பெரியாரும் சமதர்மமும்/13
13. மீரத் சதி வழக்கு :
பெரியாரின் கண்டனம்
தொழில் செய்பவர்கள் ஏழு மணிக்கு மேல் வேலை செய்யக் கூடாது என்று, 1952ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில், பெரியார் முன்னின்று தீட்டிய சுயமரியாதை சமதர்மத் திட்டம் கூறிற்று. அது அன்றைய தொழிலதிபர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. எனினும், தொழிலாளர் வர்க்கம் ஓரளவு அமைப்புகளின் கீழ் இயங்குவதால், இத்திட்டம் எளிதில் நிறைவேறியது. டாக்டர் அம்பேத்கார் இந்திய அரசில் தொழில் அமைச்சரான போது, எட்டு மணி நேர வேலை நாள் சட்டப்படி நடைமுறைக்கு வந்ததை, இங்கே குறிப்பிட வேண்டும்.
ஈரோட்டு சுயமரியாதை சமதர்மத் திட்டம் வெளியான சில நாட்களில், இந்தியாவை உலுக்கிய முடிவு ஒன்று வெளியானது. அது அரசியல் கட்சிகளின் முடிவா? இல்லை. ஆட்சியின் முடிவா? இல்லை. பின் என்ன? வழக்கு மன்றத்தின் முடிவு ஆகும். என்ன வழக்கின் முடிவு?
மீரத் சதி வழக்கின் முடிவு. இவ்வழக்கு எப்போது தொடரப் பட்டது? 1929ஆம் ஆண்டு தொடரப்பட்டது. குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் எத்தனை பேர்? முப்பத்திரண்டு பேர். அவர்களில் இருவர், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இந்தியர்கள்.
அவர்களில் சிலர் எஸ். ஏ. டாங்கே, அதிகாரி, எம்.ஜி. தேசாய் ஆவர். அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசு, பொதுவுடைமைக் கட்சியை, முளையிலேயே கிள்ளி எறிந்து விட முனைந்தது.
1925இல் தோழர்கள் சிங்காரவேலர், டாங்கே போன்றவர்கள் இந்திய பொது உடைமைக் கட்சியைத் தொடங்கினார்கள். கான்பூர் போன்ற தொழில் நகரங்களில், பாட்டாளி மக்களை ஒன்று திரட்டினார்கள்; உரிமைக் குரல் எழுப்பச் செய்தார்கள். ஆங்கில ஆட்சி மிரண்டது. மிரண்டவர் கண்களுக்கு இருண்டதெல்லாம் ‘பேய்’.20-3-1929 அன்று இந்திய ஆங்கில ஆட்சி, மேற்கூறிய முப்பத்திரண்டு செயல் வீரர்களைக் கைது செய்தது. மார்க்சிய—லெனினியக் கொள்கைக்காரர்களாகிய அவர்கள், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த பிரிட்டானிய மன்னர் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டார்கள்.
வழக்கு விரைவில் முடியவில்லை. நாற்பத்தைந்து திங்கள் போல் நீண்டது. அவ்வளவு காலமும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் வாட நேர்ந்தது.
இறுதியில் முடிவு சொல்லப்பட்டது. அய்வர் விடுதலை செய்யப்பட்டார்கள். மற்ற இருபத்தேழு பேர்களும், தண்டிக்கப்பட்டார்கள். சிலருக்கு மூன்றாண்டு சிறை. இருபது ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர்களும் உண்டு.
இம்முடிவைக் கேட்ட பெரியார், தமது ‘குடிஅரசு’ வார இதழில் உணர்வூட்டும் தலையங்கம் தீட்டினார். 22-1-1933 அன்றைய குடி அரசு கூறுவதைப் படிப்போம்.
‘இந்த இருபத்தேழு பேர் மாத்திரமல்ல; இன்னும் ஒரு இருநூற்று எழுபது பேர்களைச் சேர்த்துத் தூக்கில் போட்டிருந்தாலும் சரி, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை’.
‘ஏனென்றால், இந்தத் தோழர்கள் சிறையில் இருப்பதாலோ, தூக்கிலிடப்படுவதாலோ அவர்களுடைய கொள்கையாகிய பொது உடைமைக் கொள்கை என்பது, அதாவது முதலாளிகளின் ஆட்சியைச் சிதைத்து நசுக்கி, சரீரத்தினால் பாடுபடுகின்ற மக்களுடைய ஆட்சிக்கு, உலக அரசாங்கங்களையெல்லாம் திருத்தி அமைக்க வேண்டும் என்கிற கொள்கையோ, உணர்ச்சியோ அருகிப் போய் விடும் பயம் நமக்கில்லை’ என்று பறை சாற்றிற்று.
அந்த நம்பிக்கைக்குக் காரணம் என்ன? குடிஅரசின் சொற்களாலேயே அறிவோமாக. இதோ அச்சொற்கள்:
‘இத்தொண்டர்கள் சிறையில் வதியும் ஒவ்வொரு விநாடியும், அவர்களது கொள்கையானது 1, 10, 100, 1000 கணக்கான தொண்டர்களைத் தட்டி எழுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்.
பொது உடைமைக் கொள்கை என்பதை 27 பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரைச் ‘சமணர்களைக் கழுவேற்றியது’ போல, நடுத் தெருவில் நிறுத்திக் கழுவேற்றிக் கொன்றோ, அடக்கி விடலாம் என்று நினைப்பது, கொழுந்து விட்டெரியும் பெரும் நெருப்பை, நெய்யை விட்டு அணைத்து விடலாம் என்று எண்ணுவது போல்தான் முடியும்.
‘ஆகவே, மீரத்து முடிவை நாம் மேளதாளத்தோடு வரவேற்பதுடன், தண்டனை அடைந்த தோழர்களை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம்; முக்காலும் பாராட்டுகிறோம். நமக்கும், நம் போன்ற வாலிபர்களுக்கும், இப்பெரும் பேறு கிடைக்கப் பெறும் நிலையை அடைய முடியவில்லையே என்று வருந்தி, மற்றுமொரு முறை பாராட்டுகிறோம்.’
எழுச்சியூட்டும் இத்தலையங்கம் மக்கள் மனதைக் கவர்ந்தது. இதைப் பற்றி எங்கும் பேசப்பட்டது.
ஈரோட்டு முடிவையொட்டி, பெரியாரும், அவருடைய இயக்கத் தோழர்களும் பொது உடைமைக் கோட்பாட்டினைப் பரப்புவதில், முழு மூச்சோடு ஈடுபட்டார்கள். தன்மான இயக்க இதழ்களில் சமதர்ம மணம் வீசிற்று. பேச்சுக்களில் புரட்சிக் கனல் ஒளி விட்டது.
ஊர் தோறும், சுயமரியாதை சமதர்மச் சங்கத்தினை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கால கட்டத்தில், தோழர் ஜீவானந்தம், தன்மான இயக்கத்தில் பங்கு கொண்டார். சாதி ஒழிப்பு, ஏழை பணக்காரத் தன்மை ஒழிப்புக் கொள்கைகளைப் பரப்ப உதவினார்.
இந்தியாவைப் பொறுத்த மட்டில், வறுமைப் படுகுழியில் தள்ளப்பட்டோரும், ஊர்களுக்கு வெளியே ஒதுக்கப்பட்டோரும், சமுதாய இழிவுக்கு ஆளாக்கப்பட்டோரும், அநேகமாக ஒன்றாகவே இருப்பதால், சுயமரியாதை சமதர்மத் திட்டம் சூடு பிடித்தது. விரைந்து பரவிற்று; நூற்றைம்பது கிளைகள் போல் தோன்றின.
பெரியாரின் சமதர்மத் தொண்டை அக்கால அறிஞர் ஒருவர் மதிப்பிட்டு வெளிப்படுத்தினார். அவர் யார்? அவர் தோழர் மா. சிங்காரவேலர். அவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். வாழ்நாள் முழுதும், பொதுவுடைமை வாதியாகவே வாழ்ந்த வழக்கறிஞர். ஈரோட்டில் பெரியாரோடு இருந்து, சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை உருவாக்கியவர்.தோழர் சிங்காரவேலர் 30-4-1933 அன்று குடிஅரசில் ‘சமதர்ம விஜயம்’ என்னும் தலைப்பில் ஓர் தலையங்கம் தீட்டினார். அதில்,
“நமது ‘குடிஅரசு’ யாதொரு சுயநலமும் கருதாது, தேச நலத்திற்கே உழைத்து வந்ததின் முக்கிய பயன்களில், நமது நாடு முழுமையும் சமதர்மப் பேரொலி முழங்குவதே, பெரும் பயனாகும்” என்று பாராட்டினார்.
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான அவர், மேலும் கூறுவதைக் கேட்போம்.
“ஒரு காலத்தில் உலகம் முழுமையுமே பரவப் போகிற சமதர்ம இயக்கத்தைத் தமிழ்நாட்டில், இவ்வளவு சிறிய காலத்தில் நாடு முழுமையும் விளங்கச் செய்து வருவது ‘குடிஅரசி’ன் மகத்துவமேயாகும். நமது காலத்தில், இதற்கு இணை இல்லையென்றே சொல்லலாம்.”
“தேசியப் பத்திரிகைகளும், அயல்நாட்டார் பத்திரிகைகளும் ஓரு கூட்டத்தார் நலத்தைக் கோரி, அவர்களை ஆதரித்து வந்திருக்க, ‘குடிஅரசு’ ஒன்றே, ஏழைத் தொழிலாளர் பாலும், விவசாயிகள் பாலும், திக்கற்றவர் பாலும், தாழ்த்தப்பட்டவர்கள் பாலும், பரிந்து பேச வந்திருக்கின்றது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால், பாமர மக்களை ஆதரித்துப் பேச தமிழ்நாட்டில் ‘குடிஅரசு’ ஒன்றே உள்ளது”
“எங்கும் பல்லாயிரம் மக்களது அறிவை விசாலப்படுத்தியும், பகுத்தறிவைத் தூண்டியும், மதப் பற்றையும், மத வைராக்கியத்தையும், குறையச் செய்து வந்திருக்கிறது. உயர்ந்த சீர்திருத்தங்களுக்கெல்லாம், உதவியாக நின்று வருவது நம் ‘குடிஅர’சே.”
“மதங்களின் மேல் வைத்துள்ள பற்று, ‘குடிஅரசி’ன் கட்டுரைகளால், குறைவு பெற்று வருவதற்கு சந்தேகமில்லை.”
“இன்று நமது இயக்கம், தமிழ்நாட்டிற்கு ஒரு பெரும் சண்ட மாருதமெனக் கருதும்படி ஆயிற்று” என்று சிங்காரவேலர் படம் பிடித்துக் காட்டினார். இது உண்மை; வெறும் புகழ்ச்சியல்ல.