புல்லின் இதழ்கள்/கதவு திறந்தது


 
12. கதவு திறந்தது

த்தனை நேரம் கதவு தட்டிய சப்தம் பாகவதர் காதில் விழவில்லை. ஆனால், ஹரியினுடைய மெல்லிய தம்பூரா ஓசை நின்றதுமே, பாகவதருக்குச் சுய உணர்வு வந்து விட்டது. பார்த்தார். எதிரே இருந்த ஹரியைக் காணவில்லை. தம்புரா பட்டுப் பாயில் கிடத்தியிருந்தது. கதவு திறந்து கிடந்தது.

பாடம் நடக்கும் போது ஹரி எழுந்து போனதில்லை. ஹரி மட்டுமல்ல; எந்தச் சிஷ்யனுமே எழுந்து போகக் கூடாது. பாகவதர் ஊரில் இருந்தால், நாள் தவறாமல் பாடம் நடக்கும். பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, கதவைச் சாத்தி விடுவார். கச்சேரி பேச வந்தவர்கள் ஆனாலும் சரி, பாடம் நடக்கிற போது வந்தால், முடிகிற வரையில் காத்திருந்துதான் ஏற்பாடு செய்து கொண்டு போவார்கள். அவர்களுக்கே இந்தக் கட்டுப்பாடு என்றால்-; வீட்டிலுள்ளவர்கள் அநாவசியமாகக் கதவைத் தட்டி விடுவார்களா? பாகவதர், சிஷ்யர்கள் விஷயத்திவ் இவ்வளவு பொறுப்பும், அக்கறையும் எடுத்துக் கொண்டு மனச்சாட்சியோடு நடந்து கொள்வதற்குக் காரணம், சிறு வயதில் இந்தச் சங்கீதத்துக்காக அவர் பட்ட கஷ்டங்களே.

சங்கீதம் வராது என்று தோன்றினால்; அவனிடம் தம் கருத்தை உடனே கூறி அனுப்பி விடுவாரே அன்றி, அவன் ஆயுள் பாழாகிற பாவத்தை அவர் ஒரு நாளும் செய்ததில்லை.

தம் வீடு தேடி வரும் சிஷ்யர்களுக்கு, நேரமும் காலமும் இன்றி; குளிக்கும் போதும் சாப்பிடும் போதும், படுக்கும் போதுங்கூட அருகிலேயே வைத்துக் கொண்டு புதிய பாடங்களைச் சொல்லிக் கொடுத்து, பழைய பாடங்களைப் பற்றிய சந்தேகங்களை விளக்குவார். தமக்குப் பிற்காலத்தில், தம் பரம்பரையான சங்கீதத்தையும், பெயரையும் வழி வழியாகக் கொண்டு செல்ல; அவருக்கு அருமையான நிதியைப் போல் ஹரி கிடைத்து விட்டான். இதை அவர் தம் குருவின் கடாட்சமாக, பூர்வ ஜன்ம புண்ணியமாகக் கருதினார். ஹரியும், அதற்குத் தகுந்த பாத்திரம் என்பதைச் சகல விதத்திலும் நிரூபித்தான். தம்மிடம் பாடம் சொல்லிக் கொள்ள வந்திருக்கும் சிஷ்யர்களை, வீட்டிலுள்ள யாரும் எந்த வேலைக்கும் ஏவக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். ஆனால், ஹரியே அந்தக் குடும்பத்தின் அத்தனை வேலைகளையும், பொறுப்புக்களையும் சிறுகச் சிறுகத் தானே மேற்கொண்டான். அதைக் கண்டு லட்சுமியம்மாள் பூரித்துப் போனாள். இதயத்துக்குள்ளேயே அவனுக்கு ஆயிரமாயிரம் நல்லாசிகளை வழங்கினாள்.

இப்படி ஆதியிலிருந்தே வைரம் பாய்ந்திருந்த எண்ணத்தைத்தான் நாணா மாமா வந்து, இரண்டு நாளில் ஒரு கலக்குக் கலக்கிப் பார்த்தார். கையை எடுத்தவுடன் நீர் மீண்டும் ஒன்று கூடி விடுவதே போல், அண்ணா போனவுடனேயே அந்தச் சலனமும் அவள் மனத்தினின்றும் மறைந்து விட்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் அறைக்குள் நுழைந்த ஹரி குருவின் காதருகில் வந்து, “வெளியூரிலிருந்து ஓர் அம்மாளும், பெண்ணும் காரில் வந்திருக்கிறார்கள்; உங்களைப் பார்க்க வேண்டுமாம்” என்று பணிவோடு கூறினான்.

பாகவதர் ஒரு கணம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு எழுந்திருந்தார்.

—‘யார் வந்தால் என்ன? இதற்காகவா நீ பாதியில் எழுந்து போனாய்? என்னைப் பார்க்க வருகிறவர்கள், என்னைப் பார்க்காமலா போய் விடப் போகிறார்கள்?’. என்ற பொருள் அப்போது அவருடைய பார்வையில் தொனித்தது.

ஹரி மிகவும் பயந்து விட்டான். பதிலே பேசாமல், அவரைத் தொடர்ந்தான். ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த தாயும், மகளும் பாகவதரைக் கண்டதும் மிகுந்த பணிவுடன் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். அவரும் அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்ற வண்ணம், அருகிலுள்ள ஆசனத்தில் அமர்ந்தார். வாசலில் அவர்கள் வந்திருந்த நீல நிறக் கார் நின்றிருந்தது.

பாகவதரைப் பற்றி அந்த அம்மாள் தான் அறிந்திருந்த பெருமைகளைச் சிறிது நேரம் பேசி விட்டு, பிறகு தன்னைப் பற்றியும், தாங்கள் வந்த காரியத்தைப் பற்றியும் சுருக்கமாகக் கூறினாள்.

தஞ்சையைச் சேர்ந்த அந்த அம்மாளின் பெயர் கங்கா பாய். மராட்டியரான அந்த அம்மாளுடைய கணவர் பெரிய சர்க்கார் உத்தியோகம் பார்த்துச் சமீபத்தில் காலமானவர். பெரிய செல்வரான அவர்களுடைய ஒரே பெண்தான் அருகில் இருக்கும் காந்தாமணி.

கங்காபாய்க்கு, மகளைப் போலவே சங்கீதத்தில் அபார மோகம். ஆனால், அவளுக்கு கிட்டாத சாரீர பாக்கியத்தைப் பெண் அடைந்திருந்தாள். சிறந்த வித்துவானிடம் முறையோடு சங்கீதம் கற்றுக் கொண்டு பிரமாதமாகப் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனேயே அவர்கள் வந்திருந்தனர்.

அத்துடன், கங்காபாய் ‘தனக்கு நாட்டியத்திலும் அளவு கடந்த ஆசையும், சிறிது பயிற்சியும் உண்டு’ என்று கூறி, இப்போது ஆடுவதை நிறுத்திப் பல வருஷங்கள் ஆகி விட்டன என்பதையும் கூறினாள்.

‘நல்ல வேளை நாட்டியம் பிழைத்தது’ என்று அந்த அம்மாளின் ஆகிருதியைப் பார்த்து, அருகிலிருந்த சுசீலா மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள்.

ஆனால், காந்தாமணியின் தாய்க்கு நாட்டியம் தெரியும் என்பதை அந்த அம்மாளைப் பார்த்ததுமே புரிந்து கொள்ளலாம்.

பாகவதர் வந்ததும் எழுந்து நின்று வணக்கம் செய்த தோரணையும், பிறகு ஒவ்வொரு வார்த்தைக்கும் அபிநயம் பிடிப்பது போல் கையை ஆட்டியும், முகத்தில் உணர்ச்சிகளைக் கொட்டியும்; தெளிவாகப் பேசிய அழகையும் பாகவதர் மட்டுமின்றி உள்ளேயிருந்த காயத்திரியும், லட்சுமியம்மாளுங்கூட ரசிக்கத் தவறவில்லை. ஆனால், இத்தனைக்கும் காந்தாமணி மட்டும் அடக்கமே உருவாகத் தன் தாய் கூறுகிற அத்தனையையும் கேட்டபடி உட்கார்ந்திருந்தாள். பிறகு, கங்காபாய் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினாள்.

“நான் உங்களிடம் இது வரை வந்த காரியத்தைப் பற்றிப் பேசாமல், சுய புராணம் பேசி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி விட்டேன்; மன்னிக்க வேண்டும்” என்று கூறிய போதே, பாகவதர் இடைமறித்து, “நேரம் என்னவோ பொன்னானதுதான்; ஆனாலும் பரவாயில்லை. நீங்கள் தாரளமாகப் பேசலாம்” என்றார்.

“நான் வருகிற போது உள்ளே பாட்டுச் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனந்தமாக இருந்தது. ஆனால் அவசர காரியமாகப் பன்னிரண்டு மணிக்கு நான் கும்பகோணத்தில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால்தான், உங்களைப் பாதியில் கூப்பிட்டுத் தொந்தரவு செய்து விட்டேன். இதோ அருகில் இருப்பவள் என் மகள். பெயர் காந்தாமணி. இவளுக்குச் சங்கீதத்தில் அளவுக்கு மீறிய ஆசை. அதிலும் உங்கள் பாட்டு என்றால் ஒரே பைத்தியம்.”

“ஆமாம், இந்தப் பெண்ணை நான் எங்கோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே!” என்று பாகவதர் கூறும் போதே, “எங்கோ என்ன? உங்கள் கச்சேரி தஞ்சாவூர் வட்டாரத்தில் எங்கே நடந்தாலும் கேட்கத் தவற மாட்டாள். ஒரு சபா பாக்கி இராது. அழைப்பில்லாத கல்யாண கச்சேரியாக இருந்தால் கூட வெட்கப்படாமல் போய் விடுவாள். கண்ணை மூடிக் கொண்டாலன்றி, இவளை நீங்கள் கச்சேரியில் எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும்” என்று கங்காபாய் கூறிக் கொண்டிருக்கும் போதே, எல்லாருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

லட்சுமியம்மாள் அடுக்களை உள்ளேயிருந்து ‘ஹரி’ என்று கூப்பிட்டாள். குருவுக்குப் பின்னால் நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த ஹரி, உள்ளே சென்று மூன்று தம்ளர் காபியுடன் வந்தான்.

முறையே அதைக் கங்காபாயிடமும், காந்தாமணியிடமும் வைத்து விட்டு, மற்றொன்றை சுசீலாவின் எதிரில் வைத்தான்.

“நாங்கள் இப்போது வரும் போதுதானே சாப்பிட்டு விட்டு வந்தோம்? அதற்குள் காபியா?” என்று கங்கா பாய் கூறிய போதே, “அம்மா, எதிர்த்துப் பேசாமல் எடுத்துக் குடியம்மா” என்று ஏதோ கோயில் பிரசாதத்தை மறுப்பது போல் தாயை கண்டித்த காந்தாமணி, சட்டென்று எழுந்து பாகவதரை நோக்கி, “ஆமாம் உங்களுக்கு…?” என்று பணிவோடு கேட்டாள். அப்போது அவளது பார்வை ஹரியின் பக்கம் சென்று மீண்டதைச் சுசீலாதான் கவனித்தாள்.

‘“நான் ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் காபி குடிப்பதில்லை. நினைத்த போதெல்லாம் நிறையக் குடித்துக் கொண்டிருந்தவன்தான். இப்போது அதற்கு மேல் சாப்பிட்டால், உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை” என்று பாகவதர் காந்தாமணிக்குச் சமாதானம் சொன்ன போது, சுசீலா ஹரியைக் கூப்பிட்டாள்.

“ஹரி, இந்தக் காபியை நீயே குடி; இல்லையென்றால், உள்ளே கொண்டு போய்க் கொடு. என்னைக் கேட்காமல், உன்னை யார் கொண்டு வரச் சொன்னது?” என்று சுசீலா அந்த வீட்டில் தனக்குள்ள உரிமையை நிலை நாட்டுவதே போல் கடிந்து கொண்டாள்.

உடனே பாகவதர் சிரித்துக் கொண்டே, “சும்மா சாப்பிடு சுசீலா; கூடத் துணையில்லா விட்டால், புதிதாக வந்திருப்பவர்களுக்குச் சங்கோசமாக இருக்காதா என்றுதான் ஹரி உனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறான். இது தெரியாமல் அவனைக் கோபிக்கிறாயே!” என்று மகளை அடக்கினார்.

அதற்குள் காந்தாமணி, “ஆமாம், எங்களுக்கும் துணை வேண்டாமா?” என்று சிபாரிசு செய்தாள். சுசீலாவுக்கு அந்த வார்த்தை நாராசமாக இருந்தது. அத்துடன், கடைந்தெடுத்த தங்க விக்கிரகம் போன்ற அவள் அழகையும், வைரமும், தங்கமுமாக அவள் வாரிச் சொரிந்து கொண்டு தன் இயற்கையழகைப் பன்மடங்காகப் பிரகாசிக்கச் செய்வதையும் பார்க்க சுசீலாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

‘இவர்கள் எதற்காக இங்கே அப்பாவைத் தேடி வந்திருக்கிறார்கள்? கச்சேரி சொல்லவா? அப்படியானால் வந்த காரியத்தை, சட்டுப்புட்டென்று முடித்துக் கொண்டு போக வேண்டியதுதானே? கச்சேரி சொல்லவானால் அம்மாவே வந்தால் போதாதா? இந்த அழகியையும் இழுத்துக் கொண்டு வர வேண்டுமா?’ என்றெல்லாம் சுசீலாவின் மனம் குமுறியது.

சுசீலாவின் உள்ளக் குமுறலை தணிக்கவோ, தூண்டவோ கங்காபாய் சட்டென்று விஷயத்துக்கு வந்தாள். “இவளுக்கு உங்களுடைய சங்கீதத்தில் அளவுக்கு மீறிய பைத்தியம் என்று முன்னமேயே சொன்னேன். இப்போது இவளை உங்களிடம் ஒப்படைத்து விட்டுப் போகலாம் என்றுதான் வந்திருக்கிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவான பதிலைத் தாருங்கள்” என்று கூறி நிறுத்தினாள்.

ஆனால், பாகவதர் உடனே, “நான் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன். ஆனால் இனி மேல், சிட்சைக்கு மாத்திரம் யாரையும் எற்றுக் கொள்ளுவதாக உத்தேசம் இல்லை” என்று கூறி விட்டார். இதைக் கேட்டதும் அந்த அம்மாளுக்குக் கையிலெடுத்த காபி நடுங்க ஆரம்பித்து விட்டது. அவள் முகம் சுண்டிப் போய் வேதனையே உருவாகக் காட்சியளித்தது.

“என்ன, நீங்கள் இப்படிச் சொன்னால் எப்படி? நாங்கள் எவ்வளவு ஆசையோடு உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்! பெரியவரான நீங்கள் எப்படியாவது அவளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து, முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். ஆரம்பப் பாடங்களைச் சொல்லக் கொடுக்கிற கஷ்டங்களை உங்களுக்கு நான் வைக்கவில்லை. வர்ணம் வரை நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். மேற்கொண்டு முறையோடு உங்களிடம் நல்ல சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்திருக்கிறோம். நீங்கள் இருக்கிற இடத்துக்கே இவளை அனுப்பி வைக்கிறேன். வாரத்துக்கு இரண்டு நாள் சொல்லிக் கொடுத்தால் போதும்; இவள் பிடித்துக் கொள்வாள். எப்படியாவது மனசு பண்ணியாக வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள்.

பாகவதரும், அதற்கு மிகவும் இதமாகவே பதில் கூறினார்: “நீங்கள் சொல்லுவதெல்லாம் சரிதான். எனக்கும் உங்கள் ஆசையைத் தீர்க்க வேண்டாம் என்கிற எண்ணமில்லை. ஆனாலும் வயதாகி விட்டது. உடம்பில் திராணியில்லை என்னும் போது: என்னால் ஆகாததை உண்மையைச் சொல்லித் தானே ஆக வேண்டும்? இதோ நிற்கிறானே; இவன்தான் இப்போது என்னிடம் கடைசியாக வந்துள்ள சிஷ்யன். அப்படியும் இப்படியுமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ எனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லி வைத்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் மேருகேற்றி, உருப்படியாக இவனை வெளியேற்றி விட்டாலே, எனக்கு முழுப் பாரமும் தலையிலிருந்து இறங்கியது போல. அதற்குள் இன்னொரு மூட்டையையும் தூக்கி வைத்துக் கொள்ளச் சொல்கிறீர்களே, நியாயமா? நீங்களே சொல்லுங்கள்” என்று கங்காபாயைப் பார்த்துக் கேட்டார்.

ஆனால், கங்காபாய் வாயே திறக்கவில்லை. காந்தாமணியின் முகத்தில் ஏமாற்றம் ஏக போகமாக ஆட்சி செய்தது. அவள் குனிந்த தலை நிமிரவேயில்லை.

“என்ன, ஒன்றும் பேச மாட்டேன் என்கிறீர்களே! என்னடா இப்படி முகத்தில் அடித்தது போல் மறுத்து விட்டேனே என்று கோபமாக இருக்கிறதா?” பாகவதர் கேட்டார்.

உடனே அந்த அம்மாள், முகத்தில் பலவந்தமாகப் புன்னகையை வரவழைத்துக் கொண்டவாறு, “கோபமா? அதுவும் உங்களிடமா? ஆனால், நாங்கள் வரும் போது வழியெல்லாம் எவ்வளவோ எண்ணிக் கொண்டே வந்தோம். நீங்கள் எங்கள் திட்டங்களையெல்லாம் ஒரேயடியாகத் தகர்த்து விட்டீர்கள். இது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சிதான். ஆனாலும், உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தடை இல்லையென்றால் சொல்கிறேன். உங்களுடைய இந்தச் சிஷ்யரைக் கொண்டே சொல்லிக் கொடுக்கச் செய்து: நீங்கள் மேற்பார்வை பார்த்தால் கூடப் போதும். பிறகு உங்கள் இஷ்டம்” என்று கூறினாள்.

“ஹரிக்கு இன்னும் சொல்லிக் கொடுக்கிற அளவுக்குப் போதாது. கொஞ்ச நாள் போகட்டும், பார்க்கலாமே” என்று கூறி அனுப்பி விட்டார்.

காந்தாமணியும், அவள் தாயும் அழ மாட்டாக் குறையாகப் புறப்பட்டுச் சென்றார்கள். சுசீலாவுக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது. ‘அவளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க ஹரியையாவது ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கங்காபாய் கேட்டதற்கு அப்பா ‘சரி’ என்று சொல்லி விடுவாரோ என்று அவள் கவலைப்பட்டாள். ஏனோ தெரியவில்லை, சுசீலாவுக்குக் காந்தாமணியைக் கண்டதுமே பொறாமை. இப்போது காந்தாமணி ஏமாற்றமடைந்து சென்றதில், அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

லட்சுமியம்மாளுக்கும், காயத்திரிக்கும் இந்த விஷயத்தில் பாகவதரிடம் சிறிது வருத்தந்தான். ‘இவ்வளவு ஆசையோடு வீடு தேடி வித்தையை யாசிக்கிறவர்களுக்கு, நிர்த்தாட்சிண்யமாக இல்லை என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? பணம், காசை லட்சியமில்லாமல் கொட்டிக் கொடுக்கிறவர்களுக்கு இல்லாமல் பின் யாருக்குத்தான் இந்த வித்தை? சாப்பாட்டுக்கு இல்லாதவனா, கச்சேரிக்குக் கூப்பிட்டுக் காசும், பணமும் அள்ளிக் கொடுக்க போகிறான்? என்ன இருந்தாலும், இவ்வளவு நல்ல மனிதர்களை உதறித் தள்ளியிருக்க வேண்டாம்’ என்றே லட்சுமியம்மாளுக்குத் தோன்றியது. ஆனால் அதைக் கணவரிடம் கூறத் தைரியமுமில்லை; விருப்பமுமில்லை.

பாகவதருக்கு மட்டும் திருப்தி. ஹரியை பெரிய கண்டத்திலிருந்து மீட்டு விட்டோம் என்பதுதான் அது.

அவனைப் பிறகு தனியாகக் கூப்பிட்டுக் கேட்டார்: “உன்னை அவர்கள் பாட்டுச் சொல்லிக் கொடுக்கக் கூப்பிட்டார்கள். ஏராளமாகப் பணமும் காசும் கிடைக்கும். ஆனால் உன்னை நான் அனுப்ப இஷ்டப்படவில்லை. உன்னைக் கேட்காமலே, ஏதோ காரணம் கூறி மறுத்து விட்டேன். அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் நல்லது என்று உனக்குத் தோன்றுகிறதா? நீ என்ன நினைக்கிறாய்?”

“நான், எனக்கென்று எதையும் நினைத்துப் பார்ப்பதில்லை. என்னையே நான் உங்களிடம் முழுக்க முழுக்க ஒப்படைத்து விட்ட பின்; எனக்கென்று நினைக்கவோ, மறுக்கவோ சொந்தமாக என்ன இருக்கிறது? நீங்கள் என்ன எண்ணுகிறீர்களோ, எதை விரும்புகிறீர்களோ, அதையே என் ஆயுள் உள்ள வரை செயலாக்கிக் கொண்டிருப்பேன். உங்கள் இதயத்தில் இடம் பெற்ற அன்றே, உங்கள் குடும்பத்தில் ஒருவனாகி விட்டேன். நீங்கள் என்னைப் பிரித்து, அபிப்பிராயம் கேட்பதை எண்ணி, என் மனம் வேதனையடைகிறது” என்றான் ஹரி.

“ஹரி, உன்னை நான் பிரித்துப் பேசவில்லை. உன்னை இனி என்னிடமிருந்து பிரிக்க யாராலும் முடியாது. ஆயினும், என் மனதில் தோன்றிய சந்தேகத்தைக் கேட் டேன்; அவ்வளவுதான். பெண்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்க இஷ்டப்படாதவன் நான். அவர்களுக்குச் செலவிடும் நேரம் வீண் விரயம் என்பது என் கருத்து. திருமணமாகிற வரை தங்கள் பெண்ணுக்குச் சங்கீதமும் கொஞ்சம் தெரிந்திருக்கட்டுமே என்று வருகிறவர்களுக்கு ஆசானாக விளங்க நான் தயாராயில்லை. சங்கீதத்தை அவ்வளவு மலிவாக்கி, விலை பேசவும் நான் விடுவதில்லை. எனக்கென்று ஒரு கொள்கை வைத்துக் கொள்ள எனக்கு உரிமை உண்டு; இல்லையா? அந்த உரிமையை நான் உன் தலையிலும் சுமத்தி, என் கொள்கைகளை உன் கையில் ஒப்படைத்து விட்டேன். அதைக் காப்பாற்ற வேண்டியது உன் இஷ்டம்” என்று கூறி முடித்தார்.

குருநாதர் கூறியதைப் பதிலே பேசாமல் ஹரி கேட்டான். பாகவதரே மீண்டும், “உன்னோடு இன்று மத்தியானத்துக்கு மேல் திருவிடைமருதூருக்குப் போகலாமென்று இருக்கிறேன். சுந்தரி உன்னைப் பார்க்க வேண்டும் என்றாள். நீ அங்கே வந்து ரொம்ப நாளாகிறதே! இன்று சாப்பாட்டுக்கு மேல் இரண்டு பேருமாகப் போய் வருவோம்” என்று சொன்னார். பாகவதர் வெளியே போனதும், சுசீலா ஹரியை வம்புக்கு இழுத்தாள். “அம்மா, இனி மேல், ஹரிக்குத் திருவிடைமருதூர் வேலைதான் சரியாக இருக்கும். அங்கேயும் புருஷத் துணை வேண்டாமா? ஏன், ஒரு வழியாக அவனை அங்கேயே வேலைக்கு அமர்த்தி விட்டால் என்ன?” என்று கேலியும் கிண்டலுமாகப் பேசிய போதே, லட்சுமியம்மாள் பெண்ணைக் கண்டித்தாள்.

“வர வர உனக்கு நாக்குத் துளிர்த்து விட்டது. கொஞ்சங் கூட மட்டு மரியாதை இல்லாமல் பேசுகிறாய். அப்பா காதிலே விழுந்தால், உன் தோலை உரித்து விடுவார். பேசாமல் உள்ளே வந்து, காரியத்தைப் பார்; இல்லா விட்டால், கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடியைப் பார்க்கப் போய்ச் சேர்” என்றாள்.

சுசீலாவுக்கும் இப்போதுதான் அது எத்தனை பெரிய விஷயம் என்று புலனாகி, உடம்பில் உறைத்தது. ஆயினும், அவள் அதை ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. “இப்போது நான் என்ன அம்மா சொல்லி விட்டேன்; பெரிதாகப் பயமுறுத்துகிறாய்?” என்று பதிலுக்கு இரைந்தாள்.

“அம்மா ஒன்றும் பயமுறுத்தவில்லை. இந்த வீட்டிலே நீதான் எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறாய். திருவிடைமருதூர்ச் சித்தியைப் பற்றியும்; வசந்தியைப் பற்றியும் பேச்சே எடுக்கக் கூடாது என்று அப்பா உனக்கு எத்தனை தடவை சொல்லியிருப்பார்? இதற்காக எவ்வளவு திட்டும், வசவும் வாங்கியிருப்பாய்?” என்று காயத்திரி கூறி முடிப்பதற்குள், சுசீலா அக்காவிடம் சீறிப் பாய்ந்தாள்.

“ஆமாம், பெரிய சித்தி! உனக்கு இதையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொண்டிருப்பதுதானே வேலை? ஹரியைப் பற்றி நான் ஏதாவது பேச வாயைத் திறந்தால், ஈசல் மாதிரி எல்லாரும் வந்து விடுகிறீர்கள் சண்டைக்கு. யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? போய்க் குஷியாக வசந்தியை பார்த்துக் கொண்டே இருக்கட்டும்” என்று கூறிய சுசீலா, அங்கே ஒரு நிமிஷங்கூட நிற்காமல் மாடியை நோக்கிச் சென்று விட்டாள். அப்போது, “என்ன இங்கே இரைச்சல்?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த பாகவதர், ஹரியைக் கூப்பிட்டு, “இன்று திருவிடைமருதூர் புரோகிராம் கான்சல்” என்று கூறிக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.