பாப்பா முதல் பாட்டி வரை/015-024
‘குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்’ என்றார் வள்ளுவர். மழலைச் சொல்லின் இனிமை, ஒப்பிட முயாதது என்பதற்காக அவர் இவ்வாறு கூறினார்.
மழலைச் சொல்லின் இனிமையைக் கேட்டு ரசிக்க வேண்டுமானால், குழந்தையின் ஆரோக்கியத்துக்கும், பெற்றோர் உரிய முக்கித்துவம் கொடுப்பது அவசியம். கர்ப்பம் ஊர்ஜிதமானவுடனேயே, கருவில் வளரும் குழந்தையை நல்ல முறையில் பெற்றேடுத்து, எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என்பது குறித்துத் தாய் திட்டமிடுதல் அவசியம்.
கர்ப்பம் ஊர்ஜிதமானவுடன் மருத்துவனையில் இருக்கும் மகப்பேறு மருத்துவரை நிர்ணயித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் மாதா மாதம் கருவைச் சோதனை செய்யும்போது, மருத்துவச் சோதனைகள் செய்து கொள்ள அனைத்து வசதிகள் நிறைந்த மருத்துமனையாக இருப்பதே நல்லது.
கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்கள், கருவின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமான காலகட்டமாகும். கவனக்குறைவாக இருந்தால், கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முதல் மூன்று மாதங்களில் கருவின் கை, கால்கள், இதயம் உள்பட, முக்கிய உறுப்புகள் வளர்ச்சி அடையும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி, மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. எக்காரணம் கொண்டும், எக்ஸ்ரே எடுத்தல் கூடாது.
5-வது மாதத்தில்... : கர்ப்பத்தின் 5-வது மாதத்தில், குழந்தையின் உறுப்புகள் சரியாக உள்ளனவா என்பதை, அல்ட்ரா சவுண்ட் மூலம் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. நுரையீரலுக்குள் குடல் சென்று விடுதல் (Diaphragmatic Herta) , மூளை வளா்ச்சி இன்றி, சிறிய அளவாகத் தலை இருத்தல் (Anencephaly), முதுகில் நரம்புத் தண்டு வெளிவருதல், சிறுநீரகங்கள் சரியாக வளராமை, ஆகியவற்றை, அல்ட்ரா சவுண்ட் மூலம் எளிதில் கண்டுபிடித்து விடலாம். பாதிப்பு தீவிரமாக இருந்தால், கருக்கலைக்கும் முடிவை எடுக்க வேண்டியிருக்கும். எனவே, ஐந்தாவது மாதம் தொடங்கிய, உடனேயே அல்ட்ரா பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
எடை குறைவாகக் குழந்தை பிறக்கக் காரணம்: கர்ப்ப காலத்தில் தாய்க்கு உணவுப் பற்றாக்குறை, தாய்க்குத் தேவையான ஓய்வு இல்லாமை, ரத்தச் சோகை ஆகிய மூன்று முக்கியக் காரணங்களால், எடை குறைவாகக் குழந்தை பிறக்கிறது. 3 கிலோ எடையுடன் குழந்தை பிறந்தால் நல்லது. எனினும் 2.5 கிலோ இருக்கலாம். ஆனால், அதற்குக் குறைவாக இருந்தால் நல்லது அல்ல. கர்ப்ப காலத்தில், தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சியையே பாதிக்கும்.
குழந்தையின் எடை 3.5 கிலோவுக்கு மேல் இருந்தால் தாய், தந்தைக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சோதனை செய்ய வேண்டும். அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைக்குச் சர்க்கரைச் சத்து குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.
கர்ப்பம் ஊர்ஜிதமானது முதலே, மருத்துவர் பரிந்துரைக்கும் இரும்புச் சத்து மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிடுவதால், குழந்தை கருப்பாக பிறக்கும் என்று நினைப்பது தவறு. கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்காக, எப்போதும் சாப்பிடுவதைப் போல, இரண்டு மடங்கு சாப்பிட வேண்டும்.
தாய்க்குத் தடுப்பூசி: முதல் பிரசவமாக இருந்தால், ரண ஜன்னி தடுப்பூசியைத் தாய்க்கு, இரண்டு முறை போடவேண்டும். கர்ப்பம் ஊர்ஜிதமாகி, ஒரு மாதத்துக்குள் முதல் தடவையும், 7-வது மாதத்துக்குள் இரண்டாவது தடவையும், தடுப்பூசி பொடுவது அவசியம். இரண்டாவது குழந்தையாக இருந்தால், கர்ப்பம் ஊர்ஜிதமானவுடன், ஒரு முறை ரண ஜன்னி தடுப்பூசி போட்டால் போதுமானது.
பிரசவ கால இறப்பைத் தடுப்பது எப்படி? : பிரசவத்தின்போது தாய் இறப்பதற்கு, ரத்தப் போக்கே மிக முக்கியக் காரணமாக உள்ளது தமிழகத்தில், 1000 கர்ப்பிணிகளுக்கு, இரண்டு பேர் என்ற அளவில், பிரசவகால இறப்பு விகிதம் உள்ளது. தாயின் ரத்தப் பிரிவைச் சேர்ந்த உறவினர்களைப் பிரசவம் நெருங்கும் போது, அருகில் வைத்துக் கொண்டால் நல்லது. ஏனெனில், ரத்தப் போக்கு ஏற்படும்போது, உடனடியாக உறவினர்களின், ரத்தத்தைப் பெற்று, ஏற்றி தாயைக் காப்பாற்றி விடலாம்.
ஐந்து சுத்தங்கள்: குழந்தை பிறக்கும்போது ஐந்து சுத்தங்கள் அவசியம். சுத்தமான இடம், சுத்தமான துணி, சுத்தமான கைகள், சுத்தமான கத்தி, தொப்புளைச் சுத்தமாகப் பராமரித்தல்.
சீம்பால் அவசியம் : குழந்தை பிறந்தவுடன், எடை எடுப்பது மிகவும் அவசியம். பின்னர், குழந்தையைக் கதகதப்பாக வைக்க வேண்டும். குழந்தை பிறகு 20 நிமிஷத்துக்குள் சீம்பாலைத் தாய் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு வரும் நோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்து அது. அதாவது, தாய்க்கு 25 ஆண்டுகளாக வந்த நோய்களுக்கான தடுப்பு மருந்தாகச் சீம்பால் விளங்குகிறது.
குழந்தை பிறந்தவுடன், கழுதைப்பால், தேன், சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கக் கூடாது. ஏனெனில், குழந்தைக்கு வயிற்றுப் போக்கும், நோய்த் தொற்றும் ஏற்படும். முதல் 6 மாதங்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில், தண்ணீர் தர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், தாய்ப் பாலில் 80 சதவீத அளவுக்கு நீர்ச் சத்து உள்ளது.
சில நாள்களில் தொப்புள் கொடி தானாகவே விழுந்து, அந்த இடம் ஆறிவிடும். மருந்துகளோ, பவுடரோ போடக்கூடாது . குழந்தையின் முதல் மலம் கறுப்பாக இருக்கும். இரண்டு மூன்று நாள்களில் மஞ்சள் நிறமாக மாறிவிடும். மலம் நீர்த்துப் போவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அடிக்கடி மலம் போவதைப் பற்றியும், பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே, மலம் போவதைப் பற்றியும் பயப்பட வேண்டாம்.
மஞ்சள் காமாலை : பிறந்து 4-வது நாள் முதல் 12-வது நாளுக்குள், குழந்தையின் உடல் சிறிது மஞ்சள் நிறமாக மாறும். பிறந்து கல்லீரல் செயல்படத் தொடங்குவதற்கான இயல்பான மாற்றம் இது. மஞ்சள் காமாலை நோய் அல்ல இது. ஆனால், பிறந்து இரண்டு நாள்களுக்கு உள்ளேயே கை, கால்கள் மஞ்சள் நிறமாக மாறினால் உடனடி சிகிச்சை அவசியம்.
பிறந்தவுடன் குழந்தை அழாமல் இருந்தால்: முதலில் தலை வருவதற்குப் பதிலாக கால் வருதல், பிரசவம் ஆவதற்கு முன்பே பனிக்குடம் உடைந்து விடுதல், கடினப் பிரசவம், உணவுக் குழாயில் அடைப்பு, தாயின் வயிற்றுக்குள்ளேயே குழந்தை மலம் கழித்துவிடுதல், நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருத்தல், இரட்டைக் குழந்தைகள் ஆகியவை காரணமாக, குழந்தைகள் அழாமல் பிறக்கின்றன. இவ்வாறு தமிழகத்தில் 100க்கு 8 குழந்தைகள் பிறக்கின்றன. இது போன்று அழாமல் குழந்தைகள் பிறக்கும் நிலையில் உடனடி சிகிச்சை அவசியம். குழந்தை பிறந்த ஒரு நிமிஷத்துக்குள், செயற்கை சுவாசக் கருவியைக் கொண்டு (Resusciation Bag) சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூச்சு அடைப்பு ஏற்பட்டு, குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துமனையில், இதுபோன்று 30 செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளன. பிரசவத்க்காகச் சேருவதற்கு முன்பு மருத்துமனையில் இந்த செயற்கை சுவாசக்கருவி உள்ளதா எனக் கர்ப்பிணிகள் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.
பிறந்த உடனேயே, மூச்சுவிட குழந்தை கஷ்டப்பட்டால், கையை விட்டுச்சளியை எடுப்பது தவறு. சளியை எடுக்க, சக்ஷன் பல்ப் (Suction Bulb) என்ற கருவி உள்ளது.
குழந்தை இறப்பைத் தடுப்பது எப்படி? : கருவுற்றிருக்கும்போது தாய்க்குப் போதிய கவனிப்பு இல்லாமை, பிரசவத்தை மருத்துவமனையில் வைத்துக் கொள்ளாமல் இருத்தல், புட்டிப்பால் கொடுத்தல், கைகளைப் பெற்றோர் சுத்தம் செய்யாமல் இருத்தல், அட்டவணைப்படி, தடுப்புசி போடாமல் இருத்தல், ஆகிய காரணங்களால் குழந்தைகள் இறக்கின்றன. தமிழகத்தில், பிறந்து ஒரு வயதுக்குள், 1000 த்துக்கு 56 குழந்தைகள் இறக்கின்றன.
புட்டிப் பால் செய்யும் தீமைகள் : புட்டிப் பால் கொடுத்தால், சளி அதிகமாக இருக்கும்; வயிற்றுப் போக்கு இருக்கும். நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, நுரையீரல் பாதிக்கப்படவும், காதில் சீழ் வடியவும் வாய்ப்புகள் அதிகம். பவுடர் பாலில் உப்புத் தன்மை அதிகம் என்பதால், குழந்தையின் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் . புட்டிப் பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு, பிறந்து 45வது நாளிலேயே கரோனரி ரத்தக் குழாயில் அடைப்பு உருவாகி, எதிர்காலத்தில் இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
புட்டிப்பால் சரியாக ஜீரணிக்காது, அதில் உள்ள புரதச்சத்து காரணமாக, ஒவ்வாமை ஏற்படும். சளி, காய்ச்சல், உடல் பருமன் ஆகியவற்றுக்குப் புட்டிப் பால் வழி வகுத்துவிடும்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தை பிறந்து முதல் நான்கு மாதம் லீவு எடுத்துவிட்டு, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பின்னர் பாலைப் பீய்ச்சி எடுத்து, வீட்டில் உள்ளோர் மூலம் கொடுக்கலாம். பீய்ச்சி எடுக்கும் பால், அறை வெப்ப நிலைக்கு, ஆறு மணி நேரத்துக்குக் கெட்டுப்போகாது.
ஆறு மாதம் ஆனவுடன், குழந்தைக்குத் தாய்ப் பாலுடன், இணை உணவு கொடுக்கத் தொடங்க வேண்டும். வீட்டு உணவை மட்டுமே கொடுக்க வேண்டும். மசித்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், சாதம், இட்லி ஆகியவை கொடுக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக இவற்றைக் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் கழுத்து நிற்காவிட்டால் : குழந்தை பிறந்தது முதல், மூளை வளர்ச்சித் திறனைக் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறந்தது முதல் ஓராண்டுக்கு தலையின் சுற்றளவு எடுக்க வேண்டும். அந்தந்த மாதங்களில், குழந்தை செய்ய வேண்டியதைச் செய்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள் கழுத்து நிற்க வேண்டும். குழந்தையைப் படுக்க வைத்து மேலே நேராகப் பொம்மையை அசைத்து, தாய் பயிற்சி அளித்தால், கழுத்து நிற்க ஆரம்பித்து விடும். பயிற்சி அளித்தும் கழுத்து நிற்காவிட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
குழந்தையின் கால்கள் பின்னிப் பிணைந்திருந்தால் : குழந்தையின் கால்கள் பின்னிப் பிணைந்திருந்தால், அடிக்கடி இடுப்பில் தூக்கி வைத்திருந்தால் சரியாகி விடும்.
அடுக்குமாடிக் குழந்தைகளுக்கு என்ன நோய் ? : அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர், தங்களது குழந்தைகளை வீட்டுக்கு உள்ளேயே வைத்திருந்தால், அவர்களது உடலில் சூரியஒளி படாத நிலை ஏற்படும். இதனால் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ பற்றாக்குறை ஏற்பட்டு, கால் கோணலாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனவே தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது, குழந்தைகளின் உடலில் வெயில் படும்படிச் செய்ய வேண்டும்.
விளையாட்டுக் கல்வியே சிறந்தது : நான்கு வயதுக்குள், குழந்தையை எழுதச் சொல்லி நிர்ப்பந்தித்தல் கூடாது. குழந்தை தானாகவே எழுதினால் தப்பில்லை. 6 வயது வரை விளையாட்டு முறைக் கல்வியே சிறந்தது. விளையாட்டு முறைக் கல்வி காரணமாக மூளைத் திறன் வளரும்.