பெரியாரும் சமதர்மமும்/15

15. சிவகங்கையில்
சுயமரியாதை மாநாடு

1933ஆம் ஆண்டில் நடந்த பத்துப் பன்னிரண்டு சுயமரியாதை மாநாடுகளில், ஈரோட்டு சுயமரியாதை சமதர்மத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2-12-33இல் சிவகங்கையில் பெரியாரோடு, சோவியத் நாடு சென்று வந்த எஸ். இராமநாதன் தலைமையில், இராமநாதபுரம் மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாடு நடந்தது. அம்மாநாட்டின் திறப்பு விழா உரையாற்றியவர் எவர்? குத்தூசி குருசாமியாரின் துணைவியார் தோழியர் குஞ்சிதம் அவர்களே.

2-12-33 இல் சிவகங்கையில், இராமநாதபுரம் மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கி வைத்து, திருமதி குஞ்சிதம் குருசாமி, தமது உரையில்,

‘நமது நாடு பொன் விளைந்த நாடு; தேனும், பாலும் பெருக்கெடுத்த நாடு; ஆனால், அன்னிய ஆட்சியால், வறுமையடைந்து விட்டது; நாம் ஆட்சி பெற்றதும், செழிப்புற்று விடும் என்று முழுப் பாரத்தையும், அன்னிய ஆட்சியின் தலையில் போட்டு விடுவது சிலருக்குச் சர்வ சாதாரணமாய்ப் போய் விட்டது.

‘உங்கள் வீட்டிலிருக்கும் 13 வயதுடைய விதவையை மறு மணஞ் செய்து கொடுக்க வேண்டாமென்று எந்த அன்னிய ஆட்சி கையைப் பிடித்துக் கொள்ளுகிறது?

‘உங்கள் வீட்டு ஆண்களைப் படிப்பதற்கும், விளையாடுவதற்கும் அனுப்புவது மாதிரி, உங்கள் வீட்டுப் பெண்களையும் அனுப்புவதை வேண்டாமென்று, எந்த அன்னிய ஆட்சி தடுக்கிறது?

‘எல்லா மக்களும், சாதி, பேதமின்றி ஒன்றாய் வாழ்வதையும், எந்த அன்னிய ஆட்சி தடுத்துக் கொண்டிருக்கிறது?’ என்று ஆணித்தரமாகக் கேட்டார்.

சாதி வெறி தணிவதற்குப் பதில், தேர்தல் தூண்டுதல்களால், அதிகமாவதையே, தன்னாட்சி பெற்ற இந்தியாவில் காண்கிறோம்.

விதவைத் திருமணம், இன்றும் அத்திப் பூத்தாற் போல்தான் நடக்கிறது.

பெண்களைப் படிக்க அனுப்புவதில், ஓரளவு முன்னேற்றங் காண்கிறோம்; எனினும், சமநிலை தொலைவில் இருக்கிறது. பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பெண் கல்விக்கு இடையூறாக வருகிறது.

அன்னிய ஆட்சி ஒழிந்த பிறகு, இந்தியாவில் வறியோர் எண்ணிக்கை நஞ்சு போல் ஏறக் காண்கிறோம். தொழில்கள் ஏராளமாகப் பெருகியும், நீர்த் தேக்கங்கள் பற்பல ஏற்பட்டும், ஒரு வேளைச் சோற்றுக்கே திண்டாடுவோர் எண்ணிக்கை பெருகக் காரணமென்ன?

பழைய சுரண்டல் முறை நீடித்தல்; அதிக வலுப்பெறுதல், ஓர் காரணம். அதை விட ஆழமாக வேரூன்றி விட்ட மற்றோர் காரணம், இந்தியாவின் தனித் தீங்காகும். அது என்ன?

கடவுள் வழிபாடு, பூசை என்றும், திருமணம், வளைகாப்பு, காது குத்தல் ஆகிய சடங்குகளின் பேராலும், உணவுப் பொருட்களை, நேரத்தை, முயற்சியைப் பாழாக்குதல் மற்றோர் காரணம். தன்னாட்சி இந்தியாவில், அதுவும் அண்மைக் காலத்தில், ஆளுநர் முதல் ஏவலர் வரை, அரச மரத்தடி பொம்மைக்கு முழுக்காட்டக் கூட, முன்னே நிற்கிறார்கள். இதற்கா பெரிய அதிகாரிகள்? எத்தனை பொருட் செலவு? குடம் குடமாகப் பாலைக் கற்சிலை மேல் கொட்டினால், ஆயிரக் கணக்கான சிலைகள் மேல் கொட்டிப் பாழாக்கினால்—நாள் தவறாது பாழாக்கினால்—பச்சைக் குழந்தைகளுக்குப் பால் எங்கிருந்து கிடைக்கும்?

நெய் விளக்குகளுக்காக எரிக்கப்படும் நெய்யிற்கு அளவேது? எண்ணெய்க்குக் கணக்கேது? மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருட்களை இந்த அளவு அழிக்கும் மதம் இந்து மதம் ஒன்றே! அழிக்கும் மக்கள் இந்துக்கள் மட்டுமே!

விவரம் தெரியாத குழந்தையிடம் வைரத்தைக் கொடுத்தது போல், பகுத்தறிவு பெறாத பார்ப்பனரல்லாத ஊழியர்கள் கைகளில், உயர்வு ஊதியம், மேலும் உயர்வு ஊதியம் என்று கொடுப்பது விழலுக்கு இரைத்த நீராகி வருகிறது. அவர்கள் வாழக் கற்றுக் கொள்ளவில்லை. வேலையில்லாத் திண்டாட்டமும், வறியோர் எண்ணிக்கையும், பெருகுவதைப் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. நிற்க.

சிவகங்கை மாநாட்டில், குஞ்சிதம் அம்மையார் பேசிய பேச்சின் மற்றோர் பகுதி இதோ:

‘ஏனய்யா! அவர்களும்—சங்கராச்சாரி, பாதிரிகள், பண்டாரச் சன்னதிகள்— எங்களைப் போன்று, பத்து மாதத்தில் பிறந்தவர்கள்தானே! அவர்களும், ரிக்ஷா இழுத்து, அதனால் கிடைக்கும் கூலியைப் பெற்று வாழட்டுமே என்று தமிழ்நாட்டு வாலிபர்கள் கேட்கப் போகிறார்கள்.’

அந்த அம்மையார் மட்டுமல்ல; பல்லாயிரக் கணக்கானவர்கள், அத்தகைய நிலை தமிழகத்தில் உருவாகப் போகிறது என்று எண்ணினார்கள்: அதற்காகப் பாடுபட்டார்கள்; தியாகஞ் செய்தார்கள்.

எத்தனை பெரிய எதிர்பார்ப்பு! எத்தனை நம்பிக்கை!

சாணக்கியர் இராசகோபாலாச்சாரியார், புத்துணர்ச்சி வெள்ளத்தைத் திசை திருப்பி விட்டார்.பெரியாருடைய சுயமரியாதை சமதர்ம இயக்கத்தவர்களை, வேறு களத்திற்குப் பாய்ந்தோட வைத்து விட்டார். அந்நிலையில், தேவையற்ற, படிப்பில், பட்டுப் போகும் பருவத்தினருக்குக் கட்டாய இந்திப் பாடத்தைத் திணித்து, தமிழர்களை வலுச் சண்டைக்கு இழுத்து விட்டார். சமதர்ம நெடுஞ்சாலையில் விரைய வேண்டிய தமிழர் படை, இந்தித் திணிப்பைத் தடுக்கும் வழிக்குப் பாய நேர்ந்தது. அய்ம்பது ஆண்டுகளாகியும், அதிலிருந்து விடுபட்டு,சாதியொழிப்பு, சமதர்ம அமைப்பு, முதலிய பணிகளில், முனைய முடியாமல் தவிக்கிறோம். நிற்க.

சிவகங்கை மாநாட்டிற்கு மீண்டும் செல்வோம். அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திரு எஸ். இராமநாதன், தமது உரையில்:

‘சுயமரியாதை இயக்கத்தின் நேரிடையான இலட்சியம், மதங்கள் அழிய வேண்டும்; குருட்டு எண்ணங்களும் ,மூட நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும். இதற்கு ஏதோ சில தொண்டர்கள் அடிபடுவதும், சில பத்திரிகைகள் அடக்கப் படுவதும் மாத்திரமே, போதாது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆண்களும், பெண்களுமாக, வீராவேசத்துடன் கிளம்பி, தங்கள் உயிரையும் பலி கொடுத்து, தங்கள் கொள்கையைச் சாதிக்க முன் வர வேண்டும்’ என்றார்.

பல கோடி மக்களிடையே, ஈராயிரம் ஆண்டுகளாக நிலைத்து விட்ட, பயனற்ற, கேடான, சமய நம்பிக்கைகள், அதிலிருந்து வடியும் சீழ் போன்ற, சாதி ஏற்றத் தாழ்வு உணர்ச்சிகள் இவற்றை அப்புறப்படுத்த கடுமையான மருத்துவம் தேவை. அம்மருத்துவத்தைத் தந்தை பெரியார் ஆற்றினார். போதிய அளவில், தமிழ் மக்கள், தங்களைப் பெரியார் மருத்துவத்திற்கு ஆட்படுத்திக் கொள்ளவில்லை. பெரியாரின் இயக்கம், ஆட்சிகளை வேலை வாங்கும் அளவிற்கு வலுப் பெற்ற பிறகு, தியாகஞ் செய்ய வந்தவர்களை விட, ஆதாயம் தேட வந்தவர்கள் அதிகமானவர்கள். எரியும் நெருப்பில், வாழை மட்டைகள் வீழ்ந்தது. எனவே, மதவொழிப்புப் பணியும், சாதியொழிப்புப் பணியும் பழைய சூட்டில் நடக்கவில்லை. இது, பெரியாரின் குறையல்ல; இயக்கத்தின் கோட்பாடுகளின் குறையல்ல. தமிழர் இயல்பில் குறை. தமிழர்களில் பலர், மாக்கல்லுக்கு ஒப்பானவர்கள். கருங்கற்கள் பயன்படுவது போல், மாக்கற்கள் பயன்படுமா?

நாம், வேலை தேடிக் கொள்வதில், சொத்து சேர்த்துக் கொள்வதில், உயர் பதவிகளுக்குச் சதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை, நம் சமுதாயத்தைத் தலைகீழாக மாற்றுவதில் காட்டவில்லை.

தென்னாட்டில் பெரியார் ஈ. வெ. ராமசாமி, சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஆதரவாக, மாவட்ட மாநாடுகள் கூட்டி, மக்கள் ஒப்புதலைப் பெற்று வரும் கால கட்டத்தில், இந்தியா முழுவதும் செல்வாக்குடைய பெரியவராகக் காந்தியார் விளங்கினார்.

அவர் அரசியல் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்த அளவு சமுதாய நீதிக்கும், பொருளியல் மாற்றத்திற்கும் கவனம் செலுத்தவில்லை என்பது பலருடைய கருத்து.

தக்ளி நூற்பு, கதராடை நெய்தல் போன்ற சிறு தொழில்களை வளர்க்கும்படி காந்தியார் கட்டளையிட்டார். அத்தகைய சிறு தொழில்களை வளர்ப்பதால், எளியோர் ஓரளவு உணவும், உடையும் பெறுவார்கள் என்பது காந்தியாரின் கணக்கு. செல்வத்தைக் குவித்து வைப்போர், அறங்காவலர்களாக மாறி விட வேண்டுமென்று காந்தியார் இதோபதேசஞ் செய்தார். அப்படி மாறிவிடுவார்களென்றும், கள்ளமறியாத காந்தியார் எதிர் பார்த்தார். எனவே, பொருளியல் தலைகீழ் மாற்றக் கொள்கையைக் காந்தியார் பரப்பவில்லை.

காந்தியாரின் பொருளியல் முறைக்கு மாறான கருத்துடையவர்கள், என்ன நினைத்தார்கள்? அவர்களின் நினைப்பை, திருமதி குஞ்சிதம் தமது சிவகங்கை மாநாட்டுத் தொடக்கவுரையில் எதிரொலித்தார். அது என்ன?

“சுதேச சமஸ்தானத்து ராஜாக்களும், ஜமீன்தார்களும் ரோல்ஸ்ராய் மோட்டாரில்தான் போவார்கள். ஆனால், ஏழையாகிய நீ தக்களி நூற்று சம்பாதிப்பதே சரி என்றும், இதுவே சுயராஜ்ய திட்டங்களில் ஒன்று என்றும் தோழர் காந்தியார் கூறுகிறார். ஆனால், தமிழ்நாட்டு இளைஞர்களோ, அந்த ராஜாக்களும், ஜமீந்தார்களும் கல்லுடைத்துச் சம்பாதிக்கட்டுமே என்று கேட்கப் போகிறார்கள்” என்றார்.

அன்னியன் ஆண்ட அக்காலத்தில், அவ்வளவு வெளிப்படையாகப் பேச உரிமை இருந்தது; கேட்டுப் பின்பற்ற சமுதாயக் கண்ணோட்டமுள்ள மக்கள் இருந்தார்கள். ‘வீணில் உண்டு களித்திருப்போரை, நிந்தனை செய்யும்’ மக்கள் வாழ்ந்தார்கள். அந்தச் சோம்பேறிக் கூட்டத்தில் இடம் பிடித்துக் கொள்ள எதையும் செய்யத் தயங்காதவர்கள், இன்றைக்கிருக்குமளவு பெரிய அளவில் அன்று இல்லை.

சுதேச மன்னர்களும், பெருநிலக் கிழார்களும் கல்லுடைக்கப் போகா விட்டாலும், அரியாசனங்களை இழந்து விட்டார்கள். எஃகு மனிதர் வல்லபாய் படேலின் நடவடிக்கையால், மன்னர் ஆட்சிப் பகுதிகளும், பொதுமக்களுக்குச் சொந்தமான இந்தியாவோடு இணைந்து விட்டன.

தலை விதி, பிறவிப் பயன், ஆகிய உளைச் சேறும் குடிசைத் தொழில்கள் என்னும் மயக்கப் பொருள்களும், பொதுமக்களின் சிந்தனையில் சூடேறாதபடி பார்த்துக் கொள்கின்றன. நிற்க.

மேற்கூறிய சிவகங்கை மாநாட்டின் முதல் முடிவு, இயக்கத்தவர்கள் சிலரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது.

இரண்டாவது முடிவு, நம் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. அண்டை மாநிலமான கேரளத்தைச் சேர்ந்தவர்கள், எதனால் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதற்கு விளக்கமாக அமைந்துள்ளது. எனவே, அதையும் இங்கே குறிப்பது பொருத்தம். அம்முடிவு என்ன? இதோ.

‘மலையாளத்திலுள்ள தீயா வகுப்பினர்கள், தாங்கள் இந்துக்கள் அல்லவென்றும், வேறு எந்த மதத்திலும் சேரத் தயாராக இல்லையென்றும், தங்கள் மாநாட்டில் தீர்மானித்திருப்பதை, இம்மாநாடு பாராட்டுவதுடன், நம் நாட்டிலுள்ள இதர சமூகத்தாரும் மாநாடுகள் கூட்டி, தாங்கள் மதமற்றவர்கள் என்று தீர்மானிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறது.’

இதைப் பட்டிவீரன்பட்டி தோழர், டபிள்யூ.பி.எஸ். சௌந்தர பாண்டியன் முன் மொழிய, திருமங்கலம் மணிமாறன் வழி மொழிய, ஒரு மனதாக ஒப்புக் கொண்டது அம்மாநாடு.

அடுத்து, சமதர்மத்தை ஏற்றுக் கொள்ளும் முடிவை, முன் மொழிந்தது எவர்? வழிமொழிந்தது எவர்? முன் மொழிந்தவர் தந்தை பெரியார். வழி மொழிந்தவர் பூவாளூர் அ. பொன்னம்பலனார்.

தந்தை பெரியார் பெருஞ்செல்வர் என்பது உலகறிந்த செய்தி. பூவாளூர் பொன்னம்பலனார் வளமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அக்கால நிலைக்குப் பணக்காரர் கூட, பொது வாழ்க்கையில், தங்கள் தனி வாழ்வை மட்டுமின்றி, வீட்டுச் செல்வத்தையும் கோணாது இழந்த நல்லோர்களில், அவர் ஒருவர்; பொன்னம்பலனார் சிறந்த அமைப்பாளர்; பேச்சாளர். இவ்விருவரும் ஏற்றுக் கொண்ட சமதர்மத்தை, சிவகங்கை மாநாடு ஏற்றுக் கொண்டது. அது பற்றிய முடிவு இதோ:

‘ஈரோட்டில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியங்களையும், சமதர்மத் திட்டங்களையும் இம்மாநாடு ஆதரிப்பதுடன், அவைகளை மாகாண மாநாட்டிற்குப் பரிந்துரைக்கிறது.’

சிவகங்கை மாநாட்டுக்குத் தலைமை ஏற்ற தோழர் எஸ். இராமநாதன் மேற்படி முடிவு பற்றி மாறுபட்ட கருத்து கொண்டார். அதை அவர் நடத்தி வந்த ஆங்கில இதழாகிய ‘ரேஷனலிட்ஸ்’ (பகுத்தறிவாளி) வழியாக வெளிப்படுத்தினார். தோழர் இராமநாதன் கண்ட குறைகள் என்ன?

1. ஈரோட்டில் தீட்டப்பட்ட, சுயமரியாதை சமதர்மத் திட்டம் என்பது, சுயமரியாதை இயக்கத்தில் பற்றுடைய சிலரால் எழுதப்பட்ட நகல்.

2. அத்திட்டத்தை வகுத்தவர்கள் அந்தச் சமயத்திற்கு ஏற்பட்ட கூட்டத்தார்கள்.

3.சங்க, கட்டு திட்ட சம்மந்தமாகச் சில பிழைகள் அடங்கியுள்ளன.

4. சட்டசபை, வட்ட, மாவட்ட சபைகளைப் பிடித்தல் சுயமரியாதைக் கொள்கைக்கு மாறுபட்டதாகும்.

5. சட்டசபைகளில் சமதர்மத்தை வாதிடல் ஆகாது. அதை அடைய, தொழிலாளர் அமைப்புகளின் வழியாகப் போர் புரிய வேண்டும்.

சுயமரியாதை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும், தந்தை பெரியாரோடு, சோவியத் நாட்டிற்குச் சென்று, பார்த்து வந்தவருமான தோழர் இராமநாதனின் கருத்து மாறுபாடு, அப்போது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே, தந்தை பெரியார் ‘குடியரசு’ தலையங்கத்தின் வழியாக, பதில் எழுதினார்.

‘சுயமரியாதை சமதர்மத் திட்டத்தைத் தீட்டுவதற்காக, ஈரோட்டில் கூடியவர்கள், அப்போதைக்குக் கூடிய வெளியார் கூட்டமல்ல. மாறாக, சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டுள்ள செயல் வீரர்கள் ஆவார். அப்படியிருப்பினும், அத்திட்டத்தை வட்ட, மாவட்ட மாநாடுகளைக் கூட்டி, அவற்றின் முன் வைக்கிறோம். அது வரை, பத்து இருபது மாநாடுகள் அத்திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளன. அதையொட்டி நூற்று இருபது சங்கங்கள் சமதர்மத் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.’ மேற்கூறிய பொருள்பட பெரியார் பதில் எழுதினார்.

மூத்த பொது உடைமைவாதியான தோழர் ம. சிங்கார வேலுவும், அதே ‘குடியரசி’ல் தனியொரு கட்டுரை வழியாக, தோழர் இராமநாதனுக்குப் பதில் கூறினார். அப்பதிலின் சுருக்கம் வருமாறு:

‘சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை’ உருவாக்கிய, ஈரோடு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையோர், சுயமரியாதை இயக்கக் குழுக்களின் உறுப்பினர்கள் ஆவார்.

ஒப்பாச்சாரங்களைக் கவனிக்காமல் இருந்தால், என்ன மூழ்கி விடப் போகிறது?

“கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ” என்னும் பொது உடைமை அறிக்கை எந்தக் கமிட்டியில் உருவானது? நாம் கவனிக்க வேண்டியவை வருமாறு:

எடுத்த காரியம் என்ன? அது சரியா? சரியல்லவா? அது முடியுமா? முடியாதா?’

இப்படிப் பதில் கூறிய தோழர். சிங்காரவேலர், சட்டமன்றங்களின் வழியாக நிறைவேற்றப்பட்ட சில நல்ல சீர்திருத்தச் சட்டங்களைச் சுட்டிக் காட்டினார்.

1. உடன்கட்டை ஏறுதலைத் தடை செய்தல்.

2. இந்து விதவைகளுக்குத் திருமண உரிமை வழங்கும் சட்டம்.

3. இந்து அற நிலைய சட்டம்.

4. குழந்தை மணத்தைத் தடுக்கும் சாரதா சட்டம்.

மேற்கூறியவைகளைப் போன்று சுயமரியாதை நோக்கங்களை, சட்டசபை வழியாகச் செயல்படுத்தினால் என்ன தீமை? என்பது தோழர் சிங்காரவேலரின் வாதம்.

அன்றையச் சூழ்நிலையில் நின்று பார்த்தாலும், இராமநாதனுடைய முதல் இரு குறைகள் பொருளற்றவை. புரட்சிகரமான சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை உருவாக்கியவர்கள், அதற்காக மட்டும் கூடிய தெருக் கூட்டத்தவர்கள் அல்லர்; சுயமரியாதை இயக்கத்தின் நாடி நரம்புகளாக இயங்கிய, இன்னல் பல ஏற்ற, ஏற்க ஆயத்தமாக இருந்த பொறுப்புள்ள, சுயமரியாதை இயக்க முன்னணி வீரர்கள் என்பதை, அன்றையப் பொது வாழ்க்கையில் இருந்த எல்லாப் பிரிவினர்களும் அறிவார்கள்.

சமதர்மம் கூடாது என்று இராமநாதன் கருதியிருந்தால், அடிப்படைக்கே எதிர்ப்பு சொல்லியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கருத்தைக் கொண்டவர் அல்லர். எனவே, விதிமுறைகளில் பிழைகள் உள்ளன என்று அவற்றைப் பெரிதுபடுத்தியிருக்க வேண்டாம். கொள்கை சரியென்று ஏற்று இருந்த அவர் எப்பிழைகளை, எப்படித் திருத்த வேண்டுமென்று ஆலோசனை கூற உரிமை, தகுதி, பொறுப்பு மூன்றும் பெற்றவர்.

சட்டமன்றங்களின் வழியாகச் சமதர்மத்தைக் கொண்டு வர முடியாது. அதை நடை முறைப்படுத்த, தொழிலாளர் அமைப்புகளின் வழியில் போர் புரிய வேண்டும் என்று தோழர் இராமநாதன் கூறியது அன்றைக்கே பொருள் நிறைந்த கருத்தாகும்.

சார் அரசின் கடைசிப் பாராளுமன்றத்தில், பொது உடைமைவாதிகளான சோஷியலிஸ்ட் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருந்தார்கள், அவர்களால் பொருளியலில், எவ்வித பெரும் மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/15&oldid=1690318" இலிருந்து மீள்விக்கப்பட்டது