பாரதிதாசன் கதைப் பாடல்கள்/கடவுளைக் கண்டீர்


13 கடவுளைக் கண்டீர்

தாய்

பாம்பு கடித்ததம்மா பச்சைக் குழந்தையினை

மாம்பூ மலையில் மருந்திருக்கும் என்கின்றார்
நீதான் மருத்துவச்சி நீயதனை நன்கறிவாய்
தீது வருமுன்னே தேடிவந்து தந்திடுவாய்.

மருத்துவிச்சி

சிட்டாய்ப் பறந்திடுவேன் சேயிழையே அஞ்சாதே
கட்டாயம் பிள்ளையினைக் காத்திடுவேன் அஞ்சாதே
கூடக் கணவனையும் கூட்டிநான் போய்வருவேன்.
(போதல்)

மத்துவன்

எங்கே நீ சென்றிருந்தாய் என்னருமைக் கண்ணாட்டி!
தங்கமே நீ பிரிந்தால் தாங்கிடுமோ என் உள்ளம்?

மருத்துவிச்சி

தெற்குத் தெருவினிலே செங்கேணி ஆச்சிபிள்ளை
பற்கிட்டித் தொல்லை படுகின்ற நேரமிது!
பாம்புகடித்த தத்தான் பச்சிலைக்குப் போவோமே
மாம்பூ மலைநோக்கி வாராய் விரைவாக.
(போகிறார்கள்)

மருத்துவன்

வெய்யில், நடப்பாரை வேகடிக்கும் நேரமடி
ஐயோ நடுவழியில் அல்லல் மிகுத்ததடி

மருத்துவச்சி

அல்லல் மிகுத்தாலும் அத்தானே ஆச்சிபெற்ற
செல்வனை நாம் காப்பாற்றச் செல்வோம் விரைவாகச்
செங்காடு தாண்டிச் செழுங்காட்டை நாம் அடைந்தோம்
வெங்காயக் காட்டை விலக்கி அதோ தெரியும்
மாம்பூ மலையில் மருந்தெடுக்க மாட்டோமோ?
பாம்புக் கடிவிலக்கும் பச்சிலையைத் தேடோமோ?
(போகிறார்கள்)

மருத்துவச்சி

அத்தான்என் காலிலே ஆணிமுள் தைத்துவே
தைத்த இடத்தினின்று செங்குருதி சாய்ந்திடுதே.

மருத்துவன்

கண்ணே மணியேஎன் கட்டிக் கரும்பனையாய்
வண்ணாத்திப் பூச்சி இறக்கைபோல வாய்த்த உன்
மெல்லடியின் உட்புறத்தில் வேல்பாய்ந்தால் என்னாகும்?
சொல்லடிநீமேல் நடக்கத் தோதுபடுமா என்ன?

மருத்துவச்சி

ஆணிமுள்ளை வாங்கிவிட்டேன் அத்தானே புண்வாயைப்
பேணத் துணி கிழித்துக் கட்டிவிட்டேன் பேச்சென்ன?
இன்னும் விரைவாய் நடப்போம் இளையானைத்
தின்னும்அந்த நஞ்சுதனைத்தின்ன இலைபறிப்போம்.
(போகிறார்கள்)

மருத்துவன்

புள்ளிச் சிறுத்தைஒன்று போர்முரசு கொட்டியது
அள்ளிச் சொரிந்ததுவே நம்மேல் அனல்விழியை.

மருத்துவச்சி

அத்தானே அத்தானே என்னண்டை வந்திடுவாய்
செத்தாலும் சாகின்றேன் நீஎதிரே செல்லாதே,
பாயும் சிறுத்தைமேல் பாய்ச்சிடுவேன் என்கத்தி
நாயின் விலாவின் நடுப்பாயும் என்கத்தி.

மருத்துவன்

சாக்காட்டுக் கஞ்சும் சழக்கன்நான் இல்லையடி
நோக்காட்டுக் காலோடு நூலிழையே செல்லாதே,
வெள்ளரிக்காய் என்கத்தி வீச்சுக்கு நிற்குமா
தள்ளடிநீ அச்சத்தைத் தங்கடிநீஇவ்விடத்தில்.

மருத்துவச்சி

கத்தியினை மேலெடுத்துக் காட்டினையோ இல்லையோ
பத்தரிசிக் கோடுகின்ற பார்ப்பான்போல் ஓடிற்று.
வந்த சிறுத்தை ஆது வாலடங்க ஓடியது
முந்தநாம் சென்று முடிப்போம் நமதுபணி.
(போதல்)

மருத்துவச்சி

செங்குத்தாய் நிற்குமலை தேனேநீ பார்த்தேறாய்
அங்குள்ள பள்ளத்தை ஆயிழையே பார்த்துநட!
(ஏறிப் போகிறார்கள்)

மருத்துவச்சி

அத்தானே நாம்தேடும் அம்மருந்தைக் காணோமே
எத்தொல்லை பட்டேனும் இங்கதனைத் தேடுவமே.
(தேடுகிறார்கள்)

மருத்துவன்

பாராய் இளமானே பச்சைப் பசேல்என்று
நேரே இலைகள் நெருங்கப் படர்ந்தகொடி
எட்டா உயரத்தில் உள்ளதடி என்மயிலே
நெட்ட நெடும்பாரை நீளுச்சி மேலேறிக்
கையால் பறிக்கையிலே கால்தவறி விட்டாலோ
பொய்யாகிப்போகுமடிவாழ்வு புதுநிலவே.

மருத்துவிச்சி

நானேறுகின்றேன் நலிவின்றி நீயிருப்பாய்
ஊனெடுத்தோம் என்ன பயன்? ஊருக்கு உழைப்போமே

மருத்துவன்

கட்டாணி முத்தேஎன் காதலியே நீபொறுப்பாய்
எட்டா இலைதன்னை எட்டிப் பறித்திடுவேன்.
(ஏறுகிறான், பறிக்கிறான்)

பாரை வழுக்கிடுதேபாவையே என்செய்வேன்
வாராத சாக்காடு வந்ததடிவந்ததடி!

(விழுகிறான் மனைவி முதுகால் தாங்குகிறாள்.
இருவரும் தரையில் வீழ்ந்து
அடிபட்டுக் கிடக்கிறார்கள் எழுகிறார்கள்)

மருத்துவன்

மெல்ல நடப்போம்நாம் வேளையுடன் வீடுசெல்வோம்
சொல்லிய வண்ணம் சுருக்காக நாம்செல்வோம்
பாம்பால் கடிபட்ட பச்சைக் குழந்தைக்கு
நாம்போய் உயிர்மீட்போம் நல்லத்தான் வாராயோ!
(போகிறார்கள்)

தாய்

வந்தீரோ ஐயோ இலைகொண்டு வந்தீரோ?
தந்தால்என் பிள்ளை தலைஏறும் நஞ்சுதனை
நீக்கலாம் இல்லையெனில் நீங்குமே பிள்ளையுயிர்
வாய்க்குள் இலைச்சாற்றை வார்க்கவோ சொல்லுகின்றீர்?
(இலைச்சாற்றைப் பிள்ளைக்கு வார்க்கிறாள்)

மருத்துவிச்சி

பிள்ளை விழித்ததுவே பெற்றவளே பார்த்தாயா,
துள்ளி எழுந்ததுவே தூயவளே உன்பிள்ளை

சூழ்ந்திருந்தவர்களில் ஒருத்தி

என்ன புதுமை இறந்தோன் உயிர்பெற்றான்!
சின்னஞ் சிறியோன்திடுக்கென் றெழுந்தானே!

மற்றொருவன்

செத்தார் பிழைக்கவைக்கும் சின்னஇலை கொண்டுவந்த
இத்தூய் மருத்துவருக்கென்கொடுத்தாலுந்தகுமே.

தாடிநிறைந்த தள்ளாதவர்

அன்புடையீர் என்றன் அருமை மருத்துவரே
என்பேரன் உம்மால் பிறந்தான், இறந்தபின்பு
பாடெல்லாம் பட்டீர், பகலெல்லாம் வெய்யிலிலே
காடெல்லாம் சுற்றிக் களைப்பில் மலையேறி
வீழ்ந்துபுண்பட்டு விரைவில் குழந்தைநிலை
ஆழ்ந்து நினைத்தேபின் அல்லலொடும் இங்குவந்தீர்?
காத்தீர்! உமக்கென்ன கைம்மாறு வேண்டும், அதை
ஆத்தாநீசொல்வாய் என் அன்பனே நீசொல்வாய்!

மருத்துவன்

அப்பரே நீர்ஒர் அறிஞரென எண்ணுகின்றேன்,
ஒப்பார் இலாத உயர்புலவர் நீர்போலும்
உம்மைநான் கேட்பதெலாம் ஒன்றுதான்் என்னவெனில்
கைம்மேற் கனிபோல் கடவுளைநீர் காட்டிடுவீர்
உம்போன்றார் இந்த உலகில் கடவுளை
எம்போன்றார் காண எதிரினிலே காட்டினராம்.
நானும்என் காதலியாம் நங்கையும் காணும்வகை
ஆனதுசெய்தால் அதுபோதும்போதும்.

தாடி

கடவுளைநான் உங்கட்குக் காட்டல் எளிதே
நடையுலகில் நீங்களது நம்பல் அரிதாகும்,
கோயிலி னுள்ளே குருக்கள்மார் காட்டுகின்ற
தூய உருவங்கள் கல்தச்சர் தோற்றுவித்தார்,
கண்டீர் அவைகள் கடவுள்கள் அல்லஅல்ல.
குண்டான் பெருவயிறு கொண்டிருக்கும் ஓர் உருவம்
ஆறுமுகம் ஐந்துமுகம் நாலுமுகம் ஆகுமென்று
கூறுமுகம் யாவும் கடவுளெனக் கூறாதீர்.
இந்துமதம் சொல்லுகின்ற யாதும் கடவுளல்ல,
பிந்திவந்த ஏசுமதப் பேறும் கடவுளல்ல,
ஓதுநபி காட்டும் ஒலியும் கடவுளல்ல,
எவ்வுருவும் எப்பெயரும் இல்லை கடவுளுக்கே.
அவ்வியமோ பற்றோ கடவுள் அடைவதில்லை
ஊருக்குழைக்கும் உணர்வே கடவுள் ஆம்.
ஊருக்குழைக்கும் உணர்வை உம் முட்கண்டீர்
கண்டீர்நீர் அந்தக் கடவுளையே மெய்யாகக்
கண்ட கடவுள்தான்் காட்டியதோர் இன்பத்தைப்
பெற்றீர் அதைவிளக்கிப் பேசுகின்றேன் கேட்டிடுவீர்:

தொல்லையெலாம் ஏற்றீர்கள் தூயதாம் பச்சிலையால்
அல்லல் அடைந்த அயலாரின் பிள்ளையின்
ஆருயிர் காத்தீர் அகமார இன்புற்றீர்
தேரிரோ நீர்பெற்ற இன்பத் திருப்பயனை
உம்மை நான் வாழ்த்துகின்றேன் நெஞ்சார ஒப்பிலா
அம்மையே அப்பா இனிது.