பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/பாட்டுடைத் தலைவன்
பாட்டுடைத் தலைவன்
தொண்டைமான் இளந்திரையன்
தமிழ் நாடாண்ட பேரரசர் மூவரோடும் ஒருங்கு வைத்து மதிக்கத்தக்க மாண்புடையான் திரையன்; பட்டினப்பாலை பாடித் திருமாவளவனைப் பாராட்டிப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் பெற்ற பெரும் புலவராய கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாராட்டப் பெறும் பெருமை உடையவன் திரையன். அவன் வெற்றி தரும் வேற்படையுடையான்; வேங்கட நாடாண்ட விழுச்சிறப்புடையான்; அழியாப் புகழ் உடையான்; அழகிய அணிகலன் அணிந்த ஆண்மையாளன்; பூஞ்சோலை பல சூழ்ந்த பவத்திரி எனும் ஊர் உடையான் எனப் பிற புலவர்களும் அவனைப் பாராட்டியுள்ளனர்,
"வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை"
—அகம்-85
"செல்லா நல்லிசைப் பொலம்பூண் திரையன்
பல்பூங்கானல் பவத்திரி"
அகம்-240
"நண்ணார்
செறிவுடைத் திண்காப்பு ஏறிவாள் சுழித்து
உருகெழுதாயம் ஊழின் எய்தி"
—பட்டினப்பாலை-220-227
"பல்ஒளியர் பணிபொடுங்கத்
தொல் அருவாளர் தொழில்கேட்ப
வடவர் வாடக், குடவர் கூம்பத்
தென்னவன் திறல் கெட
... ... ... ... ... ...
இருங்கோ வேள் மருங்குசாய"
—பட்டினப்பாலை 274-32
கடியலூர் உருத்திரங்கண்ணனார், தொண்டைமான் இளந்திரையனையும், கரிகாற்பெருவளத்தானையும் பாட முற்பட்டுத் தமிழ்நாட்டின் இயற்கை வளமும், செல்வ வளமும் ஒருங்கே விளங்கப் பாடியுள்ளார். அந்தணர், ஆயர், உமணர், உழவர் முதலாம் உள்நாட்டு மக்கள் குறித்தும், பரதவர் வணிகர் முதலாம் கடற்கரை நகர்வாழ் மக்கள் குறித்தும் அவர் கூறுவன அக்காலத் தமிழ்நாட்டு நிலையினைத் தெளிய உணரத் துணைபுரிவனாம்.
"வளைவாய்க் கிள்ளை மறைவினி பயிற்றும்
மறை காப்பாளர் உறைபதி"
—பெரும் பாணாற்றுப்படை-300-301.
"நெய்விலைக் கட்டிப் பசும்பொன்கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலக்குடி"
—பெரும் பாணாற்றுப்படை -163-66
திரையன், அல்லன கடிந்து நல்லன ஓம்பும் அறநெறி அறிந்தவன்; அதனால், அந்நாடு அரசரான் அழிவுறுவதில்லை. திரையன் நாடு காவல் செறிந்த நாடு; அதனால், வழிப் போவாரை வருத்தி, அவர் கைப்பொருளைக் கவர்ந்து செல்லும் ஆறலை கள்வரை அந்நாட்டில் எங்கும் காணல் அரிது. அவன் அறம் விரும்பும் பெருங்கோலன்; அதனால், அவன் நாட்டு மக்களை, இடியும், இடித்துத் துயர் தருவதில்லை. பாம்புகளும் பிறரைக் கடித்துத்துயர் செய்யா. காட்டு வாழ் புலி முதலாம் கொடு விலங்குகளும், மக்களுக்குக் கொடுமை செய்வதில. அதனால், அவன் நாடு நோக்கி வரும் பதியோர், தாம் வேண்டும் இடத்தே வேண்டியாங்கு இருந்து இளைப்பாறிச் செல்வர். என்னே அவன் நல்லாட்சி!
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன் படர்குவி ராயின்
... ... ... ... ... ...
வேட்டாங்கு
அசைவழி அசைஇ, நசைவழித் தங்கிச்
சென்மோ"
பெரும்பாணாற்றுப்படை—39-45
நாடு நலமெலாம் பெற்று நனி சிறந்து விளங்க நாடாண்ட நல்லோனாய திரையன் வரலாற்றினை விளங்க உணரும் வாய்ப்பு வாய்த்திலது; அவன் நாடு, அந்நாட்டு வளம், அவன் ஆட்சித்திறம் ஆகியவற்றை விளங்க விரித்துரைத்த புலவர்களும், அவன் வரலாற்றினை விரித்துரைத் தாரல்லர்.
திரையன் திருமாலை முதல்வனாகக் கொண்ட குடியிற் பிறந்தவன்: திரைதரு மரபின் வழிவந்தவன் திரையன் எனும் பெயருடையான்; சேர, சோழ பாண்டியர் மூவரிலும் சிறந்தவன்: கடலிற் பிறந்த வளைகள் பலவற்றுள்ளும் வலம்புரிச் சங்கு சிறந்ததாதல் போல், அரசர் அனைவரினும் சிறந்தவன்; அல்லது கடிந்து அறம் விளங்க நாடாண்டவன். வேற்படை பலவுடையான்.
இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்
திரைதரு மரபின் உரவோன் உம்பல்;
மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப்பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன்"
பெரும்பாணாற்றுப்படை—29-37
நீர்ப் பேர் எனும் பெயருடையதொரு பேரூர் இவனுக்கு உரித்து. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு காவல் மேற்கொண்டவன்.
"நீர்ப் பெயற்று எல்லை போகி"
—பெரும் பாண்-319
"கச்சியோனே கைவண் தோன்றல்"
—பெரும் பாண்-420
யானைகள் கொணரும் விறகினால் வேள்வி வேட்கும் அந்தணர் நிறைந்த வேங்கட மலையும் அவன் ஆட்சிக்கு உட்பட்டதே.
"செந்தீப் பேணிய முனிவர், வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங்கு அருவிய மலைகிழ வோனே"
—பெரும் பாண்-498-500
பகைவர் பணிந்து திறைதர முன்வரினும் அதை ஏற்றுக்கொள்ள எண்ணாராய், அவரை அழித்து அவர் பொருள் அனைத்தையும் கைப்பற்றி உண்ணும் ஆற்றல் வாய்ந்தவர்.
"பகைவர், கடிமதில் எறிந்து குடுமிகொள்ளும்
வென்றியல்வது, வினையுடம் படினும்,
ஒன்றல் செல்லா, உரவுவாள் தடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக"
—பெரும் பாண்-450-54
தன் பாட்டுடைத் தலைவன் திரையன் வரலாறாகக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுவன இத்தனையவே.
திரையன் வரலாறு குறித்துப் பல்வேறு கருத்துக்களைக் கூறுவர் ஆராய்ச்சியாளர். "நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாக கன்னியைப் புணர்ந்த காலத்து, அவள் யான் பெற்ற புதல்வனை என் செய்வேன் என்ற பொழுது, தொண்டையையே அடையாளமாகக் கட்டிக் கடலிலேவிட, அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பன் என்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின் திரையன் என்று பெயர் பெற்றான்" என நச்சினார்க்கினியர் கூறும் செய்திகளை ஏற்றுக் கொண்டு, அச் சோழன் கிள்ளி வளவனாவன், நாககன்னி பீலிவளையாவள் என்று கொள்வர் சிலர்.
பல்லவன், அசுவத்தாமனுக்கும், மதனி என்ற அரமகள் ஒருத்திக்கும் பிறந்தவனாவன்; அசுவத்தாமன் துரோணரின் மகன்; துரோணர், கங்கை, நீரிற் பிறந்தவளாய 'க்ருதாசி' என்ற நீரரமகளுக்கும், பாரத்வாஜ முனிவருக்கும் பிறந்தவர். இதனால், பல்லவர், திரைதரு மகளிர் மரபினராதல் தெளிவாம்; இப் பல்லவரைக் குறிக்க வழங்கும் தொண்டையர் என்ற பெயரின்கண் வரும் தொண்டை என்ற சொல் துரோணர் என்ற சொல்லின் மரூஉ முடிபாம் என்று கூறித் திரையன் வரலாறு குறித்து நச்சினார்க்கினியர் கூறியதை மறுத்து வேறு கூறுவர் சிலர்.
தொல்காப்பிய மரபியலில் 83-ஆம் நூற்பாவின் உரையிற் பேராசிரியர் "மன் பெறு மரபின் ஏனோர் எனப்படுவார் அரசுபெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க: அவை பெரும் பாணாற்றுள்ளும் பிறவற்றுள்ளும் காணப்படும்" என எழுதியுள்ளமையால் தொண்டையர் நம் பண்டை மரபினர் எனக் கொள்ளலாம்.
பெரும்பாணாற்றுப்படைத் தலைவனாகிய திரையன் மன்னன், வீரன், வள்ளல் என்னும் சிறப்புக்கள் மட்டுமன்றி, பாடல் இயற்றும் திறன் பெற்ற காவல பாவலனாகவும் திகழ்ந்தான். அவன் பாடிய பாடல்கள் நற்றிணையில் மூன்றும், புறநானூற்றில் ஒன்றும் (புறம் 183) இடம் பெற்றுள்ளன.