பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 16


16-ஆம் அதிகாரம்
ஆண்டிச்சியம்மாள் சரித்திரம்
மாமி நாத்திகள் கொடுமை

என்னுடைய ஸ்தோத்திரம் முடிந்தவுடனே, ஞானாம்பாளுக்குத் துணையாகவந்த ஆண்டிச்சி அம்மாளை எல்லோரும் புகழ ஆரம்பித்தார்கள். அந்த அம்மையை நோக்கி ““அம்மா நீங்கள் செய்தது பெரிய உபகாரம்; ஒருவரும் இப்படிப்பட்ட உபகாரஞ் செய்யமாட்டார்கள்; உலக நடை தெரியாத சில பெண்ணான ஞானாம்பாள், நடுக் காட்டில் உங்களிடத்தில் அடைக்கலம் புகுந்தது போல வேறே யாரிடத்திலாவது அடைக்கலம் புகுந்திருந்தால் அவளுடைய ஆபரணங்களை இச்சித்து அவளை ஜீவ வதை செய்திருப்பார்கள்; அல்லது அந்தத் தாசில்தாரிடத்தில் அவளை ஒப்பித்திருந்தாலும், அவன் தகுந்த வெகுமானஞ் செய்திருப்பான். அப்படிப்பட்ட ஆபத்துகள் இல்லாமல் ஞானாம்பாளை எங்களிடத்தில் நீங்கள் கொண்டுவந்து ஒப்புவித்தது பெரிய உபகாரம். இதற்கு நாங்கள் என்ன பிரதி உபகாரஞ் செய்யப் போகிறோம்?”” என்று வாழ்த்தினார்கள். அந்த ஆண்டிச்சி அம்மாள் நல்ல அந்தஸ்திலிருந்து மெலிந்து போனதாகச் சில குறிப்புகளால் தெரிய வந்தபடியால் அவளுடைய சரித்திரத்தைச் சொல்லும்படி வேண்டிக்கொண்டோம். அவள் எங்களைப் பார்த்து யுஎன்னுடைய சரித்திரம் மகா துயரத்துக்குரியது. நீங்கள் சந்தோஷமாயிருக்கிற இந்தச் சமயத்தில் என்னுடைய சரித்திரத்தைச் சொல்லி உங்களைத் துன்பத்துட்படுத்த எனக்கு மனமில்லை. ஆயினும் உங்கள் வேண்டுகோளின்படி என்னுடைய சரித்திரத்தைச் சொல்லுகிறேன்” என்று சொல்லத் தொடங்கினாள்.

“““நான் ஒரு தனவான் வீட்டில் பிறந்து தனவான் வீட்டிலே வாழ்க்கைப் பட்டேன்; நான் பிறந்த இடம் புதுவைமாநகர். புகுந்த நகர் பொன்னகரி. என் தாயார் இறந்தபிற்பாடு என் தகப்பனார் இதற்குப் பதினாறு வருஷத்திற்குமுன் இராணுவ வகுப்பில் தளகர்த்தாயிருந்த என்னுடைய அத்தை மகனுக்கு என்னைப் பாணிக்கிரகம் செய்து கொடுத்தார். எனக்குக் கலியாணமாகி நான் புருஷன் வீட்டுக்குப் போன உடனே, தூர தேசத்தில் வாழ்க்கைப் பட்டிருந்த என்னுடைய நாத்தனார் புருஷன் பிராண வியோகம் ஆனதாகச் சமாசாரம் வந்தபடியால் என் மாமியார் அந்த ஊருக்குப் போய்விட்டாள். அவள் திரும்பிவரப் பத்து மாசம் சென்றது. அந்தப் பத்து மாச காலமும் நானும் என்னுடைய பர்த்தாவும், தேகமும் சீவனும் போலவும், கரும்பும் ரசமும் போலவும் அதிகப் பிரீதியாக வாழ்ந்தோம். எங்களுடைய சந்தோஷம் நீடித்திருந்தால், இந்த உலகமே சதமென்று நாங்கள் எண்ணிவிடுவோம் என்றோ, அல்லது வேறென்ன காரணமோ எங்களுடைய சந்தோஷத்தைக் கடவுள் மாற்றிவிட்டார்; எப்படி யென்றால் பத்து மாதத்திற்குப் பிறகு என்னுடைய மாமியாரும் அமங்கலியாய்ப் போன அவளுடைய மகளும் வந்துசேர்ந்தார்கள். அவர்கள் எங்களுடைய கிருகத்தில் வந்து பிரவேசித்தது கிரகசாரமே வந்து பிரவேசித்ததுபோல் ஆயிற்று. அவர்கள் வந்து நுழைந்தபோது நானும் என் பர்த்தாவும் அதிக நேரமாகச் சல்லாபித்துக்கொண்டிருந்தோம். அதைக் கண்டவுடனே அவர்களுக்குக் கோபம் பொங்கி அவர்கள் எங்களைப் பார்த்த கடூரமான பார்வை ஆயிரங்கத்தி வெட்டுக்குச் சமானமாயிருந்தது. அந்தப் பார்வையில் நாங்கள் பட்டுப் போகாமல் பிழைத்தது யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. நான் அவர்களைக் கண்டவுடனே அவர்களுக்கு நமஸ்காரஞ் செய்து அப்பாலே போய்விட்டேன். என் மாமியார் என் பர்த்தாவை நோக்கி “நான் உன் தகப்பனாரை விவாகஞ்செய்து இருபது வருஷம் வரைக்கும் மங்கிலிய ஸ்திரீயாயிருந்தேன்; நான் இருபது வருஷ காலத்திலும் இரண்டு வார்த்தைகள் கூட என்னுடைய நாயகரிடத்தில் நான் பேசி அறியேன். புருஷன் வீட்டில் வந்து அடி வைத்த உடனே நாத்தனார் புருஷனைத் தின்றுவிட்டவள் இடத்தில் உனக்குப் பேச்சா?” என்றாள். உடனே என் பர்த்தா ‘“நாத்தனார் புருஷன் இறந்து போனால் என் பெண்சாதி’ என்ன செய்வாள்? நான் என் பெண்சாதி இடத்திலே பேசினேனே தவிர, அந்நிய ஸ்திரீயிடத்தில் பேசவில்லையே‘ என்றார். இதைக் கேட்ட உடனே ’“அந்தச் சிறுக்கி உனக்கு இவ்வளவு” பேசக் கற்றுக்கொடுத்து விட்டாளா?’ என்று என் மாமி குதித்த குதிப்பும் ஆடின ஆட்டமும் சதுருக்கு விட்ட தேவடியாள் கூட ஆடமாட்டாள். என்னுடைய நாயகர் மானி ஆனதால் ஊர் சிரிக்கும் என்று பயந்து, ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டார். அன்று முதல் பல நாள் வரைக்கும் என் மாமியார் வாயும் நாத்தனார் வாயும் ஓயவேயில்லை. அவர்கள் என்னுடைய கொட்டத்தை அடக்க வேண்டுமென்று தீட்சித்துக் கொண்டு வேலைக்காரர்களையெல்லாம் தள்ளிவிட்டுச் சகல வேலைகளையும் நான் செய்யும்படி என் தலைமேலே சுமத்தினார்கள். என் பர்த்தாவுக்கு அமுது படைத்தல், தாம்பூலம் கொடுத்தல் முதலிய வேலைகளையும் நான் செய்கிறதாயிருந்தால், என்னுடைய சிரமங்களுக்கு ஒரு பரிகாரமாயிருக்கும். அந்த வேலைகளை எல்லாம் அவர்கள் வசித்துக் கொண்டு கஷ்டமான வேலைகளை எல்லாம் என் பங்கில் வைத்துவிட்டார்கள். எல்லோரும் சாப்பிட்ட பிறகு அவர்களுடைய உச்சிட்டத்துக்காக நான் காத்திருக்க வேண்டுமே அல்லாது, எனக்குப் பசித்தபோது சாப்பிடக்கூடாது. அந்த உச்சிட்டமும் பாதி வயிற்றுக்குக் கூட பற்றுகிறதில்லை. என் மாமியும் நாத்தியும் வந்த நாள் முதல் நானும் என் புருஷனும் பேசுவது குதிரைக் கொம்பாகிவிட்டது. நான் ஒரு பக்கத்திலும் அவர் ஒரு பக்கத்திலும் இருப்பதால், நாங்கள் ஒருவரை யொருவர் பார்க்கக் கூடாமலும், நயன பாஷைக்குக் கூட இடம் இல்லாமலும் போய்விட்டது. இராக்காலங்களில் என்னுடைய பர்த்தாவின் படுக்கை அறைக்குள் நான் பிரவேசிக்காதபடி, அந்த அறையின் வாசற்படி ஓரத்தில் தாயும் மகளும் படுத்துக் கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவர் பாராக் கொடுக்கத் தலைப்பட்டார்கள்.

”இவ்வளவு துன்மார்க்கங்களுக்கும் இடங் கொடுத்து என் கணவன் உபேக்ஷையா யிருப்பது எனக்கு மனவேதனையாயிருந்தாலும், அவர் மானத்துக்குப் பயந்து மௌனமாயிருக்கிறாரென்றும், அவருக்கு என்னிடத்திலிருக்கிற அன்பு குறையாதென்றும் எண்ணி நான் சகல கஷ்டநிஷ்டூரங்களையும் பொறுமையுடன் சகித்தேன். அப்படியிருக்க என் மாமியும் நாத்தியும் சில வியபசாரிகளை அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கும் என் பர்த்தாவுக்கும் சிநேகிதத்தை உண்டுபண்ணச் சர்வ பிரயத்தனஞ் செய்தார்கள். என்னுடைய கணவர் சொந்த ஸ்திரீயினிடத்திலே பேசக்கூடாதென்று விலக்கி, அந்நிய ஸ்திரீகளுடன் சகவாசஞ் செய்யும்படி முயற்சி செய்த என்னுடைய மாமியும் நாத்தியும் எப்படிப்பட்ட பொல்லாதவர்களாயிருக்க வேண்டுமென்று நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள்! இந்தக் கொடுமைகளை எல்லாம் தூரதேசத்திலிருக்கிற என் தகப்பனாருக்கு நான் கடித மூலமாய்த் தெரிவித்தால் உடனே பரிகாரங் கிடைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை. என் பாட்டனார் இறந்த பிறகு என் தகப்பனாரே அவருடைய தங்கையாகிய என் மாமியை வளர்த்து விவாகஞ் செய்து கொடுத்ததுந் தவிர அவள் விதந்துவான பிறகும் அவரே அவளையும் அவள் பிள்ளையாகிய என் பர்த்தாவையும் நெடுங்காலம் ஆதரித்து வந்தபடியாலும், அவர் துஷ்டகண்டகர் ஆனபடியாலும் அவரைக் கண்டால் கருடனைக் கண்ட பாம்பு போல் என்னுடைய மாமியும், நாத்தியும் அடங்குவார்களென்பது நிச்சயமே. ஆயினும் புருஷன் வீட்டில் நடக்கிற கொடுமைகளைத் தகப்பனுக்குத் தெரிவிப்பது பதிவிரதைகளுக்குத் தகுதி அல்லவென்றும், கலகத்துக்கும் ஆஸ்பதம் ஆகுமென்றும் நினைத்து, நான் என்னுடைய வருத்தங்களை எல்லாம் என் தகப்பனாருக்கு எழுதாமல் இருந்து விட்டேன். என்னுடைய வருத்தங்களை எல்லாம் என் புருஷனுக்கு எவ்வகையிலாவது தெரிவிக்கிறதென்று நிச்சயித்துக் கொண்டு ஒருநாள் நடுச் சாமத்தில் எல்லாரும் தூங்கின பிற்பாடு நான் எழுந்து சத்தஞ் செய்யாமல் என் பர்த்தாவின் படுக்கை அறைக்கு நேரே போனேன். அந்த அறையின் வாசற்படி ஓரத்தில் இரண்டு காவற்காரிகளும் படுத்திருந்தார்கள். அவர்களுடைய காவலைக் கடந்து உள்ளே போகிறதற்காக அவர்கள் இருவரையும் ஒரே தாண்டாய்த் தாண்டினேன். உடனே என் சேலை தடுக்கி அடியற்ற மரம் போல அவர்கள் மேல் விழுந்து விட்டேன். அப்போது இருட்டாயிருந்ததால் அவர்கள் என்னைக் கையாலே தடவிப் பார்த்து நான் தான் என்று கண்டுபிடித்துக் கொண்டு என்னை அடிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் என்னைப் பிடித்த பிடியை விடாமல் அடித்தபடியால் நான் அடி பொறுக்கமாட்டாமல் நகத்தால் அவர்களைக் கீறினேன். அவர்கள் தங்களுடைய நகங்களால், தங்களைத் தாங்களே அதிகமாகக் கீறீவிட்டுக் கொண்டு, “கூ! கூ! எங்களைக் கொல்லுகிறாள்!” என்று கூவினார்கள். உடனே என் கணவர் விழித்துக் கொண்டு தீபத்துடன் எங்களிடம் ஓடி வந்தார். என்னைப் பார்த்தவுடனே “உன்னுடைய அறையை விட்டு இங்கே நீ ஏன் வந்தாய்?” என்று கேட்டார். நான் உண்மையான காரணத்தைச் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, கள்ளப் புருஷன் வீட்டுக்குப் போய் அகப்பட்டுக்கொண்டவள் போல விழித்தேன். அந்த நீலிகள் இருவரும் அவர்களுடைய காயங்களை என் புருஷனுக்குக் காட்டி என்னைப் பேய் பிடித்திருக்கிறதென்றும் அல்லது பைத்தியமாவது என்னைப் பிடித்திருக்க வேண்டுமென்றும் சாதித்தார்கள். என் கணவரும் அப்படியே அபிப்பிராயப்பட்டு என்னைத் தள்ளிக் கொண்டுபோய் என்னுடைய அறைக்குள்ளாக விட்டுக் கதவை இழுத்திச் சாத்தி வெளிப்பக்கத்தில் நாதாங்கி போட்டு விட்டார். நான் புருஷனைப் பார்க்கப் போய் இப்படி வந்து சம்பவித்ததே என்று நினைத்து, அந்த இரா முழுவதும் நான் அழுத கண்ணீர் அறை முழுதும் நிறைந்து விட்டது. மறு நாள் விடிந்த உடனே வைத்தியர்களும் மந்திரவாதிகளும் வந்து கூடிவிட்டார்கள். வைத்தியர்கள் எல்லாரும் எனக்குப் பைத்திய மென்று சாதித்தார்கள். மந்திரவாதிகள் எல்லாரும் எனக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று வாதித்தார்கள். அவர்களில் ஒருவன் என்னை நூற்றெட்டுப் பேய் பிடித்திருக்கிறதென்று சொன்னான். அதைக் கேட்டவுடனே என்னை அறியாமலே எனக்குக் கோபம் ஜனித்து அவ்விடத்திற் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன் மேலே எறிந்தேன். என்னைப் பேய் பிடித்திருக்கிறதென்பதற்கு இது பிரத்தியட்சமான ருசு ஆகிவிட்டது. உடனே என்னைப் பிடித்துக் கைவிலங்கு கால்விலங்கு போட்டு என் தலையைச் சிரைத்து வைத்தியர்கள் ஒரு பக்கத்திலும் மந்திரவாதிகள் ஒரு பக்கத்திலும் எனக்குச் செய்த சித்திராக்கினிகளை விவரிக்க என்னுடைய ஒரு வாய் போதாது. நான் அவர்களைப் பார்த்து “ஒரு உயிருக்கு இத்தனை எமன்கள் வேண்டுமா? எனக்குப் பைத்தியமுமில்லை, பேயுமில்லை. என்னை வீணாக ஏன் வாதிக்கிறீர்கள்?” என்று அவர்களுக்கு இரக்கம் உண்டாகும்படி நான் நான் கற்ற வித்தைகளை எல்லாம் காட்டினேன். நான் சொல்வதெல்லாம் எனக்குப் பிரதிகூலமாய் முடிந்ததே தவிர யாதொரு அனுகூலத்தையுஞ் செய்யவில்லை.

நான் புருஷனோடு கூடியிருந்த காலத்தில் எனக்குக் கர்ப்பம் உண்டாகி, அப்போது எனக்குத் தெரியாமலிருந்து இப்போது சில கர்ப்பச் சின்னங்கள் தோன்றியபடியால் கர்ப்பிணியாயிருக்கிற எனக்கு மருந்துகள் கொடுப்பது சரியல்லவென்று வைத்தியர்களுக்குத் தெரிவித்தேன். நான் கர்ப்பிணியென்று தெரிந்தமாத்திரத்தில், என்னுடைய மாமியும் நாத்தியும் அவர்களுடைய புருஷர்கள் அன்றைக்குத் தான் இறந்தது போற் கரைகாணாத துக்க சாகரத்தில் அமிழ்ந்து முன்னையைப் பார்க்கிலும் நூறு மடங்கு அதிகமாக என்னைப் பகைக்க ஆரம்பித்தார்கள். என்னுடைய கர்ப்பம் அழியத் தக்க ஔஷதப் பிரயோகஞ் செய்ய அவர்கள் யத்தனமாயிருக்கையில் “‘ராக்ஷதனுக்கும் ஒரு புரோக்ஷதன் உண்டு’” என்பது போல, என் மாமியாரை அடக்கத் தக்க சுவாமியார் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் யாரென்றால் என்னுடைய தகப்பனார் தான். அவர் என்னுடைய அலங்கோலத்தைப் பார்த்த உடனே உள்ளங் கலங்கி என்னைக் கட்டிக் கொண்டு கதறினார். பிற்பாடு எனக்குப் பைத்தியமா அல்லவாவென்று நிச்சயிக்கும்பொருட்டு, என்னைப் பார்த்துப் பல கேள்விகள் கேட்டார். அவைகளுக்கு நான் தகுதியான மறுமொழி சொன்னதுந் தவிர, நடந்த காரியங்களை எல்லாம் அவருக்குச் சுருக்கமாகத் தெரிவித்தேன். என் மாமி நாத்திகளின் மேல் அதிகமாக ஒன்றுஞ் சொல்லாமல் தர்மக் கோளாக அவர்கள் செய்த இரண்டொரு காரியங்களை வெளிப் படுத்தினேன். எனக்குப் பைத்தியமுமில்லை பேயுமில்லை என்று என் தகப்பனார் கண்டுபிடித்துக் கொண்டு என் கைவிலங்கு கால் விலங்குகளை வெட்டிவிட ஆரம்பித்தார். உடனே என் மாமியார் ஓடிவந்து “அண்ணா, நீங்கள் செய்வதை யோசித்துச் செய்யுங்கள்; விலங்கை நிவர்த்தி செய்தால் அவள் யாரையாவது உபத்திரவஞ் செய்வாளே” என்றாள். இதைக் கேட்ட உடனே என் தகப்பனார் கோபாதிக்காரராய் என் மாமியாரை எட்டி உதைத்தார். அவள் எட்டுக் குட்டிக் கரணம் போட்டுக் கொண்டு கீழே விழுந்தாள். நான் உடனே என் தகப்பனார் காலைப் பிடித்துக் கொண்டு “எய்தவனை நோகாமல் அம்பை நோவதுபோல் எல்லாங் கடவுள் செயலாயிருக்க என் மாமியாரைக் கோபித்துப் பிரயோசனம் என்ன? நான் ஏதோ துஷ்கிருத்தியஞ் செய்ததற்காகக் கடவுள் என்னைத் தண்டித்தார்; என்னுடைய அத்தையை மொத்த வேண்டாம்” என்று பிரார்த்தித்தேன். அவர் உடனே என்னை நோக்கி, “அவள் ஆதியில் பெண் கேட்டபோது அவளுடைய துர்க்குணங்களைப் பற்றியே பெண் கொடுக்க நிராகரித்தேன். அவள் மறுபடியும் ஆயிரந்தரம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதினாலும், சகோதர பக்ஷத்தினாலும் கிளியை வளர்த்துப் பூனை கையிலே கொடுத்தது போல, உன்னை விவாகம் செய்து கொடுத்தேன். அதற்கு வந்த லாபம் இதுதான்” என்றார்; அந்தச் சமயத்தில் என் கணவர் வந்து, என் தகப்பனாருக்கு நமஸ்காரஞ் செய்தார். அவரை என் தகப்பனார் பார்த்து “நீ சௌரியவானென்று பெயர் வைத்துக் கொண்டு, உன் வீட்டுப் பெண்டுகளை அடக்கத் திறமையில்லாமல் என்னை வரும்படி, பல கடிதங்கள் அனுப்பினாய்! இரண்டு துர்ப்பலமுள்ள ஸ்திரீகளை அடக்கச் சக்தி இல்லாத நீ யுத்தரங்கத்தில் உன்னுடைய சத்துருக்களை எப்படிச் செயிப்பாய்” என்று பரிகாசஞ் செய்தார். என் புருஷன் என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதி வரவழைத்ததாக என் தகப்பனாருடைய வார்த்தைகளால் வெளிப்பட்டபடியால் என் புருஷன் மீது எனக்குண்டாயிருந்த மனஸ்தாபங்களெல்லாம் ஒரு நிமிஷத்தில் பறந்துவிட்டன. என் தகப்பனாரும் பர்த்தாவும் என் விலங்குகளைத் தறித்து என் மாமியார் எனக்கு நியமித்திருந்த காராக்கிரகத்தினின்று என்னை விடுதலை செய்தார்கள். உடனே வைத்தியமும் தொலைந்தது; பைத்தியமும் தொலைந்தது; பேயும் பறந்தது. நோயும் பறந்தது. நான் பழையபடி என் பர்த்தாவை அடிக்கடி சந்திக்கவும், அவருடன் சம்பாஷிக்கவும் ஆரம்பித்தேன். இராக் காலங்களில் என் பர்த்தாவினுடைய பள்ளி அறைக்கு என் மாமியும் நாத்தியும் செய்துவந்த காவலும் ஒழிந்தது. என்னுடைய ஆவலும் ஒழிந்தது. அவர்களிருவரும் என் பிதா வந்தது முதல் பெட்டிப் பாம்பு போல் அடங்கினார்கள். என்னுடைய கர்ப்பம் நாள் தோறும் முதிர்ந்து பத்தாம் மாதத்தில் பால சூரியனைப் போல் ஒரு பாலனைப் பெற்று, நான் மனோரம்மியமாயிருக்கும்போது மறுபடியும் ஒரு தௌர்ப்பாக்கியம் எனக்கு நேரிட்டது. அஃதென்னவெனில் இராஜாங்கத்தாருக்கும் அவர்களுடைய சத்துருக்களுக்கும் தூரதேசத்தில் யுத்தம் நேரிட்டதால், அந்த யுத்தத்துக்கு உடனே போகும்படி என் பர்த்தாவுக்கு உத்தரவு வந்தது. தண்டிலே போனால் இரண்டிலே ஒன்றாதலால் அந்த உத்தரவைக் கண்ட உடனே, எங்களுக்கெல்லாம் பெரிய இடி விழுந்ததுபோல் இருந்தது. என்னுடைய பர்த்தா சண்டைக்குப் போய்த் திரும்பிவருகிற வரையில் என்னையும் என் பிள்ளையையும் என் தகப்பனார் தம்முடைய ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்ச் சம்ரக்ஷிப்பதாகச் சொன்னார். அதற்கு என் புருஷனும் சம்மதித்து, அவரும் எங்களோடு கூடப் பிரயாணப்பட்டு என்னையும் என் பிள்ளையையும் என் தகப்பனார் வசத்தில் ஒப்பித்து விட்டு எங்களிடத்தில் விடை பெற்றுக் கொண்டு யுத்தத்துக்குப் போனார். அவர் போனபிற்பாடு சில காலம் வரையில் அவரிடத்திலிருந்து எங்களுக்குக் கடிதங்கள் வந்து, பிற்பாடு என்ன காரணத்தைப் பற்றியோ கடிதம் வராமல் நின்றுபோய் விட்டது. எனக்குப் பிள்ளை மட்டும் இல்லாமலிருக்குமானால் என் பர்த்தா பிரிந்த உடனே என் பிராணனும் பிரிந்து போயிருக்கும். புத்திர வாஞ்சையே என் பிராணன் போகாதபடி தடுத்துவிட்டது. என் பிள்ளை என் பர்த்தாவினுடைய சாயலாக இருந்தபடியால், பிள்ளை முகத்தைப் பார்த்துப் பார்த்து புருஷனைப் பிரிந்த சோகத்தை ஒருவாறு மாற்றினேன். என் பிள்ளையை அவர் பிள்ளையைப் போல அதிக பட்சமாக வளர்த்து இளமைப் பருவத்திலே வித்தியாப்பியாசஞ் செய்வித்தார். அந்தப் பிள்ளைக்குப் பத்து வயது நடக்கும்போது அநேக ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு ஒரு நாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. உடனே என் தகப்பனாரும் வேலைக்காரர்கள் முதலானவர்களும் வீதி வீதியாக ஓடிப் பிள்ளையைத் தேடினார்கள். பிள்ளையும் அகப்பட வில்லை. பிள்ளையைத் தேடிப் போன என் தகப்பனாரும் வரவில்லை. வேலைக்காரர்கள் பலநாள் வரையில் பல இடங்களில் தேடிப் பார்த்தும் என் பிள்ளையும் தகப்பனாரும் அகப்படவில்லை. நான் பிள்ளையையும் இழந்து பிதாவையும் இழந்து தாமரை இலைத் தண்ணீர் போல் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, என் புருஷனும் சண்டையில் காயப்பட்டு இறந்து போனதாகச் சமாசாரம் வந்தது. நான் உடனே நெருப்பில் விழுந்த புழுப்போல் துடித்துக் கீழே விழுந்து புலம்பி அழுதேன். அன்று முதல் நெடுநாள் மட்டும் நான் சித்தஸ்வாதீனமில்லாமலிருந்து பிறகு என் பந்துக்களுடைய முயற்சியால் சித்தப் பிரமை தீர்ந்து பிழைத்துக் கொண்டேன். நான் என்னுடைய புருஷனைப் பிரிந்து இப்போது பதினைந்து வருஷமாகிறது. எனக்குப் பிராணபதமான அந்த மூவரும் இறந்துபோயும், இறவாமலிருக்கிற என்னுடைய உயிர் எவ்வளவும் வல்லுயிராயிருக்க வேண்டும்? நானே என்னை மாய்த்துக் கொள்ளலாமென்று பல சமயங்களில் நினைத்தேன். ஆனால் தற்கொலை செய்வது பரம பாதகமென்றும் அதைச் செய்கிறவர்களுக்கு நரகம் பிராப்தியென்றும் பெரியோர்கள் சொல்லுகிறபடியால் நான் என் பிராணனை விடாமல் தாங்கிக் கொண்டு திரிகிறேன். என் மாதா பிதாக்களும், புருஷனும் பிள்ளையும் தர்மிஷ்டர்களானதால் அவர்கள் மோக்ஷ சாம்பிராச்சியம் அடைந்திருப்பார்களென்பது நிச்சயமே. அந்த இடத்துக்கு நானும் போய்ச் சேரவேண்டுமென்று சர்வ சதா கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். உலகத்தில் எனக்கு ஒரு அபேக்ஷையும் இல்லாதபடியால், என்னையும் ஒருவரும் விரும்பாதபடி ஆண்டிச்சி போல் வேஷம் பூண்டு கொண்டு இதற்குப் பத்து நாழிகை வழி தூரமான என் சிறிய தாயார் வீட்டில் வந்திருக்கிறேன். அதற்குச் சமீபமான ஒரு தனி மண்டபத்தில், நான் கடவுளை நோக்கித் தியானம் பண்ணிக் கொண்டிருக்கும்போது, மாதர் சிரோமணியாகிய ஞானாம்பாள் வந்து அடைக்கலம் புகுந்தாள். இது தான் என் சரித்திரம்” என்றாள்.

ஆண்டிச்சி யம்மாளின் சரித்திரத்தைக் கேட்டு அனுதாபப்படாதவர்கள் யாரும் இல்லை.