புது வெளிச்சம்/தியாகம்



11


தியாகம்


'மகத்தானவை’ என நம்மை நினைக்கச் செய்யும் சொற்களில் இந்தத் தியாகம் எனும் சொல்லும் ஒன்று. தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள மிகப்பெரிய மருத்துவத்தை கேட்போர் உளத்தில் விளக்கமாக முழுதும் பதிய எடுத்துரைப்பதற்கு என்னைவிடப் பன்மடங்கு அறிவாற்றலும் மனிதாபிமானமும் அதிகமுள்ள ஒரு மகானால் தான் சாத்தியம் என்று முதலிலேயே சொல்லி வைக்கிறேன். இதில் நான் என்னைக் குறைத்து கூறுவது உண்மையைக் கூறியதே யன்றி வேறு எதுவொன்று மன்று.

இருண்ட வீட்டில் விளக்கேற்றி வைப்பதென்றச் சத்தியத்தை தன் உள்ளத்தில் ஒளிர வைத்துக் கொண்டுள்ள அச்சமறியாத கடமையுணர்வுள்ள ஒரு ஆண்மகனின் தலையாய பண்பு அவசியமேற்படுங்கால் வெளிப்படும் உணர்வோடு கூடிய செயல்பாடு இது. தயக்கமின்றி பிரதிப்பயன் எதிர்பாராது தன் நேரத்தையோ அறிவையோ, செல்வத்தையோ தன்னையையோ - அர்ப்பணித்துக் கொள்ளுவதன் பெயர் தியாகம். அறிவில்லாத செல்வமும், ஆராய்ச்சியற்ற கல்வியும், கடமையுணர்வில்லாத அதிகாரமும், அஞ்சி ஒதுங்கவோ அசிரத்தைகாட்டவோ, எள்ளி இகழவோ செய்து ஒதுக்கப்படுவது இந்தத் தியாகத்தை மட்டுந்தான்.

கோகினுார் வைரமாயிருந்தால் தான் என்ன? கோழியும், குருவியும் அதை அசட்டை செய்வது போன்ற நிலைதான் தியாகத்தின் ஆக்க மறியாத இந்த அசடர்கள் நிலையும். வரலாற்றுணர்வோ, இலக்கிய அறிவோ, தத்துவ ஞானமோ இல்லாத எந்த ஒரு மனிதனும், அசாதாரணமான இந்தத் தியாகத்தின் உண்மை மதிப்பை அறியாதவனாகவே இருப்பான்.

செயற்கரிய செய்துவக்கும் ஆன்றோர்களால் போற்றிக் கொள்ளப்படவுள்ள தியாகத்தின் சக்தியை எந்தச் சொற்களைக் கொண்டும் விளக்கிக் காட்ட இயலாது என்றுதான் பொதுவாகக் கூற முடியும்.

மகாத்மா காந்திஜீயிலிருந்து திருப்பூர் குமரன் வரை இறந்தும் இறவாது என்றென்றும் நின்று நிலவும் தத்தம் தியாகச் செயல் மூலம் அமரராய், ஆதர்சபுருஷராய் நம் உள்ளங்களில் குடியிருப்பவர்களை நாம் நினைத்துப் பார்த்தால் இந்த மகத்தான சொற்பொருள் தெற்றென விளங்கி விடுகிறதல்லவா?

‘வாழ்வு’ எனும் சொல்லின் பொருளைச் சரிவர அறியாது; அன்றும், இன்றும் மனிதராய்ப் பிறந்து வாழ்வதும், வாழ்ந்து கொண்டும் உள்ளவர்களில் கூலிக்காரனும் உண்டு கோடீசுவரனும் உண்டு; அடிமையும் உண்டு ஆண்டியும் உண்டு.

மனிதப் பிறவியைப் பெற்றவன்கூடப் பெருவாழ்வைப் பெற்றிருந்தும், அவ்வாழ்வின் பயனானப் புகழைப் பெறாது இறந்தான் என்றால் அவ்வளவும் வீண்தான். அதுநீர்மேல் வாழ்ந்த ஒரு குமிழியின் வாழ்வுதான்; என்று நான் கூறினால் எந்த அறிஞனும் இதைத் தவறு என்று கருதமாட்டான். எனவே வாழ்வு வீணாகக்கூடாதென்றால் நாம் தியாகம் எனும் இந்தச் சொல்லின் பொருள் புரிந்தொழுகுபவர்களாக இருந்தே தீரவேண்டும்.

உயிரினங்களில் ஐந்து வகைகள் உள்ளன என்றும் அவற்றில் ஒரறிவுயிர் தாவரம் என்றும் நமக்குத் தெளிவித்துள்ளனர் நமது முன்னோர். மேலும் நாம் இத்தாவர இனத்தைச் சற்று கூர்ந்தாராய்ந்து பார்த்தால், மரஇனம், செடியினம், கொடியினம், புல்லினம், பூண்டினமென ஐந்தினமாக்கிவிடலாம். இவற்றை நிலைத் திணையுயிர்கள் என்றும் ஏற்கனவே பெயர் கொண்டுள்ளன கூறப்பட்ட ஒவ்வொரு இனத்திலும் நல்லன, அல்லன என இருவகையுள்ளன.

ஐயறிவுள்ள மனிதனுக்கு இந்தத் தாவரவர்க்கம் தான் முதல் தெய்வம் என்றும் கூறப்படுகிறது. அன்னமயம் பிரம்மம் என்று உபநிசத்துக்களில் இதனைப் பற்றித் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இயங்கு தினையாயுள்ள மனிதனுட்பட அனைத்து சீவராசிகளுக்கும் முதலில் தோன்றி நிலவுலகில் நம்மை வளர்த்து வாழவைக்கும் தாய் போன்றன தாவரம். சிந்தித்துப் பார்த்தால் தம்மை முழுமையாக மற்ற சீவராசிகளுக்கு தியாகம் செய்வதற்காகவே இவை தம்மைத் தாமே ஈன்றுகொண்டு, மனிதனின் - மற்ற சீவராசிகளின் கைமாறு கருதாது வாழ்வதை நாம் காணுகின்றோமென்று. சிந்தித்துப் பார்க்கின்றோமா? இல்லை. தியாகம் எனும் சொல்லுக்கு முழுப்பொருள் இத்தாவர வர்க்கம்தான் என்பதும் சரியானதேயாம்.

ஞானிகளைப் போல் வேடம்பூண்டு கொண்டுவாழும் ஆசாட பூதிகளின் இருதயத்தில் தியாகம் எனும் சொல்லின் வாடையும் கூட இருக்க இயலாது. தியாகம் ஆனந்த வடிவமானது. ஆசாடபூதிகள் குரோத உணர்சியுடையவர்கள்.

தேன், நெய், சருக்கரை தேங்காய், பழம் எனும் சொற்கள் வேறு; சொற்கள் குறிக்கும் பொருள்களும் வேறு என்று புரிந்து கொள்ளவேண்டும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதது போல, கோயில் தெய்வம் குணத்துக்கு உதவாது. குணம் அல்லது அறிவுதான் தெய்வம் எனப்படுவது.

'சந்தியம், ஞானம், அனந்தம், பிரம்மம்' எனும் உபநிசத்து மேலும் விளக்குகிறது, அன்னமயம், பிரம்மம், பிராணமயம், பியம்மம், மனோமயம் பிரம்மம், விஞ்ஞானமயம் பிரம்மம், ஆாந்தமயம், பிரம்மம் என்று உடல், உயிர் உள்ளம் அடுத்துப் பொய்யை நீக்கி மெய்யை மேற்கொண்டொழுகல் விஞ்ஞானம், விஞ்ஞானம் அல்லது சத்தியத்தைப் பரவலாக ஆக்கிப் பங்கிட்டுக் கொள்ளும் அரும் தியாகமே, அனந்தம், அது ஆனந்தமயமானது.

ஆகவே தான், உபநிசத்து திட்டவட்டமாக இந்தத் தியாகம் எனும் சொல்லைப் பற்றி இவ்வாறு கூறிற்று

'நாஸ்தி தியாக சமன் சுகம்'. இதன் பொருள் தியாகத்தில் உள்ள சுகத்துக் கொப்பிட்டுச்சொல்ல வேறு எந்த ஒரு சுகமும் உலகில் இல்லை, என்று

வெறும் பாவனை வேண்டப்படுவதல்லாத; பாவிகளால் சுகம் பெற முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளத்தில் சத்தியத்தை வைத்து ஒழுக்கத்தில் நீதிக்கு முக்கிய இடமளித்து வாழும் போது தெய்வீகத்தை நாம் அறிந்தடைந்தவர்களாகிறோம். தியாக மூர்த்திகளாகிறோம், மற்ற மனிதர்களால் வெல்லப்படாதவர்களாகவும் ஆனந்தமுள்ளவர்களாகவும் ஆகிவிடுகிறோம்.

எனவே தியாகம் வாழ்க சத்தியம் ஓங்குக!


ஆழ்ந்த சிந்தனை, குறைந்த பேச்சு இதுவே வெற்றிக்கு வழி.

அடக்கத்தோடு உண்மை ஆலோசிக்கப்படும்போது, ஆத்திரத்தோடுபொய்மை கூச்சலிடத் தொடங்கும்.

'சமுதாயம்' என்னும் பயிரில் வாழும், ஒழுக்கமில்லாத ஒவ்வொரு மனிதனும், களை எடுக்கப்படவேண்டியவனே.

- வெ.

உயிர் வாழ்பவனின் சோம்பல் ஒரு சவக்கிடங்கு.

- டையோ
"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்/தியாகம்&oldid=1637784" இலிருந்து மீள்விக்கப்பட்டது