பாலைப்புறா/அத்தியாயம் 10

ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒன்றான கலைவாணியின் வீட்டில், அன்று ஒரே பெண்கள் கூட்டம். ஆனாலும், வெள்ளையன்பட்டி மகளிரை விட வித்தியாசமான கூட்டம். தரையில் உட்காருவது தகுதிக்கு குறைந்த காரியம் என்பதால், சோபா செட்டில் இருந்த கூட்டம். அதில் இடம் கிடைக்காதவர்கள், தத்தத்தமது வீடுகளில் இருந்து நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். கண் வெட்டும் அளவுக்கு நகை நட்டு இல்லாதவர்கள்… ஆனால், ஒவ்வொருத்தியின் கையிலும் ஒரு கடிகாரம்… கண்களில் மை… உதடுகளில், லேசான சாயம்… முதுகை முழுமையாக, மூடிய மாமிகள்… தோள் திரட்சியைக் காட்டும் கட்சோளிகள்…

சமையலறையில், வேலைக்காரப் பெண் மீனாட்சியுடன், பம்பரமாய் இயங்கிய கலைவாணி, பெரிய எவர்சில்வர் தட்டில், தொட்டால் சுடும் பக்கோடாக்களை கொண்டு வந்து, டிரேயில் வைத்தாள். அந்தப் பெண்கள் தின்று முடித்தால், டீ கொண்டு வரலாம் என்பதற்காக, அவர்களின் தின்னும் வேகத்தையும், பக்கோடாக்கள் தீர்த்து கொண்டிருக்கும் வேகத்தையும், பெருக்கல் போட்டு, ஒரு குத்து மதிப்பான நேரத்தை அனுமானித்தவள் போல், மீனாட்சி தேநீர் தயாரிக்க ஆயத்தமானாள். பக்கோடா தீரும் நேரமும், தேநீர் ரெடியாகும் நேரமும் ஒன்றாக அமைவதற்குரிய வகையில், அவள் தனக்குத்தானே தேநீர் தயாரிப்பு வேலையின் வேகத்தை நிச்சயித்துக் கொண்டாள்.

சமையலறைக்குள், தண்ணீர் கொண்டு வரப் போன கலைவாணியை, திருமதி. பாலா நாராயணசாமி, கையைப் பிடித்திழுத்து, பக்கத்தில் உட்கார 90 பாலைப்புறா

வைத்தாள். பிறகு அவளைப் பாராட்டுவதற்காக வாயைத் திறந்தாள்.

‘மிஸஸ்... மனோகர்’.

"என்னைக் கலைவாணியின்னே... கூப்பிடுங்க ஆன்டி!”

‘நோ... நோ... இனிமேலும் நீ பட்டிக்காடு இல்லே, சொந்தப் பேரால் கூப்பிட... இப்போ நீ ஒரு ஹவுஸ் ஒய்ப். மிஸ்ஸஸ் மனோகர்ன்னு கூப்பிட்டால்தான் ஒனக்கே கெளரவம்’...

“எப்படிக் கூப்பிட்டாலும் பரவாயில்லை... சொல்லுங்க ஆன்டி...”

‘ஒன்னை நாங்க பாராட்டித்தான் ஆகணும்... இந்த அடுக்குமாடி கட்டிடம் எழும்புன காலத்திலேயே இருக்கிறவங்க நாங்க... ஆம்புடையான் தோளுல கையைப் போட்டு அவனோட ஸ்கூட்டர் பின்னால உட்கார்ந்து போற சமயம் தவிர, மற்ற சமயத்தில... ஒன்று அடுப்படில இருப்போம்... இல்லன்னா டிவி பெட்டி முன்னால இருப்போம். டிவி பெட்டியிலே வர்ற நிழல்கள் பேர் அத்துபடி... ஆனால் அக்கம் பக்கத்து ஆத்துக்காரிங்க ஆருன்னே தெரியாது. அப்பேர்ப்பட்ட எங்களை ஒண்ணா சேர்த்த பெருமை ஒனக்குத்தான்... முத்துக்களை கோர்க்கிற நூல் மாதிரி'.

திருமதி பாலா நாராயணசாமியின் உதாரணத்தை, அவளை அறவே வெறுக்கும் திருமதி சியாமளா நாகராஜன் ஆட்சேபித்து, ஒரு திருத்தம் கொண்டு வந்தாள். வெறும் திருத்தம் அல்ல... குறும்புத்தனமான, அப்பட்டமான சூழ்ச்சி மாதிரியான திருத்தமாய்தான், அது, திருமதி நாராயணசாமிக்குப் பட்டது.

“மிஸ்ஸஸ் மனோகர். நீங்க சொல்றது மாதிரி வெறும் மாஞ்சா நூல் இல்லே மேடம்... இந்த உதாரணம் அவங்களை இன்சல்ட் செய்யுறது மாதிரி. உண்மையான உதாரணம் என்னென்னால்... மிஸ்ஸஸ் மனோகர், பொன் காசுகளை மாலையாய் காட்டும் தங்கச்சரடு... இப்படிச் சொல்றதுதான் சரியான ரெகக்ணைசன்...!”

திருமதி நாராயணசாமிக்கும், திருமதி நாகராஜனுக்கும், அங்கேயே வாய்ச்சண்டை வந்திருக்கக் கூடும். அதற்குள், அந்த வீட்டின் வெளியே உள்ள தாழ்வாரம் வழியாய், பட்டும் படாமலும் பார்த்தபடியே நடந்த திருமதி மஞ்சுளா கண்ணனை, கலைவாணி வீட்டில் இருந்தபடியே, சிவப்பழகி திருமதி எட்வர்ட் சாமுவேல் கைத்தட்டிக் கூப்பிட்டாள்.

‘மாமி... இங்கே வாங்கோ. இன்னிக்கி இந்த பூஞ்சோலை குடியிருப்பு பெண்கள் சங்கத்தை இங்கே துவங்கப் போறதாய்... எத்தனை தடவை சு. சமுத்திரம் 91

சொல்லி இருக்கேன் வரப்படாதா...’

திருமதி மஞ்சுளா கண்ணன், வரப்படாது என்பது மாதிரியே நடந்த போது, கலைவாணி ஓடிப்போய், அந்த மாமியை உரிமையோடு மடக்கி, உள்ளே கொண்டு வந்தாள். ஆனாலும் திருமதி கண்ணன், உட்காராமலேயே பேசினாள்.

‘என்னை விட்டுடு. கலைவாணி... எனக்கு இந்த சங்கமும் வாணாம் அசிங்கமும் வாணாம்’.

"மாமி. இப்படி சலிச்சிக்கிட்டா எப்படி?”

‘போன வருஷம், அடுத்த மாடில இருக்கிற என் வீட்டில, என்னோட ஒரே மகன் கெளதம். வீட்டுல இருந்து ஆஜானுபாகுவாய் போனவன்... கடலுள் நீந்தி பிணமா... வந்து சேர்ந்தான். அப்போ உதவிக்கு ஒருத்தி தலையை நீட்டல. இதைவிடக் கொடுமை, என்னன்னா எதிர் வீட்டுலே டிவி பெட்டி ஆடுது... பக்கத்து வீட்ல ரேடியோ பெட்டி பாடுது. இப்போ சொல்லு கலைவாணி... என் மனசு என்ன பாடுபட்டிருக்கும். அதனாலதான் சொல்றேன்... இந்தச்சங்கம் எனக்கு அனாவசியம்’

அங்கே உட்கார்ந்திருந்த பெண்கள் உம்மணா மூஞ்சியானபோது, கலைவாணி, திருமதி கண்ணனை, தான் இருந்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு சொன்னாள்.

‘நீங்க சொல்றது நியாயமாத்தான் படுது. நீங்க சங்க உறுப்பினரா ஆகணுமுன்னு அவசியமில்ல. ஆனால், பக்கடா சாப்பிட்டுட்டே போகலாம். டீ குடிச்சிட்டு போகலாம்...’

‘கலைவாணி... ஒன்னோட முகத்துக்காக உக்காருறேன். ஆனால் சங்கத்தில மட்டும் சேரமாட்டேன்’.

திருமதி பாலாநாராயணசாமி விளக்கமளித்தாள்.

"இப்படில்லாம் இனிமேலும் இருக்கப்படாதுன்னுதான், இந்த சங்கத்தை துவக்கப் போறோம். இனிமேல் மட்டும் பாருங்கோ... யார் ஆத்துலயாவது இப்படி ஏடாகோடமாய் நடந்தால், நாம அத்தனை பேரும் அந்த வீட்டு முன்னால போய் நிற்போம்”

திருமதி நாராயணசாமி எப்படியும் அந்தச் சங்கதத்திற்கு தலைவியாய் ஆகிவிடக் கூடாது என்பது போல், அதே வயதான ஐம்பதும், அதே கலரான ஊமத்தம்பூ நிறமும் கொண்ட திருமதி சியாமளா நாகராஜன் கண்டிப்பது 92 பாலைப்புறா

போல் கண்டிப்பாய்ப் பேசினாள். ‘மேடம்... ஒரு வீட்ல கெட்டது நடந்தாத்தான் போகணுமா? நல்லது நடந்தால் பொறாமை வந்திருமா...? ப்ளீஸ்... பீ... பாஸிட்டிவ்’

‘தெரியாமத்தான் கேட்கேன்... மிஸ்ஸஸ் நாகராஜன்! நீங்க... சங்கத்தைப் பற்றி டிஸ்கஸ் செய்ய வந்தீங்களா... இல்ல என்னோட வம்பு வழக்கடி செய்யறதுக்கு வந்தீங்களா...’

"பாஸிட்டிவ்வா... பேசுங்கன்னு சொல்றது வம்பா? மிஸ்ஸஸ் மனோகரை நாகரீகமான உதாரணத்தால பாராட்டுங்கோன்னு சொன்னது வழக்கடியா? வாட் இஸ் திஸ் ஆல் எபவுட்...”

அங்கே கூடியிருந்த முப்பது பெண்களில் இன்னும் உருவாகாத அந்த சங்கத்தின் தலைவியாய், ‘தொண்டாற்ற ஆசைப்பட்ட பத்துப் பேரில் எட்டு பேருக்கு கொண்டாட்டம். முதல் சுற்றில் நின்ற திருமதிகள் நாராயணசாமியும், நாகராஜனும் ஒருவரை ஒருவர் கேன்சல் செய்து கொண்டதில், உள்ளபடியே, மகிழ்ச்சி, இதற்குள் மீனாட்சி கொண்டு வந்த தேநீர் கோப்பைகளை எல்லோருக்கும் கொடுத்து முடித்த கலைவாணி, விருந்தோம்பல் செய்த உரிமையோடு பார்த்தாள். அந்தப் பார்வையில் வெள்ளையன் பட்டியில், அவளுக்குள் இருந்த தன் பேச்சைக் கேட்பார்கள் என்ற தன்னம்பிக்கைக்குப் பதிலாக, சரியாய் இருக்குமா என்று நினைக்கும் ஒரு மாணவத்தன்மையே அதிகமாய் இருந்தது...

‘இருநூறு பெண்கள் இருக்கிற இந்தக் குடியிருப்புல வந்திருந்ததே முப்பது பேரு’.

‘என்னை கணக்குலே சேர்க்காதே... நான் ஒன் முகத்துக்காக ஒன்னைப் பார்க்கத்தான் வந்தேன். எப்போ என் பிள்ளையாண்டான்... பிணமா வந்தானோ’

"சரி... இருபத்தொன்பது பேரு. இந்த சின்னக் கூட்டத்திலேயே நாம் இப்படி சமாத்காரமாய் பேசினால், அப்புறம், பின்னால் சேரணுமுன்னு நினைக்கறவங்களும் சேரமாட்டாங்க.”

உறுப்பினராகப் போவதில்லை என்று உறுதி மொழி எடுத்திருக்கும் திருமதி கண்ணன் ஜோஸ்யம் சொன்னாள்.

"இந்த இருபத்தொன்பதுகூட... நீ வீடு வீடாய்... போய் கதவு கதவாய், காலிங் பெல்லை அழுத்தி, கெஞ்சிக் கூத்தாடுனதால.. வந்திருக்காங்க. வேணுமுன்னாப்பாரு... அடுத்த கூட்டத்தில, லட்டர் பேட்ல பெயர் இருக்கறவங்க மட்டுந்தான் வருவாங்க..." சு. சமுத்திரம் 93

பின்வரிசையில் உள்ள ‘கட்சோளி' மோனிகா வாதிட்டாள்.

"ஒரு கூட்டம் முக்கியம் இல்ல... அதைக் கூட்டுறது யார் என்கிறது தான் முக்கியம். நம் கலைவாணி இங்கே இருக்கிறவரைக்கும்...”

"அது என்ன நீ பெர்மனன்ட் மாதிரியும்... மிஸ்ஸஸ் மனோகர் என்னமோ டெம்பரரி மாதிரியும்...”

“இதுக்குப் பேர்தான் மாமி. ஜெனரேஷன் கேப் என்கிறது...ஒங்ககிட்ட சொல்லாததை எல்லாம்... மிஸ்ஸஸ் மனோகர் என்கிட்டே சொல்லி இருக்காள். அவளோட ஆசை எல்லாம், ஹஸ்பென்டை ஊருக்கு இழுத்துட்டுப் போய், ஒரு இன்டஸ்டிரியல் யூனிட்டை போட வச்சு, அரசோட மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை...’

கலைவாணி, மோனிகாவின் ஒற்றைநபர் கருத்துக் கணிப்பை அங்கேயே மறுத்தாள்.

“நோ நோ... அப்படில்லாம் கிடையாது. ஊருக்கு போகனுமுன்னு ஒரு ஆசை இங்கே வந்த ஒரு மாதம் வரைக்கும் இருந்தது. இப்போஅப்படில்ல... இங்கேயே அதுவும் ஒங்களோடயே இருக்கணும் என்கிறதுதான் என் விருப்பம். இந்தச்சங்கத்தை இடையில விட்டுட்டுப் போக மாட்டேன்".

எல்லாப் பெண்களின் கண்களும், ஒட்டு மொத்தமாய் கலைவாணியை மொய்த்தன. கெளரவம்... பார்க்காமல், வலியப் பேசிய இவளை, இந்த நல்லவளை ஆரம்பத்தில் பாவம்... 'பட்டிக்காடு’ என்று நினைத்தது, பிறகு இந்த நாராயணசாமிகளின் ஒரே மகளான மேகலாவை, நான்கைந்து படித்த பொறுக்கிகள், கேட் வரைக்கும் கிண்டலடித்து வந்த போது, இதோ இந்த கலைவாணி, சீறிப் பாய்ந்து ‘செருப்படி படுவீங்கடா' என்று சூளுரைத்தது நினைவுக்கு வந்தன. இன்னொருத்தி, சந்தேகத்தோடும், சந்தோஷமாகவும் கேட்டாள்.

‘அப்போ ஊர்லே செட்டில் ஆகிற எண்ணத்தை விட்டுட்டியா'.

கலைவாணி, ஆமாம்... என்பதுபோல் தலையாட்டி விட்டு, பின்னர் தன்னைத் தானே நம்ப முடியாதவளாகப் பார்த்தாள். மனோகருடன் குடித்தனம் நடத்த சென்னைக்கு வந்த ஒரு மாதம் வரை, கணவனுடன்துங்கிக் கொண்டிருக்கும் போதுகூட,துக்கமும், கனவும், கலைந்து, ‘ஏய் வாடாப்பூ, ! தேனம்மா...’ என்று வாய்விட்டுக் கத்தியபடியே படுக்கையில் இருந்து அவ்வப்போது எழுவதும், விழுவதும் நினைவுக்கு வந்தன. மனோகர் இல்லாத பகல் நேரங்களில், ஊர் நினைவும், அம்மாவின் கரிசனமும், அப்பாவின் மெளனப் பாசமும், அக்காவாகிப் போன அண்ணியின் 94 பாலைப்புறா

பெருந்தன்மையும், நினைவுக்குமேல் நினைவுகளாய் அல்லாட, அவள் துடியாய் துடித்துப் போவதுண்டு. கம்மாக்கரையிலும், வயல் வெளியிலும், சுற்றோசுற்று என்று சுற்றினாலும், இங்கே காய்கறிகாரப் பையன், மூன்று சக்கர சைக்கிள் மணியை அடிக்கும் போது மட்டுமே தெருவுக்குப் போவதும், அவளைத் தனிமைத் துயராய் வாட்டியதுண்டு... இதனாலேயே இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எந்தப் பெண் முகமாவது தெரிந்துவிட்டால், இவளே அவள் வீட்டுக்குப் போவதும், தனது ஊர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பெருமூச்சு விடுவதும், 'நீங்க சொல்வதைப் பார்த்தால், எனக்கு ஒங்க ஊருக்குப் போகணும் போல தோணுது’ என்று இந்த கட்சோளி மோனிகா, சொன்ன போது, அழப் போனதும், நினைவுக்கு வந்தன. ஊர்க்காரத் தோழிகளிடம் இருந்து, பத்துப் பன்னிரண்டு கடிதங்கள் வந்தன. இவளும், உடனடியாய், வரிந்து கட்டி பதில் கடிதங்கள் எழுதி, இங்கிருந்தபடியே மகளிர் மன்றங்களை நடத்துவதுபோல் திருப்திபட்டுக் கொண்டதும், இப்போது சிறிது அபத்தமாகவே தெரிந்தது. இப்போதும், கடிதங்கள் எழுதுகிறாள். ஆனால் ஒரு கடிதத்திலேயே, எல்லோரையும் கேட்டதாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறாள். ஊரில் திருமணமான ஒரு வாரத்திற்குள், ஊரைவிட்டு அழுதழுது புறப்பட்டபோது, ஒரு பெரிய பெண்பட்டாளமே பின்னால் வந்ததும், அவளைச் சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ரயில் நிலைய அதிகாரிகளே, மாண்புமிகு பெண் அமைச்சர் செக்யூரிட்டி இல்லாமல் திடீர் வருகையை முடித்துவிட்டு திரும்புவதாக அவசரமாய் அனுமானித்து, ரயில்வே போலீசாரை அனுப்பியதும், சிரிப்பாய்ப் பொங்குகிறது. ஊர்க்காரிகளை, நன்றியோடுதான் நினைத்துப் பார்க்கிறாள், அதற்காக அந்த நன்றி பாராட்ட, ஊரில் ‘செட்டில்' ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லையே...

இதற்குள், திருமதி பாலா நாராயணசாமி எங்கே பேசி விடுவாளோ என்று சந்தேகப்பட்டு, திருமதி நாகராஜன், ‘கலவாளி! நீங்களே நம் மீட்டிங்கோட பர்பஸை சொல்லுங்க' என்றாள். திருமதி நாகராஜன், தன்னை திருடி ஆக்கியதால் சங்கடப்பட்ட கலைவாணி, என்னை நீங்க மிஸ்ஸஸ் மனோகர்ன்னு கூப்பிடுங்க என்று எப்போதாவது சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து, இப்போது கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைக்கப் போனாள்... இதற்குள் ஒரு இடைச்செறுகல்...

"காமாட்சி மாமி. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“அதை ஏன் கேட்கிறே...? என் சின்ன பிள்ளையாண்டான் ரவிக்கு ஒரு கம்பெனியோட கம்ப்யூட்டர் கன்சல்டன்சி பிரிவிலே... வேலை கிடைச்சிருக்கு... கேம்பஸ் இன்டர்வியூவில இவன்தான் பர்ஸ்டு. சம்பளம் சு. சமுத்திரம் 95

மாதம் பதினாலாயிரம் ரூபாய்

‘கன்கிராஜுலேஷன்ஸ்’.

"சும்மாக்கிட... போகமாட்டேன்னு சொல்றானே... பாவிப்பயல் அமெரிக்காவிலே எம்.எஸ். பண்ணப் போறேன்னு குதிக்கானே!”

‘இந்தக் காலத்து பிள்ளிங்களே அப்படித்தான் மாமி... என் மகன் வில்லன்... அவன் என்ன காரியம் செய்திருக்கான் பாருங்க... முதல் மாத சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு வந்து என்கிட்ட கொடுப்பான்... நான் கன்னிமேரி முன்னால வைக்கணுமுன்னு நினைத்தால், ஏ.ஸி மிசினை வாங்கிட்டு வாரான். கேட்டால் இரண்டு மாதச் சம்பளந்தானேன்னு சொல்லிட்டு சிரிக்கான்’

மாதம், நாலாயிரம் ரூபாய்க்கு உட்பட்ட சம்பளம் வாங்கும் கணவன்மாரைக் கை பிடித்தவர்கள், அங்கேயே முணுமுணுத்தார்கள். வீட்டுப் பெருமைகளை மானசீகமாய் கொண்டு வந்து அங்கதம் பேசிய ‘பெரிசுகளை' முறைத்தார்கள். இன்னும் சிலதுகள், தத்தம் கணவன்மார் அல்லது பிள்ளைமார் ‘அடாவடி' செலவுகளைப் பேசப் போனார்கள். அதற்குள் நகரத்துக் கலைவாணி, கிராமத்துக்காரியாகி கூட்டத்தை ஒரு அதட்டலோடு பார்த்து, சங்கத்தின் நோக்கத்தை எடுத்துரைக்கப் போனாள்.

‘இப்போதெல்லாம், சென்னையில் நமக்கு... குறிப்பாய், எங்களை மாதிரி இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கு... அடுக்கு மாடிக்காரிகளை கிண்டலடித்தால், அவளுக கணவர்கள் கண்டுக்கமாட்டாங்க என்கிற மாதிரி ஒரு எண்ணம் வந்திருக்கு. இதனால நம் கேர்ள்ஸ்கு கராத்தே கற்றுக் கொடுக்கணும். அடுத்த தெருவிலயே ஒரு கராத்தே மாஸ்டர் இருக்கார். இது... நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்... இரண்டாவதாக...’

கலைவாணியின் பேச்சிற்குத் தடங்கலாய் ஒரு மின்சாரச் சத்தம். கிளி, பூனையிடம் அகப்பட்டால், எப்படிக் கத்துமோ, அப்படிப்பட்ட காலிங்பெல் ஒசை. வேலைக்காரப் பெண் மீனாட்சி, சமையல் அறையில் இருந்து தாவிப் போய்க் கதவைத் திறந்தாள். மனோகர், டையும் கோட்டுமாய் நின்றான்.

கலைவாணி, கணவனை முகம் சுழித்துப் பார்த்தாள் கூட்டம் நடக்கப் போறதாய் காலையிலேயே சொன்னனே என்பது மாதிரி; இதற்குள் சியாமளா “இதுக்குத்தான் புதுசா கல்யாணம் ஆணவங்க வீட்டுக்கு பகலுலயும், வரப்படாதுன்னு நான் சொன்னது" என்றபோது, வாசலைத் 96 பாலைப்புறா

தாண்டி உள்ளே வரப் போன மனோகர், வெளியிலேயே நின்றபடி கலைவாணி மீது கால்வாசிப் பார்வையை iசியபடியே பேசினான்.

‘ஐ அம் ஸாரி... என்னால முடியல. அதனாலதான் வந்திட்டேன்.'

எல்லோரும் அவனை குறுஞ்சிரிப்பாய் பார்த்துவிட்டு, கலைவாணியை நோக்கிக் கண்ணடித்தபோது, மனோகர், மனைவியிடம் முத்தமிட்டு, முத்தம் பெற்றுச் சொல்ல வேண்டிய ஒரு தகவலை, வாசலில் நின்றபடியே சொன்னான்.

"எனக்கு நியூயார்க்லே மூன்று மாதம் போஸ்டிங் கொடுத்திருக்கிறாங்க. எங்க கம்பெனி, அங்கே ஒரு மல்டி நேஷனல் கம்பெனிக்கு... கன்ஸல்டென்ட் கான்ட்ராக்ட் வாங்கி இருக்குது... அதை நிறைவேற்ற போற ஐந்து பேர் டீம்ல மெட்ராஸ்லே இருந்து என்னை செலக்ட் செய்திருக்காங்க. இந்த நல்ல செய்தியை இவள் கிட்டே சொல்றதுக்காக ஓடிவந்தேன்... வாறேன்”

கலைவாணி, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவனைக் கூப்பிடுவதற்காக நீண்ட கையை, இழுத்துப் பிடித்தாள். இதற்குள் இந்தக் கூட்டத்திலேயே வயதான திருமதி கல்யாணராமன், எழுந்து போய், மனோகரின் கையைப் பற்றி வீட்டுக்குள் கொண்டு வந்து, கூட்டத்தில் மத்தியில் நிறுத்தி விட்டு, அவன் நெற்றியின் இரு பக்கமும், தனது கைவிரல்களை ஊன்றி ஊன்றி, அவனுக்குத் திருஷ்டிப் பரிகாரம் செய்தாள். நியூயார்க்கில், மசக்கையில் இருக்கும் பேத்திக்கு, மாங்கா வடு, தேங்காய் மிட்டாய், தேன்குழல், ஊறுகாய், புளிச்சாதம் வகையறாக்களை கொடுத்து அனுப்பணுமே...

எல்லாப் பெண்களும் கைத்தட்டினார்கள். அது முடிந்ததும் மோனிகா கருத்துரைத்தாள்.

‘எல்லாம்... எங்க கலைவாணி வந்த நேரம்... இதை மறந்திடாதீங்க மிஸ்டர் மனோகர்...’

‘அதுமட்டுமில்ல மோனி... நாம் எப்போ கும்பலாய் இந்த வீட்டுக்குள்ளே கூடினமோ... அப்போதான் இந்த குட் நியூஸ் வந்திருக்குது’

‘இவளைக் கூட்டிட்டுப் போகாதீங்க சார்! இப்போதான் இந்த குடியிருப்பே களைகட்டுது’

‘அபசகுனமாய் பேசப்படாது... கலைவாணி இவரைத் தனியா விடாதே!' சு. சமுத்திரம் 97

ஒரு வருடத்திற்கு முன்பு, தன் கழுத்தில் மஞ்சள் சரடை போட்டுவிட்டுப் போன ஒரு அமெரிக்கத் தமிழன், இன்னும்தன்னைபிறந்த வீட்டுலயே விட்டுவைத்திருப்பதை நினைத்துப் பேசிய நிர்மலாவை, எல்லோருமே அனுதாபமாகத் தான் பார்த்தார்கள். அதற்குள் திருமதி பாலா நாராயணசாமி, ஒரு யோசனை சொன்னாள்.

“எங்க வீட்டுக்காரர்கிட்டே சொல்லி... இங்கே இருக்கிற பூஞ்சோலை குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், மிஸ்டர்... மனோகருக்கு ஒரு பாராட்டு... கம் வழியனுப்பு விழா வைக்க ஏற்பாடு செய்யுறேன்...”

திருமதி விஸ்வநாதன், பாலா மாமியை எரித்துப் பார்த்தாள். இவளே செயற்குழுவா? விடப்படாது

"நோ... நோ... நம் பெண்கள் சங்கம் மூலமாகவே பாராட்டு விழா நடத்திடலாம்!”

எல்லாப் பெண்களும், திருமதி விஸ்வநாதனின் யோசனைக்கு, சந்தா கொடுக்கற எண்ணம் இல்லாமலே கைதட்டினார்கள். கம்ப்யூட்டர் படிக்கும் தன் பேரனை, மனோகரின் அமெரிக்கத் தலையில் திணிப்பதற்கு திட்டம் போட்ட பாலாமாமிக்கு சிறிது வருத்தந்தான். ஆனாலும், சமாளித்தாள்.

“சரி... அவாள கொஞ்ச நேரம் தனியா விடுவோம்... நாளைக்கு என் வீட்ல கூடி பாராட்டு விழாவ பைசல் செய்வோம்”.

திருமதி நாகராஜன், பாலா மாமி தேர்ந்தெடுத்த இடத்தை ஆட்சேபிப்பதற்கு முன்பே, எல்லாரும் எழுந்து ஒருவருக்கொருவர் பேசியபடியே வெளியேறினார்கள். வேலை முடிந்து, கைகளை பாவாடையில் துடைத்துக் கொண்ட மீனாட்சியை, கண்ணடித்து கூட்டிப் போனார்கள்...

தனித்து விடப்பட்ட மனோகரும், கலைவாணியும், எவர் 'முந்தி’ என்று கண்டுபிடிக்க முடியாத வேகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள். ‘ஒங்கள விட்டுட்டு எப்படித்தான் இருக்கப் போறேனோ' என்று புலம்பியவளின் அடி வயிறைத் தொட்டபடியே மனோகர், ஆற்றுப்படுத்தினான்.

"நம்ம குழந்தை அமெரிக்காவுலதான் பிறக்கப் போகுது!”

‘எப்படியாம்...?’

‘கம்பெனி சார்பில் வேலை பார்த்துட்டே எதாவது ஒரு அமெரிக்க 98 பாலைப்புறா

நிறுவனத்தில் சேர்ந்திடுவேன். ஒன்னையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவேன். நம் குழந்தைகளோடு, நாம்... அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிடலாம்”

கலைவாணி, அவன் மார்பில் சாய்த்த தலையைத் தூக்கி, அவனை நேருக்கு நேராய் பார்த்துக் கேட்டாள்.

‘எந்தக் கம்பெனி...ஒங்களை நம்பி அனுப்புதோ... அந்தக் கம்பெனி சார்பிலே போயிட்டு... அப்புறம் ஏணியையே இடறி விடுவது நம்பிக்கைத் துரோகம் இல்லையா’.

‘விசுவாசமாய் இருக்கிறதுக்கு... கம்பெனி என்ன கட்டுன பெண்டாட்டியா’

‘விசுவாசத்தை துண்டாட முடியாது. ஒரு விசுவாசி என்பவர், எந்த விஷயத்திலும் தனக்குத்தானேயும், பிறத்தியார் எல்லோரிடமும் விசுவாசமாய் இருப்பவர்...’

மனோகர், நிரடு தட்ட அவளைப் பார்த்தான். அந்த சங்கடத்தை புரிந்து கொண்டவளைப் போல், கலைவாணி பேச்சைமாற்றினாள்.

"சரி... நாளைக்கு எல்லாவற்றையும், விலாவரியாய் பேசலாம். நீங்க நியூயார்க்குலயே செட்டில் ஆனாலும், அதுதான் என்னோட அயோத்தி; மத்ததுல்லாம் அசோகவனம்; இப்படியே நின்னா எப்படியாம்? இதைக் கொண்டாட வேண்டாமா...? எங்கேயாவது கூட்டிக்கிட்டுப் போங்க!”

"சாயங்காலம் போகலாம்... இப்போ மெடிக்கல் கிளியரன்சுக்கு ஜெனரல் ஆஸ்பத்திரி போறேன். சென்ட்ரல் ரயில்வே நிலையம் பக்கத்தில இருக்குதே அங்கேதான்...அப்போதான் விசா கிடைக்கும்”.

மனோகருக்கு, அப்படிச் சொல்லும் போது, நாக்கே நடுங்கியது. உடம்பும் ஆடியது. அதை மறைப்பதற்கோ என்னமோ, கலைவாணியைக் கட்டி அணைத்தான். முகத்திற்கு முகம் காட்டாமல், அவள் முதுகில் முகம் போட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_10&oldid=1639230" இலிருந்து மீள்விக்கப்பட்டது