பெருங்கதை/2 8 யூகி போதரவு

(2 8 யூகி போதரவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

யூகிக்கு உற்றது

தொகு

போகம் புணர்ந்த பொன்னக ரவ்வயின்
வேகத் தானை வேந்தன் மகளோ
டேகச் செங்கோ லேயர் பெருமகன்
போகங் கழுமிப் புணர்ந்து விளையாட
யூகிக் கிப்பா லுற்றது கூறுவென் 5

யூகியின் குணவிசேடங்கள்

தொகு

கண்ணகன் கிடக்கைக் கலிகெழு மூழியுள்
மண்ணகந் தழீஇ மன்னிய வூழிதொறும்
புண்ணிய வுலகிற்கும் பொலிவிற் றாமெனத்
மோன்றோங் காளர் துணியப் பட்ட
பொன்றா வியற்கைப் புகழது பெருமையும் 10
ஆன்முலைப் பிறந்த வானிற வமிர்தம்
மலைப்பெய் நெய்யொடு தலைப்பெய் தாங்கு
வேறுபட் டேகினுங் கூறுபட் டியலா
அன்பினி னளைஇய நண்பி னமைதியும்
அசைவி றானை விசைய வெண்குடைப் 15
பெருநில மன்னர் கருமங் காழ்த்த
அருமதி நுனித்த வமைச்சி னாற்றலும்
இன்னவை பிறவுந் தன்வயிற் றாங்கி

யூகி உச்சயினியிற் செய்தவை

தொகு

மன்றணி வீதி மதிலுஞ் சேனையுள்
வென்ற கொற்றமொடு விசய மெய்தி 20
இறைவற் பிரிக்கு மறிவிற் சூழ்ந்த
படிவ வுருவம் பட்டாங் கெய்தி
இடியுறழ் முரசி னேய ரிறைவன்
கண்ணியது முடித்துக் காரிகை பொலிந்த
வண்ணக் கோதை வாசவ தத்தையொடு 25
வழிமுதற் கொண்ட கழிமுதற் கங்குதலின்
மல்குகடற் றானை மன்னரை வணங்கிப்
பில்குகளி யானைப் பிரச்சோ தனனெனும்
ஐந்தலை நாக மழல வெகுட்டிப்
பைந்தளிர்க் கோதையைப் பற்றுபு தழீஇச் 30
சிறைகொளப் பட்டுச் செல்வ நீத்த
குறைமக னென்பது கோடல் செல்லாது
திருமன னெகிழ்ந்த வருண்மலி யன்பொடு
தந்நனன் கோமா னென்றுதலை வணங்கி
ஒண்டார் மார்ப னுதயணன் பணிமொழி 35
மந்திர மாக மகண்மாட் டியைந்தவை
அன்றவ னுள்ளத் தகமுண வராகன்
உரைத்த வண்ணமு மிகப்பல வாகத்
தொல்லோர் முன்னர்த் தோன்றக் காட்டி
ஒல்கா வென்றி யுதயணற் றடைய 40
வெல்போர்ப் பெரும்படைவேந்தன் விடுத்தலும்
விடுத்த பெரும்படை விளியத் தாக்கி
உடைத்த தோழ ரூக்க வென்றியும்
வென்றி வியனகர் வெந்துய ருற்றதும்
பட்டாங் குணர்ந்து முட்டாங் கியற்றி 45
உணரா தான்போ லொருமீக் கொற்றவன்
புணரா தார்முற் பொச்சாப் பஞ்சி
வணங்குகொடி மருங்குல் வாசவ தத்தையைப்
பயந்தினி தெடுத்த பத்தினித் தெருட்டி
உயர்ந்த கோயிலு ளொடுங்கிய வொடுக்கமும் 50
நனிவரை யன்ன நளகிரி யேறி
ஒளிமணிக் கொடும்பூ ணுதயண குமரனைப்
பற்றுபு தம்மின் செற்றெனப் பகைகொண்டு
வெற்ற வேந்தன் வெகுண்டெழ லின்மையும்
இனையவை பிறவும் புனைநகர் வரைப்பினும் 55
கோயின் முற்றத்தும் வாயின் மருங்கினும்
வம்பலர் மொய்த்த வம்பலத் தகத்தும்
யானைத் தானத்து மருந்தவப் பள்ளியும்
தானைச்சேரியுந் தானெடுத் துரைக்கும்
பாடை யறியாத் தேசிகச் சேரியும் 60
ஓதுநர் சாலை யகத்து மோவாச்
சூதுபொரு கழகத் தருகலுந் தோமில்
நல்லதுந் தீயது மறிந்தகத் தடக்கா
மட்டுமகிழ் மகளிர் துட்டச் சேரியும்
காரிகை பகருங் மருங்கடை மழைக்கண் 65
வார்கொடி மகளிர் வளநகர் வரைப்பினும்
குதிரைப் பந்தியுங் கோடிகர் வரைப்பினும்
மதிமயக் குறூஉ மறுகணி கடையினும்
நீர்த்துறைக் கரையினுங் கூத்துறை சேரியும்
மன்றுஞ் சந்தியு மொன்றுகண் டன்ன 70
ஊர்முழு துள்வழிக் கார்முழு துலாஅம்
கடுவளி வரவி னொடியாக் கற்பின்
நறுநுதற் பணைத்தோ ணங்கையை நம்மிறை
உறுவரை மார்பி னுதயணற் குள்ளத்
தருளொடும் போக்கிப் பொருளொடும் புணர்த்தமை 75
யாவிரு மறைவி ரன்றெனின் மற்றிவன்
காவ லவ்வழிக் காணலெம் யாமென
மங்கையர் நாப்பண் மறவோ ரெடுத்த
கம்பலைப் புறமொழி நன்பல கேட்டும்
கூற்ற வேழ மடக்கிய குமரற்குக் 80
காற்று மெரியுங் கலந்துகை கொடுப்ப
மயக்க மெய்தி மாணகர் மாந்தர்
கயக்க மின்றிக் கடையிடை தெரியார்
தம்முட் டாக்கிய விம்ம வெகுட்சியுள்
பொருமுர ணண்ணல் பூந்தா ரகலத்துத் 85
திருமக டன்னிற் றீரா தியைந்தனள்
இன்னு மவனே கன்னிரை கானத்துக்
காதலிற் காப்பத் தீதில ளாகிப்
புக்கன ளவனொடு புனைபிடி யூர்ந்தெனத்
தொக்க மாந்தர் நற்பொருள் பொதிந்த 90
வாய்ப்புட் கொண்ட வலிப்பின னாகி
யாப்புள் ளுறுத்த வமைதிச் சூழ்ச்சியன்
செறிந்த செய்கை யறிந்துமனத் தடக்கிச்
செறுநன் போலச் செல்வ வேந்தனும்
உறுநர் வேண்டு முள்பொருட் குடன்றொரு 95
மறுமொழி கொடுப்பி னல்லது மனத்தில்
துன்பாற் பட்டமை நண்பா னுனித்து
நூலிய னெறியினு மதியினுந் தெளிந்து
சொல்வேறு குறியொடு கழன்றகத் தொடுங்கிய

யூகி தன் படைவீரர்க்குக் கூறியவை

தொகு

பல்வே றுருவிற்றம் படைநரைப் பயிர்ந்து 100
பூவிளங் கவினிய போழிலுஞ் சேனை
மாகள வனத்து மன்னுயிர் நடுக்கும்
பணைப்பெருந் திரடோட் பகுவாய்க் கூரெயிற்
றிணைப்பெருங் காதி னிலங்குகுழை யணிந்த
சேடேந்து வனப்பிற் செழுமலர்த் தடங்கண் 105
மோடேந் தரிவை முற்றத்து முனாது
பனஞ்செறும் பன்ன பன்மயிர் முன்கை
நிணம்பசை கொண்ட நீளி நெடும்பற்
சாஅய் நீங்கிச் சார்ந்தோர் துட்கெனும்
பேஎ யுருவம் பெறவகுத் தெழுதிய 110
அழிசுவர் மண்டபத் தகவயி னாரிருள்
வழிபடர் வலித்த மந்திரக் கோட்டியுள்
வென்வேல் வேந்தனை விடுத்தனிர் சிறையென
இன்னுரை யமிர்த மியைந்தவர்க் கீத்துத்
தான்செய்ப் படுபொரு ளாங்கவர்க் குணர்த்தி 115
ஊன்சேர் கடுவே லுதயண னீங்கிய
கான்சேர் பெருவழிக் கடத்தல் செல்லீர்
நாடு மலையுங் காடும் பொருந்திக்
கனிவளங் கவர்ந்து பதிவயிற் பெயரும்
பனியிறை வாவற் படர்ச்சி யேய்ப்பப் 120
படையினுந் தொழிலினு நடைவே றியன்ற
உருவினு மியல்பினு மொருவிரும் பலரும்
கலிகெழு பண்டங் களைகலம் போல
வலிகெழு சிறப்பின் மதிலுஞ் சேனை
உள்ளகம் வறுமை யெய்திப் புல்லெனப் 125
பெருந்தவ முள்வழி விரும்புபு செல்லும்
பொருளும் போகமும் புகழும் போல
மறுவின் மணிப்பூண் மன்னவ னுள்வழிக்
குறுகுதல் குணனென வுறுநரை யொருப்படுத்
தேகச் செய்தபி னாகுபொரு ணாடிக் 130
கடவுட் பள்ளியுட் கள்ள வொழுக்கொடு
நெடுநகர் மாந்தர் நெஞ்சுணத் திரிதரும்
ஒட்டிய தோழரொடு கட்டுரை விரும்பி
மூன்றிடம் பிழையா வான்ற நுண்ணெறிப்
பண்ணவர் முனிவர் பட்டதும் படுவதும் 135
எண்ணுவ ராயி னேதந் தருமென
நினைத்தோன் பெயர்ந்து நெறியிற் றீர்ந்தவர்
வினைத்துக ளறுக்கும் வேட்கை யல்லது
வேண்டுவ வுரையா மூங்கைக ளாமெனும்
நீதியது நேர்மை யுளனா யோதிய 140
சமைய விகற்பஞ் சாலக் காட்டி
அசைவி லாள ரருநெறி வலித்தது
மருண்டுந் தெளிந்தும் வந்தவை பிதற்றிப்
பெயரு மியற்கைப் பெற்றியிற் றிரியான்
பூசுப் புலரா யாக்கையொடு பெயரிய 145
தோழ ரோடு மிகப்பல கழறி
வேற்றோன் போல மாற்றம் பெருக்கிப்
படிவப் பள்ளியுட் பகலிடங் கழித்துக்

உதயணன்பால் மெய்யன்புள்ள ஒரு குயவனியல்பு

தொகு

குடிகெழு வளமனை குழீஇய செல்வத்துக்
கன்னி நன்மதிற் கடிக்கோ சம்பி 150
மன்முத றோறுந் தொன்முதல் பிழையாது
பெருங்கலக் கைவினைப் பேறது பெற்றுத்
தானகந் தாங்கிய வூனமில் செல்வின்
இட்டிடர்ப் பொழுதி னின்ப நீக்கிக்
கட்டழற் புகூஉஞ் சுட்டுறு கோல்போல் 155
நட்டை யிட்டு நாட்டகம் துறந்துதம்
பெருமகற் கொள்ளும் வேட்கையிற் போந்த
குயமக னில்லங் குறுகின னாகி
ஆங்கினி திருத்த வருந்தவ வொழுக்கிற்
சாங்கிய மகளைப் பாங்கினிற் றரீஇ 160
நிகழ்ந்ததை யெல்லா நெறியிற் கூறிப்
புகழ்ந்த வண்ணம் போகுதல் பொருளெனப்
பசியு மழலும் பரிவற வெறியும்
மிசைமருந் தியன்ற விசைவுகொ ளின்பத்துத்
தருப்பணக் கிளியுந் தண்ணீர்க் கரகமும் 165
ஒருப்படுத் தமைத்துப் புறப்படப் போக்கி
அமரிய நண்பிற் றமருளுந் தமராம்
யவனப் பாடி யாடவர் தலைமகன்
தமனியப் பைம்பூட் டம்மிறைக் கியன்ற

எந்திரத் தேர்

தொகு

கண்மணி யன்ன திண்ணட் பாளன் 170
கையிற் புனைந்த கழிநுண் சிறப்பொடு
வையகத் தியங்கும் வெய்யவ னூரும்
தேரி னன்ன செலவிற் றாகி
யாவரு மறியா வரும்பொறி யாணிநின்
இருப்புப் பத்திர மிசையக் கவ்வி 175
மருப்புப் பலகை மருங்கணி பெற்றுப்
பூணி யின்றியும் பொறியி னியங்கும்
மாண்வினை வைய மனத்தி னொய்ப்பக்
கடுப்புந் தவிர்ப்புங் கண்டன னாகிப்
படைத்துப் பெயர்த்தற்குப் பாடமை வித்தகர்க் 180
கண்ணினுங் கையினுந் திண்ணிதி னடக்கி
எண்ணிய கருமத் தன்றியும் யூகி
சிறைவினை நீக்கி யிறைவினை யிரீஇக்
கொடிக்கோ சம்பி புகுத்துதற் கிருந்து
கோடித் தன்ன கோடுசால் வையத்து 185
மூவகை யோகமுஞ் சீரமைத் திரீஇ
எந்திர வூர்தியொ டேனவை யியற்றி
மந்திர மாகத் தந்தம ருளரெனிற்
போத்தந் தல்லது போதாய் நீயென
ஆத்த வாரமோ டவனவ ணொழியத் 190

யூகி புறப்பாடு

தொகு

தெய்வப் படைக்கலங் கையகத் தடக்கி
வத்தவ னன்னா டத்திசை முன்னி
வித்தக வாணி வேண்டுவயின் முறுக்கி
விண்ணகத் திழிந்து விமான மேறி
மண்ணகத் தியங்கன் மனத்தின் வேண்டிய 195
பூந்தார் மார்பிற் புரந்தர குமரனிற்
போந்தனன் மாதோ புறநகர் கடந்தென்.

2 8 யூகி போதரவு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை/2_8_யூகி_போதரவு&oldid=482600" இலிருந்து மீள்விக்கப்பட்டது