பாரதிதாசன் தாலாட்டுகள்/அனுபந்தம்

அனுபந்தம்

வாய் மொழிப் பாடல்கள் பலவும் இலக்கியப் பாடல்கள் சிலவும் இதுவரை நாம் பார்த்து வந்தோம். இனி, முதல் தாலாட்டுப் பாடல் பாடிய பெரியாழ்வாருக்குப் பின், புலவர்கள் பாடிய தாலாட்டுப் பாடல்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம். இயன்றவரை ஒவ்வொரு நூலுக்கும் சில மாதிரிக் கண்ணிகளும் தரப்பெற்றுள்ளன. இங்க இவை மூன்று பிரிவாகப் பிரித்திருக்கக் காணலாம்.

அ. பண்டை இலக்கியங்கள்.
ஆ. பிற்கால இலக்கியங்கள்.
இ. வாய்மொழி வழக்கு.

அ. பண்டை இலக்கியங்கள்

15ஆம் நூற்றாண்டில் எழுந்த சீகாழிச்சிற்றம்பல நாடிகள் தாலாட்டு முதல், நூற்றாண்டுதோறும் எழுந்த சில பிரபந்தங்கள் இவ் வரிசையில் அடங்கும்.

1. சீகாழிச் சிற்றம்பல நாடிகள் தாலாட்டு :

(காலம் 15ஆம் நூற்றாண்டு. சைவ சித்தாந் சமய முதல் ஆசாரியரான மெய்கண்டாருக்கு முந்திய குருபரம்பரையில் உள்ளவர். பல சிறு சமய நூல்கள் செய்தவர். இந்நூல் 63 கண்ணிகள் கொண்டது. சம்பிரதாயப்படி வாய்மொழியான தாலாட்டுப் பாடலில் காணப்படுகின்ற கருத்துப் போக்கு முழுமையும் கூட இங்குக் காணப்படுகிறது. குழந்தையின் புகழ், அவன் பேச்சு, யார் அவனை அழச் செய்தவர் என்று கேட்டல், கண் வளரச் சொல்லுதல் - ஆகிய பகுதிகளைப்பின்வரும் வரிகளில் காணலாம்.)

கானாற் கரியானோ கண்மூன்றுடையானோ
தாணுவோ சங்கரனோ சச்சிதானந்தனோ?

சாதி மதத்தாலும் சமய மதத்தாலும்
கோதிலா வானந்தம் கூடஅரிதென்றாரோ?

எல்லா உயிரும் எனதுயிலே என்றுரைத்து
நல்லார் இனத்தில் நடித்தானைச் சொன்னாரார்?

இன்னவடிவின்னநிறம் இன்னபடி என்றறியாது
உன்னம் இடத்தில் உதித்தானைச் சொன்னாரோ?

வையம் வளர மறையோர் தொழில்வளர
மெய்யும் வளர அருள் மேகமே கண்வளரீர்.


2. தத்துவராயர் தாலாட்டு :

(15ஆம் நூற்றாண்டு. 51 கண்ணிகள். தம் குருவாகிய சொருபானந்தர் துதியாகத் தத்துவராய சுவாமிகள் பாடியது)

நஞ்சேய் பிறவிக்கு நாயேன் நடுங்காமல்
அஞ்சேலஞ் சேலன் றருளும் பெருமானோ?

ஆவா இருவர் அறியாத சேவடியை
வாவாஎன் றென்தலைமேல் வைக்கும்
பெருமானோ?

கண்ட இருளைநீ காணாதே அவ்விருளைக்
கண்ட அறிவைநீ காணென்று சொன்னாரோ!

ஆட்டின மாயக்கூத் தென்ன அகத்துள்ளே
கூட்டெனை ஞானக்கூத்தாட்டிய வித்தகனோ!

செல்லல் அறுத்த சிவப்பிரகாசனோ
தொலைலை மறைதேர் சொருபானந் தச்சுடரோ!

3. கீதாசாரத் தாலாட்டு :-

(17ஆம் நூற்றாண்டு. 108 கண்ணிகள். மாதைத் திருவேங்கட நாதர் பாடியது. கீதையின் உட்பொருளைச் சாராமாகத் திரட்டிக் கூறுவது)

திருத்தேரிற் சாரதியாய்ச் சேர்ந்திருந்துங்

கீதையினால் அருச்சுனற்கு மெய்ஞ்ஞானம்
அனைத்தும் உரை

செய்தவரோ வல்லிரும்பு கனலுடனே மருவியது

போல்மனமும் ஒல்லையிலான் மாவுடனே
உற்றதுகாண்

என்றவரோ இந்திர சாலம் போல இவ்வுலகை

நம்மிடத்தில் தந்திரமாத் தோற்றுவித்தோம் சத்யமல

என்றவரோ கூறுமுல கியற்கையுடன்
கூடினுமெய்ஞ்

ஞானம்வரப் பொருந்தியதே சுகவடிவம்
புண்ணியரே கண்வளரீர்.

3. ஞான சம்பந்தர் தேசிகர் தாலாட்டு:-

(40 கண்ணிகள், தருமபுர ஆதீனம் நிறுவிய திருஞான சம்பந்தர் துதி. செய்தவர் வெள்ளியம்பலவாணத்தம்பிரான். 17ஆம் நூற்றாண்டு.)

கங்கை இளம்பிறையும் கண்அனலும்

மான்மழுவும் மங்கை இடமுமட மறைந்துலகில்

வந்தானோ பாலாட்டும் பொன்முடிமேல்
பாம்பாட்டல்

போல்சிறியேன் தாலாட்டும் தன் செவியில் சாத்தும்

தாயாபரனோ ஊனாய் உயிராய் உணர்வாய்

என்னுட் கலந்து தேனாய் அமுதமாய்த் தித்தக்குந்

தேசிகனோ ஊடுகினும் கூடுகினும் ஒக்கஎதில்

ஆடுகினும் கூட விளையாடும் கோமானைச்

சொன்னாரார் நாயேன் உமதடிக்கீழ் நாடோறும்

கண்வளரத் தாயே எனையாண்ட சற்குருவே
கண்வ ளரீர்.

நம்மாழ்வார் தாலாட்டு

(பழந்தமிழ்ப் புலவர்களில் நம்மாழ்வாரிடம் ஈடுபடாதோர் இல்லை. எல்லா வகையாலும் அவர்மீது புலவர்கள் பிரபந்தம் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். பிரபந்த வகைகளுள் தாலாட்டும் ஒன்று. 17ஆம் நூற்றாண்டிலிருந்த உபயகவி அப்பா என்ற வைணவப் புலவர் நம்மாழ்வார் மீது இரு தாலாட்டுப் பிரபந்தங்கள் பாடியிருக்கிறார். முதல் பிரபந்தம், தாலாட்டுப் பாடலில் நம்மாழ்வார் திரு அவதாரச் சரிதையைக் கூறுகிறது. வரலாறு முழுமையும் கண்ணிகளாலேயே தொடர்பான செய்யுளாகப் பாடுகிறார் 350 கண்ணிகள் உள்ளன. அதனுள், குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி கண்வளரச் சொல்வதைக் கூறும் பகுதிகள் அவையுடையன. வச்சிரத்தாற் செய்த திருத் தொட்டிலில் பூ மழை சிந்துகிறார்கள்.)

மருக்கொழுந்து பிச்சியிருவாட்சிமுல்லை
மல்லிகைப் பூ தருக்கொழுந்து கோகனகம் சாதிவேற்

செண்பகப் பூ பாந்தள் அரசன் பணாமகுடப்
பாரகாக்குஞ்சேந்தர் புகழ்விளங்கந் தெய்வத்

தனிச்சுடரோ ஆவார்கள் ஒன்பதின்மர் ஆரியர்
முக்கோல் தரித்து வாழ்வார்கள் தொண்டர் தொண்டர் வாழப்

பிறந்தவனோ தண்டமிழும் வேதாந்த சாரப்
பெரும்பொருளும் மண்டலமும் விண்டலமும் வாழப்

பிறந்தானோ பத்திக்கு வித்தாய்ப் பணித்தடங்காப்
பண்ணவனை முத்திக்கு வித்தாய் முளைத்தவனைச்
சொன்னாரார்.

மற்றொரு பிரபந்தம் நமாழ்வார் பற்றிய
நூற்றெட்டுத் திருப்பதித் தாலாட்டு.

சிரங்கட்டிரு வெள்ளைறையுந் சிந்தையமு
தூற்றிருக்க பரங்கொள்நெடு மாமுகிலைப் பாடும்

பராங்குசனோ குயிலார் திருச்சித்ரகூடஞ்சேர்
காழி நகர் புயல்போல மேனியரைப் போற்றிய

நம் மாழ்வாரோ திருமாலை யாண்டான் திருவாய்
மொழித் தமிழைத் திருத்தும் புவியோர்க்குத் திருந்திய

நம்மாழ்வாரோ திருமல்லி நாடுந் திருப்பாவை
முப்பதுங் கருதுந் தமிழ்தன்னைக் காட்டியநம்
மாழ்வாரோ.

5. சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு :-

(18ஆம் நூற்றாண்டு. 100 கண்ணிகள். பெரும்புலவராகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தம் ஞானாசிரியர் மீது பாடிய துதி.)

என்று நித்த பூரணமாம் இன்பவறி வுண்மையராய்
நின்றபடி நிற்கும் நிகழ்பிரம மென்றானோ.

கமன மழிந்து கறையற்று நிற்குந்
சுமனமதில் நின்றலிகந் தூயசரமென்றானோ.

வானேத்த வென்று மருவற் கரியபதம்
நானேத்த நல்கசிவஞானகுரு தேசிகனோ.

எந்தைசிவ சாதனங்கட் கெல்லாந் திருநீறு
முந்தியதென் றுண்மை மொழியும் பெருமானோ.

பிரசாதி யோடு பிராண லிங்கியாகி
உரைசாரும் போகாங்க மொன்றென்று
சொன்னானோ.

6. திருமாமகள் நாக்சியார் தாலாட்டு :-

(18ஆம் நூற்றாண்டு. 25 கண்ணிகள். திருக்கோட்டியூர் திருமாமகள் என்னும் பிராட்டியார் மீது அமைந்துள்ள துதிநூல், சிறப்பான அமைப்புடையது. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், அம்புலி, வருகை, சிறுதேர் ஆகிய பருவங்கள் குறிப்பிட்டு, பருவத்துக்கு இருகண்ணிகளைக் கொண்டது.)

நீராட்டிமையெழுதி நெற்றியின்மேல் காப்பணிந்து
தாராட்டும் கோட்டி,நகர்ப் பைங்கிளியே தாலேலோ.

தெய்யலங் காரர் திருச்செல்வம் ஆளவந்த
உய்யவந்த கோட்டிக் கடையவளே தாலேலோ.

மஞ்சுசேர் மாட மதிட்கோட்டி நாரணற்குக்
கொஞ்சுவாய் முத்தம் கொடுக்கவந்த கோகிலமோ.

எம்பிரான் கோட்டிக் கிறைவனார் தேவிதன்மேல்
அன்பினால் தம்மை ஆரடித்தார் ஆராரோ.

ஆணிக் கனகத் தளகையான் தான்விடுத்த
மாணிக்கத் தொட்டிலுள்ளே மாமகளே கண்வளராய்.

ஆ. பிற்கால இலக்கியங்கள்

19,20ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய தாலாட்டுப் பாடல்களை இங்குக் காணலாம். டாக்டர் சாமிநாதையர் பாடிய தாலாட்டுப் பாடலும், ராய. சொக்கலிங்கம் அவர்கள் பாடிய காந்தி தாலாட்டுப் பாடலும் இங்குக் குறிப்பிடத் தக்கவை.

7. சம்பந்தர் தாலாட்டு 1.

(19ஆம் நூற்றாண்டு. 30 கண்ணிகள். திருஞதன சம்பந்த சுவாமிகள் வரலாறு கூறுவது.)

குவிகைசென்னி கொண்டடியார் கூத்தாடமுத்தின்
சிவிகையினில் ஏறித் திசைவிளங்க வந்தாரோ?

மருகல் நகர்தன்னில் வணிகற்பணி தீண்டப்
பொருகை வில்லானைப் போற்றியுயிர் தந்தாரோ?

ஆலங்காட்டப்பர் அயர்த்தனையோ பாடவென்று
கோலங்காட்டடப்பதிகம் கூறித் தொழுதாரோ?

அங்கமதைப் பூம்பாவை யாமயிலாப் பூரில் அருட்
சங்கரர்பே ரன்பாலித் தாரணியிற் கண்டரோ?

வாழி திருஞான சம்பந்தர் வாக்கரசர்
வாழிநம்பி ஆரூரர் வாதவூ மன்னவனே!

8. சம்பந்தர் தாலாட்டு 2.

(19ஆம் நூற்றாண்டின் இறுதி. 42 கண்ணிகள். மகாவித்துவான் காஞ்சீபுரம் சபாபதி முதலியார், திருஞான சம்பந்த சுவாமிகள் வரலாற்றைக் கூறுவது முந்தியதினும் வேறானது.)

எம்பந்த மெல்லாம் ஈடறுக்க வந்தருளும்
சம்பந்த னென்னும்பேர் தாங்கங் குருபரனோ?

மறைக்காட்டிற் சொல்லரசை மறையடைத்த
திருக்கதவம்
திறக்கும்வகை பாடுமெனச் செப்பும்
தவக்கொழுந்தோ.

ஆலவாய் கண்டுமங்கை யர்க்கரசி என்னுமிசைக்
கோலமிகு பதிகம் கூறிப் பணிகுருவோ?

வாழ்க அந்தணரென்னும் வாய்மைத் திருப்பதிகம்
வீழ்கங்கை நேர்மையை மேலெதிர விடும்தேவோ?

நன்றுதீ தென்றறியா நாயேன் வினையிருளில்
துன்றியலை யாதருளத் தோன்றுந் தினகரனோ?

9. ஏகநாயகர் தாலாட்டு.

(19ஆம் நூற்றாண்டின் இறுதி. 30 கண்ணிகள். "உதிப்பித்த பன்னூல் ஒளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்” என்று மட்டும் வேண்டி டாக்டர் சாமிநாதையரவர்களையும் பாடும்படி செய்துவிட்டது தாலாட்டு இலக்கியத்தின் ஈடுபாடு, திருவிடை மருதூர் பற்றி ஐயரவர்கள் பாடியது.)

எல்லாத் தலத்தும் இடைமருதே மேலாமென்று
எல்லா மளித்தாட் கியம்பியருள் மாமணியோ!

தெய்வமில்லை என்னுஞ் சிதடர்கள் வாய்மூடச்
செய்வரத னாகியநம் தெய்வ சிகாமணியோ!

துங்கத் தமிழ்மொழியின் தூய்மை எவரும் மறியச்
சங்கப் புலவரிடைத் தங்கியருள் நாவலரோ!

ஆரா வமுதோ அருட்கடலோ எம்முடைய
தீராத துன்பமெலாந் தீர்க்குந் சிவக்கொழுந்தோ!

கருதும் அடியார் கவலையெலாம் போக்கி
மருத நிழலினிடைவாழ்ந்தருளும் மாமணியோ!

10. சங்கராசாரியர் தாலாட்டு,

(19ஆம் நூற்றாண்டின் இறதி, 21 கண்ணிகள். அச்சுதனந்த சுவாமிகள் பாடியது.)

புலனாதி கள்வழயிற் போகா தருகிருத்தி
நலமார் அருட்பார்வை நாட்டவந்த நாயகனோ,

நானிவனென் றுன்னாமல் நடுவா யிலங்கறவே
தானமரும் நிலையிதெனச் சாற்றுஞ் சகத்குருவோ.

மாயை அவித்தையெலாம் மாண்டவழி காணாமல்
ஓயும் படியருளில் ஒன்றவைக்கும் உத்தமனோ.

துவிதப் பிழையறுக்கத் துசங்கட்டி யொன்றாக்கி
விவிதச்சங் கற்பமெலாம் வேரறச்செய் வித்தகனோ.

என்னைஅழித் தெழுந்த இன்பப் பெருக்கோபின்
தன்னையெனக் களித்த சமரசசாட் சாத்பரனோ.

11. திருமலை முருகன் தாலாட்டு.

(20ஆம் நூற்றாண்டு. 101 கண்ணிகள் ஆசிரியர் தென்காசி வன்னியப்பன்.)

கந்தா திருமலையிற் காலமெலாம் வீற்றிருக்குஞ்
சிந்தா மணியான செல்வமேநீ கண் வளராய்.

தொட்டி அசைந்தாடத் தோகைமார் தாலாட்ட
சுட்டியசைந்தாடச் சுந்தமே கண்வளராய்.

ஆதி குறுமுனிக்கு அருள் கொடுக்க வந்தவனே
நீதி யுடையவனே நீலமயில் வாகனனே.

கார்த்திகைப் பெண்களுமே கனிந்துன்னைத்
தாலாட்டப்
பூர்தியாய்க் கேட்டுகந்த பூரணனே கண்வளராய்.

12. நால்வர் தாலாட்டு.

(20ஆம் நூற்றாண்டு. சைவசமயாசாரியர் நால்வர் மீதும் தனித்தனி 12 கண்ணிகள் கொண்டது. பாடல்கள் அவரவர் வரலாற்றைக் கூறுவன.)

சம்பந்தர் :

மேலாம் சிவபாத இருதயர்நீ ராடுகையில்
நாலாரணம் துதிக்கும் நாயகிபால் உண்டவனோ.

அருஞானம் ஆருயிர்கட் களிக்கஉல
கினில் உதித்துத்
திருஞான சம்பந்தர் சீர்பேர்கொள் சின்மயனோ.

அப்பர் :

(12 கண்ணிகள், முதலெழுத்துக்கள் க - ஔ ஆகிய வரிசையில் அமைந்துள்ளன.)

ஐய னெனத்துதிசெய் அப்பூதி சேயை முனம்
வையமிசை வரவழைத்த வான்புகழும் நற்றவனோ,

ஒண்ணகைசேர் திலகவதி யுடன்தோன்றிச்
சூலைகெடப்
பண்ணிற் “கூற்றாயினவா” பாடுசிவ பாக்கியனோ.

சுந்தரர் :

(12 கண்ணிகளின் முதலெழுத்துக்களும் அகரமாகவே செய்யப் பெற்றுள்ளன.)

அரனளித்த அரும்பொருள்கள் அனைத்தையும்
ஆற்றிட்டு நன்னீரு பரவியதோர் தடத்தெடுத்த பாக்கிய
சிகாமணியோ அருமறைசொல் குண்டையூ ரானருளம்
அரிகுற்றுப் பெருமைமிக பூதகணம் பெற்ற அருட்
பெருந்தகையோ

மாணிக்கவாசகர் :

(12 கண்ணிகளின் முதலெழுத்தும் க-கௌ வரிசையில் அமைந்துள்ளன.)

கிள்ளைகள் பண் செய்மதுரைக் கீர்த்தி மிக்க பாண்டியனார்
வெள்ளை மதிச் சடையனடி மேவச்செய் வித்தகனோ
கொண்டலென் உயிர்கள்களி கொள்ள உயர்

ஞானநெறி மண்டலத்தில் தெறிந்துயச்சீர் வாசகத்தைப் பொழிந்தவனோ.

காந்தி தாலாட்டு

(காரைக்குடி ராய, சொக்கலிங்கனாரைத் தமிழுலகம் நன்கு அறியும். சீர்திருத்த இயக்கங்கள், சுதந்திரப் போராட்டம், தமிழ் வளர்ச்சி இயக்கங்கள் அனைத்திரும் அவர் முன்னிணியில் நின்றவர். காந்தியத்தில் தோய்ந்த பழந் தொண்டர். அவர் பாடிய இரு தாலாட்டுக்களிலும் புதுயுக மணம் கமழும்.)

பெண்பால் :

காந்தி அறமதனைக் காசினியெலாம் பரப்பப்
போந்த இளங்குடியே பொன்னேநீ கண்வளராய்.

பெண்ணடிமை யென்றுசொலும் பேதைமட
வார்த்தங்கள்
கண்திறக்க வந்தெபெரும் கற்பகமே கண்வளராய்.

சாதியில் உயர்விழிவு சாதிக்கும் வன்கண்ணர்
பேதையார் என்றறியப் பெண்ணரசே கண்வளராய்.

முதுமை எழிலோடு முபதுலகும் போற்றவளர்
புதுமை கலந்த உயர் பெண்ணரசி நீதானோ.

பீடு பிறங்கஅரும் பெண்மைசிறந் தோங்கிமிக
நாடு செழிக்கவந்த நல்லியலாள் நீதானோ.

ஆண்பால் :

இந்தியத் தாய்விலங்கை ஈர்ந்தெறியப் பிறந்தபெரு
மைந்த அருந்தவமே மரமணியே கண்வளராய்.
தீண்டாமை வேண்டுமெனச் செப்புகின்ற
புன்மதியைப்
பூண்டோடு கீண்டெறியப் பிறந்தவனே
கண்வ ளராய்,
நாட்டின் விடுதலைக்கு நல்லுயிரேனுஞ்சிறிதும்
வாட்டம் தவிர்த்தீய மாமகனே கண்வளராய்.
சாந்தம் பொறைகருணை தன்மைசீர் புனிதமிவை
ஏந்து புகழுடைய எழிற்காந்தி நீதானோ.

திருக்குறளும் தாலாட்டும்.

திருக்குறளில் ஈடுபடாதோர் தமிழ் நாட்டில் கற்றோர் யாருமில்லை . புலவர் அனைவரும் எந்தக் காலத்திலும் அதனிடத்து மிக்க ஈடுபாடுடையராய் அதன் பாடல்களையும் கருத்துகளையும் தங்கள் எழுத்துகளில் அமைத்துள்ளார்கள். இளங்கோவடிகள் தொடங்கி இன்றுவரை இது அனைவரும் ஒப்பும் உண்மை .

கச்சியப்ப முனிவர் என்னும் பெரும்புலவர் 18ஆம் நூற்றாண்டினிறுதியில் திருக்குறளின் ஒரு பகுதியை விளக்கிக் கூறும் படலமாகத் தம் புராண மொன்றில் ஒரு படலம் அமைத்திருக்கிறார். குறள் உதாரணக் கதைகளாக அமைந்துள்ள வெண்பா நூல்களும் விருத்தப்பா நூல்களும் எண்ணில் அடங்கா. அங்ஙனமே இந்நூற்றாண்டில் தாலாட்டுப் பாட முற்பட்ட புலவர் இருவர் திருக்குறள் அதிகாரங்களை அப்படியே தாலாட்டாகப் பாடியிருப்பது அறியத்தக்கது.

முதலாவது, மு.பொ.ஈசர மூர்த்தியாபிள்ளை பாடிய நீதிநெறித் தாலாட்டு. காலம் 1909. இது பல முறை அச்சாகியுள்ளது. குறளின் 133 அதிகாரங்களுக்கும், அதிகாராத்துக்கு ஒரு கண்ணியாக இவர் 133 கண்ணிகள் பாடியிருக்கிறார். சில உதாரணப் பாடல்களைக் கீழே காணலாம்.

கண்னேஎன் கண்மணியே கண்மணியின் உள்ஒளியே
எண்ணே எழுந்தே எழுத்துணரும் மாமணியே.

அகரம் எழுத்தின் முதல் ஆகிநிற்கும் தன்மையைப்போல்
சகம் எலாம் தோற்றுவிக்கும் சாமியை நீகைதொழுவாய்.

நிலையில்லா வாழ்வை நிலையுடைய தாகவெண்ணி
அலைவு தருந் தீங்கியற்றல் ஆகாது கண்மணியே.

கற்றறிந்திலாய் எனினும் கேட்டறிவாய்; அவ்வறிவும்
உற்றதுணையாய் உதவும்; உண்மையிது கண்மணியே.

கேட்டார் வயப்படவும் கேளார் விரும்பிடவும்
பாட்டார் மதிக்கும் உயர் பால்மொழநீ செப்புகண்ணே .

நடத்தையால் நாணுடைமை; ஊன், உடையார்
இடத்துமுண்டு; பாவை இடைக்கம் உடைஉண்டு,
கண்ணே .

தூங்கம் போதெல்லாம் என் தோள்மேலிருந்து, விழித்
தாங்குநெஞ்சி னுள் ஒளிப்பர் அன்புடையார், ஆரமுதே.

யாழ்ப்பாணம் வ. நா. கணேச பண்டிதர் என்பவர் பாடிய மற்றொரு தாலாட்டு, திருக்குறள் அதிகார சாரமாகிய நன்னெறித் தாலாட்டு எனப் பெயர் பெறும். (அச்சானது 1919.) பல அதிகாரங்களுக்கு ஒவ்வொரு பாடல் வீதமும், சிலவற்றுக்கு இரண்டு அல்லது மூன்றும் இவர் பாடியிருக்கிறார். மொத்தம் கண்ணிகள் 120. உதாரணப் பாடல்களைக் கீழே காணலாம்.

எல்லாரிடத்தும் அன்பாய் ஏய்தலே இல்லறமாம்
பொல்லாரை நீக்கிப் புகழ்பெறுவாய் கண்மணியே.

பொறுத்தலே நன்றாம் புகழ்வருமேற் பொல்லாரை
ஒறுத்தலும் நன்றாம் அதனை உய்த்துணர்ந்து
செய்கிளியே.

கொல்லான் புலாலை யுண்ணாக் கோதில்தவத்
தானைஉயிர்
எல்லாம் தொழுதுநின்று எத்துமே கண்மணியே.

செல்வம் அறிவுகல்வி சீராற்றல் ஆண்மைகளால்
வல்லபெரி யார்துணையை வாயறிந்து சொல் கிளியே.

துன்பத்துக் காரே துணையாவார் நம்முடைய
அன்புக் குரியநெஞ்சம் ஆகாக்கால் கண்மணியே.

இ. வாய்மொழி வழக்கு

சென்ற நூற்றாண்டின் இறுதியில் பலவர் பலர், பெண்கள் உண்மையிலேயே குழந்தையைத் தொட்டிலிற்கிடத்தித் தாலாட்டுவதற்கென்று பலவகைப் பாடல்கள் செய்துள்ளார்கள். லாலி, கும்மி, ஊஞ்சல் முதலியனவாக இவை அனேக வகை. அவற்றுள் தாலாட்டும் ஒன்று. தெரிந்த வரையில் இவ்வகையான சில முக்கியமான தாலாட்டுப்பாடல்களின் மாதிரியைப் பின்னே காணலாம்.

சுந்தர் தாலாட்டு

(19ஆம் நூற்றாண்டு. 32 கண்ணிகள். இனிமையான சொல்லமைப்பு, ஆசிரியர் பெயர் அறியக் கூடவில்லை .)

குமரா உனைத்தொழுவேன் குன்றெறிந்த வேல்முருகா
அமராபதிகாக்கும் ஆறிரண்டு தோளானோ!

கட்டு வடமசையக் காலசைய வேலசைய
முத்து வடமசைய முன்வந்து நின்றனோ!

குயில்கூவ மயிலாடக் கோவில் திருச் சங்கூத
அழகான மயிலேறி உலகாள வந்தானோ!

வருண மயிலேறி வள்ளியம்மை தன்னுடனே
அருணகிரிக் கோபுரத்தை அஞ்சலாய் நின்றானோ!

நினைத்த இடந்தோறும் நீலமயி லேறி வந்து
மனத்துக் கவலையெலாம் மாற்றும் பெருமாளோ!

ஸ்ரீராமர் தாலாட்டு

(31 கண்ணிகள், ராமசரிதத்தை வரலாறாகத் தாலாட்டில் உரைப்பது, 19ஆம் நூற்றாண்டு. இதில் பல பாடங்கள் இருப்பதால், வழக்கில் அதிகம் இருந்ததென்று யூகிக்கலாம்)

தெள்ளுதமிழ் கொண்டாடச் சீரான தசரதற்குப்
பிள்ளைவிடாய் தீர்த்த பெருமானைச் சொன்னாரோ.

வீராதி வீரனோ வேந்தர்சூடாமணியோ
சீராமன் என்னும் திருநாமம் பெற்றானோ.

அலைகடல்சூழ் வையகத்தே ஆரும் அசைக்கஒண்ணாச்
சிலையை வளைத்தொடித்துச் சீதை மணம் செய்தானோ.

பத்து மணிமுடியும் பத்திரண்டு திண்கோளும்
தத்திவிழ எண்த தடம்பெரிய சேவகனோ

சீராம ராமனோ சீதை சிறை மீட்டவனோ
பேரால் பெரியவனோ பேருலகை ஆண்டவனோ.

சிதம்பரர் தாலாட்டு

(19 நூற்றாண்டு 30 கண்ணிகள்)

தானந் தழைக்கத் தரணியுள்ளோர் ஈடேற
ஆனந்தத் தாண்டவமாய் ஆடும் சிதம்பரனோ

வெண்ணலே வெண்மதியே வெண்குடையைத் தில்லைநகர்க்
கண்ணலுடன் கூடிவிளை யாடவா அம்புலியே

உம்பர் பெருமானே உமையாள்தன் நாயகனே
செம்பொன் மணிமன்றில் சிதம்பரரே கண்வளரீர்

பாலனென்று மார்க்கண்டன் பத்தி தனையறிந்து
காலன் தனையுதைத்துக் கால்கள் சிவந்தானோ

தேவி சிவகாமியுடன் சிதம்பரரே கண்வளரீர்
கோவில் பரிசனமும் கூடவே கண்வளரீர்

(இது முயன்று செய்த தாலாட்டாயிருப்பினும், சில நயங்கள் பொருந்தியிருக்கக் காணலாம்.)

குமரவேள் தாலாட்டு

(19 ஆம் நூற்றாண்டு 51 கண்ணிகள் எவ்வுளூர் ராமசாமிச்செட்டியார்)

காலின் மணிகள் கிண்கிணிகள் கல்லெனநன் கோலமிட
வேலும் அரன்தன் எண்டோள் ஏறிவளை யாடுமன்றோ

நாலா ரணம்பரவு நாரா யணனளித்த
வேலாயுதமெந்தும் வீரப்ர தாபமன்னோ

வீரமிகு தாருகனார் வெற்பாகக் கண்டுவைவேல்
சோரமற விட்டுத் தொளைத்துவெற்றி கொண்டவனோ

அன்பிற் புகழ்செல் அருணகிரி நாதர் தமக்கு
இன்பமைநற் பேறளிக்கும் ஏர்ப்பரங்கி ரிக்கரசோ

வன்பிணிதாரித்திரம்பேய் மாமலடு கூன்செவிடு
துன்பூமை நீங்கியுய்யத் தூய்வரந்தந் தாள்பரனோ

சிறுத்தொண்டர் வில் பாட்டு

(19 ஆம் நூற்றாண்டு)

ஆராரோ ஆராரோ ஆணரசே ஆராரோ
சீராரும் எங்கள் குல தீபமேநீ ஆராரோ

சீர்மேவு மாமணியே தேடக்கிடையா அன்னமே
பார்மேவும் கண்மணியே பாலகனே கண்ணுறங்காய்

வர்ணமணித் தொட்டிலிலே வாய்த்த மெத்தை மீதிலேநீ
கட்டிக் கரும்பே என்கணுவில்லாச் செங்கரும்பே

ஆலைக்கரும்பே என்றன் ஆரமுதே கண்ணுறங்காய்
அன்னக்கொடி பறக்கும் அன்பனது மேடையிலே

மன்னுதர்மம் செய்துவரும் மன்னவரின் புத்திரனே
மார்பிற் பதக்கமின்ன மகர கண்டியார்ந்து மின்ன

ஐங்கலப்பூ மெத்தையிலே ஐயனே நீ கண்ணுறங்காய்
பிள்ளையில்லை என்று சொல்லித் தில்லைவனம் போய் முழுகி

மைந்தரில்லை என்று சொல்லி வானவரைத் தானோக்கி
வருந்தித் தவமிருந்து பெற்றெடுத்த கண்மணியே

பிள்ளைக்கலி தீர்க்கவந்த சீராளா கண்ணுறங்காய்

ஆண்பிள்ளைத் தாலாட்டு

(19 ஆம் நூற்றாண்டு 52 கண்ணிகள் எவ்வுளூர் ராமசாமிச் செட்டியார்)

கின்னரி வாசிக்கக் கிளிகளுடன் பூவை கொஞ்ச
வன்ன மணித் தொட்டிலிலே வாழ்வேநீ கண்வளராய்

பிள்ளைக் கலிதீர்க்கப் பெருக்கமுடன் வந்துதிக்க
வள்ளலே திவ்ய மரகதமே கண்வளராய்

அக்காள் அடித்தாளோ அம்மான்மார் வைதாரோ
மிக்காகத் தேம்புவதேன் வித்தகனே கண்வளராய்

வாச மலரெடுத்து வாசிகையாகத் தொடுத்து
நேசமுடன் மாமிதந்தாள் நித்தலமே கண்வளராய்

ஓசைக் குயில் கூவ உவந்து மயில் கூத்தாட
நேசக் கிளிகள் கொஞ்ச நிலைவிளக்கே கண்வளராய்

பெண்பிள்ளைத் தாலாட்டு

(19 ஆம் நூற்றாண்டு. 30 கண்ணிகள். ஆசிரியர் எவ்வுளூர் ராமசாமிச் செட்டியார்)

மண் பிசைந்தே உண்டநெடு மால்மயங்க வந்தமின்னே

கண்பிசைந்தே உள்ளம் கலங்குவதேன் கண்வளராய்

அத்தான்வந் தேசினரோ ஆகடியம் பேசினரோ
எத்தால் மனவருத்தம் எந்திழையே கண்வளராய்

ஓடாத மானே உவட்டாத செந்தேனே
நீடாழி சூழ் புவியோர் நித்தியமே கண்வளராய்

பொற்றா மரைமேவும் பொன் அனமே மின்இனமே
நற்றாமம் சூடும் நவமணியே கண்வளராய்

செம்பவள வாயார் தினமும் புகழ்ந்துரைக்கும்
விம்பவள மேவும் விதுகமுகத்தாய் கண்வளராய்

நூதன பிள்ளைத் தாலாட்டு

(20 ஆம் நூற்றாண்டு தொடக்கம், 39 கண்ணிகள். சிறுமணவூர் முனிசாமி முதலியார். இவர் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பாமர் மக்களுக்குவப்பான சிறு பாடல்கள் பல புனைந்தவர்)

கொட்டி வைத்த முத்தே குவித்தநவ ரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே கண்மணியே கண்வளராய்

நித்திரைசெய் நித்திரைசெய் நெடிய புவி மன்னவனே
சித்திரப்பூந் தொட்டிலிலே சிகாமணியே நித்திரைசெய்

அத்தை அடித்தாளோ அமுதூட்டும் கையாலே
சற்றே மனம் பொறுத்துச் சந்திரனே கணவளராய்

கோட்டை அதிகாரி கொடிக்காரர் உங்களம்மான்
கேட்டதெல்லாந் தருவார் கிஞ்சுகமே கண்வளராய்

பொன்னால் எழுத்தாணி பொற்பமைந்த ரட்டோலை
சின்ன அண்ணாகொண்டுவந்தார் சிறுபொழுது கண்வளராய்.

★ ★ ★