புல்லின் இதழ்கள்/இரண்டு சிஷ்யைகள்


15. இரண்டு சிஷ்யைகள்

பிள்ளையவர்கள் கூறிய விளக்கம் பாகவதரின் சிந்தனையைக் கிளறியது. ‘வித்தையை யாசித்து வருகிறவர்களுக்கு இல்லை என்னாமல் இயன்ற வரை வாரி வழங்குவதை விட்டு; அதற்கென்று சில சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டு எத்தனை பெரிய பாவம் செய்து விட்டேன்! கடமையைச் செய்வதை விட்டுப் பலனைப் பற்றிச் சிந்திக்க நான் யார்? அதைப் பற்றிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது?’

‘பிள்ளையவர்கள் கூறியது போல், சுந்தரியின் விஷயத்தில் என் கொள்கைகளும், எண்ணங்களும் ஈடேறாததோடு என் வாழ்க்கையையே அல்லவா மாற்றிக் கொண்டேன்? வாழ்க்கையில் எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்திருக்கிறேன்; பழகியிருக்கிறேன்; மனத்தில் சபலத்துக்கு இடம் கொடுத்ததில்லை. சுந்தரியிடம் மட்டும் என் மனத்தில் ஏன் திடீரென்று விபரீதமான எண்ணம் தோன்றி, “உன்னையே எனக்குக் காணிக்கையாகக் கொடு” என்று துணிந்து கூறுவதற்குரிய தைரியம் எப்படிப் பிறந்தது?’

‘சுந்தரியைச் சிறந்த பாடகியாக நான் உருவாக்கினாலோ அல்லது அவளே உருவாகியிருந்தாலோ அது என் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு; என் உழைப்புக்கு ஏற்ற பலன். அவ்வளவு தானேயன்றி, அவளையே அடைய வேண்டுமென்று நினைத்தது சரிதானா? அவள் மனத்தாலும் நினைத்தறியாத ஒரு விஷயத்தை-அவளைக் கேட்டு தெரிந்து கொள்ளாமலே, அவள் உள்ளத்தில் திணிக்கலாமா?

சிந்திக்க வேண்டிய காலத்தில் சிந்திக்காமல், அகாலத்தில் பாகவதர் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒன்று மட்டும் அவர் மனத்துக்குச் சத்திய வாக்காகப் புலனாயிற்று.

— ‘சுந்தரி எனக்காகவே பிறந்தவள். பூர்வ ஜன்மத்து விட்ட குறை தொட்ட குறை இருந்திருக்கிறது. இல்லா விட்டால், பிறப்பு வளர்ப்பை மீறி, இந்தப் பிணைப்பு ஏற்பட்டிருக்க முடியாது’ — என்ற உண்மைதான் அது.

பாகவதர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த காலத்திலேயே, வேதாந்தப் போக்கு அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் ஓடிக் கொண்டே யிருந்தது. லட்சுமியை மணந்து கொண்ட பிறகும், சுந்தரி வந்த பிறகும், குடும்ப வாழ்க்கையில் பாகவதர் இன்பத்தை நுகர்ந்ததெல்லாம் மிகக் குறுகிய காலந்தான். மூன்று பெண்களும் பிறந்து வளர ஆரம்பித்த போதே அவர் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். இல்லறத்தைத் துறப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். அதற்கு நாதோபாசனையே சிறந்த மார்க்கம் என்று கருதி, அதிலேயே முனைந்தார். சங்கீதத்துக்கே வாழ்நாளை அர்ப்பித்தார். சிறந்த மாணாக்கர்களை உருவாக்கினார்.

பிள்ளையவர்களின் வாயால் இத்தனை புகழ்ச்சிக்குப் பாத்திரமானவர்களே கிடையாது. பெரிய பெரிய வித்துவான்கள் அவருடைய ஒரு ‘சபாஷை’ ஆயிரம் பொன்னாடைகளுக்கு மேலாகக் கருதுவர். அவர் தலையசைத்தால், அவர்கள் உள்ளத்தில் குஷி பிறக்கும். அவர் வாயார வாழ்த்தி, விபூதி கொடுப்பதை முருகனே விருத்த வடிவில் வந்து கொடுப்பதாக எண்ணி, அள்ளிப் பூசிக் கொள்வர். அவர் தொட்ட காரியம் துலங்கும்; பட்ட பொருள் மணக்கும்.

‘இனி மேல் ஹரிக்கு ஒரு குறைவுமே இல்லை. அவன் பிழைத்துக் கொள்வான்’ என்று பாகவதர் நம்பினார். அத்துடன் தம் மனத்தில் இருந்த வித்தியா கர்வத்தையும், மாயையையும் அவர் அன்று வந்து அழித்து விட்டுச் சென்றதாகவே பாகவதருக்குத் தோன்றியது இல்லா விட்டால், எத்தனையோ பேர் வாதாடியும்; எடுத்துரைத்தும் மாறாத அவர் மனம் மாறுமா? அன்று முதலே, வசந்திக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க ஹரியையே குருவாக நியமித்து, இரண்டாம் நாள் பாடத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

வசந்திக்குப் பாடம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. பாகவதரோடு கச்சேரிக்குப் போகாத நாட்களில், ஹரி தவறாமல் திருவிடை மருதூருக்குச் சென்று வந்தான்.

இதனால், சுசீலாவின் மனத்தில் எல்லையில்லாத கோபம் மூண்டது. தனக்குச் சொல்லிக் கொடுக்க அப்பாவுக்கு விருப்பமில்லை. இப்போது வசந்திக்கு ஹரியையே இங்கிருந்து அனுப்புகிற அளவுக்கு ஆகி விட்டது. ‘அவள் எந்த விதத்தில் உயர்ந்தவளாகி விட்டாள்?’ இந்தக் கேள்வி சுசீலாவின் மூச்சாக எப்போதும் வந்து கொண்டேயிருந்தது.

ஹரி திருவிடைமருதூருக்குப் புறப்படும் போதும், அங்கிருந்து வரும் போதும், ‘இன்று என்ன பாடம் நடந்தது? எப்படிப் பாடினாள்?’ என்று சுசீலா விசாரிக்கத் தவறுவதில்லை. ஹரியும் கடமைப்பட்டவன் போல் அதைச் சொல்லத் தவறுவதில்லை. நாளடைவில் இது சுசீலாவின் உள்ளத்தில் பெரிய பொறாமைப் புயலை உண்டாக்கியது.

தந்தையிடம் வந்து, “நானும் பாட்டுச் சொல்லிக் கொள்ளப் போகிறேன். எனக்கும் நீங்கள் சொல்லித் தாருங்கள்” என்று வம்பு செய்ய ஆரம்பித்தாள். பாகவதருக்கு, இப்போது அவள் ஆசைப் படுவது தவறாகத் தோன்றவில்லை. ஆனாலும், இது அவசியந்தானா என்று யோசித்தார்; மனைவியிடமும் கலந்தார்.

“சுசீலாவுக்கு நீங்கள், பாட்டுக்கு ஏற்பாடு செய்யாவிட்டால், அவள் ஹரியைப் பாடாய் படுத்தி அவனைத் திருவிடை மருதூருக்கும் போக விடாமல் நிறுத்தி விடுவாள். அவள் சுபாவந்தான் உங்களுக்குத் தெரியுமே! ஏதோ முடிந்த வரைக்கும், ஊரிலிருக்கும் போது சொல்லிக் கொடுங்கள். இல்லா விட்டால், விட மாட்டாள்”‘ என்றாள் லட்சுமியம்மாள்.

அதைக் கேட்ட பாகவதர், “நான் அவளுக்குச் சொல்லிக் கொடுப்பதா? உருப்பட்டாற் போலத்தான். பாடம் நடக்காது; சண்டைதான் நடக்கும்; அழுகைதான் மிஞ்சும். அந்த வாயாடிக்கும், எனக்கும் ஒத்து வராது. வேண்டுமானால், ஹரியையே ஏற்பாடு செய்கிறேன். அவன்தான் அவளுக்கு லாயக்கு. அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டு, எது சொன்னாலும் பதில் பேசாமல் இருப்பான். அதற்கு வேறு எந்தச் சங்கீதக்காரனும் ஒப்ப மாட்டான்” என்று கூறி விட்டார்.

“சரி, எப்படியோ ஏற்பாடு செய்து, சுசீலாவுக்கும் ஆரம்பித்து வையுங்கள். வெட்டி வம்புக்குப் பதிலாக, சங்கீதத்தையாவது கற்றுக் கொள்ளட்டும்” என்றாள் லட்சுமி.

நல்ல நாளில் சுசீலா ஹரியின் முன்னால் உட்கார்ந்து ஸா..பா..ஸா பிடித்தாள். அப்பா மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதை வீட்டிலிருந்தபடி கேட்டுக் கேட்டே ஏழெட்டு ஆதி தாள வர்ணங்கள் வரை, சுசீலா பாடம் செய்து வைத்திருந்தாள். அவளுடைய புத்திசாலித்தனத்தை எண்ணி ஹரி மனத்துக்குள்ளேயே வியந்து கொண்டான். போட்டிக்காக அவள் பாட்டுக் கற்றுக் கொள்ளவில்லை; அப்படியே கற்றுக் கொண்டாலும், அது தவறல்ல என்று ஹரி தீர்மானித்தான். ஏனெனில், சுசீலாவுக்கு உண்மையிலேயே இசையில் ஆர்வம் இருப்பது தெரிந்தது. கேள்வி ஞானத்தைக் கொண்டே அவள் அடைந்திருந்த முன்னேற்றம், அவளுக்குச் சிரமமில்லாமல் மேற்பாடங்களை எடுக்க உதவியாக இருந்தது. ஸரளி, ஜண்டை, ஸ்தாயி வரிசைகள், தாட்டு வரிசைகள், அலங்காரம் ஆகியவற்றையெல்லாம் சுசீலா ஒரு வாரத்துக்குள் சரியாக ஒப்பித்து விட்டாள். ஸ்வர ஜதிகளும், கீதமும், ஒரு மாதம். பிறகு, அவள் கற்று வைத்திருந்த வர்ணங்களுக்கு மெருகூட்டி மேலும் சில ஆதி தாள வர்ணங்களை ஹரி அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். சுசீலாவின் தொண்டை இனிமை ஹரிக்கு வியப்பாக இருந்தது. இந்தக் குரலை வீணே சண்டை போட்டுக் கத்தி வீணாக்குகிறாளே என்று வருந்தினான்.

பத்துப் பதினைந்து ஆதிதாள வர்ணங்களுக்குப் பிறகு, பைரவியில் அடதாள வர்ணத்தை ஹரி முதலாவதாக ஆரம்பித்தான்.

உடனே சுசீலா, “எனக்குத்தான் பைரவியில் ஆதி தாள வர்ணம் பாடம் ஆகியிருக்கிறதே; வேறு ஏதாவது புதிய ராகமாக எடு” என்றாள்.

ஹரி அவளை ஒரு முறை முறைத்துப் பார்த்தான். “இதுவரை நீ குருநாதரின் மகள் என்ற மரியாதை கொடுத்து நீ படுத்துகிற பாட்டுக்கெல்லாம் உட்பட்டிருந்தேன்; இனிமேல் அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விடு. இப்போது நான் உனக்குக் குரு. மரியாதையோடும், பணிவோடும் இரு” என்று சொல்ல அவன் நாக்குத் துடிதுடித்தது. ஆயினும் மறுகணமே தன. எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

‘இவளை இப்படியெல்லாம் பேசி வழிக்குக் கொண்டு வர முடியாது. அப்படி வந்தாலும், அதில் சுவாரசியம் இருக்காது’ என்று எண்ணி, மனத்தில் ஒரு திட்டம் வகுத்து விட்டான்.

“அப்போது உனக்குப் பைரவி வேண்டமா?” என்று மிகவும் சாதாரணமாகக் கேட்பது போல் கேட்டான்.

சுசீலா அவனை ஒரு முறை உற்றுப் பார்த்தாள். “பைரவி ராகமே இனி மேல் எனக்கு வேண்டாமென்றா சொன்னேன்? எனக்கு என்ன அத்துடன் சண்டையா, மனஸ்தாபமா? ஏதாவது ஒரு புது ராகத்தில் சொல்லிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டேன்; அவ்வளவுதான்” என்றாள்.

ஹரி மனத்துக்குள் அவளுக்கு ஆதிதாளத்தில் நடந்திருக்கிற வர்ணங்களை ஞாபகப்படுத்திப் பார்த்தான். பிறகு, “சரி. ஆரம்பிக்கலாமா?” என்று உற்சாகத்துடன் கேட்டான்.

சுசீலா சரியென்று தலையை அசைத்தாள்.

ஹரி தன் நோட்டுப் புத்தகத்தை அவள் முன்னால் பிரித்து வைத்து, ஆரோகண அவரோகணத்தைப் பாட ஆரம்பித்தான்.

சுசீலா திடுக்கிட்டு ஹரியின் முகத்தைப் பார்த்தாள்.

“கதன குதூகலமா?”

“ஆமாம். ஏன், பெயரைப் பார்த்தவுடன் உன் குதூகலம் இருந்த இடம் தெரியாமற் போய் விட்டது?”

“இந்த வர்ணம் எனக்கு எப்படி வரும்?”

“வாயால் வரும். மனத்தால், புத்தியால் வரும்.”

“ஊஹூம்; எனக்கு வரவே வராது. யாராவது எடுத்ததுமே, இந்த வக்ரராகத்தில் வர்ணத்தைக் கற்றுக் கொள்வார்களா? வருமா?”

“உனக்கு எல்லாம் வரும். நீதான் மகா புத்திசாலியாயிற்றே. பாடம் ஆகாத புது ராகத்தில் வேண்டுமென்று பைரவி ஆரம்பித்தவுடன் சொன்னவள் நீதான? உனக்கு இருபது ஆதிதாள வர்ணம் வரும்; அதாவது சுமாராகத் தெரியும். அதைத் தவிர, எனக்குத் தெரிந்த அடதாள வர்ணங்களின் அட்டவணை முன் பக்கத்தில் இருக்கிறது. அதில் உனக்கு எந்த ராகத்தில் வேண்டுமோ, அதைச் சொல்லு. ஆரம்பிக்கிறேன்’ என்றான் ஹரி.

சுசீலா விடுவிடென்று விழிகளைப் புத்தகத்தின் மேலும் கீழும் ஒட்டினாள். பிறகு சிரித்துக் கொண்டே, “இந்தக் கல்யாணி வர்ணம் சொல்லிக் கொள்ளுகிறேன்” என்றாள்.

ஹரி சட்டென்று, “முடியாது” என்று மறுத்தான். “உனக்கு ஆதிதாளத்தில் வனஜாட்சி பாடமாகியிருக்கிறதா இல்லையா?” என்று கேட்டான்.

“இருக்கிறது.”

“பிறகு வேறு ஏதாவது புதிதாகக் கேள்.”

“வேறு என்ன இருக்கிறது?”

“பஹூதாரியும், மனோரஞ்சனியும்.”

“அவை இப்போது எப்படி வரும்?” என்ற சுசீலா உடனே, “பரவாயில்லை. சங்கராபரணம், காம்போதி, மோஹனம், சாவேரி, தோடி, பந்துவராளி, ஆனந்த பைரவி இவற்றில் எதையாவது சொல்லிக் கொடு.” என்றாள்.

“உன் இஷ்டத்துக்கு இங்கே பாடம் நடக்காது. வேண்டுமானால், நீ முதலில் சொன்னபடி ஆதிதாளத்தில் உனக்கு நடக்காத புதிய ராகத்தில் சொல்லிக் கொடுக்கிறேன். இல்லையென்றால், உன் இஷ்டத்துக்குக் கல்யாணியும், காம்போதியும் இப்போது கிடையாது; முதலில் பைரவி வர்ணந்தான் ஆரம்பிப்பேன். எது சம்மதம் என்று சீக்கிரம் சொல்லு. எனக்குப் பத்தரை மணி வண்டிக்குத் திருவிடைமருதூர் போயாக வேண்டும்” என்று ஹரி துரிதப்படுத்தினான்.

சுசீலா ஒரு கணம் அப்படியே விக்கித்துப் போனாள்.

‘எப்படி இருந்த ஹரி எப்படி மாறிப் போனான்!’ என்று அவள் மனத்துக்குள்ளேயே அதிசயித்துக் கொண்டாள். பாடம் ஏறி, ஏறி வித்வத் வந்தவுடன், படிப்படியாகத் தன்னையும் அறியாமல் உயர்ந்து போய்க் கொண்டேயிருப்பதை அவள் கவனித்தாள். இனி, அவன் தனக்கு அடங்க மாட்டான் என்ற பயம் அவள் உள்ளத்தை கவ்விக் கொண்டது. ஆகவே, அவனிடம் இனி மேல் முரட்டுத் தனமாக நடந்து கொள்ளுவது தவறு என உள் மனம் எச்சரித்தது. அவனே தனக்குக் குருவாக வந்து வாய்ப்பான் என்று அவள் எதிர் பார்க்கவேயில்லை. மேலும், அவன் ஆரம்பத்திலேயே அவள் தலையில் ஒரு குட்டுக் குட்டி விட்டான். அந்த வலி அவள் நெஞ்சில் ஆழப் பதிந்து விட்டது. அந்த வேதனையை அவள் ரசித்துக் கொண்டிருந்த போது—

“என்ன, தூக்கம் வருகிறதா?” ஹரி அவள் சிந்தனையைக் கலைத்தான்.

“தூக்கமா?” அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“பின்னே, இப்படியே தம்பூராவை வைத்துக் கொண்டு எதிரும் புதிருமாகப் போட்டோவுக்குப் போஸ் கொடுக்கிறாப் போல் உட்கார்ந்து கொண்டேயிருந்தால், என்ன அர்த்தம்? பைரவி ஆரம்பிக்கட்டுமா?”

“ஹரி, ஒரு சின்னச் சந்தேகம். கேட்கலாமா?”

“என்ன?”

“போட்டோ என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. நாம் இருவரும் இப்படியே பாட்டுச் சொல்லிக் கொள்வது போல் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டால்....”

“உருப்பட்டாற் போலத்தான்! அடதாள வர்ணம் ஆரம்பிப்பதற்குள்ளேயே கச்சேரிக்கு உட்கார்ந்திருக்கிற நினைப்பு வந்து விட்டாற் போலிருக்கிறது. இந்த வெட்டிப் பேச்செல்லாம் வேண்டாம்; எங்கே பாடு.”

“ஸா, ரி நீ தா நீ ஸாரீ, கஸாரீ”

சுசீலா கணீரென்று பாடினாள். ஹரி இரண்டு மூன்று முறை அவளைத் திருத்தினான்.

—‘பாடம் முடிகிற வரை நீ எப்படி வேண்டுமானாலும் என்னை ஆட்டி வைத்துக் கொள்; தம்பூராவைக் கீழே வைத்து விட்டால், பிறகு நான்தான் உனக்கு வாத்தியார். ஞாபகம் இருக்கட்டும். இன்று நீ திருவிடைமருதூர் போவதைப் பார்க்கிறேன்’ என்று எண்ணிக் கொண்டாள். ஆனால், அன்று எப்படியோ சுசீலாவின் என்ணப்படியே ஹரிக்கு திருவிடைமருதூர் போக முடியாமற் போய் விட்டது.

பாகவதர் பம்பாய் போயிருந்தார். அங்கே இன்னொரு கச்சேரிக்கு அவரைக் கேட்டதனால், ‘டிசம்பர் முப்பத்தோராம் தேதிக் கச்சேரியை ஒத்திப் போட முடியுமா?,’ என்று திருநெல்வேலி சபா காரியதரிசியைக் கேட்டு ஹரி தந்தியடித்திருந்தான். ‘பாகவதருக்கு எப்படிச் சௌகரியமோ அப்படிப் போடுகிறோம். அத்தனை தூரம் பம்பாயில் இருக்கிறவர்கள் பாகவதரின் பாட்டைக் கேட்க அவ்வளவு ஆசைப்பட்டு, இன்னொரு நாள் கேட்டிருக்கிற போது; அதற்கு நாமும் ஒத்துழைக்க வேண்டியதுதானே நியாயம்?’ என்று காரியதரிசி மிகவும் கண்ணியமாகப் பதில் எழுதி விட்டார்.

ஆகவே, பம்பாயிலுள்ள மற்றொரு கச்சேரியையும் உடனே ஒப்புக் கொள்ளும்படி பாகவதருக்கு அன்றே தந்தி அடித்து, விவரமாகத் தபால் எழுத வேண்டிய காரியங்களும் இருந்தபடியால், ஹரி சுவாமி மலையை விட்டு அசைய முடியவில்லை. மறு நாள்தான் சென்றான்.

ஹரிக்கு லட்சுமியம்மாளிடமும் சரி, சுந்தரியிடமும் சரி, மிகுந்த மரியாதை உண்டு. பாகவதரிடம் எப்படிப் பணிவோடு நடந்து கொள்வானோ, அப்படித்தான், அவர்களிடமும் அவன் நடந்து கொள்வான். சொல்லப் போனால், சுந்தரியிடம் அவனுக்குச் சற்றுப் பயம் உண்டென்று கூடச் சொல்லலாம். ‘சங்கீதத்தில் அந்த அம்மாள் தனக்குச் சமமான யோக்கியதையை உடையவள்’ என்று தன் குருநாதர் வாயாலேயே சொல்லக் கேட்டிருந்ததனால், ஜாக்கிரதையாகவே நடந்து கொண்டான்.

ஆனால், லட்சுமியம்மாளிடம் அவனுக்குப் பெற்ற தாயைப் போல உரிமையும், அன்பும் அதிகம். அதனால் அங்கே பயமும், கட்டுப்பாடும் இல்லை. அதே போலத்தான் ஹரியிடம் சுசீலாவும், வசந்தியும் நடந்து கொண்டனர். சுசீலாவுக்கு அவனிடம் உரிமை அதிகம். தான் இடுகிற கட்டளையை நிறைவேற்ற அவன் கடமைப் பட்டவன் என்ற நினைப்பு. தங்கள் வீட்டோடு இருந்து சாப்பிட்டு வித்தைக் கற்றுக் கொண்டவன் என்ற எண்ணம் அவளுக்கு. அதனால், ஹரியிடம் அவளுக்கு மதிப்புக்குப் பதில் அலட்சியந்தான் மேலோங்கி நின்றதோ!—அவள் உள்ளத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது.

வசந்தியோ, ஹரியைத் தெய்வமாக மதித்து வழிபட்டாள். அவனுடைய வசீகரத் தோற்றமும், அடக்கமும் அவளை ஆட்கொண்டு விட்டன. அவனால்தான், தன் உள்ளத்து எண்ணம் ஈடேற வகை ஏற்பட்டது என்ற வகையில் அவனிடம் அவளுக்கு அளவு கடந்த பக்தியும், பாசமும் பெருக்கெடுத்தோடின.

ஹரி இடுகிற கட்டளையினின்றும் அவள் பிறளுவதில்லை. தன் விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை. அவன் விருப்பத்துக்கெல்லாம் அவள் குரலைத் திருப்பினாள். அவனாகப் பார்த்துக் கற்றுக் கொடுப்பதை தவிர, எதிர் வார்த்தை பேச மாட்டாள்.

இப்படி இரண்டு வித குண விசித்திரமுள்ள சிஷ்யைகளுக்கு ஹரி குருவாக விளங்கினான். அங்கே சுசீலா அவனுக்குக் கட்டளையிடுகிறாள். இங்கே வசந்தி அவன் நாவசைவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், இருவருமே புத்திசாலிகள். குணத்தைத் தவிர, அறிவில் அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை. ஒரே மரத்துக் கனிகள் அல்லவா?

“இன்று என்ன புதுப் பாடம் எடுக்கலாம்?” என்று ஹரி கேட்டான்.

வசந்தி பதிலே பேசவில்லை.

“நான் கேட்டது காதில் விழவில்லையா? உன்னைத்தான் கேட்கிறேன்” என்றான் ஹரி மீண்டும்.

“எனக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்குத்தானே புரியும்; என்னைக் கேட்டால்?” என்றாள் வசந்தி.

ஹரி மனத்துக்குள் சிரித்துக் கொண்டான். அப்போது சுந்தரி உரத்தக் குரலில், “ஹரி ஹரி” என்று திண்ணைப் பக்கத்திலிருந்து கூப்பிடுகிற குரலைக் கேட்டு, இருவருமே எழுந்து வாசலைப் பார்க்க விரைந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் சுந்தரியின் கண்களில் நீர் வந்து விட்டது; “ஹரி இந்த ஆள் சுவாமி மலையிலிருந்து வந்திருக்கிறார். என்ன சொல்லுகிறார் என்று கேள்” என்று கூறி விட்டுத் தாங்க முடியாத துக்கத்தோடு உள்ளே சென்றாள்.

பம்பாயிலிருந்து வந்த பாகவதர் சென்டிரல் ஸ்டேஷனில் இறங்கிய போது ரெயிலிலிருந்து இடறி விழுந்து அடிபட்டு, ஊருக்கு வந்திருப்பதாகவும்; உடனே ஹரியை அழைத்து வரச் சொன்னதாகவும் வந்திருந்த ஆள் கூறவே, ஹரியும், வசந்தியும் செயலிழந்து நின்றனர்.