பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்
9
உடையார் உள்ளம்
"உனக்கேதுடா ரோஷம் கீஷம் எல்லாம். அதெல்லாம் போயி வெகுநாளாயிட்டுதே. ஒருத்தன் என் காலை மிதிச்சா அவனோட தலையை மிதிக்காம நான் விடமாட்டேன்னு முன்னே சொல்லுவே; அப்படியே செய்யவும் செய்வே. இப்ப எவனாவது உன் தலையை மிதிச்சா, நீ அவன் காலைப் பிடிச்சிவிடறே, வலியைப் போக்க. அவ்வளவு தான் உன்னோட முடுக்கு. மீசை மட்டுந்தான் இருக்குது, முறுக்கேறி. மற்றபடி வீரம் ஒடிந்து மடிந்துபோய் வெகு காலமாகுது. உனக்கு மட்டுமல்ல டோய்...நம்ம 'குத்துக் கொம்பனை'க் கண்டால் ஊரே அலறும் முன்னாலே. ஒரே வருஷத்திலே நாலு பேர், நம்மாலே முடியாது சாமியோய்னு சொல்லி விட்டு ஓட்டம் எடுத்தாங்க. அப்படி இருந்தது காளை. இப்ப? மூக்கணாங்கயிறே வேணாம் போல இருக்குதே...சில 'சுழி' அப்படித்தான். ஆனா, இவ்வளவு சீக்கிரமா 'தொடை நடுங்கி' ஆகிவிடுவேன்னு நினைக்கவே இல்லை. இத்தனைக்கும் என்னை மாதிரி உள்ளவங்க—நோஞ்சானா உள்ளவங்க பயப்படலாம்; சகஜம். உன் உடம்பு மட்டும் எனக்கு இருந்தா உம்! அதைச்சொல்லி என்ன ஆகப்போகுது...மூங்கக்காடெல்லாம் கரும்பா மாறிவிட்டா, பெட்டி வழியும் பணம். ஆகப் போகுதா! அதுபோலத் தான், உனக்கு இருக்கிற உடம்பு எனக்கு இருந்தா ஒரு பய வாலாட்டுவானா என்னிடம்னு நான் எண்ணிக் கொள்றது."
கலகத்தை மூட்டிவிடாதே; மனதைக் கெடுக்காதே என்று சொல்லவே தோன்றாது யாருக்கும், 'ஒண்டிக்கட்டை' உலகப்பன் பேச்சைக் கேட்கும் போது. வாழைப் பழத்திலே ஊசி இறக்குவது என்பார்களே, அப்படிப் பேசுவான்.
அவன் மனதிலே திட்டமிட்டால், வரப்பு தகராறு, வாய்க்கால் தகராறு, வாய்ச்சண்டை, வெட்டுகுத்து எல்லாம் கிளம்பி விடும். எந்தச் சமயம் கிளம்பிவிடும். எந்தச் சமயத்தில் யாரை யார் மீது ஏவி விடுவான், என்ன காரணம் காட்டி என்பதைத் தெரிந்து கொள்ளவே முடியாது. மோதுதல், வழக்கு மன்றம் போக வைத்து விடும். அப்போது வக்கீல் ஏற்பாடு செய்வது, வக்கீலுக்கு 'பாயின்டுகள்' காட்டுவது சாட்சிகள் தயாரிப்பது, நிலத்தை ஈடுவைக்க அல்லது விற்க ஏற்பாடு செய்வது—மொத்தமாகச் சொல்லுவதென்றால், ஊரிலே மற்றும் ஒரு உலகப்பனை உண்டாக்கிவிடுவது அவன் வேலை. வேலையா! கலை ஐயா! கலை!! அந்தக் கலையில் உலகப்பன் காணிக்கை கொடுக்காமல் வல்லவன் ஆகிவிடவில்லை. ஆறு ஏக்கர் அயன் நஞ்சையும், எட்டு ஏக்கர் புஞ்சையும் விற்று, விற்று, காணிக்கை செலுத்திய பிறகுதான் 'வல்லவன்' ஆக முடிந்தது. வம்பு வல்லடி வழக்கிலேயே அதிகமான சுவை தேடிக்கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்து விட்டதால், கலியாணம் செய்து கொள்ளக்கூட அவனுக்கு எண்ணம் எழவில்லை. பெண்ணைப் பெற்றவர்களோ, ஒரு பாழுங்கிணற்றிலே தள்ளினால் கூடப் பரவாயில்லை; இந்த வம்புக்காரனுக்குப் பெண்ணைக் கொடுத்தால், வாழ்க்கை முழுவதும் பேரிடி விழுமே என்று பயந்தே ஒதுங்கிக் கொண்டார்கள். உலகப்பன் 'ஒண்டிக்கட்டை'யாகவே இருந்து வந்தது அதனால் தான், சில அனுபவமுள்ள பெரியவர்கள் மட்டும், உலகப்பன் இப்படி ஆகிவிட்டதற்குக் காரணமே அவன் 'ஒண்டிக்கட்டை'யாக இருப்பதுதான்; அவனுக்கும் ஒரு 'கால்கட்டு' காலாகாலத்திலே போட்டு வைத்திருந்தால், இப்படி ஆகியிருக்க மாட்டான்; ஊருக்கே அடங்காமல் திரிந்து வந்த பேர்வழிகளை, 'உங்களைத்தான்...இது நல்லா இருக்கா....உங்களைக் கட்டிக்கொண்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்...ஊரிலே குளம் குட்டையா இல்லை.." என்ற விதமான பேச்சை அடிமூச்சுக் குரலாலே பேசி, அடக்கி விட்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன அசகாயச் சூரனா! ஒண்டிக் கட்டையாக இருப்பதாலே தான் சண்டிமாடு போலச் சுத்தித் திரியறான் என்று பேசிக் கொண்டனர்.ஒண்டிக்கட்டை உலகப்பன் தனக்கு இருந்த நிலபுலத்தை விற்றுத் தீர்த்தான பிறகு, கிராமத்திலே மிட்டா பாத்யதை பெற்றிருந்த மாணிக்கம் பிள்ளைக்கு 'ஆலோசகராக' தன்னை ஆக்கிக் கொண்டான்.
மாணிக்கம் பிள்ளை தனது பூர்வீகச் சொத்தாக இருந்த முப்பது ஏக்கரை 'வேழமுகன் அருளாலே' நூற்று ஐம்பது ஏக்கராக வளர்த்துக் கொண்டவர். 'நிலத்தை நீச்சைக் கவனித்துக் கொண்டு, கிராமத்தோடு இருந்துவா. நமது குடும்பத்துக்குத் தலைமுறை தலைமுறையாக இருந்து வரும் 'பெயரை'க் காப்பாற்று' என்று மாணிக்கத்தின் தந்தை சதாசிவம் பிள்ளை 'தலைப்பாடாக' அடித்துக் கொண்டிருந்தார். என் பேச்சைத் தட்டி நடக்காத பய, இப்ப கிராமத்திலே இருக்க இஷ்டமில்லேன்னு சொல்லி விட்டு டவுனுக்குப் போய் விட்டான்! அவனா என் பேச்சைத் தட்டி நடக்கறவன்...அவனைப் பிடித்து ஆட்டுதே ஒரு 'மோகினி'—அவனோட வீட்டுக்காரி—அது செய்து விட்ட வேலை என்று சதாசிவம் பிள்ளை பல வருஷங்கள் குறைபட்டுக் கொண்டார். டவுனுக்குப் போனதாலே தான் 'நாலுகாசு' பார்க்க முடிந்தது கண்ணாலே; கொஞ்ச நிலத்தையும் வாங்கிப் போட முடிந்தது. அப்பா சுத்தக் கருநாடகம்...அவர் பேச்சைக் கேட்டிருந்தா, முப்பது பத்தா குறைந்திருக்குமே தவிர, வளர்ந்தா இருக்கும் என்று, 'வெற்றிகள்' பெற்ற பிறகு, சதாசிவம் பிள்ளை காதில் விழுகிற மாதிரியாகவே பேசினார் மாணிக்கம். வயதான காலம், காதும் கேட்கல்லே, கண்ணும் தெரியவில்லை. 'என்னமோ பேசறான் என் மகன்; விளங்கவில்லை' என்று சதாசிவம் முணுமுணுத்தார். ஆனால், மகன் பேசுவது அப்பாவுக்குத் தெளிவாகத் தான் காதிலே விழுந்தது; மறுத்துப் பேச முடியவில்லை; அதனால் காது மந்தத்தைக் காரணமாக்கிக் கொண்டார்.
அந்தக் கிராமத்தை 'முப்போனூர்' என்று சொல்லுவார்கள்; 'முப்போனூர்'—மூன்று போகம் விளையும் ஊர்—என்ற பொருளுள்ள பெயர். அப்படிக் கொச்சையாக்கப் பட்டு விட்டது. அந்த கிராமத்திலிருந்து நாற்பது கல்தொலைவிலிருந்த காடானூர், பருத்தி ஆலை அமைக்கப்பட்டு வேகமாக வளர்ந்து 'காடானூர் டவுன்' ஆகிவிட்டிருந்தது. அங்கு தான் மிட்டா மாணிக்கம் பிள்ளைக்கு ஆலைக்குத் தேவைப்படும் சிறுசிறு யந்திரப் பகுதிகள் தயாரிக்கும் தொழிற்சாலை.
காடானூர் டவுனில், அவர் மிட்டா மாணிக்கம்!
முப்போனூர் வருகிற போது, அவர் ஆலை முதலாளி மாணிக்கம்!
மிட்டா மாணிக்கம் பிள்ளை, கிராமத்திற்கு வருகிற போதெல்லாம், ஒண்டிக்கட்டை உலகப்பன் தான் பொழுதுபோக்குக்கு!
பொழுதுபோக்கு என்றால் அவ எப்படி? இவனுக்கு எது தொடர்பு? முடியுமா முடியாதா! மாந்தோப்பு பக்கம் வரச் சொல்லேன்!—என்ற இவ்விதமான விளையாட்டுப் பொழுதுபோக்கு அல்ல.
எந்த நிலம் தரமானது, யாருடைய கை நொடித்துக் கொண்டு வருகிறது, கடன் சுமை யாருக்கு அதிகமாகிக் கொண்டு வருகிறது, கரும்பு போட்டால் 'தரமாக' வருமா, காட்டாற்றுக் கால்வாய் வெட்டும் காண்ட்ராக்ட் யாருக்குக் கிடைக்கும், கூட்டுறவு பாங்க் டைரக்டர்களின் குணாதிசயம் என்ன, அதிலே ஒருவர் கொஞ்சம் 'போடுவாராமே' உண்மையா? என்ற இந்த விதமான தகவல் கேட்டுக்கொள்ளும் பொழுதுபோக்கு.
ஓய்வாக ஒரு பத்து நாள் கிராமத்துக்குப் போய் விட்டு வரப் போகிறேன் என்று 'டவுனில்' சொல்லி விட்டு வருவார் மாணிக்கம்; அந்தப் பத்து நாளும் ஓய்வே இருக்காது; தோட்டமோ, வயலோ, மாடோ, வண்டியோ, ஏதாவது வாங்குவதோ விற்பதோ நடைபெறும். சதாசிவம் பிள்ளை கண்ணை மூடும்போது, முப்போணூரில் ஒரே சதுரம் அயன் நஞ்சை நம்முடையது தான் என்ற மகிழ்ச்சியுடன் தான் இருந்தார்.அந்த நிலையைக் கெடுத்திடத் துணிந்தான், ஒரு புதுப் பணக்காரன். மிட்டா மாணிக்கம் பிள்ளை வாங்க மறுத்த நிலத்தை எல்லாம் சிறிது சிறிதாக அதிக விலை கொடுத்து வாங்கி வாங்கி, ஒரு புள்ளியாகி, பெரிய புள்ளியாகவும் வளரலானான்.
"தெற்கே வெகுதூரத்திலிருந்து வந்தான். பூர்வீகச் சொத்து ஒரு பைசா கிடையாது. அவன் முப்போனூரில் முப்பாட்டனார் கால முதற்கொண்டு எங்களுக்கு மிராசு பாத்யதை உள்ள ஊர்—நூறு ஏக்கரை மடக்கிப் போட்டு விட்டானே! மடப்பயல்கள் நம்ம கிராமத்துக்காரனுங்க. பேராசை பெரு நஷ்டம் என்பதை மறந்து போய் அவன் 'நாலு காசு' அதிகம் தருகிறானே என்று ஆசைப்பட்டு, ஒரு வெளியூரானுக்கு இடம் கொடுத்து விட்டானுங்களே...” என்று மிட்டா மாணிக்கம் பிள்ளை, தம்மிடம் மாரியம்மன் பண்டிகைக்குப் பணம் தண்ட வந்த பெரியவர்களிடம் சொல்லிக் குறைபட்டுக் கொண்டார்.
"ஏனுங்க தம்பி! எதிலே சம்பாதனை அந்த ஆளுக்கு? கண்ணை மூடிக்கொண்டு கேட்ட விலை தர்ரானே..."
"சம்பாதனையா! எதிலேன்னு கேட்கறீங்களா...அவனுக்கு சம்பாதனை கரண்டியிலே..."
"கரன்ட்டு கம்பெனியா..."
"கரன்ட் கம்பெனியுமில்லே, சிமெண்ட்டு கம்பெனியுமில்லே. கரண்டி, கரண்டி; சமயல் கரண்டி"
"ஓட்டல்காரரா?"
"ஓட்டல்காரரு! பேரைப்பாரு! பட்டைச்சோறு வித்துக்கிட்டு இருந்தான்....மில்லிலே இல்லை ஆளுக, அவங்க கிட்டே; பொட்டலம் எட்டெட்டணா! தட்டினான் அதிலே சரியான இலாபம்... இப்ப ஓட்டல்காரர்...."
"வியாபாரம் வலுத்துப் போச்சுன்னு சொல்லுங்க...""இப்பத் தான் காப்பி குடிக்காவிட்டா ஒரு பயலுக்கும் எழுந்து நடமாடவே முடியறதில்லை. ஒரு கப் காப்பி நாலணா—ஸ்பெஷல்...எவ்வளவு நிற்கும் தெரியுமா இலாபம் ஒரு கப்புக்கு; மூணணாவுக்குக் குறையாது...காப்பித் தூள் கால், மரத்தூள் முக்கால் பாகம்! சர்க்கரை எங்கே போடறான்! ஷாகரீன் தான்...ஆட்டுப்பால் தான் அசல் பசும்பால் ஆகுது. ஒரே மோசம்..."
"பாரேன் தம்பி! அவனோட ராசியை...ஆயிரமாயிரமாப் புரளுது..."
இப்படி உரையாடல்; மிட்டா மாணிக்கம், புதிய புள்ளியைக் கேவலப்படுத்த எடுத்த முயற்சி நேர்மாறான பலன் கொடுத்தது; பலரும் ஓட்டல் முதலாளி தாண்டவ மூர்த்தியைப் பாராட்டத் தலைப்பட்டனர்; தொடர்பு கொள்ளத் துடித்தனர்.
அந்தத் தாண்டவ மூர்த்தி களஞ்சியத்திற்குத் தீ வைத்து விடச் சொல்லித் தான் ஒண்டிக்கட்டை உலகப்பன் தூண்டிக் கொண்டிருந்தான், 'அக்கரை' பக்கிரியப்பனை.
பக்கிரியப்பன், சில வருஷம் சிலோன் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து விட்டுத் திரும்பியவன்; அதனால் 'அக்கரை' என்ற பட்டம். ஆறு குழந்தைகளுக்குத் தகப்பன்; சொந்தத்தில் அரை ஏக்கர்! பிழைப்புக்கு வழி மிட்டாவிடம் கைகட்டி நிற்பது, தோப்பு குத்தகை எடுப்பது, சந்தைக்குச் சென்று மாடு பிடித்து வருவது, யாராவது மிட்டா மாணிக்கத்தை எதிர்க்கத் துணிந்தால், அவர்களுக்குப் 'பாடம்' புகட்டுவது.
'பட்டா' தூக்கினா பய, பட்டாளமே வந்தாக் கூட பயப்பட மாட்டான்; போலீசிலே சிக்கிக் கொண்டா என்னா? மாமியார் வீட்டுக்குப் போய் வந்தா போச்சி என்கிறான். அப்படிப் பட்ட நெஞ்சழுத்தக்காரன் அக்கரை பக்கிரி என்று கிராமம் பேசுகிறது; ஆனால் பம்பரம் ஆடிக் கீழே தலை சாய்த்து விட்டது என்று கேலி செய்கிறான் ஒண்டிக்கட்டை.வெளியூரான்களை விட்டு வைக்கமாட்டானுங்க என்று தெரிந்தா, ஓட்டல்காரன், ஒண்ணுக்குப் பாதி விலைக்கு நிலத்தை விற்று விட்டுப் போய் விடுவான் என்பது மாணிக்கத்தின் எண்ணம். அதற்காகத் தான் ஒண்டிக்கட்டையிடம் சொல்லி வைத்தார்; அவர் பெயரை எக்காரணம் கொண்டும் இழுக்கவே கூடாது என்று கண்டிப்பான எச்சரிக்கையுடன்! கேஸ் வந்தால், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் வாக்களித்திருந்தார். இதைத் தனக்கே உரித்தான தனித் திறமையுடன், பக்குவத்துடன், 'ஒண்டிக்கட்டை' பக்கிரியப்பனிடம் சொல்லிப் பார்த்தான்; பக்கிரி, 'இது ஆபத்தான வேலைங்க என்றும், பாவமுங்க' என்றும் சாக்குப் போக்குச் சொல்லிக் காலத்தை ஓட்டிக்கொண்டே இருந்தான். இதற்குள் ஐநூறு ரூபாய் அளவுக்கு மிட்டாவிடமிருந்து ஒண்டிக் கட்டைக்குச் சேர்ந்தது. அதிலே கால் பங்கு பக்கிரிக்குச் சேர்ந்தது. காரியம் மட்டும் முடியவில்லை. தாண்டவ மூர்த்தியின் களஞ்சியம் நிறைய கிச்சிலிச் சம்பா! மிட்டா மாணிக்கத்தால் இந்த நிலைமையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‡‡‡
ஒண்டிக்கட்டைக்கு வெற்றி கிடைக்காமற் போகவில்லை. பக்கிரியின் கடைக்குட்டி மகனுக்கு விஷக் காய்ச்சல் வந்த போது, கை எடுத்துக் கும்பிட்டான். காலைப் பிடித்துக் கொண்டான். கடன் கொடுத்தான் உலகப்பன், 'அவ்வளவும் இனாம், சொன்னதை முடித்துவிட்டால்' என்றான்.
சொன்னதை முடிக்கச் சென்றான் பக்கிரி, நல்ல கருக்கல் இருக்கும் வேளையாகப் பார்த்து. களஞ்சியக் காவல் வேலை பார்த்து வந்த கன்னி விழித்துக் கொண்டான்; அடிதடி; அரிவாள் வெட்டு; கன்னியின் மகன் பட்டாளத்தில் வேலை பார்ப்பவன். லீவுக்கு வந்திருந்தான்; பக்கிரியை அவன் 'புரட்டிப் புரட்டி' எடுத்து விட்டான். தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட்டான் பக்கிரி, ஊரை விட்டே. களஞ்சியத்துக்கு ஒரு சேதமும் இல்லை. ஒண்டிக்கட்டையை வெட்கம் பிய்த்துத் தின்றது. கிராமத்தைவிட்டு ஓடிய பக்கிரி எங்கெங்கோ அலைந்து கிடந்தான். குடும்பம் வறுமையாலே தாக்குண்டது.
'எப்பவாவது எனக்கு எதாச்சும் ஆபத்து ஏற்பட்டா, புள்ளே! மாணிக்கத்தய்யா காலிலே விழுந்து கேள்; அவரு கைவிடமாட்டாரு' என்று பக்கிரி சொன்னதை நினைவிலே வைத்துக்கொண்டு, அவன் மனைவி சொர்ணம், தனக்கு வந்த கஷ்டத்தைச் சொல்லி அழுதாள்.
மாணிக்கம், கடும் கோபத்துடன், "உன் புருஷன் செய்த காரியத்துக்கு, உதவி வேறே செய்யணுமா. நம்ம ஊர் மிராசுதாரர்லே ஒருத்தர், நம்ம ஊரை நம்பிப் பணத்தைக் கொட்டி நிலம் வாங்கி, நம்ம ஊர் ஆளுங்களுக்குப் பிழைப்புக் கொடுத்துக் கொண்டு வருகிறார்... அவருடைய களஞ்சியத்தைக் கொள்ளை அடிக்கத் துணிந்தானே பக்கிரி! அடுக்குமா! அவருக்கு நடப்பது தான் நாளைக்கு எனக்கு! களஞ்சியத்தைக் கன்னி காப்பாத்தி விட்டான்; நம்ம கிராமத்தோட பெயர் மானம் காப்பாத்தப் பட்டது. எதாச்சும் நடந்து போயிருந்தா, டவுன்லே, 'மிட்டாதாரே! உங்க கிராமத்திலேயா இப்படிப் பட்ட அக்ரமம் நடக்கறது! இப்படியா கிராமத்தைப் பரிபாலித்துக் கொண்டு வர்றிங்க'ன்னு நாலுபேர் கேட்டா நான் என் முகத்தை எங்கே கொண்டு போய் ஒளிய வைத்துக் கொள்றது. போ! போ!! உனக்கு உதவி செய்தா, நாலுபேர் என்னைப் பத்தி தப்பா நினைத்துக் கொள்வாங்க"-என்று கண்டிப்பாகச் சொல்லி அனுப்பி விட்டார். ஒண்டிக்கட்டை ஏதோ குறுக்கிட்டுச் சொல்ல முயற்சித்தான்; ஒரே பார்வையில் அவனை அடக்கிவிட்டார்.
‡‡‡
"அவனுக்குச் சம்மதம்னா எனக்கு என்னடி தடை! இந்தக் காலத்திலே, கட்டிக் கொள்ளப் போறவனோட மனசுக்குப் பிடித்திருந்தா தான் நல்லபடி வாழ்க்கை நடக்கும். அது அந்தக்காலம்! பெரியவங்க பார்த்து பேயாட்டம் ஒருத்தியைக் கட்டி வைத்தாலும், சரின்னு சம்மதிக்கிற காலம்! நான் சம்மதிச்சன் பாரு அந்தக் காலத்திலே, உன்னை என் தலையிலே கட்டினபோது" என்று கன்னி பழமையைக் குழைத்துக் கொஞ்சினான்.
"ஏன் என்னவாம் என்னைக் கட்டிக்கிட்டதிலே..." என்று கேட்கலானாள், செல்லக் கோபத்துடன், கோவிந்தம்மாள். 'இப்ப யோசனை செய்து என்னடி பலன்?" என்று கேலி பேசிக் கொண்டே சுருட்டு பற்றவைத்தான் கன்னி.
‡‡‡
பட்டாளத்து வேலையை முடித்துக் கொண்டு, பஸ் டிரைவர் வேலை தேடிக் கொண்டு 'நல்லபடி' இருந்த தங்கள் மகன், தன் மனதுக்குப் பிடித்தமான பெண் பட்டூரில் இருப்பதாகச் சேதி சொல்லி அனுப்பியதைத் தொடர்ந்து அந்தப் பேச்சு நடைபெற்றது.
பட்டூர் சென்றனர் கன்னியும் கோவிந்தம்மாளும் பெண் பார்க்க. வாத்தியார் வேலை பார்க்கிற வள்ளி வீடு எது என்று விசாரித்துக் கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது. ஆனால் உள்ளே காலடி எடுத்து வைத்ததும், "இந்த வீட்டுக்குள்ளே நுழைய உனக்கு எம்மாந் துணிவுடா கிழட்டுப்பயலே...நீதானா, இங்கே சம்பந்தம் செய்து கொள்ள நினைக்கறே! நடக்காது. என் உடம்பிலே ஒரு துளி உயிர் இருக்கற வரையிலே, நடக்கவே நடக்காது. ஆமாம்..." என்று காட்டுக் கூச்சலிட்ட படி பாய்ந்து வந்தான் பக்கிரி.
தங்கள் மகன், தன் மனதுக்குப் பிடித்த பெண் என்று சொன்னது கடைசியிலே பாவி பக்கிரியோட மகளைத் தானா! புத்தி கெட்டப் பயலுக்கு, எப்படிப்பட்ட நடத்தைக்காரன் இந்தப் பக்கிரி, எப்படிப்பட்ட தீராத பகை நம்ம குடும்பத்தோட மூட்டிக் கொண்டான் என்பது கவனமில்லையா. மூக்கும் முழியும் அழகா இருந்து விட்டால் போதுமா? இந்த இடத்திலே சம்பந்தம் செய்து கொண்டா, கிராமமே காரித் துப்பாதா! எஜமானர் காதிலே கேட்டா எவ்வளவு ஆத்திரப்படுவார்? "ஏண்டா கன்னி! என் களஞ்சியத்தைக் கொள்ளை அடிக்கவும் கொளுத்தவும் துணிஞ்சு வந்தவன் தானா கிடைத்தான் உனக்கு சம்பந்தியாக!!" என்று சீறுவாரே. நமக்கே அது நியாயம்னு படாதே. சே! தெரியாம வந்துவிட்டமே அவசரப்பட்டு" என்று எண்ணிக் கொண்டான்.
அந்த நேரத்தில், பள்ளிக்கூடத்திலிருந்து வீடு வந்தாள் வள்ளி! முகத்திலே தான் எத்தனை சாந்தி! கண்களிலே என்ன கனிவு! புன்னகை! அடக்கம்! பார்த்த கோவிந்தம்மாள், 'இப்படிப்பட்ட தங்கச்சிலை நமக்கு மருமகளாக நாம் கொடுத்து வைக்க வேண்டுமே' என்று மனதிலே எண்ணிக் கொண்டாள். கன்னி ஒரு நீண்ட பெருமூச்செறிந்தான்.
‡‡‡
"அதை ஏன் கேக்கறிங்க சம்பந்தி! கிராமத்தானுங்க வரவர எந்த விதமான கட்டு திட்டத்துக்கும் அடங்க மறுக்கறாங்க. பொன்னைக் கொட்டி மண்ணை வாங்கி, இதுகளோட மாரடிக்க வேண்டி வருது."
"நானும் அவசரப்பட்டுத் தான் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிப் போட்டு விட்டேன் நிலத்தை."
"ஆமாமாம்! பலபேரு சம்மந்தி! அப்ப என்கிட்ட வந்து தூபம் போடுவாங்க; மிட்டாதாரர் நீங்க இருக்கறப்ப யாரோ வெளியூர்க்காரர் நம்ம ஊர் நிலத்தை வாங்கி விடலாமா, அப்படி இப்படின்னு."
"நான் வந்துங்க, எந்த நிலம் விலைக்கு வந்தாலும், உங்களுக்கு ஏதாச்சும் அதன் பேர்லே கண் விழுந்திருக்கான்னு கேட்டு விட்டு, 'இல்லே அவருக்கு விருப்பம் இல்லே'ன்னு தகுதியானவங்க சொன்ன பிறகுதான் 'பிடி' கொடுக்கறது..."
"ஆண்டவனோட அற்புதத்தைப் பாருங்க, எப்படி நம்ம ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்து வைத்தார் பார்த்திங்களா! கிராமத்திலே பலபேர் நம்ம ரெண்டு பேருக்குள்ளே 'பகை' மூண்டு கிடக்குதுன்னு கூடப் பேசிக்கொண்டாங்க.."
"களஞ்சியத்தைக் கொள்ளை அடிக்க வந்தானே, ஒரு காவாலிப் பய, அப்பத்தானே! அதை ஏன் சொல்றீங்க போங்க, சிலபேர் என்னிடம் வந்து கலகமே செய்தாங்க; உங்களோட தூண்டுதலாலே தான் அந்தப் பய பக்கிரி அந்தக் காரியம் செய்யத் துணிஞ்சான் என்பதாக."
"நம்ம ரெண்டு பேரையும் பிரித்து வைத்தாத்தானே 'தலைகாஞ்சதுகளுக்கு' இலாபம்; இரண்டு இடத்திலேயும் தின்கலாம்."
"பக்கிரியை ஊரைவிட்டு விரட்டியதே நீங்கதான்னு எனக்குத் தெரியாதா என்ன...பய, இந்தப் பக்கமே தலைகாட்ட மாட்டான்! அவன் தலை தெரிந்தாப் போதும். நம்ம கன்னி இருக்கிறான் பாருங்க, சீவிடுவான் சீவி! தீராத பகை இரண்டு பேருக்கும். என்னை நம்பிக் களஞ்சியத்தை ஒப்படைச்சாரு எஜமானரு; என் பேரைக் கெடுக்கற மாதிரி, இங்கேயே கைவரிசையைக் காட்டினானே அந்தப் பக்கிரி! அவனைக் கண்டா, வெட்டி வெட்டிப் போட்டு விடுவேன் என்று இப்பக்கூட ஆத்திரம் தணியாமத்தான் பேசறான் நம்ம கன்னி."
‡‡‡
‡‡‡
கொலை! கொலை! படுகொலை!
"பழைய விரோதம் காரணமாக பக்கிரி என்பவன் முப்போனூர் விவசாயத் தொழிலாளி கன்னி என்பவனைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டான். போலீஸ் புலன் விசாரிக்கிறது" என்று செய்தி இருந்தது.