புல்லின் இதழ்கள்/நல்ல வாரிசு
திருவிடைமருதூரில் சுந்தரியின் அழகான மிகப் பெரிய வீடு மகாதானத் தெருவில் இருந்தது. படியேறி உள்ளே நுழைந்ததுமே, சுவாமிமலை வீட்டில் இருப்பதே போல் சிரித்த முகத்துடன் கூடிய பாகவதரின் மிகப் பெரிய புகைப் படமொன்று வந்தவர்களை வரவேற்கும்.
நடு ஹாலில், அழகிய வேலைப்பாடமைந்த நாற்காலிகளும், சோபாக்களும் போடப்பட்டிருந்தன. பழைய பெரிய வீடாயினும், புதிய தோற்றத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே விலையுயர்ந்த பொருட்களும், அழகிய பெரிய படங்களும், நிலைக் கண்ணாடிகளும், பளிங்குக் கல் பதித்த சுவர்களும் வீட்டுக்கு மதிப்பூட்டின.
ஹரியும், பாகவதரும் உள்ளே நுழைந்ததும், சுந்தரிதான் அவர்களை வரவேற்றாள்.
“நேற்றே உங்களை எதிர்பார்த்தேன்” என்று சுந்தரி கூறியவுடன், “அது என்னவோ சுந்தரி! நானும், ஹரியும் சேர்ந்து இங்கே வர எப்போது புறப்பட்டாலும் சரி, உடனே ஏதாவது ஒரு தடங்கல் வருகிறது. நேற்றுப் புறப்பட்டு, இன்று வந்து சேர்ந்திருக்கிறோம்” என்று ஹாஸ்யமாகக் கூறி விட்டு, எதிரில் இருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் தம் பக்கமாக இழுத்தார்.
உடனே சுந்தரி, “இதோ இரண்டு நிமிஷத்தில் காபி கொண்டு வருகிறேன். சாப்பிட்டு விட்டு பிறகு வெற்றிலை போடலாம்” என்றாள்.
அதற்குள் மாடியிலிருந்து இறங்கி வந்த வசந்தி, கூந்தலை ஈரம் போகக் கோதிக் கொண்டே, “ஏன் அப்பா, ரெயில் பதினேழு மணி நேரம் லேட்டா?” என்று கேலி செய்த வண்ணம், அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
வசந்தியின் ஹாஸ்யத்தை ரசித்தபடியே அவளை ஏறிட்டுப் பார்த்தான் ஹரி.
அன்றலர்ந்த மலர் போல் அழகுடன் விளங்கிய அவளைப் பார்க்கும் போதெல்லாம்; அவனுக்குக் கூடவே .சுசீலாவின் நினைவும் வரும். கை தேர்ந்த சிற்பியொருவன் ஒரே அச்சில் கடைந்தெடுத்த தந்த விக்கிரகம் போல் இருக்கும் அவர்களது உருவ ஒற்றுமையைக் கண நேரம் மனத்துக்குள்ளே நினைத்து வியந்து கொண்டான்.
வசந்தி, சுசீலாவின் தங்கையாக இருந்தாலும், உடலமைப்பில், சற்றுப் பெரியவள் போலவே காணப்பட்டாள். சுருட்டைத் தலையும், தங்க நிறமும் வசந்தி என்றால்; பொன்னிறமும், முழங்கால் வரை நீண்ட கூந்தலுமாகச் சுசீலா விளங்கினாள். சுசீலாவின் வட்டக் கரிய விழிகளில், எப்போதும் குறும்பும், கோபமும் துள்ளி விளையாடும். வசந்தியின் விழிகளில், அமைதியும் அடக்கமும் தேங்கி நிற்கும்.
உள்ளேயிருந்து வந்த தாயாரின் குரலைக் கேட்டதும், வசந்தி எழுந்து உள்ளே சென்றாள். அவள் காதில் பூரித்த வைரத் தோடு; கன்னத்தில் வீசிக் கொட்டிற்று. சற்றைக்கெல்லாம் காபி, பலகாரங்களுடன் வெளியே வந்த வசந்தி, அவர்கள் இருவருக்கும் கொடுத்தாள். பலகாரம் சாப்பிட்டானதும் பாகவதர், “கோட்டு வாத்தியம் ராயர்வாள் வீடு வரைப் போய் வருகிறேன்” என்று சொல்லி புறப்பட்டுச் சென்றார். ஹரி வீட்டிலேயே இருந்தான்.
சுந்தரி சமையல் வேலைகளைத் துரிதமாக முடித்துக் கொண்டு ஹாலுக்கு வருவதற்கும், பாகவதர் வெளியிலிருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. ஆனால், அவர் கூடவே, வேறொரு சங்கீத வித்துவானையும் அழைத்து வந்திருந்தார். வயது அறுபதுக்கு மேலிருக்கும். அவரது தோற்றமும், சிவந்த மேனியும், தும்பைப் பூப்போன்ற தலை முடியும் நீண்டு வளர்ந்த தாடியும் அவர் பழுத்த பழம் என்பதைக் காட்டின.
“ராயர் வாள் வீட்டுக்குப் போயிருந்தபோது, எதேச்சையாக ராமையாப் பிள்ளையவர்களைப் பார்த்தேன். நம்முடைய அதிர்ஷ்டம், பிள்ளையவர்களைச் சந்திக்கிற பாக்கியம் கிடைத்தது. இவர் முன் ஹரியைப் பாடச் சொல்ல வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. பிடிவாதமாக அழைத்து வந்து விட்டேன்” என்று சுந்தரியிடம் பாகவதர் கூறினார்.
ஹரியின் பாட்டுக்கு உடனடியாக ஏற்பாடாயிற்று. அறையிலிருந்த பட்டு ஜமக்காளத்தைக் கொண்டு வந்து, நடு ஹாவில் விரித்தாள் வசந்தி. ஹரி தம்புராவை நாலரைக் கட்டைக்குத் துல்லியமாகச் சுருதி சேர்த்துக் கொண்டு உட்கார்ந்தான். குருநாதரையும், பிள்ளையவர்களையும் வணங்கி விட்டுப் பாட ஆரம்பித்தான். ஸாவேரி வர்ணத்தை அவன் நாலு காலம் வெகு கச்சிதமாகப் பாடி நிறுத்தியவுடனே, பிள்ளையவர்கள் தம்மையும் மீறி, “சபாஷ்! சபாஷ்!” என்று வஞ்சனையில்லாமல் வாய் திறந்து கூறினார். அதன் பிறகு, ஹரி பாடிய ஒவ்வொரு கிருதியும், ராக ஆலாபனையும், ஸ்வரம் பாடுகிற பந்தாவும் பிள்ளையவர்களைப் பரவசப் படுத்தின.
மைனாக் குருவி போன்ற அவனது சாரீரத்திலிருந்த ஜிலுஜிலுப்பையும், முற்றிய மாதுளையிலிருந்து உதிர்ந்தோடும் முத்துக்களைப் போன்று அவனது தொண்டையில் மூன்று ஸ்தாயிகளும் அநாயாசமாகப் புரண்டோடிய-துளி பிசிறில்லாத பிர்காவையும் கண்டு அனைவரும் வியந்தனர். பாகவதரையே உரித்து வைத்தாற் போன்று, ஒவ்வொரு ராகத்திலும் அவன் கையாள்கிற பிடியையும், அடுக்குப் பாறை போல் படிப்படியாகவும், சரளமாகவும், நடை பேதங்களுடன் ஸ்வரம் பாடுகிற பந்தாவையும், சர்வலகு சுத்தத்தையும் கண்டு பிள்ளையவர்கள் பிரமித்துப் போனார்.
கடைசியாக ஒரு திருப்புகழைப் பாடி முடித்தவுடன், பிள்ளையவர்கள் ஹரியை அப்படியே வாரி எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரது குழி விழுந்த கண்களில், வைரத் துண்டுகளைப் போல நீர்த் துளிகள் மின்னின.
“உனக்கு இறைவன் வற்றாத தீர்க்காயுசைக் கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான், நான் என் வாயால் வாழ்த்தக் கூடியது. மற்றதெல்லாம் உனக்கு இருக்கிற வித்தைக்குத் தானே தேடி வந்து அடையும்” என்று ஆசீர்வாதம் செய்தார். பாகவதரைப் பார்த்து, “சுப்பராமா, உனக்குப் பிறகு பெயர் சொல்ல நல்ல பரம்பரையை உண்டாக்கி விட்டாய். நீ அதிர்ஷ்டக்காரன்தான்” என்றார்.
ஹரியினுடைய கையிலிருந்த தம்பூராவைப் பெற்றுக் கொண்ட வசந்தி, நன்றிப் பெருக்குடன் பிறர் அறியா வண்ணம் அவனை ஒரு முறை பார்த்து விட்டு, மாடியை நோக்கிச் சென்றாள்.
சாப்பாடு முடிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம், பிள்ளையவர்கள் ஹரியைக் கூப்பிட்டார். இடுப்பில் இருந்த பட்டுப் பையைப் பிரித்து, பழனி விபூதியை அவன் நெற்றியில் இட்டு ஆசிர்வதித்தார். அருகில் நின்று கொண்டிருந்த மற்றவர்களுக்கும் விபூதி கொடுத்தார்.
பிறகு வசந்தியைப் பார்த்து, “இந்தத் தடவைதான் பாடாமல் ஏமாற்றி விட்டாய். இனி ஒரு சமயம் வந்தால், இப்படி அவசரப்பட்டுக் கொண்டு புறப்பட மாட்டேன். நீ பாடுகிற வரை, மாசக் கணக்கானாலும் சரி, இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். என்ன சரிதானே வசந்தி?” என்றார்.
உடனே வசந்தி, “என்ன மாமா, நானாகவா பாட மாட்டேன் என்கிறேன்? எனக்குப் பாடத் தெரிந்தால் அல்லவா பாடுவதற்கு? அப்பாவுக்குப் பெண்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கவே பிடிக்காது, அதனால்தானே, அவர் என்னிடம் இவ்வளவு நாளாகச் சங்கீதத்தைப் பற்றியே பேசுவதில்லை?” என்றாள் வருத்தத்துடன்.
இதைக் கேட்டதும், பிள்ளையவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன், “அப்படியா சுப்பராமா?” என்று கேட்டார். பாகவதர் பதில் ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தார்.
உடனே வசந்தி, “நான் பொய் சொல்லவில்லை மாமா; எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொண்டு நன்றாகப் பாட வேண்டும் என்ற ஆசைதான். ஆனால் நானாக என்ன செய்ய முடியும்? ‘பாட்டுக் கற்றுக் கொள்ளுவதாக இருந்தால் கச்சேரி பண்ண வேண்டும்’ என்பது அப்பாவின் விருப்பம். “கச்சேரி பண்ணப் போவதானால், நீ பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டாம்”—இது அம்மாவின் உத்தரவு. இதற்கு நீங்கள்தான் மாமா தயவு செய்து ஒரு வழி செய்து விட்டுப் போக வேண்டும்” என்றாள் மிகுந்த துக்கத்துடன்.
“சுப்பராமா, நீ பிரமாதமாகப் பாடுவாய் என்றுதான் எனக்குத் தெரியும். இப்படியெல்லாம், நீங்கள் ஆளுக்கொரு கொள்கையை வைத்துக் கொண்டிருப்பீர்கள் என்று தெரியாமல் கேட்டு விட்டேன்” என்ற பெரியவர், உடனே, “ஆமாம், நானும் தெரிந்துக் கொள்ளத்தான் கேட்கிறேன்; சுந்தரி சொல்வதிலாவது ஒரு விதத்தில் காரணம் இருக்கிறது. ஆனால் நீ சொல்லுவதில் என்ன நியாயம் இருக்கிறது? பாட்டுக் கற்றுக் கொள்கிறவர்கள் எல்லாரும் கச்சேரி பண்ணித்தான் ஆக வேண்டுமா? பிறகு இவர்கள் பண்ணுகிற கச்சேரியை எல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று வருகிறவர்கள் மென்னியைப் பிடிப்பாயோ? என்னப்பா இதெல்லாம் அர்த்தமில்லாமல்?” என்றார்.
“நான் அர்த்தம் இல்லாமல் சொல்லவில்லை பிள்ளையவர்களே. பாட்டுக் கற்றுக் கொள்கிறவர்கள் எல்லாரும் கச்சேரி பண்ணித்தான் ஆக வேண்டும்; அதை எப்படி இருந்தாலும் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நன்றாகக் கச்சேரி பண்ணுகிற அளவுக்குத்தான் என்னால் உழைத்துச் சொல்லிக் கொடுக்க முடியும். கச்சேரி பண்ணும் உத்தேசம் உள்ளவர்கள் மட்டும் வரட்டும். ஆனால், பெண்களிடம் இந்தக் கண்டிப்பை எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பதில்லை. இது என் கொள்கை. இதை வலிய நான் யார் தலையிலும் திணிக்கவில்லையே! எனக்கென்று ஓர் அபிப்பிராயம் இருந்தால் அது தப்பா?”
“தப்பில்லைதான். ஆனால், நான் உன்னை ஒன்று கேட்பேன்; கோபித்துக் கொள்ள மாட்டாயே?”
“நிச்சயம் மாட்டேன்.”
“அப்படியானால், உன் கொள்கையைச் சுந்தரி தலையில் ஏன் திணிக்கவில்லை?”
பாகவதர் வாய் மூடி மௌனியாகி விட்டார். பிள்ளையவர்களின் இந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. விதி வசத்தால் நேர்ந்த விஷயத்துக்கு அவர் எப்படி விளக்கம் கொடுக்க முடியும்?
“சுப்பராமா, போனது போகட்டும்; ஆராதித்து, ஒரு பெண் தெய்வத்தின் கருணையால் அடையப் பெற்ற இவ்வித்தையை, அந்த இனத்திற்கே மறுப்பது நியாயமாகாது. இப்போது உன் பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது, அவள் பேச்சிலிருந்து தெரிகிறது. யாராக இருந்தாலும், ஆர்வமுள்ளவர்களைத் தடுக்கலாகாது. ஆகவே வசந்திக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க வேண்டியது ஹரியின் பொறுப்பு. அதற்கு வேண்டிய நேரத்தை நீதான் அவனுக்கு ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். கற்றுக் கொண்ட வித்தை, அவளுக்கும் ரசிகர்களுக்குந் தான் சொந்தம். அதாவது, யோக்கியதையும், திறமையும் அடைந்தால் தொழில் செய்யட்டும். இல்லாவிட்டால், சுவாநுபவமாக இருக்கட்டும். அதைப் பற்றி இப்போது நாம் யோசிக்கக் கூடாது; நம்மால் முடிவு சொல்லவும் முடியாது. அது அவ்வளவு முக்கியமல்ல” என்று பாகவதரிடம் கூறிக் கொண்டே வந்த பிள்ளையவர்கள், வசந்தியின் பக்கம் திரும்பி, “என்னம்மா, நான் சொல்லுவது சரிதானா? உனக்குச் சம்மதந்தானா?” என்று கேட்டார்.
சம்மதத்தின் சாயலாக, வசந்தி தலையை ஆட்டினாள். மகிழ்ச்சியினால், அவள் முகம் மலர்ந்தது. அதைக் கண்டு, சுந்தரியின் உள்ளமும் குளிர்ந்தது. ஆனால், பாகவதரின் உள்ளமோ, கண நேரத்துக்குள் கருமேகங்களால் சூழப்பட்ட வானம் போல் இருண்டு விட்டது. அந்த இருளில் மூழ்கிப் போன தம்முடைய கொள்கையையும், அதை ஊட்டி வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருத்த ஹரியையும் திக்குத் திசை தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார்.
பிள்ளையவர்கள் சிரித்தபடியே ஊருக்குப் புறப்பட்டார்.