பெருங்கதை/2 9 யூகி சாக்காடு

  • பாடல் மூலம்

2 9 யூகி சாக்காடு

வழியின் இயல்பு

தொகு

புறநகர் போந்த பின்றையச் செறுநீர்
அன்னற் படப்பை யகனிலந் தழீஇப்
புள்ளொலிப் பொய்கையொடு பூந்துறை மல்கி
வான்கண் டன்ன வனப்பின வாகி
மீன்கண் டன்ன வெண்மணல் விரிந்த 5
கானும் யாறுந் தலைமணந்து கழீஇ
அரும்பணி புன்னையுஞ் சுரும்பிமிர் செருந்தியும்
இலையணி யிகணையு மின்னவை பிறவும்
குலையணி கமுகொடு கோட்டெங் கோங்கு
பழன மடுத்த கழனிக் கைப்புடைப் 10
போர்மா றட்ட பூங்கழன் மறவர்
தேர்மா றோட்டித் திண்ணிதி னமைத்த
கோட்ட மில்லா நாட்டு வழிவயின்

யூகி புட்பகநகரை அடைதல்

தொகு

ஆஇ வைய மாரிருண் மறையப்
பூணி யின்றிப் பொறிவிசைக் கொளீஇ 15
உள்ளிய வெல்லை யோட்டிக் கள்ளமொ
டொடுங்குந் தானமுங் கடும்பகற் கரக்கும்
ஆளவி காடு மருஞ்சுரக் கவலையும்
கோள விந் தொடுங்கிய குழூஉக்குடிப் பதியும்
வயவர் நாடுங் கயவர் கானமும் 20
குறும்புங் குன்றமு மறிந்துமதி கலங்காது
பகலு மிரவு மகலப் போக்கி
இருநூற் றிருப திரட்டி யெல்லையுள்
அருநூ லமைச்ச னயற்புற நிறீஇ
நட்புடைத் தோழ னன்கமைந் திருந்த 25
புட்பகந் தன்னைப் பொழுதுமறைப் புக்குப்

யூகி இடபகனைக் காணலும் அவன் உதயணன் செய்தியை வினாவலும்

தொகு

புறத்தோ ரறியா மறைப்பமை மாயமொ
டாணி வைய மரும்பொறி கலக்கி
மாண வைத்து மகிழ்ந்தனன் கூடி
மாண்முடி மன்னன் றோண்முதல் வினவிச் 30
சிரம மெல்லாஞ் செல்லிருட் டீர்ந்து
கரும மறியுங் கட்டுரை வலித்துத்
தோழனுந் தானுஞ் சூழ்வது துணியா
வெந்திறன் மிலைச்சர் விலக்குவனர் காக்கும்
மந்திர மாடத்து மறைந்தன னிருந்து 35

முன்பு நிகழ்ந்தவற்றை இடபகனுக்கு யூகி கூறல்

தொகு

தன்றொழி றுணியாது தானத்தின் வழீஇக்
குஞ்சர வேட்டத்துக் கோளிழுக் குற்ற
வெஞ்சின வேந்தனை விடுத்தல் வேண்டி
வஞ்ச விறுதி நெஞ்சுணத் தேற்றி
உஞ்சையம் பெரும்பதி யொளிக்களம் புக்கு 40
மெய்ப்பேய் படிவமொடு பொய்ப்பே யாகிப்
பல்லுயிர் மடிந்த நள்ளென் யாமத்துக்
கூற்றுறழ் வேழங் குணஞ்சிதைந் தழியச்
சீற்ற வெம்புகை செருக்க வூட்டிக்
கலக்கிய காலை விலக்குநர்க் காணாது 45
நாவாய் கவிழ்த்த நாய்கன் போல
ஓவா வவலமொடு காவலன் கலங்கிப்
பண்ணமை நல்லியா ழின்னிசைக் கொளீஇயதன்
கண்ணயற் கடாத்துக் களிப்பிய றெருட்டின்
ஆழித் தடக்கை யற்ற மில்லென 50
வருமொழிக் கட்டுரை முகமன் கூறிநம்
பெருமகன் றன்னுழைப் பிரச்சோ தனனிம்
மன்னுயி ருற்ற நடுக்க நீக்குதல்
இன்னியன் மான்றே ரேயற் கியல்பென
உதையண குமரனு முள்ளம் பிறழ்ந்ததன் 55
சிதைவுகொள் சீலந் தெளிந்தனன் கேட்டு
வீணை யெழீஇ வீதியி னடப்ப
ஆணை யாசாற் கடியுறை செய்யும்
மாணி போல மதக்களிறு படியத்
திருத்தகு மார்வ னெருத்தத் திவர 60
அண்ணன் மூதூ ரார்ப்பொடு கெழுமி
மன்னவன் வாழ்க வத்தவன் வாழ்க
ஒலிகெழு நகரத் துறுபிணி நீக்கிய
வலிகெழு தடக்கை வயவன் வாழ்கெனப்
பூத்தூய் வீதிதோ றேத்தின ரெதிர்கொள 65
அவந்தி யரச னுவந்தனன் விரும்பிப்
பொலிவுடை யுரிமையொடு பரிசனஞ் சூழப்
புலிமுக மாட மலிர வைறி
மையல் வேழ மடக்கிய மன்னனை
ஆணை கூறா தருண்மொழி விரவாது 70
காண லுற்றனன் காத லிதுவெனச்
சேனை வேந்தன் றானத்து விளிப்ப
அறியாப் பாழியு மறியக் காட்டிக்
குறியாக் கூற்றத்தைக் கோள்விடுங் கொல்லெனச்
சிறுயோ ரஞ்சப் பெரியோர் புகல 75
ஆனை யேற்ற மறியக் காட்டி
இருட்டெறு சுடரி னன்ன விறைவன்முன்
வருட்டுபு நிறுத்த மன்னனை நோக்கிக்
தெருட்டுதற் காயவித் தீக்குறி வேயம்
யாதிற் சிதைந்ததஃ தறிய வுரைக்கென 80
ஏதில் வேந்தன் காதலின் வினவ
வேத முதல்வன் விளம்பிய நூல்வழி
மாதங்க மென்று மதித்தலிற் பெற்ற
பெயரது மற்றத னியல்பறிந் தோம்பி
வெருட்டலுந் தெருட்டலும் விடுத்தலும் விலக்கலும் 85
பணித்தலு முயர்த்தலுந் தணித்தலுந் தாங்கலும்
தமர்பிற ரென்ப தறியுந் திறனும்
நீல முண்ட நூலிழை வண்ணம்
கொண்டது விடாமைக் குறிப்பொடு கொளுத்தல்
பண்டிய றொன்னூற் பாகியல் பாதலின் 90
முதற்கட் பிணித்தோர் சிதைப்பில் விடாது
கொண்டதை யிதுவெனச் சண்ட வேந்தற்
கெதிர்மொழி கொடீஇக் கதிர்முக மெடுத்தோன்
தகைமலர்ப் படலைத் தந்தை தலைத்தாள்
முகைமலர்க் கோதை முறுவற் செவ்வாய்க் 95
கன்னி யாயத்துப் பொன்னணி சுடர
வீசுவளிக் கொடியின் விளங்குபு நின்ற
வாசவ தத்தை மதிமுகத் தேற்றிச்
சிதாரி மழைக்கண் மதர்வை நோக்கம்
உள்ளகத் தீர வள்ளற் பட்ட 100
போதகம் போலப் போதலாற்றாக்
காதற் குமரனைக் கருமக் காமத்துக்
கணிகை திறவயிற் பிணிபிறர்க் குணர்த்தி
இகழ்வொடு பட்ட புகழ்கா ணவையத்து
மல்லன் மூதூர் மலிபுனல் விழவினுட் 105
சில்லரிக் கண்ணியொடு சிறுபிடி யேற்றிச்
செயற்படு கருமத் தியற்கை யிற்றென
இப்பா லிறைமகற் போத்தந் தப்பால்
நிகழ்ந்ததை யறிதந் தொளித்தன னாகி
வேறல் செய்கை வேந்தற் குண்மை 110
தேறன் மாக்களைத் திறவிதிற் காட்டிப்
பழந்தீர் மரவயிற் பறவை போலச்
செழும்பல் யாணர்ச் சேனைபின் னொழிய
நம்பதி புகுதரக் கல்குற் போத்தந்
தியான்பின் போந்தன னிதுவென லவன்வயின் 115
ஓங்கிய பெரும்புகழ் யூகி மேனாட்
பட்ட வெல்லாம் பெட்டாங் குரைப்பக்

இடபகன் யூகியைப் பாராட்டல்

தொகு

கெட்ட காலை விட்டன ரென்னாது
நட்டோ ரென்பது நாட்டினை நன்றென
உறுதுணைத் தோழன் மறுமொழி கொடுத்தபின் 120

யூகி உதயணன் செய்தியை வினாவுதல்

தொகு

தன்னுரை யொழித்து நுண்வினை யமைச்சனைப்
பெயர்ந்த காலைப் பெருமகற் கிப்பால்
உயர்ந்த கானத் துற்றதுண் டெனினதூஉஞ்
சின்மொழி தாதரைச் சேர்ந்ததற் கொண்டு
நிலையது நீர்மையுந் தலையது தன்மையும் 125
உள்விரித் துரையென வூகி கேட்ப

இடபகன் நிகழ்ந்தவற்றைக் கூறல்

தொகு

அடலரும் பல்படை யிடபக னுரைக்கும்
அழகமை மடப்பிடி யைந்நூ றோடி
அழநிலை யத்தத் தசைந்துயிர் வைப்பத்
தடம்பெருங் கண்ணியொடு நடந்தனர் போந்து 130
கடும்பகல் கழிதுணைக் காட்டகத் தொடுங்கி
வெங்கதிர் வீழ்ந்த தண்கதிர் மாலை
வயந்தக னென்பால் வரீஇய போதரத்
தயங்குமலர்த் தாரோன் றனிய னாகி
மாலை யாமங் கழிந்த காலை 135
வெஞ்சொல் வேட்டத் தஞ்சுவரு சீற்றத்துச்
சலம்புரி நெஞ்சிற் சவரர் புளிஞர்
கலந்தன ரெழுந்து கானந் தெரிவோர்
ஊனென மலர்ந்த வேனி லிலவத்துக்
கானத் தகவயிற் கரந்தன னிருந்த 140
அரச குமரனை யகப்படுத் தார்ப்ப
வெருவுறு பிணையின் விம்முவன ண்டுங்கும்
அஞ்சி லோதியை யஞ்ச லோம்பென
நெஞ்சுவலிப் புறுத்து நீக்குவன னிறீஇ
விலக்கவண் கொளீஇ வில்லின் வாங்கி 145
ஓரோர் கணையி னுராஅய் வந்தவர்
ஏழேழ் மறவரை வீழ நூறலின்
ஆழு நெஞ்சமொ டச்சு மெய்திப்
பட்டவர் தந்தமர் பகையி னெருங்கிக்
கட்டெரி கோளீஇக் கரந்தன ரெனலும் 150

யூகி மூர்ச்சித்தலும் பின்பு தெளிந்துகேட்கத் தொடங்கலும்

தொகு

ஒட்டிய தோழற் குற்றதை யறியான்
பகையடு தறுக ணிமையகன்று பிறழ
உரைபெயர்த்துக் கொடாஅன் யூகி மாழ்க
வரைபுரை மார்பனை வாங்குபு தழீஇக்
கதுமென வுரைத்தது கவன்றன னாகி 155
எதிர்மலர்க் குவளை யிடுநீர் சொரிந்து
சீதச் சந்தனந் தாதோடப்ப
ஏஎல் பெற்றெழுந் திருந்தன னுரைக்கென

பின்பு நிகழ்ந்தவற்றையும் உதயணனது இயல்பையும் இடபகன் கூறல்

தொகு

மாஅ லன்ன மன்னுயிர் காவலன்
ஆட்டிடைப் பாயு மரிமாப் போல 160
வேட்டிடைப் பாய்தலை வெரீஇ யோடாப்
பஞ்சி மெல்லடிப் பரல்வடுப் பொறிப்ப
வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க
அஞ்சுபு நின்ற பைந்தொடி மாதரைச்
சிறுவரை நடஆய்ச் செல்ல னீங்கக் 165
கறுவுகொ ளாளர் மறுவுவந் தோடி
உறுவுகொ ளுரோணியொ டுடனிலை புரிந்த
மறுவுடை மண்டிலக் கடவுளை வளைத்த
கரந்துறை யூர்கோள் கடுப்பத் தோன்றி
நிரந்தவர் நின்ற பொழுதிற் பெயர்ந்து 170
குறிவயிற் குறித்தியாஞ் செல்லு மாத்திரை
அறிவி னாடி யரும்பொரு ளுண்டென
விரைமுதல் கட்டிய விரும்பி னிமிழ்ப்பின்
உரைமுதல் காட்டி யுளமை கூறி
நின்ற பொழுதிற் சென்றியாந் தலைப்பெய 175
எந்திர மறியா வேதிலன் போல
வெந்திறல் வேந்தனு மவரொடு விராஅய்
ஓட லாற்றா னாகி யொருசிறை
ஆடமைத் தோளியோ டகன்றன னிற்ப
வேட்டுவ ரகலக் கூட்ட மெய்திக் 180
கரும நுனித்த கடுங்க ணாண்மை
உருமண் ணுவாவி னூரகம் புகீஇப்
போகப் பெருநுகம் பூட்டிய காலை
மாக விசும்பின் மதியமு ஞாயிறும்
எழுதலும் படுதலு மறியா வின்பமொ 185
டொழுகுபுன லகழினை யுடையெனக் கிடந்த
முழுமதி னெடுங்கடை முதற்பெரு நகரம்
தாரணி யானைபரப்பித் தலைநின்
றாருணி யரச னாள்வது மறியான்
தன்னுயி ரன்ன தம்பியர் நினையான் 190
இன்னுயி ரிடுக்க ணின்னதென் றறியான்
அவையுங் கரணமு மவைவகுத் திருவான்
அந்தி மந்திரத் தருநெறி யொரீஇத்
தந்தையொ டொறுக்கப் படாஅன் சிந்தை
அகனுணர் வில்லா மகனே போலத் 195
தன்மனம் பிறந்த வொழுக்கின னாகிப்
பொன்னகர் தழீஇய புதுக்கோப் போலச்
செவ்வியுங் கொடாஅ னிவ்வியல் புரிந்தனன்
அண்ண லாதலி னசைவில னென்னத்
தன்னமர் தோழன் பன்னின னுரைப்ப 200

சாங்கியத்தாயைக் கண்டு யூகி பின் நிகழ்த்த வேண்டியவற்றைக் கூறல்

தொகு

வேகந் தணியா வெஞ்சின நெடுவேல்
யூகந்த ராயண னொழிவிலன் கேட்டு
முறுவல் கொண்ட முகத்தின னாகிப்
பெறுக போகம் பெருமக னினிதென
அறுவகைச் சமயத் துறுபொரு ளொழியாது 205
பன்னுபு தெரிந்த பழியறு வாய்மொழித்
தொன்மூ தாட்டியைத் துன்னத் தரீஇத்
தருமத் தியற்கையுங் கருமக் கிடக்கையும்
தலைமையது தன்மையு நிலைமையது நீர்மையும்
வேறுவே றாகக் கூறுகூ றுணர்த்தி 210
இதுவென் வலிப்பென வதுவவட் குணரக்
கூறுதல் புரிந்த குறிப்பின னாகி
அகலா தோரையு மகல்கென நீக்கி
உம்மைப் பிறப்பிற் கொண்டுஞ் செம்மற்குத்
தாயோ ரன்ன தகையினி ராதலின் 215
மேயோர்க் கல்லது மெய்ப்பொரு ளுணர்த்தல்
ஏதில் பெரும்பொரு ணீதியு ளின்மையின்
தெரியக் கேட்கென விரியக் காட்டி

இனியவர் கடமை இன்னவென்பது

தொகு

அற்றங் காத்தலி னாண்மை போலவும்
குற்றங் காத்தலிற் குரவர் போலவும் 220
ஒன்றி யொழுகலி னுயிரே போலவும்
நன்றி யன்றிக் கன்றியது கடிதற்குத்
தகவில செய்தலிற் பகைவர் போலவும்
இனையன பிறவு மினியோர்க் கியன்ற
படுகட னாதியிற் பட்டது நினையான் 225
தொடுகழற் குருசில் வடுவுரை நிற்ப
இன்ப வளற்று ளிறங்கின னாதலின்
துன்பந் துடைத்த தொழிலே போல
அவல மொழிப்பி யவன்வயிற் றிசையா
இகலடு பேரா ணிலாவா ணத்தவன் 230
உகந்துண் டாடி மகிழ்ந்தபி னொருநாள்
வாலிழை மாதரை மன்னவ னகல்விடைக்
கோலக் கோயில் கூரெரிக் கொளீஇப்
பொய்ந்நில மருங்கிற் போத்தந் தென்வயிற்
கண்ணெனத் தருதல் கடனெனக் கூறி 235
இன்பந் துடைத்தவற் கிறைக்கடம் பூட்டுதல்
நிங்கட னாமென நினைந்துநெறி திரியா
துருப்ப நீளதர்க் கமைத்துமுன் வைத்த
தருப்பணஞ் செருமித் தன்னுயிர் வைத்தனன்
யூகி யென்ப துணரக் கூறி 240
நிலங்குறை பட்ட மன்னனை நிறுவுதல்
புலந்துறை போகிய பொய்யில் வாய்மொழி
நும்மி னாத லெம்மிற் சூழ்ந்த
தறியக் கூறினேன் யானென வவளொடும்
செறியச் செய்த தெளிவின னாகி 245
உருமண் ணுவாவொடு வயந்தக குமரனைக்
கருமக் கிடக்கை காண்வரக் காட்டி
இன்னுழி வருகென வன்னவை பிறவும்
ஒருபொரு ளொழியா தவளொடு சூழ்ந்து

தான் இறந்துவிட்டதாக யூகி நடித்து அஃது உண்மையென்றே அயலாரை நம்பச் செய்தல்

தொகு

மறைப்பிட னமைத்துப் புறத்தோர் முன்னர் 250
ஆத்திரைத் தருப்பண மாத்திரை கூட்டி
உண்புழி விக்கிக் கண்புகச் செருமி
உயிர்ப்பு நீங்கிய வுடம்பின னாகிச்
செயற்கைச் சாக்காடு தெளியக் காட்டத்
தோழனுந் தமருஞ் சூழ்வனர் குழீஇ 255
வாழல மினியென வஞ்ச விரக்கம்
பல்லோர் முன்னர்க் கொள்ளக் காட்டிச்
சுடுதற் கொவ்வாச் சூழ்ச்சி யண்ணலைக்
கடுவினை கழூஉங் கங்கா தீரத்
திடுது முய்த்தென விசைத்தனர் மறைத்துத் 260
தவமுது மகளைத் தலைமகற் குறுகி
முகனமர்ந் துரைத்து முன்னையி ராமினென்
றகனமர் காதலொ டாற்றுளி விடுப்பக்
காட்டகங் கடந்து காவல னிருந்த
நாட்டக நணுகி நகரம் புக்கனன் 265
தெரிமதி யமைச்சனொடு திறவிதிற் சூழ்ந்த
அருமதித் திண்கோ ளறம்புரி மகளென்.

2 9 யூகி சாக்காடு முற்றிற்று.