பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 17


17-ஆம் அதிகாரம்
போர் வீரர்களின் வரவு—குற்ற விசாரணை
ஆண்டிச்சியம்மாள் ஆர்வலனைக் காணுதல்

ஞானாம்பாள் தப்பி வந்த சமாச்சாரம் என்னுடைய தாய்தந்தையார் கேள்விப்பட்டு, அவளைப் பார்க்கும் பொருட்டு மறு நாள் உதய நேரத்துக்குப் பனம்பள்ளிக் கிராமத்துக்கு வந்தார்கள். அவர்களைக் கண்ட உடனே சம்பந்தி முதலியார் சந்தோஷ சித்தராயச் சொல்லுகிறார்: “உங்களுடைய புத்திர சிரோமணியால் எங்களுடைய அருமைக் குமாரத்தியை நாங்கள் மறுபடியும் கண்டோம். அவளை இன்னும் இரண்டு நாள் வரைக்கும் காணாமலிருப்போமானால், எங்களுடைய உயிரைக் காணமாட்டோம். நாங்கள் குடும்பத்துடன் மாண்டுபோயிருப்போம். உங்கள் குமாரனே எங்களுக்குக் குடும்பப் பிரதிஷ்டை செய்வித்தான். ஞானாம்பாளுடைய சரீரம் அவனால் ரக்ஷிக்கப்பட்டபடியால் அந்தச் சரீரத்தை அவனுக்கே தத்தம் செய்ய யோசித்திருக்கிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். “உங்களுடைய இஷ்டப்படி நடக்கக் காத்திருக்கிறோம்” என்று என்னுடைய தாய் தந்தையர்கள் சொன்னார்கள். கலியாணத்தை இனித் தாமதப்படுத்தக் கூடாதென்றும், சீக்கிரத்தில் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்கு வெளியில் யுத்தம் நடப்பதுபோல் பெரிய இரைச்சலும் சப்தமுங் கேட்டு நாங்கள் உடனே வெளியே ஓடிப் பார்த்தோம். அனேக சிப்பாய்களும் சேவகர்களும் உருவின கத்தி முதலிய ஆயுதங்களுடனே வந்து எங்கள் வீட்டை வளைத்துக் கொண்டார்கள். அவர்களுடன் கூட ஒரு பெரிய குதிரையின் மேல் ஏறிக் கொண்டு வந்த சுதேசியான ஒரு உத்தியோகஸ்தர் அதிக கோபத்துடன், பிரதாப முதலியென்பவன் யாரென்று கேட்க, நான் தானென்று அவருக்கு எதிரே போனேன். என்னைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவு கொடுத்தார். உடனே என் தகப்பனாரும், சம்பந்த முதலியாரும் ஓடி வந்து “அந்தப் பிள்ளையைக் கட்ட வேண்டிய காரணம் என்ன? அவன் என்ன குற்றம் செய்தான்?” என்று கேட்டார்கள். உடனே எங்கள் பந்துக்கள், வேலைக்காரர்கள், அந்தக் கிராமத்துக் குடிகள் முதலான இருநூறு ஜனங்கள் கூட்டங் கூடினதை அந்த உத்தியோகஸ்தர் கண்டு பயந்து, என்னைக் கட்ட வேண்டாமென்று உத்திரவு கொடுத்து, தெருத் திண்ணைமேல் உட்கார்ந்துகொண்டு, என்னைப் பார்த்து “ஒரு பெரிய உத்தியோகஸ்தனாகிய தாசில்தாரை நிஷ்காரணமாய் நீர் கொலை செய்துவிட்டதால், அதைப் பற்றி விசாரிக்க வந்திருக்கிறோம். நீர் என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார். இதைக் கேட்ட உடனே எனக்குத் தைரியம் உண்டாகி, ஞானாம்பாள் விஷயத்தில், அந்த தாசில்தார் செய்த அக்கிரமங்களை எல்லாம் ஆதியோடந்தமாகத் தெரிவித்தேன். உடனே அவர் “நீர் சொல்வதற்குச் சாட்சிகள் உண்டா?” என்று வினவினார். சாட்சிகள் இருக்கிறார்களென்று சொல்லி, நான் பிடித்து வைத்திருந்த இரண்டு சேவகர்களையும் அவர் முன்னே கொண்டுவந்து விட்டேன். அவர்கள் ஒரு காரியத்தையும் மறைக்காமல், சகல சங்கதிகளையும் விவரமாய்ச் சொல்லி வாக்குமூலம் எழுதி வைத்தார்கள். பிற்பாடு ஞானாம்பாளைத் திரைமறைவில் இருக்கச் சொல்லி அவளையும் அவளுடன் கூட வந்த ஆண்டிச்சி அம்மாளையும் விசாரித்தார். கடைசியாய் அவர் உண்மையைத் தெரிந்துகொண்டு, என்னை நோக்கிச் சொல்லுகிறார்; “தாசில்தாரையும் அவருடைய நேசனையும், நீர் நிர்நிமித்தியமாய்க் கொலை செய்ததாக மட்டும் பிரஸ்தாபமே தவிரத் தாசில்தார் செய்த அக்கிரமங்களை ஒருவரும் தெரிவிக்கவில்லை. இப்போதுதான், உண்மை வெளியாயிற்று. தகுந்த அந்தஸ்துள்ள ஒரு கன்னிப் பெண்ணை, அந்த தாசில்தார் பலவந்தமாய்க் கொண்டுபோனதும், பிற்பாடு அந்தப் பெண் தப்பி ஓடும்பொழுது மறுபடியும் அவளைத் தொடர்ந்து, பலாத்காரம் செய்ய யத்தனப் பட்டதும் பெரிய அக்கிரமம்; அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு போன உம்மை, அவனும் அவனுடைய நேசனும் கத்தி உருவி வெட்ட வந்தபடியால், உமது பிராணனை ரக்ஷித்துக்கொள்ளும் பொருட்டு, அந்தத் துஷ்டர்களைக் கொலை செய்ய வேண்டியது அகத்தியமாயிருந்தது; ஆகையால் இந்த விஷயத்தில் உம்மிடத்தில் யாதொரு குற்றமுமில்லை; ஜனங்களுடைய க்ஷேமத்துக்காகத் தாசிலாக நியமிக்கப்பட்ட அந்தக் கொடியன், அவனுடைய அதிகாரத்தைத் துர்விஷயத்தில் உபயோகப்படுத்தினபடியால், அவன் ராஜ தண்டனைக்கும், தெய்வ தண்டனைக்கும் பாத்திரனாக இருக்கிறான். தெய்வ தண்டனை முந்திக் கொண்டபடியால், ராஜ தண்டனைக்கு இடமில்லாமல் போயிற்று; ஆகையால் நீர் நிர்த்தோஷியென்று மேலான அதிகாரிகளுக்கு விஞ்ஞாபிக்கப்படும்” என்றார். இதைக் கேட்டவுடனே எங்களுக்கெல்லாம் தேகத்தை விட்டுப் பிரிந்துபோன உயிர் மறுபடியும் திரும்பி வந்தது போல் ஆனந்தம் உண்டாயிற்று. உடனே அந்தக் கனவான் விசாரணையான விவரங்களைக் கண்டு ஒரு விஞ்ஞானப் பத்திரிகை எழுதி, அதைச் சில சேவகர் கையிலே கொடுத்துக் கலெக்டரிடத்திற் கொடுக்கும்படி அனுப்பினார்.

அதற்குப் பிறகு அந்தக் கனவான் அவருடன் வந்த போர்வீரர்களை நோக்கி “நீங்கள் போய்க் கூடாரத்தில் இருங்கள்; நான் சீக்கிரத்தில் வருகிறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டார். அவர்கள் போன பிற்பாடு அவர் ஏதோ பெருந்துயரத்தைக் கொண்டிருப்பதாக அவருடைய முகக்குறியினால் விளங்கிற்று. அவர் எங்களைப் பார்த்து, ““திரை மறைவில் விசாரிக்கப் பட்ட இந்த வீட்டு அம்மாமார்களை நான் கண்ணாலே பார்க்கவேண்டியது முக்கியமாயிருக்கிறது; அவர்களை நான் பார்க்கலாமா?”” என்று கேட்டார். உடனே சம்பந்தி முதலியார் அவரை நோக்கி, “”உங்களைப் பார்த்தால் மகா உத்தம புருஷராகக் காணப்படுகின்றது. நீங்கள் எங்களுடைய பெண்டுகளைப் பார்க்கத் தடையில்லை”” என்று சொல்லி ஞானாம்பாளையும் ஆண்டிச்சி அம்மாளையும் அழைத்துக் கொண்டு வந்து அவர் முன்பாக விட்டார். அவர் ஞானாம்பாளை அதிகமாகக் கவனிக்கவில்லை. ஆண்டிச்சி அம்மாளை மட்டும் அதிக கவனமாக உற்றுப் பார்த்தார். அந்த அம்மாளும் அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து “”ஆ! என் பிராண நாயகரே!”!” என்று அலறிக்கொண்டு அவருடைய பாதத்தில் விழுந்தாள். உடனே அவர் அவளை வாரித் தூக்கி “”இந்தப் பஞ்சைக் கோலத்தோடு உன்னைப் பார்க்கவா வந்தேன்!”” என்று கண்ணீர் மழை சொரிந்தார். அவருடைய துக்கம் சிறிது மாறின பிற்பாடு அவர் எங்களைப் பார்த்து, “”இவள் என்னுடைய பத்தினி; இவளை நான் திரைமறைவில் விசாரித்தபோது, என் பெண்சாதியினுடைய குரலாயிருந்தபடியால், அவளை நான் பார்க்கவேணுமென்று கேட்டுக் கொண்டேன்; இவள் என் பெண்சாதி என்பது நிச்சயந்தான்; எங்களுடைய சரித்திரத்தைக் கேள்விப் பட்டீர்களா?ர” என்றார். நாங்கள் “கேள்விப் பட்டோம்” என்றோம். அவர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்:— ”“நான் இவளைப் பிரிந்தபிறகு பல தேசங்களுக்குப் போய் சத்துருக்களுடன் யுத்தம் செய்தேன். ஆரம்பத்திலே அபஜயம் ஏற்பட்டாலும் அந்தத்தில் விஜயலக்ஷ்மி எங்கள் பங்கில் இருந்தாள். நான் சில நாள் வரைக்கும் இவளுக்குக் கடிதங்கள் அனுப்பிக் கொண்டுவந்தேன்; மத்தியில் நான் குண்டுபட்டு நெடு நாள் வைத்தியசாலையில் இருந்தபடியால் கடிதம் எழுதத் தப்பிப்போய் விட்டேன். அப்போது நான் பிழைப்பேனென்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. நான் இறந்து போனதாகவும் எங்கும் பிரஸ்தாபமாகி விட்டது. நான் அந்தத் தடவை பிழைத்தது புனர்ஜன்மந்தான். நான் சண்டை முடிந்து திரும்பி வந்தவுடனே, கவர்ன்மெண்டார் என்னுடைய சௌரியத்தை மெச்சிக் கொண்டு எனக்குச் சேனாதிபதி உத்தியோகம் கொடுத்தார்கள். என்னுடைய பெண்சாதி பிள்ளைகளைப் பார்க்கும் பொருட்டு நான் உத்தரவு பெற்றுக் கொண்டு புதுச்சேரிக்குப் போனேன். அங்கே என் பிள்ளை காணாமற் போனதாகவும், அவனைத் தேடிக்கொண்டு போன என்னுடைய மாமனாரும் திரும்பி வரவில்லையென்றும் அந்தச் சமயத்தில் நான் இறந்து போனதாகச் சமாசாரம் வந்தபடியால் இவள் சித்தம் பேதித்து நெடுநாள் வியாதியாயிருந்ததாகவும் பிற்பாடு இவள் போன இடம் தெரியவில்லையென்றும் கேள்விப்பட்டு நான் பட்ட துயரம் இவ்வளவென்று சொல்லி முடியாது. நான் சண்டையில் மாண்டுபோகாமல் இந்தத் துக்கங்களை அனுபவிக்கவா வந்தேனென்று புலம்பிக் கொண்டு பல ஊர்களைத் தேடிப் பார்த்து வரும்போது, வழியில் எனக்கு இஷ்டமான ஒரு கலெக்டரைப் பார்க்கப் போனேன். அவர் தம்முடைய தாசில்தாரை நீங்கள் கொலை செய்துவிட்டதாகவும் நீங்கள் பலவான்களானதால் அனேகம் போர்வீரர்கள் சகிதமாய்ப் போய், உங்களைப் பிடித்து விசாரித்துச் சங்கதிகளைத் தெரிவிக்கும்படியாகவும் உத்தரவு கொடுத்தார். அதற்காக நான் வந்த இடத்தில் தேடிப்போன மருந்து காலில் அகப்பட்டதுபோல், என் பெண்சாதி அகப்பட்டாள். அவள் அகப்படுவதற்குமுன் யார் போனாலும் போகட்டும், பெண்சாதி அகப்பட்டால் போதுமென்று நினைத்தேன். அவள் அகப்பட்டபிறகு பிள்ளையும் மாமனாரும் அகப்படவில்லையே என்கிற ஏக்கம் பெரிதாயிருக்கிறது. மனுஷருடைய புத்தி ஒன்றிலும் திருப்தி அடைகிறதில்லை என்பதற்கு நானே சாட்சியாயிருக்கிறேன்“” என்றார்.