் உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் யோனிக் குழாயில் விழும் போது, பெண்ணின் உடலில் இருந்து எதிர்ப்புச் சக்தி கிளம்பி, ஆண் அணுக்களை செயலிழக்கக் செய்து விடுகிறது.

விரையில் அடிபடுதல், விரையில் ரத்தக் கட்டி, விரையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் ஆணுக்கு, உயிர் அணுக்களில் எதிர்ப்புச் சக்தி உருவாக வாய்ப்பு உண்டு.

இதனால் கரு தங்காமல் போகலாம். மீறி கரு நின்றாலும், கருப்பையில் பதிந்து வளராமல் இருக்க வாய்ப்பு உண்டு. கரு பதிந்து வளர்ந்தாலும், உயிரற்ற கரு மட்டும் வளர்வதற்கும் வாய்ப்புகள் உண்டு.

கருப்பை வாயில் சுரக்கும் திரவத்திலும், கரு முட்டை இருக்கக்கூடிய திரவத்திலும், இந்த எதிர்ப்புச் சக்தி அதிகம் காணப்படுகிறது. எல்லோருக்கும் இந்த எதிர்ப்புச் சக்தி இருக்கும் என்று பயப்படத் தேவை இல்லை. எதிர்ப்புச் சக்தி இருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம் முறியடித்து விடலாம்.

சோதனைக் குழாய்க் குழந்தை : கரு முட்டையும், ஆண் உயிர் அணுக்களும், ஒன்றையொன்று சந்திக்க இயலாத நிலையில், ‘டெஸ்ட் டியூப்’ முறை செய்யப்படுகிறது. ஆண் அணுக்களையும் கரு முட்டையும் மருத்துவ ரீதியில் வெளியே இணைத்து கருவினைக் கருப்பையில் செலத்துவதுதான் ‘டெஸ்ட் டியூப்’ முறை. இணைக்கப்பட்ட கரு, கருப்பையின் சுவரில் பதிந்து வளர ஆரம்பித்து விடும்.

ஒரு பெண்ணின் கருவகத்தில் சாதாரணமாக மாதமொன்றுக்கு ஒரு கரு முட்டைதான் உருவாகும். டெஸ்ட் டியூப் முறையில் பல கரு முட்டைகள் தேவை. ஊசி, மருந்து, மாத்திரைகள் மூலம் பெண்ணின் கருவகத்தில் பல கரு முட்டைகளை உற்பத்தி செய்ய முடியும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு கூடுகிறது.

சோதனைக் குழாய் முறையில் கரு, கருப்பையில் பதிந்து வளர்வது 20 முதல் 30 சதவீதமாக உள்ளது.

1. தற்போது பெண் குழந்தைகள் அதிக அளவில் பிறப்பதாகச் சொல்லப்படுகிறதே? காரணம் என்ன? பெண் குழந்தை பிறந்தால், பெண்ணைக் குறை கூறுவது சரியா?

டாக்டர் கமலா செல்வராஜ் : பெரும்பாலான ஆண் குழந்தைகள், கரு நிலையிலேயே சிதைந்து விடுவதும், பிறந்த பிறகு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு காரணமாக, ஆண் குழந்தைகள் இறப்பதுமே, அதிகப் பெண் குழந்தைகளுக்குக் காரணம். பெண் குழந்தைகளுக்குக் கருவிலேயே எதையும் தாங்கும் சக்தி உருவாகி விடுகிறது. பிறந்து வளரும் நிலையில், நோயைத் தாங்கும் சக்தி ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம். இந்தியாவில் ஒரு ஆண் குழந்தைக்கு மூன்று என்ற விகிதத்தில், பெண் குழந்தைகள் பிறக்கின்றன.

ஆணின் உயிர் அணுக்களில், எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் உள்ளன. ஆனால், பெண்களுக்கு, முட்டையில் எக்ஸ் குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். எக்ஸ்ஸும் ஒய்யும் சேரும் நிலையில், ஆண் குழந்தையும், எக்ஸ்ஸும் எக்ஸ்ஸும் சேரும் நிலையில் பெண் குழந்தையும் பிறக்கிறது. கணவனின் குரோமோசோம்கள் தான், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இயற்கையாகத் தீர்மானிக்கிறது. எனவே, பெண் குழந்தை பிறந்தால், பெண்ணைக் குறை சொல்வது அர்த்தமற்றது.

2.குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண்களிடம்கோளாறு அதிகமா, பெண்களிடம் கோளாறு அதிகமா? பெண்கள் அளவுக்கு ஆண்கள் தங்களைச் சோதனை செய்துகொள்ள முன் வருகிறார்களா?

குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண், பெண் கோளாறு விகிதம் சமமாகவே உள்ளது. முன்னைப் போல் இல்லாமல், ஆண்கள் பெருமளவில், தாங்களாகவே, முன்வந்து சோதனை செய்துகொள்ளும் அளவுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வராவிட்டாலும், அவர்களைத் தற்போது மனைவிகள் விடுவதில்லை.

3.திருமணமாகி குழந்தை இல்லை என்ற நிலையில், எத்தனை ஆண்டுகளுக்குள் சோதனைக் குழாய்க் குழந்தை முறைக்கு முயற்சி எடுக்கலாம்?

திருமணமான இரண்டு ஆண்டுகள் வரை, இயற்கையான கருத்தரிப்புக்குக் காத்திருக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தை பிறக்காவிட்டால், மருத்துவரை அணுகுவது நல்லது.

4. சோதனைக் குழாய் முறையில் குழந்தை உருவாக்குவதில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன? மொத்தம் எத்தனை வகைகளில் சோதனைக்குழாய்க் குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன?

இதுவரை பெண்களுக்குக் குறைபாடு இருந்தால், சோதனைக் குழாயில் கருவை உருவாக்கி, அதைக் கர்ப்பப் பையில் செலுத்தி, குழந்தைகளை உருவாக்கி வந்தோம். ஆணின் உயிர் அணுவில் அசைவோ, சுறுசுறுப்போ இல்லாமல் இருந்தால், ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இண்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் ஸ்பொ்ம் இன்ஜெக்ஷன்’ (Intracytoplasmic Sperm Injection) (இக்சி) என்ற நவீன முறையின் மூலம், பெண்கரு முட்டையை, ஒரு நுண்ணிய ஊசியினால் பிடித்து, மற்றொரு மெல்லிய கண்ணாடி ஊசியின் மூலம், வீரியம் இல்லாத உயிர் அணுவை எடுத்து, பெண் முட்டையினுள் செலுத்தி, செயற்கை முறையில் கருத்தரிப்புச் செய்யப்படுகிறது. இது மலட்டுத் தன்மை உள்ள ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாத மாகும்.

5. எந்தவித ஆண் மலட்டுத் தன்மையையும் போக்கிட முடியுமா?

பிறந்த உடனேயே ஆண் குழந்தைக்கு விரைக் கொட்டை கீழே இறங்காமல் இருந்தால், இரண்டு ஆண்டுகளுக்குள் அறுவை சிகிச்சை செய்து அதைச் சரியான நிலையில் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால், நிரந்தர மசுபடுத்தன்மைக்குப் பிறப்பே வழி வகுத்து விடும். எந்த சிகிச்சை முறையிலும் வழி இல்லை. இதே போன்று, விந்து உற்பத்தி ஆகாவிட்டாலும், எந்த மருத்துவ முறையும் பலன் அளிக்காது.

6. சோதனைக் குழாய் மூலம் கருமுட்டை உருவாக்க இந்தியாவில் ஆகும் செலவு எவ்வளவு?

சோதனைக் குழாய் மூலம் கரு முட்டையை உருவாக்க மட்டும், ரூ.45 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரை செலவாகும். குழந்தைப் பேறு இல்லாத பெண்ணுக்கு, சோதனைக் குழாய் முறையில், முதலில் கரு முட்டைகளைப் பெருமளவில் உருவாக்க, ஹார்மோன் ஊசிகள் போடப்படும். ஒரு ஹார்மோன் ஊசி மருந்தின் விலை ரூ.6000. நாள் ஒன்றுக்கு நான்கு ஊசிகள் வீதம் குறைந்தபட்சம், 8 தினங்களுக்கு இந்த ஹார்மோன் ஊசிகள் போடப்படும். ஆக இதற்கே ரூ.20 ஆயிரம் செலவாகும். கரு முட்டையை உருவாக்கி, பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்த பிறகு, கரு பதியும் நிலையில் பிரசவச் செலவுகள் தனி.

கர்ப்பப் பையில் கரு பதியாத நிலையில், ரூ.55 ஆயிரம் வீண் தான். இதற்காகத்தான் முதலில், கணவன், மனைவியை அழைத்து, நேரடியாகப் பேசி, சோதனைக் குழாய் முறையை விளக்குகிறோம். செலவு செய்ய நிதி ஆதாரம் என்ன, செலவு செய்து ஒரு வேளை கரு பதியாவிட்டால், தொடர்ந்து வாழ்க்கையை நடத்தக் கையில் பணம் உள்ளதா? குழந்தையை வளர்க்க என்ன செய்வீர்கள் என்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். பின்னர் தான் செயற்கைக் கருத்தரிப்பு முறைக்குத் தம்பதியினரை உட்படுத்துகிறோம்.

சோதனைக் குழாய் முறையில் கர்ப்பப் பையில் கரு பதியாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கரு முட்டையை வெளியே எடுக்க, முதலில் போடப்படும் ஹார்மோன் ஊசிகள் உள்பட, பல்வேறு காரணங்களால் கரு பதியாத நிலை ஏற்படுகிறது.

7. குழந்தை இல்லாத நடுத்தர மக்களும், சோதனைக் குழாய் முறையில் அதிக செலவின்றிக் குழந்தை பெற்றுக்கொள்ள, ஏதாவது வழி உள்ளதா? அரசு என்ன செய்யலாம்?

சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பேற்றை உருவாக்க, ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி மதிப்புள்ள சோதனைக் கருவிகள் தேவை. மேலும் மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்பட 15 பேர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசைப் பொறுத்தவரை, இந்த விஷயங்கள் எல்லாம் மிகவும் கஷ்டம். இதை அரசு செய்ய முடியாது.

8. அண்மையில் இக்சி முறையில் இரண்டாவது மனைவியின் முட்டையை எடுத்து, முதல் மனைவி கர்ப்பப்பையில் செலுத்த, குழந்தை பிறந்து. இதேபோன்று குழந்தை இல்லாத பெண்ணின் திருமணமாகாத சகோதரி, சம்மதிக்கும் நிலையில், அவரது முட்டையைப் பயன்படுத்தி, குழந்தைப் பேற்றைக் கொடுக்கும் வாய்ப்பு உண்டா? உறவில் திருமணமே கூடாது என்ற நிலையில், உறவினரின் முட்டை மூலம் பிறக்கும் குழந்தை தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்குமா?

திருமணம் ஆகாத பெண்ணின் முட்டையை எடுத்து, பயன்படுத்துவதால், பின்னர் திருமணமாகும் போது முட்டை கொடுத்த பெண்ணுக்குக் கணவன் மூலம் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம். மாறாக, கணவரின் சம்மதத்துடன், பெண்ணின் முட்டையை வேறு ஒரு பெண்ணுக்குப் பயன்படுத்த முடியும். அண்மையில் குழந்தை இல்லாத பெண்ணுக்கு, அவளது தம்பி மனைவின் கரு முட்டையை எடுத்துப் பயன்படுத்தினேன், கரு உருவானது; ஆனால் கர்ப்பப் பையில் கரு பதியவில்லை.

வேறு ஒரு பெண்ணின் முட்டையை பயன்படுத்தும் போது, குழந்தை இல்லாத பெண்ணுக்கும், முட்டையைக் கொடுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவு முறை, அவர்களது மூதாதையருக்கு இருந்த நோய்கள், ஆகியவை குறித்து தீர விசாரித்த பிறகே, செயற்கைக் கருத்தரிப்பு குறித்து முடிவு எடுக்கிறோம். பரம்பரையாக நோய்ப் பாதிப்பு இல்லாமல் இருந்தால், பிறக்கும் குழந்தையும் பெரும்பாலும் ஆரோக்கியமாகவே இருக்கும்.

9. குழாய்க் குழந்தையைப் பெற கணவனும், மனைவியும் மேற்கொள்ள வேண்டிய மருத்துவமனை நடைமுறைகள் என்ன? சாதாரண கர்ப்பிணிகளுக்குப் பின்பற்றப்படும் நடைமுறைகள் இவர்களுக்கும் பொருந்துமா?

மாதவிடாய் நின்று ஐந்தாவது நாள், மருத்துவமனைக்குப் பெண் வரவேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து, நாள் ஒன்றுக்கு நான்கு ஊசிகள் வீதம், ஹார்மோன் ஊசிகள் போடப்படும். கரு முட்டைகளை உற்பத்தி செய்து வெளியே எடுப்பதற்காக, இதுபோன்று ஊசி போடப்படுகிறது. எட்டு முதல் 10 நாள்களுக்குள் கரு முட்டைகள், வெளியே எடுக்கப்படும் கருமுட்டையை வெளியே எடுக்கப்படும் நாள் கணவனையும் கட்டாயம் அழைத்து வர வேண்டும். விந்துவைக் கணவன் சேகரித்துத் தர வேண்டும். அதிலிருந்து நல்ல சுறுசுறுப்புள்ள உயிர் அணுக்களைப் பிரித்து எடுத்து, கரு முட்டையுடன் சேர்த்து, அவை கணப்புப் பெட்டியில் (incubator) வைக்கப்படும். 24 மணி நேரம் கழித்து, கரு முட்டையும், அணுவும் இணைந்துள்ளதா எனச் சோதனை செய்யப்படும். இணைந்த கரு மேலும் நன்கு வளர்ச்சி அடைய 48 மணி நேரம் கணப்புப் பெட்டியிலேயே வைக்கப்படும். இரண்டு நாளில் யோனிக் குழாய் மூலம், பெண்ணின் கர்ப்பப் பையில் இணைந்த கரு வைக்கப்படும்.

கருவை வைத்த பிறகு, அது பதியும் வரை, பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிக அசைவுகள் கூடாது. படுத்தே இருந்தால் நல்லது. கருவை வைத்த 10 அல்லது 11-வது நாள், கருவிலிருந்து ரத்தம் எடுத்துச் சோதனை செய்யப்படும். ரத்தப் பரிசோதனையில் பீட்டா எச்.டி.சி.ஜி என்ற வேதிப்பொருளின் அளவு பெருகியிருப்பதைப் பொறுத்து, கர்ப்பம் ஊரிஜிதமாகும்.

இயற்கை கொடுக்காத தாய்மையைப் பெண் பெற்று விடுகிறாள். கரு பதிந்த பிறகு, சாதாரண கர்ப்பிணிகளைப் போன்றே அனைத்து நடைமுறைகளையும், இப் பெண்களும் பின்பற்ற வேண்டும். ஆனால், இயல்பான கருத்தரிப்பைக் காட்டிலும் சோதனைக் குழாய் முறையில் பெண்ணுக்கு அதிக ஓய்வு அவசியம்.

10. சோதனைக் குழாய்க் குழந்தை என்றாலே சிசேரியன் தானா? சுகப்பிரசவத்துக்கு வாய்பு உண்டா?

சோதனைக் குழாய் முறையில் பெரும்பாலும் சிசேரியன்தான்.