பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி
10
வள்ளியின் தேவி
அந்தப் பசுங்கன்று, 'அம்மா' என்றழைத்ததுமே, துள்ளி எழுந்திருப்பாள், வள்ளி. தாயில்லை 'தேவி'க்கு, நான்தான் இனிமேல் துணை என்று தாயாகும் வகைகூட அறிய முடியாச் சிறுமி, வள்ளி எண்ணிக் கொண்டாள். அவ்வளவு ஆசை அவளுக்கு கன்றிடம் அந்தப் பசுங்கன்றும் அன்புடன் தன்னைக் காக்கும், வள்ளியைக் கண்டதுமே வாலடித்துக் காதாட்டி, கழுத்தை வளைத்து வளைத்து, ஏதேதோ பேசி நிற்கும்! இப்பெண், கன்று பேசுவதைக் கண்டறிந்து கொண்டவள் போல், 'அடிவயிற்றிலே முள்ளா? ஐயோ, பாவம்! உனக்கு எவ்வளவு வலித்திருக்கும்! ஏன் போனாய் புதர் நடுவில்! புல் இருக்கும் இடம்விட்டு, போக்கிரியாய்த் திரிகின்றாய்—பார்த்தாயா, முள் தைத்து இந்தப் பாடு படுகிறாய். வேண்டாமடி தேவி! வேளை தவறாமல், புல் பறித்து நான் தருவேன்; என்ன குறை உனக்கு?" என்றெல்லாம் பேசுவாள், சிரிப்பாள், கன்றின் கழுத்தைத் தழுவி நிற்பாள்; முத்தம் கூடச் சில சமயம், கொடுத்து விட்டுச் சுற்றுமுற்றும் பார்ப்பாள். இத்தனைக்கும் அந்தக் 'கன்று' தரமான சிந்தி என்றும் சௌராஷ்டிரப் பசுவென்றும், கூறுவது போன்ற இனமும் அல்ல; வள்ளிபோன்றே, கிராமத்து இனம்தான். ஆனால், அதற்கு மட்டும், தானாக ஓர் அழகு, தளதளவென்று வந்தது. மானல்ல பசுதான்! அதன் கண் மட்டும் அந்த விதம் என்று பலரும் கூறும் எழிலோடு இருந்தது. என்ன பெயரிட்டு, என் கன்றை நானழைக்க என்று ஏழேட்டு நாட்கள், வள்ளி எண்ணி எண்ணிப் பார்த்தாள். ஊரார், பாலும் பழமும் போட்டுப் படையலையும் போட்டு, கும்பிட்டுக் கொண்டாடும் குலதெய்வத்தின், பெயர் தேவி! அந்தப் பெயரையே நான் என் கன்றுக்கு வைத்திடுவேன் என்று அந்தச் சிறுமி சொன்னாள்; அப்பா செய் என்றார்; அம்மாவும் உள்ள வேலைகளை விட்டு, 'உனக்கேண்டி வீண் வேலை? மேயவிடு, காலாற கட்டிப் போட்டு வைத்தால், காசுக்கு உதவாது; புல் தேடி மேய்ந்தால் தான், வலிவுபெறும்; வளரும்' என்பாள். தேவிக்கு வேண்டியதைத் தேடித் தருவதிலே அவள் பெற்ற இன்பத்தைத் தாய் அறிந்து கொள்ளவில்லை.
"தேவி"யைப் பெற்ற பசு, தேனப்பன் குடிசையிலே இருந்தது. பால் விற்றுப் பணம் சேர்த்து, பட்ட கடன் தீர்த்திடலாம் என்ற திட்டம் கொண்டு, பக்கத்து ஊரினிலே, வட்டிக்குக் கடன் கொடுக்கும் வரதப்பனிடமிருந்து, வாங்கி வந்த இரு நூறு ரூபாயும், வாழையடிச் சந்தையிலே கொடுத்துக் கொண்டு வந்தான், தேனப்பன், பசு ஒன்று.
சிற்றூரில் இருப்போர்க்கு இது சேதி. எனவே அவர் தேனப்பன் முற்றம் வந்து பார்த்து, சுழிகண்டு, மடிகண்டு, 'நல்ல பசுதானப்பா! விலையும் அதிகம் இல்லை! மேய்ப்பிலும் தேய்ப்பிலும், தீனி நன்றாய் வைப்பதிலும் தான், பசுவுக்குப் பால்வளம் அதிகமாகும். ஆகவே அதளை நன்றாகக் கவனித்து, வளர்த்துவா' என்றுரைத்துப் போனார்கள். எனக்கென்ன, இதைக் கூடக் கற்றுக் கொடுத்திடவா வேண்டும் என்றெண்ணித் தேனப்பன் சிரித்துக் கொண்டான்.
ஆயிரம் கொடுத்தாலும், இதற்கு ஈடு காணாது என்று கூறி ஏழெட்டு ஆண்டுகளில், மெத்தப் பொருள் குவித்த, மேட்டுக் குடிவாசி, மெய்ஞானம் பிள்ளை, வாங்கி வந்த பசுவை, பக்குவமாய்ப் பராமரித்து வரும் பழக்கம் அவனுக்கு உண்டு.
மெய்ஞானம் வீட்டிலே, தேனப்பன் வேலைக்காரன். என்னென்ன வேலைகளை எஜமான் தருகின்றாரோ அதனை எல்லாம் செய்து முடித்துவிட்டு, வீடு திரும்பு முன்னே, 'பசுவுக்கு வேண்டியதைப் பார்த்துச் செய்தாயா?' என்று அவர் கேட்பார் ; இவன் அதனையும் செய்திடுவான்.
அதனால், பசு வளர்க்கும் முறையிலேயும் அவன் பக்குவம் பெற்றிருந்தான். எனவே தான், எளிதாய், பசு வளர்த்துப் பால் விற்றுப் பணமும் சேர்க்கலாமென்று அவனுக்கு எண்ணம் வந்தது.
வாங்கி வந்த பசுவின் கன்றுதான் தேவி.
தாயுடன் கன்று சேர்ந்து தோட்டத்துக்கு அழகு தந்திட்டது கண்டு, தேனப்பனும் மகிழ்ந்தான். ஆனால், ஓர் நாள், மேய்ந்து விட்டு வந்த பசு, வயிறு உப்பிப் போய் மேல் மூச்சு விட்ட படி, மிரள மிரள விழித்தது கண்டான்.
தாய் படும் கஷ்டத்தின் தன்மை அறியாக் கன்று, வழக்கம் போல், துள்ளுவதும், வாலாலடித்து மகிழுவதும், கயிற்றை அறுத்துக் கொண்டு பாலுண்ணப் பாய்வதுமாய் இருந்தது.
பசுவோ, வாய்விட்டு எதைச் சொல்லும்! வயிற்றிலே வேதனை. நிற்க முடியவில்லை, நிலை கொள்ளவில்லை. தாள முடியாத வலியால், பசு, காலை உதைத்ததும் கண்ணில் நீர் வடித்தும், கம்மிய குரலாலே 'அம்மா' என்று கதறுவதுமாக இருந்தது.
தேனப்பனுக்கு அன்று அதிக வேலை. தெருவிலே போட்டிருந்த பந்தல், பழசாகிப் போனதாலே, பார்க்க நன்றாக இல்லை. 'பிரித்துவிடு' என்றார் எஜமான்.
பந்தல் அமைப்பதற்கு ஆட்கள் உண்டு தனியாக. பிரிக்கக் கூடவா அவர்கள்? இதை நீ செய்யலாமென்றார். அவர் சொல்லியான பின்னர், ஆகாது என்று சொன்னால் சீட்டுக் கிழிந்து விடும். தேனப்பனுக்குத் தெரியும். ஆகவே, பந்தலினைப் பிரிக்கும் வேலையினை மெத்தக் கஷ்டத்தோடு தேனப்பன் செய்திட்டான்.
மேலே கழிகள் விழும்; இவனும் கீழே விழுவான்; ஏணி நழுவுவது இவனுக்குத் தெரியாது. தூசு கண்ணில் விழும்; துளைத்துக் கொண்டு கண்ணீர் வரும்; நின்று அதைத் துடைக்க நேரம் இல்லை. பந்தலிலே பாதி அளவும் பிரித்து ஆகவில்லை; பகல் போது பயந்து ஓடுவது, இவனுக்குத்தான் தொல்லை.
இத்தனை தொல்லைக்கிடையில், மூங்கிற் கழியினிலே. பொந்தமைத்து இருந்து வந்த, கருந்தேள் வெகுண்டு வந்து, தேனப்பன் கைவிரலைக் கொட்டிற்று. துடித்து அவன் அழுதான்—'தேளை அடித்தாயா,விட்டாயா,' என்று கேட்டு எஜமானர் கோபத்தைக் கொட்டுகிறார்.
'பச்சிலை போடாவிட்டால், நெஞ்சுக்கு விஷம் ஏறும்' என்று கூறினாள், கூட்டி மெழுகும் வேலை செய்துவரும் காமாட்சி.
'சுண்ணாம்பை எடுத்துத் தேள் கொட்டிய வாயில் வைத்து அப்பினால், விஷம் போகும் அரை நொடியில் வலியும் போகும். கைகண்ட மருந்து இது' என்று கடன் வாங்க வந்திருந்த சின்னப்பன் சொன்னான். இதற்குள், தேனப்பன் உடல் வேர்த்து, மார்பு அடைப்பது போலாகிப் போக, 'இனி வீடு போடா! தேனப்பா! உன்னை நம்பி, எந்தக் காரியம் தான் ஒழுங்காக நடந்திருக்கு! ஏதேதோ கிடைக்கும் சாக்கு!' என்று எஜமானர், எரிச்சலோடு ஏசினார். இவன் மார்பிலோ, எரிச்சல் மூண்டது.
ஓடினான் மருந்து போடும் உத்தண்டன் குடிசைப் பக்கம்! அங்கு அவனும் இருந்ததாலே, கிடைத்தது பச்சிலை மருந்து. நோயும் குறைந்தது; ஆனால் அலுப்பு மேலிட்டது.
அதனால் தேனப்பன் அன்று அயர்ந்து தூங்குகிறான். அவன் பட்ட கஷ்டமெல்லாம் அறிந்ததனால் அவன் மனைவி பசு கதறும் குரல் கேட்டுப் பதறிப் போனாள். எனினும், அவனை எழுப்பவில்லை; தானே எழுந்து போய்த் தடவிக் கொடுத்துப் பார்த்தாள்; தண்ணீர் வைத்துப் பார்த்தாள்; பசுவோ முன்பை விட வலி கொண்டு துடிதுடித்துக் கிடந்தது. என்ன எண்ணமோ, கிட்டே வந்த கன்றை, நாவினால் தடவிற்று, கண்ணீரைப் பொழிந்த படி.
அம்மா! என்றழைப்பேன். அலறி அருகே வருவதுதான் என் தாயின் வாடிக்கை. இன்று என்ன இது? என் தாயே, 'அம்மா! அம்மா!' வென்று அழுதழுது அழைக்கின்றாளே. நான் என்ன கண்டேன், நானோ சிறு கன்று! என்று எப்படிச் சொல்லும்—ஆனால் பார்வை, இதைத்தான் சொல்லிற்று.
"தாயே மகமாயி! தயை செய்ய வேணுமம்மா. வாயில்லா ஜீவன் இது. வதைபடுவது அழகா! நீதான் காப்பாற்றவேணும்" என்று சாமியை வேண்டிக் கொண்டு, போய்ப்படுத்தாள், தேனப்பன் மனைவி.
கோழி கூவிற்று. படுக்கையில் இருந்தபடி கண்விழித்துப் பக்கம் படுத்திருந்த கணவனைப் பார்க்கலானாள். அங்கு அவன் இல்லை. அலறித் துடித்தெழுந்து, தோட்டப்புறம் சென்றாள்; அங்கு தேனப்பன், தலையில் கைவைத்து, பசு எதிரில் உட்கார்ந்திருந்தான். நொப்பு, நுரை தள்ளி, பசுவும் இருக்கக் கண்டாள். குரலெடுத்துப் பார்த்து விட்டுப் பசு குமுறிக் கிடக்கும் நிலை. தாயின் முகம் பார்த்துப் பார்த்தழுதபடி கன்று இருக்கக் கண்டான்.
"என்ன இது கண்றாவி! இப்படியே விட்டு வைத்தால், மோசம் போய் விடுவோம். கூட்டிவா, யாரையேனும்" என்று மனைவி கூறக் கேட்டுத் தேனப்பன் யோசித்தான்; முடிவு செய்தான்.
"கன்றைக் கவனித்துக்கொள்; கஷ்டத்தோடு கஷ்டமாகப் பசுவைக் கொண்டு சென்று காட்டுகிறேன் கோவிந்த டாக்டரிடம். சிந்திப் பசுவுக்கு சளி ஜுரம் வந்த போது, எஜமான் அழைத்தார். இந்தக் கோவிந்தன் தான் வந்தார். ஊசி போட்டார். உடனே நோய் ஓடிப் போய் விட்டது. நானும் நமது பசுவை, அவரிடமே காட்டுகிறேன். மனிதருக்கு வருகின்ற நோய்களெல்லாம் இப்போது, மாடுகளுக்கும் வந்து தொலைக்குதென்று, கோவிந்த டாக்டர் சொன்னார்" என்று கூறி, கயிற்றை அவிழ்த்தான், தேனப்பன்.
பசுவோ, ஒப்பவில்லை; மிச்சம் உள்ள வலியைக் காட்டி, இழுத்தபடி இருக்கிறது. 'என் கன்று இங்கு இருக்க, ஏன் என்னை வாட்டுகின்றீர். மருந்துண்டு பயனும் ஏது? இரவு முழுவதும் வயிற்றினுள்ளே குடிகொண்ட நோயும் என்னைக் குற்றுயிராக்கிவிட்டது. கண்மூடும் வரையில், கன்றைக் காணலாம். இங்கிருந்தால்: ஆவிபோகும் வரையில், நாவினால் நீவி நீவி, என் அன்பினை அளித்து மகிழ, நான் கன்றுடன் இருக்க வேண்டும்—மருத்துவமனை இழுத்துச் செல்ல வேண்டாம்' என்று அந்தப் பசு எண்ணிற்று போலும். அதுதான், என்றைக்கும் இல்லாத முறையில் அன்று, முரட்டுத்தனமும் செய்து முட்டவும் செய்தது.
தாயுடன் இவர்கள் ஏதோ மல்லுக்கு நிற்கிறார்கள்; நாம் இந்த நேரம் நம்மாலானது செய்வோம் என்று எண்ணியோ என்னவோ, கன்றும், 'அம்மா, அம்மா' என்று அழுதபடி அருகே நின்ற தேனப்பனைக் காலால் உதைத்தது; பலமாகத்தான்.
கோபத்தால் தேனப்பன் கன்றை ஓங்கி அறையப் போனான். "வேண்டாமப்பா! கன்று தாளாது, கனமாக அடித்தால்" என்று சொல்லி அதற்குத் துணையாய் நின்றாள் சிறுமி வள்ளி.
தன் பக்கம் வந்த வள்ளியை நாவினால் தடவி நின்ற கன்றினைக் கண்டு பசு கதற, அங்கு இருந்த நிலை, நெஞ்சிலே இரக்கம் உள்ள எவரையும் உருக்கும்.
தேனப்பன், இழுத்துச் சென்றான்; தெருவிலே கண்டோரெல்லாம், தேறுவது கடினம் என்றனர்; இவன் தேம்பிடும் நிலையும் பெற்றான்.
"கைராசி உள்ள டாக்டர், கோவிந்தன் என்பார். அதனால், எப்படியும் என் பசுவை அவர் காப்பாற்றிவிடுவார்." என்று நம்பினான் நடுக்குற்றாலும்.நாலைந்து வீடே மிச்சம்—பிறகு ஓர் சின்னத்தோட்டம்—தோட்டத்தை ஒட்டியே தான் முற்றமொன்றும் இருக்கிறது—டாக்டர், அங்கு தான், வழக்கமாக, மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பார்.
சென்றான் தேனப்பன் அங்கே—டாக்டர் இல்லை.
'ஏனப்பா' என்று கேட்டான், டாக்டரின் வேலையாளை.
"நேற்றே சென்றார் டாக்டர்! நெடும்பாளூர் மிட்டாதாரர் நேசமாய் வளர்க்கும் நாய்க்கு இவர் தந்த மருந்தினாலே, சுகமாகப் பிரசவமாச்சாம்—அதற்காக விருந்து அங்கே!" என்று அவன் சேதி சொன்னான். தேனப்பன் பசுவைப் பார்த்தான்; பசுவோ, எங்கெங்கும் தன் கன்று கண்டு குரல் கொடுக்கலாயிற்று—ஆனால் ஒவ்வோர் முறையும் குரலில் ஒலி குறைந்து வருகிறது கண்டு, உடன் இருந்த வேலைக்காரன், 'நேர்த்தியான பசுதான்; நேற்றே வந்திருந்தால், பிழைத்திருக்கும்!' என்று சொல்லி, நீட்டுகிறான் சாவோலை வார்த்தையாலே.
"கெட்ட பேச்சுப் பேசாதே அப்பா!" என்று, மனம் நொந்து தேனப்பன் கூறுகின்றான். பசுவோ, நிற்க முடியாமல், தரையில் சாய்ந்தது. தேனப்பன் அழுதான்.
"ஆமாமாம்! மோட்டார் சத்தம்; அவர்தான்; அவர் தான்!" என்று அலறினான், மகிழ்ச்சியோடு. டாக்டர் வந்தார். தேனப்பன் அவர் கால் தொட்டு, வார்த்தைகள் பேசாமலேயே வீழ்ந்திருக்கும் பசுவினைக் காட்டுகின்றான்.
'விழி ஆடுகின்றதா' என்று பார்க்கின்றார், டாக்டர்.
சிறிதளவு அசைவு இருக்கிறது என்றாலும் ஒளி போய்க் கொண்டே இருக்கிறது.
"நேற்றிரவு முழுவதும் கத்திக் கத்தி..." என்று சேதி சொல்ல வந்த தேனப்பனைத் தடுத்து, டாக்டர் சொன்னார்.
"வயிறு உப்பிப் போனது தான் தெரிகின்றதே! மாடு, கன்று, வாங்கிடுதல் எளிது அப்பா! ஆனால் அதனை வளர்த்திடச் சக்தி வேண்டும்; புத்தியும் வேண்டும். சிந்திக்கு சளி என்று கண்டதுமே, சேதி சொல்லி அனுப்பினார் உன் எஜமான். நீயோ, குற்றுயிரான பின்னே, கொண்டு வந்தாய், உன் பசுவை. நான் என்ன செய்ய? கடுகளவேணும் கவனீப்பு இல்லை. காட்டிலே மேயவிட்டாய், தீனிபோட மனமில்லாமல். ஏதேதோ விஷச் செடியைத் தின்றதாலே இதற்கிந்தக் கதி வந்ததப்பா. இனி ஒன்றும் மருந்து இங்கு இல்லை. 'இதோ! இனி இதற்கு மருந்தும் தேவையில்லை!" என்று அவர் சொல்லும் போதே, இழுப்பு வந்தது போலாகிப் பசுவும் துடித்தது ஒரு விநாடி; பின்னர் தொல்லை நீங்கி, நோயை வென்று, பிணமாயிற்று.
தேனப்பன் வீட்டுக்கு அன்று வரவேயில்லை.
தேம்பிக் கிடந்த வள்ளிக்கு ஆறுதல் கூற எவராலும் இயலவில்லை.
வீட்டிற்குள்ளே இருக்கவே வள்ளிக்கு மனமும் இல்லை. கன்றைக் கட்டி அழுதபடி இருந்தாள், தோட்டந்தன்னில்.
அன்று வள்ளி கொண்ட பாசம், தேவிக்கு தாயில்லாக் குறையைப் போக்கிற்று.
எவ்வளவு கடினமான வேலை வந்து குவிந்தாலும், தேவிக்கு வேலை செய்யத் தயங்கிடமாட்டாள், வள்ளி.
குளிப்பாட்ட, நல்ல குளம் அழைத்துச் சென்று, அதற்குத் துணை நின்று, கழுவி விட்டு அழகு பார்ப்பாள்...
தாமரை கிடைக்கும் அங்கு; அதை எடுத்து 'தேவி'க்கு மாலையாக்கி அழகு பார்ப்பாள்.
தொழுவத்தைச் சில நாட்கள் பார்த்துப் பார்த்து, அழுதிட்ட 'தேவி'யும், வள்ளி அன்பால், புதுத் தெம்பு கிடைக்கப் பெற்று, பொலிவு பெற்று வளர்ந்து வரக் கண்டார் ஊரார்."வள்ளிக்குக் கன்றின் மேல் உயிர். கண்டீரா! வரப்போகும் கணவனுக்குக் கூட, இவள் இத்தனை பணிவிடைகள் செய்ய மாட்டாள் போலிருக்கிறதே, என்ன கூத்து!" என்று பொக்கை வாய்ப் பாட்டிகள் சொல்வர்; வள்ளி, 'போ, பாட்டி! எப்போதும் உனக்குக் கேலிதானா?' என்று கேட்பாள். கேட்கும் போதே, 'தேவி' மீது கண் இருக்கும்; கரத்தால் முதுகைத் தடவிக் கொடுத்தபடி தானிருப்பாள்.
'தாய் போன பின் கன்று ஏன் தான், வீணாய். இதனை விற்றால், கடனிலே ஒரு பகுதி கட்டலாமே' என்றெண்ணித் தேனப்பன் பேசும் போதே, எழுந்து போய், அவன் காலைக் கட்டிக் கொண்டு, 'என் கன்றை விற்காதீர். வேண்டாமப்பா! எப்பாடு பட்டேனும், நான் வளர்ப்பேன். பாரப்பா, தாயால் வந்த, கடனையும் தேவி தீர்ப்பாள், ஓர் நாள்! அதற்கெல்லாம் நான் உறுதி. நம்பு அப்பா! கன்று போனால் நான் தாளமாட்டேன்" என்று கெஞ்சுவாள் வள்ளி. அவன் சிரித்துக் கொண்டே, "இவளுக்குத்தானென்ன பைத்யமோ? சரி! சரி! போ! கன்றும் நீயும் சுகமாக வாழுங்கள், அதுபோதும்" என்பான். 'எங்கப்பா தங்கப்பா!' என்று சொல்லி, எகிறி குதித்திடுவாள், வள்ளி.
பச்சைப் பசேலென்ற காட்சி காட்டும் பட்டிக்காடு தான் பாங்கான பூமி! பாவலர்க்கு மட்டுமல்ல; ஓவியர்க்கும்! அதனால் ஓர்நாள், வள்ளியுடன் தேவி விளையாடும் காட்சி, படமெடுத்தான் ஓர் இளைஞன், பின்னர் ஓவியம் தீட்ட.
'என் கன்றை போட்டோ'வும் எடுத்தாரப்பா.' என்று எக்காளமிட்டாள் வள்ளி.
ஓர்நாள், தேவிக்கு விளையாட்டு வேகம். வள்ளி கரமிருந்த கயிற்றினை அறுத்துக் கொண்டு, மான் தோற்க ஓடிற்று வயலை நோக்கி; நான் அழைத்தும் போகின்றாய்; போ! போ! தேவி! நான் இனி உனக்கு அக்கா அல்ல!! என்று கூறுவாள் போல் வள்ளி, கோபம் காட்டித்தான் போனாள், விளையாட்டை விட்டு, 'தேவி' பின்னோடு வருமென்று, வீட்டுப் பக்கம் நடக்கலானாள்.சிறிது தூரம் நடந்து, வள்ளி திரும்பிப் பார்த்தாள்; தேவி காணோம். 'தேவி! தேவி!' என்று அழைத்தாள், குரலை உயர்த்தி. எங்கோ 'ளொள், ளொள்' என்று நாய் குரைக்கும் ஒலிதான் கேட்டாள்.
ஆள் உயரம் வளர்ந்து விட்ட சோளக்கொல்லை; காற்றுமில்லை; ஆனால் ஆடுகிற நிலையில் கண்டாள். அங்கு தான் நாயின் சத்தம். தேவியும் அங்கு தான் மேய்கின்றாளோ. காவலுக்கு உள்ள நாய் துரத்தித்தான் இந்தக் கடும் சத்தம் எழுப்புகிறது என்று எண்ணிக் கவலை கொண்டாள். சோளக் கொல்லை, களமாயிற்று. தேவியைத் துரத்தித் துரத்தி, நாயும் கடிக்கிறது, வெறி கொண்டது போல. ஓடிப்பழக்கமுண்டு தேவிக்கு; என்றாலும் அன்று பூசனைக் கொடியொன்று காலில் சிக்கி, ஓட்டத்தைத் தடுக்கிறது; நாய்க்கு வேட்டை!
தேவிக்குத் தான் ஏதோ ஆபத்தென்று, தலைதெறிக்க ஓடுகிறாள் வள்ளி சோளக்கொல்லை நோக்கி. அங்கு அவள் கண்ட காட்சி, பயமூட்டிற்று; கன்று கடிப்பட்டுக் களைத்து வீழ்ந்து கிடக்கக் கண்டாள். புண் கண்டு வெற்றி கண்டோம் என்று எண்ணி, போக்கிரி நாயும், சுற்றிச் சுற்றி வந்து தன் வீரம் ஊரார்க்குக் கூறுவது போல, குரைத்தபடி இருந்தது; குலை நடுங்கிற்று.
தேவியை நெருங்கிப் போக முடியவில்லை; நாய் இவளை முறைக்கிறது; குரைக்கிறது; கடிக்க வருகிறது. போய்த் தேவியைக் காக்காவிட்டால் பொல்லாத நாய் மேலும் கடித்தே போடும். என் செய்வாள் வள்ளி? எடுத்தாள் ஓர் கல்— குறிபார்த்து தன் கோபமெல்லாம் கல்லோடு கூட்டி, வேகமாய் வீசினாள் நாயைப் பார்த்து. விர்ரென்று பறந்தது அந்தக் கருங்கல் துண்டு; வெறி பிடித்த அந்த நாயின் மண்டையில் வீழ, துடிதுடித்து நாய் கத்தி, சுருண்டு வீழ்ந்தது; அப்போதே செத்தது.
'செத்தொழிந்து போனாயா, நாயே!' என்று சொல்ல மனமில்லை, வள்ளிக்கு; துரத்திவிடத்தான் கல்லை வீசினாள். அது அந்த நாயைச் சாகடிக்கும் என்று அவள் எண்ணவில்லை; திகைத்து நின்றாள்.
'டாமி! டாமி!' என்றோர் சத்தம்! வள்ளி, திகில் கொண்டாள். 'நாய்க்குச் சொந்தக்காரன் வருகின்றானோ, நான் செய்தது கண்டால், என்னை விடவே மாட்டான். போய் ஒளிந்து கொள்ள வேண்டும்' என்று எண்ணி வேறோர் புறம் ஒதுங்கிப் புதர் நாடிப் பதுங்கிக் கொண்டாள்.
மீண்டும், 'டாமி! டாமி!' எனும் சத்தம்.
எவரும் அறியா வண்ணம், இனி இங்கு இருந்திடுதல் ஆபத்து என்று, வீடு சென்றாள், வள்ளி; கன்று இல்லை.
'கன்று எங்கே, வள்ளி' என்று கேட்டான், தேனப்பன்—கண்ணீர் விட்டாள்—மென்று விழுங்குவது போலச் சேதியை மெல்ல மெல்லச் சொன்னாள் வள்ளி.
"ஐயையோ! அப்படியா செய்து விட்டாய். மிட்டா மாணிக்கம் என்னும் முரடன் நாய் தான், அந்த டாமி. இந்நேரம் கண்டிருப்பான், நாய் செத்திருக்கும் கோரம். கோபம் மூண்டிடுமே, என்ன செய்வானோ? வள்ளி! நீயும் கல்லை வீசுகையில் கண்டார், உண்டோ?" என்று திகில் கொண்ட தேனப்பன் கேட்கலானான்.
"இல்லை அப்பா!" என்று சொன்னாள், விக்கி, விம்மி.
"ஏலே! யார் அங்கே!" என்றோர் குரல் கேட்டுத் தெருவில் வந்தான்; கையில் துப்பாக்கியுடன், நின்றான் மிட்டா! அவன் காலடியில் கிடந்தது, கன்று; தேவி!
'உன்னுடையதா, கன்று?' என்று கேட்டான், மிட்டா!
ஆமாம் என்பதனைக் காட்டத் தலை அசைத்து நின்றான் தேனப்பன்.
'எங்கே வள்ளி?' என்று அந்த மிட்டா கேட்டான். தேனப்பன், ஏதேது எல்லாமே தெரிந்து தான் இங்கு இவன் வந்துள்ளான் என்று எண்ணி நடுங்கிப் போனான்.மாணிக்கம் சிரித்தான். 'போ! போ! வள்ளியிடம் கூறு. கன்று சாகவில்லை; என் நாயைக் கல்லாலே அடித்துக் கொன்றாள். நான் அதனைக் கொல்வதற்கு முன்னதாக வெறி அதற்கு. அதனாலே சுட்டுக் கொல்ல காட்டுப் பக்கம் கூட்டி வந்தேன். சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி நாயும், கன்றினைக் கடித்தது; கண்ட வள்ளி, கல்லால் அடித்துக் கொன்றாள்' என்று கூறி நின்றான், மாணிக்கம். தேனப்பன், மகிழ்ந்தான், கேட்டு.
உள்ளே ஒடுங்கி இருந்த வள்ளி, ஓடோடி வந்து கன்றை ஆவலோடு, தடவிக் கொடுத்தாள்—உடனே தேவி தாவிற்று, அவள் மேலே வழக்கம் போல.
"இப்போதே டாக்டரிடம் எடுத்துச் சென்று, ஏதேனும் மருந்து கொடு. கன்றை வெறி கொண்ட நாய் கடித்த காரணத்தால், விஷம் இருப்பினும் இருக்கும்," என்று கூறித் துப்பாக்கி துடைத்தபடி சென்றான் மிட்டா. துயரத்திலாழ்ந்து விட்டான், தேனப்பன்.
'டாக்டரிடம் தான், தாயும் அழைத்துச் சென்றேன்!' என்று சோகித்து அவன் நின்றான் ; வள்ளி, 'இப்போதுமா டாக்டர் மருந்து இல்லை என்று கூறிடுவார்? வா அப்பா' என்று கூறினாள்.
சென்றனர், கன்றுடன்.
டாக்டரைக் கண்டனர்; முன்பிருந்தவர் அல்ல: இளைஞர் அவர். கன்றின் வனப்பைக் கண்டார்; அதைக் கண்ணீரால் நனைத்தபடி நின்ற பெண்ணைக் கண்டார். 'இத்தனை அன்பு உனக்கு இந்தக் கன்றினிடம் இருப்பது கண்டு மகிழ்கின்றேன். பெண்ணே! பயப்படாதே! கன்றுக்கு ஆபத்து வராது, காப்பேன்' என்றார்! அதன் கழுத்திலே கரம் சேர்த்து வள்ளி முத்தமிட்டாள்.
காதசைத்து, கன்று அன்பைக் காட்டிற்று-வள்ளியிடம்! கண்டார் டாக்டர்.'வாயில்லா ஜீவன் என்று கூறுகின்றோம். காதும் கண்ணுங்கூட, மொழி பேசும் வித்தை காணீர்' என்றான்; மருந்தளித்தான் தேவிக்கு, வள்ளி காண.
தேவி பிழைத்துக் கொண்ட சேதி, தெருவெல்லாம் பரவிற்று.
வள்ளியின் முகமோ, புதுப் பொலிவு பெற்றது; மகிழ்ச்சி வெள்ளம்!
'என் கன்றுக்கு இணையாக இன்னொன்று உண்டோ. ஈரேழு பதினாலு லோகம் முற்றும்' என்றெல்லாம் கூவீ ஆடுகின்றாள்; என்னாலும் முடியுமென்று கூறுவதுபோல, தேவியும் துள்ளித் துள்ளி ஆடிற்று.
'பத்தோ பதினைந்தோதானப்பா தரலாம் இந்தப் பசுங்கன்றுக்கு. என்றாலும், வட்டிக்கு ஆகிலும் இது கிடைக்கட்டும்' என்று கூறி இழுத்துச் சென்றான் தேனப்பனுக்குக் கடன் கொடுத்த வரதப்பன். வள்ளி வீழ்ந்தாள் கீழே! கயிறறுத்து ஓடி வந்த கன்று, பக்கம் நின்று, நாவால், வள்ளியின் நெற்றியினைத் தடவிற்று; கண்டார்.
வரதப்பன், என்ன செய்வான்?
'இதை எல்லாம் பார்த்திருந்தால், என் பணத்துக்குத்தான் கேடு. ஏடா! போ! போ! பணம் கொடுத்து விட்டுப் பசுங்கன்றை நீ, பரிவோடு வளர்த்திடலாம். இல்லையென்றால், பத்தோடு பதினொன்று என்பது போல், பசுங்கன்றும் என் தோட்டம் சேரும்' என்றான்.
'இந்தா இருபது ரூபாய் நோட்டு. கன்றை விட்டுவிடு!' என்று கூறி நின்றான், எங்கிருந்தோ அங்கு வந்த இளைஞன்.
கன்று, வள்ளி கரம் சேர்ந்தது; கண், கேள்வியைக் கேட்டது.
"கன்றும் நீயும் ஆடிய காட்சியை, படமெடுத்தேன் ஓர் நாள். பின்னர் அதனை ஓவியமாய்த் தீட்டினேன்; அது கண்ட நல்லோர் எனக்குத் தந்தனர் பரிசு! அதில் இது சிறு தொகை!" என்றான் இளைஞன்.
அவன் கூறும் சேதி, தன்னைப் பற்றி என்று அறிந்தோ, தேவி காதை, அவன் பேச்சுக் குரல் பக்கம் காட்டி, நின்றது; அழகான தோற்றம்.
"பாரப்பா, என் தேவி! தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் நிலைபெற்றுவிட்டாள். இதுமட்டும் அல்ல அப்பா முன்பே சொன்னேன்! முன்னம், தாயாலே ஏற்பட்ட கடனெல்லாம், தேவியே தீர்த்து வைப்பாள்; பார் எந்தன் பேச்சை" என்று வள்ளி கூறிவிட்டு, வாரி அணைப்பது போல் தேவியைத் தழுவுகின்றாள்.
தேவியும் வள்ளியின் காதோடு, தன் வாயைக் கொண்டு சேர்த்து ஏதேதோ கதை பேசி மகிழ்கிறது.
★