பாப்பா முதல் பாட்டி வரை/022-024
நோய்கள் உடலின் எந்தப் பகுதியைப் பாதித்தாலும், வேதனைதான். இதற்குத் தோல் நோய்களும் விதி விலக்கல்ல. உலக அளவில், ஏறக்குறைய 520 விதமான தோல் நோய்கள் உள்ளன. தமிழகத்தில், 15 முதல் 20 தோல் நோய்கள் காணப்படுகின்றன.
தோல் நோய்க்கான காரணங்களைக் கண்டுபிடித்து விட்டால், அதைக் குணப்படுத்தி விட முடியும். ஆனால், காரணம் கண்டுபிடிக்க இயலாத தோல் நோய்கள் உள்ளன. தோல் நோய்கள் வருவதை முன்னாடியே கண்டுபிடிப்பது சிரமம்.
“டாக்சிக் எப்பிடர்மல் நெக்ரோலிஸ்’ என்ற நோய் ஏற்பட்டால், தோல் உரிந்து, பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. சில வலி நிவாரண மருந்துகள், சிலருக்கு ஒத்துக் கொள்ளாததாலும், கிருமிகளாலும், இந்தநோய் ஏற்படுகிறது.
தமிகத்தில் பொதுவாகக் காணப்படும் தோல் நோய்களும் அவற்றுக்கான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளும்:
புண் : நுண்ணுயிர்க் கிருமிகளால் ஏற்படும் இந்த நோயால், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர் சிறுமியர் தான். இந்த நோய் சிறு கொப்புளங்களாகத் துவங்கி புண் ஏற்பட்டவுடன், நெறிக்கட்டு ஏற்பட்டு, காய்ச்சலும் வரும். பெரியவர்களுக்கு அடிக்கடி கொப்புளங்கள் ஏற்பட்டால், சர்க்கரை நோய் உள்ளதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த நோயால், சிறுநீரகங்கள் பர்திக்கப்படும் அபாயம் உள்ளது. சோப் உபயோகித்துக் குளித்த பின்னர், உயிர்க்கொல்லி மருந்துகளைத் தடவி நோயைப் போக்கலாம்.
பூஞ்சை : பூஞ்சைக் கிருமிகளால் தேமல், படைகள், மற்றும் உள்ளுறுப்புகளைப் பாதிக்கும் நோய்கள் ஏற்படுகின்றன.
முகத்திலும், மார்பிலும், முதுகிலும், தேமல் அதகிமாக ஏற்படுகிறது. இந்த நோயால் அரிப்போ, தொந்தரவோ ஏற்படாது. இது தொற்று நோய் அல்ல. தேமல் உள்ளவர்கள், தங்களுக்குச் சர்க்கரை நோய் உள்ளதா எனப் பரிசோதனை செய்யவேண்டும். 20 சதவிகித சோடியம் தையோ சல்பேட் கரைசலை, இரவில் படுக்கும் முன், தேமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, காலையில் குளித்தால் தேமல் மறையும்.
தலையிலிருந்து பாதம் வரை, எந்தப் பகுதியிலும் படை நோய் ஏற்டலாம். படையானது வட்டமாகவும், மேற்புறம் செதிலுடனும் காணப்படும். அரிப்பு ஏற்படுத்தும், இந்த நோயானது, வீட்டில் படை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும், வீட்டு வளர்ப்புப் பிராணிகளிடமிருந்தும் பரவக்கூடியது.
படையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய துணி சோப், சீப்பு, ஷேவிங் பிரஷ்களை, மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நீண்ட நாட்கள் படை நோய் குணமடையாமல், இருந்தால், சர்க்கரை நோய் உள்ளதா எனப் பரிசோதிக்க வேண்டும். இதைக் குணப்படுத்துவதற்குரிய மருந்து, மாத்திரைகளை, டாக்டர்கள் ஆலோசனை பெற்று உட்கொள்ள வேண்டும்.
பூஞ்சைக் கிருமிகள் நுரையீரல், இதயம், மூளை, சிறுநீரகம், மற்றும் எலும்புகளைப் பாதிக்கும். உள்ளுறுப்புகளைப் பாதிப்பது, ‘மொனிலர்யாசிஸ்’ என்ற நோயாகும். இந் நோயை ஏற்படுத்தும் கிருமி சாதாரணமாக வாயிலும், குடல் பகுதியிலும் காணப்படும்.
நம் உடலில் சத்துக் குறையும்போது, இந்தக் கிருமி, பலவிதமான நோய்களை ஏற்படுத்துகிறது. உடல் பருமனாக உள்ளவர்களுக்கும், சர்க்கரை, புற்றுநோய் மற்றும் உடலில் தடுப்புச் சக்தி குறைகின்ற நோய்கள் ஏற்படும் போதும், இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட இடங்களில் ஜி.வி. பெயின்ட் தடவினால் நல்ல பயனைத் தரும்.
சொறி சிரங்கு : எளிதில் பரவும் இந்த நோய், ‘சார்காப்டஸ் ஸ்கேபிஐ’ என்ற கிருமியால் உண்டாகிறது. இந்த நோய், சுகாதாரக் குறைவால் ஏற்படுகிறது. நெரிசலான பகுதியில் வசிப்பவர்கள், இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் இளவயதினரை இந்த நோய் அதிகம் தாக்குகிறது.
இந்த நோயின் பின் விளைவாகக் கொப்புளங்களும், கரப்பானும், சிறுநீரகங்கள் பாதிப்பும், ஏற்படலாம். சுகாதாரத்தின் மூலமே, இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். சல்பர் களிம்பு, அல்லது ‘பென்ஜைல் பென்ஜோவேட்’ மருந்தைக், கழுத்திலிருந்து பாதம்வரை, உடல் முழுவதும், இரவில் தடவி, காலையில் குளிக்க வேண்டும்.
வாய் அம்மை : வாய் அம்மை என்பது, ‘வைரஸ்’ கிருமியால் ஏற்படுகிறது. இது குழந்தை முதல் பெரியவர்கள் வரை, எவருக்கும் ஏற்படலாம். உதடுகளின் மீது கொப்புளங்களாக வந்து, 5 தினங்களுக்குள் மறைந்து விடும். கொப்புளங்கள் வருவதற்கு முன்பு, காய்ச்சல் வரலாம். இது வராமல் தடுக்கத் தேவையான மருந்துகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
அக்கி : சின்ன அம்மையை ஏற்படுத்துகின்ற வைரஸ் கிருமியால் உண்டாகும் இந்த நோய், எந்த வயதினருக்கும் வரலாம். இந்தக் கிருமி, நரம்புகள் மூலம் பரவுவதால், சிறு கொப்புளங்களாக, உடலில் ஒரு பகுதியில் மட்டும் இந்த நோய் வரும். கொப்புளங்கள் 15 தினங்களில் மறைந்து விடும். கொப்புளங்கள் இருக்கும்போதும், மறைந்து சில வாரங்களும் வலி இருக்கும். வலியைக் குறைக்கும் மாத்திரைகள் தவிர, மற்ற மாத்திரைகள் இதற்குத் தேவையில்லை.
கரப்பான் : இந்த நோய் உண்டாகப் பல காரணங்கள் உள்ளன. உடலில் படக்கூடிய பொருள்கள், உண்ணும் உணவு, மருந்துகள் போன்றவையும், இந்த நோய் ஏற்படக் காரணமாகும். தலை முதல் கால்வரை, எந்தப் பகுதியிலும் இந்த நோய் தாக்கும். இது தொற்றுநோய் அல்ல. நமக்கு ஒவ்வாத பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம், இந்த நோயைக் கட்டப்படுத்தலாம். டாக்டர்கள் ஆலோசனை பெற்றே மருந்துகளை உண்ண வேண்டும்.
தொழுநோய் : ‘லெபரா பேசிலஸ்’ என்ற கிருமியால் ஏற்படும் தொழு நோயைக் கூட்டு மருத்துவமுறை சிகிச்சை மூலம் 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் குணப்படுத்திவிட முடியும். நம்நாட்டில் தொற்று வகைத் தொழுநோய் இல்லை. தோலில் உணர்ச்சி குறைந்திருந்தால், அது தொழுநோயின் அறிகுறி.
வெள்ளைத் தழும்புகள் : அழகு குறைவதைத் தவிர, வெள்ளைத் தழும்புகள் உடலில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இது தொற்று நோய் அல்ல.
உண்ணும் உணவு, மருந்துகள்,உடலில் பூசும் அழகு சாதனப் பொருட்கள், பூச்சி கடித்தல், சில விஷச் செடிகள் உடல் மீது படுதல் போன்ற, உடலுக்கு ஒத்துக் கொள்ளாதவற்றால் (ஒவ்வாமை) ஏற்படும் பாதிப்பு, உடலின் பல பகுதிகளில் தெரிந்தாலும், முக்கியமாக பாதிப்புத் தோலில் தெரியும். டாக்டரைக் கலந்தாலோசித்தே, இதற்கு மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.