பாரதிதாசன் கதைப் பாடல்கள்/முதியோர் காதல்


11 முதியோர் காதல்

“தோழனே உன்னிடத்தில் சொல்லுகின்றேன், என்காதல்
பாழாகக் கூடாது. பாழானால் வாழ்வேது?
நேற்றுமுன்னாள் நேரிழையை நேரினிலே கண்டேன் நான்,
நேற்றிரவும் கண்டு நெடுநேரம் பேசினேன்.
என்னைக் கணவனென எண்ணிவிட்டாள் ஆதலினால்
பொன்னான வாய்திறக்கப் பூவையவள் நாணமுற்றாள்.
சின்ன வயதுடையாள், தேவைக்குத் தோதுடையாள்
மின்னல் இடையாள், மிகுமையல் கொண்டுள்ளாள்.
என்னையவள் காதலித்தல் யானறிவேன். நான் அவளைப்
பொன்னாய் மதிப்பதையும் போயுரைக்க வேண்டாமா?
ஆதலின் நீபோய் அவளிடத்தில் கூறிவிடு.
மாதரசி சொல்வதைநீ வந்துசொல்வாய் என்னிடத்தில்!
செங்கதிரும் மேற்கில் மறைந்ததுகாண்! தேனிதழாள்
அங்கிந்த நேரம் அழகாக வந்துநிற்பாள்.
மாமரத்தின் தெற்கில் வழிபோகும், அங்கே ஓர்
பூமரமும் நிற்கும் புளியமரத் தண்டையிலே,
சோளம் வளர்ந்திருந்கும் கொல்லையொன்று தோன்றும், அதன்
நீள வரப்பினில்தான்் நின்றிருப்பாள் என்கின்றேன்“
என்று தலைவன் இசைக்கவே, அத்தோழன்

“இன்றிரவே சந்திக்க எண்ணமா" என்றுரைத்தான்.
ஐயையோ இன்னும் அரைநொடியில் அன்னவளை
மெய்யிறுக நான்தழுவ வேண்டுமடா தோழா,

விரைந்தோடு, மங்கையிடம் என்னுடைய மேன்மை,
பெருஞ்செல்வம், கல்வி, பெரியபுகழ் அத்தனையும்
சொல்லி மடமயிலாள் தொட்டிழுக்கத் தோதுசெய்வாய்
வல்லியிடம் என்றன் வயதைமட்டும் கூறாதே!
ஆங்கே பிறப்பில் அமைந்ததென்று சொல்லிவைப்பாய்!
தேன் தடவ நேர்ந்ததனால் சேர்ந்த நரையென்று
மான்விழியா ளுக்குரைத்து வைத்துவிடு முன்னமே!

முப்பத்திரண்டு பல்லும் மோழையே, ஏனென்றால்
உப்பில்லாப் பத்தியத்தால் அப்படிஎன் றோதிவிடு!
கண்ணின்ஒளி மங்கியதைக் காதலிக்குக் கூறாதே.
பெண்ணரசை மெல்லத் தடவிப் பிடித்திடுவேன்
சார்ந்த இருட்டில் தடமாட்டம் யாருக்கும்
வாய்ந்த இயற்கைஎன வஞ்சியவள் எண்ணிடுவாள்
கற்பை எனக்களித்த பின்பு கதை தெரிந்தால்
குற்றமில்லை போபோபோ என்றான் கொடுங்கிழவன்.
தோழன்போய் மீண்டுவந்து சொல்லுகின்றான்: ஐயாவே
வாழைத் துடையுடைய வஞ்சிவந்து காத்திருந்தாள்
சொன்னதெல்லாம் சொன்னோன் துடித்துவிட்டாள் காதலினால்.

கன்னலின் சாற்றைக் கடிதுண்ண வேண்டுமென்றாள்.
காற்றாய் விரைந்துவந்து கட்டித் தழுவிமையல்
ஆற்றாவிடில் நான் போய் ஆற்றில் விழுந்திறப்பேன்,
என்று பறந்தாள். இதோ என்றேன், ஓடி வந்தேன்
சென்றுபேரின்பத் திரைகடலில் மூழ்கிடுவீர்
போய்வார் என்று புகன் றுதோழன் மறைந்தான்.

வாய்வழியும் எச்சிலோடு காலால் வழிதடவி
முள்ளில் விழுந்தெழுந்து முன்காலில் புண்ணடைந்து
கள்ளுண்டான் போல்உடல் தள்ளாடிக் காலிடறிக்
சோளம்வளர் கொல்லையிலே நின்றிருந்த தோகையினை
மூளும் வெறியாலே மொய்குழலே என்றணுகித்
தாவி அணைந்தான்், தனித்திருந்த அவ் வைக்கோற்
பாவையுடன் வீழ்ந்தான் படுகிழவன்! அண்டை
மறைந்திருந்த தோழன், அங்குவந்திருந்தவர்பால்
அறைவான்:

கிழவன் மணம் கேட்பான் அஃதியற்கை
தன்னொத்த மூத்தாளைத் தான்தேடல் வேண்டும். இள
மின்னொத்தாள் வேண்டும் எனல் தீது.

(வைக்கோற் பாவை-விளைவுள்ள நிலத்தில், வைக்கோலால்
செய்து நிறுத்தப்படும்புல்லுரு)

- 1948
(சிங்கப்பூர ”தமிழ் முரசில்” வெளிவந்தது)