புது வெளிச்சம்/பராதீனம்



பராதீனம்


உலகத்தில் அனேகமாக யார் நாவிலும் உச்சரிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு அகராதி அளவில் உயிர்வாழ்ந்து கொண்டுள்ள சொற்கள் இந்தப் பராதீனம், சுயாதீனம் எனும் இரண்டு மட்டும்தான். ஆற்றல் மிக்க இந்த இரண்டு சொற்களையும் அறிவில்லாத மனிதர்கள் அலட்சியம் செய்து ஒதுக்கி வைத்திருந்தால்தான் என்ன? இழப்போ இன்னலோ, இவ்விரண்டு சொற்களுக்கும் என்றும் நேர்வதில்லை. அவை மனிதர்களை மட்டும்தான் பிடித்துச் சாறு பிழிந்து சக்கையாய்க் காயவைக்கும்; ஐயோ ஆண்டவனே என்று கூவவும் செய்யும். கூனிக் குறுக வைத்துவிடும் சக்தி இந்த இரண்டு சொற்களுக்கும் உண்டு.



'ஒரு நாள்' எனும் காலத்தில், இரவும் பகலும் அடங்கியிருப்பது போன்ற நிலையில் உள்ளவை இந்த இரண்டு சொற்களும். இரவும் பகலும் மனிதனையாக்கி வைப்பது போன்றே பராததீனமும் சுயாதீனமும் அதிக நுட்பமாக மனிதர்களை ஆக்கி வைக்கவுள்ளன. அதிலும் அவர்கள் அறிந்து கொள்ளாமலே அவர்களை ஆளும் மாபெரும் சக்தி பராதீனத்துக்குத்தான் சர்வ மானியமாக ஒதுக்கிவிடப்பட்டுள்ளது.

சிந்திக்கும் பழக்கம் படியாத, காரணகாரியத்தின் இயல்புகளை ஊன்றி உணராத பாமரன், பணக்காரன், படித்தவன் என உள்ள அனைவரும் இந்தப் பராதீனத்தில் மாட்டிக் கொண்டு பகவானே, பகவானே என ஒலமிட்டுக் கொண்டுள்ளனர். அதிகார வர்க்கத்தினருக்கும் இதிலிருந்து விதி விலக்கில்லை.

எல்லாருடைய இதயங்களும் 'இந்து மதம்' என்ற பெயரில் பக்தி என்ற பட்டியில் அடைக்கப்பட்டுள்ளன. அப்படி அடைத்தவர்கள், ஆதிசங்கராச்சாரி, ராமானுஜாச்சாரி, மாத்துவாச்சாரி எனும் மூன்றே மூன்று பேர்தான். அதற்குப்பின், நாயன்மார்கள், ஆழ்வார்கள் எனப்பலரும் தோன்றித் தோன்றி குடியானவன் தன் மந்தைகளைக் காப்பதுபோல் மக்களை சுயாதீனத்திற்குப் போகவிடாமல் வெகு எச்சரிக்கையாகக் காத்து வந்தனர், தற்போதும் காத்து வருகிறார்கள்.

பராதீனத்திற்காட்பட்டவன் மனதில் பயம் மண்டிக்கொண்டு விடுகிறது. அதாவது சாமிபயம்; பேய் பிசாசுபயம்; மேலதிகாரிகள் பயம்; பணக்காரர்களின் பயம்; நோய் நொடிகளின் பயம்; பயம், பயம் பயம்! இருட்டில் வாழ்கிறவன் பயந்தே தீர வேண்டியது இயற்கையின் நியதியல்லவா! இவர்களின் உடலில் பலமிருந்தும் உள்ளத்தில் பயம் உதித்துக் கொண்டே உள்ளது.

நோய் காரணமாக ஒருவர் மருத்துவனையை நாடுவதுபோல் பயங்காரணமாக இன்றைய சமுதாயம், இந்தச் செயற்கை விக்கிரக தெய்வங்களை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உபநிசத்துக்களின் கருத்துக்கு முற்றிலும் மாறான - பொய்யான நிலையிது. சரியான வழியைத் தவற விட்டுத் தடுமாறும் நிலைதான் இன்றைய சமுதாய நிலை.

மேலே சொன்ன மூன்று ஆச்சாரிமார்களின் இருதயத்தில் கடுகளவு உண்மையோ மனிதாபிமானமோ இருந்திருந்தால், அகம் பிரம்மாஸ்மி நானே பிரம்மமாயுள்ளேன் என்றும்', 'சோ அகம் அஸ்மி' 'நீயும் பிரம்மமாயுள்ளனை என்றும் சொல்லி இருக்க வேண்டும். 'சவ ஏஷஆத்மா ஹருதி' - இந்த ஆத்மா இருதயத்திலுள்ளவன். 'ஏஷ ஆத்மேதி '- இதுதான் ஆத்மா, 'ஏத-தம்ருதம்' - இதுவே அழிவில்லாதது. 'அபயம் '- பயமில்லாதது, 'ஏதத் பிரம்மேதி' - இதுவே பிரம்மா, எதஸ்ய ப்ராமனோ நாம சத்யமிதி - இந்தப் பிரம்மத்தின் பெயர் சத்தியம் என்று சொல்லியிருந்தால், - மக்களுக்குப் போதித்திருந்தால் இந்த அத்வைத துவைத விசிஸ்டாத்துவைத ஆச்சாரிகள் மூவரையும் ஆத்மநேய குருமார்களாக இதயத்தில் வைத்துப் போற்றக் கடமைப்பட்டது. இந்தப் பாரத சமுதாயம் என்று கொள்வது மிகச் சரியானது. ஆனால் இவர்கள் வாயில் இந்த உண்மைகள் வரவே இல்லை. சடப்பொருள்களைக் காட்டிச் சிவன், விஷ்ணு எனப் பெயர்கள் வைத்து உருவங்களைச் செய்து கோவில்களைக் கட்டிக் கும்பிடச்செய்தார்கள். எனவே பாரத சமுதாயம் கடவுளை அறியாமல், கடவுளே கடவுளே என்று வெறும் கூச்சல் போட்டுக் கொண்டுள்ளது என்று இன்று என்னைக் கூற வைக்கிறது.

இம்மூவரில் முன்னுரிமைபெற்றவர் காலாடி ஆதி சங்கராச்சாரியார்தான். இவர்தான் அத்வைத போதகர். 'அத்வைதம் ' எனில் இரண்டற்றது; பிரம்மம் வேறு நான் வேறு அல்ல; நானே அந்தப் பிரம்மமாயுள்ளேன் என்பதே அதன் பொருள். இது மிகவும் சரியானது. உபநிசத்துகளும் இதைத்தான் உரைக்கிறது. ஆனால், இப்படிச் சரியாகச் சொன்னது தம்மவர்களுக்கு மட்டும்தான். நம்மவர்களுக்கு இதேபோதனை மறைக்கப்பட்டு விட்டது. என்பதுதான் உண்மை.

இது, நம்முடைய சோற்றைத் தின்றுவிட்டு நமக்குச் செய்த பச்சைத் துரோகம் என்றால் அது மிகையாகாது. எப்படியெனில், 'சத்து, சித்து, ஆனந்தம் - சிவம்’ என்கிறது ஒரு உபநிசத்து. மற்றொரு உபநிசத்து மேலும் சற்று விளக்கமாக - சத்தியம், ஞானம், அனந்தம் - பிரம்மம் என்கிறது.

பிரம்மம் அல்லது சிவம் எனும் தெய்வத்தின் உண்மை இதுவேதான். சொற்கள் வேறுபடினும் பொருள் வேறுபடாது. கடவுளைப் பற்றி விளக்கிய நிலைபாடு இது. பூ, புவ. சுவ மஹா, ஜன. தப, சத்திய எனவும். வேறு ஒரு உபநிசத்து விளக்குகிறது. சம்ஞானம், ஆக்யானம், விக்ஞானம் - பிரக்யானம் எனவும் விளக்குகிறது மற்றொரு உபநிசத்து.

விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை கனநாதன் எனும் ஐந்து தெய்வங்களை நம்பங்குக்கு ஒதுக்கிய அந்தப் பழைய சங்கராச்சாரியார் சிவன் என்கிற தெய்வத்துக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நம்மவர்கள் சிவனை தினமும் தியானம் செய்ய ஒரு மந்திரத்தையும் தானே பிரசவித்து, அதாவது உண்டுபண்ணிக் கொடுத்தார். அந்த மந்திரத்திலும் ஒருதந்திரம் இல்லாமலில்லை. வாசகர்களே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.

'அகம் பிரம்மாஸ்மி' எனும்போது, நானே பிரம்மமாயுள்ளேன் என்பது பொருளாயின், தியானம் நம்மைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். இதுதான் நியாயம் ஆனால் இவர் என்ன செய்தார்? எனின், சத்து, சித்து, ஆனந்தம் - சிவம் என்ற மந்திரத்திலுள்ள சத்து எனும் பகுதியை கத்தரித்து வைத்துவிட்டுச் 'சிதானந்த ரூப சிவோஹம்' எனச் செய்து கொடுத்தார். இதன் பொருள்; 'அறிவும் ஆனந்தமுமே ஒரு உருவாகியுள்ள சிவன் என் அகத்தில் உளன்' என்பதாம்.

சத்தியமில்லாத அறிவும் ஆனந்தமும் எத்தகையனவாயிருக்கும்? உப்பு, காரம், புளி இம்மூன்றும் கனருசிகள். வெறும் கஞ்சிவைத்து உப்புமாத்திரம் கலந்து மனிதன் அருந்தலாம். கூட ஒரு இளம் பச்சைமிளகாய் இருந்தால் மேலும் கொஞ்சம் குடித்துவிடலாம், ஆனால், உப்பே இல்லாது காரமும் புளியும் வைத்துக் கொண்டு கஞ்சியை எந்த மனிதனாலும் குடிக்க முடியாது. அவ்வளவும் வீண் இல்லையா?

இதுபோன்று சத்தியமில்லாத - வெறும் அறிவும் ஆனந்தமும் எப்படிச் சிவனாக முடியும்? அதை அகத்தில் தெய்வம் என வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தை நூறு தரம் வாயில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதனால் நேரம் வீணானது தவிர வேறு என்ன நல்லபயன் விளைந்துவிடப் போகிறது? என் அருமை நண்பனே சிந்தித்துப்பார்?

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சங்கராச்சாரியாரால் தமிழர்களாகிய நமக்கு அன்பளிப்பாகக் கற்பித்துக் கொடுத்த - சிவன் எனும் பெயர்ச்சொல் முழுமுதற்கடவுளாக்கிப் பாடிப்பாவிய நூல்கள், வகையும் தொகையும் இன்றிப்பெருகி மலிந்து கிடக்கின்றன. இவற்றை விரிக்கிற்பெருகும்.

அன்றிலிருந்து இன்றுவரை மட்டும் என்ன வந்தது. இனிமேலும் கூட நாமனைவரும் பராதீனர்களாகத்தான் வாழ்ந்தும் வாழ்ந்து கொண்டும், வாழவும் உள்ளோம். நமக்குக் காலம் கழியும் பொருத்தமான பாடல்கள் ஆயிரமாயிரம் உள்ளன. மாதிரிக்கு என் செயலாவதியதி தொன்றுமில்லையினித் தெய்வமே! உன் செயலேயென்றுணரப் பெற்றேன் எனும் வகையில் அனைத்தும் இருக்கும். 'எல்லாம் அவன் செயல்', நம்மால் எதுவும் செய்ய இயலாது என்னும் முடிவு, முடிந்த முடிவு. இதற்கு மாற்றே கிடையாது.

மாபெரும் பாரத தேசத்தை அராபியன் ஆண்டால் என்ன ஆப்கானியன் ஆண்டால் என்ன, துருக்கன் ஆண்டால் என்ன, இங்கிலீஸ்காரன், பிரன்சுக்காரன், டச்சுக்காரன். போர்த்துக்கீசியன் யாரோ வந்து பல நூற்றாண்டாண்டாலும் என்ன? நாம் வாழ ஊர் இருக்கிறது; உழைக்க நிலமிருக்கிறது. உண்ணச் சோறிருக்கிறது. இம்மைக்கு இது போதாதா? மறுமைக்குச் சிவன் இருக்கவே இருக்கிறான். 'காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா' - இது போதாதா மனதைத் தேற்றிக் கொள்ள!

சிவன் கதை இது என்றால் விஷ்ணு கதை இன்னும் ஒருபடி மேலே இருக்கும். அது அவதாரமயம். "நமக்கினி பயமேது, நம் ராமனருளிருக்கும் போது” என்பது தாரக மந்திரம். ராமா என்றாலே பாவம் போம் என்பது அவர்கள் நம்பிக்கை.

'பராதீனன்' என்றால் அடிமை என்பது பொருள். நம்மை நிரந்தர அடிமையாக்கினவர்கள் இந்தச் சங்கராச்சாரி, இராமானுஜாச்சாரி, மாத்துவாச்சாரிகள். இனி இதிலிருந்து விடுதலை இல்லை.



நமது உடன்பிறப்புகள் காமம், வெகுளி, மயக்கம், பொய், வஞ்சனை, பேராசை, பொறாமை, கோள், குரோதம், சச்சரவு, சண்டை, வழக்கு, போலீசு, கோர்ட்டு, வக்கீல், விசாரணை இன்னும் என்னவெல்லாமோ தீராத நரக வேதனை, வறுமை நமது நிரந்தரமான பிறப்புரிமை. இது நம்மை விட்டு என்றும் நீங்கவே நீங்காது, காவி உடுத்திக்கொண்டு, இரந்து வயிறு வளர்த்தினால் என்ன குறைந்து விடும். யார் போகும் போது எதைக் கொண்டு போகிறார்கள் இது நமது கேள்வி.

சைவ சமயம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ள திருமுறைகளில் திருமூலர் திருமந்திரமும் ஒன்று. அதை சைவ சமயத்தலைவர்கள், படித்துப் பார்த்திராவிடினும் கையால் தொட்டும் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள் என்று நான் ஐயுறுகிறேன். மூலர் உரைத்த முப்பது மந்திரங்களில் ஒருமந்திரம் போதுமே இந்த விக்கிர ஆராதனை எனும் அறியாமை நோய் தீர்க்க: பதி, பசு, பாசம் எனும் மூன்றும் இன்னவெனவும், இவ்வாரெனவும், அதை அடையும் முறையும் விளக்கமாக இருந்தும் என் பசுவாகிய உயிர் பாசத்தை பிய்த்தெறிந்து இன்னும் பதியையடையாமல் கூக்குரலிட்டுக் கொண்டுள்ளனர். என் மக்களை மந்தையாகக் கூடவைத்து மேலும் மேலும் பராதீனர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்; திருமந்திரம் படித்துப் புரிந்து கொள்ளாதவன் இனித் திருக்கயிலாயத்துக்கு எந்த வழியில் சென்று சிவன் பக்தனாவது?

திருமந்திரத்தில், திருமூலர் இவர்களைப் பார்த்து விளிக்கிறார்; "வானில் ஈசனைத் தேடும் மதியிலிகாள்” என்று. தேனும், இனிமையும் சிவப்போ கறுப்போ? என்று வினவுகிறார். தேனும், இனிமையும் சேர்ந்திரண்டற்றுள்ளதுபோல்', என - அதாவது ஈசனும் நீயும் வேறுவேறல்ல தேனும் இனிமையும் வெவ்வேறாகாதது போல என்று தெளிவிக்கிறார். 'ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே. உன்னுடைய உடலுக்குள்ளேயே நீ வானில் தேடும் ஈசன் ஒளிந்திருக்கிறான் என்கிறாரோ ஏன் இந்த அடிகளார்கள் இதையறியாமல் நாட்டில் அறியாமை இருளைப் பரப்புகிறார்கள்.

'மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டென்று மகிழ்ந்த தெல்லாம்
கேடுண் டெனக்கேட்டு வந்துவிட்டோம் இனிக்கேள் மனமே!
ஒடுண்டு கந்தையுண்டு உள்ளே எழுத்தோ ஐந்து முண்டு
தோடுண்ட கண்ட னடியார் நமக்குத் துணையு முண்டே!

என்ற பாட்டுப் பாடக்கூடிய நாட்டில் மழையேன் பெய்ய வேண்டும். பயிர் விளைய ஏழைமக்கள் ஏன் பாடுபடவேண்டும்! ஆட்சி எதற்கு? அதிகாரம் எதற்கு? ஒடு எடுத்துக்கொண்டு போக வேண்டியது தானே.

பராதீனத்தின் பயன் இதுதான்? குருடர்கள் யானையைத் தொட்டுப்பார்த்து அபிப்பிராயம் கூறியதற்கும் மக்கள் வானிலும், மண்ணில் கோவில்களிலும் உருவங்களை வைத்துக் கொண்டு, ( சுயாதீனம்’ என்ற சொல்லின் பொருளை யறியாது? புத்தி கெட்டவர்களாக வாழும் நாட்டில் சுதந்திரம் தங்கியிருக்க இடமே கிடையாது.

பராதீனம் என்றால் அடிமை என்றுபொருள். இதுவேண்டாதது, தேவையற்றது எனவே உரத்துக் கூறுக! என் அருமை நண்பனே. "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்படோம் என்று நம்பி முழக்கமிடுக! ஆமாம், மேலே கூறிய ஐந்து கற்பனைத் தெய்வங்கள் உட்படத்தான் முழக்கமிடுக!



தர்மத்தின் புனர்ஜென்மம்தான், பாரத தேசத்தின் விடுதலை கவிஞன் இல்லாத ஒரு தேசம். கண்ணில்லாத தேசம்தான்

- ஸ்ரீ கண்டய்யா

சுகத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்றால் புத்தகங்களை முதலில் தேடிக்கொள்.

- வி. ஸ்டாரிட்
"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்/பராதீனம்&oldid=1637789" இலிருந்து மீள்விக்கப்பட்டது