பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 15


15-ஆம் அதிகாரம்
ஞானாம்பாளைச் சிறை யெடுத்தவன் வரலாறு

ஞானாம்பாள் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கிறவரையில் என்னை ஒருவரும் கவனிப்பார் இல்லை. அவள் பிரஸ்தாபித்த மாத்திரத்தில் எல்லாருடைய கண்களாகிய வண்டுகள் என்னுடைய முகத் தாமரைமேலே மொய்க்க ஆரம்பித்தன. சம்பந்தி முதலியார் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு செய்த ஸ்தோத்திரங்களுக்கு அளவு சங்கியையில்லை. அவர் சந்தோஷத்தினால் என்னை எவ்வளவு இறுகக் கட்டிப்பிடித்தாரென்றால், நான் மூச்சுவிட இடம் இல்லாமல் திக்குமுக்காட ஆரம்பித்தேன். நான் அவர் பிடித்த பிடியைத் திமிரிக்கொண்டு அவரைப் பார்த்து “ஞானாம்பாளைக் கொண்டு போனவர்கள் இன்னாரென்று தெரியவில்லை. வடக்கே இருந்து வந்து ரஸ்தாவில் ஞானாம்பாளை வளைத்துக் கொண்ட நாலு பேர்களில் குண்டுபட்டு விழுந்துவிட்டவர்கள் போக, மற்ற இரண்டு பேர்களையும் பிடித்துக் கட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். அவர்களை விசாரித்தால் உண்மை தெரியலாம்” என்று சொன்னேன். எல்லாரும் நான் சொன்னது சரிதான் என்று ஒப்புக்கொண்டு, அந்த இருவரையும் விசாரிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவன் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறான்; “நாங்களிருவரும் பூங்காவூர்த் தாசில்தாருடைய சேவகர்கள். அவர் இந்த அம்மணியினுடைய அழகையும் குணாதிசயங்களையும் கேள்விப்பட்டுத் தான் மணஞ்செய்துகொள்ள வேண்டுமென்று விருப்பமானார். அதைக் குறித்துத் தங்களுக்குப் பல கடிதங்கள் அனுப்பியும், தாங்கள் அநுகூலமான மறுமொழி அனுப்பாமையால், எப்படியாவது இந்தப் பெண்ணரசியைக் கொண்டுபோய் விவாகம் செய்கிறதென்று நிச்சயித்து, அதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். நீங்கள் இந்தக் கிராமத்துக்கு வந்திருந்து, மறுபடியும் உங்கள் ஊருக்கு நடுச்சாமத்திலே போகிறீர்கள் என்று அவர் கேள்வியுற்று எங்களையும் ஒரு பல்லக்கையும் அதி ரகசியமாய் அனுப்பி, எவ்விதத்திலும் இந்த மனோன்மணியைக் கொண்டுவரும்படி உத்தரவு கொடுத்தார். அந்தப்படி நாங்கள் நேற்றையத் தினம் பாதிச்சாமத்தில் வந்து சேர்ந்து இந்த வீட்டிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த அநேகம் பல்லக்குகளின் மத்தியில் நாங்கள் கொண்டுவந்த பல்லக்கையும் வைத்துவிட்டு மற்றவர்களைப் போல நாங்களும் படுத்துத் தூங்கினோம். விடிந்து போனால் எங்களுடைய மோசம் வெளியாகு மென்று நினைத்து இருட்டிலே பயணம் புறப்படும்படி நாங்களே மற்றவர்களை யெழுப்பிவிட்டோம். உங்கள் வீட்டு அம்மாமார்கள் எல்லாரும் தனித்தனியே ஒவ்வொரு பல்லக்கின் மேலே ஏறிக்கொண்டார்கள். இந்த அம்மணி வீட்டுக்குள்ளிருந்து, வெளியே வந்தவுடனே எங்களுடைய பல்லக்கின் கதவைத் திறந்து அதில் ஏறிக்கொள்ளும்படி சொன்னோம். இந்த அம்மணி கபடம் இல்லாமல் எறிக்கதவைச் சாத்திக்கொண்டு தூங்கிவிட்டார்கள். அந்தப் பல்லக்கைச் சிவிகையார் தூக்கிக்கொண்டு ஓடும்போது நாங்கள் இருவரும் பின்தொடர்ந்து போனோம். நாங்கள் மற்றப் பல்லக்குகளுடன் எங்களுடைய பல்லக்கையும் கொண்டுபோவது போல் மாரீசம் பண்ணி பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின்வாங்கினோம். மற்ற வாகனங்களும் ஆட்களும் கண்மறைகிறவரையில் மெல்ல மெல்லக் கொண்டுபோய் இருட்டில் ஒருவருக்குந் தெரியாமல் எங்களுடைய பல்லக்கைத் திருப்பி அதிவேகமாய்க் கொண்டு போனோம்.

நாங்கள் இருவரும் வெகு தூரம் பல்லக்குடன் சென்று, பிற்பாடு தாசில்தாருக்குச் சந்தோஷ சமாசாரம் சொல்லுவதற்காக நாங்கள் முந்திப் போய் பல்லக்கில் அம்மா வருகிற சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தோம். அவர் ஒரு வீட்டிலே தனிமையாய் இருந்துகொண்டு, சந்திரோதயத்துக்காகக் காத்திருக்கும் சாதக பக்ஷிபோல் அகமகிழ்ச்சியுடன் வழியைப் பார்த்துக்கொண்டிருந்தார். மத்தியானம் பதினைந்து நாழிகைக்குப் பல்லக்கு வந்து சேர்ந்தது. உடனே சிவிகையார் தாசில்தாரிடத்தில் வந்து “எசமான்கள் விரும்பின மாதரசியைப் பல்லக்குடன் கொண்டுவந்து விட்டோம். நாங்கள் பட்ட பிரயாசைக்குத் தகுந்த சம்மானம் செய்யவேண்டும்” என்று சொன்னார்கள். உடனே தாசில்தார் எழுந்து ஓடி அதிக ஆவலுடன் பல்லக்கைத் திறந்து பார்க்க உள்ளே ஒருவருமில்லாமல் சுத்த சூனியமாயிருந்தது. அவரும் நாங்களும் பல்லக்கின் மூலை முடுக்களெல்லாம் தேடிப் பார்த்தோம். இந்த அம்மணியை எங்கும் காணோம். பஞ்சரத்தில் இருந்த கிளி பறந்துபோன பிற்பாடு, பஞ்சரம் வெறுமையாயிருப்பதுபோல் பல்லக்கும் வெறுமையாயிருந்தது. தாசில்தாருடைய அப்பனும் பாட்டனும் தேடி வைத்த பொக்கிஷத்தை நாங்கள் அபகரித்துக் கொண்டது போல, எங்கள் மேலே ரௌத்ராகாரமாய்க் கோபிக்க ஆரம்பித்தார். அடிப்பார் என்று பயந்துகொண்டு, நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தூரவிலகினோம். எங்களை அடிக்க அவர் கையில் ஒரு ஆயுதமும் இல்லாமல் இருந்ததால் நாங்கள் தெருவிலே கழற்றி வைத்திருந்த எங்களுடைய செருப்பை அவர் கையிலே தூக்கிக்கொண்டு துரத்தினார். நாங்கள் அகப்படாமல் சிட்டாய்ப் பறந்தோம்; நாங்கள் ஓட, அவர் ஓட இவ்வகையாக வெகு தூரம் துரத்திவந்த பிற்பாடு அவர் கையிலிருந்த செருப்பை எங்கள் மேலே எறிந்தார். திரும்பித் தாசில்தாருடைய முகத்திலே மோதிற்று. ஔஷதப் பிரயோகத்தினால் விஷம் இறங்குவதுபோல் செருப்படி பட்ட பிற்பாடு, தாசில்தாருக்குக் கோபம் தணிந்து, எங்களை நயமாய்க் கூப்பிட்டுக் காரியங்களை விசாரிக்க ஆரம்பித்தார். போகிகள் “நடு வழியில் ஒரு இடத்தில் கள்ளுக் குடிக்கிறதற்காகப் பல்லக்கை நிறுத்தினோம்” என்று ஒப்புக் கொண்டபடியால், அந்த இடத்தில் இந்த அம்மணி தப்பிப் போயிருக்கலாமென்று உத்தேசித்து உடனே தாசில்தாரும் அவருடைய நேசனும் இரண்டு குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டு எங்கள் இருவரையும் கூட அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

நாங்கள் காடு மேடுகளெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு சூரியாஸ்தான சமயத்தில் இந்த அம்மணி ஏறிக்கொண்டு வந்த வண்டியைக் கண்டு மறித்தோம். அப்போது நடந்த யுத்தத்தில் தாசில்தாரும் அவருடைய நேசனும், குண்டுகள் பட்டுக் கீழே விழுந்துவிட்டார்கள். இந்த மனோன்மணி அப்போது மாறு வேஷம் தரித்திருந்த போதிலும், மேகத்துக்குள் மறைந்திருக்கிற சந்திரசூரியர்களை அவர்களின் பிரபை காட்டிவிடுவது போல இந்த உத்தமியை அவளுடைய முகக்காந்தி காட்டிவிட்டது. மற்றச் சங்கதிகளெல்லாம் அப்போது கூட இருந்த உங்களுடைய மனுஷருக்குத் தெரியுமானதால், நான் சொல்ல வேண்டுவதில்லை” என்றான். இதைக் கேட்ட உடனே சம்பந்தி முதலியார் மறுபடியும் என்னைத் தழுவிக்கொண்டு சொல்லுகிறார்:- “நீ செய்த உபகாரத்தை நான் ஒருநாளும் மறப்பேனா? என் புத்திரிகை காணாமற் போன உடனே உன் மேலும் சந்தேகம் நினைத்தேன். பிற்பாடு பல காரணங்களால் அந்தச் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. என் மகளுக்கும் எங்களுக்கும் பிராண பிக்ஷை கொடுத்துக் காப்பாற்றினாய்; உனக்குத் திரிலோகங்களையும் கொடுத்தாலும் தகும். ஆகிலும் நீ அங்கீகரிக்கும்படியான ஒரு சம்மானத்தை உனக்குச் செய்ய யோசித்திருக்கிறேன்” என்றார். அவரும் மற்றவர்களும் எனக்குச் செய்த ஸ்தோத்திரங்களையெல்லாம் ஞானாம்பாளுடைய ஒரு மந்தஹாசத்துக்குச் சமானமாக நான் நினைக்கவில்லை.