புல்லின் இதழ்கள்/அதிசயப் பெண்


11. அதிசயப் பெண்

தை வேண்டுமானாலும் ஒரு பெண் விட்டுக் கொடுக்க - துறக்க தயாராக இருப்பாள். ஆனால் தன் கணவனுடைய ஸ்தானத்தை மட்டும் அவள் யாருக்காகவும் இழக்கவோ, விட்டுக் கொடுக்கவோ இணங்க மாட்டாள். தன் புருஷன் தன்னைத் தவிர வேறொரு பெண்ணிடம் அன்பு கொண்டிருக்கிறான் என்பதையோ அல்லது தன் நாயகன் மேல் அந்நியப் பெண் ஒருத்தி ஆசை காட்டுகிறாள் என்பதையோ சகித்துக் கொள்வதோடு, ஆதரவு காட்டவும் வேண்டுமானால் - அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மனோ பலம் இருக்க வேண்டும்? லட்சுமிக்கு அந்த மனோபலத்தை இறைவன் அளித்திருந்தான் போலும்!

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தாலும், புது மணமான இளம் பெண்தான் அவளும். கணவனைப் பற்றிய ஆயிரமாயிரம் கனவுகளும், இன்ப நினைவுகளும் லட்சுமியின் உள்ளத்திலும் கிளைத்துக் கொண்டுதான் இருந்தன. ஆயினும் இவற்றையெல்லாம் மீறி, தன் கணவருக்கும், சுந்தரிக்குமிடையே உள்ள காதலை எண்ணிப் பார்த்தாள். கோபத்துக்குப் பதில் கருணைதான் பிறந்தது. ஆத்திரத்துக்குப் பதில் ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வை எண்ணி அன்புதான் அவள் உள்ளத்தில் இடம் பெற்றது. சுந்தரிக்குப் பணமும், காசும் இருக்கலாம்; ஆனால் அவளை விடத் தானே ஒரு வகையில் சீமாட்டியாக லட்சுமிக்குப் பட்டது. அந்த வகையில், சுந்தரிக்குத் தன்னாலான உதவியைச் செய்வது கடமை என்றே அவளுக்குத் தோன்றியது.

சுந்தரியின் பாட்டி இறந்து போன செய்தியைக் கணவர் மூலம் அறிந்ததும், லட்சுமி, ஒரு முறை திருவிடை மருதூருக்குச் சென்று துக்கம் விசாரித்து வந்தாள். பிறகு அடிக்கடி சுந்தரியைப் போய்ப் பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தால்தான், மனத்துக்குச் சமாதானம் ஏற்படும் போலிருந்தது லட்சுமிக்கு. வெள்ளை உள்ளத்தோடு மனம் விட்டுப் பழகும் சுந்தரியின் குழந்தையுள்ளமும், செல்வத்தில் புரண்டும்; துளியும் கர்வமில்லாத அவள் பண்பும் லட்சுமியைப் பெரிதும் ஈர்த்து விட்டன.

தன் கணவருடைய விருப்பம் இல்லாமலோ அல்லது அவராகவே விரும்பியோ, எப்படியோ சுந்தரி அவர் வாழ்வில் பங்கு பெற்று விட்டாள். அதற்காக லட்சுமி சுந்தரியை வெறுக்கவில்லை; தன் வாழ்வில் குறுக்கே வந்து விட்டவளாக எண்ணவில்லை. “இனி நீயும் நானும் அவருடைய இரு கண்கள்” என்றாள். அதை நிரூபிக்கச் சுந்தரியின் பாட்டி இறந்தது லட்சுமிக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பமாக அமைந்தது.

கணவரோடு மீண்டும் ஒரு நாள் சென்ற லட்சுமி, “நீ தனியாக இவ்வளவு பெரிய வீட்டில் இருந்து என்ன பண்ணப் போகிறாய்? என்னுடன் கொஞ்ச நாள் வந்து இரு. மனத்துக்கும் ஆறுதலாக இருக்கும்” என்று கூறிப் பிடிவாதமாக அவளைச் சுவாமி மலைக்கு அழைத்து வந்து விட்டாள்.

அப்போது காயத்திரி ஐந்து வயதுப் பெண். சுசீலாவுக்கு ஒரு வயது. சுந்தரிக்குச் சுவாமிமலை வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. நாள் முழுவதும் வீடு நிறையச் சிஷ்யர்களையும், ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் ஞானத்துக்கும் அநுபவத்திற்கும் தகுந்தாற் போல் முன்னும் பின்னுமாகப் பாடங்கள் நடந்து வருவதையும் கண்டு. ரசித்தாள்.

ஆனால், அவர்களில் ஒரு பெண் கூட இல்லை. ஆம், இந்த விஷயத்தில்தான் பாகவதர் தீவிரவாதியாயிற்றே. தனக்காக அவர் எவ்வளவு தூரம் கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கிறார் என்பதையும், விட்டுக் கொடுத்து விட்டு, அகப்பட்டுக் கொண்டு விழிப்பதையும் ஒரு கணம் மனத்துக்குள் எண்ணிப் பார்த்து நகைத்துக் கொண்டாள் சுந்தரி.

அவள் சுவாமிமலைக்கு வந்து ஏழெட்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன. அப்போது சுந்தரி ஐந்து மாதங்களாகியிருந்தாள். அவளை நல்ல நாள் பார்த்து ஊருக்கு அனுப்பி வைத்தாள் லட்சுமி. கூடவே அவளுக்குத் துணையாக, வீட்டோடு இருந்து கவனித்துக் கொள்ளக் கூடிய நல்ல சமையற்காரி அம்மாளையும் அனுப்பி வைத்தாள.

சுந்தரி சுவாமி மலையில் இருந்த போது, புதிதாகச் சில உருப்படிகளைப் பாடம் பண்ணியிருந்தாள். இன்னும் சில புதிய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிக் கொண்டு போக வேண்டும் என்பது அவள் விருப்பம். ‘இன்னும் இரண்டு மாசம் கழித்துப் போகிறேனே அக்கா?’ என்று கேட்கலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் அதற்குப் போதிய துணிவு இல்லாததால் விட்டு விட்டாள். ஆனால், அவளுடைய தயக்கத்தைக் கண்டு லட்சுமியே, “ஒன்றுக்கும் கவலைப்படாமல் போய் இரு. நானும் அவருமாக அங்கு வந்து, உன்னுடன் மாறி மாறி இருக்கத்தான் போகிறோம். தம்பூரா நாதத்தைக் காற்றா கொண்டு போய்விடும்? தைரியமாகப் போய் வா. பிரசவத்துக்கு, நான்தான் கூட இருக்கப் போகிறேன். கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறினாள்.

சுந்தரியும் சிரித்துக் கொண்டே, பூட்டியிருந்த இரட்டை மாட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். சமையற்காரியும் ஏறிக் கொண்டவுடன், பிடில் பஞ்சு அண்ணா வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டார். ஸ்டேஷன் வரைக்கும் அவர்களோடு துணைக்குச் சென்று டிக்கெட் வாங்கிக் கொடுத்து விட்டுத் திரும்பினார். பாகவதரிடம் வந்து “சுப்பராமா, நீ பூர்வ ஜன்மத்தில், நல்ல சங்கீதத்துக்காக மட்டும் பூவை எடுத்துப் போடவில்லை; லட்சுமியையும், சுந்தரியையும் போல இரண்டு பெரிய நிதிகளுக்காகவும், வாய் நிறைய அர்ச்சனை பண்ணியிருக்கிறாய்; அதெல்லாம் இந்த ஜன்மத்தில் பலிதமாகிறது” என்று மனதாரக் கூறினார். சுப்பராம பாகவதருக்கும இதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருந்தது.

பாகவதரும், பஞ்சு அண்ணாவும் நல்ல சிநேகிதர்கள். பழக்கம் காரணமாக அவர்கள் இருவரும் மிகவும் சகஜமாகவும், வேடிக்கையாகவும் பேசுவார்கள். சங்கீத வித்துவான்களிடையே, அதிலும் குறிப்பாகப் பக்க வாத்தியக்காரர்களுள் பஞ்சு அண்ணாவுக்கு மிகவும் நல்ல பெயர். மேலும் அவர் நல்ல ஞானஸ்தர். பாட்டுக்கு அநுசரணையாகப் பிடில் வாசிப்பதில்; மிகவும் பெயர் பெற்றவர். யாருடைய கச்சேரியில் பஞ்சு அண்ணா பிடில் வாசித்தாலும், கச்சேரி ‘களை’ கட்டி விடும்.

அரங்கேற்றத்துக்குப் பிறகு நடந்த விஷயங்கள், இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் பஞ்சு அண்ணாவுக்குத் தெரிய வந்தன. திருவிடைமருதூருக்கு ஏதோ வேலையாகச் சென்றார். எதேச்சையாக, ‘சுந்தரியை பார்த்து நாளாயிற்றே’ என்று வீட்டுக்குள் நுழைந்தவர், கற்சிலை போல் பிரமித்து நின்று விட்டார். கல்லில் வடித்த சிலை போல் இளமையழகு கொழித்துக் கொண்டிருந்த சுந்தரி உருக்குலைந்து மனநோயால் பீடிக்கப்பட்டு வைத்தியத்துக்கும்; வைத்தியர்களுக்கும் அப்பாற்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடந்தாள்.

அழகின் அதிதேவதையே மண்டபத்தின் மத்தியில் கொலு வீற்றிருப்பதே போல் அன்று அவள் கச்சேரி செய்த அழகைக் கண்டவர்; இன்று புழுதியில் உருட்டி விடப்பட்ட வீணையைப் போல அவள் இருப்பதைக் கண்டு பதறிப் போனார்.

சுந்தரி, பஞ்சு அண்ணாவிடம், நடந்த விவரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிக் கண்ணீர் விட்டாள். கச்சேரி முடிந்து வீட்டுக்கு வந்ததும், குரு அது வரையில் இல்லாத புது மாதிரியாகத் தன்னிடம் கேட்ட கேள்வியையும், அதைக் கேட்டுத் தான் அடைந்த அதிர்ச்சியையும், அதற்குத் தான் விதித்த நிபந்தனையையும் கூறினாள். அதைக் கேட்டு அவர் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, தன் வீட்டுப் பக்கம் திரும்பிக் கூடப் பாராமல், இந்த இரண்டு, மூன்று மாதமாக இருப்பதையும் பாட்டி இறந்ததையும், தானும் இறக்கிற வரை அவர் அப்படி வராமலே இருந்தாலும் ‘நான் அவருக்காகவே வாழ்ந்து, அவர் நினைவுடனேயே இறப்பேன்’ என்றும் கூறிக் கொண்டு வரும் போதே தாங்க முடியாத துக்கத்தினால் சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

பஞ்சு அண்ணாவினால் அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்க நிலை கொள்ளவில்லை. “சுப்பராமனுக்கு இப்படி ஒரு சபலம் ஏற்பட்டிருக்க வேண்டாம். அதன் பிறகு அர்த்தமில்லாமல் வீம்புக்கு இப்படி ஒரு பெண் பாவத்தையும் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம். நான் நாளையே அவனைப் பார்த்து, உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். நீ கொஞ்சங் கூடக் கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறிப் புறப்பட்டு விட்டார்.

அதன் பிறகு அவர் சுப்பராமனிடம் வந்து மிகவும் கோபித்துக் கொண்டதுடன், சுந்தரியின் கவலைக்கிடமான உடல் நிலையையும் விளக்கி, உடனே சென்று பார்த்து வரும்படி தூண்டினார்.

அன்று பஞ்சு அண்ணா நல்ல உள்ளத்தோடு, தம்மைத் தூண்டி விடாமல் இருந்தால், அநியாயமாக ஒரு ஞான தீபம் கவனிப்பாரற்றுக் காற்றில் அணைந்து போயிருக்கும்; சுந்தரிக்கும் ஒரு வாழ்வு கிடைத்து, தனக்கும் அவளிடம் இப்படி ஓர் அழகான பெண் குழந்தை பிறந்திருக்க மாட்டாள். அதைத்தான் சுப்பராமன் இப்போது எண்ணிப் பார்த்துக் கொண்டார்.

‘நாணாவைப் போன்றவர்கள் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் அவதூறு பேசி விட்டுப் போகட்டும். அதைப் பற்றி ஒன்றும் கவலையில்லை. கலை எப்படி மனித ஆட்சிக்கு கட்டுப்படாததோ; அதைப் போலவேதான் அந்தக் கலையை ஆட்சி செய்யும் கலைஞனும், சாதாரண மனிதர்களின் மனப்பான்மைக்கும், கட்டுப்பாட்டுக்கும் கட்டுப்படாமல், தனக்கென்று ஒரு வழியில் தன்னிச்சைப் படியே செல்லக்கூடியவன். அவனை யாராலும் புரிந்து கொள்ள முடியாது; பணிய வைக்கவும் முடியாது. இதுதான் கலைஞனின் வாழ்க்கை’ என்று தம் மனத்துக்குள்ளே சமாதானம் செய்து கொண்ட வண்ணம் ‘ஹரி’ என்று உரக்க அழைத்தார். இப்போது அவரது மனம் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்தது. விரல்கள் தந்தியை மீட்டின. எதிரொலி கேட்டுத் திரும்பினார். ஹரி தம்பூராவுடன் தன் இடத்தில் அடக்கமாக வந்து உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் ஓடிக் கொண்டிருந்த கவலைக் கோடுகளை பாகவதர் கடைக்கண்ணால் லேசாகப் பார்த்துத் தெரிந்து கொண்டார்.

தந்தையும் மகனும் தழுவிக் கொண்டு நிற்பதைப் போல், இரண்டு தம்பூராக்களும் சுருதி சுத்தமாக நன்கு இணைந்து, வீடு முழுவதும் நாத ஒலி பரப்பின. அதன் பிறகு பொங்கி எழுந்த இசை வெள்ளத்தில்- மனத்தில் இருந்த கவலைக் குப்பைகள் கண்ணுக்குத் தெரியாமல் மூழ்கி மறைந்தன. அப்போது யாரோ ‘படபட’வென்று கதவைத் தட்டுகிற சப்தம் கேட்கவே, ஹரி தம்பூராவை நிறுத்தினான். பாகவதர் தம்மை மறந்து பாடிக் கொண்டே இருந்தார்.