பாற்கடல்/அத்தியாயம்-4
4
நான் சிறுவனாயிருக்கையில் ஒருசமயம் சென்னையில் இருந்து லால்குடிக்கு வந்து இறங்கியதும் அன்றே, கேட்கப்போனால் அப்பவே என்று நினைப்பு - என் தகப்பனாரும் நானும் கோயிலுக்குச் சென்றோம். அம்மன் சன்னதியுள் நுழைந்ததுமே அண்ணாவுக்குக் கண் மல்கிவிட்டது. நாத் தழுதழுக்க:
”ராம், லால்குடியில் நம்முடைய ஒரே சொத்து இந்தக் கோயில்தாண்டா, பெருந்திருதாண்டா” அவர் சொன்னது இன்னும் மறக்கவில்லை. இன்னும் எனக்குத் தென்புதான்.
ஆனால் அந்த வயதில் முழுக்கப் புரிகிறதா? ஏதோ தலையாட்டுகிறோம். மறந்துவிடுகிறோம். பிறகு ஏதோ ஒரு நமுநழுப்பு, சந்தேகிக்கிறோம். அத்துடன் சண்டை போடுகிறோம். மறுக்கிறோம். சலிக்கிறோம். பிறகு அடி மேல் அடி விழ, நேரத்துக்கு நேரம் பதமாகி, மெதுவாகி, மிருதுவாகி, உணர்ந்து உருகி, அன்று சொன்னதுதான் இன்றுவரை, என்றுமே நம்மைக் காக்கும் மந்திரம், தாங்கும் தென்பு, நம் தஞ்சம் என்று தெரிகிறோம்.
நாஸ்திகம், ஆஸ்திகம், ஸம்வாதம், இஸங்கள் எல்லாம் கிளம்பி, தலைவிரித்தாடி, எல்லாவிதமான எதிர்மறைகளின் கடையலில் எல்லாம் ஒரு மறையெனும் அமுதம் தோன்றுகையில் என் பாற்கடலின் மறுபெயர் 'பட்டுத்தெறி' என்று புரிந்துகொண்டேன். புரிந்துகொண்டேயிருக்கிறேன்.
கனாக் கண்டாற்போல் ஏதோ நிழலாடுகிறது. நினைப்பில், பெங்களூரில் அண்ணா வேலை பார்த்த போது யானைக்குட்டி மாதிரி இருப்பார். அந்தநாள் பள்ளிக்கூட வாத்தியாரின் அங்கி, தலையில் டர்பன்; கழுத்துவரை மூடிய கோட்டு; பஞ்சகச்சம்; கம்பீரத் தோற்றம். எனக்கு அவரிடம் ஒரு திகைப்பு. வேட்டியில் ஒரு துளி அழுக்குக்கூடச் சேராது. கரையோரத்தில் கூடக் கிடையாது. கட்டிக்கொண்டதற்கு அடையாளம் லேசான கசங்கல். அதெப்படி? அந்தநாள் வெளுப்பா, மனிதனின் தன்மையா?
விதிப்பயன், பெங்களூர் வாசம் முடிந்து, சென்னைக்கு வந்ததும் ஆஸ்துமாவில் மாட்டிக் கொண்டு எலும்பும் தோலுமாகிவிட்டார். முகம் சுண்டி, உதடுகள் கசந்து, வயிறு முதுகோடு ஒட்டி, இந்தத் தோற்றம் நினைப்பில் பதிவாகத் தெரிகிறது. சென்னையில் இனி இருந்தால் ஆளைக் காண முடியாது என்று டாக்டர் பயமுறுத்தி அண்ணாவையும், அம்மாவையும், எங்களையும் கிராமத்துக்கு விரட்டிவிட்டார். காஞ்சிபுரத்துக்கு மூன்று மைல் தூரத்தில் ஐயன்பேட்டை கிராமம். இன்று அது கிராமமில்லை, நான் பையனாகி வளர்ந்து அறிந்த கிராமம் நாட்டிலேயே இனி கிடையாது எனத் தோன்றுகிறது.
உடலும் நொந்து, வேலை சரிந்து, மனம் நொந்து....
“என்னுடைய ஆஸ்தி என் குழந்தைகள்தான்.”
பரமசாது. சாது என்றால் அசடு என்கிற இந்நாள் அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. உள்ளும் புறமும் ஒன்று.
திலோமம் செய்து, ராமேஸ்வரம் போய்த் தவங்கிடந்து பெற்ற பிள்ளை நான். ஆகவே, பெரியோர்களின், பெற்றோர்களின் தனி ஆவல்கள், ஆசிகள், ஆசைகள், பாசங்களின் ஆவாஹனத்துக்கிடமாவதில் தனிப்பேறு இல்லையா?
அண்ணாவுக்குப் பிரியமான இன்னொரு சொல்: ”கடந்த ஞானியரும் மறப்பரோ மக்கள்மேல் காதல்?”
“ராம்!”
தசரதர் ராமனை ‘ராமா’ என்று அழைத்தாரா, ’ராம்’ என்று அழைத்தாரா?
இப்பவும் அழுகை வருகிறது. பயன்! நானும் கிழமாயாச்சு.
பின்னோக்கில் நினைவோட்டம் கற்கண்டு நேரம்.
நல்ல சமயங்களின் நினைப்பில் என்னை அவ்வப்போது இழக்க நேர்ந்தாலும் அவைதான் அமுத நேரங்கள். உண்மையாகக் காத்திருந்த வேளைகள், இவை என் சொந்த நேரங்கள் அல்ல நம்ம நேரங்கள்.
தருணங்கள் திரும்பி வாரா.
ஆனால் பெருந்திரு காத்திருப்பாள். தருணங்களின் மகிமையை அவள் அறிவாள். அவளே, அவளும் அதுதானே!
ஸன்னதியுள் நுழைகையிலேயே ஒரு அமைதி மேலே படர்வதை யாரும் உணர முடியும். ஏலக்காய் வாசனை போல் லேசாகச் சோகம் கலந்த அமைதி.
“பாட்டி! இதோ வந்திருக்கேன்”
தன் மக்களுக்கும், பேரன் பேத்திமார்களின் வம்ச வம்ச முறையீடுகளுக்கும், உலகத்தின் துயரங்கள் அனைத்துக்கும் சுமைதாங்கி ப்ரவிருத்த ஸ்ரீமதி ஆள் உயரத்துக்கு அம்பாள் நிற்கிறாள். சாந்த ஸ்வரூபி.என் பாட்டிக்குச் செல்லமாக நான் ‘பெரிய தீவட்டி’ என் தம்பி ‘சின்ன தீவட்டி’. அவளுடைய கடைசிப் பிரயாணத்தில் தீவட்டி பிடித்துச் சென்றது நினைவு வருகிறது.
பெற்றோர்கள்கூட குடும்பச் சூழ்நிலை காரணமாக மிரட்டுவார்கள்.
”மத்தவாளுக்கு வேணும். உன் வீதம் ஆச்சோன்னோ? உனக்கு மட்டும்தான் வயிறா? பிறத்தியார் பங்குக்கு இப்படி அலையாதே!”
ஆனால் பாட்டி, தன் பங்கையும் பேரக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவாள். பாட்டி என்கிற சத்தியமும் அதுதான். பெருந்திருப் பாட்டியும் அப்படித்தான்.
தாராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?
சந்தர்ப்பக் குறைவில் தன் குழந்தைகளுக்கு அந்த நாள் மறுத்ததைப் பின்னால் மனமுவந்து ஈந்து, பிராயச்சித்தம் அடைவதற்குத்தான் பாட்டி நிலை.
என் குலதெய்வமும் கன்னியாகுமரியும் என் இலக்கிய வாழ்வை, என் எழுத்தை பாதித்தவர்கள்.
மிகவும், ‘கொஞ்சம்’ அடைமொழிகளை, வேணுமென்றே விலக்குகிறேன். பாதிப்பு என்கிறபோதே அதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. பாதித்தது பாதித்ததுதான். நெருப்பின் ‘சுறிலு’க்குகூட குறைச்சல் உண்டா? அல்ல ‘சுறீலு‘க்குப் பழகிப்போவது என்பதும் உண்டா?)
பெருந்திரு நெஞ்சை உருக்குகிறாள் என்றால் கன்னியாகுமரி நெஞ்சை உலுக்குகிறாள்.கன்னியாகுமரி மேல் காணாமலே காதல் கொண்டு விட்டேன். என் பன்னிரண்டு வயதிலிருந்தே கன்னியாகுமரிக்குப் போய்வந்த உற்றார் உறவினர், இரவு வேளைக்கு வாசல் திண்ணையில் ஒதுங்கிய பைராகிகள், யாத்ரிகர் கதை சொல்லி விசிறிவிட்ட வியப்பு, சென்னைக் கடற்கரையின் மாலைக்காற்றில் அந்திவானத்து வர்ணஜாலங்களில், காலை வேளையில் கடல் விளிம்பில், சூரியனின் உதயவாசலில் கரையோரம் ஓடத்து நிழலில் மணலில் சாய்ந்தவண்ணம் சிந்தனையில் கொழுந்துவிட்டு, கண்டவர் கையோடு கொண்டு வந்த குங்குமம், கிளிஞ்சல் சரம், சாயமண், என் கனவிற்குக் கலவை கூட்டி, ஏக்கமாய்க் கட்டி அதுவே அதுவாய்ப் பந்தல் படர்ந்தது.
கன்னியாகுமரி, பேரிலேயே, பேருக்குள்ளேயே ஏதேதோ நீரோட்டங்கள் விளையாடுகின்றன. அவள் குமரி, நான் குமரன்.
கடலோரம் கோயில் (எல்லாம் அப்போ சொல்லக் கேட்டவைதான்). பாறை, பாறைகள், நெஞ்சிலும் பாறைகள், பாறைகளின்மீது அலைகளின் மோதல், சொல்லுள் அடைபடாது, என் கற்பனைக்கே சொந்தமான கதைகள், கவிதைகள், கதையின் நிழல்கள், நீழல் களின் காதைகள், கமகமப்புகள், கமகங்கள், இம்சைகள் சொல்ல முடிந்தவை. முடியாதவை, பேச்சில் முடியாதவை, முடிந்தாலும் பங்கிட்டுக் கொள்ள மனம் வராதவை - சொல்லச் சொல்ல இல்லை, தலை சுத்தறது.
இதை இந்த இடத்தில் சொல்லக் காரணம், மனோவாக்காய் சக்திகள் நம்மைப் பிடித்தாட்டும் வேதனையைச் சொல்லி ஆற்றிக்கொள்ள முயலுகிறேன். இந்த அவஸ்தையேதான் உயிரின் இயக்கமே. ஆனால், இதிலும் எதோ ஒரு செம்மை, கோலத்தின் ஒழுங்கு, ஏற்பாடு தெரிகிறது. கோலம், அதன் புள்ளிகள், புள்ளிகளைக் கட்டிய கோடுகள், கோடுகளின் இழைவு, இத்தனைக்கும் அடிக்கோடு, ஒரு கோடு எங்கே ஆரம்பித்தது. அதுவே ப்ரக்ஞையாக நுனியென்று இழுக்கப் பார்த்து வகிடுகள் ஏதேதோ பிரிகின்றன. கலை, சுயப்ரக்ஞை, தருணம், அவசம், பரவசம் அவரவர் கண்டது அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி.
இந்தக் கூச்சங்கள், யாருடைய தனி உரிமையல்ல, எல்லோருக்கும் சிருஷ்டி ஈன்ற செல்வம். அவரவர்க்கு அவரவர் பங்கு சேர்ந்துகொண்டுதாணிருக்கிறது. என் பங்கு என் வழியில் என் எழுத்து. என் சொல்லில் ஜீவனின் பரம்பரையின் பெருமையைப் பறைசாற்றல். நம் பெருமை. நீயும் நானுமிலாது நாம் இல்லை. அதனாலேதான், பெருந்திருப் பாட்டி மடியில் தவழ்ந்து விளையாட உன்னையும் அழைக்கிறேன்.
பாட்டி, அப்பா, அம்மா, உடன்பிறந்தவர், மனைவி, குழந்தை, பெண்டிர், பேரன், பேத்தி - குடும்பத்தைப் பற்றியே நான் எழுதுகிறேன் என்று எனக்கு ஒரு பேர். அதுவே ஒரு குற்றச்சாட்டைப் போலவும் சில சமயங்களில் த்வனிக்கிறது. எதற்குமே லேபிள் ஒட்டி விடுவதில், அந்த லேபிலினுள் யாவற்றையும் அடக்கி அல்லது அடக்கப் பார்ப்பதில் நமக்குத்தான் என்ன ஆர்வம் !
அவள், டப்பாமேல், கொட்டை எழுத்தில் துவரம் பருப்பு என்று எழுதி ஒட்டியிருப்பாள்.
மாதத்தில் ஒருவேளை, அரைவேளை அவன் ஆபீஸ் அவசரத்தில் சமைக்கவும் நேரும்போது துவரம்பருப்பு டப்பாவைத் திறந்தால், அதில் வேறு எதோ சிறுபருப்பு இருக்கும். பாசிப்பருப்பா? உளுத்தம்பருப்பா! குழப்பம், தவிப்பு, கோபம். வந்ததய்யா புதுக்குடித்தனத்தின் முதல் குஸ்தி! சீட்டு ஓட்டலின் தமாஷ் இதுதான்.குடும்பத்தின் படிப்படியான விரிவாகத்தான், எனக்கு வயது ஏற ஏற உலகத்தைக் கண்டுகொண்டேயிருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு, எனக்குக் குத்தியிருக்கும் முத்திரையில் பெருமை கொள்கிறேன்.
அன்றொரு நாள், ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டுக் குழந்தை ஓடிவந்து, “சேப்புத் தாத்தா!“ என்று குழறிக்கொண்டு என் கழுத்தைக் கட்டிக் கொண்டான். என்னை யாரென்று நினைத்தானோ, எதுவும் முன்பின் நினைக்காமலே அப்படிச் செய்யத் தோன்றிற்றோ? அறியேன்.
அவன் தாய் - “எங்கள் முரளிக்கு முக வேற்றுமை கிடையாது. யாரோடும் ஒட்டிக்கொண்டு விடுவான்.”
இதுபோன்ற அடையாளங்களுக்கு ஆதாரம் இல்லை என்று நான் நினைக்கமாட்டேன். உயிரின் உள்சரடு எங்கெங்கோ எப்படி எப்படி ஓடுகிறது என்று நாம் என்னத்தைக் கண்டோம்? உலகத்தை ஒரு குடும்பமாக என் எழுத்தில் நான் உழப்ப முயல்வதில் புதுமைகூட இல்லை.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறேதும் அறியேன் பராபரமே.
ஸர்வே ஜுனாஸுகினோ பவந்து: Love thy neighbour as thyself.சமீபத்தில் என் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனம், என்னைப் பற்றிய ஒரு பாராட்டு - படித்தேன். இரண்டிலும் என்னைத் தமிழ்ச் சிறுகதை உலகுக்குப் பிதாமகர் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஏன், சில வருடங்களுக்கு முன் என்னை இப்படி விளித்து ஒரு கவிதையே, ஒரு சின்னப் பத்திரிகையில் வெளி வந்திருந்தது. என் நரைத்த கரடிப் புருவங்கள் காட்டும் கரடிவித்தை!
தேசப்பிதா, குடும்பத்துக்குப் பிதாமகன் - ஆனால் சிறுகதைக்குப் பிதாமகன்? எழுத்துக்கும் வயது வகுப்பது உண்டா என்ன?
அப்படிப் பார்த்தால், என்னிலும் அப்பவே வயதில் மூத்தோர் - ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.ரா- இன்று நம்முடன் இருக்கும் பி.எஸ். ராமய்யா - நினைப்புக்கு உடனே வரும் பெயர்கள் இவை. இன்னும் நான் அறியாத பெயர்கள் எத்தனையோ - இவர்களை நாங்கள் பிதாமகர்கள் என்றா அழைத்துக்கொண்டிருந்தோம்? புதுமைப்பித்தன் எழுத்தில் இன்னும் சீற்றம் சிந்துகிறது. ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. எழுத்தில் பட்டுக் கயிற்றின் முறுக்கேறிய உரம் மின்னுகிறது.
இவர்களுக்கும் முன்னால் வ.வே.சு. ஐயரின்‘ குளத்தங்கரை அரசமரத்’தைப் படிக்கையில் காதலின் இளமை ஏக்கம் அப்படியே மூட்டம் கவிகின்றது.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதடா...
தீயில் இப்பவும் சுறீல்'
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப்பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...
காலத்தை அழித்துக்கொண்டு காட்சி கண்முன் எழுகிறது.
எழுதி எத்தனை வருடங்கள் ஆயினவோ?
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சொல்ல வருவது யாதெனில், எனக்குத்தான் வயதாகிக் கொண்டிருக்கிறது.
(வயதுடன் இனி நான் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறதா? மலைப்பாம்பின் படிப்படியான தழுவல்.)
ஆனால் எழுத்துக்கு வயோதிகம் கிடையாது. எழுத்துக்கு வயதை எழுதுவதற்கு பதிலாக, அதை, ஒலிம்பிக் விளையாட்டு வீரன் ஏந்தி ஓடிவரும் தீவட்டியுடன் ஒப்பிட எனக்கு ஆசையாயிருக்கிறது. ஒரு திரியிலிருந்து மறு திரி அடுத்தடுத்து ஏற்றிக் காணும் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில் லக்ஷ தீபமாகப் பார்ப்போமே! எல்லாமே, காலத்துக்குக் காலம் வழிவழியாக ஏற்றிய உருவுக்கேற்பத் தோய்ந்திருக்கும் வண்ணம் தானே!
ஒன்று, எனக்கு இந்த மகத்தான பதவியைக் கொடுத்தவர்களுக்கு என் எழுத்தின்மேல் அவர்களுடைய பெரும் அபிமானம்தான் காரணம் என்பதில் எனக்குத் துளிகூட ஐயமில்லை. இதுபோல நான் முகமறியாத வாசக அன்பர்களின் ஆசிபலம், எண்ண பலம் இன்றுவரை என்னில் ஊறி என்னை வளர்க்கும் பலம் என்பது என் பெருமிதம். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமலே பரஸ்பர உறவு வளர்க்கும் ஆன்ம சக்தி, எழுத்தைக் காட்டிலும் எது? இசை, ஓவியம் போன்ற கலையின்பங்கள் மற்றவர்க்குச் சேர அதனதற்குரிய புலன் நுகர்ச்சி தேவைப்படுகிறது. எண்ணத்துக்கு அடுத்தது எழுத்துதான்.
எழுத்தறிவித்தவன் இறைவனாகும். பரம்பரையின் அழியாச்சுடர். அதற்கு நான் பிதாமகனா ? அடியம்மாவ்!
நாம் யாவருமே அமுதகலசத்தின் வம்சவழி. அழியாத்தன்மைக்குக் குறிக்கப்பட்டவர்கள். தெரிந்தோ, தெரியாமலோ, அழியாத தன்மைக்கு அர்ப்பணமானவர்கள். தெய்வமே ஒரு குறிக்கப்பட்ட பொருள்தான். தட்டிவிட்ட சாரம்தான் நம்மை வழி வழியாகத் தாங்கிவரும் தவபலம்.
இந்தத் தர்க்கப்படி, கோபுரத்தை பொம்மைதான் தாங்குகிறது.
"தட்டிவிட்ட சாரமா? அது என்ன?” - உறுமல் கேட்கிறது.
நம்பிக்கைதான். ஏதோ ஒன்றன்மேல் நம்பிக்கை, அது தெய்வமோ, குழந்தையோ, நம் மூதாதையர் நமக்காக வகுத்துவிட்டுச் சென்றிருக்கும் வழியோ, அசட்டு கெளரவமோ, வறட்டு ராங்கியோ...
அந்த நாளில் கண்ணன் கோவர்த்தனகிரியைச் சுண்டுவிரலில் ஏந்தினான் - இது கண்ணன் மேல் நம்பிக்கை.
நடராஜன் ஒற்றைக்காலில் கட்டைவிரல் நுனியில் தான் ஆடுகிறான். அந்த வேகமே சமயங்களில் தாங்க முடியாமல் குவலயமே குலைகிறது. பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள்) - இது நடராஜன் மேல் நம்பிக்கை.
ஒன்றையொன்றன் ஈர்ப்புசக்தியின் கடையலில் கிரஹங்கள் கவிழாமல் அந்தரத்தில் இயங்கும் விஞ்ஞான உண்மையில் மேற்கூறிய இரு நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் நிரூபணையாகின்றன.
நம்பிக்கைமேல் நம்பிக்கை, நம்பிக்கையின்மைமேல் நம்பிக்கை - ஊம், ஆமாம், ஜாபாலி நியாயத்துக்கும் நம் சித்தாந்தம் இடம் கொடுக்கிறதே!
நான் தொட்டதெல்லாம், இப்பவே, அத்தனையும் எனக்கே - என்கிற கொள்கையில்தான் மோசம் போகிறோம். சுயநலம்தான் நம்பிக்கை துரோகத்துக்கு வித்து. மாஞ்செடி முளைக்கச் செய்தல், கழைக்கூத்தாடி நமக்குக் கொஞ்சநேரம் பொழுது போக, நம்மிடமிருந்து காசு பறிக்க, காட்டும் கண்கட்டு வித்தையோடு சரி.
நம்பிக்கை எங்கள் பாட்டன் சொத்து. நானே எனக்குச் சொந்தமல்ல - நான் எங்கள் பாட்டன் சொத்து. நான் என்றால் நீயும்தான்.
தொன்றுதொட்ட இந்த வாழையடி வாழை நம்பிக்கையின் அடிவழியில் என் தகப்பனார், இந்தக் கோயில், பெருந்திருதான் நம் சொத்து என்று உருகியதில் என்ன ஆச்சரியம் ?
இந்தத் தட்டிவிட்ட சாரம்தான் நம் சமுதாய பலம். இதிஹாஸ காலத்திலிருந்து ஓங்கி வளர்ந்திருக்கும் அதன் பண்பு. கட்டடம் எல்லாமே.
பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம். பக்குவம் பார்க்க எனக்கு ஒரு சோறு எங்கள் குடும்பம் – என்றால் என்ன? நான்தான். ஒரு சோற்றைப் பதம் பார்க்கும் திறன்தான் எனக்கு எழுத்து. நான் காணும் அகண்ட தரிசனத்துக்கு, எழுத்துதான் எனக்குப் பலகணி.
பலகணிப் பார்வைதான் - முழுப் பார்வையல்ல. ஆனால் இதுவே எவ்வளவு பெரும் பேறு!
வாசகன் எழுத்தாளனை, அவன் எழுத்தைப் படித்து அதன்மூலம் அவனை இனம் கண்டுகொள்ளவும் முடிந்ததென்றால் - அது என்ன சாதாரண வாய்ப்பா?
‘கடினமான உழைப்பு’ சொல்லில் வாய்மை (The true word) கொஞ்சம் அதிர்ஷ்டம் - இவைகளின் கூட்டுதான் வாசகனுக்கு எழுத்தாளனைத் தெரியப்படுத்தும் எழுத்து என்கிறான் ஹெமிங்வே.
என் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் என் சோதர சோதரிகளே, என் குழந்தைகளே, நான் அறியாமலே என்னை நினைப்பவர்களே, என்மேல் நல்ல எண்ணம் கொண்டு, நான் அறியாமலே என்னை வளர்ப்பவர்களே, உங்கள் அனைவரையும் தழுவிக் கொள்ளக் கைகள் எனக்கில்லையே? என் தாய்மார்களே, தாதையர்களே, உங்கள் பாதங்களில் பொருத்தவே - சிரங்கள் எனக்கில்லையே! நான் அர்ச்சுனனாகவேயிருக்கலாம். ஆனால் இந்தச் சமயத்துக்குச் செயலற்ற பிருகந்நளையாக நிற்கிறேனே! எனக்கு நமஸ்கரிக்கப் பிடிக்கும். தன் முழுமையின்மையில் தவிக்கும் உயிர் ஏக்கத்தின் விசுவரூபத்தை யாரேனும் ஒருத்தர், ஒரு சமயத்துக்கு யாரென்றாலும் நீதான், அவள் என்றாலும் நீதான், அவன் என்றாலும் நீதான், உணர முடிந்தால், நீதான் என் பெருந்திரு.