புது வெளிச்சம்/சுயாதீனம்

17




சுயாதீனம்

'அறிய வேண்டியதனைத்தையும் அலசி ஆராய்ந்தறிவதே என்றுடைய ஆர்வத்திற்குரிய இடைவிடாத செயல். இந்தச் செயலில் மற்றவர்களையும் ஈடுபட வைப்பதே என் நிரந்தர உத்தேசம்’!

ஒரு காலத்தில் ஏதென்சு நகர மூடக் கோடீசுவர்களால், தன் கையாலேயே விசமருந்துமாறு செய்து கொல்லுவித்த ஞானி சாக்ரடீசின் வாக்கியம் இது. இதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான வாக்கியம். நல்ல வாக்கியங்கள் என்பன உலகில் ஆயிரமாயிரமாக இருக்கின்றன. நானறிந்த அந்த நல்ல வாக்கியங்களில் மிகமிக நல்ல வாக்கியமாக இதை நான் கருதுகின்றேன். மேற்கொண்டொழுகவும் செய்கிறேன். காரணம் என் வாலிபவயதிலிருந்து நான் சுயாதீனனாக வாழ்ந்து வருவதுதான். 'அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருட்செல்வம் பூரியர் கண்ணுமுள' என்ற குறள்பா அழுத்தமாக அப்போதே என் இதயத்தில் ஆழப்பதிந்திருந்தது. வாய்ப்புகளிருந்தும், செல்வம் சேர்க்க நான் அறியாதவனாகவே இருந்தேன். இந்தக் குறள்பா, பொருள் செல்வத்தைச் தேடும் முயற்சியில் என்னை அதிகமாக ஈடுபடாமல் செய்து காப்பாற்றியது. உலோபி, என் வெறுப்புக்குள்ளானான். மனிதப் பிறப்பு எத்தகையது வாழ்வு எனும் சொல்லின் பொருள் என்ன என்பதையே அறியா மூடனைக்கூடப் பொருள் மிகப்பெரிய மனிதனாக எண்ணச் செய்து விடுகிறது. பழங்காலத் தமிழர் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அரசர்களும் அறிவினமானவர்களாக இருந்துள்ளனர் என்பது அறிஞன் கண்ணுக்குப் புலப்படாமலிருக்காது. சுயாதீனமாக அறிவதறிந்து இந்த மண்ணை ஒருவன் ஆட்சி செய்திருந்தால் இந்த நாட்டில் அந்நிய ஆட்சி ஏற்பட்டே இருக்காது என்று நான் நிச்சயமாகக் கூறத் துணிகிறேன்.

‘சுயாதீனம்’ எனில் தன்னைத் தானறிந்த நிலைதான் அது. தன்னையறிந்தவன் தலைவனை (கடவுளை) அறிந்தவனாகிறான். கடவுளை அறிந்த ஒரு அரசன் கோயில் கட்டத் துணையாகவேமாட்டான். தோத்திரம் செய்யமாட்டான். அவன் கல்வி பயிலும் பள்ளிகளை மட்டும் நாட்டில் கட்டி மக்களை அறிவு நிலைக்குக் கொண்டு வந்திருப்பான். இத்தனை சாதி பேதங்கள் தோன்றியிருக்காது. சமத்துவம் கெட்டிருக்காது. சகோதரத்வம் செத்திருக்காது. சுதந்திரம் இழந்திருக்க மாட்டோம். சாதி இரண்டொழிய வேறில்லை என்ற இந்தச் சிறிய தமிழ்மொழி கூட அறியாது, ஒங்காரத்தின் உண்மை அறியாது, ஆங்காரத்திற் காட்பட்டவர்கள், வழிதவற வைத்தவர்களை, புரோகிதன் - முதன்மந்திரிகளாக வைத்துக்கொண்டு ஆட்சி செய்த மாபெரும் தவறு காரணமாய் மக்கள் பரவலாகச் சுயாதீனம் மெல்ல மெல்ல மறந்து காலப் போக்கில் இழக்கவும் நேரிட்டது.

சுயாதீனன் எல்லாம் அறிந்தவனாகிறான். ஆம் உபநிசத்து இப்படித்தான் சொல்லுகிறது. 'பிரம்ம வித்யாம் சர்வ வித்யா பிரதிஷ்டாம். எனின், பிரம்ம வித்தையில் எல்லா வித்தைகளும் வைக்கப்பட்டுள்ளது என்பது பொருள். இந்தப் பிரம்ம வித்தையென்பது தான் என்ன? அது அப்படி ஒன்றும் மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் அளவு மிகப் பெரிய செயலொன்றுமல்ல, மிகவும் எளிய செயல். அதாவது இரண்டு சிறிய வாக்கியங்களின்படி நடந்து கொள்வதுதான். அவையாவன, "சத்யம்வத தர்மம் சர" இவ்வளவுதான் இதன் பொருள். 'உண்மையைப் பேசு அறவழி யொழுகு' என்பதுதான் இந்த உண்மையைப் பேசு எனும் கருத்தை நமது வள்ளுவர் பெருமான் அழுத்தம் கொடுத்து இயற்றிய குறள். ‘யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற' என்பது தான்.

'தர்மம் சர' எனும் கருத்தை, 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்பதுதான். இந்த இரண்டு குறட்பாக்களின்படி நாம் வாழ்வை வழிவகுத்துவிடின் பிரம்ம வித்தையை அறிந்தவராகிறோம். எல்லாப் படிப்பும் இந்த இருசொற்றொடர்களில், இரண்டு குறட்பாக்களில் அடங்கி இருக்கிறது. இதைப்புரிந்து கொண்டொழுகின் நம்மை வெல்லும் சக்தி வேறு ஒருவனுக்கு இருக்க முடியாது. என்று நான் உறுதியாகச் சொல்லுகிறேன். அன்னமயம், பிராணமயம், மனோமயத்துக்கு அடுத்துள்ளது விஞ்ஞானமயம் அந்த விஞ்ஞானம் தான் சத்யம் வத தர்மம் சர.

ஆடவனாகப் பிறந்த ஒருவன் துணிந்து இவ்விதம் நடந்துதான் பார்க்கட்டுமே; பார்த்துப் பரிசோதனை செய்யட்டுமே. சுயாதீனமுள்ளவனாக அவன் பேசும் போது அரசன் தலைதாழ்த்துகிறான், சூழ்ச்சியாளன் உள்ளம் சோர்வடைகிறது. மூடனுக்கு முன்கோபம் வருகிறது. மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றது போல நாமும் சுடப்படலாம்; ஆயினும் கெட்டுப்போனதொன்றுமில்லை; எப்போதேனும் ஒரு நாள் சொல்லாமல் போகும் உயிர்தானே. கொஞ்சம் முன்னரேயே போனதினால் என்ன நட்டமாய்விடும்? வாழ்ந்த வரையில் அது பெருவாழ்வு; அமரவாழ்வு அது. அச்சமறியாத வாழ்வு அரைநாழிகை வாழ்ந்தாலும் அதற்கு நிகரான வாழ்வு வேறோன்றில்லை.

இது சுயாதீனம், 'அன்பு, அறிவு, தேற்றம், அவாவின்மையென இந்நான்குடையவன்தான் சுயாதீனன்; இவனுடைய உள்ளமே பளிங்கெனத் தெளிந்த உள்ளம், மனிதப் பிறப்பின் முழுப்பயனை எய்தியவன் இவனைத் தவிர்த்து வேறிலராவர்.

உலகில் கோடீசுவரனாலும் எய்த இயலாத உயர்ந்த நிலை சுயாதீன நிலை. சுருங்கக் கூறின் இருதயத்தில் உண்மையை மட்டும் அழுத்தமாகப் பதித்துக் கொண்டால் போதும் புகழ்ச்சி அனைத்தும் அவனைத் தேடி வந்து ஒன்றிக் கொள்ளும். பொய்மை அவன் முகத்தைப் பார்க்கும் போதே அஞ்சி மறையும். அவனுடைய உள்ளத்தில் துன்பத்திற்கு இடம் கிடையாது. முல்லை மலரின் நறுமணம் போல சுயாதீனனின் சொல் ஒவ்வொன்றும் மணங்கமழ் வனவாகவே இருக்கும்.

அவனுடைய நிலை அத்வைத நிலை. அதாவது நான்வேறு. தெய்வம் வேறு அன்று, 'சோ அகம் அஸ்மி' - 'நானே அந்தத் தெய்வமாயுள்ளேன்' என்று கூறாமல் தோன்றும் நிலை!

இந்த நிலையை உபநிசத்து விளக்குகிறது. "இதுதான் இவனுக்கு ஆசைகள் ஒழிந்த நிலை; பாவங்கள் தேய்ந்த நிலை; பயமற்ற நிலை; இதுதான் இவனுக்கு ஆசைகள் பூர்த்தியான நிலை: ஆத்மா ஒன்றே விரும்பப்படும் நிலை; ஆசை எழாத நிலை; துன்பம் கடந்த நிலை.

திருமந்திரம் இந்த நிலையை நான்குவரிகளில் விளக்குகிறது.

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே - தானென்று நா
னென்றி ரண்டிலாத தற்பதம் - தானென்று நானென்ற தத்துவங்களாக
தானென்றும் நானென்றும் சாற்றுகில்லேனே

"வேதங்களைக் கற்றதாலோ, நுண்ணறிவினாலோ, விரிந்த கேள்வியாலோ இந்த ஆத்மா (சுயாதீனநிலை) ஒரு சாதகனால் அடையப்படுவதன்று: சாதகன், எப்போது ஆத்மா ஒன்றையே ஆத்மாவினால் பிரார்த்திக்கின்றானோ அப்போது அவனால் அடையப்படும். அவனுக்கு அப்போது இந்த ஆத்மா தன்னுடைய உண்மை சுரூபத்தைப் பிரகாசப்படுத்துகிறது” என்கிறது கடோபநிசத்து.

எனவே, நண்பனே! நீ இந்த உடல் அல்ல, உயிருமல்ல. உள்ளமாயிருக்கிறாய். உள்ளத்தில் உண்மையை மட்டும் வைத்துக்கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டதன்பயனாய் மேலும் அமரனாகிறாய்!