பெரியாரும் சமதர்மமும்/12
12. சுயமரியாதை சமதர்ம
வேலைத் திட்டம்
தென்னம்பிள்ளை—இளங்கன்று; நட்ட குழியைச் சுற்றி வேலி போடுகிறோம். ஏன்? இளம் பிள்ளையை, ஆடு மாடுகள் கடித்து விடக் கூடாது என்பதற்காக. விளையாட்டுப் பிள்ளைகள் ஒடித்து, பிய்த்து விடக் கூடாது என்பதற்காக.
தென்னம் பிள்ளை வளர்ந்து மரமாகி விட்ட பின்? அதில் ஆடு, மாடுகளைக் கட்டி வைக்கிறோம்.
இளம் நிலையில் இருந்த சமதர்ம ஆட்சியில், ‘சுகஜீவி’களாக இருந்தவர்களுக்கு, வாக்குரிமை மறுக்கப்பட்டது, வெறும் பாதுகாப்பு ஏற்பாடே; இன்றியமையாத பாதுகாப்பு ஏற்பாடே.
அவ்வழியைப் பின்பற்றியதால்தான், சோவியத் ஆட்சி தழைக்க முடிந்தது. எல்லோரும் வேலை செய்து வாழும் நிலை வந்ததும், ‘பாட்டாளிகள் சர்வாதிகாரம்’ என்னும் சொற்றொடர் கை விடப் பட்டது; எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
1932 டிசம்பரில், ஆங்கிலேயர்கள் ஆண்ட இந்தியப் பகுதியையும், இந்திய மன்னர் ஆண்ட பகுதியையும் விடுவித்து, உடலுழைப்போர் ஆட்சியில் ஒப்படைக்க வேண்டுமென்று சுயமரியாதை சமதர்மத் திட்டம் கூறிற்று.
அப்படி உழைப்போர் ஆட்சி அமையும் போது, அது என்னென்ன செய்ய வேண்டும்? அவற்றையும், தன்மான இயக்கத் தோழர்கள் திட்டவட்டமாக அறிவித்தார்கள்.
உழைப்போர் ஆட்சி, சமதர்ம வாழ்க்கை முறையை உருவாக்கும் கருவி, சமதர்ம முறைக்கு அடிப்படை, நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் நாட்டின் பொது உடைமையாதல்.
உற்பத்திச் சாதனங்கள் எவை? தொழிற்சாலைகள். இன்னும் என்ன? விளைநிலங்களும், காடுகளும். இயற்கைச் செல்வங்களும், தொழிற்சாலைகளும் மட்டுமா இக்காலச் செல்வங்கள்? இரயில்வேக்களும், செல்வங்களே. கப்பல், படகு முதலிய நீர்வழிப் போக்குவரத்துச் சாதனங்களும், செல்வத்தின் உருவங்களே. வங்கிகளில் சேர்ந்துள்ள பணமும், செல்வமாகும். இவை அனைத்தும், நாட்டு மக்களின் பொது உடைமையாக வேண்டும்.
தொழில்களை நாட்டுடைமையாக்கி விட்டு, மற்றவற்றைத் தனியுடைமையாக்கி வைத்திருந்தால், சமதர்மம் நடைபெறாது. தொழிற்சாலைப் பொருள்களை விரைந்து எடுத்துக் கொண்டு போக முடியாதபடி, போக்குவரத்துகளின் உடைமையாளர்கள் கதவடைப்பு செய்யக் கூடும். வங்கிகள் தனியார் கைகளில், தொடர்ந்து இருக்குமானால், நாட்டுடைமைத் தொழில்களை நெருக்கடியில் சிக்க வைக்க, அவ்வங்கிகளைப் பயன்படுத்தலாம். ஆகவே, சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியின் வேலைத் திட்டம்:
‘எல்லாத் தொழிற்சாலைகளையும், இரயில்வேக்களையும், பாங்கிகளையும், படகு—நீர் வழிப் போக்குவரத்து சாதனங்களையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது’ என்று கூறுகிறது.
அப்போது விமானப் போக்குவரத்து வளராததால், அச்சாதனத்தை நாட்டுடைமையாக்குவது பற்றி குறிக்கவில்லை என்று கொள்ளலாம்.
அடுத்து நிலம் பற்றி மேற்படி வேலைத் திட்டம் கூறுவதைக் கேளுங்கள்.
‘எந்த விதப் பிரதிப் பிரயோசனமும் கொடுபடாமல், நாட்டில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும், மற்ற தாவர சொத்துக்களையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது.’ இது நான்காவது திட்டமாகும்.
1917இல் அக்டோபர்ப் புரட்சியின் போது, ‘உழைப்பவர்களுக்கே நிலம்’ என்பதே இரஷ்யாவில் முழக்கமாயிருந்தது. புரட்சி வெற்றி பெற்று நிலைத்த பிறகு, அடுத்த கட்டத்திற்கு சோவியத் நாடு சென்றது. அது என்ன கட்டம்?
ஒவ்வோர் உழவரும், துண்டு நிலம் வைத்துக் கொண்டு, பாடுபடுவதை விட்டு, ஊரில் உள்ள நிலமனைத்தையும் இணைத்துக் கூட்டுப் பண்ணையாக்கிப் பயிரிடுதல். அதற்குப் பெயர் கூட்டுப் பண்ணை முறை. அதிலிருந்து, எவரும் பிற்காலத்தில் துண்டு நிலத்தைப் பிரித்துக் கொண்டு போக முடியாது.
1930 இன் தொடக்கத்திலேயே, சோவியத் நாட்டில் கூட்டுப் பண்ணைகளை அமைப்பதில் முனைப்பு காட்டப்பட்டது. அதைப் பார்த்து விட்டு வந்த பெரியாரின் திட்டம், கடைசி ‘மாடலை’ பின்பற்றச் சொல்லிற்று போலும்.
திட்டத்தின் அய்ந்தாவது படி என்ன?
‘குடியானவர்களும், தொழிலாளிகளும் லேவாதேவிக்காரர்களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் செல்லுபடியற்றதாக்கி விடுவது.’ நிலங்களை நாட்டுடைமையாக்கி விட்டால், கடன்களைத் தள்ளி விடுவதும் அதில் சேர்வதே முறை.
அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவது. 1932லேயே சுயமரியாதை சமதர்ம இயக்கம் காட்டிய குறிக்கோளை, 1976இல்தான் நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, நடைமுறைப் படுத்த முயற்சி நடந்தது. எவ்வளவு வெற்றி பெற்றதோ?
நாட்டுடைமையான தொழிற்சாலைகள், தொழிலாளர்களைப் பழையபடி கசக்கிப் பிழிவது முறையாகாது. அவை தொழிலாளர், பொதுமக்கள், நுகர்வோர் ஆகியோர் நலன்களைப் பேண வேண்டும். அதைச் செய்யும் வழியை ஈரோட்டுத் திட்டம் காட்டுகிறது.
‘தொழில் செய்பவர்கள் ஏழு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக் கூடாது.
அவர்கள் வாழ்க்கை நிலை உயர்த்தப்படுவது.
தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி, அவர்களது சுக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளையும், இலவச நூல் நிலையங்கள் முதலிய வசதிகளையும் ஏற்படுத்துவது.’
இவை தொழிலாளர் நலனைப் பேணுவது ஆகும்.
பொதுமக்கள் நலனை எப்படிப் பேணுவது?
தொழில் இல்லாமல் இருக்கின்றவர்களை, அரசு பராமரிக்கும்படி செய்வதால்.இவற்றையெல்லாம், சுயமரியாதை சமதர்மக் கட்சியின் திட்டம், பட்டியல் போட்டுக் காட்டியது.
தனியார் சொத்துக்களை பொது உடைமையாக்கச் சொன்ன சமதர்மத் திட்டம், கோயில்கள், மடங்கள் போன்றவைகள் மடக்கி வைத்திருக்கும் சொத்துக்களை மறந்து விடவில்லை. அவற்றை விட்டு வைத்துக் கொண்டு, தனியார் சொத்துக்களில் மட்டும் கை வைப்பது, வெடிகுண்டின் மேல் அழுத்தமாக உட்காருவதற்கு ஒப்பாகும்.
சோவியத் நாடு தனியார் நிலங்களை, செல்வங்களை நாட்டுடமையாக்கியது போன்றே, கோயில், மடம் ஆகிய சமய அமைப்புகளின் நிலங்களையும், செல்வங்களையும் பொது உடைமையாக்கி விட்டது. இந்த எடுத்துக்காட்டை, மனதிற் கொண்டு, சுயமரியாதைத் தொண்டர்கள் முடிவு செய்தார்கள்.
கோயில், பிரார்த்தனை இடங்கள் முதலிய மத நிறுவனங்களின் சொத்துக்கள், வரும்படிகள் ஆகியவற்றை, பொதுமக்களின் தொழில், கல்வி, உடல் நலம், வீட்டு வசதி, அனாதைப் பிள்ளைகள் விடுதி ஆகியவற்றிற்குப் பயன்படுத்த வேண்டும். இது அவர்கள் முடிவு. அறிவுடையோர் முடிவு. செயல்பட, முற்போக்கு அறிவுடையோர் நிறைந்த சமுதாயம் தேவை.