புறப்பொருள் வெண்பாமாலை/பொதுவியற் படலம்

பத்தாவது

பொதுவியற்படலம்

தொகு
சீர்சால் போந்தை வேம்பொ டாரே
உன்ன நிலையே யேழக நிலையே
கழனிலை யேனைக் கற்காண் டல்லே
கற்கோ ணிலையே கன்னீர்ப் படுத்தல்
கன்னடு தல்லே கன்முறை பழிச்சல்
இறகொண்டு புகுத லென்றபன் னிரண்டும்
பொதுவியற் பால வென்மனார் புலவர்.
  1. போந்தை
  2. வேம்பு
  3. ஆர்
  4. உன்ன நிலை
  5. ஏழக நிலை
  6. கழனிலை
  7. கற்காண்டல்
  8. கற்கோள் நிலை
  9. கல் நீர்ப்படுத்தல்
  10. கல் நடுதல்
  11. கல் பழிச்சல்
  12. இறகொண்டு புகுதல்

என்ற பன்னிரண்டும் பொதுவியல் பால என்மனார் புலவர்.

போந்தை

தொகு
கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பிற்
புலவேல் வானவன் பூப்புகழ்ந் தன்று. - கொளு
வானவனாகிய சேரன் குடிப்பூ போந்தை (பனை)யைப் புகழ்வது
குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த்
தொடையவிழ் தண்குவளை சூடான் – புடைதிகழும்
தோதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன்
போரெதிரிற் போந்தையாம் பூ.
சேரன் தன் கொல்லி மலையில் பூத்த காந்தள் பூவைச் சூடாமல் தன் குடிக்குரிய போந்தைப் பூவைச் சூடினான்

வேம்பு

தொகு
விரும்பா ரமரிடை வெல்போர் வழுதி
சுரும்பார் முடிமிசைப் பூப்புகழ்ந் தன்று. - கொளு
வழுதி போரின்போது சூடும் வேப்பம்பூவைப் புகழ்வது
தொடியணிதோ ளாடவர் தும்பை புனையக்
கொடியணிதேர் கூட்டணங்கும் போழ்தின் – முடியணியும்
காத்தல்சால் செங்கோற் கடுமா நெடுவழுதி
ஏத்தல்சால் வேம்பி னிணர்.
தேர் மறவர் தும்பை சூடிப் போரிடும்போது யானைமேல் வரும் நெடுவழுதி தன் குடிப்பூ வேம்பினைச் சூடிக்கொண்டு போரிட்டான்
விறற்படை மறவர் வெஞ்சமங் காணின்
மறப்போர்ச் செம்பியன் மலைபூ வுரைத்தன்று. - கொளு
போர்க்காலத்தில் வேந்தன் செம்பியன் சூடும் அவன் குடிப்பூ பற்றிச் சிறப்பித்துச் சொல்வது
கொல்களி றூர்வர் கொலைமலி வாண்மறவர்
வெல்கழல் வீக்குவர் வேலிளையர் – மல்கும்
கலங்க லொலிபுன்ற காவிரி நாடன்
அலங்க லமரழுவத் தார்.
களிற்றில் வரும் வாள்மறவர் வேல்இளையர் தாக்கும் போரில் காவிரிநாடன் ஆர் (ஆத்தி) மாலை அணிந்து போரிட்டான்

உன்னநிலை

தொகு
துன்னருஞ் சிறப்பிற் றொடுகழன் மன்னனை
உன்னஞ் சேர்த்தி யுறுபுகழ் மலிந்தன்று. - கொளு
போரிடச் செல்லும் மன்னனை உன்னமரத்தோடு பொருத்திக் காட்டிச் சிறப்பித்தல்
துன்னருந் தானைத் தொடுகழலான் றுப்பெதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண்முருங்க – மன்னரும்
ஈடெல்லாம் தாங்கி இகலவிந்தார் நீயுநின்
கோடெல்லாம் உன்னங் குழை.
வணங்கார் படையினைத் தாக்கி பகைமை அழியுமாறு போரிடும் மன்னன் கிளைகளெல்லாம் தழைத்து நன்னிமித்தம் காட்டும் உன்ன மரம் போலப் போரிட்டான்

ஏழகநிலை

தொகு
ஏழக மூரினு மின்ன னென்றவன்
தாழ்வி லூக்கமொடு தகைபுகழ்ந் தன்று. - கொளு
போரிடும் மறவன் ஏழகம் என்னும் செம்மறியாட்டுக் கடா மேல் வருவானைக் புகழ்ந்துரைத்தல்
எம்மனை யாமகிழ வேழக மேற்கொளினும்
தம்மதி றாழ்வீழ்த் திருக்குமே – தெம்முனையுள்
மானொடு தோன்றி மற்றுங்கா லேழகத்
தானொடு நேரா மரசு.
எம் இல்லத்தார் மகிழும்படி எம் மறவர் ஏழகத்தகர்மீது ஏறிச் சென்றாலும், போரில் குதிரையில் வந்து போரிடும் அரசன் எம் மறவனுக்கு ஈடாக மாட்டான்

இதுவுமது

ஏந்துபுக ழுலகி னிளமை நோக்கான்
வேந்து நிற்றலு மேழக நிலையே. - கொளு
இளமையை எண்ணாமல் போருக்கு எழும் வேந்தனைப் பற்றிச் சொன்னாலும் அது இந்தத் துறை ஆகும்
வேண்டார் பெரியர் விறல்வேலோன் றானிளையன்
பூண்டான் பொழில்காவ லென்றுரையாம் – ஈண்டு
மருளன்மின் கோள்கருது மால்வரை யாளிக்
குருளையுங் கொல்களிற்றின் கோடு.
பெரியோர் வேண்டாம் என்று கூறியும் வேல்வீரன் தன்னை இளையவன் என்று கருதாமல் அரியணை ஏறி நாட்டுக்காவல் பூண்டான். இதில் மருள்வதற்கு ஒன்றும் இல்லை. யாளி என்னும் விலங்கு குட்டியாய் இருந்தாலும் பெரிய யானையின் கொம்பைப் பிடுங்கித் தின்னும்.

கழனிலை

தொகு
அடுமுர ணகற்று மாளுகு ஞாட்பிற்
கடுமுரண் வயவன் கழல்புனைந் தன்று. - கொளு
பகையாளியை அகற்றும் போர் மூளும்போது வயவன் காலில் அணியும் வீரக் கழலைப் புகழ்வது
வானமரின் முன்விலக்கி வான்படர்வார் யார்கொலோ
கேளலார் நீக்கிய கிண்கிணிக்காற் – காளை
கலங்கழல் வாயிற் கடுத்தீற்றி யற்றால்
பொலங்கழல் கான்மேற் புனைவு.
இந்தக் காளை தன் காலில் அணிந்திருந்த கிண்கிணியை அகற்றிவிட்டு வீரக் கழலை அணிந்துகொண்டு போரில் முன்னேறுகிறான். போரில் விண்ணுலகு செல்லலப்போவது யார்யாரோ

கற்காண்டல்

தொகு
ஆனா வென்றி யமரில்வீழ்ந் தோற்குக்
கான நீளிடைக் கற்கண் டன்று.
போர்க்களத்தில் வீழ்ந்து மாண்டவனைக் கடவுளாக்குவதற்கு நல்ல கல்லைத் தேடுதல்
மிகையணங்கு மெய்நிறீஇ மீளி மறவர்
புகையணங்கப் பூமாரி சிந்திப் – பகையணங்கும்
வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த
காளைக்குக் கண்டமைத்தார் கல்.
பிறர் அஞ்சும் தோற்றத்தை உடம்பில் காட்டி மீளி போரிட்டான். பகைவர் அம்புகளால் பட்டான். மறக் குடியினர் அவனை வழிபட நடுகல் கண்டறிந்தனர்.

கற்கோணிலை

தொகு
மண்மருளத் துடி கறங்க
விண்மேயாற்குக் கற்கொண்டன்று.
துடி முழக்கத்துடன் நடுகல்லைக் கொண்டுவருதல்
பூவொடு நீர்தூவிப் பொங்க விரைபுகைத்து
நாவுடை நன்மணி நன்கியம்ப – மேவார்
அழன்மறங் காற்றி யவிந்தாற்கென் றேத்திக்
கழன்மறவர் கைக்கொண்டார் கல்.
மாண்ட கழல்மறவனைக் கடவுளாக்கும் நடிகல்லை, பூ
தூவி,  நீர் தெளித்து, மணப்புகை ஊட்டி, மணி அடித்துக்கொண்டு, கழல்மறவர் கொண்டுவந்தனர்.

கன்னீர்ப் படுத்தல்

தொகு

கன்னீர்ப் படுத்தல்

வண்டுசூழ் தாமம் புடையே யலம்வரக்
கண்டு கொண்ட கன்னீர்ப் படுத்தன்று.
பட்டவனுக்காகக் கொண்டுவந்த கல்லை, படை முழக்கத்துடன் நீராட்டல்
காடு கனலக் கனலோன் சினஞ்சொரியக்
கூடிய வெம்மை குளிர்கொள்ளப் – பாடி
நயத்தக மண்ணி நறுவிரைகொண் டாட்டிக்
கயத்தக துய்த்திட்டார் கல்.
கல்லின் வெம்மை குறையும்பொருட்டு மணப்புகை மலிய, கல்லை நீராட்டினர்

இதுவுமது

ஓங்கியகல் லுய்த்தொழுக்கல்
ஆங்கெண்ணினு மத்துறையாகும்.
கல்லை அணிவருத்துத் தூக்கி வருவதைக் கூறுதலும் இந்தத் துறை
கணனார்ந் துவப்பக் கடுங்கண் மறவர்
பிணனார்ந்து பேய்வழங்கு ஞாட்பின் – நிணனார்
விழுக்கினால் வேய்ந்த விறல்வேலோர் கல்லை
ஒழுக்கினா ரொன்றொருவர் முன்.
போரின்போது கொழுப்புக் கறை படிந்த வேலினை உடையவர் கல்லை நடுகல்லைச் சுமக்க முந்தினர்.

கன்னடுதல்

தொகு
அவன்பெயர்கன் மிசைப்பொறித்துக்
கவின்பெறக் கன்னாட்டின்று.
பட்டவன் பெயரைக் கல்லில் பொறித்து கல்லை நிலைநாட்டல்
மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி யணிந்து பெயர்பொறித்து – வேல்மருள்
ஆண்டக நின்ற வமர்வெய்யோற் காகென்று
காண்டக நாட்டினார் கல்.
பெயர் பொறித்த கல்லுக்கு மாலையிட்டு, மணியொலி முழங்க, கள்ளைப் படைத்து, மயில்பீலி சாத்தி, கல்லை நட்டனர்

கன்முறை பழிச்சல்

தொகு
நிழலவி ழெழின்மணிப்பூட்
கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று.
நட்ட கல்லில் தெய்வமாக விளங்கும் மறவனை வாழ்த்திப் பாராட்டுதல்
அடும்புகழ் பாடி யழுதழுது நோனா
திடும்பையுள் வைகி யிருந்த – கடும்பொடு
கைவண் குருசில் கற் கைதொழூஉச் செல்பாண
தெய்வமாய் நின்றான் றிசைக்கு.
கல் நின்றான் புகழைப் பாடினர்
அழுது நோகும் அவனது சுற்றத்தாரைத் தொழுதனர்
கல்லாகி நிற்கும் குரிசிலையும் தொழுதனர்
தெய்வம் ஆயினான் என்று பாணன் பாடினான்

இற்கொண்டு புகுதல்

தொகு
வேத்தமருள் விளிந்தோன் கல்லென
ஏத்தினர் துவன்றி யிற்கொண்டு புக்கன்று.
நடு கல்லை வழிபட்ட சுற்றத்தாரை இல்லத்துக்கு மரியாதையுடன் கூட்டி செல்லல்
வாட்புகா வூட்டி வடிமணி நின்றியம்பக்
கோட்புலி யன்ன குருசில்கல் – ஆட்கடிந்து
விற்கொண்ட வென்றி விறன்மறவ ரெல்லோரும்
இற்கொண்டு புக்கா ரியைந்து.
நிறுத்த கல்லுக்கு மணியடித்து உயிர்பலி கொடுத்தனர்.
பட்டவனின் சுற்றத்தாரை மறவர் அணிவகுப்புடன் இல்லத்துக்கு அழைத்துவந்தனர்.

(சிறப்பிற் பொதுவியற்பால் )

தொகு
முதுபாலையே சுரநடை யேனைத்
தபுதார நிலையே தாபத நிலையே
தலைப்பெய னிலையே பூசன் மயக்கே
மாலை நிலையே மூதா னந்தம்
ஆனந் தம்மே யானந்தப் பையுள்
கையறு நிலையுளப் படப்பதி னொன்றும்
மையறு சிறப்பிற் பொதுவியற் பால.
  1. முதுபாலை
  2. சுரநடை
  3. தபுதார நிலை
  4. தாபத நிலை
  5. தலைப்பெயனிலை
  6. பூசன் மயக்கு
  7. மாலை நிலை
  8. மூதானந்தம்
  9. ஆனந்தம்
  10. ஆனந்தப் பையுள்
  11. கையறு நிலை

உளப்படப் பதினொன்றும் மையறு சிறப்பின் பொதுவியற் பால.

முதுபாலை

தொகு
காம்புயர் கடத்திடைக் கணவனை யிழந்த
பூங்கொடி மடந்தை பலம்புரைத் தன்று.
உடன்போக்கின்போது காட்டில் கணவனை இழந்தவள் புலம்புதலைக் கூறுதல்
நீர்மலி கண்ணொடு நின்றே னிலையிரங்காய்
தார்மலி மார்பன் றகையகலம் – சூர்மகளே
வெள்ளில் விளைவுதிரும் வேயோங்கும் வெஞ்சுரத்துக்
கொள்ளனீ கோடல் கொடிது.
கண்ணீர் மல்க வருந்தி அழாதே
மூங்கில் காட்டுப் பகுதியில் வாழும் சூர்மகள் உன் மாலைமார்பனைக் கொண்டு சென்றாள்
அது கொடிது
என்று சொல்லி கணவனை இழந்த மனைவியைத் தேற்றினர்

சுரநடை

தொகு
மூதரி நிவந்த முதுகழை யாரிடைக்
காதலி யிழந்த கணவனிலை யுரைத்தன்று.
உடன்போக்கின்போது மூங்கில் காட்டுப் பாதையில் மனைவியை இழந்த கணவனின் நிலையினைக் கூறுதல்
உரவெரி வேய்ந்த வுருப்பவிர் கானுள்
வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய் – கரவினால்
பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை யென்மார்பிற்
கோதையைக் கொண்டொளித்த கூற்று.
கூற்றுவனே!
மூங்கில் தீப் பற்றி எரியும் காட்டில் என் மனைவியைக் கொண்டுசென்றாயே!

தபுதாரநிலை

தொகு
புனையிழை யிழந்தபிற் புலம்பொடு வைகி
மனையகத் துறையு மைந்தனிலை யுரைத்தன்று.
மனைவியை இழந்த ஒருவன் மனையில் வருந்தும் நிலையைக் கூறுதல்
பைந்தொடி மேலுலக மெய்தப் படருழந்த
மைந்தன் குருசின் மழைவள்ளல் – எந்தை
தவுதாரத் தாழ்ந்த தனிநிலமை கேளாக்
செவிடா யொழிகென் செவி.
மனைவி இழந்த செய்தி கேட்ட கணவன் என் காது செவிடாய் இருக்கக்கூடாதா என்கிறான்

தாபதநிலை

தொகு
குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மைகூ றின்று
கணவன் இறந்த பின் மனைவி கைம்மைக் கோலத்துடன் வாழ்வது பற்றிக் கூறுவது.
கலந்தவனைக் கூற்றங் கரப்பக் கழியா
தலந்தினையு மவ்வளைத் தோளி – உலந்தவன்
தாரொடு பொங்கி நிலனசைஇத் தான்மிசையும்
காரடகின் மேல்வைத்தாள் கை.
கணவனைக் கூற்றம் கொண்டது என்று வருந்தும் மனைவி கீரைகளைத் தின்று கொண்டு வாழ்கிறாள்.

தலைப்பெயனிலை

தொகு
இன்கதிர் முறுவற் பாலக னென்னும்
தன்கட னிறுத்ததாய் தபுநிலை யுரைத்தன்று.
மகன் இறந்துவிட்டான் என்று தாயும் தன்னை மாய்த்துக்கொள்ளுதல்
இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே
தடம்பெருங்கட் பாலக னென்னும் – கடன்கழித்து
முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா
வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்.
பாலகன் இறந்துவிட்டான் என்று தாய் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். இது உலக இயல்பு அன்று. கொடுமையான செயல்.

பூசன்மயக்கு

தொகு
பல்லிதழ் மழைக்கட் பாலகன் மாய்ந்தெனப்
புல்லிய பெருங்கிளைப் பூசல்கூ றின்று.
பாலகன் இறந்தான் என்று சுற்றத்தார் அழுதல்
அலர்முலை யஞ்சொ லவணொழிய வவ்விற்:
குலமுதலைக் கொண்டொளித்த லன்றி – நிலமுறப்
புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ
கொல்லிய வந்தொழியாக் கூற்று.
பாலகன் இறந்துவிட்டான் என்று தாயும் இறந்துவிட்டாளே என்று சுற்றத்தார் அழுதனர்.

இதுவுமது

வேந்தன் மாய்ந்தென வியலிடம் புலம்பினும்
ஆய்ந்த புலவ ரதுவென மொழிப.
வேந்தன் இறந்தான் என்று மக்கள் புலம்மபினும் இந்தத் துறை ஆகும்
எண்ணி னிகல்புரிந்தோ ரெய்தாத தில்போலும்
கண்ணினொளிர் வேலான் கரந்தபின் – அண்ணல்
புகழொடு பூசன் மயங்கிற்றாற் பொங்கும்
அகழ்கடல் வேலி யகத்து.
வேலால் பல போர்களை வென்ற வேந்தன் மாண்டுபோயினனே என்று மக்கள் புலம்பினர்.

மாலைநிலை

தொகு
கதிர்வேற் கணவனொடு கனையெரி மூழ்க
மதியேர் நுதலி மாலைநின் றன்று.
இறந்த கணவனை எரிக்கும் உடலோடு தன்னையும் எரித்துக்கொள்ள மனைவி மாலையை மாட்டிக்கொண்டு நிற்றல்
சோலை மயிலன்னா டன்கணவன் சொல்லியசொல்
மாலை நினையா மனங்கடைஇக் – காலைப்
புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள்
அகையழ லீமத் தகத்து.
‘உன்னைப் பிரியமாட்டேன்’ என்று கணவன் சொன்ன சொல்லை உண்மையாக்க, மனைவி அவன் பிணத்தைத் தழுவிக்கொண்டு அவன் எரியும் தீயிலும் கிடந்தாள்.

மூதானந்தம்

தொகு
கயலேர் கண்ணி கணவனொடு முடிய
வியனெறிச் செல்வோர் வியந்துரைத் தன்று.
கணவனுடன் மாண்டவளைக் கண்டவர்கள் வியந்து கூறுதல்
ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க்
கீருயி ரென்ப ரிடைதெரியார் – போரில்
விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே யுலந்த துயிர்.
ஓருயிர் ஈருடல் போல் வாழ்ந்தவர் இந்தக் கணவன் மனைவியர். இதனை உண்மையாக்கி இருவரும் மாண்டனரே!

இதுவுமது

கொடியான் கூர்ங்கணை குளிப்பத் தன்றொழில்
முடியா நவிதலு மூதானந்தம்.
பகைவன் அம்புகளால் போர்க்களத்தில் மாளலும் மூதானந்தம்
முந்தத்தான் மாவொடு புக்கு முனையமருட்
சிந்தத்தான் வந்தார் செருவிலக்கிக் – குந்தத்தாற்
செல்கணை மாற்றிக் குருசில் சிறைநின்றான்
கொல்கணைவாய் வீழ்தல் கொடிது.
படையை விலக்கிக்கொண்டு குதிரையில் சென்று எதிரியின் குந்தம் தாக்கி வீழ்ந்த நிலை கொடியதாக உள்ளது.

ஆனந்தம்

தொகு
ஆடமைத் தோளி விரிச்சியுஞ் சொகினமும்
வேறுபட வஞ்சி விதுப்புற் றன்று.
விரிச்சியில் கண்ட குறியும், விளைவும் வேறுபட்டதைக் கூறுதல்
வேந்தார்ப்ப வெஞ்சமத்து வேலழுவந் தாங்கினான்
சாந்தா ரகலத்துத் தாழ்வடுப்புண் – தாந்தணியா
மன்னா சொகின மயங்கின வாய்ப்புளும்
என்னாங்கொல் பேதை யினி.
வேந்தன் வியக்கும்படிப் போரில் வேல் தாங்கிப் போரிட்டான். நெஞ்சில் விழுப்புண் பட்டான். புறப்பட்டபோது தோன்றிய புள் சகுனக்குறி வேறாய் முடிவுற்றதே!

இதுவுமது

தவப்பெரிய வெஞ்சமங்குறுகும்
அவற்கிரங்கினு மத்துறையாகும்.
மிகப் பெரிய போர்க்களத்தில் இறங்கிப் போரிடுதலும் இந்தத் துறை
இன்னா சொகின மிசையா விரிச்சியும்
அன்னா வலம்வருமென் னாருயிரும் – என்னாங்கொல்
தொக்கார் மறமன்னர் தோலாத் துடிகறங்கப்
புக்கான் விடலையும் போர்க்கு.
விளைவும் விரிச்சியும் வேறாகும்படி மறமன்னன் தாக்குதலுக்கு எதிரே போரில் இறங்கித் துடிப்பறை முழங்க விடலை போரிட்டான்.

ஆனந்தப்பையுள்

தொகு
விழுமங் கூர வேய்த்தோ ளரிவை
கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று.
போர்க்களத்தில் கணவன் வீய மனைவி மனைவி நிலைகுலைந்து வருந்தியது
புகழொழிய வையகத்துப் பூங்கழற் காளை
திகழொழிய மாவிசும்பு சேர – இகழ்வார்முன்
கண்டே கழிகாத லில்லையாற் கைசோர்ந்தும்
உண்டே யளித்தெ னுயிர்.
புகழ் நிற்குமாறு போர்க்களத்தில் காளை மாண்டான்.
இன்னும் உள்ளேனே - என்று மனைவி வருந்தினாள்.

கையறுநிலை

தொகு
செய்கழன் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர்
கையற வுரைத்துக் கைசோர்ந் தன்று.
மன்னன் மாண்டான் என மக்கள் சோர்வுற்றது
தாயன்னான் றார்விலங்கி வீழத் தளர்வொடு
நீயென்னாய் நின்றாயென் னெஞ்சளியை – ஈயென்றார்க்
கில்லென்ற றேற்றா விகல்வெய்யோன் விண்படரப்
புல்லென்ற நாப்புலவர் போன்று.
தாய் போன்ற மன்னன் மாண்டான்.
மக்கள் நில்லை தளர்ந்தனர்
இல்லை என்னாமல் வழங்கி கொடையாளன் மாண்டபோது புலவர் வாடியது போல மக்களை வாடினர்

இதுவுமது

கழிந்தோன் றன்புகழ் காதலித் துரைப்பினும்
மொழிந்தனர் புலவ ரத்துறை யென்ப.
இறந்தவன் புகழைக் கூறினும் இந்தத் துறை
நின்று நிலமிசையோ ரேத்த நெடுவிசும்பில்
சென்று கழிந்தான் செருவெய்யோன் – என்றும்
அழலுங் கதிர்வே லவன்புகழ் பாடி
உழலு முலகத் துயிர்.
பலரும் வாழ்த்தும்படி வாழ்ந்த போர்வீரன் மாண்டான். வாழ்வோர் அவன் இறந்த பின்னரும் வாழ்த்துகின்றனர்.

காஞ்சிப் பொதுவியல் பால்

தொகு
மூதுரை பொருந்திய முதுமொழிக காஞ்சி
பெருங்காஞ் சிய்யே பொருண்மொழிக் காஞ்சி
புலவ ரேத்தும் புத்தே ணாட்டொடு
முதுகாஞ் சிய்யொடு காடுவாழ்த் துளப்பட
மையறு சீர்த்தி வருமிரு மூன்றும்
பொய்தீர் காஞ்சிப் பொதுவியற் பால.
  1. மூதுரை பொருந்திய முதுமொழிக காஞ்சி
  2. பெருங்காஞ்சி
  3. பொருண்மொழிக் காஞ்சி
  4. புலவ ரேத்தும் புத்தேள் நாடு
  5. முதுகாஞ்சி
  6. காடுவாழ்த்து

உளப்பட மையறு சீர்த்தி வரும் இருமூன்றும் பொய்தீர் காஞ்சிப் பொதுவியல் பால.

முதுமொழிக் காஞ்சி

தொகு
அலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருண்முடி புணரக் கூறின்று.
புகழ் மிக்க புலவர் உலகியலை உணரும்படிக் கூறுவது
ஆற்றி னுணரி னருளறமர் மாற்றார்க்குப்
போற்றார் வழங்கிற் பொருள் பொருளாம்- மாற்றிப்
புகலா தொழுகும் புரிவளையார் மென்றோள்
அகலா தளித்தொழுக லன்பு.
அருள் அறம் அமர் மூன்றும் பொருள்
இவற்றைப் போற்றிக்கொண்டு மனைவி தோளை அகலாமல் ஒழுகுதல் அன்பு

பெருங்காஞ்சி

தொகு
மலையோங்கிய மாநிலத்து
நிலையாமை நெறியுரைத்தன்று.
உலகில் உள்ள பொருகள் அனைத்தும் நிலையாமைப் பண்பு கொண்டது என்பதை கூறல்
ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து
மாயா நிதிய மனைச்செறீஇ – ஈயா
திறுகப் பொதியன்மி னின்றொடு நாளைக்
குறுக வருமரோ கூற்று.
எண்ணிப் பார்க்காமல் நிதியம் மாயாதவை என்று எண்ணி பொதித்து வைக்காதீர். இன்றோ நாளையோ கூற்று வரும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்

பொருண்மொழிக் காஞ்சி

தொகு
எரிந்தி லங்கு சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருண்மொழிந் தன்று.
தவம் புரிந்து சடைமுடியுடன் திகழும் முனிவர் தவத்தில் கண்ட பொருள் முடிவை எடுத்துரைத்தல்
ஆய பெருமை யவிர்சடையோ ராய்ந்துணர்ந்த
பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித் – தீய
இருளொடு வைகா திடம்படு ஞாலத்
தருளொடு வைகி யகல்.
பெருமைஐ மிக்க அவிர்சடை முனிவர் ஆராய்ந்து கண்டறிந்து சொன்ன நெறியைப் பின்பற்றிச் செல்லுங்கள்.
அறியாமை என்னும் இருளோடு வாழாதீர்
அருளோடு வாழுங்கள்

புலவரேத்தும் புத்தேணாடு

தொகு
நுழைபுலம் படர்ந்த நோயறு காட்சி
விழைபுலங் கடந்தோர் வீடுரைத் தன்று.
ஆசையை கடந்தவர் நுண்ணறிவால் கண்ட விடுபேறு பற்றிக் கூறுவது
பொய்யில் புலவர் புரிந்துறையு மேலுலகம்
ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் – வெய்ய
பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்
றிகலின் றிளிவரவு மின்று.
மேலுலகம் பற்றிப் பொய்யில் புலவர்கள் கூறியுள்ளனர்
ஐயம் கொள்ளாமல் அறிந்துகொண்டு அதனைச் சொல்லுங்கள்
அங்குப் பகல்-இரவு இல்லை
ஆசை இல்லை
உணவு உண்ணவேண்டியது இல்லை
போட்டியோ ஏளனமோ இல்லை

முதுகாஞ்சி

தொகு
தலைவரும் பொருளைத் தக்காங் குணர்த்தி
நிலைநிலை யாமை நெறிப்பட வுரைத்தன்று.
எதிர் விளைவுகளைத் தக்கவாறு எடுத்துரைத்து நிலையாமையை வலியுறுத்தல்
இளமை நிலைதளர மூப்போ டிறைஞ்சி
உளமை யுணரா தொடுங்கி – வளமை
வியப்போவ லில்லா வியலிடத்து வெஃகா
துயப்போக லெண்ணி னுறும்.
இளமை நிலை தளரும்
பூப்பு வரும்
உள்ளம் நினைவுகள் ஒடுங்கி மறதி வரும்
வளமை இல்லாமல் போகும்
ஆசை எண்ணம் குறையும்

காடு வாழ்த்து

தொகு
பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல்
கல்லென வொலிக்குங் காடுவாழ்த் தின்று.
இறந்தவர் மீது இரக்கம் கொண்டு பாடும் நெய்ம் பாட்டு கேட்கும் சுடுகாட்டை வாழ்த்துவது
முன்புறந் தான்காணு மிவ்வுலகை யிவ்வுலகில்
தன்புறங் கண்டறிவார் தாமில்லை – அன்பின்
அழுதார்க ணீர்விடுத்த வாறாடிக் கூகை
கழுதார்ந் திரவழங்குங் காடு.
சுடுகாடு செல்லாதவர் யாரும் இல்லை
அழுவர்
கண்ணீர் ஆற்றில் குளிப்பர்
கூகை, பேய் ஆகியவை இரவெல்லாம் அங்கு நடமாடிக்கொண்டிருக்கும்

முல்லைப் பொதுவியற்பால

தொகு
சீர்சான் முல்லையொடு ஆர்முல்லை யென்றா
தேர்முல் லையொடு நாண்முல்லை யென்றா
இல்லான் முல்லையொடு பகட்டுமுல்லை என்றா
பான்முல்லையொடு கற்புமுல்லை யென்றாங்
கிருநான் முல்லையும் பொதுவியற் பால.
  1. சீர்சான் முல்லை
  2. ஆர்முல்லை
  3. தேர்முல்லை
  4. நாண்முல்லை
  5. இல்லான் முல்லை
  6. பகட்டுமுல்லை
  7. பால்முல்லை
  8. கற்புமுல்லை

என்றாங்கு இருநான் முல்லையும் பொதுவியற் பால.

முல்லை

தொகு
தடவரை மார்பன் றன்னமர் காதல்
மடவரற் புணர்ந்த மகிழ்ச்சிநிலை யுரைத்தன்று.
மலைமார்பன் தான் விரும்பிய பெண்ணைப் புணரும் மகிழ்ச்சியைக் கூறுதல்
ஊதை யுளர வொசிந்து மணங்கமழும்
கோதைபோன் முல்லைக் கொடிமருங்குற் – பேதை
குவைஇ யிணைந்த குவிமுலை பாதம்
கவைஇக் கவலை யிலம்.
வாடைக் காற்றில் ஆடி
மணம் கமழும் முல்லைக்கொடி போன்ற இடையினைக் கொண்ட
இணைமுலைகளையும்
அவள் ஊடும்போது அவள் அடிகளையும் தழுவிக்கொண்டு
கவலை இல்லாமல் இருக்கிறேன்

கார்முல்லை

தொகு
அருந்திறற் கட்டூ ரவர்வா ராமுன்
கருங்கடன் முகந்து கார்வந் தன்று.
போர்ப்பாசறை கட்டூருக்கு வராமுன் கார்காலம் வந்தது பற்றிக் கூறுவது
புனையும் பொலம்படைப் பொங்குளைமான் றிண்டேர்
துனையுந் துணைபடைத் துன்னார் – முனையுள்
அடன்முகந்த தானை யவர்வாரா முன்னம்
கடன்முகந்து வந்தன்று கார்.
அரசன் தேர் படையுடன் போர்ப்பாசறைக்கே வருவரற்கு முன் கார்காலம் வந்துவிட்டது

தேர்முல்லை

தொகு
உருத்தெழு மன்ன ரொன்னார் தந்நிலை
திருத்திய காதலர் தேர்வர வுரைத்தன்று.
பகைவரை வென்ற காதலரின் தேர் வருவது பற்றிக் கூறுதல்
தீர்ந்து வணங்கித் திறையளப்பத் தெம்முனையுள்
ஊர்ந்துநங் கேள்வ ருழைவந்தார் – சார்ந்து
பரிகோட்ட மின்றிப் பதவார்ந் துகளும்
திரிகோட்ட மாவிரியத் தேர்.
பகைவர் வணங்கித் திறை தந்தனர்
எனவே என் கேள்வர் தேர் வந்தது
புல் மேயும் குதிரை பூட்டிய தேர் வந்தது

நாண்முல்லை

தொகு
செறுநர் நாணச் சேயிழை யரிவை
வறுமனை வைகித் தற்காத் தன்று.
கணவர் போருக்குச் சென்ற பின்னர் மனைவி தன் மனையில் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்ந்தாள்
கொய்தார மார்பிற் கொழுநன் றணந்தபின்
பெய்வளை யாட்குப் பிறிதில்லை – வெய்ய
வளிமறையு மின்றி வழக்கொழியா வாயில்
நளிமனைக்கு நற்றுணை நாண்.
கொழுநன் பிரிந்து சென்றான்
மனைவிக்கு வேறு துணை இல்லை
வாயிலுக்கு வந்து நாணத்துடன் நின்றாள்

இல்லாண் முல்லை

தொகு
கழுமிய காதற் கணவனைப் பழிச்சி
இழுமென் சீர்த்தி யின்மலி புரைத்தன்று.
போருக்குச் சென்ற கணவனை வாழ்த்திக்கொண்டு மனைவி இல்லத்தில் காத்திருத்தல்
கல்லெனீர் வேலிக் கணவன் கழல்வாழ்த்தி
ஒல்லும் வகையால் விருந்தோம்பிச் – செல்லுந்தம்
இற்செல்வ மன்றி யிரந்தவர்க் கீகல்லாப்
புற்செல்வம் பூவா புகழ்.
அமைதி நிறைந்த இல்லத்தில் கணவனை வாழ்த்திக்கொண்டு
பொருந்தும் வகையான் விருந்தினரை ஓம்பிக்கொண்டு
இரந்தவர்களுக்கு இருக்கும் செல்வம் அன்றி ஈட்டிவரும் செல்வம் ஈவதற்கு இல்லலாமல்
புல்லிய செல்வத்தைப் புகழ்ப்பூவாக மாற்றிக்கொண்டிருந்தாள்

பகட்டு முல்லை

தொகு
வயன்மிகு சிறப்பின் வருத்தமு நோன்மையும்
வியன்மனைக் கிழவனைப் பகட்டோடு பொரீஇயன்று.
மனைவி தன் கணவனை உழும் பகட்டோடு ஒப்பிட்டுப் புகழ்தல்
உய்த்தல் பொறுத்த லொழிவின் றொழிவயலுள்
எய்த்த லறியா திடையின்றி – வைத்த
படுநுகம் பூண்ட பகட்டொடு மானும்
நெடுமொழி யெங்கணவ னேர்.
வயலில் நுகத்தில் பூட்டிய எருது போல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்

பான்முல்லை

தொகு
அரிபா யுண்க ணாயிழைப் புணர்ந்தோன்
பரிவக லுள்ளமொடு பால்வாழ்த் தின்று.
மனைவியிடம் இன்பம் காண்பவன் அவளைத் தனக்கு அளித்த பாலை (விதியை) வாழ்த்துதல்
திங்கள் விளங்குந் திகழ்ந்திலங்கு பேரொளி
அங்கண் விசும்பி னகத்துறைக – செங்கட்
குயிலனைய தேமொழிக் கூரெயிற்றுச் செவ்வாய்ப்
பயில்வளையை நல்கிய பால்.
செங்கண்
குயிலணைய தேமொழி
கூரெயிற்றுச் செவ்வாய்
கொண்டவளை எனக்கு அளித்த பால்
விசும்பில் விளங்கும் முழுநிலா போன்று இனிது

கற்பு முல்லை

தொகு
பொன்றிகழ் சுணங்கிற் பூங்க ணரிவை
நன்றறி கொழுநனை நலமிகுத் தன்று.
மனைவி கணவனை நன்கு பேணுதல்
நெய்கொ ணிணந்தூ நிறைய வமைத்திட்ட
குய்கொ ளடிசில் பிறர் நுகர்க – வைகலும்
அங்குழைக் கீரை யடகு மிசையுனும்
எங்கணவ னல்க லினிது.
நெய் வழியும் புலவு
தாளித்த உணவுவகை
கீரை
ஆகியவற்றைச் சமைத்து தன் கணவனைப் பேணினாள்

இதுவுமது

மேவருங் கணவன் றணப்பத் தன்வயின்
காவல கூறினு மத்துறை யாகும்.
கணவன் பிரிந்திருக்கும்போது மனைவி தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருத்தலைக் கூறினும் இந்தத் துறை ஆகும்.
மௌவல் விரியுமணங்கமழ் மான்மாலைத்
தையல் முதுகுரம்பைத் தான்றமியள் – செவ்வன்
இறைகாக்கு மிவ்வுலகி னிற்பிறந்த நல்லாள்
நிறைகாப்ப வைகு நிறை.
மௌவல் மலர் விரியும் மயக்கும் மாலைப் பொழுதில்
தனிமையில் பழங்கூரைக் குடிசையில் இருக்கும் மனைவி
அரசன் பாதுகாப்போடு
தன் நிறையுடைமையைக் காத்துக்கொண்டிருக்கிறாள்

இதுவுமது

திருவளர நன்னக ரடைந்த கொழுநன்
பெருவள மேத்தினு மத்துறை யாகும்.
பெருஞ்செல்வத்துடன் கணவன் இல்லம் திரும்பியதைக் கூறுதலும் இந்தத் துறை.
ஊழிதோ றூழி தொழப்பட் டுலைவின்றி
ஆழிசூழ் வையத் தகமலிய – வாழி
கருவரை மார்பினெங் காதல னல்க
வருவிருந் தோம்பும் வளம்.
ஊழூழி காலமாக
உலகம் போற்றும்படியாக
என் காதலன் எனக்கு நல்கிய செல்வ வளத்தைக் கொண்டு
மனைவி வரும் விருந்தினர்களைப் பேணுகிறாள்.

பத்தாவது பொதுவியற்படலம் முற்றிற்று.