புல்லின் இதழ்கள்/நிதி சால ஸுகமா?


 
13. நிதி சால ஸுகமா?

ங்கில ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியக் கிராமங்களில் சுவாமிமலை என்னும் சிற்றூரும் ஒன்று. குன்றுதோராடும் குமரன், குருநாதனாக வந்து குடி கொண்டிருக்கும் ஆறு படை வீடுகளில் இந்தப் புண்ணியஸ்தலமும் ஒன்று.

காவிரி ஆற்றின் செழுமையை மூலதனமாகக் கொண்டு, இருமருங்கிலும் செழித்து வளர்ந்த தென்னஞ் சோலைகள்; கண்ணைக் கவரும் இயற்கை அழகோடு கொஞ்சிக் கொண்டிருக்கும் பூஞ்சோலைகள்; பச்சைப் பசேல் என்று—மரகதப் பாய் விரித்தது போன்ற வயல் வெளிகள்—அவற்றில் அறுவடைக்குத் தயாராகித் தலை சாய்த்து நிற்கும் நெல் மணிகள். அந்தப் பொற்கதிர்களைத் தடவிக் கொண்டே அலை அலையாய்த் தவழ்ந்து செல்லும் இனிய தென்றல் காற்று-

ஆற்றங்கரைத் தெருவை ஒட்டி, மக்கள் குளிப்பதற்காக மன்னர்களால் கட்டப்பட்ட கல் படித்துறை. அதன் கரையோரச் சுவர்களில் எவ்வித ஆபாசக் கிறுக்கல்களும் இல்லாமல்; வெள்ளையும், காவியும் கால வெள்ளத்தில் கரைந்து கைாண்டிருந்தது.

கரையில் அடர்ந்து கிளை பரப்பி நிற்கும் வயோதிக ஆலமரம். அதன் அருகே யாரோ இணையாக நட்டிருந்த வேப்ப மரமும் செழித்து வளர்ந்திருந்தது. அரச மரத்தைச் சுற்றிலும், கல்லிலே வடித்து நிறுத்தப்பட்டிருக்கும் நாகராஜாக்கள்.

சற்று தூரத்தில் உயரமாக அழகானதொரு நாலு கால் மண்டபம். வழிப் போக்கர்கள் வந்து தங்கி இளைப்பாறிச் செல்லுவார்கள். பல சமயங்களில், அங்கே கிராமத்து ஆடுகள்தான் தங்களின் பல தரப்பட்ட வண்ணக் குட்டிகளுடன் குஷியாகக் குதித்து விளையாடிக் கொண்டும்; இளைப்பாறிக் கொண்டுமிருக்கும்.

வீட்டை விட்டு வெளியேறிய காலத்தில், ஹரி எங்கு சுற்றியும் இந்த மண்டபத்தைததான் தனது புகலிடமாகக் கொண்டிருந்தான். அவன் பாடினாலும், படுத்தாலும், பட்டினி கிடந்தாலும், யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத இந்த சுதந்திரம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் பாகவதர் இந்த மண்டபத்திற்கு வந்துதான் அவனை ஆட் கொண்டார்.

ஊருக்கு நடுநாயகமாய், சிறிய மலையுச்சியில் விளங்கிக் கொண்டிருந்தது சுவாமி நமதஸ்வாமி ஆலயம். ஆலயத்தைச் சுற்றி உருவான மாட வீதிகள், சிறிய அக்கிரகாரங்கள்; ஆற்றங்கரைத் தெருக்கள், சன்னிதித் தெரு, ஊருக்குள் ஊடுருவி, அங்கொன்றும், இங்கொன்றுமாய்ப் பற்பல தொழில் புரிவோர் வசிக்கும் தெருக்கள்; பல பிரிவு மக்கள்.

“சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
 தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!”

என்று முழங்கிய பாரதியின் வேத வாக்கையோ—

“ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சோதரர் அன்றோ?”

என்று கேட்ட பாரதியின் அறிவுரையையோ ஏற்றுக் கொள்ளும் பக்குவமுமின்றி — அறிவு அடிமைப் பட்டுக் கிடந்த இந்திய மக்கள்—

“வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமையில்லை,”

என்று உணராத-அல்லது உணர மறுக்கும் வெள்ளையருக்கு அடிமைப்பட்டு, வெட்கமின்றி வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்த காலம்.

“ஒன்றே குலம்; ஒருவனே தேவன்”

என்கிற தத்துவமோ—

“எல்லோரும் ஓர் இனம் - இங்கு
எல்லோரும் ஓர் நிறை,”

என்கிற ஒருமைப்பாட்டு உணர்வோ - ஒரு சிறிதுமில்லாது—

ஆத்திகத்தையும்; சனாதன தர்மங்களையும்; இந்து மதக் கோட்பாடுகளையும் சரி வரப் புரிந்து கொள்ள முனையாமல் - தங்களுக்குள் ஜாதி மத பேதங்களினால் மனம் பேதலிக்கப்பட்டு; அவற்றில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும். ஆவேசமான ஈடுபாடும் கொண்டவர்களால், சிலர் ஒதுக்கப்பட்டும்; சிலர் மறைமுகமாக நிராகரிக்கப் பட்டும்; பலர் பகிரங்கமாகவே அவமானத்திற்கும், கண்டனங்களுக்கும் இலக்காகி - அக்கிரகாரத்துக் கிணறு முதல்; பொதுக் குளம் வரை - மனிதனுக்கு மனிதன் உள்ள சம உரிமைகள் கூட மறுக்கப்பட்டு—

அனைவருக்கும் பொதுவான ஆண்டவனை ஆலயத்தில் சென்று தரிசிக்கக் கூட அக்கினிப் பிரவேசம் அவசியமாகி விட்ட அந்த கால கட்டத்தில்—

சுப்பராம பாகவதர் அந்த ஊரிலேயே வித்தியாசமானவராக மாறுபட்டவராக விளங்கினார்.

மகாத்மா காந்தியிடம் அளவற்ற பக்தியும், ஈடுபாடும்; அவரது கொள்கைகளிலும், லக்ஷியங்களிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்த லக்ஷக்கணக்கான தீவிர காந்தியவாதிகளில், பாகவதரும் ஒருவராக - ஆனால் குறிப்பிடத் தக்கவராகத் திகழ்ந்தார்.

கதரைத் தவிர வேறு உடை உடுத்த மாட்டார். தம்பூரா கையில் இல்லாத நேரங்களில், அவரது கரங்களில் தக்கிளியோ - சர்க்காவோ சுழன்று கொண்டிருக்கும்.

பாகவதர் ஒரு கொள்கை வைத்திருந்ததார். தன்னுடைய கச்சேரி எங்கு நடந்தாலும், இறுதியில் இரண்டு தேசியப் பாடல்கள் பாடாமல், மங்களம் பாட மாட்டார். இதனாலேயே சில பிரமுகர்கள், பெரிய அரசு உத்தியோகஸ்தர்கள் போன்றவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு அஞ்சி, தங்கள் வீட்டுத் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பாகவதரை அழைக்கப் பயப்படுவார்கள். ஆயினும் பாகவதர் இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார். அவருக்கு யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலை இல்லை.

“தைரியமிருந்தால், மேடையிலேயே எனக்கு விலங்கிட்டு அழைத்துப் போகட்டும். ஜெயிலில் இருக்கிறவர்களுக்காக, யார் அங்கே போய்க் கச்சேரி செய்யப் போகிறார்கள்? ஆனந்தமாய் அவர்களுக்காக நான் போய் பாடுகிறேன்” என்பார். ஈடு இணையற்ற இசையினாலும், இம்மாதிரியான காரியங்களினாலும் பாகவதர் உள்ளூரிலும், வெளியூர்களிலும் ஏராளமானவர்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்தாலும், திடீரென்று மீண்டும் அவர் செய்த ஒரு புரட்சியைக் கண்டு ஊரே ஒன்று கூடிப் பேசியது.

எங்கோ பிறந்த - ஊர் பேர் தெரியாத வேற்று ஜாதிப் பையனை அழைத்து வந்து, வீட்டோடு சரி சமானமாக வைத்துக் கொண்டு; அவனுக்கு வித்தையும் சொல்லிக் கொடுக்க அவர் முனைந்த போது - ஊர் முழுதும் கூடி, கூடிப் பேசினாலும்; பாகவதரின் முகத்துக்கு நேரே நின்று இதைப் பற்றிக் கேட்க யாருக்கும் துணிவு இல்லை.

ஏனெனில் - இது போன்ற ஒரு செயலுக்காக முன்பு ஒரு சமயம் பாகவதரிடம் எதிர்ப்புக் கொடி காட்டித் தோற்றுப் போனவர்கள் அவர்கள்.

மற்றவர் வர்ணிப்பது போல் - உயர் அந்தண வகுப்பில் பிறந்த பாகவதர், சிஷ்யையாயிருந்த வேற்று ஜாதிப் பெண் சுந்தரியை அவர் இரண்டாந் தாரமாக மணந்து கொண்டு வீட்டுக்கு வந்த போது—

ஊரே திரண்டு, அவர் வீட்டு வாசல் முன் கூடி நின்றது. ஆனால், பாகவதர் அசையவில்லை. கையிலெடுத்த தம்பூராவைக் கீழே வைக்காமல், விரல்கள் மீட்டிக் கொண்டிருந்தன. கண்ணை மூடிக் கொண்டு, நாட்கணக்காய், இரவு பகல் அன்ன ஆகாரமின்றி, இசை மழையாய் இதயத்தினுள் பொழிந்து கொண்டிருந்தார்.

“இன்னும் இப்படியே ஒருநாள் நீடித்தால் ரத்தம் கக்கி பாகவதர் இறந்து விடுவார்” - என்று அவரைப் பரிசோதித்த உள்ளூர் டாக்டர், வெளியே நின்று. கொண்டிருந்த கூட்டத்தினரிடம் எச்சரித்துச் சென்று விட்டார்.

லக்ஷ்மியும், சுந்தரியும், ‘கோ’வென்று கதறி அழுது கொண்டிருந்தனர். பாகவதர் மட்டுமா பட்டினி? வீடு முழுதுமே நாலு நாள் பட்டினியாயிற்றே!

இதற்கு மேலும் இந்தக் கொடிய காட்சியைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்க உள்ளூர் வாசிகளால் இயலவில்லை. எத்தனைதான் ஜாதிப் பித்துக் கொண்டவர்களாயிருந்தாலும்; எதற்கும் உருகாத கல் நெஞ்சக்காரர்கள் அல்லவே அவர்கள்!

வாசலிலே கூடியிருந்தவர்கள் கூட்டமாகச் சென்று பாகவதர் கால்களில் விழுந்து வேண்டி - உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

பாகவதரிடமும், அவரது ஒப்பற்ற இசை மீதும் மட்டற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளவர்கள் அவர்கள். நாள் தவறாமல், எத்தனையோ பெரிய மனிதர்கள் காரைப் போட்டுக் கொண்டு அவரைத் தேடித் தினம் சுவாமி மலைக்கு வருகிறார்கள். அவரால் - அவரது இசையின் சிறப்பால் - அந்த சிற்றூருக்கே எவ்வளவு பெருமை?

சுப்பராம பாகவதரைப் பொறுத்த வரையில்; இசையே அவருக்கு - இறைவன்; அதை ஆராதிக்கிறவர்கள் யாராயிருந்தாலும் - அவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவரும் இறைவனின் இசை வடிவங்களே! அவருடைய ஜாதி சங்கீத ஜாதி!

இப்படியொரு கொள்கையையும், அதில் தீவிரப் பிடிப்பும் உடைய பாகவதரிடம், மீண்டும் ஒரு முறை ஹரிக்காக - யாரோ ஊர் பேர் தெரியாத அந்தப் பையனை வீட்டோடு சேர்த்து கொண்டதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க - ஊர்க்காரர்கள் விரும்பவில்லை.

ஏனெனில்—

முன்பு, சுந்தரி சம்பந்தப்பட்ட விஷயத்தின் போது, பாகவதர் யாரென்பது ஊர் மக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை; எதிர்த்தார்கள் இப்போது—

ஹரி விஷயத்தின் போது, அவர்கள் பாகவதரைப் புரிந்து கொண்டு மெளனமாகி விட்டார்கள்.

சுவாமி மலையில் நாகரிகம் அடியெடுத்து வைக்கத் துவங்கியிருந்த காலம். மின்சார விளக்கிலும் - ரயில் வண்டியிலும், ஊமைப் படங்களிலும் இருந்த பிரமிப்பு நீங்கி, வெள்ளித் திரையில் தமிழ் பேசும், பாடும் படங்கள் வந்த போது, மக்கள் பிரமித்துப் போனார்கள்.

அளவோடு-ஆனால் செழுமையோடு கூடிய ஜனத் தொகை கொண்ட அந்தச் சிறிய கிராமத்திற்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை - டூரிங் டாக்கீஸ் என்கிற பெயரில் பெரிய படுதாக்களைத் தூக்கி நிறுத்தி அடித்திருக்கும் டெண்ட் கூடாரத்தில், புதிசு புதிசாக தமிழ் டாக்கி படங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை - தன்னுடைய பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு டூரிங் டாக்கீஸ் ஸ்திரமாகவே இருந்து கொண்டிருக்கும்.

ஆற்றங்கரையை ஒட்டினாற் போலுள்ள பொட்டல் வெளியில், அந்த டூரிங் டாக்கீஸ் இருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் ஜெனரேட்டர் ஓடத் துவங்கி, ரிகார்டு போடத் துவங்கி விடுவார்கள்-கிராமத்து மக்கள் மின்சார விளக்குகளை டூரிங் டாக்கீசில்தான் கண்டு களிக்க முடியும். ஊரின் உள்ளே-காவிரிக் கரைத் தெருக்களிலும், அக்கிரகாரத்து விதிகளிலும், இருபது அடி இடைவெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கல் தூண்களின் தலையில் பொருத்தப்பட்டிருக்கும் சீமை எண்ணை விளக்கு ஒளியிலும்; வீட்டுப் பெண்கள் இல்லந்தோறும் மாடப் புரைகளில் ஏற்றி வைத்திருக்கும் நல்லெண்ணை அகல் விளக்கொளியிலும் தெருக்கள் தூங்கி வழிந்து கொண்டிருக்கும்.

சரியாகப் பகல் பதினோரு மணிக்கெல்லாம், அன்று இரவு வெள்ளித் திரையில் மின்னப் போகும் டாக்கியின் பெயர்ப் பலகைகளை மாட்டு வண்டியின் இருமருங்கிலும் கட்டிக் கொண்டு, பிரபல சினிமா நட்சத்திரங்கள் பாடிய பாப்புலரான பாடல்களை பாண்டு வாத்தியத்தில், வண்டியினுள்ளிருந்தபடி உரக்க முழங்கிக் கொண்டும் சினிமா வண்டி ஊர் முழுதும் பவனி வரும். அப்போது

அன்றைப் படத்தின், நடிக, நடிகையர் புகழ்ப் பட்டியலுடன் நீண்ட கதைச் சுருக்கத்தையும் தாங்கி, ஒரு சுவாரஸ்யமான கட்டத்தில், ‘மீதியை வெள்ளித் திரையில் கண்டு களியுங்கள்’ என்று முடியும் சஸ்பென்சுடன் கலர் கலராக பல வண்ணங்களில் இரு புறமும் அச்சடிக்கப்பட்ட நீண்ட நோட்டீசுகளை வினியோகித்துக் கொண்டும்; சில சமயங்களில் சினிமா வண்டியிலிருந்து, கூண்டுக்கு வெளியே ஆகாசத்தை நோக்கி கத்தை கத்தையாக வீசி எறியவும் செய்வார்கள்.

காற்றில் கலைந்து, பல வண்ணங்களில் சிதறிப் பறக்கும் நோட்டீசுகளை கிராமத்து விடலைப் பையன்களும்; சமயத்தில் பெரியவர்களும் கூட குஷியும் கும்மாளமுமாய், எம்பிக் குதித்து, பறக்கும் நோட்டீசைத் தாவிப் பிடிப்பார்கள்.

பாண்டு வாத்தியமும், சினிமா வண்டியின் பின்னே தொடர்ந்து செல்லும் சிறுவர்களின் கூச்சலும், சந்தோஷ. ஆரவாரமும் தெருவைக் கலக்கிக் கொண்டிருக்கும்.

குழந்தைகள் மட்டும்தான் இப்படி என்றில்லை; பாண்டு முழக்கத்தோடு சினிமா வண்டி தங்கள் தெருவிற்குள் நுழைந்தால்- கிராமத்து மக்கள் அனைவரும் ஒரு வித ஆவலுடன் தங்கள், தங்கள் வீட்டு வாசல் தூண்களைப் பிடித்துக் கொண்டு நின்று கவனிக்கத் தவற மாட்டார்கள்.

நோட்டீசை வாங்கி, வரி விடாமல் படித்து முடிக்கும் போது- ஆச்சர்யத்தால் அவர்களது விழிகள் அகன்று விரியும்.

சினிமா வண்டி பாகவதர் வீட்டை அடையும் போது, வேறு யார் வரா விட்டாலும், சுசீலா தவறாமல் வாசலுக்கு ஓடி வந்து விடுவாள்.

ஹரி ஊரில் இருந்தால்- அவன்தான் ஓடிப் போய் நோட்டீஸ் வாங்கிக் கொண்டு கொடுத்தாக வேண்டும். அப்பாவோடு வெளியூர் போயிருந்தால், தெருப் பையன்களிடம் கெஞ்சிக் கேட்டோ- இல்லை நேரே வண்டிக்கே போயோ, தவறாமல் சுசீலா நோட்டிசை வாங்கி, கதைச் சுருக்கத்தைப் படித்து முடித்து விட்டுத்தான் மூச்சு விடுவாள். அதில் அவளுக்குப் பிடிக்காத விஷயம்- மீதியை வெள்ளித் திரையில் காண்க- அல்லது கண்டு களியுங்கள்’, என்கிற வரிகள்தாம்.

‘அதையும் எழுதி விட்டால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்? முடிவு தெரிந்து விட்டால், சினிமாவிறகு வர மாட்டார்கள் என்கிற பயம் போலிருக்கிறது’- என்று எரிச்சலோடு முணுமுணுத்தபடி உள்ளே போவாள்.

ஊரில் இருக்கும் போது, நல்ல படமென்றால்- அதுவும் மறுநாள் வெளியூரில் கச்சேரிகள் ஏதுமில்லாதிருந்தால், பாகவதர் குடும்பத்தோடு சினிமாவிற்குப் போவார்.

பாகவதர் குடும்பத்தினர் சினிமாப் பார்க்க வருகிறார்கள் என்றால், உள்ளூர்வாசியான டூரிங் டாக்கீஸ் மானேஜர் கிருஷ்ணாராவ், முன்னமேயே ரிசர்வ் செய்து, டிக்கெட்டுக்களை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுவார். பாகவதரிடம் அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டவர் அவர்.

கொட்டகையில் தரை, பெஞ்சு, நாற்காலி என்கிற மூன்று வகுப்புகளுக்கு மேல், ‘குஷன் வைத்த நாற்காலி’ என்கிற ஸ்பெஷல் வகுப்பும் இருந்தது. பிரமுகர்களுக்கான விசேஷ வகுப்பு அது.

பாகவதர் குடும்பத்தில் யார் வந்தாலும், அந்த ஸ்பெஷல் வகுப்பில்தான் படம் பார்ப்பார்கள்.

முசிரி சுப்ரமணிய ஐயர் நடித்த “பக்த துக்காராம்”; மகாராஜபுரம் விசுவநாத ஐயரும், கே.பி. சுந்தராம்பாளும் நடித்த “நந்தனார்”; திருவாவடுதுரை டி. என். ராஜரத்தினம் பிள்ளை நடித்த “கவி காள மேகம்”, போன்ற படங்கள் வந்தால், ஹரியையும் அழைத்துக் கொண்டு இரண்டு மூன்று தடவைகள் கூட அந்தப் படங்களைப் பாகவதா பாாபபாா.

ஏனென்றால், அவைகள் எல்லாம் சிறந்த சங்கீதப் படங்களாக இருக்கும். “இப்படிப்பட்ட பிரபல சங்கீத வித்வான்கள் மேடையில் செய்யும் கச்சேரிகளை எல்லாம் சமயம் கிடைத்த போது, எங்கு நடந்தாலும், போய்க் கேட்க வேண்டும்; அப்போதுதான் ஞானம் வளரும்; மனதில் நமக்கும் புதிய புதிய கற்பனைகள் பிறக்கும்” என்று ஹரிக்கு உபதேசம் செய்வார்.

கிட்டப்பாவின் சங்கீதத்தில் பாகவதருக்கு அளவற்ற மோகம். கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் நடித்த ஸ்பெஷல் நாடகங்கள் மாதக் கணக்கில் ஒடும். பாகவதர் இயன்ற போதெல்லாம் திரும்பத் திரும்பப் போவார். கதைக்காகவும், கம்பெனியின் சீன் ஜோடனைக் காட்சிகளுக்காகவும் மட்டுமல்ல; கிட்டப்பா வேலன், வேடன், விருத்தனாகவோ; அல்லது வேறு எந்த வேடத்தில் வந்தாலும், அவருக்கு கிட்டப்பாவின் பாட்டுத்தான் முக்கியம். நேற்று பாடியது போல் இன்று பாடுகிற கல்யாணியோ, காம்போதியோ இருக்காது. புதிய புதிய கற்பனைகள்-அலாதியான பிர்க்கா சாரீரம். அந்த இசையை நன்கு ரசித்து அனுபவிக்கத் தெரிந்த கூட்டமாகையால்; கொட்டகையில் ஊசி விழுந்த ஒசை கூடக் கேட்கும். அவ்வளவு நிசப்தமாக இருந்து நாடகம் பார்ப்பார்கள். ஒலி பெருக்கி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில்; முன்னால் சோபாவிலிருக்கிற பிரமுகர் முதல்: முன்னுாறு அடி தூரத்தில் தரையில் உட்கார்ந்து கேட்கிற ரசிகன் வரை நன்றாகக் கேட்டு ரசிக்கும் வண்ணம் அமைந்த சாரீரம்-ஐந்தரைக் கட்டை சுருதியில் கிட்டப்பாவைப் போல் இப்படி மேல் பஞ்சமம் வரைப் போய் இனிமை.குறையாமல் யாரால் பாட முடியும்? என்று பாகவதர் பூரித்துப் போவார்.

பத்து வயதில் குருகுல வாசத்தை பூர்த்தி செய்து அரங்கேறிய பாகவதர், தமது பனிரெண்டாவது வயதிலேயே பிரமாதமாகப் பாடி; பெரிய பெரிய வித்வான்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டவர்.

வயதும்; அனுபவமும்; ஏற, ஏற அவரது இசை பட்டை தீட்டிய வைரம் போல் ஒளி வீசிப் பிரகாசித்தது.

ஒரு சமயம் பிரபலமான கிராமபோன் கம்பெனியொன்று பாகவதருடைய பாட்டைப் பதிவு செய்ய வந்து கேட்ட போது, மறுக்காமல் கொடுத்தார். ‘தாரிநி தெலிசு கொண்டிநி’ என்னும் சுத்த சாவேரி ராகக் கீர்த்தனை இரு பாகங்களில் வெளி வந்த போது, பாகவதருக்கு ‘ராயல்டி’யை அள்ளி கொடுத்தது. அதன் பிறகு பல கம்பெனிகள், அவரது இசையைத் தங்கள் தட்டுகளில் பதிவு செய்து கொள்ளப் போட்டி போட்டன.

ஆனால், சுமார் பத்துப் பாட்டுக்கள் வெளி வருவதற்குள், ஒரு கம்பெனியோடு ஏற்பட்ட தகராறு காரணமாக, “இனி நீங்கள் லட்ச ரூபாய் கொடுத்தாலும், என் பாட்டு உங்களுக்கு இல்லை” என்று சொல்லி வந்து விட்டார். காரணம் அப்படிப் பிரமாதமானது ஒன்றுமில்லை.

பாகவதர் திவ்யமான சாரீர சம்பத்துப் பெற்றவர். கணீரென்று உச்ச ஸ்தாயி வரையில் சஞ்சரிக்கக் கூடிய வசதியான தொண்டை. வாய்த்துக் கொண்டால், மேல் பஞ்சமத்துக்குக் கூட அநாயாசமாகப் போய் நின்று விடுவார். ஜிலுஜிலுப்புக் குறையாது. துளி பிசிர் இருக்காது.

அன்று கல்யாணியில் ‘நிதி சாலஸுகமா’ என்னும் கிருதி பதிவாக இருந்தது. பாகவதர் குறிப்பிட்ட நேரத்துக்குப் பக்க வாத்தியங்களுடன் வந்து விட்டார். முதல் பாகத்தில் விஸ்தாரமாக ராகம் பாடிப் பல்லவியை முடித்தார். இரண்டாவது பாகத்தில் அநுபல்லவியும், சரணத்தில் நிரவல் ஸ்வரமும் பாடினார்.

ஆனால், ஏனோ தெரியவில்லை, இரண்டாவது பகுதி ஒலிப்பதிவாளருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. - ‘மமத பந்தனயுத; நரஸ்துதி சுகமா,’ என்னும் அடியை மேலே நிரவல் செய்யும் போது, பாகவதர் தம்மை மறந்து பாடினார். அவரது உச்சஸ்தாயிக் குரலைக் கேட்டு ஒலிப்பதிவாளர் மகிழ்ந்தார். ஆனால் கால வரம்புகளுக்காக யந்திரத்தை நிறுத்தி விட்டு; மீண்டும் பாடச் சொன்னார். பாகவதரும் பாடினார்,

ஆனால் எத்தனை தரம் பாடினாலும், தடவைக்குத் தடவை பிரமாதமாகப் பாடினார். பாகவதரிடம் கற்பனைக்கு என்ன பஞ்சம்? ஆனால் அதைத்தான் கம்பெனிக்காரர் விரும்பவில்லை. பாட்டுப் பதிவுக்குரிய கால அளவில் ஏற்றத் தாழ்வு இருந்து கொண்டே இருந்தது.

“இன்னும் ஒரு தடவை சரியாகப் பாடுங்கள் மகராஜ்; எடுத்து விடுகிறேன்” என்றார்.

அவ்வளவுதான் — அதற்கு மேல் ஒலிப்பதிவாளர் தவறுதலாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பாகவதருக்குக் கோபம் பிரமாதமாக வந்து விட்டது.

“அப்பொழுது இவ்வளவு நேரமா நான் சரியாகப் பாடவில்லை என்று உன் அபிப்பிராயமா? அதனால்தான் எடுக்கவில்லையா? நீ எடுக்கவே வேண்டாம். இந்தா உன் பணமும் ஆச்சு, நீயும் ஆச்சு. இனி மேல் நீயும் என்னிடம் வராதே, நானும் வரவில்லை” என்று கூறி, அங்கவஸ்திரத்தை உதறித் தோள் மேலே போட்டுக் கொண்டு வந்து விட்டார். அதன் பிறகு—

தவறாக ஏதாவது நடந்திருந்தால் மன்னிக்கும்படி தங்கள் ஊழியரின் சார்பில், அந்த ஆங்கிலக் கம்பெனியே பாகவதருக்குப் பல கடிதம் எழுதியது. பாகவதர் மசியவே இல்லை. ஆனால் அந்த ஒரு பக்கத்தை அவருக்காக அந்தக் கம்பெனி நெடுநாள் வரை அப்படியே அழிக்காமல் வைத்திருந்தது.

பல மாதங்களுக்குப் பிறகு, பாகவதருக்கு மீண்டும் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுக் கம்பெனி அழைப்பு விடுத்தது. அவர்களுடைய பெருந்தன்மையைக் கண்டு, பாகவதரும் மனம் மாறினார்; இசைத்தட்டு முழுமை பெற்றது. அப்படி வெளி வந்த இசைத்தட்டு சங்கீத உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கி விட்டது.

எல்லோர் வாயிலும் ‘நிதி சால ஸுகமா’ முழங்கிற்று: அந்த இசைத்தட்டு, கம்பெனிக்கும், பாகவதருக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்தது.

இப்படிச் சம்பாதிக்கிற ராயல்டி பணத்தை எல்லாம் பாகவதர் ஒரு நல்ல காரியத்துக்காக அர்ப்பித்தார். கிராமபோன் கம்பெனியிலிருந்து கிடைக்கிற அந்தப் பணத்தை அவர் குடும்பச் செலவுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அத்துடன் தம் கையிலிருந்து மேலும் பணம் போட்டு, ஊருக்கு மத்தியில் நல்ல இடத்தில் பஜனை மடம் ஒன்று கட்டினார். இந்தச் செய்தியை அறிந்தவுடனே, பாகவதருடைய உற்ற நண்பரும், சிறந்த சங்கீத ரசிகருமான, மதுரை மகாராஜா ஹோட்டல் பத்மநாப ஐயர், பஜனை மடத்துக்காக மிகவும் பெரிய அழகான தஞ்சாவூர் ராமர் பட்டாபிஷேகப் படமொன்றையும், படம் வைக்க வேண்டிய மண்டபச் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணத்தையும் அனுப்பி வைத்தார்.

இப்படிச் சிறப்பு வாய்ந்த பஜனை மடத்தில் ஒவ்வொரு வருஷமும் ஸ்ரீராம நவமி உற்சவத்தைப் பாகவதர் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார். கிராமத்திலும், வெளியூரிலும் உள்ள பல பிரபுக்கள் நிறையப் பொருளுதவி செய்தனர். பஜனை மடத்துக்கு வெளியே பிரம்மாண்டமான பந்தல் போட்டுப் பத்து நாட்களும் பெரிய பெரிய வித்துவான்களை வரவழைத்து நல்ல கச்சேரிகளை நடத்தினார். தினம் ஏழை களுக்கு அன்னதானமும், விடயாற்றி உற்சவத்தன்று கிராமத்து ஜனங்களுக்குப் பந்தலில் பெரிய சமாராதனையும் நடைபெறுவது வழக்கம்.

இதற்கு ஒவ்வொரு வருஷமும், பாகவதர் முன்னிலையில் உற்சவக் கமிட்டி கூடித் தலைவர்களையும், நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர்களையும் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வருஷமும் உற்சவத்துக்கான கமிட்டிக் கூட்டம், அன்று மாலை நடைபெற இருப்பதாகக் காரியதரிசி பாபு, பாகவதரிடம் வந்து கூறினார். அதனால்தான், அவர் ஹரியையும் அழைத்துக் கொண்டு திருவிடைமருதூருக்குப் போக இருந்த திட்டத்தை மாற்ற நேர்ந்தது.

பாகவதர் உள்ளூரில் இருக்கிற நாட்கள் மிகவும் குறைவு. அதனாலேயே, அவர் ஊரிலிருப்பதை அறிந்ததும், வழக்கம் போல், கமிட்டிக் கூட்டத்துக்கு பாபு ஏற்பாடு செய்து விட்டார். பாகவதர் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த விரும்பவில்லை. கமிட்டி விவகாரங்கள் எல்லாம் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் முதல் வண்டிக்கே, பாகவதரும், ஹரியும் திருவிடைமருதூருக்குப் புறப்பட்டனர்.