பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/இணைப்பு : பெரும்பாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
அகவிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்
5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
உருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்
சுனைவறந் தன்ன இருள்துங்கு வறுவாய்ப்
10
பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பனைத் திரடோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின்
மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பின்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
15
தொடையமை கேள்வி இடவயிற் றழீஇ
வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதரும்
தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரந் தேரும் பறவை போலக்
20
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!
பெருவறங் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளிசொரிந் தாங்குப்
பழம்பசி கூர்ந்தவெம் இரும்பே ரொக்கலொடு
25
வழங்கத் தவாஅப் பெருவள னெய்தி
வாலுளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு
யாமவ ணின்றும் வருதும் நீயிரும்
இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த்
30
திரைதரு மரபின் உறவோ னும்பல்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்
35
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேற் றிரையற் படர்குவி ராயின்
கேளவன் நிலையே கெடுகநின் னவலம்
அத்தஞ் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வெளவுங் களவேர் வாழ்க்கைக்
40
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்
உருமும் உரறா தரவுந் தப்பா
காட்டுமாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவுழி யசைஇ நசைவழித் தங்கிச்
சென்மோ இரவல சிறக்கநின் உள்ளம்
45
கொழுஞ்சூட் டருந்திய, திருந்துநிலை யாரத்து
முழவின் அன்ன முழுமர உருளி
எழுஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிக் குன்றம் மழைசுமந் தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்
50
வேழங் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்குங் கூடுடைப் புதவின்
முளையெயிற் றிருப்பிடி முழந்தா ளேய்க்கும்
துளையரைச் சீறூரல் தூங்கத் தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத் தெடுத்த
55
விசிவீங் கின்னியங் கடுப்பக் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகஉடை மகடுப் பகடுபுறந் துரப்பக்
கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை மிடைந்த
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்
60
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த
பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்பச்
சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்
பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி
65
எல்லிடைக் கழியுநர்க் கேம மாக
மலையவும் கடலவும் மாண்பயந் தரூஉம்
அரும்பொருள் அருத்துந் திருந்துதொடை நோன்றாள்
அடிபுதை யரண மெய்திப் படம்புக்குப்
பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின்
70
விரவுவரிக் கச்சின் வெண்கை யொள்வாள்
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக்
கருவி லோச்சிய கண்ணகன் எறுழ்த்தோள்
கடம்பமர் நெடுவே ளன்ன மீளி
75
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்
தணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
88
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியங் காட்டியவின்
நீளரை இலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற அணிலொடு கருப்பை யாடாது
85
யாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தகர்
ஈத்திலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்காழ்
90
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
இருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவின்
95
நீழன் முன்றி னிலவுரற் பெய்து
குறுங்காழ் உலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லுற் றுவரி தோண்டித் தொல்லை
முரவுவாய்க் குழிசி முரியடுப் பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுங்கல்
100
வாடாத் தும்பை வயவர் பெருமகன்
ஓடாத் தானை யொண்டொழிற் கழற்கால்
செவ்வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையில் தேக்கிலைக் குவைஇநும்
பைதீர் கடும்பொடு பதமிகப் பெறுகுவிர்
105
மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர்நசைஇக் குழித்த
அகழ்சூழ் பயம்பின் அகத்தொளித் தொடுங்கிப்
புகழா வாகைப் பூவி னன்ன
வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கும்
110
அரைநாள் வேட்ட மழுங்கிற் பகனாள்
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்
115
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணும்
அருஞ்சுரம் இறந்த வம்பர்ப் பருந்துபட
ஒன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ
120
சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனகர்
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு
கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்த்
தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர்
125
வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பைக்
கொடுநுகந் தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயில்
கொடுவில் எயினக் குறும்பிற் சேப்பின்
களர்வளர் ஈந்தின் காழ்கண் டன்ன
130
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ்க் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்தது வயின்றோறும் பெறுகுவீர்
யானை தாக்கினும் அரவுமேற் செலினும்
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
135
சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புவிப்போத் தன்ன புல்லணற் காளை
செல்நா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு
140
நாளா தந்து நறவுநொடை தொலைச்சி
இல்லடு கள்ளின் தோப்பி பருகி
மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச்
சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉ
பகன்மகிழ் தூங்குந் தூங்கா இருக்கை
முரண்டலை கழிந்த பின்றை மறிய
குளகரை யாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றை வாயிற் செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்
150
அதளோன் துஞ்சுங் காப்பின் உதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி யெருப்படு வரைப்பின்
நள்ளிருள் விடியற் புள்ளெழப் போகிப்
155
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை அன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச்
160
சிறுகுழை துயல்வரும் காதிற் பனைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்த லாய்மகள்
அளைவிலை உணவிற் கிளையுட னருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்
165
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப் பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்
தொடுதோல் மரீஇய வருவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை
170
உறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைத்த படலைக் கண்ணி
ஒன்றம குடுக்கைக் கூழா ரிடையன்
175
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
அந்நு ணவிர்புகை கமழக் கைமுயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தித் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையிற் குமிழின்
180
புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற் பறவை கிளைசெத் தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி முள்ளுடுத்
தெழுகாடோங்கிய தொழுவுடை வரைப்பிற்
185
பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
190
கருவை வேய்ந்த கவின்குடிச் சீறுார்
நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குரளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
அவரை வான்புழுக் கட்டிப்பயில்வுற்
195
றின் சுவை மூரற் பெறுகுவிர் ஞாங்கர்க்
குடிநிறை வலசிச் செஞ்சா லுழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித்
200
தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதி னிரியல் போகி
வண்ணக் கடம்பி னறுமல ரன்ன
வளரிளம் பிள்ளை தழீஇக் குறுங்காற்
கறையணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
205
வன்புல மிறந்த பின்றை மென்றோல்
மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தா ளலவன் அளற்றளை சிதையப்
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன் செறுவின்
210
உழா அ நுண்டொளி நிரவிய வினைஞர்
முடிநா றழுத்திய நெடுநீர்ச் செறுவிற்
களைஞர் தந்த கணைக்கா ணெய்தற்
கட்கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்
215
கொடுங்கால் மாமலர் கொய்து கொண் டவண
பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி
ஈருடை இருந்தலை யாரச் சூடிப்
பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின்
220
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்புவடித் தன்ன மடியா மென்றோற்
கருங்கை வினைஞர் காதலஞ் சிறா அர்
பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற்
புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில்
225
அவலெறி உலக்கைப் பாடுவிறந் தயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்
நீங்கா யாணர் வாங்குகதிர்க் கழனி
கடுப்புடைப் பறவைச் சாதி யன்ன
பைதற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
230
தூம்புடைத் திரடாள் துமித்த வினைஞர்
பாம்புறை மருதி னோங்குசினை நீழற்
பலிபெறு வியன்கள மலிய வேற்றிக்
கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந் தாடும்
துணங்கையம் பூதந் துகிலுடுத் தவைபோற்
235
சிலம்பி வானுால் வலந்த மருங்கின்
குழுமுநிலைப் போரின் முழுமுதல் தொலைச்சிப்
பகடூர் பிழிந்த பின்றைத் துகடப
வையுந் துரும்பும் நீக்கிப் பைதறக்
குடகாற் றெறிந்த குப்பை வடபாற்
240
செம்பொன் மலையிற் சிறப்பத் தோன்றும்
தண்பணை தழீஇய தளரா இருக்கைப்
பகட்டா வீன்ற கொடுநடைக் குழவிக்
கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்குல்
ஏணி யெய்தா நீணெடு மார்பின்
245
முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லில்
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நற்றே ருருட்டிய புதல்வர்
தளர்நடை விருத்தம் வீட அலர்முலைச்
250
செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பாலார்ந்து
அமளித் துஞ்சும் அழகுடை நல்லில்
தொல்பசி யறியாத் தளங்கா விருக்கை
மல்லற் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
255
மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவீர்
மழைவிளை யாடுங் கழைவள ரடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்கு
எந்திரஞ் சிலைக்குந் துஞ்சாக் கம்பலை
260
விசய மடூஉம் புகைசூழ் ஆலைதொறும்
கரும்பின் தீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்
வேழ நிரைத்து வெண்கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றிற்
265
கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்
இளையரு முதியருங் கிளையுடன் துவன்றிப்
புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்
270
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினும் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடுகாத் திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின்
அவையா வரிசி யங்களித் துழவை
275
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த
280
வெந்நீர் அரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோற்
கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த
நெடுங்கழைத் தூண்டி னடுங்க நாண்கொளீஇக்
285
கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப்
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணிப் பிரம்பி னடுங்குதிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங்கயந் தீப்பட மலர்ந்த
கடவு ளொண்பூ அடைத லோம்பி
290
உறைகால் மாறிய ஓங்குயர் நனந்தலை
அகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப
அரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி
முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக்
குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர்
295
பெருநா ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுநாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது
வளை வாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
300
மறைகாப் பாளர் உறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம்
305
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளைஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்
310
வண்ட வாயமொ டுண்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை
இரைதேர் மணிச்சிர விரைசெத் தெறிந்தெனப்
புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
315
வேள்வித் துாணத் தசைஇ யவனர்
ஓதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ்
வாலுளைப் புரவியொடு வடவளந் தரூஉம்
320
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
மாட மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர் மலிந்த பல்வேறு தெருவிற்
சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின்
நெல்லுழு பகட்டொடு கறவை துன்னா
325
மேழகத் தகரோ டெகினங் கொட்கும்
கூழுடை நல்விற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினைப் பணிதவழ் பவைபோற்
பைங்கா ழல்குல் நுண்டுகி னுடங்க
மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும்
330
பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை
வான்றோய் மாடத்து வரிப்பந் தசைஇக்
கைபுனை குறுந்தொடி தத்தப் பைபய
முத்த வார்மணற் பொற்கழங் காடூம்
335
பட்டின மருங்கி னசையின் முட்டில்
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற்
செம்பூத் தூய செதுக்குடை முன்றிற்
கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பின்
340
ஈர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டிப்
பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது
நென்மா வல்சி தீற்றிப் பன்னாள்
குழிநிறுத் தோம்பிய குறுந்தா ளேற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவிர்
345
வான மூன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீ ரழுவத் தோடுகலங் கரையுந்
350
துறைபிறக் கொழியப் போகிக் கறையடிக்
குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
வண்டோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணநாறு படப்பைத்
தண்டலை யுழவர் தனிமனைச் சேப்பின்
355
தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழில் தாழைக் குழவித் தீநீர்க்
கவைமுலை யிரும்பிடிக் கவுள்மருப் பேய்க்கும்
குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்
திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்
360
தீம்பல் தார முனையிற் சேம்பின்
முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயல்
மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின்
புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்காய்
ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரச்
365
சோறடு குழிசி இளக விமூஉம்
வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப்
பன்மர நீளிடைப் போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்குசுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்
370
நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
375
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
இழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோல்
நிழல்தாழ் வார்மண னீர்முகத் துறைப்பப்
புனல்கால் கழிஇய பொழில்தொறுந் திரள்காற்
380
சோலைக் கமுகின் சூழ்வயிற் றன்ன
நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும்
பெருமகிழ் இருக்கை மரீஇச் சிறுகோட்டுக்
குழவித் திங்கட் கோணேர்ந் தாங்குச்
சுறவுவாய் அமைத்த சுரும்புசூழ் சுடர்நுதல்
385
நறவுப்பெயர்த் தமைத்த நல்லெழின் மழைக்கண்
மடவரல் மகளிரொடு பகல்விளை யாடிப்
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச்
செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயின்
390
அருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநும்
கருங்கோட் டின்னியம் இயக்கினிர் கழிமின்
காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவறாங் காவிற்
395
களிறுகத னடக்கிய வெளிறில் கந்தின்
திண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற்
படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க்
கடைகால் யாத்த பல்குடி கெழீஇக்
கொடையும் கோலும் வழங்குநர்த் தடுத்த
400
அடையா வாயில் மிளைசூழ் படப்பை
நீனிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரை பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பின்
405
இழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலாஅப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய
மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ
410
விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்
அவ்வாய் வளர்பிறை சூடிச் செல்வாய்
அந்திவானத் தாடுமழை கடுப்ப
வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப்
415
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
அடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத் தார்த்துக்
கச்சி யோனே கைவண் தோன்றல்
420
நச்சிச் சென்றோர்க் கேம மாகிய
அளியுந் தெறலு மெளிய வாகலின்
மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப
நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோரும்
425
துப்புக்கொளல் வேண்டிய துணையி லோரும்
கல்வீழ் அருவி கடற்படர்ந் தாங்கு
பல்வேறு வகையிற் பணிந்த மன்னர்
இமையவ ருறையுஞ் சிமையச் செவ்வரை
வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
430
பொன்கொழித் திழிதரும் போக்கருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப் பாணியில் தூங்கி யாங்குத்
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்
செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்துப்
435
பெருங்கை யானைக் கொடுந்தொடிப் படுக்கும்
கருங்கைக் கொல்லன் இரும்புவிசைத் தெறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ மாடத்து
இறையுறை புறவின் செங்காற் சேவல்
இன்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர்க்
440
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டுநர்க் கருளி
இடைத்தெரிந் துணரும் இருடீர் காட்சிக்
445
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்து
உரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகிப்
பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான்
கொடுவரிக் குருளை கொளவேட் டாங்குப்
புலவர் பூண்கட னாற்றிப் பகைவர்
450
கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினும்
ஒன்றல் செல்லா உரவுவாள் தடக்கைக்
கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ
455
செல்வர் செல்வ செருமேம் படுந
வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர்க் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்குத்
தண்டா ஈகைநின் பெரும்பெய ரேத்தி
460
வந்தேன் பெரும் வாழிய நெடிதென
இடனுடைப் பேரியாழ், முறையுளிக் கழிப்பிக்
கடனறி மரபிற் கைதொழூஉப் பழிச்சி
நின்னிலை தெரியா வளவை யந்நிலை
நாவலந் தண்பொழில் வீவின்று விளங்க
465
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அந்நிலை யணுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன சிதர்வை நீக்கி
ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்
இரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇக்
470
கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை
அரிசெத் துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ ளரிசித் திரணெடும் புழுக்கல்
அருங்கடித் தீஞ்சுவை யமுதொடு பிறவும்
475
விருப்புடை மரபிற் மரபுடை யடிசில்
மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து
ஆனா விருப்பிற் றானின் றூட்டி
மங்குல் வானத்துத் திங்க ளேய்க்கும்
480
ஆடுவண் டிமிரா அழலவிர் தாமரை
நீடிரும் பித்தை பொலியச் சூட்டி
உரவுக்கடல் முகந்த பருவ வானத்துப்
பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந் தாங்குப்
புனையிருங் கதுப்பகம் பொலியப் பொன்னின்
485
தொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண் டன்ன வாலுளைப் புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
அரித்தேர் நல்கியும் அமையான் செருத்தொலைத்து
490
ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தொழித்த
விசும்புசெல் இவுளியோடு பசும்படை தரீஇ
அன்றே விடுக்குமவன் பரிசில் இன்சீர்க்
கின்னர முரலும் அணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலு மரம்பயி விறும்பிற்
495
கலைபாய்ந் துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே.
500