பெரியாரும் சமதர்மமும்/14

14. குடிஅரசு ஏடு
அடக்குமுறைக்கு ஆளானது

தமிழகத்தில் சுயமரியாதை சமதர்மக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்ட கால கட்டத்தில், இந்திய அரசு மட்டத்தில், சமதர்மக் கொள்கை பரவுவதை அடக்கி விட, முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசின் முடிவை, மாகாண ஆட்சிகள் நிறைவேற்றக் கடமைப் பட்டிருந்தன.

சென்னை மாகாண அரசின் கவனம் பெரியார் பேரிலும், அவர் நடத்தி வந்த குடிஅரசின் மேலும் பாய்ந்தது. மீரத் சதி வழக்கின் முடிவைப் பற்றி உணர்ச்சி மிக்க தலையங்கம் தீட்டிய ‘குடிஅரசு’, தோழர் சிங்காரவேலரால் பாராட்டப்பட்ட குடிஅரசு, அடக்கு முறைக்கு ஆளானது.

மாகாண ஆட்சியின் ஆணைப்படி, காவல் துறை அலுவலர்கள் ‘குடிஅரசு’ அலுவலகத்தைத் திடீரெனச் சோதனை செய்தார்கள். ஆட்சேபகரமான கட்டுரைகள் இருந்ததாகக் காட்டி, குடிஅரசிற்குக் காப்புப் பணம் கேட்டார்கள். பெரியாரிடம் பணம் இருந்தாலும், காப்புப் பணம் கட்ட விரும்பவில்லை. எனவே, ‘குடிஅரசை’ நிறுத்தி விட்டார். அதற்குப் பதில் ‘புரட்சி’ என்ற பெயரில், ஓர் வார இதழைத் தொடங்கினார். என்னே பெரியாரின் துணிச்சல்!

புதிய வார இதழுக்குப் ‘புரட்சி’ என்று பெயர் சூட்டியதில் மட்டுமா அவருக்கே உரிய துணிச்சலைக் காட்டினார்? அதன் உள்ளடக்கமும், துணிச்சலின் வெளிப்பாடாக விளக்கியது.

26-9-1933இல் ‘புரட்சி’யின் முதல் மலர் வெளியாயிற்று அதன் தலையங்கத்தில், பெரியார் எழுத்தைக் காண்போம். அது இதோ:

“குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் ‘புரட்சி’ தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின், அதாவது, பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு இடமில்லையானால், கண்டிப்பாகப் புரட்சி தோன்றியேதான் ஆக வேண்டும். அந்த அய்தீகப்படியே, புரட்சி தோன்றியிருப்பதால், புரட்சியைப் புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை.

“நமது முதலாளித்துவ ஆட்சியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியிருப்பதாக, குடி அரசை அதன் முதுகுப் புறத்தில் குத்தி விட்டது. இந்தக் குத்தானது, ‘பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான், முதலாளி வர்க்கத்தை அழிக்கமுடியும்’ என்ற ஞான போதத்தை உறுதிப் படுத்தி விட்டது.”

புரட்சியின் முதல் தலையங்கம் தொடர்ந்து கூறுவதாவது:

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி.
மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி.
மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி.
மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை.
மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்.
மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.
மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கிற முடிவின் பேரிலேயே, புரட்சி தோன்றியிருக்கிறது.

அய்ம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தலையங்கத்தைப் படித்தேன். உலக வரலாற்றை அளவு கோலாகக் கொண்டு, அளந்து பார்த்தேன், அத்தனையும் சரியாக இருக்கக் கண்டேன். இப்போது படிக்கிற நீங்கள், இதைப் பல முறை சிந்தியுங்கள். ஒவ்வொன்றும், முழு உண்மை என்பது புலனாகும்.

கருத்து மண்டலத்தில் உலாவிய பொது உடைமைக் கொள்கைக்கு, முதன் முதல் செயல் உருவம் தந்த மாமனிதர், தோழர் லெனின் ஆவார். சமதர்ம முறையின் வளர்ச்சி பற்றி நினைக்கிற எவரும், அதற்கு வித்தூன்றிய லெனினைப் பற்றி நினைப்பது இயற்கை.

எனவே, ‘புரட்சி’, புதிய உலகம் தோற்றுவித்த லெனினைப் பற்றிய கட்டுரையைத் தாங்கி வந்தது. சோவியத் இரஷ்யாவில் நீதி முறை என்ற தலைப்பில் பல தொடர் கட்டுரைகளை வெளியிட்டது. அந்நாட்டு நீதி முறை பற்றி, பொதுமக்களுக்கு எடுத்துரைத்த முதல் தமிழ் இதழ் ‘புரட்சி’யே ஆகும்.

சோவியத் நாட்டின் முதல் அய்ந்தாண்டுத் திட்டத்தை, மொழி பெயர்த்துத் தமிழில் முதன் முதல் வெளியிட்டது, பெரியார் ராமசாமியின் ‘புரட்சி’ இதழே ஆகும்.

‘புரட்சி’, ரஷ்யாவின் 16 ஆண்டு பலன் என்னும் தலைப்பில், கண் திறக்கும் தகவல்களை வெளியிட்டது. அவை வருமாறு:

1. பள்ளிப் பிள்ளைகளுக்குச் சோவியத் சர்க்காரால் சாப்பாடு, உடை, ஜோடு ஆகியவை இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.

2. 5 ஆண்டு திட்ட காலத்தில், 5 கோடியே 80 இலட்சம் மக்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

3. மூன்று ஆண்டுகளுக்கு முன், நாடெங்கும் கட்டாயக் கல்வி, தொடங்கப் பட்டிருக்கிறது.

4. 1913இல் இரஷ்யாவில் 1,000 பத்திரிகைகளுக்குக் குறைவாகவே இருந்தன. 1932இல் 50,00க்கு அதிகம்,

இப்படிச் சமதர்ம ஆட்சியின் அருமையான சாதனைகளையும், சிறப்புகளையும் பரப்புவதில் ‘புரட்சி’ முனைப்பைக் காட்டியது.

‘பொது உடைமைத் தத்துவங்கள்’ என்ற நூலை, பெரியாரின் ‘குடிஅரசு’ புத்தகாலயம் 1933இல் வெளியிட்டது. அதன் விலை எவ்வளவு? மூன்றணா; இப்போதையக் கணக்குப்படி பதினெட்டு காசுகள், முற்போக்குக் கருத்துகளைக் கொண்ட நூல்கள், தமிழ்ப் பொது மக்களுக்கு, மலிவாகக் கிடைக்கச் செய்ததிலும், பெரியாரின் தொண்டு இணையற்றதாகும்.

பெரியவர்களின் படங்களையும், உருவங்களையும் வழிபாட்டுப் பொருள்கள் ஆக்குவது, மூடநம்பிக்கையின் புதிய உருவம் ஆகும். ஆனால், அவற்றைப் புரட்சிக் கருத்துகளை நினைவூட்டும் பொருள்களாக மட்டும் பயன் படுத்துவதில் தவறில்லை.

இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே கடவுள் வாழ்த்து, அரச வாழ்த்து, தலைவர் வணக்கம் முதலிய வாழ்த்துக்களை விட்டு விடும்படி முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி பூசைக்குரியதாக அல்லாமல், சிந்தனைக்குத் தூண்டுகோலாக இருக்கும்படி, லெனின் படத்தைத் திறந்து வைக்கப் பெரியார் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சி 26-11-1933 அன்று, ஈரோட்டில் நடந்தது. விழா நடந்த இடத்திற்கு ‘ஸ்டாலின் மண்டபம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியது யார்? தமிழ்நாடு நாளிதழின் ஆசிரியர், டாக்டர் பி. வரதராஜுலு ஆவார். அதே நிகழ்ச்சியில், பெரியாரின் துணைவியார் மறைந்த நாகம்மையாரின் படமும் திறந்து வைக்கப்பட்டது. இரு படங்களையும் திறந்து வைத்தவர் ஒருவரே. அவர் எவர்?

தமிழ்த் தென்றல், ‘நவசக்தி’ ஆசிரியர், தொழிற்சங்கத் தலைவர், பின்னாளில்‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலை எழுதியவராகிய திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆவார்.

இதே கல்யாணசுந்தரனார்தான், காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில், ஈ.வெ ராமசாமி கொண்டு வந்த ‘வகுப்புரிமை’த் தீர்மானத்தை அவையோர் முன், வைக்கவும் விடாமல் நெருக்கடியை உண்டாக்கி, பெரியாரைக் காங்கிரசை விட்டே விலகும்படிச் செய்தவர்! வெவ்வேறு திட்டங்கள் பற்றி, இருவருக்குமிடையே கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டது உண்டு. அவ்வமயங்களில், ஒருவருக்கு ஒருவர் தாட்சணியப்பட்டுக் கொள்கைகளை விட்டுக் கொடுத்தார்களென்று எவரும் குற்றஞ் சாட்ட இயலாது. சில வேளை, மாறுபட்ட கொள்கைகளின் நெருப்பாகக் காட்சி அளித்த அவ்விருவரும், உயர்ந்த பண்பாட்டிற்கு இலக்கணமாக விளங்கினார்கள்.

பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்கள், எல்லாக் காலமும், எல்லாக் கொள்கைகளிலும் மற்ற பெரியவர்களோடு முழுக்க, முழுக்க ஒத்துப் போக இயலாது. அப்படிப்பட்ட நிலைக்குத் தங்களைத் தள்ளிக் கொள்பவர்கள், பொது நல வாதிகளாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு, தன்னலத்தைப் பேணிக் கொள்பவர்களாகவே இருக்க முடியும்.

ஒரு முறையோ, சிலமுறையோ கருத்து மோதல் ஏற்பட்டு விட்டால், அதையே காழ்ப்புணர்ச்சியாக்கிக் கொண்டு, மாற்றார் முகத்தில் விழிக்க மாட்டேனேன்று முரண்டுவது பண்பாடல்ல; பொது நலனுக்கு நல்லதல்ல.

எந்தெந்தப் பொதுநல நடவடிக்கைகளுக்கு, எந்தெந்தப் பெரியவரை ஈடுபடுத்த வேண்டுமோ, அவர்களைத் தனது விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி விட்டு, ஈடுபடுத்துபவரே சமுதாயக் கண்ணோட்டமும், பொதுநலத்தில் அக்கறையும் கொண்ட, பொது நல வாதியாவார். அதற்குத் தந்தை பெரியார் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினார். எனவே, சமதர்மக் கோட்பாட்டில், தன்னைப் போன்றே பற்றுடைய திரு.வி. கல்யாண சுந்தரனாரைக் கொண்டு, லெனினுடைய திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கச் செய்தார். நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/14&oldid=1690316" இலிருந்து மீள்விக்கப்பட்டது