பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/புலவர் பண்பாடு

பெரும்பாணாற்றுப்படை
விளக்கவுரை


1. புலவர் பண்பாடு

"பண்புடையார் பட்டு உண்டு உலகம்" என்றார் வள்ளுவர். (குறள்-996) "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையான் உண்டால் அம்ம! இவ்வுலகம்" என்றான் பாண்டி நாடாண்ட பாவல்ல காவலன் ஒருவன். (புறம்-182) அத்தகைய பண்பாடறிந்த பெரியார் பலர் பண்டு வாழ்ந்திருந்தமையால் நம் பைந்தமிழ் நாடு இன்றும் பெருமை குன்றாமல் நின்று வாழ்கிறது. அப்பண்பாட்டு நெறியைப் போற்றி வளர்த்தவர்கள் தம் பைந்தமிழ்ப் புலவர்கள். அத்தகைய புலவர்களுள் ஒருவர்பால் கண்ட பண்பாடு இது:

வெள்ளை நூலை விரித்து வைத்தாற்போல் நரைத்து முதிர்ந்த தலை; கையிற் கொண்ட கோலே காலாக, அடிமேல் அடியிட்டுப் பையப் பைய நடக்கும் தளர்ச்சி. மனையின் முன்புறத்தையும் அறிந்து செல்லமாட்டாதபடி மாசடைந்து பார்வை இழந்த கண்கள். உடலும் உள்ளமும் தளர்ந்து போகவும் உயிர் போகாமை கண்டு, 'இவ்வளவு காலம் வாழ்ந்தேன்; இன்னமும் உயிர் போகவில்லையே!' என்று வாழ்நாளை வெறுக்கும் வாய். பெற்றெடுத்த பெருமைக்குரிய தாயின் நிலை இது.


"வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்
தீர்தல் செல்லாது என் உயிர் எனப் பலபுலந்து,
கோல் காலாகக் குறும்பல ஒதுங்கி
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண்துயின்று
முன்றில் போகா முதர்வினள் யாய்."

(புறம் 159)

வறுமைத் துன்பத்தால் வாடிய மேனி. இளம் மகவு இடைவிடாது உண்டு உண்டு உலர்ந்து போன கொங்கைகள், குப்பைமேட்டில் தாமே முளைத்திருக்கும் கீரைத் தண்டுகளில், முன்பு கொய்த இடத்தில் தளிர்த்த புதிய தளிர்களைக் கொய்து வந்து, உலையில் உப்பு இடாமல் இட்டு ஆக்கிய கீரையல்லது, சோறும் மோரும் காணா உணவு. அழுக்கேறி அளவின்றிக் கிழிந்து போன ஆடை; தன்னையும் தன் குடும்பத்தினரையும் வறுமையில் வாடவிட்ட தெய்வத்தை வைது கொண்டேயிருக்கும் வாய். மனைக்கு மங்கலமாய் மாட்சி தர வந்த மனைக் கிழத்தியின் நிலை இது.


"பசந்த மேனியொடு படரட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறுமாக்கள்
பிசைந்து தினவாடிய முலையள், பெரிது அழிந்து
குப்பைக்கீரை கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்து கொண்டு உப்பின்று
நீர் உலையாக ஏற்றி, மோர் இன்று
அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம்பழியாத்
துவ்வாளாகிய என் வெய்யோள்".

(புறம் 159)

உண்பொருள் எதுவும் இன்மையால் வீட்டை மறந்து வெளியிடங்களிலேயே அலைந்து திரிவதால் மயிர் உதிர்ந்து காய்ந்து போன தலை, ஒரோவொருகால் வீட்டிற்கு வருங்கால் கூழும் சோறும் வேண்டிக் கூப்பாடு போடும் ஓயா அழுகை. அழுகை ஓய்ந்து அறைதனுள் அடுக்கிவைத்திருக்கும் கலங்களை ஒவ்வொன்றாகத் திறந்து நோக்கி, எதிலும் எதுவும் இன்மை கண்டு கலங்கி நீர் சொரியும் கண்கள். தன் அழுகையை அடக்க வேண்டி, 'புலி புலி' என அச்சங்காட்டியும், அம்புலி அழைத்து அன்பு காட்டியும் அழுகை ஓயாதாக, மனம் நொந்து 'மைந்த' வருந்தும் உன் முகத்தைத் தந்தை வந்தால் அவர்க்குக் காட்டு" என்று கூறி வெறுக்கினும் தாய் முகமே நோக்கும் நோய் நோக்கு. பொன்போற் புதல்வன் எனப் போற்றத் தகும் புதல்வன் நிலை இது.


"இல் உணாத் துறத்தலின் இல் மறந்து உறையும்
புல் உளைக்குடுமிப் புதல்வன் பன்மாண்
பால்இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்இல் வறுங்கலம் திறந்து அழக்கண்டு
மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனளாகி நுந்தையை உள்ளிப்
பொடிந்த நின் செல்வி காட்டென,"

(புறம் 160)

இழ்வாறு வறுமையின் வாழிடமாய்க் காட்சி அளித்தது பழந்தமிழ்ப் புலவர் ஒருவரின் இல்லம். ஆனால், அந்நிலை நெடிது நிற்கவில்லை. புலமையின் பெருமையறிந்து வாரி வழங்கவல்ல வள்ளல் ஒருவனைச் சென்று கண்டார் புலவர். அவன் புகழைப் பாடிப் பாராட்டினார். குன்றத்தனை இரு நிதியைக் கொடுத்துப் புகழ் கொண்டான் அக்கொடையாளி. இல்லாமையின் இருப்பிடமாய் இருந்த புலவர் இல்லம் பொன்னாலும் பொருளாலும் நிறைந்து விட்டது.

பெருஞ் செல்வம் பெற்ற அந்நிலையில், "இத்துணைக் காலம் வறுமையில் கிடந்து உழன்றோம். இறுதியில் கிடைத்தது இப்பெருவளம் இது தொலைந்து விட்டால் இது போலும் இருநிதியை மீண்டும் எய்துவது எக்காலமோ? ஆகவே, இதை நம் வாழ்நாள் வரையும் வைத்து வயிறார உண்டு நாமே வாழ வேண்டும்" என்று போக்கில் போகவில்லை புலவர் உள்ளம். மாறாக மனைக்கிழத்தியை அழைத்தார், அம்மாநிதிப் பெருக்கத்தை அவளுக்குக் காட்டினார். காட்டிய பின்னர் "பெண்னே! இவ்வளவும் நம் உடைமைகள்தாம். ஆனால் இவற்றை நாம் மட்டுமே தனித்திருந்துண்ண எண்ணல் கூடாது. வறுமையில் கிடந்து உழன்று உழன்று, வறுமை நோய் எத்துணைக் கொடிது என்பதை அறிந்திருக்கிறோம் நாம். அவ் வறுமையில் கிடந்து உழல்வோரையே மிகப் பலராகக் கொண்டது இம் மண்டிலம். அவர்கள் எல்லோரும் வருந்த நாம் மட்டும் வளமார் வாழ்வில் வாழ்வது முறையாகாது. ஆகவே, "வல்லாங்கு வாழ்த்தும்" என எண்ணாது, எல்லார்க்கும் நீயும் கொடுப்பாயாக! என்று கூறிக் கொடையுரிமையை அவர்க்கும் கொடுத்துத் தாமும் கொடையாளியாகிப், புலமையோடு, குன்றாக் கொடைப்புகழையும் ஈட்டிக் கொண்டார். பழந்தமிழ்ப் புவவர்களின் பண்பாடு இது.


"இன்னோர்க்கு என்னாது என்னொடும்சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி, மனைகிழவோயே!"

(புறம் 163)

அப்பண்பார் நெறியில் வந்தவர் பெரும்பாணாற்றுப்படை பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், காஞ்சியாண்ட காவலன் திரையனைக் கண்டார். அவன் அவர் பெருமையறிந்து பாராட்டிப் பரிசு பல அளித்தான். அவன் கொடுத்த பொருட் குவியலால் அவன் கொடைவளத்தைக் கண்டு கொண்ட புலவர், அவன் ஆளும் தொண்டை நாட்டைச் சுற்றிப் பார்த்து, அந்நாட்டு வயல் வளத்தையும், அவ்வளம் பெருகத் துணை புரியும் திரையன் செங்கோல் நலத்தையும் நேரிற் கண்டு கொண்டார். பொன்னும் பொருளும் அளித்துப் புலவர்களைப் புரக்கும் திரையன் பெருமையையும் பாராட்ட வேண்டும். அத்தகைய வள்ளியோன் ஒருவன், வருவார்க்கு வழங்கத் தன் வாயிலைத் திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கிடக்கவும், அதை அறிந்து கொள்ள மாட்டாமையால் வறுமையிற் கிடந்து வாடும் புலவர்களுக்கு அவன் இருப்பதை நினைவூட்டி, அவர்களை அவன்பால் போக்கி அவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்ற பேருள்ளம் கொண்டார். அவ்விரு பெரும் வேட்கைகளின் விளைவால் உருப் பெற்றதே பெரும்பாணாற்றுப்படை. அதனால், திரையன் பெருமை பார் உள்ளளவும் அழியா நிலை பெற்றதும், புலவர்களின் வறுமைத் துயர் வாடியதும் ஒருபுறம் இருக்க, தமிழர்க்குத் தன்னேரில்லா இலக்கியக் கருவூலம் ஒன்றும் கிடைத்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொண்டை நாட்டு நலங்களை, இன்றும் என்றும் நேர் நின்று காணத் துணைபுரியும் ஒரு தொலை நோக்கிக் காலக் கண்ணாடி, தமிழர்களின் அறிவுக் கண்களில் கிடந்து அணி செய்யும் பெறற்கரிய பேறும் வாய்த்துளது.