புது வெளிச்சம்/புனர் செனனம்

12


புனர் செனனம்



ம்முடைய மதத்தின் பெயர் 'இந்துமதம்' எனப்படுகிறது. இந்து மதத்தினை மேற்கொண்டு வாழ்பவர்களுக்குப் புனர் செனனம் - அதாவது மறுபிறப்பு உண்டு என்று வற்புறுத்தி நம்பும்படி செய்துகொண்டே வருகின்றனர் இந்து மதபோதகர்கள்.

சிந்திக்கத் தெரியாத ஒருவன், காதில் விழுந்த சொல்லை நம்பி நடந்து தன்னைப் போன்றுள்ள மற்றவர்களையும் நம்பும்படி செய்கிறான். தன் உற்றார் உறவினரையும் இதே வழியில் நம்பி நடக்கவும் செய்து விடுகிறான்.

சோசலிசம், கம்யூனிசம் போன்று இந்தப்புனர் செனனக்கோட்பாடு இன்று நேற்றைய புதிய தொன்றன்று. உபநிசத்துக் காலத்திலிருந்தே இதுவும் அது இந்து மதத்தில் புகுத்தப்பட்டு, மக்கள் மனங்களில் அழுந்தப் படியச் செய்யப்படுவதும் நடைமுறையில் இன்றும் இருந்து வருகிறது.

புனர்செனனக் கோட்பாடுபற்றி இங்கு அலசி ஆராயப்படுவதற்குமுன் இதற்கான ஒரு சிறியசெய்தியை கூறிவிடுவது நல்லதெனக் கருதுகிறேன்.

சாணக்கியனின் அர்த்தசாத்திரம் கூறுகிறது. அந்தக் காலத்தில் ஒரு ரிசியினிடமிருந்து கல்விகற்றுக்கொள்ளும் மாணவன் முதலிலிருந்து முடிவுவரை அனுசரிக்க வேண்டிய நடைமுறைகள் எட்டு, என்று அவையாவன : பிசிசுருசை, சிரவண, கிரகண, தாரண, யூக, அபோவூக விஞ்ஞான, தத்வாரு நிவேச என்பனவாம். இவற்றில், அபோவூக எனும் ஒன்றின் பொருள், ஆசிரியரால் போதிக்கப்பட்டிருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாதவற்றை அறவே வெட்டித் தள்ளிவிடு, என்பதே.

எனவே, தொன்று தொட்டு இருந்து வருகிறது என்ற காரணத்திற்காக நாம் மேற்கொண்டொழுகியே தீரவேண்டும் என்று நம்மையாரும் தடுத்து நிறுத்திவிட முன்வர வேண்டாம். இதுவுமன்றி, இவன் ஆரம்பக்கல்வியைக் கூடச் சரிவரக் கற்காதவன் என்று குற்றம் கூறவும் துணிய வேண்டியதில்லை. ஏனெனில் என் வயது இந்த சூலை இறுதி மூன்றுநாள் கழிந்து வரும் ஆகஸ்டு 21ம் கழிந்த மறுநாள் எண்பத்தி இரண்டாம் வயதில் வாழத்தொடங்கி விடுகிறேன். எதற்காக இங்கு இதைச் சொல்கிறேன். எனில் என் படிப்பை நான் இன்னும் முடித்துக் கொள்ளவே இல்லை, 'இன்றும் படித்துக்கொண்டே இருக்கிறேன்' என்ற உண்மையை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காகவேதான்.

ஏதோ ஒருகாலத்தில் வாழ்ந்த ஒருவர். மனித சமுதாயத்திற்கு இது நன்மை தரும் என நம்பி உரைத்த எந்த ஒரு கருத்தையும் ஆராய பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமை எனக்கும் உண்டு. அந்த உரிமையை நான் எடுத்துக்கொள்வதில் யாரும் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் இன்றைய நமது பாரத சமுதாயம் சீர்கெட்டிருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

எப்போதிருந்து சீர்கெட்டிருக்கிறது? எனின், சமண மதத்தைக் கழுவிலேற்றி, புத்த மதத்தை தேசப்பிரஷ்டம் செய்து திருக்குறளையும் புறநானூற்றின் வரலாற்று ரீதியான உண்மைகளையும் புறக்கணித்து விட்டுவிடச்செய்த ஆதிகாலாடி சங்கராச்சாரி காலத்திலிருந்து, உபநிசத்துகளின் உண்மைகளை ஒளித்து வைத்து மாற்றாகப் 'பகவத்கீதை' என ஒருநூலியற்றி இந்து மதத்தின் தலையில் கவிழ்த்த அந்த நாள்தான் தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் தலைக்குனிவுக்கு தாழ்வான நிலைக்கு கடைக்கால் கோலிய முதல்நாள் என்று என் உள்ளத்திற்குத் தெற்றெனப் புலப்படுகிறது. இத்தோடு நின்றுவிடாது, சிவன் பெரிய தெய்வம், விஷ்ணு பெரிய தெய்வம் எனும் போர் புரியச் செய்தபோது மக்கள் முழுக்க முழுக்க அடிமைப்பட்டகாலம். யாருக்கு வேறு யாருக்குமல்ல, ஆரியர்களுக்குத்தான். ஆரியர் முழுக்க முழுக்கப் பொய்யாக உண்டு பண்ணித் தமிழர்களுக்குப் படைக்கும் கடவுள், காக்கும் கடவுள் அழிக்கும் கடவுள் எனப் பெயரிட்டுப் பிரசாரம் செய்து வந்த காலகட்டத்தில் மக்கள் நம்பிப் பின்பற்றி ஒழுகத் தொடங்கிய அந்த நாளில், 'இவையெல்லாம் உண்மையா?' எனக்கேட்ட மக்களுக்கு பக்குடுக்கை நன்கணியார் பாடிக்காட்டினார் அதை மறுக்கவும் முடியாமல், தொடுக்கவும் முடியாமல் என்னசெய்வது அரசனே ஆரிய தருமத்தை ஆதரிக்கும் போது ஒரு எளிய கவிஞன் என்ன செய்ய முடியும்.

ஒரு சிறிய ஊரில் ஒரு வீட்டில் இழவுப் பறைவிக்கிறது. இன்னொரு வீட்டில் மங்கலவாத்தியம் முழக்கப்படுகிறது. மணம் புரிந்துகொள்பவர் மகிழ்ச்சியோடு பூமாலைகள் சூட, கணவனை இழந்தவள் துக்கம் தாங்கமாட்டாது அழுது சோர்ந்த கண்களில் தாரை தாரையாக நீர் சோர படைத்திருக்கிறான் அன்பர்களே. பண்பு என்பதை அறியாத அந்தப் படைக்கும் கடவுள் எனும் பொருள்படுவரிகள் (ஒரில் நெய்தல் கறங்க - ஒரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் - புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்பைதலுண்கண் பணிவார்ப் புறைப்பப் படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன் என்ற வரிகள் படைக்கும் கடவுளைப் பற்றிய பொய்யைக் கண்டிக்க முடியாது கண்டித்துரைத்த உண்மைக் கருத்தல்லவா? 

இதே போல, 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றியான்' என்ற குறளும் இந்த ஆரியத் தெய்வங்களைப் பற்றி வள்ளுவப் பெருந்தகையின் உள்ளக்கருத்து வெளிப்படுவது காணலாம். வள்ளுவர் வகுத்து தந்த 'அறம், பொருள், இன்பம், வீடு' என்ற அமைப்பு எந்த ஒரு மதமும், ஏற்றுக்கொள்ளக் கூடிய வாழ்க்கையமைப்பென்பது' ஆரியத்துக்கும் ஏற்புடையதேயன்றோ? சரி, இது நிற்க.

புனர் செனனம் பற்றிக் கிருத்துவ தருமமும், இஸ்லாமிய தருமமும் சிரத்தையெடுத்துக் கொள்ளவில்லை. வாழப் பிறந்த மனிதன் சீவனுள்ளவரையும் இன்னின்னவாறு வாழ்ந்துவிட்டால் அதுவே போதும் என்ற அளவில் திருப்தியடைகின்றனர் அவர்கள்.

ஆனால், ஆரியரின் திருஞானசம்பந்தரால் கழுவிலேற்றப்பட்ட சமண மதமும், நாடு கடத்தப்பட்ட புத்த மதமும், ஆண்டவன் இல்லை என்ற நிலையிலும் இந்தப் புனர்செனனக்கொள்கையில் அதிகம் நம்பிக்கை வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்து தருமத்தை மேற்கொண்டொழுகும் குடும்பங்களில் பிறந்து, நல்ல முறையில் கல்வி கற்ற சிந்தனையாளர்கள் பலரும் 'புனர் செனனம்' என்பது அறிவுக்குப் புறம்பானது என்று கூறும்போது தம் கூற்றுக்குப் பக்கபலமாக சமண பெளத்த தரும ஒப்புதல்களை இழுத்து நம்மேல் வீசி, அரைகுறைகளே இவற்றைப் பார்த்தாவது அறிந்து கொள்ளுங்கள் என்று கூறத் தவறுவதே இல்லை. இதில் என்ன நீதிநியதி உள்ளது? எப்படிச் சிந்தித்தாலும் அறிவுக்குப் புறம்பானது என்று நம் உள்ளம் உணரும் போது அவர்கள் நம்பினார்கள், நீங்களும் ஏன் நம்பக்கூடாது. என்று கேட்கிறார்கள். அவர்கள் இன்னும் என்னென்ன வெல்லாமோ நம்பினார்கள். அவற்றையெல்லாம் இவர்கள் ஏன் நம்பவில்லை?

இவர்கள் நமக்கு சொல்வது இதுதான். அதாவது தூக்கம், அதிலும் அயர்ந்தது தூக்கம் உடம்புக்கு ஆரோக்கியமானது. எனவே நீ தூங்கிக் கொண்டே இரு. நான் உன் தொடையில் கயிறு திரித்துக் கொள்ளுகிறேன்! .

இங்கு, பெட்ராண்டு ரசலின் ஒரு வாக்கியத்தைக் குறிப்பிட்டுவிட்டு மேலே இதைப்பற்றித் தொடர்கிறேன். என் அருமை நண்பனே கவனித்து படித்துத் தெரிந்து கொள்

. “உலகத்தில் மிக அதிகமான சுகபுருவுன் யார்? எனும் வினாவிற்குச் சரியான விடை, இப்போது பிறந்திருக்கும் குழந்தை அல்லது பைத்திய மருத்துவ விடுதியிலிருக்கும் சித்தசுவாதீன மற்றவன்” என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் எனில், இந்த இருவருக்கும் சுகத்தைப் பற்றிய எண்ணமே இருக்கவியலாது. நானே மிக அதிகமான சுகபுருசன் என்று வெளிப்படச் சொல்லிக் கொள்பவனை உலகம் முழுவதம் தேடினும் நாம் காண முடியாது. ஆம் ஒவ்வொரு மனிதனும், 'சுகம் எங்கே எங்கே' என்று தேடித் திரிகிறவனாகவே இருக்கிறான். சுகம் இருப்பதாக எண்ணித் தேடிவைத்திருக்கும் எந்த ஒரு பொருளிலும் அவன் சுகத்தைக் காண்பதே இல்லை. நிராசையுள்ளவனாகி இறுதியில் அவன் ஏமாற்றத்துக்குள்ளாகுவதும் உண்டு.

எனவே ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் சுகம் எனும் இது, வெளியே உள்ள எவற்றிலும் பெறப்படும் ஒன்றன்று. தன்னுள்ளேயே இருக்கும் ஒரு அம்சம்தான் அது என்ற அத்யாத்ம நிலைபாட்டிற்கே வந்தாலும் வரலாம். இந்த அத்யாத்ம நிலைதானோ சீவன்கள் அனைத்தும்.

உயிர் எனும் சொல்லுக்கு ஆன்மா, காற்று, சீவன் என வேறு பெயர்களும் உண்டு. எந்தப் பெயரிட்டு வழங்கினும் காற்றுதான் உயிர். காற்றின் குழந்தை நெருப்பு: நெருப்பின் குழந்தை நீர் நீரின் குழந்தை நிலம்; சமஸ்டி வடிவில் இந்நான்கும் ஒன்றிய நிலை சீவநாசிகள் மனிதனுட்பட அனைத்துமே.

இந்த மறுபிறப்பு சுத்தமான ஒரு படுபொய். உபநிசத்துகளிலேயே இது செருகப்பட்டுள்ளது. வேறு சான்றுகள் தேவையில்லாதது என்று நான் கருதுகிறேன். ஆவினும் ஈசா வாஸ்யோப நிசத்து பதினேழாம் சூத்திரம் சொல்வதுதான் மிகவும் சரியான கருத்து.

'மூச்சுக்காற்று அழிவில்லாத வாயுவை அடையட்டும். பிறகு இந்த உடல் சாம்பலாக முடியட்டும்'. வாயு - ஈனில - மம்ருத மதேதம் - பஸ்மாந்தம் - சரீரம் என்கிறது அந்தச் சூத்திரம்.

இதுதான் உண்மை அறிவுக்குப் பொருந்துவது. எனவே மனிதனுடைய உயிர்மட்டுமல்ல; எந்த ஒரு சீவனுடைய உயிரும் உடலை விட்டுப் பிரிந்தபின் பிறக்கும் சக்தியை இழந்துவிடுகிறது.

ஆனால் தன்னைத் தானறிந்த ஆத்மஞானிதுலசரீரம் விட்டபின், காரணசரீரம் - மகாத்மா, ஜவாஹர் என மறுபிறப்பை பெற்று சிரஞ்சீவிகளாக உள்ளனர். பாரியும், காரியும், திருவள்ளுவரும், திருத்தக்க தேவரும் போன்றவர்களின் மறுபிறப்பு இதுவன்றி வேறில்லை. செயத்தக்க செய்யாது வெறும் சோற்றுப் பிண்டங்கள். பிறந்தான், இருந்தான் இறந்தான் எனும் சொற்களோடு முடிந்து விடுகிறது; எனினும் அவனுடைய மறுபிறப்பு அவனுடைய சந்ததிகள்.

சென்ற வருடம் நான் ஒரு அவரை வித்தை நட்டேன். அது முளைத்துப் படர்ந்து பந்தல் நிறையக் கூடை கூடையாகக் காய்த்தது. நல்லமுறையில் நாங்களும் அண்டையயலாரும் பற்பல தடவைகள் சாப்பிட்டோம். அதே செடி தனக்கு என்று சிலகாய்களை உலர்த்தி வைத்திருந்தது. அதில் இரண்டொரு விதைகளை இந்த வருடமும் நட்டேன். அதே நிறம், அதே ருசி, அதையே அடுத்த வருடமும் நடவுள்ளேன். எனவே பிறவி என்பது தனித்த உயிர்போய் எங்கும் பிறக்கமுடியாது.

எனின் 'புனர் செனனம்' என்பது அவர்கள் சொல்லும் அர்த்தத்தில் பொய்; ஆம் முழுப்பொய். தாயும் தந்தையும் வாழுங்காலத்திலேயே தம்மை ஆணும் பெண்ணுமெனக் குழந்தைகளாய் மாற்றிக் கொண்டு விடுகிறார்கள்.

மாடுகள், மாடுகளை உண்டுபண்ணிக் கொண்டுவிடுவது போல் ஆடு, கோழி, குருவி, மரம், செடி கொடியனைத்தும் தம்மை தாமே உண்டுபண்ணிவிட்டுத் தான் உயிரை விடுகின்றன. இதுதான் புனர் செனனம் என்றால் அது மிகவும் சரியானது என்று முடிவு செய்கிறேன்.


இளமையிலும் சரி, முதுமையிலும் சரி மடமைக்கு கடமை
உணர்வு இருந்ததாகத் தெரியவில்லை.

- வெ.