பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/பாரம்பரியமும் சூழ்நிலையும்

10. பாரம்பரியமும் சூழ்நிலையும்

இவ்வாறு உடல் உறுப்புக்களின் பாரம்பரியத் தன்மைகளை அறிந்து கொள்வது ஓரளவு சுலபம்; ஆனால் மனதைப்பற்றி அவ்வளவு சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. காக்காய் வலிப்பு, பைத்தியம் ஆகிய குறைபாடுகள் பாரம்பரியமாகவருகின்றன. சூழ்நிலையும் இவற்றுக்குக் காரணமாக இருப்பதுண்டு. சாதாரணமாகச் சில நோய்களும், தொற்று நோய்களும் எதிர்பாராது ஏற்படும் விபத்துக்களும் காக்காய் வலிப்புக்குக் காரணமாகின்றன. போதை வஸ்துக்களும் ஒழுங்கீனமான வாழ்க்கையும் எதிர்பாராத பெரிய அதிர்ச்சிகளும் சித்தப்பிரமையை உண்டாக்கலாம். பாரம்பரியமாகவும் மேற்கூறிய நோய்கள் எவ்வாறு உண்டாகின்றன என்று கவனிப்போம். தாய் தந்தை இருவரும் மனத்திடம் அற்றவர்களாக (Feeble-minded) இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் மனத்திடம் இல்லாமல் இருப்பார்கள்; சில குழந்தைகளுக்குக் காக்காய் வலிப்பும் உண்டாகலாம். கோடார்டு (Goddard) என்பவர் மனத்திடமற்ற பலரின் குடும்பங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அவற்றில் இருந்த 470 குழந்தைகள் மனத்திடம் அற்றிருந்தன; ஆறு குழந்தைகளுக்கே அந்தக் குறைபாடில்லை. பெற்றோர்களில் ஒருவர் மனத்திடமற்றும், மற்றொருவர் அந்தக் குறைபாட்டைத் தமது நிறக்கோலில் கொண்டவராகவும் இருந்த வேறு சில குடும்பங்களில் 193 குழந்தைகள் மனத்திடமற்றும், 144 குழந்தைகள் குறைபாடில்லாமலும் இருந்தனர். இந்தக் குறைபாட்டைக் கொண்ட தாய் தந்தையர்களடங்கிய 26 குடும்பங்களில் 39 குழந்தைகள் குறைபாடில்லாமலும் இருந்தனர்.

மனத்திடமற்ற தாய் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளில் சில காக்காய் வலிப்புடையவைகளாக இருக்கலாம் என்று முன்பு கூறினேன். இம்மாதிரி உண்டாவதை விடப் பெற்றோர்களில் ஒருவர் இந்த நோயை உடையவராகவும் மற்றொருவர் மனத்திடமற்றவராகவும் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில்தான் அதிகமானவர்கள் இந்த நோயை உடையவர்களாக இருப்பார்கள். பைத்தியமும் இவ்வாறே பெரும்பாலும் உண்டாகிறது. நல்ல திறமைகள் அமைவதிலும் பாரம்பரியத்தின் பங்கை நிர்ணயிப்பதில் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. பொதுவாகப் பாரம்பரியத்தினால் திறமைகள் அமையுமென்று கூறலாமே ஒழிய அதுவேதான் காரணமாக இருக்க முடியும் என்று வாதிக்க இயலாது. மிகுந்த திறமைசாலிகள் தோன்றிய சில குடும்பங்களின் வம்சாவளியை எடுத்துக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் அப்படிப்பட்ட திறமைகள் அமைவதில் பாரம்பரியம் காரணமாக இருப்பது தெரிகிறது.

கால்ட்டன் (Galtan) என்பவர் 977 பிரமுகர்களையும் 977 சாதாரண மனிதர்களையும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய சுற்றத்தார்களைப் பற்றி ஆராய்ந்தார். பிரமுகர்களின் சுற்றத்தார்களில் 533 பேர் சமூகத்தில் முக்கிய ஸ்தானம் வகித்து வந்தார்கள்; ஆனால் மற்ற சாதாரண மனிதர்களில் 4 சுற்றத்தார்களே முக்கிய ஸ்தானம் வகிப்பவர்களாகத் தெரிந்தது. இதிலிருந்து பாரம்பரியத்தின் பங்கு இன்னதென்று ஓரளவு தெரிந்துகொள்ளலாம். ஆனால் திறமைசாலிகள் தோன்றும் குடும்பங்களிலும் சாதாரண மக்கள் தோன்ற முடியும்; சாதாரணக் குடும்பங்களிலிருந்தும் திறமைசாலிகள் தோன்றமுடியும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். டாக்டர் வெல்மன் (Dr. Welman) என்ற பெண்மணி தம் ஆராய்ச்சியிலிருந்து சூழ்நிலையைச் சரிப்படுத்துவதன் மூலம் அறிவுத் திறமைகளை ஓங்கச் செய்யலாம் என்று கூறுகிறார். ஆனால் அவர் கூறுவது முற்றும் சரியானதல்ல என்று வேறுபல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், இருந்தாலும் அவர் செய்த சோதனைகளிலிருந்து சூழ்நிலையும் முக்கியமானது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டார்ச் (Starch) என்பவர் கூறிய வாசகம் இந்த இடத்தில் மிகப் பொருத்தமுடையது. ஆஸ்திரேலிய அநாகரிகர்களான வேடர்களின் இடையே நியூட்டன் பிறந்திருந்தால் அவன் ஒரு நல்ல வேடனாக, அதாவது வேட்டையாடுவதில் கெட்டிக்காரனாகத்தான் இருந்திருப்பான்; உலகம் புகழும் விஞ்ஞானியாக  இருந்திருக்க முடியாது. நாகரிகம் வாய்ந்த சமூகத்தில் பிறந்ததால் நியூட்டனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களும் அநுபவங்களும் பயிற்சிகளும், அநாகரிகமான பழங்குடி மக்களிடையே தோன்றியிருந்தால் அவனுக்குக் கிடைத்திரா. அவனுடைய பெருமையெல்லாம் முடிவாகச் சூழ்நிலையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

சூழ்நிலை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அதி முக்கியமானது. அதனால் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. சீதோஷ்ண நிலைமைகூட நம்மைப் பாதிக்கிறது. சாதாரணமாக ஈக்களுக்கு மூன்று ஜோடி கால்களே உண்டு. ஆனால் அவற்றை மிகக் குளிர்ந்த பிரதேசத்தில் வளர்த்தால் அவற்றுக்கு ஆறு ஜோடி கால்கள் உண்டாகின்றன. ஹிமாலய முயல்க ள் வெண்மையான ரோமமுடையவை. ஆனால் அவற்றை மிகக் குளிரான பிரதேசத்தில் வளர்த்தால் உரோமம் கறுப்பாக மாறிவிடுகிறது.

மனிதனைப் பொறுத்த வரையில் இன்னுமொரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கருமை நிறத்துக்குள்ள ஜீனே ஒரு பூரித்த அண்டத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது குழந்தையின் நிறம் கருமையாகவே இருக்கும். இதை மாற்ற முடியாது. ஆனால் ஒருவன் கணக்கிலே மிகுந்த திறமைக்குக் காரணமான ஜீனைப் பெற்றிருப்பதாகக் கொள்வோம். அதிலிருந்து அவன் பெரிய கணித  சாஸ்திரியாவான் என்று நிச்சயம் கூற முடியாது. அதற்குச் சூழ்நிலையின் உதவி தேவை. ஏற்ற பயிற்சி கிடைக்காவிடில் அந்தத் திறமை வெளிப்படாது போய்விடும்.

ஆகவே, ‘பாரம்பரியம் முக்கியமா? சூழ்நிலை முக்கியமா?’ என்ற கேள்விக்கு இதுதான் முக்கியம் என்று ஏதாவதொன்றைச் சொல்லுவது சரியாகாது. இரண்டும் முக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மீன் நீந்துவதற்கு அதன் வால் முக்கியமா அல்லது தண்ணிர் முக்கியமா என்றால் எதை முக்கியமென்று சொல்லுவது? இரண்டில் எது இல்லாவிட்டாலும் மீன் நீந்த இயலாது. இவை போலவே பாரம்பரியமும் சூழ்நிலையும்.