பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/தொண்டைநாட்டு மலை மாண்பு



15. தொண்டை நாட்டு மலை மாண்பு

திரையன் அளிக்கும் பரிசில் பெரும் பெரும்பாணனும், அவன் சுற்றுமும் திரையன் பால் விடை கொண்டு, தேர் மீதும், குதிரைகள் மீதும் அமர்ந்து தம் ஊர் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல, அவர்கள் செல்லும் இன்பக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி பொங்கத் தன்னை மறந்து நிற்கும் திரையனைக் காணும் புலவர் உள்ளம், "இரவலர் வாழத் திரையன் வாழ்க! அவன் அப் பெரு நிலையில் வாழ, அவன் நாடு பல வளமும் பெற்றுவாழ்க!" என வாழ்த்தத் துடிக்கும். அதனால் அவன் நாட்டு வளத்தை, ஒரு நாள் இருந்து மறுநாள் அழிந்து விடாது முக் காலங்களிலும் தொடர்ந்து நிலை பெற வல்ல பொருள்களைக் கூறுங்கால், நிகழ் கால வினை முற்றால் கூறும் மரபு வழி நின்று, நிகழ் கால நிகழ்ச்சிகளாகப் பாராட்டத் தொடங்கி விட்டார்.

"இசையின் நுட்பம் அறியவும், இனிய இசையைத் தாளம் தவறாமல் எழுப்ப வல்லனவுமாகிய கின்னரப் பறவைகள் பாடித்திரிய, அவ்வின்னிசை கேட்கத் தெய்வங்களும் வந்து குழுமியிருக்க, சோலை மரங்களில், மயில் கூட்டம் மகிழ்ச்சி மிக்குத் தோகை விரித்து ஆட, மயில் ஆட்டம் கண்டு மகிழும் குரங்குகள் மரக்கிளைகளை ஆட்டி மலர்களை உதிர்க்க, உதிர்த்த மலர்க் குவியலை மந்திகள் வாரி, மரத்தடிகளைத் துப்பரவு செய்ய, அம் மரத்தடியில் மானும் புவியும், தம் பகை மறந்து இணைந்து படுத்து உறங்க, நாடு வாழ, முப் தீப் பேணி வளர்க்கும் முனிவர் குழாம், காட்டு யானைகள், தம் வெண்கோடுகளால் முட்டிச் சாய்த்து முறித்துக் கொண்டு வரும் விறகு கொண்டு, இடைவிடாத் தீ மூட்டி வேள்வி இயற்ற, இந் நலங்களால் சிறப்புறும், அவன் வேங்கட மலையையும், அதைச் சூழ உள்ள நாடும், அம் மலையில், நீர்த்திவலைகள் நெடுந் தொலைவு தெறித்து வெண்ணிற ஒளி காட்டி, 'ஒ' எனும் ஒலி எழுப்பி, ஓய்வு இன்றி ஓடிக் கொண்டேயிருக்கும் அருவிகள் போல் என்றும் வாழும்" என உளமார்ந்த வாழ்த்தை வழங்கி முடித்தார்.

வாழ்க திரையன்! வாழ்க பெரும்பாணன்! வாழ்க புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்!


"இன்சீர்க்
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்
மஞ்ஞை யாலும் பரம் பயில் இறும் பின்.
கலை பாய்ந்து உதிர்த்த மலர்வீழ் புறவின்.
மந்தி சீக்கும் மாதுஞ்சு முன்றில்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே"

(493–500)

உரை :

இன்சீர்க் கின்னரம் முரலும்—இனிய, தாளத்தோடு இயைந்த இசை எழுப்பவல்ல கின்னரப் பறவைகள் பாடும், அணங்குடைச் சாரல்—தெய்வங்கள் வாழும் மலைச்சாரலில், மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பில்—மயில்கள் ஆடும் மரங்கள் அடர்ந்த சோலையில், கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ்புறவின்—முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் வீழ்ந்து கிடக்கும் குறுங்-

காட்டிள். மந்தி சீக்கும் மாதுஞ்சும் முன்றில்—மந்திகள் அம்மலர்க் குப்பைகளை வாரும், மானும் புலியும் போலும் பகை விலங்குகள் மறந்து உறங்கும், செந்திப் பேணிய முனிவர்—முத்தீயை இடைவிடாமல் வளர்த்து வந்த முனிவர்கள், வெண்கோட்டுக் களிறு தரும் விறகின் வேட்கும்—வெண்ணிறத் தந்தங்களையுடைய களிறு கொண்டு வந்து தரும் விறகுகளால் வேள்வி செய்யா நிற்கும், ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே—புகழால் ஒளி பெறும் அருவிகளைக் கொண்ட திருவேங்கிட மலைக்கு உரிமையுடையோனாகிய இனந்திரையன்.

15—1 பொருள் முடிவு

இனி 'அகலிரு விசும்பில்' என்று தொடங்கி 'மலை கிழவோனே' என முடியும் இப்பாடலை—

புலவு லாய்ப் பாண (22), யாம் அவண் நின்றும் வருதும் (28), நீயிரும் (28), திரையன் படர்கு விராயின் (37), கேள் அவன் நிலையே, கெடுகநின் அவலம் (39) கொடியோர் இன்று அவன் கடியுடை வியன் புலம் (41) சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் (45); வியங்காட்டு இயலின் (82) பதம் மிகப் பெறுகுவிர் (105) அருஞ்சுரம் இறந்த அம்பர் (117) எயினக் குறும்பில் சேப்பின் (129), உடும்பின் வறைகால் யாத்தது வயின் தொறும் பெறுகுவிர் (133), முரண்டலைக் கழிந்த பின்றை (147) கோவலர்குடி வயின் சேப்பின் (166) பாலொடும் பெறுகுவிர் (168), புல்லார் வியன் புலம் போகி (184) கவின் குடிச்சீலூர் (191) மூரல் பெறுகுவிர் (196), வன்புலம் இறந்த பின்றை (206), மல்லல் பேரூர் மடியின் (254) வாட்டொடும் பெறுகுவிர் (256) தீஞ்சாறு விரும்பினிர் மிசையின் (262), வலைஞர் குடிவயின் சேப்பின் (274) தண்மீன் சூட்டொடு பெறுகுவிர் (282), ஒண் பூ அடைதல் ஓம்பி (290) பிணையினிர் கழிமின் (296); மறை காப்பாளர் உறைபதி சேப்பின் (301) காடியின் வகைபடப் பெறுகுவிர் (310); நீர்ப்பெயற்று எல்லைப்போகி (319) பட்டினம் மருங்கின் அசையின் (336), கூர்நறாப் பெறுகுவிர் (345), துறை பிறக்கு ஒழியப் போகி (351), உழவர் தனி மனைச் சேப்பின் (355) தீம்பல் தாரம் முனையின் (361) கிழங்கு ஆர்குவிர் (362), பண்மாநீளிடைப் போகி (368) நாடு பல கழிந்த பின்றை (371), பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் (373), செவ்வி கொள்பவரோடு அசைஇ (390) இன்னியம் இயக்கினிர் கழிமின் (392), விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் (411) கச்சி யோனே கைவண் தோள்றல் (420); பணிந்த மன்னர் (428), செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து (435), பொன் துஞ்சு வியனகர் (440) சுற்றமோடு இருந்தோன் குறுகி (447), மருக! (454), மன்ன மறவ!(455) செல்வ! செரு மேம் படுந! (456) நின் பெரும் பெயர் ஏத்தி வந்தேன்; வாழிய நெடிது என (461) கழிப்பு (462) பழிச்சி (463) நின்ற நின்னிலை தெரியா அளவை (464) சிதர்வை நீக்கி (468). உடீஇ (470) கரப்புடை அடிசில் (476) ஊட்டி (479) சூட்டி (482) விறலியர் மலைய (486) புரவி பூட்டி (489) பசும் படைதரீஇ (492) அவன் அன்றே பரிசில் விடுக்கும் (493), (அவன் யார் எனில்) மலை கிழவோன் (500) என பொருண் முடிவு செய்க.