புது வெளிச்சம்/பரோச்சம்



19


பரோச்சம்


'பரோச்சம்' எனும் இச்சொல் தமிழ்சொல் அல்ல ஆயினும், பேச்சு வழக்கிலின்றி அகராதி அளவில் வந்து புகுந்து நிரந்தரமான இடம்பிடித்துக் கொண்டுள்ளது. இது. இதுவுமன்றி மறை முகமாகவே பல நூற்றாண்டு களாகத் தமிழ் மக்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டு ஆட்சியும் புரிகிறது. பலே சக்தி வாய்ந்த சொல் இந்தச் சொல்தான். இச்சொல்லின் பொருள் எளிதில் புரிந்து கொள்ள இயலாததாயுள்ளது. அகராதியின்துணையை நாடினாலன்றி எத்தகைய புலவனுக்கும் இதுதிகைப்பை ஏற்படுத்தியே தீரும்.

பரோச்சம் எனின், 'அதிரிசிய மானவை' என அகராதி பொருள் கூறுகிறது. இந்த அதிரிசயமும் ஒரு புதிர்தான். மீண்டும் நாம் அகராதியினிடம் சரணாக வேண்டியுள்ளது.

'திரிசியம் எனின் காணப்படுவது என்று கூறுகிறது அகராதி. இந்தத்திரிசியம் எனும் சொல், முதலில் அகரத்தைப் பெற்று அதிரிசியம் என வந்தால்அதுதான் பரோச்சமாம். இதன் பொருள் காணப்படாதது என்பதுதானாம். எத்தனை சிரமம் கொடுக்கிறது. நமக்கு இந்தப் பரோச்சம்.

பரோச்சஞானம் எனின், காணப்படாதது பிரம்மம்', அது உண்டு, எனப் பிறர் சொல்லி நாம் அதை நம்பும் தன்மைக்குப் பெயர்தான் பரோச்சம், ஆனால் அந்தப் பிரம்மம் எனும் ஒன்று இன்னது எனத் தெரியாது, பிரம்மம் உண்டு என்ற நிலையில் நம்மைச் சதாவைத்துக்கொண்டே பிரம்மத்தை இன்னதென அறிந்தவர்கள் அதனை விவரித்து விளங்க வைக்காடமல் இருபத்திரண்டு நூற்றாண்டுகளாக நம்மை அடிமைகளாஅக்கி உருவங்களை வணங்கவைத்துக்கொண்டே உள்ளனர். இது அவர்களுக்கு முதலில்லாத வியாபாரம், இலவசமான மேலாண்மை யோடு சுகTவனம் செய்ய நல்லதொரு மார்க்கமாகவே அமைந்துள்ளது எனின் உள்ளதைச்சொன்னால் உடலெரிச்சல் என்னும் பழமொழிப்படி அவர்கள் உடல் மட்டுமன்றி உள்ளமும் பற்றி எரியத்தான் செய்யும்.

நான் சிந்திக்கிறேன். ‘தத்வம் அசி - அது நீயாயுள்ளனை என்ற உண்மையை மறைத்து, நீ மனிதன் அது தெய்வம் என்று அறி வாழப்பிறந்த மக்களின் வாழ்வை அறவே பாழாக்கி வைத்த அந்த மூன்று ஆச்சாரிமார்களிடம் அப்படி என்ன சக்தி இருந்தது என்று சிந்திக்கும் போது அதற்கு விடை சூழ்ச்சி என்றுதான் எதிர்ப்படுகிறது. ஆம்! சுயநலச் சூழ்ச்சி ! என்பதுதான் சரியான விடை.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு விதிமுறைகளையும் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் செய்து நூலுக்குத் தந்த திருவள்ளுவரை அறவே மறந்துவிட, அல்லது சரியாக புரிந்து கொள்ளாத தமிழ் மக்களின் உள்ளங்களை சுவர்க்க பாசம் எனும் ஆவலைத் திணித்து தவறான பாதையில் ஈர்த்துச் செல்ல திட்டமிட்ட சூழ்ச்சியால், அந்தக் கால ஆச்சாரிகள் கூட்டத்தினர் மயக்கினர் என்று நான் நிரூபண ரீதியில் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இதை நிரூபிக்கும் விதத்தில் பண்டைக்காலத்தில் கட்டிய கதை ஒன்றை இங்கு குறிப்பிடுகின்றேன். இது கந்தப் புராணம் பழைய பதிப்பிலிருந்து நான் படித்த கதை. இதை ஏற்கனவே நான் பல சந்தர்ப்பங்களில் பலரிடம் வாய்மொழியாகச் சொல்லியுள்ளேன். ஒரு சிறிய ஊர் அது. ஒரு நாள் ஒரு மாலைப் பொழுது ஒரு பெரிய வீட்டில் முதியவரொருவர் தன் அந்திம கால அவதியில் ஒரு கட்டிலிலில் பிரான அவஸ்தையோடு படுத்திருக்கிறார்.

மகன்களில் ஒருவன், அந்த தந்தையின் அருகில் அமர்ந்துதுக்கம் கலந்த குரலில் 'அப்பா'! என அழைக்கிறான். கிழவன் கண் திறந்து தன் மகன் முகத்தை உற்றுப் பார்க்கிறான், ஒரு கேள்விக் குறியாக.

மகன் கேட்டான் : “அப்பா, இந்நாள் வரையும், இன்றும் இந்த வீடு பஞ்சம் பட்டினியின்றி வசதியாக எங்களை வாழவைத்தது. இதிலுள்ள அனைத்துச் செல்வமும் உங்கள் ஒருவராலேயே தேடப்பட்டது என்று அம்மா பலதடவை சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒருநாளும் நாங்கள் உழைக்கச்சென்றவர்களல்ல. எந்தத் தொழிலும் கற்றுக்கொள்ளவும் இல்லை. எனவே உங்கள் காலத்திற்கு பிறகு நாங்கள் என்ன செய்வது? எப்படி வாழ்வது? என்பது பற்றி எங்களுக்கு நல்லறிவு கூறுங்கள்” என்றான்.

அப்பாக்கிழவன், சற்று சிந்தித்தவாறு இருந்து பிறகு மெல்லச் சொன்னான்: ‘ஆக்கரா பிரகரா சங்கரா' என்று மூன்று சொற்களின் படியேதான் நான் செல்வம் சேர்த்தேன். நீங்களும் இப்படியே செய்து செல்வந்தர்களாகி வாழுங்கள் என்று கூறிக் கடைசி மூச்சும் விட்டு விட்டார்.

அடுத்து சில நிமிடங்களில் இச்செல்வக் கிழவனை எமதர்மன் முன் கொண்டு சென்று துதுவர் நிறுத்தினார்கள். சித்திரகுப்தன் இவனுடைய பாவ புண்ணியங்களையெல்லாம் டோட்டல் போட்டுச் சரிபார்த்துச் சொல்லலானான் : 'பாவம் தவிரப் புண்ணியம் என்பது கடுகளவும் இன்றி வாழ்ந்த முதல் மனிதன் இவன் ஒருவன்தான். இதற்கு முன் உலகில் பிறந்து வாழ்ந்து இறந்தவர்களில் இவன் செய்த அளவு பாவம் வேறொருவனும் இன்றுகாறும் செய்யவில்லை என்று. இதைக் கேட்டு எமனே திடுக்கிட்டு விட்டான். 

எமனுடைய பிரமை நீங்குமுன், அங்கு சிவகணங்களில் இருவர் அவசரமாக வருவது தென்பட்டது. அவர்களை வரவேற்று உபசரித்து ஆசனந் தந்து அமரச் செய்து, 'வந்த செய்தி என்ன என்று கேட்கவே, அவர்களில் ஒருவர் இந்த மகாத்மாவைக் கையோடு அழைத்துவரும்படி ஆண்டவன் உத்தரவு செய்துள்ளார் என்றார். இதைக்கேட்ட எமன் சித்திரபுத்திரன் முகத்தைக் கொஞ்சம் கடுகடுப்பாகப் பார்க்கலானான். சித்திர புத்திரன் புத்தி சரியாக வேலை செய்யவில்லையா என்று. ஆனால் சித்திரபுத்திரன் சற்று மலர்ந்த முகத்துடன் அதுதான் சரி; மிகவும் நல்லதாயிற்று, உடனே அனுப்பி விடுமாறு எமனைக் கேட்டுக்கொண்டான். இந்தப் பாவி, அந்த இரண்டு சிவகணங்களுடன் மூன்றாம் கணமாகி சிவலோகம் சென்று சேர்ந்தான்.

அவர்களை அனுப்பிவைத்தபின் எமன் கேட்டான். ‘என்னய்யா, சித்திரபுத்திரா! எல்லாம் புதிர் மாதிரி இருக்கிறதே! நீ சொன்னது ஒன்று; நடந்தது வேறொன்று. இதில் எது சரி, எது தப்பு’, என்று.

சித்திரகுப்தன் விளக்கினான் : நான் சரியாகவே கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறேன் பிரபு! நடந்த விசயம் இதுதான் : இவன் கடைசி மூச்சை விடும் முன் மகன் விருப்பத்தை நிறைவேற்ற மூன்று சொற்களைச் சொன்னான் : அதாவது ‘ஆக்கரா பிரகரா, சங்கரா என்று. அச்சொற்களின் பின்னால் வந்த மூன்று ஒலிகளும் (அரா, அரா, அரா) சிவபெருமானின் பெயராக அமைந்து விட்ட காரணத்தினால் இவனுடைய அனைத்துப் பாவங்களும் பரிகாரம் செய்யப்பட்டு மகாத்மா கலத்தில் பெயர்த்து எழுதப்பட்டது. சிவசாயுச்சமும் அவனுக்குப் பிராப்தமாயிற்று”, என்று.

எமனுக்கு ஒரே ஆச்சரியம்! அந்தச் சொற்களின் பொருள் தான் என்ன? எனக்கு அதில் ஒன்றும் புரியவில்லையே அப்பா என்று எமன் சித்திர புத்திரன் முகத்தை பார்த்ததும் சித்திரபுத்திரன் அதை விவரித்தான்.

‘ஆக்கரா' என்றால் பிறரிடமுள்ள பொருளைப் பறித்து கொள் என்று பொருள். 'பிரகரா’ என்றால், பொருளுக்குச் சொந்தக்காரன் எதிர்த்தால் கன்னத்தில் அறை, உதை, இடி, மிதி இதுபோல எதை வேண்டுமாயினும் செய் என்பது பொருள். சங்கரா என்றால் இதற்கும் மசியவில்லையெனில் தீர்த்து கட்டு என்பது பொருள்' என்று விளக்கினான் சித்திர புத்திரன். இதைக் கேட்ட எமன் சபாஷ்! கைலாயம் அடைவது, சிவன் கிருபைக்கு பாத்திரனாவது இவ்வளவு சுலபத்தில் இருக்கிறதா? என்று உடல் பூரித்து மகிழ்ந்து கொண்டான். நம்முடைய சிரமத்தில் இந்தப் புதிய சட்டம் முக்கால் பங்கு குறைத்து விடுகிறதல்லவா! என்று.

விஷ்ணுவின் கதையும் இதுதானே. 'ராமா என்றால் அப்போதே பாவம் போக வேண்டியதுதான். ராமனுடைய காலில் பட்டதாகக் கல்லைப் பொன்னாக்கியதை தமிழ் நாட்டில் யார் அறியாதவர்.

எனவே பாவம் பெருகப் பெருக, வாழ்கின்றவர்கள் இனிச் சிரமப்பட வேண்டாமல்லவா. நல்லவர்களாக வாழ்பவர்கள்தான் அதிக சிரமத்திற்கு ஆளாக வேண்டி வருகிறது. பொருளின் பாதுகாப்பின்றி உடுத்திய ஆடையில் தூசு மாசு படிந்து விட்டது போன்று அவசியத்தின் நிமித்தம் சிறு சிறு தவறுகள் செய்திருந்தால் எம தண்டனைக்கும் உள்ளாக வேண்டுமல்லவா?

ஆம் பரோச்சம் மக்களிடையே ஒட்டிக் கொள்வதற்கு ஆதியில் சூழ்ச்சிக் கயவர் கையாண்ட தந்திரம் இதுதான். இன்னும் இது போன்றவைகள் சாபம், அனுக்கிரகம், மார்கண்டன், கண்ணப்பன், சிறுத்தொண்டன் பக்தர்கள் கதைகள் கொஞ்சமா? நம் அருமைத் தமிழ்நாட்டில். இந்த பக்தர்களின் குவியல் நூல்களுக்கிடையில் திருக்குறளையும், திருமந்திரத்தையும் கண்டுபிடிப்பதுதான் மலையைத் தோண்டி எலி பிடிப்பதைப் போன்றதாகிறது.

அருமை நண்பனே, சற்று சிந்தித்துப் பார், ஆன்மீகமெனின் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆத்மாவை அறிந்து மேன்மைப்படுத்துவது என்பது பொருள். வெளியில் உள்ளவை ஜடப்பொருள். உயிர்ப் பொருளுக்கும் காரணமாக உள்ளவை. தெய்வங்களாகாதவை. மனிதராகிய நாமே தெய்வமாவதற் குரியவர்கள். எனவே நாம் செய்ய வேண்டியது நம்மை நாமறிந்து உண்மை பேசுதல், அறவழி ஒழுகல் மட்டுமே. எனவே இனி நாம் பரோச்சமாயிராமல் அபரோச்சமாய் இருக்க முற்படுவோமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்/பரோச்சம்&oldid=1637793" இலிருந்து மீள்விக்கப்பட்டது