பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்

8
உடை போட்டதும்


"ன்னடி செய்யச் சொல்றே... கடன் கொடுத்தவனை விட அதிகமாக, நீ என்னைக் கொடுமைப் படுத்தறியே..."

"அவன் என்னை என்ன கேவலமாகப் பேசறான் என்கிறது உமக்கு என்ன தெரியறது...எத்தனை தவணை தான் நானும் சொல்றது..அவனுந்தான் எத்தனை தவணைகளைக் கேட்டுக் கொள்ளுவான்."

"அவனோட பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலா இருக்கப் போகிறோம். அவனுந்தான் வாங்காமல் விட்டு விடப் போகிறானா? இந்த நேரம் பணம் கைவசம் இல்லை; கொஞ்சம் பொறுத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறோம்...இதிலே தவறு என்ன இருக்குது..."

"உம்மைவிட அழகா, மரியாதையா, நான் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளப்பா, பணத்துக்கு அவர் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார். வந்ததும் உன்னோட பணத்தைப் பூமேல வைத்துக் கொடுத்து விடுகிறோம்னு சொல்லாமலா இருக்கிறேன். எத்தனை நாளைக்கு அவனுக்கு இனிக்கும்—இந்த வெறும் பேச்சு; இல்லை, இல்லை என்கிற பல்லவி. கோபம் வராமல் இருக்குமோ..."

"கோபம் வந்து என்ன செய்து விடுவான்? தலையை வாங்கி விடுவானோ?"

"தலையை வாங்குவானேன்! தெருவிலே நின்று கொண்டு நம்மோட யோக்யதையை உரக்கக் கூவி மானத்தை வாங்கினாப் போதாதா?... விடமாட்டானோ..."

"செய்து தான் பார்க்கட்டுமே! துணிவு இருந்தா! மறுநாளே மானநஷ்ட வழக்கைத் தொடர மாட்டானா! கடனைத் திருப்பி வாங்க என்ன வழி உண்டோ அதைச் செய்வதா, கேவலமாகப் பேசுவதா! சட்டம் உனக்குத் தெரியாது...அவனுக்கு என்ன தெரியும்..."

"வாங்கின கடனைத் திருப்பித் தரச் சொல்லி ஒருவன் வற்புறுத்தினா, அவன் பேரிலேயே வழக்குப் போடுவது தான் சட்டமா?"

"இப்போது இல்லை...இன்னும் ஒரு வருஷம் ஆகும்...மொத்தமாகத் தரமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தர முடியும்..." என்று இப்படி எல்லாம் வாதாட முடியும். உனக்கு என்ன தெரியும், சட்டத்தின் 'நுணுக்கம்? பைத்யம்! உனக்கு நான் கடனே தர வேண்டியதில்லை என்றுகூட வாதாட முடியும்...தெரியுமா?"

"கை நீட்டி அவனிடம் பணம் வாங்கிவிட்டு..."

"கை நீட்டிப் பணம் வாங்கினது யாரு? நானா?"

"உங்க அப்பா பேராலே வாங்கினது; தெரியும்..."

"எனக்கும் எங்க அப்பாவுக்கும், சொத்து சம்பந்தமாக ஒரு விதமான தொடர்பும் கிடையாது. நான் விடுதலை எழுதிக் கொடுத்து மூன்று வருஷம் ஆகிவிட்டது என்று ஒரு "பாயிண்ட்" கிளப்பினா, அசடு! வருஷம் ஆறு ஆகும் வழக்கு தீர! தெரியுமா?"

"அப்ப, கொடுத்தவன் கடனைத் திருப்பித் தரச் சொல்லிக் கேட்கக் கூடாது...அது உம்மோட நியாயம்..."

"கேட்கலாம் மரியாதையாக! தாராளமாகக் கேட்கலாம். ஆனால் தரக் குறைவாகப் பேசக் கூடாது. சட்டம் அதற்கு இடம் தராது."

"வாங்கின கடனை மறுக்கவில்லை. திருப்பித் தர முடியாது என்று சொல்லவுமில்லை..."

"வாங்கின கடனை எப்படி மறுக்க முடியும்? திருப்பி தர முடியாது என்று சொல்ல சட்டம் எப்படி இடம் கொடுக்கும்? தம்முடைய கட்சிக் காரருக்காக வாதாட வேண்டும் என்பதற்காக என் நண்பர் இத்தனை வருஷ அனுபவத்துக்குப் பிறகு இவ்வளவு சொத்தையான வாதம் செய்வதைக் கேட்டு நான் ஆச்சரியப் படுகிறேன்...பரிதாபப்படுகிறேன்!"

"என் கட்சிக்காரர், தவணை தான் கேட்கிறார், கடனைத் திருப்பித் தர..."

"தவணை! தவணை! எத்தனை தவணைகள்! ஜூலை என்றார்—என் கட்சிக்காரர் சரி என்றார்—செப்டம்பர் வரையில் காத்திருந்தார். பணம் வரவில்லை; மறுபடியும் தவணை கேட்டார்; கொடுக்கப்பட்டது. இதுவரையில் மொத்தம் 12 முறை தவணை கொடுத்தாகி விட்டது. இனியும் என் கட்சிக்காரரை தவணை கொடுக்கச் சொல்லிக் கேட்பது தர்மமுமல்ல...சட்டமும் அல்ல..."

"இந்த முறை தவணை கொடுத்தே ஆகவேண்டும். போன மாதம் என் கட்சிக்காரர் தன் மகளுடைய கலியாணத்துக்காகப் பட்ட சிரமம் கூடத் தீரவில்லை...அவருக்கு உடல் நலமும் சரியாக இல்லை..."

"உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள நல்ல டாக்டரிடம் போகட்டும்....இங்கு என்ன வேலை? தவணை தருவதற்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறி விடுகிறேன். தவணைகள் கேட்டு வாங்கி வாங்கி, ஏமாற்றிவிட அந்தக் கட்சிக்காரர் திட்டமிடுகிறார். அவருக்கு உள்ளது ஒரே வீடு— அதை விற்றுப் பணமாக்கிக் கொண்டு வெளியூர் சென்று விட்டால் பிறகு அவரிடம் பணத்தைத் திருப்பி வசூலிப்பது முடியாது போய்விடும். வீட்டை விற்பதற்காகச் சதி செய்கிறார். இரகசியமாக ஏற்பாடு செய்து வருகிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஆகையால் கோர்ட்டாரவர்கள், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல், தவணைகள் சொல்லிக் காலத்தை ஓட்டிக் கொண்டு வரும் தாண்டவராயருடைய வீட்டை என் கட்சிக்காரர், கடனுக்காகக் கைப்பற்ற உத்திரவிடக் கேட்டுக்கொள்கிறேன்..."

கொடுத்த கடனைத் திருப்பித் தரச் சொல்லிக் கேட்பவன் தவணைகள் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும், மரியாதையாகப் பேச வேண்டும். கடனைச் சிறு சிறு தொகைகளாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளச் சம்மதிக்க வேண்டும், இல்லையென்றால் கடனையே திருப்பித் தர முடியாது என்று வாதாட சட்டம் இருக்கிறது என்று தமது மனைவியிடம் பேசிய வழக்கறிஞரையும் பார்க்கிறீர்கள். தவணைகள் கேட்டு வாங்கிக் கொண்டே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்து விட்டு, கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்ற நினைக்கும் 'பேர்வழி'யின் வீட்டைக் கைப்பற்ற உத்திரவு பிறப்பிக்கும் படி வாதாடும் வழக்கறிஞரையும் பார்க்கிறீர்கள்.

முன்னவருடைய பெயர் என்ன? மற்றவருடைய பெயர் என்ன? என்ற விவரம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா! ஒரு ஏமாற்றத்துக்குத் தயாராகி விடுங்கள். இருவர் அல்ல; பேசினவர் ஒருவரே தான்!

வீட்டில் பேசிய விசுவநாதர் தான் கோர்ட்டிலும் பேசியவர்!

வீட்டில் மனைவியிடம் பேசிய போது அவர் வெறும் விசுவநாதம்; கோர்ட்டிலே பேசிய போது வழக்கறிஞர் விசுவநாதம்.

குளித்துவிட்டு, உடலை துவட்டிக் கொண்டே வீட்டில் பேசினார்.

கோர்ட்டில், வழக்கறிஞருக்கான உடையில் வந்திருந்து பேசினார்.

உடை போட்டதும் உரைமாறி விட்டது!

வீட்டிலே விசாரமிக்க கணவர்; கோர்ட்டிலே வெட்டு ஒன்று—துண்டு இரண்டு என்று பேசும் வழக்கறிஞர்.

ஒருவரைத் தான் காணுகின்றீர்கள்! ஆனால் இருவேறு நிலை! இருவேறு நிலைகளில் இருவேறு உரை! இருவேறு உடை!!

இதிலே எந்த நிலையில் அவர் பேசியது நியாயம் என்று கேட்பீர்கள். இரண்டிலும் நியாயம் இருக்கிறது. நியாயத்தை விட அந்த இரு வேறு விதமாகப் பேச வேண்டிய 'தேவை' நிரம்ப இருக்கிறது.

வழக்கறிஞர் விசுவநாதம் தமது கட்சிக்காரருக்கு, அவர் கொடுத்த கடனுக்குச் சேதம் ஏற்படாமல் திருப்பிப் பெற்றிட வழி செய்து கொடுத்தாக வேண்டிய கடமை இருக்கிறதே, அதனைத் திறமையாகச் செய்கிறார்.

வசந்தாவின் கணவன் விசுவநாதம் வருவாய்க்கு மேல் செலவு செய்து விட்டதால், கடன்பட்டு, திருப்பித்தர முடியாத நிலை காரணமாக வேதனைப்படுகிறார்—அந்த வேதனையைப் போக்க வழியும் கூறாமல், அவர் வேண்டுமென்றே கடனை திருப்பித் தராமல் இருப்பதாக பாவனை செய்து கொண்டு, எச்சரிக்கும் மனைவியிடம் பேச வேண்டியதை விசுவநாதம் வீட்டில் பேசினார்.

கடனைக் கண்டிப்பாகத் திருப்பித் தந்தாக வேண்டும். மேலும் தவணைகள் தர முடியாது என்று அடித்துப் பேசுகிறாரே வழக்கறிஞர் விசுவநாதம், அது பயன் கொடுத்து, கடன் பட்டவர் கடன் கொடுத்தவருக்கு கடனைத் திருப்பிக் கொடுத்தால், விசுவநாதம் தான் பட்ட கடனுக்கு மேலும் தவணைகள் சொல்லாமல், தவணைகள் சொன்னால் கேட்டுக் கொள்ளத் தான் வேண்டும் என்று மனைவியிடம் 'பிரதாபம்' பேசாமல், கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தலாம்.

விசுவநாதம் வீட்டிலே பேசியது, 'இயலாமை' காரணமாக!

விசுவநாதம் கோர்ட்டிலே பேசியது, வீட்டிலே உள்ள 'இல்லாமை'யைப் போக்கிக் கொள்ள!

ஒருவரே தான்—இருவேறு நிலைமைகள்—இருவேறு பேச்சு! உடையிலே ஒருவித மாற்றம்! அவர் உரையிலே தலைகீழ் மாற்றம்!


"இப்படியா போட்டு அடிக்கிறது குழந்தையை. கிடாமாடு! முதுகிலே விரல் விரலாத் தெரியுதே, இப்படியா அடிக்கிறது."

"தப்பு செய்தா அடிக்கமாட்டாங்களா? நீங்க பெத்த அருமையான பிள்ளை செய்து விட்டு வந்த காரியத்துக்கு, அடிக்காம திருஷ்டி கழிப்பாங்களா?"

"என்னடி அப்படி தலை போகிற தப்பு செய்து விட்டான், இப்படி அடிக்க—கண்மண் தெரியாம, குழந்தையாச்சேன்னு கொஞ்சம் கூடக் கவனிக்காம, இப்படிக் கொலை பாதகம் செய்திருக்கறியே..."

"எத்தனை நாளைக்குச் சொல்றது புத்திமதி! கேட்டாத்தானே!"

"துளியாவது ஈவு இரக்கம், பரிவு பச்சாதாபம் இருந்தாத்தானே உனக்கு?"

"பிள்ளைகளை வளர்த்துப் பார்த்தாத் தான் தெரியும், அதிலே இருக்கிற கஷ்டம்."

"என்ன தப்பான காரியம் செய்தாலும், அன்பா, புத்திமதி சொல்லித் திருத்த வேணுமே தவிர, இப்படி முரட்டுத்தனமா, கொடுமைப் படுத்தக் கூடாது. உருட்டு மிரட்டல்லே திருத்தலாம், இப்படியா! பத்ரகாளி! குழந்தை துடியாத் துடிக்கிறபடியாவா அடிக்கிறது."

🞸🞸🞸

"முட்டிக்கு முட்டித் தட்டி எடுக்கல்லேன்னா, பய நெஜத்தைச் சொல்ல மாட்டான். மயிலே! மயிலே! இறகு போடுன்னா போடுமா...!"

"84! வேணாம், ஆளு ரொம்ப நோஞ்சானா இருக்கிறான்! அடிதாளமாட்டான்; கண்றாவியா இருக்குது, அவன் கதறுவதைக் கேட்டா..."

"சும்மா கிட 88! உனக்குத் தெரியாது, இந்த ஆசாமிகளோட சுபாவம். ஒரு தட்டு தட்டன உடனே கத்துவானுங்க; உயிரே போயிட்ட மாதிரி, துடிப்பானுங்க..."

"இல்லை, 84! உருட்டல் மிரட்டல்லியே உண்மையை வரவழைத்து விடலாம். என்னமோ, பய, தெரியாமே, தப்பா நடந்து விட்டான்...திருந்தி விடுவான்னு தோணுது"

"இதுகளா? திருந்தும்னு எண்ணிக்கிட்டு உபதேசம் செய்யப் போறயா? பைத்யம்! இதுகளை ஈவு இரக்கம் பார்க்காமெ கொல்லணும். உனக்குத் தெரியாது இதுகளோட விஷயம். புத்திமதி, நல்ல பேச்சு, இதுவரையிலே எத்தனையோ பேர் சொல்லாமலா இருந்து இருப்பாங்க. அதெல்லாம் இதுகளிடம் செல்லாது. பழமொழி இருக்குதே, 88! அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்கன்னு...டேய்! உள்ளதைச் சொல்லு, மண்டையைப் பொளந்து போடுவேன் பொளந்து; சொல்லு உண்மையை."

ஈவு இரக்கம் காட்டக் கூடாது என்று பேசி, பிடிபட்ட போக்கிரியை அடிக்கிறானே 84—போலீஸ் கான்ஸ்டபிள் பொன்னுரங்கம்—பார்க்கிறீர்கள். இப்படியா முரட்டுத்தனமாக இருப்பது. துளிகூட பச்சாதாப உணர்ச்சி இல்லாமல் என்று எண்ணுகிறீர்கள். இதே பொன்னுரங்கம் தான் முதலில் தன் மனைவி, குழந்தையை அடித்ததற்காகக் கண்டித்த கணவன்!

திருப்பூர் பனியனும் காஞ்சிபுரம் வேட்டியும், திருச்செந்தூர் விபூதியும், பழனி சந்தனப் பொட்டும் தெரிந்தது வீட்டில்—பேச்சில். பச்சாதாப உணர்ச்சி, நியாய உணர்ச்சி தெரிந்தது.

காக்கி உடையும், சிகப்புத் தொப்பியும் அதிலே 84 என்ற எண்ணும், கையிலே பூண்போட்ட தடியும் தெரிகிறது, போலீஸ் கொட்டடியில், உடை மாறி இருக்கிறது. உடை? அடேயப்பா! தலைகீழான மாற்றம்!!

நல்ல புத்தி சொல்லிக் குழந்தையைத் திருத்த வேண்டும் என்று மனைவிக்கு அறிவுரை சொன்ன பொன்னுரங்கம், பல ஆண்டுகள் குழந்தை இல்லாமலிருந்து தகப்பனானவன்—அந்தப் பாசம் பேச்சிலே வழிந்தது.

போக்கிரியை அடக்க பலமான அடி கொடுத்தாக வேண்டும் என்று பேசிய பொன்னுரங்கம் 'ஏட்டு' ஆகப் போகிறார் என்று பலரும் பேசும் நிலையைப் பெற்றிருந்த போலீஸ்காரர்!

வீட்டிலே இருந்த பொன்னுரங்கத்துக்கும் போலீஸ் கொட்டடியிலே இருந்த பொன்னுரங்கத்துக்கும் உடை வேறு வேறு; உரையும் வேறு வேறு!

"குழந்தையை அடித்து விட்டதற்கு அவ்வளவு கோபித்து கொண்டாயே, அவன் என்ன செய்தான், ஏன் அடித்தேன் என்று கேட்டயா, நீ...?"

"சொல்லேன், கேட்போம்...என்ன அப்படிப் பட்ட அநியாயத்தைச் செய்து விட்டான் என் மகன்?"

"சொல்லவா, உன் செல்லப் பிள்ளை செய்ததை...பக்கத்து வீட்டுப் பையன் இல்லே, பக்தன்...அவனைப் போட்டு அடி அடின்னு அடிச்சுட்டான். முட்டிக்கு முட்டி தட்டணும்னு, உன்னாட்டமே கூச்சல் போட்டுகிட்டு, ஒரு மூங்கக்கழியை எடுத்து அடித்துவிட்டான்..."

"அடப் போக்கிரிப் பயலே! ஏன்? ஏன் அப்படிச் செய்தான்?"

"அந்தக் கூத்தையும் கேள்...விளையாடலாம் வாடான்னு அந்தப் பையனைக் கூப்பிட்டு, நீ திருடன்; நான் போலீஸ்காரன் என்று சொல்லி, அடிச்சி இருக்கறான்."

"அப்படியா செய்தான்? போலீஸ் வேஷம் போட்டு நாடக மாடினானா...அடப் போக்கிரிப் பய..."

"சிரிக்கிறிங்களா...அந்தப் பையனோட அப்பாருக்கு எவ்வளவு கோவம் வந்திருக்கும்."

"பயலைப் பார்த்தா, பூனை போல இருக்கறான்."

"அதுவா! ஒரு பழைய காக்கிச் சட்டையை மாட்டிக்கிட்டு, தலையிலே சிகப்புத் துணியைச் சுத்திகிட்டு, கழியைத் தூக்கிகிட்டு, அது நடக்கற நடையும், பார்க்கற பார்வையும், போடற கூச்சலும், அசல் உங்களை மாதிரியே தான் இருக்குது..."

"உடுப்பே போட்டு கிட்டானா பய, நம்மைப்போல!!"

"ஆமா....அந்த உடுப்பை போட்டுகிட்டதாலே தான் அந்த அடி அடிச்சுது. நீங்க மட்டும் என்னவாம், அந்த உடுப்பை போட்டுகிட்டா, ஆளே மாறிப் போய்விடறிங்க... உங்க பேச்சே மாறிடுது...போக்கே மாறிடுது..."

"சே, போ! ஒரே அடியாக் கேலியும் கிண்டலும் செய்யறே."

🞸🞸🞸

84, போலீஸ் உடையில் இல்லை! வீட்டு உடையில்! வீட்டு உடை! வீட்டு உரை!