பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/திரையன் ஆற்றிய கன்னிப்போர்
14. திரையன் ஆற்றிய கன்னிப் போர்
கச்சிப் பெரு நகரின் பெருமை, அதன் அமைப்பு நலன் ஆகியவற்றை விளங்க உரைத்த புலவர், அடுத்து, திரையன் நாளோலக்க நலம் பற்றிக் கூறுவதன் முன்னர், "திரையன் இப்போது பெற்றிருக்கும் அரசப் பெருவாழ்வு பாரெல்லாம் போற்றும் பெருமை வாய்ந்ததாகவே இருப்பினும், அது, அவன் ஆற்றல் கொண்டு அவனே அமைத்துக் கொண்டதாகாது, அவன் தாயத்தாரால் அமைக்கப் பெற்று, மகனுக்குத் தந்தை கொடுத்தது என்ற தாயமுறையால் வந்ததாக இருப்பின், அப் பெருவாழ்வு கண்டு, அவன் முன்னோரைப் பாராட்ட வேண்டுமே ஒழிய, திரையனைப் பாராட்டுவது முறையாகாது" என்று பெரும்பாணன் எண்ணவும் கூடும் என நினைத்தமையால், புகழ்மிகு பேரரசு அமைக்க, திரையன் மேற்கொள்ள வேண்டியிருந்த போர்க் கொடுமைகள் பற்றிய விளக்கத்தை மேற்கொண்டார்.
கச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் திரையன், அதை எளிதில் கைக் கொண்டான் அல்லன். பகைவர் பலரை வென்று அழித்த பின்னரே, கச்சியுள் புக முடிந்தது. அவன் பகைவர் எந்நிலையிலும் உடன்பாடு காணமாட்டா முரண்பாடு மிக்கவர். அவர்களும் ஒருவர் அல்லர்: பலர்; அவர் பால் இருந்த படைகளோ ஓர் எண்ணிக்கைக்குள் அடங்க மாட்டாப் பெருமை வாய்ந்தவை. அத்துணைப் பெரும் படைகளோடு, அவர்கள் அனைவரும், ஆறாச் சினம் கொண்டு ஒன்று கூடி வந்து எதிர்த்தனர். திரையன், தான் தனியன், அவர் பலர் என எண்ணி அஞ்சி விடாது, தன் ஆற்றல் முழுவதும் கொண்டு, பலநாள் ஓயாது போரிட்டான். இறுதியில், "நாமும் நூறு பேர் உள்ளோம்! நம் பால் பதினெட்டு அக்ரோணி படைகளும் உள" என்ற செருக்கால் போர் தொடுத்து வந்த துரியோதனாதியர் அனைவரும் மாண்டு மடிய, ஒரு நாள் இரு நாள் அல்ல, பதினெட்டு நாட்கள் கடும் போரிட்டு, அந்திச் செவ்வானத்தில் வளரும் பருவத்து வெண் பிறைத் திங்கள் இடையே இடம் பெறக்கார் முகில் கூட்டம் நகரும் காட்சியை நினைப்பூட்டும் வகையில், களத்தில் இறந்து வீழ்ந்தவர் உடல் கொட்டிய செங்குருதி வெள்ளத்தில், நீண்டு வளைந்த வெண்கோடுகளையுடைய களிறுகளின் கரிய உடல்கள் மிதந்து செல்லுமாறு கடும் போரிட்டு வெற்றி கொண்ட பாண்டவர் ஐவர் மேற்கொண்ட பாரதப் போரை நினைவூட்டுமளவு பேராற்றல் காட்டிப் போரிட்டுப் பகைவரை அறவே அழித்து வெற்றிக் கொண்டு விழாக் கொண்ட பின்னரே, திரையன் கச்சி அரியணையில் அமர முடிந்தது.
பெரும்பாண! அவ் வெற்றிப் பெருமிதம் மிதக்க, திரையன் இப்போது கச்சி அரியணையில் உள்ளான். "அவன் வெற்றித் திருமகனாதல் கூடும்; ஆனால் வருவார்க்கு வாரி வழங்கும் கொடைக் குணம் அவன்பால் குடிகொண்டிருக்குமோ!" என்ற ஐயமே வேண்டாம். வெற்றிப் புகழில் சிறந்து விளங்குவது போலவே, கொடை வளத்திலும் அவன் தலை சிறந்தவன். ஆகவே, பெரும்பாண! இனியும் தாமதியாது, இன்னே அவன்பால் செல்வாயாக என்றார்,
"அவ்வாய் வளர்பிறை சூடிச், செவ்வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப
வெண்கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப
ஈரைம் பதின்மரும் பொருது களத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
அடங்காத் தானையோடு உடன்றுமேல் வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக் கச்சியோனே கைவண் தோன்றல்"
(412-420)
உரை :
"திரையன் கச்சியுள் உள்ளான்; காணச் செல்க" எனப் பெரும் பாணனுக்கு விடை கொடுத்த புவவர், திரையனைக் கண்டு அவன் புகழ் பாடுவதன் முன்னர், அவனைப் பணிந்து அவன் ஏவல் கேட்க வந்திருக்கும் வேற்றரசர் கூட்டம் காத்திருக்கும் அரண்மனை முற்றத்தின் கொற்றத்தையும், அவன் நாட்டு மக்கள் முறை அளிப்பான் வேண்டியும், குறைதீர்ப்பான் வேண்டியும் கூடியிருக்கும் அரசவை மாண்பையும் அறிந்து கொண்டால், அவன் புகழை முழுமையாகப் பாடிப், பாராட்ட இயலும் என உணர்ந்தமையால், அவைபற்றிக் கூறத் தொடங்கினார்.
திரையன் அரண்மனை முற்றத்தில், அரசர் பலர் குழுமியிருப்பர். வந்திருக்கும் அவர்கள் தாம் மட்டும் தனித்து வாராது, திரையனுக்குத் தம் காணிக்கையாகத் தருவான் வேண்டித், தங்கள் நாட்டிற்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்தனவாய பொருள்களாகவே தேர்ந்து உடன் கொண்டு வந்திருப்பார். அவர்களின் முகத்தைப் பார்த்தால், சிலர் உள்ளத்தில் அன்பு ஊற்றெடுப்பது தெரியும்; சிலர் உள்ளத்தில் அச்சம் குடி கொண்டிருப்பது புலனாம். அவர்கள் ஒவ்வொருவரும் திரையனைக் காண, உள்ளே நுழைவதற்குத் தான் முன், நீ முன் என ஒருவரை ஒருவர் முந்த முனைவர்.
இமையவர் உறைவதால் இமயம் என அழைக்கப்பெறும் உயர் மலையிலிருந்து, வெள்ளிப் பனிப் படலம் உருகப் பெருகிப், பொற்பாறைகளை உடைத்துத் துகளாக்கி அரித்துக்கொண்டு, புணை இன்றிக் கடக்க இயலா ஆழமும், அகலமும் உடையதாக உருண்டோடி வரும் கங்கைப் பேராற்றின் ஒரு கரை வாழ் மக்கள், ஆங்கு, இயற்கை விளைவித்த இடராலோ, இறை அளித்த துயராலோ வாழமாட்டா நிலையுற்று வாழிடம் விடுத்து, வாழப் புது இடம் தேடி, மறுகரை செல்வதற்காக, இன்றியமையா ஒரு சில உடைமைகளோடு திரண்டு வந்து கரையில் குழுமி நோக்கிய போது, ஆங்குக் கங்கையைக் கடக்க உள்ளது ஒரே தோணி என அறிந்ததும், அதில் ஏறி அக்கரை அடைய ஒருவரை ஒருவர் முந்த விரையும் விரைவை அம் மன்னர்களின் வேகத்தில் காணலாம். திரையனைக் காண்பதில் அம்மன்னர்களுக்கு அத்துணை ஆர்வம்; விரைவு.
திரையனைக் காணும் ஆர்வம் உந்த, ஆங்குக் காத்திகுக்கும் மன்னர்களிடையே புகுந்து "மன்னர்காள்! திரையன் பால், என்ன சிறப்பைக் கண்டு, இவ்வளவு திரளாக வந்து கூடியிருக்கிறீர்கள்? உங்கள் அனைவரையும் ஒரு சேர் ஈர்த்த அவன் அருந்திறல்கள்தாம் யாவையோ?" என வினவினால் "தன்னை விரும்பி, தன்பால் அடைக்கலம் புகுந்து விட்டார்க்கு, ஒரு சிறு இடையூறுதானும் உண்டாகாவாறு காத்துப் புரக்கவல்ல அவன் அருளுடைமை கண்டு, அடைக்கலம் புக வந்துள்ளோம்" என்பர் சிலர். "தன்னோடு பகை கொள்வாரை அறவே அழித்தொழிக்கும் அவன் ஆற்றல் கண்டு அஞ்சி, பகை விடுத்து, பணிந்து வாழ வந்துள்ளோம்" என்பர் சிலர்.
அவர்கள் அவ்வாறு கூற, "அடைந்தாரைக் காக்கும் பேரருளுடைமையும், பகைத்தாரைப் பாழ் செய்யும் பெரு வலியும், திரையன் பால் இருப்பதை எவ்வாறு கண்டு கொண்டீர்கள்" என்று வினவினால், "திரையனைப் பகைத்துக் கொள்ளாதார் நாட்டிற்கு அவனால், அழிவு உண்டாகாது; ஆனால் அந்நாட்டில் வளம் கொழிக்கும் என்று சொல்ல முடியாது; ஓரளவு வளந்தான் இருக்கும். ஆனால், திரையனோடு பகை கொள்ளாதிருப்பதோடு அமையாது, நட்பும் கொண்டவர் நாட்டில், வறுமை தலை காட்டாது; அழிவு இடம் பெறாது போவது மட்டுமன்று; ஆக்கம் பெருகி, வளம் கொழிக்கும்; செல்வம் செழிக்கும். செல்வச் செழிப்பு என்றால், வெறும் வயல் வளம் மட்டுமே பெருகும் என்பதில்லை; பொன் வளமும் பெருகி நிற்கும்; அந்நாட்டு மரம், செடி, கொடிகள் பூவாகப் பூத்துக் குலுங்குவது போல், அந்நாட்டு மனைகளில் பொன் பூத்துப் பொலிவுறுவதைக் கண்ணாரக் கண்டு வந்துள்ளோம்" என்பர் சிலர்.
தன்னோடு நட்பு கொண்டவர் நாட்டில், உள்ள வளத்திற்கு ஊறு தேடாமையோடு நில்லாமல் அவ்வளம் ஒன்று பலவாகப் பெருகவும் துணை செய்யும் திரையன், தன்னோடு பகை கொண்டவர் நாட்டில், உள்ள வளத்தை அழிப்பதோடு அமைதி கொள்ளாது, அந் நாட்டையே இல்லாமல் செய்யவும் வல்லன். அந்நாடு இருந்த வளங்களை இழந்து போவது மட்டு மன்று, அழிவுக்கும் உள்ளதாகும். தன்னோடு, பகை கொண்டு, தன் மேல் போர் தொடுத்து வந்தாரைப், போர்க் களத்தில் வென்று அழிப்பதோடு, அமைதி உறுவானல்லன். ஆங்கு அவரை அழித்த அவன், அவர் நாட்டுக்குள்ளும் புகுந்து நாடு எனும் பெயர் மறைந்து, காடு எனும் பெயர் பெற்றுப் போகுமாறு அந்நாட்டை அறவே அழித்து விடுவன். மனையற வாழ்வு மேற்கொண்டு மக்கள் வாழும் மாட மாளிகைகள் மட்டுமன்று; தமக்கென ஒரு வாழிடம் இல்லா வறியோர்களின் இருக்கையாம் ஊர்ப் பொதுவிடத்தையும் விட்டு வைப்பானல்லன். அம்மன்றமும் பாழ் பட்டுப் போக அந்நாட்டை அறவே அழித்து ஒழிப்பன். அவ்வாறு அவனால் அழிவுற்ற நாடுகளைக் கண்டு வந்துள்ளோம்" என்பர் சிலர்.
அவர்கள், அவ்வாறு கூறக்கேட்டு, மலையில் பிறந்து, உருண்டோடி வரும் அருவிகள், அம் மலையிலேயே இருந்து விடுவது இல்லை; இறுதியில், கடலில் சென்று கலந்து விடுவது தவிர்த்து அவற்றிற்கு வேறு வழி இல்லை. அது போல், தங்கள் நிலைகுலைந்து போன இந்த அரசர்களுக்குத் திரையனை தவிர்த்து வேறு புகலிடம் இல்லை. தன்னோடு கலந்துவிட உருண்டோடி வரும் அருவிகளை ஏற்றுக் கொள்வதல்லது ஏற்க மறுக்கும் இயல்பு கடலுக்கு இல்லை. அது போல் தன்பால் அடைக்கலம் புகும் அரசர்களை ஏற்று அவர்களுக்கு வாழ்வளிப்பதல்லது, வெறுத்து வெளியேற்றும் இயல்பு இளந்திரையனுக்கும் இல்லை என்ற உணர்வு எழ, மன்னர்களிடம் விடை கொண்டு, முற்றத்தைக் கடந்து சென்றால் அவன் அரண்மனைச் சிறப்பைக் காணலாம்.
முற்றத்தைக் கடந்து அரசவைநோக்கிச்செல்லும் போது, இடை வழியில், அரண்மனை மாடத்து இறப்புகளில், தம் பெடைகள் இணைபிரியாதிருக்கும் இன்ப உணர்வில் தம்மை மறந்து அறிதுயில் மேற் கொண்டிருக்கும் ஆண்புறாக் கூட்டம் அவ்வப்போது சிறகடித்து எழுந்து பறந்து செல்வதும், மீண்டும் வந்து இறப்புகளில் அமர்வதுமாகிய காட்சியைச் கண்ணுற்று புறாக்களின் அமைதிச் சூழ் நிலையைக் கெடுப்பது எதுவோ என எண்ணி நிற்பார் காதுகளில், கொல்லன் உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பட்டடை மீது வைத்து, பெரிய சம்மட்டி கொண்டு ஓங்கி அடிக்குந்தொறும் எழும் ஒலி விழவே, அவ்வொலி கேட்டே, அப் புறாக் கூட்டம் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகிறது என அறிந்து வருந்தி, அவற்றின் நிலைக்கு இரங்கி, ஆங்குச் சிறிது இருந்து, பின்னர், அவ்வொலி எழுந்தவிடம் நோக்கிச் சென்று பார்த்தால், ஆங்கே, கொல்லன், போர்க்களிறுகளின் நீண்ட வலிய தந்தங்களுக்குப் பொருத்தப்படும் பூணாகிய கிம்புரிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். அக் காட்சியால், திரையன், யானைப்படை முதலாம் நாற்படைகளைப் பேணிக்காக்கும் விழிப்புணர்வை உணர்ந்து மகிழ்ந்தவாறே, அரண்மனையுள்ளே சென்றால், ஆங்கு, பொற்கட்டிகள் குவியல், குவியல்களாகக் கொட்டிக் கிடப்பதைக் காணலாம்.படைக் கலங்களை வடிக்கும் உலைக் களத்தில் எழும் ஒலி பறவைகளை உறங்காமல் செய்ய, அவ்வுலைக்களம் செய்து குவிக்கும் படைக்கலத் துணையால் பெற்ற பொற் கட்டிகள் தீண்டுவாரற்றுக் கிடந்து உறங்கும் நலம் கண்டு மகிழ்ந்தவாறே அரசவை புகுந்தால், ஆங்குத் திரையன் நடாத்தும் அறவழி ஆட்சி நலம் கண்டு பெருமகிழ்வு, எய்தலாம்.
திரையன் அரியணையில் வீற்றிருக்கும் காட்சி, கீழ்க்கடலின் அடிவானத்தே தோன்றி, பேரொளி பரப்பியவாறே எழும் கானல் ஞாயிற்றின் காட்சியை நினைவூட்டும். அக் கடற்காட்சி, தொண்டைக் கொடியை அடையாளமாகக் கட்டி அவன்தாய் பீலிவளை, அவனைக் கலம் ஏற்றிக் கடல் வழி அனுப்ப, இடைவழியில் கலம் கவிழத் திரைவழி வந்து அரசோச்சும் திரையன் குடிப் பெருமையை நினைவூட்டி விடும். அந் நினைவுஅலையில் மிதந்தவாறே அவையை நோக்கினால், ஆங்கு வலியரால் நலிவுற்று முறை வேண்டி வந்தவர்களும், வறுமையுற்றுப் பொருள் வேண்டி வந்தவர்களும் குழுமி இருப்பதைக் காணலாம்.
"திரையன், தம்முறை கேட்டுத் தக்க தீர்ப்பளிப்பன். தம் குறை கேட்டு, அது தீர்த்து வைப்பன். அதற்கேற்ற தகுதிகளைக் குறைவறப் பெற்றவன். தன் முன்வந்து முறையிடுவார் கூறுவன கொண்டே, அவர் கூறாத உண்மைகளைக் குறிப்பினாலேயே ஐயம் திரிபு அற, உள்ளது உள்ளவாறே உணரவல்ல அறிவுத் தெளிவுடையவன். அதுமட்டுமன்று; வந்து இரப்பார்க்கு வாரி வழங்குவது தன் பிறவிக் கடன் என்ற உணர்வும், அதற்கேற்ற வளமும் வாய்க்கப்பெற்றவன். தன் அவை வந்து நிற்பார்க்கு நடுவு நிலை பிறழா நீதி கிடைத்தல் வேண்டும்; வறுமை, இனி அவரைத் தொடராவாறு வழங்க வேண்டும் என்ற அந்த உணர்வு எந்நிலையிலும் மங்கிப் போகாப் பேருள்ளம் உடையவன்" என உளமார உணர்ந்தமையினாலேயே, அவர்கள் அவ்வளவு பெருங்கூட்டமாக வந்து, நம்பிக்கையோடு அவன்முன் நிற்கின்றனர் என்பதை அறிந்து, அவன் பெருமையை எண்ணி, எண்ணி, வியந்து நிற்கும் நிலையில், அவனைச் சுற்றி அமர்ந்திருப்பாரைக் கண்ட வழி, அவன் பெருமை மேலும் உயர்ந்து காணப்படும்.
திரையனைச் சுற்றி, அமைச்சர்களுக்கு அமைய வேண்டிய, அறிவு, ஆற்றல், பண்பாடுகளை ஒரு சிறிதும் குறைவின்றிப் பெற்றிருக்கும் அமைச்சர்களின் ஒரு பெரிய கூட்டமே அமர்ந்திருக்கும். தன்னளவிலேயே தகைசான்றவன் என்ற பாராட்டினுக்கு உரியவனாகிய திரையன், "எனக்கு அறிவு புகட்ட, எனக்கு வழிகாட்ட ஒருவரும் தேவை இல்லை" என இறுமாந்துவிடாது, ஒளி விளக்கே ஆயினும், நன்றாய் விளங்கிடத் தூண்டுகோல் இன்றியமையாதது என்ற உணர்வுடையனாய்ப், பெரியாரைத் துணை கோடலால் ஆம் நன்மையை உணர்ந்து, மதித்து, மதி வலம் மிக்க, நல்ல அமைச்சர்களைத் துணையாகக் கொண்டு அவர் நடுவண் அமர்ந்து நாடாண்டிருப்பன். அவை புகுந்து, அவனைக் காணும் பெரும்பாண! அவனை, உன் நாவார, உன்நல் உளமாரப் பாராட்டுவாயாக, என்றார்.
"நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தேறலும், எளிய ஆகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப
நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோரும்
துப்புக்கொளல் வேண்டிய துணை இலோரும்,
கல்வீழ் அருவி, கடல்படர்ந்தாங்குப்
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்,
இமையவர் உறையும் சிமையச் செவ்வரை
வெண்திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித்து இழிதரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும் இரியல்மாக்கள்,
ஒருமரப் பாணியில் தூங்கி யாங்குத்
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச்
செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்துப்,
பெருங்கை யானைத் கொடுந்தொடிப் படுக்கும்
கருங்கைக் கொல்லன், இரும்புவிசைத்து எறிந்த
கூடத் திண்ணிசை வெரீஇ, மாடத்து
இறையுறை புறவின் செங்கால் சேவல்
இன்துயில் இரியும் பொன்துஞ்சு வியன்நகர்க்
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல்செய் மணடிலம் பாரித்தாங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டுநர்க்கு அருளி,
இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்
கொடைக் கடன் நிறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பில் சுற்றமொடு இருந்தோன் குறுகி"
(421-447)
உரை:
14-2 திரையன் பெருமை
திரையனைப் பாடிப் பாராட்டுவாயாக எனக் கூறிய புலவர், திரையனைப் பாராட்டும் முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் பெரும்பாணனுக்கு விளக்கத் தொடங்கினார். குலப்பெருமை பாராட்டாதவரை, தன் குலப் பெருமையை பிறர் பாராட்டுவது கேட்டு மகிழாதவரை காண்பது இயலாது. அறிவும், ஆற்றலும் அளிக்கும் புகழினும் குலப் பெருமை அளிக்கும் புகழே பெரிதெனக் கருதுவர். இது மனித இயல்பு. இளந்திரையன் இதற்கு விலக்கானவன் அல்லன். அதனால், அவன் புகழ் பாடுவதன் முன்னர், அவன் குலப்புகழ் பாடுதல் நன்று எனக் கருதினார். அதனால், திரையன் குடியாம் தொண்டையர்குடிப் புகழ் பாடத் தொடங்கி விட்டார்.
தொண்டையோர், புலவர் பால் பெருமதிப்பு உடையவர். புலவர்களைத் தம் அவைக்கு அழைத்து, அவர் விரும்பும் அறுசுவை உணவு, ஆடை, அணி ஆகிய அனைத்தும் வழங்குவர். அவ்வாறு வழங்குவதைத் தம் கடமையாகவே கொள்பவர். அவ்வாறு வழங்கி விடை கொடுத்த பின்னரே, வேறு பணி மேற்கொள்வர். வண்டுகள் மொய்க்குமளவு மதநீர் வடிய மதம் கொண்டு திரியும் பெரிய களிற்று யானை மீது பாய்ந்து கொன்ற சிங்க ஏறு, அடுத்துப் பூனை எதிர்பட்டால் அதன் மீது பாய எண்ணாது. மாறாக, புலியைத் தேடிச் சென்றே பாயும். அதுபோலத் தம்மை பணிய மறுக்கும் பகைவர் மீது போர் தொடுத்துப் போகும் காலத்தில், ஒர் அரசை அழித்து வெற்றி கொண்ட பின்னர், மீண்டும் போர் வேட்கை எழுந்தால், அவர் நினைவு, பண்டு அழித்த அரசினும் ஆற்றலில், அளவில், சிறிய அரசு, மீது இல்லாது; மாறாக, அன்று அழித்த அரசினும் ஆற்றல் மிக்க பேரரசு மீதே போர் தொடுத்துப்போவர். அத்துணை தறுகணாளர் தொண்டையோர்.
போர் தொடுத்துப் புறப்பட்டுவிட்டால், பகைவர் கோட்டை காவற்காடு, ஆழ்ந்த அகழி, பல்வகைப் படைக் கலம் பொருத்தப்பட்ட பெருமதில் ஆகியன கொண்டு அழிக்கலாகாத் திறம் வாய்ந்ததாக இருப்பினும், அவை அனைத்தையும் அழித்து அரணைக் கைப்பற்றிக் கொள்வர். அந்நிலையில், அரண் அழிவுற்று விட்டது; இனி அதைக் காத்தல் இயலாது என உணர்ந்து, பகைவர் போரைக் கைவிட்டு, பணிந்து திறை தர முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து, அரனுக்குரிய அரசர்களின் மணி முடிகளைக் கைப்பற்றி அந்நாடாளும் அரசராக, அவ்வரணிலேயே முடி புனைந்து வெற்றிவிழா கொண்டாடி மகிழ்வர். அவ்வாறு பகை அரண்களையும், பகை நாடுகளையும் அழித்து, ஆங்குக் கைக்கொண்ட வளம் உண்டு வாழும் வீரவாழ்வினர். அத்தகைய வீரவாழ்க்கை நடாத்துதற்கேற்ற வாள் படை முதலாம் நாற்படைகளைக் கொண்டவர். அப்படைகளை ஆளவல்ல உரம் பாய்ந்த உடல் அமைப்பும் வாய்க்கப் பெற்றவர்.
பெரும்பாண! தொண்டையோரின் இப்புகழையெல்லாம் விளங்க எடுத்துரைத்தபின்னர், "அத்தொண்டையோர் வழியில் வந்தவனே! போரில் வல்ல பெருவீரர்களும் புகழ்ந்து பாராட்டத்தக்க பெரு வீரனே! அவ்வீரத்தை எளியோரை அழிக்கப் பயன்படுத்தாது, கொலை, களவு மேற்கொள்ளும் கொடியோரைக் கொடுமை செய்யப் பயன்படுத்தும் கொற்றவனே! அருட் செல்வம், பொருட் செல்வம் அறிவுச் செல்வம் வாய்க்கப் பெற்ற செல்வர்களும் மதித்துப் பாராட்ட அச்செல்வங்களைச் சிறக்கப் பெற்றவனே! போர் தொடுத்து எழுந்தால், அழியுதர் புறக் கொடை அயில்வேல் ஒச்சாமை போலும் அறவழிப் போர் செய்யும் சிறப்புடையோனே! வரையாது வழங்கும் கொடை வளம் முதலாக அளவிறந்த புகழ்ச் செல்வம் உடையோய்! அவை அனைத்தையும் கூறிப் புகழ்வது என்னால் இயலாது. அவற்றுள் நான் அறிந்த சிலவே கூறிப் பாராட்டினேன். நீ நெடிது வாழ்வாயாக!" என்றெல்லாம் பாராட்டி வாழ்த்து வாயாக.
குலத்தாலும், வேறு பல நலத்தாலும் சிறந்து விளங்கும் அவனை, அரசர் அவை தோறும் சென்று பண் இசைத்துப் பரிசில் பெற்றுத் திரியும் நீ பாராட்டுவது, கடலிடையே புகுந்து, மாமர வடிவுற்றுக் கரந்து நின்ற சூரனைக் கொன்ற வீரனும், அணிகள் பலபூண்ட இளம் அழகனுமான முருகனைப் பெற்றளித்த பெருமைக்குரிய வயிறுடையாளும், பேய்கள் எல்லாம் கூடி ஆடும் துணங்கைக் கூத்தையும் கண்டு களிக்கும் கன்னிப் பருவத்தாளும் ஆகிய உமை அம்மைக்குப் பேய் ஒன்று குறி கூறத் தொடங்கி; அவள் குலப் பெருமை, குணப் பெருமைகளைக் கூறுவது போல் நகைப்பிற்கு உரிய தாகும் என்றாலும் உமை அம்மையார், பேய் கூறும் குறியையும் விருப்புடன் கேட்டு அப்பேய் வேண்டுவன எல்லாம் வழங்கி அருள் பாலிப்பது போல், அளக்கலாகாப் புகழ் வாய்ந்த திரையனும், நீ கூறும் புகழ் உரைகளை, உளம் உவக்கக் கேட்டு, உன் பால் பேரன்பு கொண்டு, நீ வேண்டுவன எல்லாம் வழங்குவன்.
ஆகவே, பாராட்டு பயன் தருமோ என்ற ஐயுறவு விட்டுப் பாராட்டி, பாராட்டு முடிவில், உன் இடது தோளில் தழுவிக் கிடக்கும் பேரியாழை, இயக்குமுறை பிறழாது இயக்கி, யாழ்த் தெய்வத்திற்கு ஆற்ற வேண்டிய கடப்பாட்டு மரபு கெடா வகை, முதற்கண் இருகை கூப்பி வணங்கி, வாயாரப் போற்றிய பின்னர், திரையன் உள்ளிட்ட அவ்வவையில் இருப்பார் அனைவரும் இசை இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து போக, இசை எழுப்பி நிற்பாயாக! உன் பேரியாழ் எழுப்பும் இசை வழங்கிய பேரின்பம் நுகர்ந்த அளவே, திரையன் உன்னை முழுமையாக அறிந்து கொள்வன்" என்றார்.
"பொறிவரிப் புகர் முகம் தாக்கிய வயமான்
கொடு வரிக்குருளை கொள வேட்டாங்குப்,
புலவர் பூண்கடன் ஆற்றிப், பகைவர்
கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்
"வென்றி அல்லது வினை உடம்படினும்
ஒன்றல் செல்லா உரவுவாள் தடக்கைக்
கொண்டி உண்டித் தொண்டையோர் மருக!
மள்ளர் மள்ள! மறவர் மறவ!
செல்வர் செல்வ! செரு மேம் படுந!
வெண்திரைப் பரப்பில் கடுஞ்சூர்க் கொன்ற
பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டுத்
துணங்கையம் செல்விக்கு அணங்குநொடித்தாங்குத்
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி
வந்தேன் பெரும! வாழிய நெடிது! என
இடினுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடனறி மரபின் கைதொழு உப் பழிச்சி
நின்நிலை தெரியா அளவை"
(448–464)
உரை :
14-3 திரையன் வழங்கும் விருந்து
பெரும்பாண! நின் பேரியாழ் இயக்கி இசையெழுப்பிப் பாராட்டி நிற்கும் அந்நிலையே திரையன் உன்னை முழுமையாக அறிந்து கொள்வான் என்ற புலவர், அடுத்து திரையன் வழங்கும் விருந்தின் பெருமை பற்றி விளக்கத் தொடங்கினார்.
திரையன் புகழ் வாய்ந்த குடியில் வந்தவன். சிறந்த வீரன், பெரிய நாடாள்பவன். அதே நிலையில், 'இவற்றிற் கெல்லாம் நிலைக்களமாய உலகம் வாழ வேண்டும்; அது இல்லையேல் இவை இல்லை. இவற்றைக் காத்துக் கொள்ள வேண்டுமேல், முதலில் அதைக் காத்துக் கோடல் வேண்டும். அந்த உலக வாழ்வு, அதில் வாழும் உயர்ந்தோரைப் பொறுத்துள்ளது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு; அந்த உயர்ந்தோர் வாழ்ந்தால் உலகம் வாழும்; அவர் இல்லையேல் அதுவும் இல்லாகி விடும். ஆகவே, அதை வாழ வைக்க வேண்டு மேல் உயர்ந்தோர்களை வாழச் செய்தல் வேண்டும்' என்ற உலகியலையும் உணர்ந்திருந்தான், அதனால் பேரியாழ் இசைத்து, இசை வளம் காத்து வரும் பெரும் பாணனைக் காப்பது தன் கடமை என உணர்ந்திருந்தான்.
மேலும், இளமையும், இரும்பெனத் திரண்டுருண்ட உடலும், பெரிய அரச வாழ்வும் பெற்றிருந்தாலும், அவை அனைத்தும் ஒருநாள் அழியக் கூடியவை; அழியாது நிற்பது புகழ் ஒன்றே; அப்புகழ் தானும் பலவகையானும் வரும் என்றாலும், இல்லாதார்க்கு ஈதலால் வரும் புகழே ஈடு இணையற்றது என்பதையும் உணர்ந்திருந்தான். அதனால் பெரும்பாண! உம் போலும் இரவலர்களை அரசவையில் காணுவதன் மூலம், அவ்வுணர்வு வரப் பெற்றதும் அரசவைப் பணிகளை மறந்து விடுவான். உன்னை அருகில் அழைத்து அணைத்துக் கொள்வான்.
பலநாள் உணவின்றித் துன்புறும் பசிக் கொடுமையோ, உடல் உறுப்புகளில் அணியேதும் இல்லாமையோ, ஒருவன் வறுமையுற்றிருப்பதைக் காட்டி விடாது. ஒருவர் உடுத்திருக்கும் உடையைப் போல், அவர் வறுமையை வெளிப்படுத்தி விடுவது வேறு எதுவும் இல்லை. உங்களை அருகில் அழைத்து நோக்குவதற்கு முன்பே, நீயும் நின் சுற்றமும் உடுத்திருக்கும் உடை நிலை, நீங்கள் எத்தகைய கொடிய வறுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்த்தி விடுமாதலின், திரையன் முதற்பணியாக, நீங்கள் உடுத்திருக்குழ் வேலப்பாசி வேர் போல, நைந்து போயிருக்கும் கந்தல் ஆடைகளை அகற்றி விட்டு, மெல்லிய நூலால் நெய்யப்பட்ட பாலாடை போன்ற பளபளக்கும் வெள்ளாடைகளை அவரவர் உடல் அளவிற்கேற்புடையவற்றை அளித்து உடுத்து விடுவன்.
புத்தாடை உடுத்துப் புதுப் பொலிவோடு நிற்கும் உங்களின் அடுத்த தேவை வயிறார உணவு என்பதை அறிந்திருக்கும் திரையன், உங்களை அழைத்துக் கொண்டு அடுக்களையுள் புகுவன். ஆங்குக் கொடுவாள் ஏந்திக் ஏந்திக் காழ்ப்பு ஏறிய கையில், கொடுவாள் ஏந்திய நெடிய, பெரிய ஆள் உங்களை வரவேற்பன். அவன் வடிவையும், அவன் கைக் கொடுவாளையும் கண்டு அஞ்சத் தேவையில்லை. அவன், அம்மடைப் பள்ளியின் தலைவன். ஆட்டுக்கறி கோழிக் கறி என வகை வகையான கறிகளைக் கொந்தி அரிவதற்குத் துணை புரியும் கொடுவாளே அவன் கையில் இருப்பது. திரையன் முன்னே நடந்து, அடுக்களையுள் ஆக்கக் குவித்து வைத்திருக்கும் அரிசியையும், ஆக்கி வைத்திருக்கும் உணவு வகைகளையும் காட்டிக் கொண்டே செல்ல அவனைத் தொடர்ந்து செல்லும் நீங்கள், ஆங்கே கொட்டி வைத்திருக்கும் அரிசியைக் காண்பீர்கள் அது, தாள் ஈரம் அற நன்கு பழுத்து, கொட்டை கொட்டையாக முற்ற விளைந்த செந்நெல் அரிசி. அது, கல்லும், மண்ணும், கருக்காயும், கலப்பும் நீக்கித் தூய்மை செய்து வைக்கப்பட்டிருக்கும்.அடுத்துச் சென்றால், பெரிய பெரிய கலங்கள், பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றையும் திறந்து பார்த்துக் கொண்டே சென்றால், ஒன்றில், முனை முறியாமல் முழு வடிவில் வடித்து வைக்கப்பட்டிருக்கும் சோறு; ஒன்றில் ஆட்டுக்கறி: ஒன்றில் கோழிக்கறி: ஒன்றில் மான் கறி; அடுத்துள்ள கலங்களில் வேறு வேறு வகையான அறுசுவை உண்டிகள் நிறைந்திருக்கக் காண்பீர்கள். அவற்றிலிருந்து எழும் மணம், உண்ணும் பசி இல்லாதாரையும் உண்ணத் தூண்டி விடும்.
அவற்றைக் காட்டிக் கொண்டே சென்று, இறுதியில், உண்ணும் இடம் அடைந்து அமர்த்துவன். சோறுண் கலம் இடையில் இருக்க, அதைச் சுற்றிலும் பல்வேறு கறி வகைகளுக்கான கலங்களைத், திங்களைச் சூழ ஒளிவிடும் விண்மீன்கள் எனக் காட்சி அளிக்குமாறு உங்கள் முன் பரப்பி வைத்து அவற்றுள் நிறைய உணவு படைக்கப்பட்டதும், திரையன் உம் அருகில் அமர்ந்து இதில் ஒரு கவளம், இன்னும் ஒரு கவளம், எனக்காக ஒரு கவளம், அம்மாவுக்காக ஒரு கவளம் எனக் கூறி; தாய் தன் மகவுக்கு உணவோடு இன்ப அன்பு கலந்து ஊட்டுமாறு, உங்களை உண்பித்து, உண்ட நிறைவு தோன்ற, உங்கள் முகம் மலரக் கண்டு அக மகிழ்ந்து போவன்.
"அந்நிலை
நாவலம் தண்பொழில் வீவின்று விளங்க
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அந்நிலை அணுகல் வேண்டி, நின் அரைப்
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி அன்ன அவிர்நூல் கலிங்கம்
இரும் பே ரொக்கலோடு ஒருங்குடன் உடீஇக்
கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்னக
வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை
அரிசெத்து உணங்கிய பெருஞ் செந் நெல்லின்
தெரிகொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்
அருங்கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும்
விருப்புடை மரபின் காப்புடை அடிசில்
மீன்பூத்தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி"
(464–479)
உரை:
14-4 திரையன் அளித்த பரிசு
திரையன் அளிக்கும் விருந்தின் சிறப்பினை எடுத்துரைத்த புலவர் அடுத்து, அவன் அளிக்கும் பரிசில் பெருமை பற்றி விளக்கத் தொடங்கினார்.
நல்ல உடை கிடைத்து, வயிறார உணவும் கிடைக்கப் பெற்றவர்க்கு அடுத்த நாட்டம் நல்ல அணிகள் மீது செல்லும். மக்களின் இம் மன இயல்பு உணர்ந்தவன் திரையன். அதனால், பெரும்பாண! உனக்கும் உன் உடன் வந்திருக்கும் பெண்டிர்க்கும் ஏற்புடைய அணிகளை அணிந்து விடுவன். பாண! உன் தலையில் அழகிய தாமரை மலரைச் சூட்டுவன். என்ன! தாமரை மலரா? வலைஞர் குடியிருப்பை அடுத்துள்ள குளங்களில் காணாத தாமரை மலரா? விரும்பியிருந்தால் அங்கேயே ஒன்றைப் பறித்துச் சூடி வந்திருக்க மாட்டேனா? என்று எண்ணிக் கவலையுற வேண்டாம். நீ நினைக்கும் அத் தாமரை மலரில் வண்டுகள் மொய்க்கும்; அது தண்ணீரில் வளரும். ஆனால், திரையன் சூட்டும் தாமரை மலரில் வண்டுகள் மொய்க்கா: அது, செந்தழலில் இட்டு உருக்கி அடித்து வடித்த பொன்னால் ஆனது. அழகிய அப் பொற்றாமரை மலரைக் கருத்து நீண்ட உன் தலை மயிரிடையேசூட்டி விட்டால், அக்காட்சி, கருமேகத்திடையே பேரொளிவீசிக் காட்சி தரும் முழுத் திங்கள் போல் தோன்றி, உன்னை அழகின் திருவுருவமாக மாற்றி விடும்.
உனக்கும், உன் போலும் ஆடவர்க்கும் அவ்வாறு பொற்றாமரை மலர் சூட்டும் அவன், உன் உடன் வரும் பெண்டிர்க்கு, அவருடைய அடர்ந்து நீண்ட கரிய மயிரை, அழகுற வாரிப் பின்னலிட்டு, அப் பின்னலிடையே, பொன்னரி மாலை என்னும் பொன்னணியைப் பூட்டி விடுவன். கருத்து, நீண்ட பின்னலிடையே, மின்னலிடும் பொன்னரி மாலை கிடக்கும் காட்சி, கோடைக் காலத்து மாலைப்போதில், கடல் நீருண்டு கருத்து எழுந்து திரண்ட மேகம், கால் இறங்கிப் பெய்யத் தொடங்கும் போது, அதனிடையே ஒளிவிடும் கொடி மின்னல் காட்சியை நினைவூட்டிக் கண்ணைப் பறிக்கும்.
இவ்வாறு உயர்ந்த அணிகளைச் சூட்டி, உங்களை ஒப்பனை செய்து முடித்ததும், நீங்கள் தன்னைக் காண காட்டிலும், மேட்டிலும், கானாற்றிலும் கால் கடுக்க நடந்து வந்துள்ளீர்கள்; இனியும் நடப்பது உங்களால் இயலாது என்பதை உணர்ந்து, உங்களுக்குச் சிறந்த ஊர்திகளை வழங்குவன். பொன் வேலைப்பாடு மிக்க அழகிய நெடிய தேர் ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்துவன்.
அதில், குதிரை நூல் வல்லவர்களால், குற்றம் அற்றவை, குணங்களால் சிறந்தவை எனப் பாராட்டப் பெற்றனவும், திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலில் பிறந்ததினால், ஏனைக் கடலில் பிறந்த சங்கைக் காட்டிலும் மிக்க வெண்ணிறம் வாய்ந்த சங்கின் நிறம் காட்டும் பிடரியும், மேனியும் கொண்டனவும், தன் உடன் பூட்டப்படும் குதிரையோடு ஒத்துத் தொழில் புரியும் பயிற்சி உடையவும் ஆகிய குதிரைகள் நான்கை, அத்தேரில் பூட்டிவிடுவன். அடுத்து, தன்னோடு போரிட வந்தோர்களை வென்று, அவர்கள் புறமுதுகு காட்டி ஓடுங்கால் விட்டுச்செல்லக், கைப்பற்றிக் கொணர்ந்த குதிரைகளுள், விண்ணில் பறப்பதுபோல் விரைந்தோட வல்ல குதிரைகளைச் சேணம் பூட்டிக் கொண்டுவந்து வரிசையாக நிறுத்துவன்.
அரசவை தோறும் சென்று பாடிப் பாராட்டும் வாழ்வினராய இரவலரை, ஒரே அரசவையில் நெடிது நாட்கள் இருத்திக் கொள்வது முறையாகாது என்பதையும், அவர், அவன் அரசவையில் நலமே இருப்பினும், அவர் மனைகளில், அவரை எதிர்நோக்கியிருக்கும் அவர் சுற்றம், வறுமைக் கொடுமையால் துன்புற்றுப் போவர் என்பதையும் அறிந்தவன் திரையன். அதனால், உங்களுக்கு அளிக்க வேண்டியன எல்லாம் அளித்து, உங்களைத் தேரிலும், குதிரைகளிலும் ஏற்றி, அன்றே வழியனுப்பி வைப்பன். ஆகவே, பெரும்பாண! எதை எதையோ எண்ணி, இனியும் காலம் தாழ்த்திவிடாது, கச்சிக்கு இப்போதே புறப்படுவாயாக! என்றார்.
"மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்
ஆடுவண்டு இமிரா அழல் அவீர் தாமரை,
நீடிரும் பித்தை பொலியச் சூட்டி,
உரவுக் கடல்முகந்த பருவ வானத்துப்
பகல் பெயல் துளியின் மின்னுகிமிர்த் தாங்குப்
புனையிரும் கதுப்பகம் பொலியப் பொன்னின்
தொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால்கடல்
வளை கண்டன்ன வால்உளைப் புரவி
துணை புணர் தொழில நால்குடன் பூட்டி
அரித்தேர் நல்கியும் அமையான், செருத்தொலைத்து
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த
விசும்புசெல் இவுளியொடு பசும்படை தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில்"
(480–493)
உரை :