பாரதிதாசன் தாலாட்டுகள்/திராவிட அன்னை ஆண்குழந்தை தாலாட்டு
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ
சீராகும் இன்பத் திராவிடனே
எங்கரும்பே
ஆரா அமுதே அன்பேநீ
கண்வளராய்.
ஆரியர்கள் இங்கே அடிவைக்கும்
முன்னே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித்
திராவிடரின்
பேரர்க்குப் பேரன் பிள்ளாய்நீ
கண்ணுறங்கு!
சேரஅரிதான செல்வமே
கண்ணுறங்கு.
வெண்தா மரையில் விளையாடும்
வண்டுபோல்
கண்தான் பெயரநீ என்ன
கருதுகின்றாய்?
பண்டைத் திராவிடத்தின் பண்பு
குலைக்க இனி
அண்டைப் பகைவர் நினைப்பர் எனும்
ஐயமோ ?
தொண்டு விரும்போம் துடைநடுங்கோம்,
எந்நாளும்
சண்டை இட்டுத் தோற்றதில்லை தக்க
திராவிடர்கள்
எண்திசையும் நன்றறியும் அன்றோ
இனிக்கும் கற்
கண்டே கனியே எங் கண்மணியே
கண்வ ளராய்.
தங்கம் உருக்கித் தகடிட்டுப்
பன்மணிகள்
எங்கும் அழுத்தி இயற்றியதோர்
தொட்டிலிலே
திங்கள் திகழ்ந்ததெனும் வெண்பட்டு
மெத்தையின் மேல்
மங்கா உடல் மலரும் வாய்மலரும்
கண்மலரும்;
அங்கங்கு அழகுசெயும் ஆண்அழகே
கண்வளராய்
எங்கள் மரபின் எழில் விளக்கே
கண் வளராய்!
குயில் 1947