பாப்பா முதல் பாட்டி வரை/023-024
பெண்களைப் பாதிக்கும் இதய நோய்கள் என்று எண்ணும்போது, கீழ்க்கண்டவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அ) இதயத்தைக் தாக்கும் எந்த வகைக் கோளாறும், பெண்களையும் தாக்க முடியும்.
ஆ) பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அரிதானது என்கிற நிலை, இப்போது மாறி வருகிறது.
மேலும், பெண்களில் இதய நோய்கள் என்று சிந்திக்கும்போது, குறிப்பாக கர்ப்ப காலத்தில் என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே இதய நோய் இருக்கக் கூடிய ஒரு பெண், கர்ப்பம் தரிக்கும் நிலையில், அது இதய நோயை அதிகப்படுத்தலாம்; அல்லது அதுவரை வெளியே தெரியாமல் இருந்த இதய நோய் கர்ப்ப காலத்தில் வெளிப்படத் தொடங்கலாம்.
கர்ப்பத்துக்கும் இதயத்துக்கும் தொடர்பு என்ன? : கர்ப்ப காலத்தில், உடல் பல மாறுதல்களை அடையும் தேவைகளுக்கு ஏற்ப இதயம், ரத்த நாளங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளிலும், மாறுதல்கள் ஏற்படுகின்றன. இது சாதாரணமாக, எந்தக் கோளாறும் இல்லாத பெண்ணுக்கும் பொருந்தும்.
கர்ப்ப காலங்களில் இதயம் தொடர்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்ன? : கர்ப்ப காலத்தில், இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. இரத்த அணுக்களின் அளவு மற்றும் இரத்த அளவு ஆகியவற்றில், மாறுதல்கள் ஏற்படுகின்றன.
சாதாரணமாகவே இது என்றால், ஏற்கெனவே, இதயக் கோளாறு இருந்தால், என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும். சில பெண்களுக்கு இதய வால்வுக் கோளாறு ஏற்கெனவே இருந்திருக்கும். வளரும் பருவத்தில், பெரிய பாதிப்பு ஏதும் தெரிந்திருக்காது, அல்லது நோய் அறிகுறிகள் ஏதும் தோன்றியிருக்காது. ஆனால், கர்ப்ப காலத்தில், கருவுக்கும் சேர்த்து, இதயம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருப்பதால், நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
அறிகுறிகள் என்ன? : இதய வால்வுக் கோளாறு இருந்தால், மூச்சு இரைப்பு அதிகமாக இருக்கும். கை, கால்களில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சோர்வு அதிகமாக இருக்கும். கர்ப்ப காலத்தில், இதுபோன்ற அறிகுறிகள் தோன்ற வாய்ப்புள்ளதால் எல்லாப் பெண்களுக்குமே, இதயத்தை ஒரு முறை பரிசோதித்து விடுவது நல்லது.
ஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்து விடும் : இவ்வாறு இதயத்தைப் பரிசோதிக்கப் பெரிய கருவிகள், சோதனைகள தேவையில்லை, இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்துக் கேட்டாலே, கோளாறைக் கண்டு பிடித்து விட முடியும். இதயத்தில் ‘Murmur’ (இயல்பான இதயத் துடிப்புடன் கேட்கும் விநோதமான ஓசை) கேட்டால், கோளாறு இருப்பதாக அர்த்தம். உடனடியாக இதயச் சிறப்பு மருத்துவரிடம் கர்ப்பிணியை அனுப்புவதே நல்லது. இவ்வாறு, உரிய நேரத்தில் சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம், தாய்-சேய் நலத்தைப் பாதுகாக்க முடியும்.
ருமாட்டிக் காய்ச்சலால் ஏற்படும் இதயக் கோளாறு: வளரும் பரவத்தில் பாக்டீரியாக் கிருமி காரணமாக, வறட்டு இருமல் ஏற்பட்டு, பின்னர் அது மூட்டு வலியாக மாறி, இதய வால்வுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இவ்வாறு வறட்டு இருமலில் தொடங்கி, காய்ச்சலுடன் கூடிய மூட்டு வலிக்கு, ருமாட்டிக் காய்ச்சல் என்று பெயர். உலகம் முழுவதும் ருமாட்டிக் காய்ச்சலால் (rhematic fever) ஏற்படும் வால்வுக் கோளாறுகள் தாம் (Valvular problems) கர்ப்பமுற்ற பெண்களின் இதய நோய்க்கான முதன்மை பிரச்சினைகளாகின்றன.
அறுவை சிகிச்சை அவசியமா? : வால்வுக் கோளாறுகள் உள்ள பெண்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி, முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிகிச்சை செய்து கொண்டால், கர்ப்பிணிக்கும், பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. மிகத் தீவிரமான வால்வு பாதிப்புள்ள பெண்கள் தவிர மற்றவர்களின் கர்ப்ப காலமும், பிரசவ காலமும், மருத்துவக் கட்டுப்பாட்டுக்கும், ஆரோக்கியத்துக்கும் உட்பட்டே இருக்கும். மேலும், வால்வு பாதிப்பு தீவிரமாக இல்லாவிட்டால், அறுவை சிகிச்சை தேவையில்லை. மருத்து சிகிச்சையே போதுமானது.
பிறவிக் கோளாறு : பிறவி இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கோளாறைச் சரி செய்ய, தற்போது நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் இத்தகையவர்கள் குழந்தைப்பேறு அடைவதில் சிக்கல் ஏதும் இல்லை. இதே போன்று, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களும், கூட திருமணம் முடித்து, மகப்பேறு அடையும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.
பெண்களும் மாரடைப்பும் : பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவு என்ற கணிப்பு, இத்தனை நாள் இருந்து வந்தது. இந்த நிலை இப்போது மாறி வருகிறது. ஏன்? எப்படி?
முன்னர் இருந்த வாழ்க்கை முறையில், இயந்திர வேகமும், பதற்றத்தைத் தரும் கவலைகளும், பெண்களுக்கு ஏற்படுவது குறைவாக இருந்தது. கூடவே, பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன், மாரடைப்பு ஏற்படுவதையும், இரத்த நாளங்கள் அடைபடுவதையும், நாளங்களில் கொலஸ்டிரால் படிவதையும், தடை செய்கிறது. ஈஸ்ட்ரோஜனின் இந்தச் செயலுக்கு ‘கார்டியோ புரொடக்ட்டிவ் எஃபெக்ட்’.” (Cardio protective effect), அல்லது இதயப் பாதுகாவல் திறன் என்று பெயர்.
மாதவிடாய் நிற்கும் வரை : ஈஸ்ட்ரோஜன் காரணமாக, பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சதவிகிதம் குறைவாக இகுத்தது. இருப்பினும், மாதவிடாய் நின்ற பிறகு (மெனோபாஸ்), ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறையும் நிலையில், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகிரிக்கிறது. இந் நிலையில் ஆண்களுக்குச் சமமான விகிதத்தில், பெண்களும் மாரடைப்பால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.
முன்பு மாதவிடாய் நின்ற பிறகே, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புத் தேன்றியது. தற்போதைய பரபரப்பு மிகுந்த வாழ்க்கைக் சூழல், உடல் பருமன், கொழுப்பு நிறைந்த உணவுப் பண்டங்கள் காரணாக, மாதவிடாய் நிற்பதற்கு முன்பேகூட மாரடைப்புக்கு ஆளாகத் தொடங்கியுள்ளனர்.
மாரடைப்பின் தீவிரம் ஆண்களைவிட அதிகம் : இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டால், நோயின் தீவிரம் ஆணைக் காட்டிலும் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பெண்ணின் கரோனர் தமனிகள் (Coronary arteries), சிறியதாகவும் விட்டத்தில் குறைவாகவும் உள்ளன. எனவே மாரடைப்பு எற்பட்டு விட்டால், நோய் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.
தடுப்பு என்ன? : பரபரப்பு இல்லாத வாழ்க்கை முறை, 40 வயது முதலே கொழுப்புச் சத்து நிறைந்த நெய் உள்பட, உணவுப் பண்டங்களைக் குறைத்துச் சாப்பிடுதல், தினமும் உடற்பயிற்சி செய்து, உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரித்தல் ஆகியவை மூலம், இதய நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.