பாரதிதாசன் கதைப் பாடல்கள்/அறிவு மணம்
9 அறிவு மணம்
புதுநிலவு போல்முகத்தாள் நின்றாள் வெளியில்
மிதிவண்டிமேல்விரைந்து சென்றான்-மதிவாணன்!
பார்தாள் அவன்பார்த்தான் பாய்காதல் மின்தாக்க
வேர்த்தாள் அவன்வேர்தான் நெஞ்சு.
மறுநாளின் மாலை மதிவாணன் வந்தான்
பிறைநுதலாளும்காணப் பெற்றாள்-சிறுக
விரித்தான், விரித்தாள் இதழ்க்கூட்டு! மின்னச்
சிரித்தாள் சிரித்தான் அச்சேய்.
மூன்றுநாள் முத்துநகை நின்றிருந்தாள் முன்போல
தோன்றாத் துணையானான் தோன்றினான்-ஈன்றாரை
மீறென்றான் மீறினாள் மின்னே மிதிவண்டி
ஏறென்றான் ஏறினாள் பெண்.
பெற்றோர் இதுகேட்டார் சற்றும் பிடிக்கவில்லை,
அற்றனவே சாதிமதம் ஆ என்றே-சுற்றமுடன்
கட்டைவண்டி ஏறிக் கதறி மிதிவண்டி
தொட்டவழிச் சென்றார் தொடர்ந்து.
சாதிமதக் கட்டைவண்டிதன்னிலே செல்லுகையில்
கோதையும் சேயும் குளத்தூர்போய்-ஓதியே
அன்புற்றார் வாழ்த்த அறிவு மணமுடித்தே
இன்புற்றிருந்தார்கள் நன்கு.
- குயில் 1948
❍❍❍