பெருங்கதை/5 7 யூகி பிரச்சோதனனைக் கண்டுவந்தது

  • பாடல் மூலம்

5 7 யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது

பிரச்சோதனன் நரவாணதத்தன் பிறந்ததை அறிதல்

தொகு

பொலிந்த செல்வமொடு புகழ்மீக் கூரி மலிந்த திருவின் வத்தவர் பெருங்குடி உண்மகி ழுவகை யூக்க மிமிழப் பண்மகிழ் பேரியாழ் பயிற்றிய கேள்வி உலைவில் வென்றி யுதயண குமரற்கு 5 நலமிகு புதல்வ னன்னாட் பிறந்த உகவை மாற்ற முஞ்சையம் பெருநகர்ப் பகையடு வேந்தற்குப் பணிந்தன னுரைப்பத் தன்மைக் கேற்ற தலைப்பே ரணிகலம் புன்மை தீர முன்னிலை நல்கிப் 10 பழன மணிந்த பதினா றாயிரம் கழனி நன்னகர் கலக்க மில்லன மன்ன னருளி மன்னரு மறவரும் இன்னே வருகென் றியமர மறைகென முரைசெறி முதியற்குப் பெறுவன நல்கி 15 விரைசெல லிவுளி வேந்த னேவ

முரசறைதல்

தொகு

ஓடை யணிந்த வொண்பொ னெற்றிக் கோடுடை வேழம் பாடுபெறப் பண்ணி எருத்தின் மீமிசைத் திருத்தக விரீஇத் துகின்மடி யணைமிசைத் துளக்க மின்றிப் 20 பாற்படு வென்றி நாற்புடை மருங்கினும் கண்டோர் விழையுந் தண்டாக் கோலமொடு நீத்தியாற் றன்ன நெடுங்கண் வீதியுட் போத்தர வமைந்து புகுவழி யெல்லாம் கனைபொற் கடிப்பிற் காண்டக வோச்சிப் 25 புனைபொற் பூந்தார்ப் புரவலன் காக்கும் கன்னி மூதெயி னன்னகர் கேட்ப மதிமரு ணெடுங்குடை மறமாச் சேன்றஃகுப் பதினா றாயிரம் பட்ட மகளிருள் முதற்பெருந் தேவி திருநா ளீன்ற 30 மதுக்கமழ் கோதை வாசவ தத்தை வடதிசை மீனிற் கற்புமீக் கூரி வடுவில் செய்தொழில் வத்தவர் பெருமகன் குறிப்பறிந் தொழுகிக் கோடாக் குணத்தொடு பொறிப்பூண் மார்பிற் புதல்வற் பயந்தனள் 35 கோமகற் பெற்று…. செய்முதல் வந்த சிறப்பின ராகி … யக்கடம் பூண்டபின் வருபரி சார மணிநீர்ப் பேரியாற் றிருகரை மருங்கினு மிந்நில மேத்தச் 40 சீர்மையொடு பொருந்திச் சிறப்பு முந்துறீஇ அறிவி னமர்வார் நெறிமையிற் றிரியா இருபான் மாக்களு மொருபாற் றிருந்த ஊர்திரை நெடுங்கட லுலப்பி னாளொடு வாழ்கநங் கோமான் வையக மெல்லாம் 45 பகையும் பிணியும் பசியு நீங்கித் தகையுஞ் செல்வமுந் தாம்படு கென்ன மிகைபல புகழ்ந்து தொகைஇ யாற்றிய இன்ப மொழியவன் பன்முறை யறைந்தபிற்

நகரை அலங்கரித்தல்

தொகு

… யொண்புக ழுவந்தன ரேத்தி 50 வரைநிரைத் தன்ன மாடந் தோறும் நிரைநிரைத் தன்ன படாகையுங் கொடியும் காட்சிக் காகா மாட்சிய வாகி அணிபெற வுயரிப் பணிவிலர் மறல இந்திர வுலக மிழுக்குபு வீழ்ந்து 55 வந்திருந் தன்றெனக் கண்டவ ரேத்த வேனல வேந்தன் விழுப்பெருங் கோயிலுட் பன்னா றாயிரம் பண்முச சார்ப்ப

பிரச்சோதனன் விழாக் கொண்டாடல்

தொகு

நன்னீர் விரவிய செந்நிறச் சுண்ணம் குலநல மகளிரொடு கோமக னாடி 60 ஐந்நூற் றிரட்டி யருங்கடை தோறும் பசும்பொன் மாசையும்… பிடிப்புவிலை யறியாப் பெருங்கல முட்படக் கொடித்தேர் முற்றத்துக் குறையுடை யோர்கட் கீகென வருளி யெண்டிசை மருங்கினும் 65 ஆய்படை வேந்தற் கரும்பெறற் றிருமகள் வாசவ தத்தை தீதில் சிறப்பொடு புத்திரற் பெற்றனள் பொலிவு முந்துறீஇ மொய்த்த மாநகர் முறைமுறை வருகென அதர்கடி தோடுறு மமைதி யாளரைப் 70 பொறியொற் றோலையொ டறியப் போக்கி ஆராக் காதலொ டணிபா ராட்டி நீராட் டயர்ந்து பல்கல னணிந்து சீரார் செல்வமொடு செவ்வி கொடீஇத் தெரிமா ணாளர் திறவதிற் சூழ 75 அரிமா சுமந்த வாசனத் திருந்து

யூகியைப் பிரச்சோதனன் வருவித்தல்

தொகு

பொன்றாப் புகழோன் போக்கல் வேண்டி ஒன்றா ரட்ட யூகியைத் தரீஇ இன்றியா னெய்தினெ னெனின்… பிரச்சோ தனனவ ணுரைத்ததன் பின்னர்ப் 80

யூகியும் சாலங்காயனும் தர்க்கஞ் செய்தல்

தொகு

பாற்பட் டெய்திய பதினா றாயிரம் தூப்பா லமைச்சர் மேற்பா லறிவிற் றலைக்கை யாகிய நலத்தகு நாட்டத்து ஞாலம் புகழுஞ் சாலங் காயன் ஏற்ற சிறப்பி னியூகி தன்னொடு 85 மாற்றங் கொடுத்தல் வலித்தன னாகி முதல்வன் செவ்வி முகமுத னோக்கிச் சீதைபொரு ளின்றிச் செந்நெறி தழீஇ உதையத் திவரு மொண்சுடர் போல எல்லா மாந்தர்க்கு மிருளற விளங்கும் 90 செல்லா றிதுவெனச் சொல்லுதல் வேண்டிச் சாலவை நாப்பட் சலத்திற் றீர்ந்த கேள்வி யாளரை வேறுதெரிந் தமைத்து வாதம் வேண்டிய சாலங் காயன் மாற்றம் பகுத்தற் காற்றி னாடி 95 மேற்கொண் டுரைக்கு மெய்த்துறை மருங்கின் நூற்பாற் றழீஇய குற்ற மிவையெனக் கேட்டோர் மனமுணக் கிளந்தவன் கடாவ மெய்த்தகு நுண்பொருண் மெத்தப் பன்னி உத்தர வாக்கியம் யூகியு நிறீஇக் 100 கழிபே ருவகையொடு காவல் வேந்தன் ஒழிக நாமிவற் காற்றே முரையெனச் சாலங் காயனைத் தோல்வினை யேற்றி உரைத்த கிளவிக் கொன்றே போல விரித்துப்பல குற்றம் விளங்கக் காட்ட 105

பிரச்சோதனன் யூகியின் விசேட குணங்களை வியத்தல்

தொகு

ஏற்ற முகத்தி னிறைவனும் விரும்பி நண்பின் மாட்சியுங் கல்விய தகலமும் பண்பின் றொழிலும் படைத்தொழின் மாண்பும் காயு மாந்த ராயினும் யாதும் தீயவை கூறப் படாத திண்மையும் 110 இவற்கல தில்லை யிவனாற் பெற்ற அவற்கல தில்லை யரசின் மாட்சியென

பிரச்சோதனன் யூகிக்குச் சிறப்புச் செய்தல்

தொகு

மன்னிசை நிறீஇய நன்ன ராளனொடு நுண்ணெறி நுழையு நூற்பொரு ளொப்புமைத் தன்வயின் மக்களை யவன்வயிற் காட்டி 115 வேண்டற் பால வெறுக்கை நாடி வேண்டா ரட்டோன் வேண்டா னாயினும் அற்பிற் பிணித்த வருண்மறுப் பரிதா நற்பல கொடுத்து நம்பி பிறந்த திருநாட் டானம் பெருநாட் காலை 120 ஏற்போர்க் கீக வின்றே போன்மெனக் கோப்பெருங் கணக்கரைக் குழுவிடை விளங்கக் கடைப்பிடி நுகும்பினு ளிடைப்பட வெழுதுகென் றியூகியு முணர வேயின னாகிப்

யூகிக்கு இருவரை மணம் புரிவித்தல்

தொகு

பரதகன் றங்கை பரந்தரி சிந்திய 125 மதரரி மழைக்கண் மடம்படு காரிகைத் திலகமா சேனையென் றுலகறி பவளையும் சாலங் காயற் கிளையோ ளாகிய நீல வுண்க ணிலவுவிடு கதிர்நுதற் பாக்கிய மமைந்த பார்ப்பியாப் பியையும் 130 ஆகிய வறிவி னரும்பொருட் கேள்வி யூகிக் கீத்துப் பாகுபட லின்றி யாதே யாயினு மாகவினி யெனக்கென மாதாங்கு திண்டோண் மகிழ்ந்தன னோக்கி

பிரச்சோதனன் யூகியைப் பாராட்டல்

தொகு

அங்கண் ஞாலத் தரசிய லமைதி 135 எங்கட் கெல்லா மின்றி யுதயணன் தன்கட் டங்கிய தகைமை நாடின் நின்கண் மாண்பி னெடுமொழி யாள ஆயிற் றென்றுபல வருளொடும் புணர்ந்த யூகிக் குரையா வொருங்குட னிழற்றிப் 140 ……. கனவினு நனவினு மின்ப மல்லது நுனைவேற் றடக்கைநம் புனைமுடி வேந்தன் காணலன் கண்டீர் மாணல மியைந்த நல்வினை யுடையன் பெரிதெனப் பல்லோர் இகழ்தல் செல்லார் புகழ்வனர் புகன்று 145 வாசவ தத்தையும் வத்தவ மன்னனும் ஏசினன … நிவிறொறு மினிய ஞானம் போலப் பயிறொறு மினியநின் பண்புடைக் கிழமை உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள மின்புறப் 150

யூகியை விடுத்தல்

தொகு

பிரிவுறு துன்ப மெம்மாட் டெய்த எரியுறு நெடுவே லேய ரிறைவன் வருக வென்றனன் சென்மதி நீயெனப் பருகுவனன் போலப் படைப்பெரு வேந்தன் அவணே யிருப்ப னிவணே னெனவே 155 கருதல் வேண்டுமெனக் கைவிரல் பற்றி விடுக்கும் பொழுதி னெடுத்தவ னின்னேர் உண்டோ வொழுக்கி னென்றுபின் விடுப்ப அருங்கலம் பிறவு மொருங்கு முந்துறீஇ வேந்துறை முதுநகர் வியன்மலை யாகப் 160 போந்துகடன் மண்டும் புண்ணிய நீர்த்துறைப் பேரியா றென்ன வார்பெருஞ் செல்வமொடு நன்ப னாட்டகம் பின்பட நீந்தி வளங்கவி னெய்திய வத்தவ னிருந்த நலம்பெறு நகரம் புக்கன னினிதென் 165 5 7 யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது முற்றிற்று.